ஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்


ஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்
♦ ♦ ♦ ♦ ♦
07
நாம் ஒரு குறிப்பிட்டளவு பலமடைந்து விட்டபோதும், அடுத்தவர்களின் உதவியை பெற்றுக் கொள்வதால் எந்தக் குறையும் எமக்கு ஏற்பட்டுவிடப் போவதில்லை என்று நாம் உணர வேண்டும். அவர்கள் எம்மை விட பலம் குறைந்தவர்களாக இருந்தாலும் சரியே. நாம் பெறும் உயர்வுக்கு அடுத்த மனிதர்களின் உதவி காரணமாக அமைவது எமது அந்தஸ்தை எந்த விதத்திலும் பாதித்துவிடாது என்ற உணர்வுதான் எம்மிடம் இருக்க வேண்டும்.
ஆனால் நாமோ ஒவ்வொரு விடயத்தையும் தனியாக நின்று செய்யவே முயல்கிறோம். அடுத்தவர்களின் உதவியைப் பெறுவதிலிருந்து தவிர்ந்து கொள்கிறோம். அவர்களது முயற்சியை எமது முயற்சியோடு சேர்த்துக்கொள்ள சங்கடப்படுகிறோம். நாம் அடையும் வளர்ச்சிக்கு அடுத்தவர் உதவியும் ஒரு காரணம் என்று மக்கள் அறிந்துகொள்வதை நாம் தாழ்வாகவே உணர்கிறோம்.
நமக்கு நம் மீதே பெரியளவு நம்பிக்கை இல்லாதபோதுதான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறோம். நம்மிடம் ஏதோவொரு பலவீனம் இருப்பதையே இது காட்டுகிறது.
உண்மையான பலசாலியாக இருக்கும்போது இத்தகைய உணர்வுநிலைகளுக்கு நாம் ஆட்பட மாட்டோம். சிறு குழந்தைதான் அது நடக்கப் பழகும்போது பிறர் உதவிக்காக நீட்டும் கையையும் தட்டிவிடுகிறது.
நாம் ஒரு குறிப்பிட்டளவு பலமடையும்போது அடுத்தவர்களின் உதவியை மகிழ்வோடும் நன்றியுணர்வோடும் வரவேற்க வேண்டும். நன்றி அவர்கள் உதவிக்கானது. மகிழ்ச்சி நாம் நம்பும் சிந்தனையை இன்னும் பலர் நம்பி அதில் பங்கெடுக்கிறார்கள் என்பதற்கானது. உணர்வுப் பரிமாறலின்போது கிடைக்கின்ற ஆனந்தமே கட்டற்ற தூய ஆனந்தமாகும்.
08
எமது சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் நாம் பதுக்கியே வைக்கிறோம். அவற்றில் பிறர் கன்னமிடும்போது கோபமடைகிறோம். அவை எமக்குரியவை என்பதை நிரூபிக்க அதிக பிரயத்தனம் எடுக்கிறோம்.
இப்படி நாம் செய்யக் காரணம், அச்சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் பற்றிய விசுவாசம் எம்மிடமே பெரியளவு இல்லாதது தான். எமது உள்ளத்தின் அடியிலிருந்து அவை ஊற்றெடுக்காதபோது, எம்மை விடவும் அவை நமக்கு நேசத்துக்கு உரியவையாக இல்லாத போதுதான் நாம் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறோம்.
தூய ஆனந்தமென்பது நாம் உயிரோடிருக்கும் போதே நமது சிந்தனைகளும் நம்பிக்கைகளும் அடுத்தவர் சொத்தாக மாறிவிடுவதை காணும்போது இயல்பாக வருவதாகும். அந்த நம்பிக்கைகளும் சிந்தனைகளும் நாம் மறைந்த பிறகாவது அடுத்த மனிதர்களுக்கு பயன்படும் என்ற ஆறுதலும் திருப்தியும் மகிழ்ச்சியுமே எம் உள்ளத்தை நிரப்பப் போதுமானதாகும்.
வியாபாரிகள்தான் தங்கள் பொருட்களின் வியாபார முத்திரையில் கவனமாயிருப்பார்கள். தமக்குரிய நற்பெயரையும் இலாபத்தையும் அடுத்தவர் அபகரித்துக் கொள்ளாதிருக்க அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள். ஆனால், சிந்தனையாளர்களதும் கொள்கைவாதிகளதும் ஆனந்தமே, அவர்களது சிந்தனையையும் கொள்கையையும் மக்கள் பங்குபோட்டுக் கொள்வதை பார்க்கும்போது, அவற்றை மக்கள் தம் சொந்தப் பெயர்களோடு இணைத்துச் சொல்லுமளவு விசுவாசிப்பதை காணும்போது தான் ஏற்படுகிறது.
அந்த நம்பிக்கைகளுக்கும் சிந்தனைகளுக்கும் சொந்தக்காரர்கள் தாம் மட்டுமே என்று இத்தகைய மாமனிதர்கள் எண்ணமாட்டார்கள். அவற்றை பிறருக்கு நகர்த்துகின்ற, விளக்குகின்ற வெறும் ஊடகங்களாகவே அவர்கள் தங்களை கருதுவர். தாம் கொண்டுள்ள நம்பிக்கைகளுக்கும் சிந்தனைகளுக்குமான மூலஊற்று தங்கள் சொத்தல்ல என்ற உணர்வு அவர்களிடம் இருக்கும். அந்த அடிப்படை ஊற்றோடு தங்களுக்கிருக்கும் உறவில் கிடைக்கக் கூடிய திருப்தி மட்டுமே அவர்களது தூய ஆனந்தத்துக்குப் போதுமாகின்றது.
09
உண்மைகளை விளங்கிக் கொள்ளல், உண்மைகளை அடைந்து கொள்ளல் ஆகிய இரண்டுக்குமிடையிலான வேறுபாடு மிகப் பெரியது. முதல் வகை அறிவு. இரண்டாவது வகை ஞானம்.
முதலாவதில் வார்த்தைகளோடும் வெறும் பொருள்களோடும் அல்லது அனுபவங்களோடும் துண்டுதுண்டான பெறுபேறுகளோடுமே உறவாடுகிறோம். இரண்டாவதிலோ உயிர் ததும்பும் விளைவுகளோடும் முழுமையான முடிவுகளோடும் உறவாடுகிறோம்.
முதலாவது தகவல்கள் வெளியிலிருந்து வந்து எமது பகுத்தறிவில் நிலைகொள்வது. இரண்டாவது உண்மைகள் எம் அடையாளங்களிலிருந்து பிரவாகமெடுத்து எமது நாடி நரம்புகளில் இரத்தத்தோடு கலந்து நிற்பது. அவற்றின் ஜுவாலைகள் நம் மெய்மையோடு அத்வைதம் அடைந்து விடுவது.
முதலாவதில் துறைகளும் தலைப்புகளுமே இருக்கும். அறிவுத்துறையும் அதன் கீழ் பல்வேறுபட்ட தலைப்புகள்; மார்க்கத்துறையும் அதன் கீழ் பல்வேறுபட்ட தலைப்புகள், பிரிவுகள், தொகுதிகள்; கலைத்துறையும் அதன் கீழ் அக்கோட்பாடு பற்றிய விளக்கங்கள், வியாக்கியானங்கள் என்று அவை அமைகின்றன.
இரண்டாவதிலோ மிகப்பெரும் பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு கொண்ட ஒரு சக்தியே தொழிற்படும். மூலஊற்றோடு சங்கமிக்கின்ற கிளை ஊற்றாக அது இருக்கும்.
10
மானிடக் கலைகளின் ஒவ்வொரு துறையிலும் சிறப்புத் தேர்ச்சி கொண்டோர் எமக்கு அவசியம் தேவைப்படுகின்றனர். இத்தகையோர் தங்கள் பணிமனைகளை ஆசிரமங்களாகவும் பாணசாலைகளாகவும் எடுத்துக்கொண்டு தாம் தெரிவு செய்திருக்கும் துறைக்காக வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும்.
தியாக சிந்தையோடன்றி, தனது ஆன்மாவை மகிழ்வோடு தன் கடவுளுக்கு காணிக்கையாக்குகின்ற ஒரு பக்தனின் இன்ப உணர்வோடு வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும். எனினும் வாழ்வின் திசையை தீர்மானிப்போர் அல்லது மனித சமூகத்திற்கான பாதையை தெரிவு செய்வோர் இவர்களல்லர் என்ற புரிதலும் எம்மிடம் இருப்பது அவசியமாகும்.
ஒப்பற்ற ஆத்ம பலம் கொண்டோரே எல்லாக் காலத்திலும் மனித இனத்தின் வழிகாட்டிகளாய் இருந்து வந்திருக்கின்றனர்; இருக்கவும் போகின்றனர். இவர்கள் ஏந்திநிற்கும் புனித நெருப்பில்தான் அனைத்து அறிவியல்களும் புடம் போடப்படுகின்றன. அதன் வெளிச்சத்தில்தான் பயணத்திற்கான வழித்தடம் தெளிவாகிறது. அதுதான் மிக உன்னத இலட்சியத்தை நோக்கிய நகர்வைத் தயார் செய்கிறது.
இத்தகைய முன்னோடிகளே தங்கள் ஞானப்பார்வையால் அறிவு, கலை, நம்பிக்கை, உழைப்பு ஆகிய அனைத்திலும் வெளிப்பட்டு நிற்கும் முழுமைபெற்ற அந்த ஒருமையை தரிசிக்கின்றனர். எனவே, இவற்றில் எதையும் அவர்கள் இழிவாக நோக்குவதில்லை. எதையும் அதன் தரத்திற்கு மேல் உயர்த்துவதுமில்லை. எளிய மனிதர்களே வேறுபட்ட வெளிப்பாடு கொண்ட இந்த துறைகளுக்கு இடையில் ஒரு முரண்பாடு இருப்பதாக நம்புகிறார்கள்.
அதனால்தான் மார்க்கத்தின் பெயரால் அறிவியலையும் அறிவியலின் பெயரால் மார்க்கத்தையும் எதிர்க்கின்றார்கள். உழைப்பின் பெயரால் கலையையும் சூஃபித்துவ நம்பிக்கையின் பெயரால் உயிர் ததும்பும் முன்னோக்கிய பாய்ச்சலையும் இழிவாக நோக்குகின்றார்கள். முழுப் பிரபஞ்சத்தையும் மூடிநிற்கும் பிரம்மாண்டமான சக்திகளின் ஒரே ஊற்றிலிருந்து வெளிப்படுகின்ற இந்த அம்சங்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறானவை என்று நம்புவதே இதற்குக் காரணம்.
ஆனால் மகோன்னத மனிதர்கள் இந்த ஒருமைப்பாட்டை அறிவார்கள். அதே மூல ஊற்றோடுதான் அவர்களும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். அதிலிருந்துதான் அவர்களும் பெறுகிறார்கள். இத்தகைய மகான்கள் மனித வரலாற்றில் மிக அரிதாகவே தோன்றுகின்றனர். எனினும் அவர்களே போதுமாகவும் இருக்கின்றனர். ஏனெனில், இப்பிரபஞ்சத்தை கண்காணிக்கும் அந்த ஒரே சக்திதான் இவர்களை சிருஷ்டிக்கிறது. அவசியம் என்ற தீர்மானிக்கப்பட்ட பொழுதில் உலகுக்கு அனுப்பி வைக்கிறது.
11
பௌதீக உண்மைகளுக்கு மாற்றமான நிகழ்வுகளுக்கும் மறைவான சக்திகள் குறித்தான நம்பிக்கைகளுக்கும் முழுமையாக அடிமைப்பட்டு விடுவது அபாயகரமானது. ஏனெனில், அது மூட நம்பிக்கையை நோக்கியே நம்மை செலுத்தும். முழு வாழ்வையும் ஒரு பெரும் யூகமாக மாற்றிவிடும்.
இந்த அம்சங்களை முற்றாக மறுதலித்து விடுவதும் அதே போன்று அபாயமானதே. ஏனெனில், இவ்வாறான மறுதலிப்பு மறைவான உலகத்தின் ஜன்னல்களை எம்முன் மூடிவிடுகின்றது. வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் மானிடப் புரிதலுக்கு உட்படாது நின்ற ஒரே காரணத்திற்காக கட்புலனாகாத அனைத்து சக்திகளையும் அது நிராகரிக்க வைத்து விடுகின்றது.
இந்நிலையில் இப்பிரபஞ்சம் அதன் பருமனாலும் சக்தியாலும் பெறுமானத்தாலும் சுருங்கிவிடுகிறது. ‘அறியப்பட்ட’ உலகோடு மட்டும் அது வரையறைப்பட்டு விடுகிறது. ஆனால், இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத் தன்மையுடன் ஒப்பிடும்போது மிக மிகச் சொற்பமானது இந்த அறியப்பட்ட உலகம். இப்பூமியில் மனித வாழ்வு தனது நீண்ட பாதையில் முன்னோக்கி நகர்ந்த போதெல்லாம், பிரபஞ்ச சக்திகளை அறிந்துகொள்வது குறித்த இயலாமையினதும் இயலுமையினதும் சங்கிலித் தொடராகவே அது இருந்து வந்திருக்கிறது.
கடந்த நிமிடம் வரை தனக்குப் புரியாதிருந்த, தனது அறிவுக்கு அப்பாற்பட்டிருந்த ஒவ்வொரு பிரபஞ்ச சக்தியையும் ஒரேயொரு பொழுதில் கண்டுகொள்கின்ற மனித ஆற்றலே அவனது ஞானக்கண்ணை திறக்கப் போதுமானது. தன் அறிவுக்குத் தட்டுப்படாத இன்னும் பல சக்திகள் இருப்பதையும், தான் இன்னும் பரிசோதனைக் கட்டத்திலேயே இருப்பதையும் அந்த ஞானக்கண் மூலம் அவன் உணர்ந்து கொள்கிறான்.
இந்த வகையில், மறை உலகுக்கு கொடுக்க வேண்டிய அந்தஸ்தை கொடுத்து விடுவதே மனித பகுத்தறிவுக்கு கௌரவமானதாகும். மூட நம்பிக்கையாளர்கள் செய்வது போல் நம் அனைத்து விடயங்களையும் அந்த மறை உலகிடம் ஒப்படைத்து விடுதல் என்பது இதன் பொருளல்ல. இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத் தன்மையை அதன் உண்மைத் தோற்றத்தில் ஏற்றுக் கொள்வதும், பரந்த இந்த அண்டப் பெருவெளியில் எமக்குரிய இடம் என்ன என்பதை அறிந்து கொள்வதுமே இதன் பொருளாகும்.
இத்தகைய நிலைப்பாடு மனித ஆன்மாவுக்கு முன்னால் ஞானத்துக்கான பல வாசல்களை திறந்து விடுகின்றது. இப்பிரபஞ்சத்தோடு தன்னை பிணைக்கும் உள்ளகக் கட்டுமானங்கள் பற்றிய சிந்தனையை அதனிடம் தூண்டுகிறது.
இந்த அம்சங்கள் பகுத்தறிவின் மூலமாக இன்றுவரை மனிதன் அடைந்து கொண்ட அனைத்தையும் விட சந்தேகமின்றி ஆழமானவை, பாரியவை. தினமும் ஒரு மறைவான அம்சத்தை நாம் புதிதாக கண்டுபிடிக்கிறோம். தொடர்ந்தும் அத்தகைய அம்சங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையே இதற்குப் போதுமான சான்றாகும்.
♦ ♦ ♦ ♦ ♦
ஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 3) – சையித் குதுப்