கருத்து வேறுபாடுகள் – முஹம்மது அபுல் பத்ஹ் பயனூனி

Posted on
பிரதிகள் இல்லை

கருத்து வேறுபாடுகள் மனித இனத்தின் தோற்றத்தோடு துவங்கி விட்டன. மனிதர்களின் அறிவுத்தர வேறுபாடு, பிரச்சனைகளை அணுகும்விதம், வாழும் சமூக பொருளாதார சூழல் மனிதர்களின் சிந்தனை வேறுபாட்டிலும் கருத்துகளிலும் பரந்த செல்வாக்கைச் செலுத்துகின்றன. கிளையம்சங்களில் கருத்துபேதங்கள் என்பது இஸ்லாத்தின் ஒரு சிறப்புப் பண்பு என்றுகூடக் கூறலாம். அழைப்புப் பணி(தஃவா), சட்டத்துறை என்பவற்றில் மட்டுமன்றி நம்பிக்கைக் கோட்பாட்டின்(அகீதா) கிளையம்சங்களில்கூட சிற்சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற அளவுக்கு இஸ்லாத்தில் கருத்து வேறுபாடு களின் எல்லை மிக விரிவானது.

மனித சிந்தனைக்கும் ஆராய்ச்சி உணர்வுக்கும் இடமளிக்கும் வகையில் குர்ஆனிலும், ஸுன்னாவிலும் சில சட்ட வசனங்கள் நெகிழ் வுள்ளதாக அமைந்திருப்பதும், அவற்றை வித்தியாசமான அறிவுத் தரமுள்ள அறிஞர்கள் விளங்க முயல்வதும் இதற்கான அடிப்படைக் காரணங்களாகும். இஸ்லாம் நெகிழ்ச்சியுள்ள, இலகுவான, கால, தேச எல்லைகளைக் கடந்து நுழையும் ஆற்றல் கொண்ட மார்க்கம் என்பதற்கு இக்கிளையம்சக் கருத்து வேறுபாடுகள் நல்ல சான்றாகும்.

கலாநிதி பயானூனி, இத்தகைய கருத்து வேறுபாடுகள் சட்டத் துறையில் ஏற்படுவதற்கான நியாயங்களையும் தவிர்க்க முடியாமை யையும் மட்டுமின்றி அதனை எப்படி அணுகவேண்டும் என்பதையும் சிறப்பாக விளக்குகின்றார். உண்மையில் கருத்து வேறுபாடுகள் என்பது பிரச்சனைக்குரியதோ முற்றாகக் களையப்பட வேண்டியதோ அல்ல. அதன் தோற்றத்துக்கான காரணங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ளும்போது அதை நாம் அங்கீகரிப்பதோடு அவற்றின் தேவை களையும் உணர்ந்துகொள்ள முடியும்.

உண்மையில் முந்நாளைய சட்ட அறிஞர்கள் “கருத்து வேறுபாடு களை முஸ்லிம் சமூகத்துக்கான(உம்மத்) அருள்” எனக் கருதினர். இந்நூற்றாண்டின் மாபெரும் சட்டமேதை முஸ்தபா அஹ்மத் ஸர்கா அதனை மனித சொகுசுக்கு இயைந்து கொடுக்கும் நாற்காலிகளுக்கு ஒப்பிடுகிறார். இது கருத்து வேறுபாடுகளினால் ஏற்படும் வசதிகளைத் தெளிவுபடுத்துகின்றது. எனினும் அதனை எவ்வாறு அணுகவேண்டும் என்பதும் முக்கியமானது. “கருத்தொருமைப்பட்ட விடயங்களில் ஒத்துழைப்போம். கருத்து வேறுபட்ட விடயங்களில் பரஸ்பரம் நியாயம் காண்போம்” என்னும் இமாம் ரஷீத்ரிழா அவர்களின் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது. இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமையிலும் ஐக்கியத் திலும் இச்சமன்பாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை எவ்வளவு தூரம் நாம் அனுசரிக்கிறோம் என்பதிலேயே நமது ஒருமைப்பாடும் வெற்றியும் தங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *