இஸ்லாமிய நாட்காட்டி – 1442 உருவான விதம்

Posted on

பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். “அவை மக்களுக்கு காலத்தையும், ஹஜ்ஜையும் அறிவிப்பவை” என (நபியே) நீர் கூறும். (2:189)

அல்லாஹ்வின் அனுமதி கொண்டு, 1442 ஆம் ஆண்டிற்கான இஸ்லாமிய நாட்காட்டியை வடிவமைத்து இவ்வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளோம்.
https://www.mellinam.in/islamic-calendar-1442
இந்நாட்காட்டி குறித்த விபரங்களை இக்கட்டுரை தருகிறது. இக்கட்டுரையில், படங்களில் குறிப்பிடப்படுபவை மதுரைக்கான நேரங்களாகும். தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்குக் கணக்கிட்டாலும் தேதிகளில் மாற்றம் எதுவும் இருக்காது.

விதிகள்

இந்நாட்காட்டி பின்வரும் விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது:
1. ஒவ்வொரு புதிய நாளும் சூரிய மறைவிலிருந்து துவங்குகிறது.

2. சூரிய மறைவின்போது புதிய பிறையின் (New Moon) வயது 9 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் தென்படும் / தென்படும் வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு மாதத்தின் தொடக்கத்தை இவ்வாறு கணக்கிடலாம்:
பிறை தொடக்கம் (New Moon) : 19-08-20 08:12 (A)
மதுரையில் சூரிய மறைவு      : 19-08-20 18:34 (B)
சூரிய மறைவின்போது பிறையின் வயது: (B) – (A) = 10:22
எனவே 19-08-20 அன்று பிறை தென்படுவதால் (தென்படும் வாய்ப்பு உள்ளதால்) ஹிஜ்ரி 1442, முஹர்ரம் மாதத்தின் முதல் நாள் 20-08-20 ஆகும்.

3. மாதத்தின் இறுதியைக் கணக்கிட அந்த மாதத்தின் 29 ஆம் நாளை பார்ப்போம்:
புதிய பிறை தொடக்கம் (New Moon) : 17-09-20 16:31 (A)
மதுரையில் சூரிய மறைவு                  : 17-09-20 18:17 (B)
சூரிய மறைவின்போது பிறையின் வயது: (B) – (A)= 1:46
சூரிய மறைவின்போது புதிய பிறையின் (New Moon) வயது 9 மணி நேரத்திற்கும் குறைவு. ஆதலால் தென்படாது.
எனவே அந்த மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.
18-09-20 அன்று முஹர்ரம் 30 ஆகும். 19-09-20 அன்று சஃபர் 1 ஆகும். (படம் 1)

(படம் 1)

உதயம்-மறைவு

சூரியன் கிழக்கில் உதயமாகி மேற்கில் மறைகிறது. சந்திரன் கிழக்கு-வடகிழக்கில் உதயமாகி மேற்கு-வடமேற்கில் மறைகிறது.
சூரியன் காலையில் உதயமாகி மாலையில் மறைகிறது. ஆனால் சந்திரனின் உதயமும் மறைவும் அப்படியல்ல.
19-08-20 அன்று காலை 06:11க்கு உதயமாகிறது. புதிய பிறை (New Moon) 08:12க்குத் தொடங்குகிறது. மாலை 19:01க்கு வளர்பிறையாக மறைகிறது.
மறுநாள் 20-08-20 அன்று காலை 07:09க்கு வளர்பிறை உதயமாகி மாலை 19:50க்கு மறைகிறது.
அதற்கும் மறுநாள் 21-08-20 அன்று காலை 08:07க்கு வளர்பிறை உதயமாகி மாலை 20:38க்கு மறைகிறது. இவ்வாறே சென்று இறுதியில்,
15-09-20 அன்று காலை 03:53க்கு தேய்பிறை உதயமாகி மாலை 16:47க்கு மறைகிறது.
16-09-20 அன்று காலை 04:52க்கு தேய்பிறை உதயமாகி மாலை 17:38க்கு மறைகிறது.
17-09-20 அன்று காலை 05:51க்கு தேய்பிறை உதயமாகி 18:27க்கு மறைகிறது. (படம் 2,3)

சூரிய உதயத்திற்குப் பின்னர் வளர்பிறை உதயமாகிறது. சூரியனின் மறைவிற்குப் பின்பு வளர்பிறை மறைகிறது. எனவே நம்மால் காலையில் வளர்பிறையின் உதயத்தை பார்க்க முடியாது. ஆனால் மாலையில் வளர்பிறையின் மறைவை பார்க்க முடியும்.
சூரிய உதயத்திற்கு முன்பே தேய்பிறை உதயமாகிறது. சூரியனின் மறைவுக்கு முன்பே தேய்பிறை மறைந்து விடுகிறது. எனவே காலையில் தேய்பிறையின் உதயத்தை நாம் பார்க்க முடியும். மாலையில் தேய்பிறையின் மறைவை பார்க்க முடியாது.

