திருமணத்தின்போது ஆயிஷாவின் (ரழி) வயது ஒன்பது அல்ல (பாகம் 2) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

திருமணத்தின்போது ஆயிஷாவின் (ரழி) வயது ஒன்பது அல்ல (பாகம் 1) – இமாம் முஹம்மது அல் ஆஸி

♦ ♦ ♦ ♦ ♦

அடுத்ததாக, இந்த விஷயம் குறித்து மற்றொரு தகவலைப் பார்ப்போம். அஸ்மாவின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் கொடுங்கோலன் ஹஜ்ஜாஜால் கொல்லப்பட்ட சில நாட்களில் அஸ்மாவும் மரணமடைந்தார். ஹி.73-ல் இச்சம்பவம் நடைபெற்ற போது அஸ்மாவின் வயது 100. நம்பகமான வரலாற்று நூல்கள் அனைத்தும் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன. மேலும், ஹிஜ்ரத்துக்கு 27 வருடங்கள் முன்னர் அஸ்மா பிறந்தார் என ஏற்கனவே பார்த்தோம். ஆகவே ஹி.73-ல் மரணமடையும் பொழுது அவரது வயது 100. ஆகவே புலப்பெயர்வின்பொது (ஹிஜ்ரத்) போது அஸ்மாவின் வயது 27 எனில், அவரைவிட பத்து வயது குறைந்த ஆயிஷாவின் வயது 17 ஆக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த வருடத்தில்தான் இறைத்தூதர் அவரை திருமணம் முடித்தார் என்றும் பார்த்தோம். அதாவது ஆயிஷாவின் 18 ஆவது வயதில் இத்திருமணம் நடைபெற்றது.

மேலும், அத்தபரியில் மிக அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ள ஒரு கருத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அபுபக்கரின் (ரழி) எல்லா குழந்தைகளும் (நான்கு குழந்தைகளும் –மொழிபெயர்ப்பாளர்) தூதுத்துவப் பணி துவங்கும் முன்னரே பிறந்துவிட்டனர் என்று அத்தபரி கூறுகிறார். ‘உலீது ஃபில் ஜாஹிலிய்யா’ என்று அவர் குறிப்பிடுகிறார். ஆகவே மீண்டும் ஒரு முரணை நாம் சந்திக்கிறோம். ஆகவே, இது முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய அளவில் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து வெளிப்படையாக, அறிவுப்பூர்வமாக விவாதித்து இதைக் களைய முற்படும் முஸ்லிம்கள்தான் இல்லை. 13 நூற்றாண்டுகளாக கட்டியெழுப்பப்பட்டுள்ள மரபுகளை கேள்விக்குட்படுத்த அவர்கள் விரும்பவில்லை —மிகச்சிலரைத் தவிர.

அடுத்ததாக, அல் புகாரிக்கு உரை எழுதிய இப்னு ஹஜரின் ‘அல் ஹிஸாபா’ எனும் நூலைப் பார்ப்போம். அதில் இறைத்தூதரின் மகள் ஃபாத்திமா (அலை), கஅபா புனரமைக்கப்பட்ட ஆண்டு பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கஅபா புனரமைக்கப்பட்ட போது கருப்புக் கல்லை யார் எடுத்து வைப்பது என்ற பிரச்சனை உருவாகி அதை இறைத்தூதர் தீர்த்து வைத்த சம்பவத்தை நாம் அறிவோம். அப்போதுதான் ஃபாத்திமா (அலை) பிறந்தார் என்று இப்னு ஹஜர் கூறுகிறார். அப்போது இறைத்தூதரின் வயது 35. ஃபாத்திமா, ஆயிஷாவைவிட ஐந்து வயது மூத்தவர் என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. எனில், ஆயிஷா, இறைத்தூதரின் 40ஆவது வயதில் —அதாவது பி’ஸா ஆண்டில்— பிறந்துள்ளார். மேலும் புலபெயர்வின் (ஹிஜ்ரத்) முதல் ஆண்டில் இறைத்தூதர் (ஸல்) அவரை திருமணம் முடித்தார் என்றால், அப்போது ஆயிஷாவின் வயது 14 ஆக இருக்கும். 9 அல்ல. இன்று சலஃபி சிந்தனை கொண்ட பலரும் அவர்களைச் சார்ந்தோரும் மேற்கோள் காட்டும் நூல்தான் ‘அல் ஹிஸாபா’. எனினும் அவர்களே இவ்விஷயங்களைச் சிந்திப்பதில்லை. நாம் அவர்களிடம் கோருவதெல்லாம் ஒன்றுதான்: “கொஞ்சம் கண் திறந்து பாருங்கள். ஆங்காங்கே கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து அதிலிருந்து விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இது அவ்வளவு கடினமானதா என்ன?”

ஆரம்பகாலங்களில், மக்காவில் இறைத்தூதர் ரகசியப் பிரச்சாரம் மேற்கொண்ட சமயத்தில்தான் அஸ்மாவும், ஆயிஷாவும் முஸ்லிம்களாக மாறினர் என்று இப்னு கசீர் ‘அல் பிதாயா வல் நிஹாயா’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். தூதுத்துவப் பிரச்சாரத்தின் ஐந்தாவது ஆண்டு வாக்கில்தான் இறைத்தூதர் வெளிப்படையாகப் பிரச்சாரம் மேற்கொள்ளத் துவங்கினார். எனவே இப்னு கசீர் அவ்வாறு கூறுகிறார். எனில், அவர்களிருவரும் அப்போது முதிர்ச்சி அடைந்தவர்களாக, பிரக்ஞை உடையவர்களாக இருந்திருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று வயது உடையவரைப் பார்த்து அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்று சொல்ல முடியாது. இதிலிருந்து, அப்போது ஆயிஷா, முஸ்லிமாக மாறுவதற்கு முடிவெடுக்கும் அளவிற்கு முதிர்ச்சியுடன் இருந்தார் என்று நாம் அனுமானிக்கலாம். ஆனால் அல் புகாரியின் கூற்றுப்படி, ஆயிஷா வஹீயின் (இறைச்செய்தி) நான்காவது ஆண்டில் பிறந்தார். எனில், அவர் இஸ்லாத்தை ஏற்ற பொழுது அவர் ஒன்று அல்லது இரண்டு வயது குழந்தையாக இருந்திருப்பார். இது எப்படிச் சாத்தியமாகும்?

அல் புகாரியில் ‘பாப் ஜிவாரு அபிபக்ரின் ஃபி அஹ்தின் நபி’ என்று ஒரு அத்தியாயம் உள்ளது. இது இறைத்தூதரோடு (ஸல்) அபுபக்கருக்கு இருந்த நெருக்கத்தைப் பற்றிப் பேசுகிறது. இதில் ஆயிஷா (ரழி) கூறியதாக ஒரு செய்தி வருகிறது:

لَمْ أَعْقِلْ أَبَوَيَّ قَطُّ إِلَّا وَهُمَا يَدِينَانِ الدِّينَ ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلَّا يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ ىصَلَّ اللَّهُ عَلَيْهِ

وَسَلَّمَ طَرَفَيِ النَّهَارِ ، بُكْرَةً وَعَشِيَّةً

“எனக்கு நினைவு தெரிந்தது முதல், நான் என் பெற்றோரை இஸ்லாத்தை ஏற்றவர்களாகவே அறிவேன். மேலும் ஒரு நாள் கூட விடாமல் இறைத்தூதர் (ஸல்) எங்கள் வீட்டிற்கு காலையிலோ மாலையிலோ வருவதையும் நான் அறிவேன்.” [அல் புகாரி: 2204]

பின்னர் மக்காவில் முஸ்லிம்கள் சமூக விலக்குக்கு உள்ளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட போது ஹபஷாவிற்கு புலம் பெயர்வது (ஹிஜ்ரத்) குறித்து அபுபக்கர் சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஹபஷாவுக்கு புலம் பெயர்ந்தது (ஹிஜ்ரத்) தூதுத்துவத்தின் ஐந்தாவது ஆண்டில் நிகழ்ந்தது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து (முத்தஃபக்குன் அலைஹி). தூதுத்துவத்தின் நான்காவது ஆண்டில்தான் ஆயிஷா பிறந்தார் என்று அல் புகாரி கூறுகிறார் எனில், ஒரு வயதே ஆன அவர் எப்படி இந்நிகழ்வுகளை நினைவில் வைத்திருக்க முடியும்? காலையிலோ மாலையிலோ இறைத்தூதர் வருவதையெல்லாம் நினைவில் வைத்து அவர் கூறுகிறார் எனில், எந்த அளவிற்கு ஒருவர் தன் நினைவாற்றலை மீட்டெடுக்க முடியும்? நிச்சயமாக ஒருவர் தன் ஒரு வயது நினைவுகளை மீட்டெடுக்க முடியாது என்பது தெளிவு.

நாம் இங்கு அல் புகாரியை குறை கூறவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இத்தகைய ஹதீஸ்களின் விமர்சனங்களை கேட்கும் சிலர் இவ்வாறு சொல்லக் கூடும்: “இது இப்படித்தான் துவங்கும். முதலில் சில ஹதீஸ்களை ஆய்வு செய்வார்; விமர்சனம் செய்வார். பின்னர் அங்கிருந்து முழு ஹதீஸ் இலக்கியத்தையுமே தாக்க முற்படுவார்”. இத்தகையவர்களுக்கு நாம் ஒன்றைத் தெளிவாக சொல்லிக் கொள்கிறோம்: “குர்ஆனோடு பொருந்திப் போகிற, எம் அருமை இறைத்தூதரின் (ஸல்) பண்புநலன்களோடு ஒத்துப் போகிற, அவருடைய அற ஒழுக்கங்களுக்கு இணக்கமான ஹதீஸ்களை பாதுகாக்க நாமே முதலில் நிற்போம்.” எனினும் நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கிய இந்த ஹதீஸ் நூல்களிலுள்ள எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஆதரிப்போம் என்பது இதன் பொருள் அல்ல. நம் வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இறுதியாக, அல் புகாரியில் வரும் மற்றொரு செய்தியைப் பார்ப்போம்:

بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰى وَاَمَرُّ‏

இது அல் குர்ஆனில் அத்தியாயம் கமரில் வரும் ஒரு வசனம். இதன் பொருள்: ‘மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனை) காலமாகும். மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையானதும் மிக்க கசப்பானதுமாகும்.’ [54:46]

இந்த வசனம் குறித்து ஆயிஷா (ரழி) இவ்வாறு கூறுவதாக அல் புகாரியில் பதிவாகியுள்ளது:

لَقَدْ أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صلى الله عليه وسلم بِمَكَّةَ، وَإِنِّي لَجَارِيَةٌ أَلْعَبُ

“நான் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமியாக இருந்த போது இந்த வசனம் இறக்கப்பட்டது” [அல் புகாரி: 4876]

அத்தியாயம் கமர், இறைச்செய்தி (வஹீ) துவங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இறக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த வசனம் இறக்கப்பட்டதை ஆயிஷா (ரழி) நினைவில் வைத்துள்ளார் எனில் அப்போது அவருக்கு என்ன வயது இருக்கும்? அல் புகாரியின் கூற்றுப்படி பார்த்தால், அவருக்கு ஒரு வயது இருக்கும். தூதுத்துவத்தின் ஐந்தாவது ஆண்டில் கமர் அத்தியாயம் இறங்கியிருந்தால், அப்போது ஆயிஷா ஒரு வயதை அடைந்திருப்பார். மாறாக அவ்வத்தியாயம் நான்காவது ஆண்டில் இறங்கியிருந்தால் அப்போது அவர் பிறந்தே இருக்கமாட்டார். ஆனால் அவ்வசனம் அவரது கவனத்தை ஈர்த்திருந்தது என்று அறிகிறோம். அது இறங்கியதை நினைவில் வைக்கும் அளவிற்கு அவர் வளர்ந்திருப்பார் என்பது தான் இதன் அர்த்தம்.

இந்த அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் நம்பகமான ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமா அல்லது அல் புகாரி சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? எது அறிவார்ந்ததாகப் படுகிறது? இத்தகைய தகவல்களை ஏன் நாம் 13 நூற்றாண்டுகளாக சுமந்து வந்துள்ளோம்? நாம் கண் விழித்து, ஏதோ தவறு நடந்துள்ளது என்று உணராதவரை இந்தப் பிரச்சனைகள் நம் இஸ்லாமிய உள்ளத்தை, நம் இஸ்லாமிய சமூகத்தை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டேதான் இருக்கும். இந்தத் தவறைத்தான் நாம் சரி செய்ய முற்பட்டுள்ளோம்.

பரிசுத்தமும் உயர்வும் உள்ள அல்லாஹ் தன் வேதத்தில் இறைத்தூதரை (ஸல்) புகழ்ந்து, கண்ணியப்படுத்தி இவ்வாறு கூறுகிறான்:

وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ

மேலும் (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். [68:4]

மேலும் மற்றொரு வசனத்தில், அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. [33:21]

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்கு உள்ளாகிவிட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் நம்பிக்கையாளர்கள்மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.

(நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக! [9:128,129]

எனதருமைச் சகோதர சகோதரிகளே! நம் மார்க்கம் ‘அல் ஃபித்ரா’ நிலை மார்க்கம் என்று இறைத்தூதர் (ஸல்) குறிப்பிட்டுள்ளார். அதாவது, மனிதகுலம் முழுமைக்கும் உரிய பரிசுத்த இயற்கை நிலையான, மாசற்ற மானுட இயற்கை நிலை மார்க்கம் என்று குறிப்பிட்டுள்ளார். நம் தூதரும் நம் மார்க்கமும் அதே நிலையை கொண்டவர்களே. அப்படியிருக்க, அவர் ஆறு வயதே ஆன ஒருவரை திருமணம் முடிக்கக் கேட்டார் என்றும் அவர் ஒன்பது வயதை அடைந்தவுடன் திருமணம் முடித்தார் என்ற தகவலைக் கேட்கும் பொழுது, இதுதான் ‘ஃபித்ரா’ நிலையா என்ற கேள்வி எழுகிறது. இறைவன் நமக்கு அளித்த இயற்கை நிலை இதுதான் என்று யாராவது சொல்ல முடியுமா? ஆனால் அதிகாரத்தில் இருந்து கொண்டு பெண்களைத் துன்புறுத்துபவர்கள் அதைத் தொடர்ந்து செய்கிறார்கள். நம் மௌனமும் அவர்களுடைய குற்றங்களுக்கு துணை போகிறது.

♦ ♦ ♦ ♦ ♦

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *