அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? (பாகம் 4) – டாக்டர் பர்வேஸ் ஷாஃபி

Posted on

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? (பாகம் 3) – டாக்டர் பர்வேஸ் ஷாஃபி

♦ ♦ ♦ ♦ ♦

நவகாலனித்துவக் கட்டம்

நவகாலனித்துவக் காலகட்டத்தில் சுதந்திரம் என்ற பொய்த் தோற்றத்தோடு வஞ்சகம் நிரம்பிய அதிதீவிர மேற்கத்தியமாக்கல் நிகழ்த்தப்படுவதைத் தாண்டி இதற்கும் காலனித்துவத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு துவங்கும் நவகாலனித்துவக் கட்டத்தில், கட்டுப்படுத்தப்பட்ட ‘தேசியச் சுதந்திரப்  போராட்டத்தின்’ விளைவாக ஒற்றை முஸ்லிம் சமூகத்திலிருந்து சுமார் ஐம்பது நாடுகள் உருவாக்கப்பட்டன. அங்கு சுதந்திரத்துக்கு அடையாளமாக உள்ளூர் ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் புலமைத்துவ, அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவை கானல் நீராகவே இருந்தன. ‘மூன்றாம் உலக நாடுகள்’ என்று அழைக்கப்படும் இவை உலகளாவிய முதலாளித்துவ அமைப்புக்குள் ஒருங்கிணைக்கப்பட்டன. மேற்கத்திய உற்பத்திப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் உடனடிச் சந்தைகளாகவும், அவற்றுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை வழங்குவதும் மட்டுமே இந்நாடுகளின் பணியாக இருக்கிறது. இதைச் செய்வதற்கு உள்ளூர் அரசியல் மற்றும் பொருளாதார மேட்டுக்குடிகள் மேற்குலகின் அடிவருடிகளாக இருந்தாக வேண்டும். இதன் விளைவு, சொந்த மக்களையே ஒடுக்குமுறைக்கு ஆளாக்குவதாக இருந்தது.

இரண்டாம் உலகப் போரின் வெற்றியாளர்களே வரலாற்றை எழுதுபவர்களாக இருந்தனர். மேலும் அவர்கள் உலகை ஆள்வதற்கு ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற உலகளாவிய நிறுவனங்களை தமக்குத் தோன்றிய வகையில் நிறுவும் உரிமையை தமக்குத்தாமே அகங்காரத்தோடு வழங்கிக் கொண்டனர். இதன் காரணமாக முஸ்லிம் நாடுகளும் மேட்டுக்குடிகளின் உதவியோடு இத்தகைய சட்டத்திற்குப் புறம்பான மற்றும் சட்டவிரோத நிறுவனங்களின் அங்கமாக ஆக்கப்பட்டன. இந்நிறுவனங்களின் மூலம் மேற்குலகம் தனக்குத் தேவையான தீர்மானங்கள் அனைத்தையும், சட்டப்பூர்வமானது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியே நிறைவேற்றிக் கொள்கிறது. பாதிப்புக்குள்ளான எஞ்சிய மனிதகுலமோ இந்நிறுவனங்களை வெறும் விரக்தியை வெளிப்படுத்தும் களமாகவும், தங்களின் இருப்புக்காக வேண்டி மென்மேலும் மேற்குலகிடமிருந்து நிதியைக் கோரவும் மட்டுமே பயன்படுத்துகின்றன.

காலனித்துவக் காலகட்டத்தில் மேற்குலகின் இலட்சியப் பணி மனித இனத்தை ‘நாகரிகமயடையச் செய்வதாக’ இருந்தது. நவகாலனித்துவக் காலத்தில் அது ‘மக்களாட்சி’, மக்களாட்சி விழுமியங்கள், நியமங்கள், நம்பிக்கை அமைப்பு ஆகியவற்றை மட்டுமே புனிதச் சித்தாந்தமாகக் கருதிப் பரப்புவதாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. மேற்கத்தியக் கருத்தாக்கத்தின்படி கிரேக்கச் சொல்லான ‘டெமோ’ என்றால் மனிதன் என்று பொருள். இப்போது அக்கருத்துச்சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது. அதாவது மறுமலர்ச்சி (14 முதல் 17ஆம் நூற்றாண்டு வரை) மற்றும் தொழிற்புரட்சிக் காலத்துக்குப் பிறகு (1730-1850) மனிதன் தன் விதிக்குத் தானே எஜமானனாக மாறியிருக்கின்றான்; இனிமேலும் அல்லாஹ்வின் போதனைகள், வழிகாட்டுதல் மற்றும் திட்டங்களின்படி வாழவோ அவற்றுக்குக் கட்டுப்படவோ விரும்பாத அளவிற்கு முன்னேறி உயரத்தை எட்டிவிட்டான். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், பிரபஞ்சப் படிநிலை அமைப்பில் அதியுச்ச ஸ்தானத்தில் இருக்கும் இறைவனை மாற்றி மனிதன் தன்னைத் தானே அவ்விடத்துக்கு உயர்த்திக் கொண்டான். இந்த அர்த்தத்தில் பார்த்தால், தெய்வீக விதிகளுக்குக் கட்டுப்படாத மேற்கத்திய மக்களாட்சி முறைதான் உச்சபட்ச இணைவைப்பாகும்.

எனினும் உண்மை என்னவெனில், கிரேக்கக் காலத்திலிருந்தே வரலாறு நெடுகிலும் மக்கள் நேரடியாக ஆட்சி செய்யும் அசல் மக்களாட்சி நடைமுறைப் படுத்தப்பட்டதே இல்லை. இதை மேற்கத்திய அரசியல் அறிஞர்களும் மெய்யிலாளர்களும் கூட ஒப்புக்கொள்கின்றனர். உண்மையில் அவர்கள் இதை ‘கும்பல் ஆட்சி’ என்று கூறி வெறுத்து ஒதுக்குகின்றனர். பண்படுத்தப்படாத மனித உள்ளுணர்வை அவர்கள் நம்புவதாக இல்லை. இங்கு அசலில் நடைமுறைப்படுத்தப்படுவது என்னவெனில் செல்வந்தர் ஆட்சிமுறையே —அதாவது பணக்காரர்களும் செல்வந்தர்களும் புரியும் ஆட்சி— ஆகும். அரசியல் அமைப்பு எதைச் சுற்றி இயங்க வேண்டும், எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிப்பதன் மூலம் அது ஆட்சிபீடத்தைக் கட்டுப்படுத்துகிறது. முதலாளித்துவம் அதன் பொருளாதார இயந்திரமாகச் செயல்படுகிறது.

செல்வந்தர் ஆட்சி முறையோ மக்களாட்சி முறையோ அல்லது வேறு எந்தத் தத்துவமாயினும், அவற்றுக்கும் மனித விழுமியங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இத்தகைய மனிதத் தன்மையற்ற அமைப்பில், ஏழைகளையும் அவர்களின் உழைப்பையும் சுரண்டுவதன் மூலம் மட்டுமே பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆக முடியும். முதலாளித்துவத்தின் அதியுச்ச விழுமியம் ‘லாபத்தைப் பெருக்குவது’ மட்டுமே. பேராசை மற்றும் சுரண்டலுக்கான மங்கலச் சொல்தான் ‘லாபத்தைப் பெருக்குவது’ என்பது. இது சமத்துவமின்மை, வர்க்கப் போர் மற்றும் 1%க்கும் குறைவாக இருக்கும் செல்வந்த ஆட்சியாளர்களின் கையில் ஏறத்தாழ எல்லா செல்வமும் குவிவதற்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாகத்தான் அமெரிக்காவில் 99% வெகுமக்கள் பெயரில் மனிதத்தன்மை மற்றும் சமத்துவ விழுமியங்களுக்காகக் குரலெழுப்பும் எதிர்ப்பு இயக்கங்கள் நடத்தப்படுகின்றன.

அரசியல் கட்சிகளும் தேர்தல்களும் தம் இயல்பிலேயே மேம்போக்கானவையாகவும் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தாதவையாகவுமே இருக்கின்றன. இவர்களின் நோக்கமெல்லாம் ‘மாற்றம் சாத்தியமே’ என்று மக்களை நம்பச் செய்து அவர்களை ஈர்த்து இந்த அரசியல் அமைப்புமுறையில் தக்க வைப்பதே ஆகும். ஆனால் அசலில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரே தத்துவத்தின் வெவ்வேறு சாயலையே பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆக வெகுமக்களின் பெயரால் செல்வந்தர் ஆட்சிமுறையை அனுமதிப்பதில், மக்களாட்சியின் வேரிலேயே மோசடியும் போலித்தனமும் உள்ளது. எனினும் இவ்வாறு இறைவனிடமிருந்து விலகியிருப்பதில் ஒவ்வொரு வர்க்கத்துக்கும் வெவ்வேறான, தனித்தனியான நலன்கள், தேவைகள் மற்றும் பலன்கள் உள்ளன. மேற்குலகம் தன் தேவைக்கு ஏற்றவாறு மக்களை நெறிப்படுத்துவதில் 150 ஆண்டுகால அனுபவம் பெற்றிருப்பதால், இத்தகைய அதிதீவிர சுரண்டல்வாத அமைப்பு கூட தனது அப்பட்டமான குறைபாடுகளையும் தாண்டிப் பிழைத்திருக்க முடிகிறது. மக்களாட்சி முறையின் அறுதி இலக்கு அல்லது விழுமியம் என்னவென்றால், மனிதர்கள் அனைவரையும் செல்வமும் அதிகாரமும் படைத்தோருக்கு அடிமைகளாய் மாற்றுவதே ஆகும்.

முதிர்ச்சியடைந்த செல்வந்தர் ஆட்சிமுறை நாடுகளைப் போலன்றி, சமீபத்தில் சுதந்திரமடைந்த முன்னாள் காலனி நாடுகளில் (அவை இராணுவ அல்லது சிவில் ஆட்சிமுறை என எதைப் பெற்றிருப்பினும்) உறுதியான, ஆழ வேரூன்றிய தத்துவத்தின் அடிப்படையிலான வலுவானதொரு மையமோ பீடமோ இல்லை. இந்நாடுகளில் ஒவ்வொரு துறையும் —இராணுவ, அதிகார, நீதி, செயலாட்சி மற்றும் நாடாளுமன்றம்— தனித்தனி அதிகார மையங்களாகச் செயல்படுவதால் அவை ‘நலிந்த நாடுகள்’ என வருணிக்கப்படுகின்றன. இத்துறைகள் ஒவ்வொன்றோடும் அமெரிக்காவும் பிற ஏகாதிபத்திய நாடுகளும் தனித்தனியான ஆனால் நேரடித் தொடர்புகள் வைத்துள்ளன. ஏதாவது ஒரு துறை அமெரிக்காவுக்கு இணங்கிச் செல்லவில்லையெனில் மற்றொரு துறையால் அது தடுக்கப்படுகிறது.

முஸ்லிம் அரசுகளிலிருக்கும் மேட்டுக்குடியினர் மேலை நாடுகளில் பயிற்றுவிக்கப்படுகின்றனர். அவர்கள் மேற்கத்திய விழுமியங்கள், நியமங்கள், நம்பிக்கை அமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளை தம்மனதினுள் ஆழமாகப் பதிந்து வைத்துள்ளனர். அவர்களின் தனிப்பட்ட நலன்களும் கூட்டு நலன்களும் ஒன்றாகவே இருக்கின்றன. எப்போதாவது இஸ்லாத்தை அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள் எனில், அது வெகுமக்களை முட்டாளாக்குவதற்கு மட்டுமே ஆகும். இந்த உள்ளூர் மேட்டுக்குடிகள் தங்களுக்குத் தேவையான அரசியல் சித்தாந்தத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு மேற்குலகம் ஒரு வாய்ப்பையோ அல்லது வேறு மாற்றையோ தருவதில்லை. பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தம் நாடுகளை மேற்குலகைச் சார்ந்திருக்கச் செய்வதோடு, உள்ளூர் வர்த்தகத்தை மேற்குலகச் சந்தைகளோடு இணைத்து அவற்றைச் சுரண்டலுக்காகத் திறந்து வைப்பதுதான் இவர்களின் பணியாக இருக்கிறது.

மேற்கத்தியமயமாதல் என்ற இந்த நோய் மதச்சார்பற்ற மேட்டுக்குடியினரை மட்டும் தொற்றியிருந்தால், அது புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால் வருந்தத்தக்க விதத்தில், தங்களுக்கிருக்கும் இஸ்லாமிய அறிவையும் மீறி மொத்த சமய பீடமுமே இதனால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நவகாலனித்துவக் கட்டத்தில், இந்தச் சமய பீடம் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. எந்த அளவுக்கெனில், மக்களாட்சி என்று பெயரளவில் சொல்லப்படுகிற இச்செயல்முறை ஒரு மாயை என்று உணராமல் அதில் தானும் பங்கேற்கத் துவங்கியது. இது இஸ்லாத்தின் இலக்குகள் மற்றும் வழிமுறைகளுக்கு எதிரானது என்றபோதிலும், சமூக நீதி, சமத்துவம், அடிமைத்துவத்திலிருந்து மனித இனத்தின் விடுதலை போன்ற இஸ்லாமிய இலக்குகளை இதன் மூலம் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அதில் பங்கேற்கத் துவங்கினர். சமய, அரசியல் மற்றும் அரசியல்சாரா கட்சிகள் என எல்லோருக்கும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இந்தக் குறுக்கு வழி ஒரு மாயக் கவர்ச்சியாகவும் எளிதாக அடையக் கூடியதாகவும் தெரிகிறது.

மேற்குலகின் செல்வாக்குக்கு உள்ளான இவர்கள் தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே இலக்கு என நம்பத் துவங்கிவிட்டனர் (பொதுவாக இத்தேர்தல்களில் இராணுவம் மோசடி செய்கிறது என்பது தனிக் கதை). ஆட்சிக்கு வந்ததும், ஷரீஅத் சட்டங்களை ‘திணிப்பதன்’ மூலம் இஸ்லாமிய அரசை உருவாக்கிவிடலாம் என்று அவர்கள் கற்பிதம் செய்கின்றனர். இவர்கள் பாணி இஸ்லாமிய அரசால் மேற்குலகோடு சேர்ந்து வாழ முடியும், பொருளாதார ரீதியாக உலகளாவிய முதாலாளித்துவ அமைப்போடு ஒருங்கிணைந்து இருக்க முடியும், அரசியல் ரீதியாக அடிமைத்துவ உறவைப் பேணிக்கொள்ள முடியும். இது முற்றிலும் தவறான, மேட்டிமைத்தனமான, மேலிருந்து கீழாக அமையும் அணுகுமுறை. ஏனெனில் இதனால் வழிமுறைகளையும் இலக்குகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை; அதே போல மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய மக்களாட்சி அமைப்புகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. இந்த எளிமைப்படுத்தப்பட்ட, முதிர்ச்சியற்ற, மோசடியான மாதிரி அமைப்பு ஷரீஅத்துக்கும் இறைத்தூதரின் வழிகாட்டுதலுக்கும் எதிரானது என்பது இவர்களுக்கு ஒரு சிறு சஞ்சலத்தைக்கூட ஏற்படுத்தவில்லை போலும்.

இறைத்தூதர்(ஸல்) முதலில் சமூகத்தில் இஸ்லாமியக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தினார்; இதைச் செய்வதற்கு முன்னர் தேர்தல் மூலமாகவோ அல்லது பிற வழிமுறைகள் மூலமாகவோ அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை. இஸ்லாத்தை அதன் (ஏதாவது ஒரு கூறுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல்) எல்லா பரிமாணங்களிலும் பரப்பி நடைமுறைப்படுத்தியதன் மூலம், அவர் அந்தக் கோத்திரவாத அறியாமைச் சமூகத்தின் அமைப்பையே புரட்டி இஸ்லாமியச் சமூகமாக மாற்றிக் காட்டினார் என்று அவரது வரலாறு நமக்குச் சொல்கிறது. இந்தச் சமூக மாற்றம் ஏற்பட்டவுடன், இஸ்லாமிய அரசுக்கான பாதை தானாகவே திறந்தது. எனவே, இஸ்லாமிய இயக்கத்தின் இலக்கு இஸ்லாமிய அரசைக் கட்டமைப்பது அல்ல. மாறாக, அறியாமைச் சமூகத்தின் சமூக அடித்தளத்தை இஸ்லாமியச் சமூகமாக நிலைமாற்றுவதே ஆகும். இதைச் செய்துவிட்டால், அதன் தர்க்க விளைபலனாக இஸ்லாமிய அரசு அமைந்துவிடும். இது கீழிருந்து மேல் செல்லும் அணுகுமுறை ஆகும். இறைத்தூதரின் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இதுவே இஸ்லாமியப் புரட்சி ஆகும்.

