ஆத்ம ஆனந்தங்கள் – சையித் குதுப்


ஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்
ஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 3) – சையித் குதுப்
♦ ♦ ♦ ♦ ♦
(பாகம் 1)
தூக்குக் கயிறு முகத்துக்கு நேரே தொங்கிக் கொண்டிருக்கிறது. அதன் வளையத்தைப் பார்த்து,
அதோ தெரிகிறது சொர்க்கம்! இரண்டடி பாய்ந்தால் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம்
என்றதோடு, கலிமா சொல்லித்தர வந்த மதகுருவை நோக்கி,
நீ லா இலாஹ இல்லல்லாஹ்வை சாப்பிடுகிறாய். ஆனால் நானோ அதற்காக மரணிக்கப் போகிறேன். தொழுகையில் கலிமதுஷ் ஷஹாதாவுக்காக எந்த விரலை உயர்த்தினேனோ அந்த விரலால் எழுதியதை ஒருபோதும் நான் திரும்பப் பெறப்போவதில்லை. என்னுடைய கருத்தாக இருந்தால் திரும்பப் பெறலாம். அல்லாஹ்வின் கருத்தை திரும்பப் பெறுவதற்கு எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
என்ற வரலாற்று வசனங்களின் சொந்தக்காரர்தான் ஷஹீத் சையித் குதுப். கொள்கைக்காக மரணத்தின் வாசற்படியில் மகிழ்ச்சியோடு காலடி எடுத்து வைத்தவர் அவர்.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்து, அதன் நடுப்பகுதியில் அல்-இஃக்வான் அல்-முஸ்லிமூன் இயக்கத்துடன் இணைந்து, ‘இறைமை அல்லாஹ்வுக்கே!’ என்று கூறிய ஒரே காரணத்திற்காக எகிப்தின் நாசரிய அரசால் தூக்கிலேற்றப்பட்டவர். சிறையிலிருந்த காலத்தில் அவரது கொள்கையைத் தளர்த்தும்படி கேட்டு, அவருக்கு மிகவும் நெருக்கமான அவரது தங்கை ஹமீதா குதுபை இயக்கத்தினர் அவரிடம் அனுப்பி வைத்தனர். தனது மரணத்தை எண்ணி கலங்கிய தங்கைக்கு இலட்சிய அண்ணன் எழுதிய நீண்ட மடலிது.
– ஏ.பி.எம். இத்ரீஸ்
(தமிழாக்கம்: கலாநிதி பி.எம்.எம். இர்ஃபான்)
♦ ♦ ♦ ♦ ♦
01
என் அன்புள்ள சகோதரிக்கு…
இங்கு என் மனவெழுச்சிகளை உனக்கு அர்ப்பணம் செய்கின்றேன். மரணம் பற்றிய சிந்தனை உன்னிடம் அடிக்கடி தோன்றுவதை நான் காண்கின்றேன்.
எல்லா இடங்களிலும், எல்லாவற்றின் பின்புலத்திலும் அதையே நீ உருவகிக்கிறாய். வாழ்வையும் உயிரிகளையும் மூடி நிற்கின்ற ராட்சத சக்தியாக அதை கற்பனை செய்கின்றாய். மரணத்தின் அருகில் வாழ்வை வைத்துப் பார்க்கும்போது, வாழ்வு என்பது அச்சமும் பீதியும் நிறைந்ததாக உனக்குத் தோன்றுகிறது.
ஆனால், நான் மரணத்தைப் பார்க்கின்றேன். எங்கும் வியாபித்து நிறைந்திருக்கும் வாழ்வின் சக்திகளுக்கு அருகில் ஓர் அற்ப அம்சமாகவே அது எனக்குத் தெரிகிறது. வாழ்க்கை என்ற உணவுத் தட்டிலிருந்து சிந்தும் ஒரு பருக்கையை பொறுக்கி உண்பதை தவிர வேறெதனையும் அதனால் செய்துவிட முடிவதில்லை. பொலிவு நிறைந்த வாழ்வின் நீட்சி இதோ என்னைச் சூழ ஆர்ப்பரிக்கிறது.
ஒவ்வொரு பொருளும் வளர்ச்சியை, மலர்ச்சியை, பாய்ச்சலை நோக்கியே செல்கின்றது. மனித, மிருக தாய்மைகள் கருவைச் சுமந்து பிரசவிக்கின்றன. மீன்களும் பூச்சிகளும் விலங்குகளும் முட்டையிட்டு வாழ்வை புஷ்பிக்கின்றன. கனிகளும் மலர்களும் கொண்ட மரங்களால் பூமி புன்னகைக்கிறது. வானம் மழை பொழிகின்றது. கடல்கள் அலைகளாக உயர்ந்து கைதட்டுகின்றன.
பூமியின் ஒவ்வொரு பொருளும் வளர்கிறது. பெருகுகிறது. மரணமோ இடையிடையே பாய்ந்துவந்து வாழ்வென்ற உணவுத் தட்டிலிருந்து சிந்தும் பருக்கைகளை கவ்விச் செல்கிறது.
ஆனால், இதை சற்றும் கண்டு கொள்ளாமல் தன் வழியில் உயிரோட்டத்தோடு நகர்ந்து கொண்டே இருக்கிறது வாழ்க்கை. எதிர்பாராமல் மரணம் வந்து தன் உடலை தீண்டும்போது வாழ்க்கை சிலவேளை அலறலாம். ஆனாலும் அந்த காயம் விரைவிலேயே ஆறிவிடுகின்றது. வேதனைப் புலம்பல் ஆனந்தமயமாக மலர்கின்றது.
மனிதர்களும் விலங்குகளும் மீன்களும் பறவைகளும் பூச்சி புழுக்களும் புற்பூண்டுகளும் வாழ்தலால் பூமியை நிரப்பிக் கொண்டே இருக்கின்றன. மரணமோ காத்திருந்து வாழ்க்கையை தீண்டுகிறது. அல்லது, தட்டிலிருந்து சிந்தும் உணவுப் பருக்கையை கொத்திச் செல்கிறது.
சூரியன் உதித்து மறைகிறான். பூமி அவனை வலம் வருகிறான். இங்கும் அங்கும் வெளிப்படுகிறது வாழ்க்கை. ஒவ்வொன்றும் வளர்ச்சியை நோக்கி. வகை, முறை, எண்ணிக்கை ஆகிய அனைத்திலுமே.
மரணத்தால் எதையாவது சாதிக்க முடிந்திருந்தால், வாழ்வின் நீட்சி எப்போதோ நின்று போயிருக்கும். எங்கும் வியாபித்து நிறைந்திருக்கும் வாழ்வின் சக்திகளுக்கு அருகில் அது ஓர் அற்ப அம்சமே தவிர வேறில்லை.
நித்திய ஜீவன் அல்லாஹ்வின் ஆற்றலில் இருந்தல்லவா வாழ்வின் ஜீவிதம் முகிழ்த்திருக்கிறது?!
02
நமக்காக மட்டுமே நாம் வாழும்போது வாழ்வென்பது எளியதாகவும் குறுகியதாகவுமே தோன்றுகிறது. நம் வாழ்வு தொடங்கிய புள்ளியிலிருந்து நம் ஆயுள் முடியும் புள்ளியோடு அது வரையறுக்கப்பட்டு விடுகிறது.
ஆனால் பிறருக்காக, ஒரு சிந்தனைக்காக நாம் வாழும்போது அந்த வாழ்வு ஆழமும் நீளமும் கொண்டதாக மாறுகிறது. மனித இனத் தோற்றத்திலிருந்து ஆரம்பித்து இப்பூமியை விட்டு நாம் விடைபெற்ற பிறகும் கூட அது நீள்கிறது.
இது வெறும் அனுமானமன்று. ஏனெனில், இந்த அமைப்பிலான வாழ்வு பற்றிய பார்வை எமது நாட்களையும் மணிகளையும் நிமிடங்களையும் பன்மடங்காக்குகிறது. உண்மையில் ஆயுள் நீட்சி என்பது வயதின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுவதல்ல. உணர்வுகளின் திருப்தியில்தான் அது தீர்மானிக்கப்படுகிறது.
யதார்த்தவாதிகள் இதனை கற்பிதம் என்பர். ஆனால் அவர்கள் வைத்திருக்கும் பல யதார்த்த பெறுமானங்களை விட இது சிறந்த யதார்த்தமே.
வாழ்வு என்பது வாழ்தல் பற்றிய பிரக்ஞையே தவிர வேறில்லை. வாழ்தல் குறித்தான உணர்விலிருந்து ஒரு மனிதனை கழற்றிவிடுவதானது, அதன் உண்மைப் பொருளில் வாழ்விலிருந்தே அவனை கழற்றிவிடுவதுதான்.
தன் வாழ்வு பற்றி பன்மடங்கு உணர்வைப் பெறும் மனிதன் உண்மையில் பன்மடங்கு வாழ்கிறான். இது விவாதத்திற்கு அவசியமற்ற ஓர் எளிய உண்மை என்றே நான் நினைக்கிறேன். அடுத்தவர்களுக்காக வாழும்போது நமக்கு நாமே பன்மடங்கு வாழ்கிறோம். அடுத்தவர்கள் பற்றிய உணர்வை பெருக்கிக் கொள்ளும் அளவுக்கேற்ப நமது வாழ்வையே நாம் பெருக்கிக் கொள்கிறோம்.
03
தீமையின் வித்து வேகமாய் வளரலாம். ஆனால் நன்மையின் வித்தே நல்ல விளைவைத் தருகின்றது. தீய வித்து வானத்தை நோக்கி விரைவாக உயர்ந்தாலும் அதன் வேர்கள் மண்ணில் ஆழப்பதிவதில்லை. நல்ல விருட்சத்திற்கான உஷ்ணத்தையும் காற்றையும் அது தடுக்க முனைந்தாலும் நல்விருட்சம் அமைதியாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது.
நல்விருட்சத்தின் ஆழ்ந்த பிடிமானம் கொண்ட வேர்களே காற்றையும் உஷ்ணத்தையும் அதற்குப் பெற்றுக் கொடுக்கப் போதுமாகின்றன. தீய விருட்சத்தின் வெளிப்பகட்டை விட்டு உண்மையான சக்தியையும் உறுதியையும் சோதித்துப் பார்க்கும் போதுதான் அதன் பலவீனம் தெரியவருகிறது.
ஆனால் நல்விருட்சமோ சோதனைகளை தாங்கிக் கொள்கிறது. எந்தப் புயலுக்கும் தாக்குப் பிடிக்கின்றது. தீய விருட்சம் வீசும் முட்களையும் அழுக்குகளையும் பொருட்படுத்தாமல் அமைதியாக அது வளர்ந்து கொண்டேயிருக்கிறது.
04
மனித மனங்களில் நல்ல பகுதியை தேடிச் செல்லும்போது அங்கு ஏராளமான நன்மைகளை கண்டுகொள்கிறோம். சிலபோது முதற் பார்வையிலேயே அவை நமது கண்களுக்குத் தெரிவதில்லை. இந்த உண்மையை அனுபவ பூர்வமாய் நான் உணர்ந்திருக்கின்றேன். பலரிடத்தில் அனுபவித்திருக்கிறேன். அவர்கள் வெளிப்படையில் மோசமானவர்களாய், உணர்ச்சியற்றவர்களாய் தென்பட்டாலும் கூட கொஞ்சம் அவர்களது தவறுகளையும் அறியாமையையும் மன்னிக்கக் கூடிய கருணை, கொஞ்சம் அவர்கள் மீதான உண்மையான அன்பு, கொஞ்சம் அவர்களது கவலைகள்-அபிலாஷைகள் மீதான செயற்கையற்ற அக்கறை இவை போதும் அவர்களது உள்ளத்திலுள்ள நன்மையின் ஊற்று திறந்து கொள்வதற்கு.
இதய சுத்தியோடும் உண்மையோடும் நீ கொடுத்த அந்தக் கொஞ்சத்திற்கு பகரமாய், அன்பையும் பாசத்தையும் உனக்கு அவர்கள் காணிக்கையாக்குவார்கள்.
தீமை என்பது பல நேரங்களில் நாம் நினைப்பது போன்று மனித உள்ளத்தில் ஆழப்பதிந்த ஒன்றல்ல. நிலைத்து வாழ்தலுக்கான போராட்டத்திற்கு முகம் கொடுக்க மனிதர்கள் போர்த்தியிருக்கும் கடினமான மேற்தோலில்தான் அது ஒட்டியிருக்கிறது. போராட்டத்தில் அவர்கள் வென்றுவிட்டால் அந்த மேற்தோலும் விலகி சுவைமிக்க கனி வெளிப்படுகிறது. தான் நம்பிக்கைக்குரியவன் என்று அவர்களை உணரச்செய்பவனால் மட்டுமே இந்த இனிய கனியை சுவைக்க முடியும்.
அவன் காட்டுகிற அன்பும், அவர்களது வாழ்க்கைப் போராட்டங்கள், வேதனைகள், தவறுகள், அறியாமைகள் குறித்து அவன் காட்டும் அக்கறையும் உண்மையானவை என்று அவர்கள் உணர வேண்டும். ஆரம்பத்திலேயே நாம் காட்டுகின்ற சிறிது மனவிசாலம் மூலமாக இவை அனைத்தையும் சாதித்துக்கொள்ள முடியும். இதை நான் அனுபவித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறேன். எனவே இவை வெறுமனே இறக்கை கட்டிவந்த வார்த்தைகளன்று. என் கனவுகளின், கற்பனைகளின் குழந்தைகளுமன்று.
05
அன்பும் கனிவும் எம் உள்ளத்தில் வேர்விடுகின்றபோது சுமைகளும் கஷ்டங்களும் உள்ளத்தைவிட்டு நீங்கிவிடுகின்றன. அப்போது அடுத்தவர்களை புகழ்வதற்கு எமக்கு முகஸ்துதி வேண்டியதில்லை. ஏனெனில், இதய சுத்தியோடும் உண்மையோடுமே நாம் அவர்களை புகழ்கிறோம். இத்தகைய உண்மை எம்மிடம் உள்ளபோதுதான் மனித மனங்களில் இருக்கும் நன்மைகளின் புதையல்களை, புகழத்தக்க நல்லியல்புகளை கண்டுகொள்ள முடிகிறது.
எந்த மனிதனிடமும் ஒரு புகழ்வார்த்தையை அவனுக்குப் பெற்றுக்கொடுக்கின்ற நல்ல பக்கமொன்று அல்லது நல்லியல்பு இல்லாமல் போய்விடுவதில்லை. ஆனால், அன்பு விதை எம் உள்ளங்களில் வளராதபோது அதைக் கண்டுகொள்வது சாத்தியமற்றதாகி விடுகிறது. அடுத்தவர்கள் மீதான எந்தக் கடமைப்பாட்டையும் நாம் எமது உள்ளத்தின் மீது சுமத்தி வருத்த வேண்டியதில்லை.
அவர்களது தவறுகளையும் அறியாமைகளையும் சகித்துக்கொள்ளும் சிரமத்தையும் கூட அதன் மீது திணிக்கத் தேவையில்லை. ஏனென்றால், குறைபாடுகளையும் பலவீனங்களையும் சேர்த்தே அவர்களை நாம் நேசிக்கிறோம். பாச வித்து நம் உள்ளத்தில் வளருகின்றபோது குறைகளை தேடிக் கொண்டிருக்க மாட்டோம்.
காழ்ப்புணர்வோ எச்சரிக்கையுணர்வோ கூட நம்மை அழுத்த வேண்டியதில்லை. ஏனெனில், நன்மை நம் இதயத்தில் போதுமானளவு வளராத போதுதான் அடுத்தவர்கள் மீது காழ்ப்புணர்வு கொள்கிறோம். நன்மையின் மீதான நம்பிக்கைக் குறைவால்தான் அடுத்தவர்களிடம் நாம் அச்சம் கொள்கிறோம். அன்பும் கனிவும் அருளும் நம் உள்ளத்தில் வேர்விடும் அந்தப் பொழுதில், அடுத்தவர் மீது அந்த அன்பையும் கனிவையும் நம்பிக்கையையும் நாம் பாய்ச்சுகின்ற அந்தப் பொழுதில், எத்தனை நிம்மதியும் அமைதியும் காண்கிறோம்!
06
அடுத்த மனிதர்களைவிட நாம் பக்குவமான ஆன்மா கொண்டவர்கள், சுத்தியான இதயம் கொண்டவர்கள், விரிந்த உள்ளம் கொண்டவர்கள், கூரிய அறிவு கொண்டவர்கள் என்ற உணர்வுநிலையின் காரணமாக அவர்களிடமிருந்து ஒதுங்கிவிடும்போது பெரிதாக எதையும் நாம் சாதிக்கப் போவதில்லை. ஏனென்றால், அதன் மூலம் சிரமங்கள் குறைந்த, இலகுவான பாதையையே நாம் தேர்ந்தெடுக்கிறோம். உண்மையான பெருந்தன்மை என்பது அப்படி வருவதன்று.
விரிந்த ஆன்மாவோடு, தவறையும் பலவீனத்தையும் கண்டு இரங்குகின்ற கனிவோடு அடுத்த மனிதர்களோடு பழகுவதும் அவர்களை கவனிப்பதுமே உண்மையான பெருந்தன்மையாகும். அவர்களை பண்படுத்தி, தூய்மைப்படுத்தி, முடிந்த அளவு நம் கருத்துக்கு உயர்த்துவதற்கான போலியற்ற விருப்பத்தை அதுவே பிரதிபலிக்கிறது. இதன் பொருள் எம் உயர்ந்த பெறுமானங்கள், இலட்சியங்கள் ஆகியவற்றிலிருந்து விலகிவிடுவதோ, அல்லது அடுத்த மனிதர்களோடு முகஸ்துதி பாராட்டி அவர்களது துர்க்குணங்களை புகழ்வதோ, அல்லது அவர்களை விட நாம் உயர்ந்து நிற்பவர்கள் என்று உணரச்செய்வதோ அன்று.
இத்தகைய முரண் நிலைகளுக்கு மத்தியில் நாம் காணும் இணக்கமும், அது வேண்டிநிற்கும் சிரமத்தை பரந்த மனத்தோடு ஏற்பதுமே உண்மையான பெருந்தன்மையாகும்.
♦ ♦ ♦ ♦ ♦
ஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்