(படம் 2)
(படம் 3)

பிறை (New Moon) தொடக்கம் / பிறையின் வயது

சூரியன் ஒரு நெருப்புப் பந்து. அதற்கு சுயமாக ஒளி உண்டு. சந்திரன் ஒரு மண் கோளம். அதற்கு சுய ஒளி இல்லை. சூரியனின் ஒளி சந்திரன் மீது பட்டு பிரதிபலிக்கிறது. அதையே நிலவொளி என்கிறோம்.
சூரிய ஒளி சந்திரனில் படுகிறது; வளர்ந்து செல்கிறது. பின்னர் தேய்ந்து கொண்டே வந்து மறைகிறது. அதை அமாவாசை என்றுக் கூறுகிறோம். பின்பு மீண்டும் சூரிய ஒளி சந்திரனில் பட்டு பிரதிபலிக்கத் தொடங்குகிறது. இதுவே புதிய பிறை (New Moon ) தொடக்கம் ஆகும். இது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நேரத்தில் நிகழ்கிறது. பகலிலும் நிகழும் (படம் 3).
இதிலிருந்தே அறிவியல் ரீதியாகப் பிறையின் வயதைக் கணக்கிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, 19-08-20 அன்று காலை 08:12 க்குத் தொடங்கும் புதிய பிறை (New Moon) 29.35 நாட்களைக் கொண்டதாகும். அதாவது 29 நாட்கள் 8 மணி 40 நிமிடங்கள் வயதைக் கொண்டதாகும்.

நாம் பிறை தென்படுவதை வைத்து ‘ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டது’ எனக் கணக்கிடுகிறோம்.
சூரியன் சுயமாகவே ஒளி உடையது என்பதால் இது போன்ற நிகழ்வு சூரியனில் ஏற்படுவது இல்லை. எனவே சூரியனை வைத்து மாதத்தை கணக்கிட இயலாது.

ஒளி (Illumination)

எல்லா மாதங்களிலும் அமாவாசையின்போது சந்திரன் ஒளியில்லாமல் 0.0 என இருப்பதில்லை. சில மாதங்களில் 0.1, சில மாதங்களில் 0.2 அளவு ஒளி இருக்கிறது.

புதிய பிறை தொடங்கும்போது உள்ள நிலையிலிருந்து 9 மணி நேரத்தில் 0.2 அளவு ஒளி அதிகரிக்கிறது.

குழப்பம்

தமிழ்நாட்டில், ‘ஹிஜ்ரி கமிட்டி’ என்ற பெயரில் செயல்படும் சிலர் ‘ஹிஜ்ரி காலண்டர்’ ஒன்றை வெளியிடுகின்றனர். அவர்கள் கடந்த 1441 ஆம் ஆண்டு ரமழான் பெருநாள் 23-04-2020 என்றுக் கூறினர். இந்த ஹஜ் பெருநாள் 30-07-20 என்றுக் கூறினர். அதாவது ஒருநாள் முன்னதாக.
இதற்குக் காரணம் என்னவெனில் அவர்கள் ‘ஒவ்வொரு புதிய நாளும் சூரிய உதயத்திலிருந்து தொடங்குகிறது’ என்றுக் கூறுகிறார்கள்; அதில் பிடிவாதமாக நிற்கிறார்கள். அவர்கள் தங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும். சமூகத்தில் குழப்பம் செய்யக் கூடாது.

புதிதல்ல

எல்லாப் பள்ளிவாசல்களிலும் தொழுகை, நோன்புகளுக்கான கால அட்டவணைகள் உள்ளன. அதைப் பார்த்து பாங்கு சொல்கிறார்கள். தொழுகிறோம்; நோன்பு நோற்கிறோம். இதில் நமக்கு எந்த மனச்சலனமும் ஏற்படுவதில்லை.
சூரியனின் உதயம், உச்சம், மறைவு நேரங்களை அறிவியல்பூர்வமாகக் கணக்கிட்டதுபோல சந்திரனின் உதயம், மறைவு, தென்படும் நேரங்களை வைத்து மாதங்களைக் கணக்கிட்டுள்ளோம்.
காலத்தின் சிறிய அலகுகளான மணி, நிமிடம் போன்றவற்றை நவீன அறிவியல் வசதிகளைக் கொண்டு கணக்கிட்டதுபோல பெரிய அலகான மாதங்களை கணக்கிட்டுள்ளோம்.

அல்லாஹ்வே அறிந்தவன்.

ஆதாரங்கள் (Sources)

https://www.mooncalc.org
https://www.suncalc.org
https://www.timeanddate.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *