யூசுஃப் அல்-கர்ளாவி

யூசுஃப் அப்துல்லாஹ் அல்-கர்ளாவி, 1926 செப்டம்பர் 9-ல் எகிப்தின் நைல் கழிமுக கிராமம் சஃபத் துராபில் ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இரண்டு வயதில் தந்தையை இழந்து விட்டமையால், தனது சிறியதந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கிராமத்தில் இருந்த மக்தப் ஒன்றில் சேர்ந்து, பத்து வயதிலேயே குர்ஆனை மனனம் செய்து முடித்தார். பின், தாண்டாவிலிருந்த மார்க்கக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்தார். அவரது அஸ்ஹர் கல்விக்கான முதல் படியாக இது அமைந்தது. இக்காலத்தில் தான் இஃக்வான் அல்-முஸ்லிமூன் அமைப்புடன் தொடர்பேற்பட்டு, அதனோடிணைந்து செயற்பட ஆரம்பித்திருந்தார். ஒன்பது வருடங்கள் பயின்று பட்டம் பெற்ற பின், அல்-அஸ்ஹரில் படிப்பதற்காக கெய்ரோ சென்றார். உசூல் அல்-தீன் துறையில் இணைந்து, 1953-ல் வகுப்பில் முதல் மாணவராய் பட்டம் பெற்றார். 1957-ல் அரபிமொழி போதனை தனித்துறைப் பயிற்சியில் தேர்வு பெற்றார். இணையாகவே, குர்ஆன்-சுன்னாஹ் துறைப் படிப்பையும் தொடர்ந்த அவர், 1960-ல் அதற்கான முன்ஆயத்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

1960-ல் “ஸகாத்தும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதன் தாக்கமும்” என்ற தலைப்பிலான தனது டாக்டர் பட்டத்திற்கென அவர் தயாராகிக் கொண்டிருக்கையில், இஃக்வான் அமைப்பினர் மீது அதிபர் நாசரின் ஒடுக்குமுறை துவங்கியதால் அது இடைநின்று போனது. 1973-ல் தான் அவரால் அதனை நிறைவு செய்ய முடிந்தது. இஃக்வான் அமைப்புடன் அல்-கர்ளாவிக்கு இருந்த தொடர்பு, மும்முறை அவர் சிறைபடக் காரணமாயிற்று. 1949-ல் மன்னர் ஃபாரூக்கின் ஆட்சியில் முதலாவதாகவும், பின் 1954 முதல் 1956 வரை அதிபர் ஜமால் அப்துல் நாசர் அரசாலும், பின்பு 1962-ல் குறுகியதொரு காலமும் அவர் எகிப்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டார்.

யூசுஃப் அல்-கர்ளாவி, 1956 முதல் கெய்ரோ பள்ளிவாயில்களில் உத்தியோகப்பூர்வமாக பிரச்சாரம் செய்யத் துவங்கினார். 1959-ல் பிரச்சாரம் செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்ட அவர், அல்-அஸ்ஹர் இஸ்லாமியக் கலாச்சார துறைக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார். இஸ்லாமிய வக்ஃப் அமைச்சின் கீழ் இயங்கிய இமாம்களுக்கான நிறுவனத்தின் மேற்பார்வையாளராகவும் பணியாற்றினார். மார்க்க கல்விக்கான கத்தார் உயர்நிலை நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றுவதற்கென அல்-அஸ்ஹர் அவரை அனுப்பி வைத்தது. 1977-ல் கத்தார் பல்கலை கழகத்தில் இஸ்லாமிய ஷரீஆ துறையையும் சீறா மற்றும் சுன்னாஹ்வுக்கான ஆய்வு மையத்தையும் துவக்கினார். அல்ஜீரியாவில் இஸ்லாமிய கற்கைகளுக்கான அமீர் அப்துல் காதிர் பல்கலைகழக கல்வியிலாளர் குழுத் தலைவராகவும், இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சின் ஆலோசகராகவும் பணியாற்றினார். வறுமை மற்றும் நோயால் அவதியுறும் உலகளாவிய முஸ்லிம்களுக்கு உதவும் பொருட்டு, சர்வதேச இஸ்லாமிய நிவாரண நிறுவனத்தை நிர்மாணிப்பதற்கான முதல் அழைப்பு இவரிடமிருந்தே வந்தது. அயர்லாந்தைத் தலைமையகமாகக் கொண்ட ஃபத்வா மற்றும் இஸ்லாமிய ஆய்வுக்கான ஐரோப்பியக் கவுன்சிலின் தலைவராகவும், முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (ஐக்Mகு) தலைவராகவும் இருந்து வருகிறார்.

ஃபலஸ்தீன் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் நடத்திவரும் சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவான அவரது ஃபத்வாக்கள், சர்வதேச அளவில் பல மட்டங்களில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, முஸ்லிம் குழுக்கள் சிலவற்றின் வரம்பு மீறல்களைக் கண்டிக்கவும் அவர் தவறுவதில்லை. அல்-ஜஸீரா தொலைக்காட்சியில் ஹலால்-ஹராம் குறித்த அவரது கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் உலகப் புகழ் பெற்றவை. டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி, இதுவரை சுமார் நூறு நூல்களை இயற்றியிருக்கிறார். கல்வியியல் பாணியும் பாரபட்சமற்ற சிந்தனைப் போக்கும் அவரது ஆக்கங்களின் முக்கியப் பண்புகளாக திகழ்கின்றன. ஷரீஆவில் மரபார்ந்த ஞானம், சமகாலப் பிரச்சினைகள் குறித்த ஆழ்ந்த புரிதல் இரண்டையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றிருப்பது இவரது தனிச்சிறப்பு. ஃபிக்ஹுஸ் ஸகாத் எனும் இவரது நூலைப் பற்றி கூறிய சைய்யித் அபுல் அஃலா மௌதூதி, “இஸ்லாமிய சட்டவியலில் இந்நூற்றாண்டின் தலைசிறந்த நூல் இதுவே” என்றார். டாக்டர் அல்-கர்ளாவி தேர்ந்த ஒரு கவிஞரும் கூட. அவரது கவிதைகளுள் சில, நஃபஹத் வ லஃபஹத் என்ற தலைப்பில் நூல் வடிவிலும் வெளிவந்துள்ளன.