நவகாலனித்துவக் கட்டத்தில் மாற்றத்துக்கான மிக முக்கிய வினையூக்கிகளுள் ஒன்றாக இருப்பது மார்க்க ‘அறிஞர்களும்’ அவர்கள் நிறுவியுள்ள நிறுவனங்களும்தான். நகைமுரணாக இறை பிரக்ஞை மிக்க தலைமைத்துவம் தோன்றுவதற்கும் அசல் மாற்றம் நிகழ்வதற்கும்  பெருந்தடையாக இருப்பதும் அவர்களேதான். இதற்கு மிக முக்கியக் காரணமென்னவெனில், பெரும்பாலான சன்னி மார்க்க ‘அறிஞர்களுக்கும்’ அவர்களின் நிறுவனங்களுக்கும் சவூதி ஆட்சியாளர்களிடமிருந்து பெருந்தொகை நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ‘இவ்வறிஞர்களும்’ அவர்களின் நிறுவனங்களும் இத்தகைய அறிவுப் பரவலுக்கெதிரான, நெறிபிறழ்ந்த சன்னி அரசியல் சிந்தனையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது உத்தரவாதம் செய்யப்படுகிறது. இவ்வகை அரசியல் சிந்தனையில் முஆவியாவும் யஸீதும் போற்றப்படுகின்றனர். அபூ சுஃப்யானின் மனைவி ஹிந்தாவுக்கும் கூட மறுவாழ்வு அளிக்கத் தற்போது முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உஹதுப் போரில் வீரமரணம் அடைந்த ஹம்ஸாவின் ஈரலை மென்று துப்பி அவரின் உடலை உருக்குலைத்த ‘பெருமை’ பெற்றவர்தான் இந்த ஹிந்த். மரணித்த ஒருவருக்கு இழைக்கப்பட்ட இத்தகைய அவமதிப்பைக் கண்டு இறைத்தூதர்(ஸல்) பெருந்துயருற்றார். ஹம்ஸா, அவரின் சிறிய தந்தையாக, நெருங்கிய நண்பராக, ஏறத்தாழ சம வயதுடையவராக இருந்தமை அவரை இன்னுமதிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மேற்குலகம்/ஸியோனிஸ்டுகள் உடனான நட்பும் அவர்களைச் சார்ந்திருப்பதும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னர் இருந்த மன்னராட்சி சாம்ராஜ்யங்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டதைப் போலவே இன்று சவூதி மன்னராட்சிக்கும் ஆதரவளிக்கப்படுகிறது. சவூதியின் எண்ணெய்ச் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு மார்க்க ‘அறிஞர்களும்’, ‘அதிகாரப்பூர்வ’ சன்னி உலகநோக்கும் இறைத்தூதரின் கொடிய எதிரிகளைப் புகழ்பவர்களாகவும் அவர் நேசித்தவர்களைக் கைதுறந்து உதாசீனம் செய்பவர்களாகவும் தொடர்ந்து இருப்பார்களாயின் மாற்றத்துக்கான வாய்ப்புகள் மங்கலாகவே இருக்கும். சவூதியின் நிதியுதவி ஒழிக்கப்பட்டாலன்றி இறை பிரக்ஞை மிக்க தலைமை உருவாகாது. மறுபுறம் சட்டவிரோத முரண்பாடுகளற்ற, பிரிவினைவாதத்துக்கு அப்பாற்பட்ட புதிய நிறுவனங்களும் உருவாக்கப்பட வேண்டும். இவற்றிலிருந்துதான் எதிர்நோக்கியிருக்கும் போராட்டத்தை வழிநடத்தும் தகுதிவாய்ந்த இறை பிரக்ஞை மிக்க தலைமை உருவாகும்.  ஒரு உண்மை இஸ்லாமிய இயக்கம் தன் முதல் படியாக இந்தப் புலமைத்துவப் போராட்டத்தைத்தான் முன்னெடுக்க வேண்டும். இதைவிடுத்து ‘இஸ்லாமிய’ அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க உதவாது.

சமய மேட்டுக்குடியினரும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து தோல்வியுறுவதற்குக் காரணம், அவர்களிடம் தெளிவான இலக்குகளோ வழிமுறைகளோ இல்லாததே ஆகும். அவ்வாறிருந்தும் அவர்கள் தங்கள் வழிமுறைகளை மாற்றவோ இறைத்தூதர் வரலாற்றிலிருந்து படிப்பினை பெறவோ தயாராக இல்லை. எனினும் ஏற்கனவே சீர்கெட்டுக்கிடந்த மன்னராட்சி வகை சன்னி அரசியல் சிந்தனை மீதுதான் இந்த மத பீடத்தின் ஜனநாயக உலகநோக்கு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதை உணரும்போது, இவ்விருவகை சிந்தனைகளின் கரடுமுரடான கலவையால் உலகியல் சவால்களைச் சமாளிக்க முடியாது என்பது தெளிவாகும்.

♦ ♦ ♦ ♦ ♦

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? (பாகம் 5) – டாக்டர் பர்வேஸ் ஷாஃபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *