ஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 3) – சையித் குதுப்

Posted on

ஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்

♦ ♦ ♦ ♦ ♦

12

 அல்லாஹ்வின் எல்லையற்ற மகத்துவத்தை ஏற்றுக் கொள்வதானது மனிதனின் பெறுமதியைக் குறைப்பதாகவும் பிரபஞ்சத்தில் அவன் வகிக்கும் அந்தஸ்தை சிறுமைப்படுத்துவதாகவும் அமைகிறது என்று கருதுவோரும் இன்று இருக்கவே செய்கின்றனர். ஏதோ அல்லாஹ்வும் மனிதனும் தத்தமது மகத்துவத்தையும் பலத்தையும் ஸ்தாபித்துக்கொள்ள போட்டி போடும் இரு சம எதிர்ச் சக்திகள் என்பது போல!

அல்லாஹ்வின் எல்லையற்ற மகத்துவம் பற்றிய உணர்வு எம்மிடம் அதிகரிக்கும் போதெல்லாம் அந்த மகத்தான கடவுளின் சிருஷ்டி என்ற வகையில் எமது மகத்துவமும் அதிகரிக்கிறது என்றே நான் உணர்கிறேன்.

கற்பனையில் கடவுளை தாழ்த்தி நோக்கும்போது அல்லது நிராகரிக்கும்போது தாம் உயர்வடைவதாக கருதுபவர்கள் உண்மையில் குறுகிய பார்வை கொண்டவர்கள். கண்களுக்கு முன்னால் தெரிகின்ற தொடுவானத்துக்கு அப்பால் இவர்களின் பார்வை நீள்வதில்லை.

‘மனிதன் தன் பலவீனம், இயலாமை என்பவற்றின் காரணமாகவே கடவுளிடம் அடைக்கலம் புகுந்தான். ஆனால், இப்போது கடவுளின் தேவையற்ற அளவுக்கு அவன் சக்தி பெற்றுவிட்டான்’ என்று இவர்கள் கருதுகிறார்கள்.

‘பலவீனம் அறிவுக் கண்ணை திறக்காது. அதேவேளை பலம் அதனை குருடாக்கிவிடும்’ என்ற பொருளையே இது தருகிறது. மனிதனின் பலம் அதிகரிக்கும் போதெல்லாம் அல்லாஹ்வின் அளவிறந்த மகத்துவம் பற்றிய உணர்வை தன்னிடம் அவன் வளர்த்துக் கொள்வதே நியாயமானதாகும்.

ஏனென்றால், அறிதலின் மீதான அவனது ஆற்றல் அதிகரிக்கும் போதெல்லாம் அந்த ஆற்றலின் மூலத்தை கண்டு கொள்வதும் அவனுக்கு அதிகமதிகம் சாத்தியமாகிறது. அல்லாஹ்வின் அளவற்ற மகத்துவத்தை விசுவாசிப்போர் தங்கள் உள்ளங்களில் இழிவையோ பலவீனத்தையோ உணரமாட்டார்கள். இப்பிரபஞ்சத்தை ஆட்கொண்டிருக்கும் அந்த மாபெரும் சக்தியை சார்ந்திருப்பதன் காரணமாக உறுதியையும் கண்ணியத்தையுமே அவர்கள் உணர்வார்கள்.

தங்கள் மகத்துவம் என்பது இப்பூமியின் மீதும், சூழவிருக்கும் மனிதர்கள் மத்தியிலும்தான் என்ற வகையில், அது அல்லாஹ்வின் பிரபஞ்சம் தழுவிய கட்டற்ற மகத்துவத்தோடு மோதுவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

தங்களை தாங்களே பலூன்களாக ஊதிக் கொள்வோருக்கு இந்த உணர்வுநிலை கிடைப்பதில்லை. இந்த பலூன்களின் வீக்கம் உலகத்தை பார்க்க விடாது கண்களை மறைத்து விடுகிறது.

13

 சில வேளைகளில் விடுதலை என்ற போர்வைக்குள் அடிமைத்தனம் மறைந்து கொள்கிறது. இத்தகைய விடுதலையானது மரபுகள், வழக்காறுகள், மனித இனம் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற நியதிகள் போன்ற அனைத்து வித தளைகளிலிருந்துமான விடுதலையாகவே தோற்றம் காட்டும். உண்மையில் இழிவு, பலவீனம், ஒடுக்குதல் ஆகிய விலங்குகளிலிருந்து விடுபடுவதற்கும், மனிதத்துவத்தின் கட்டுகளிலிருந்து விடுபடுவதற்குமிடையில் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு.

முதல் வகை விடுதலையே உண்மையான சுதந்திரமாகும். இரண்டாவது வகை விடுதலையோ மனிதனை மனிதனாக மாற்றி மிருகத்தனத்தின் பாரதூரமான தளைகளிலிருந்து அவனை விடுவிக்கக்கூடிய அடிப்படை பெறுமானங்களையே துறந்து விடுவதாகும். இவ்வாறான துறத்தல் நிச்சயமாய் ஒரு கடிவாளமிட்ட சுதந்திரமே.

ஏனெனில், இது அதன் உண்மைப் பொருளில், மிருகத்தனமான இச்சைகளுக்கு பணிதலாகவும் அடிமைப்படலாகவுமே மாற்றம் பெறுகிறது. இத்தகைய இச்சைகளின் மூச்சுத் திணற வைக்கும் தளைகளிலிருந்து விடுபட்டு, சுதந்திரமான மனிதத்துவ பெருவெளிக்கு வந்து விடுவதற்கான போராட்டத்திலேயே மனித இனம் தனது நீண்ட ஆயுளைக் கடத்தியிருக்கிறது.

மனிதன் தனது அவசியத் தேவைகளை வெளிப்படுத்த வெட்கப்பட வேண்டியதில்லை. எனினும் இத்தகைய தேவைகளோடு உயர்ந்து நிற்பதுதான் மனிதத்துவ பெறுமானங்களில் முதன்மையானது என்பதுவும், இத்தேவைகள் ஏற்படுத்துகின்ற தளைகளிலிருந்து விடுபடுதலே சுதந்திரம் என்பதுவும் மனித இனத்தின் இயல்பான உணர்வுநிலையாகும்.

இரத்தமும் சதையும் உண்டுபண்ணும் தூண்டல்களை மிகைத்தலும், இழிவும் பலவீனமும் ஒடுக்குதலும் உருவாக்கி விடும் அச்சங்களை மிகைத்தலும் மனிதத்துவத்தின் பொருளை உறுதிப்படுத்துவதில் சமமே என்பது அதன் நம்பிக்கை.

14

 மனிதர்களிலிருந்து விலகிநிற்கின்ற கொள்கைகளை பற்றிய கவிதையை நான் விசுவாசிப்பதில்லை. உத்வேகமும் உஷ்ணமும் கொண்ட நம்பிக்கைக் கோட்பாடொன்றை கொண்டிராத கொள்கை என்ன கொள்கை? இத்தகைய நம்பிக்கைக் கோட்பாடொன்று ஒரு மனிதனின் உள்ளத்திலில்லாமல் வேறெங்கு வாழ முடியும்?

உத்வேகமிக்க நம்பிக்கைக் கோட்பாடற்ற கொள்கைகளும் சிந்தனைகளும் உள்ளீடற்ற வெற்று வார்த்தைகளாகவோ உயிரற்ற பொருள்களாகவோதான் இருக்கும். ஒரு மனிதனின் உள்ளத்திலிருந்து சுடர்விடும் ஈமானியக் கிரணங்களால் மட்டுமே இவற்றை உயிர்ப்பிக்க முடியும். நம்பிக்கைக் கிரணங்கள் சுடர்விடும் உள்ளத்தில் தோன்றாமல், குளிர்ந்து உறைந்துபோன மூளையிலிருந்து கிளைக்கும் சிந்தனையை அல்லது கொள்கையை அடுத்தவர்கள் விசுவாசிக்கவே மாட்டார்கள்.

உனது சிந்தனையை முதலில் நீ நம்பு. உயிர்த்துடிப்பு மிக்கதொரு நம்பிக்கைக் கோட்பாடாக அதை விசுவாசி. அப்போது மட்டுமே அடுத்தவர்களும் அதனை விசுவாசிப்பார்கள். இல்லையெனில், உயிரோ ஆன்மாவோ அற்ற வெறும் வார்த்தை ஜாலமாக அது நின்றுவிடும். மனித ஆன்மாவோடு ஒன்றிக்காத, மனித உருவத்தில் பூமியில் நடமாடாத எந்தவொரு சிந்தனையும் நிலைத்து வாழ்வதில்லை.

புனிதத்தோடும் உண்மையோடும் விசுவாசிக்கத் தகுந்த சிந்தனையொன்றை தன் உள்ளத்தில் நிரப்பிக் கொள்ளாத மனிதனின் இருப்புக்கும் எந்தப் பொருளுமில்லை. சிந்தனையையும் மனிதனையும் பிரித்துப் பார்ப்பதென்பது, உடலையும் ஆன்மாவையும் அல்லது சொல்லையும் பொருளையும் பிரித்துப் பார்ப்பது போன்றது. சிலபோது இது சாத்தியமற்றதாக அமையும். இன்னும் சிலபோது அழிதற் பொருளைத் தரும்.

நிலைத்து வாழக்கூடிய எந்தவொரு சிந்தனையும் யாரோ ஒரு மனிதனின் உள்ளத்தை இரைகொண்டே வந்திருக்கிறது. இப்பரிசுத்த இரையை சுவைக்காத சிந்தனைகள் மரணித்தே பிறக்கின்றன. மானிட சமூகத்தை ஒரு சாண் அளவாவது இவற்றினால் முன்தள்ள முடிவதில்லை.

15

 தீய வழிமுறையை பயன்படுத்தி நல்ல இலக்கொன்றை அடைவதென்பதை கற்பனை செய்யவே எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. நல்ல இலட்சியம் நல்ல மனிதனின் உள்ளத்தில்தான் வாழும். தீய வழிமுறையை இந்த நல்ல உள்ளத்தால் எப்படி சகிக்க முடியும்?

சென்றடைய வேண்டிய இலக்கு சேற்றினால் சூழப்பட்டிருக்கும்போது பாதங்களில் சேறுபடிவது நிச்சயம். பாதையிலிருக்கும் அழுக்கு நம் பாதங்களிலும், பாதம் படும் இடங்களிலும் தன் அடையாளங்களை ஏற்படுத்தவே செய்யும்.

இவ்வாறுதான் தீய வழிமுறையை பின்பற்றுகின்றபோது, அதன் அழுக்கு ஆன்மாக்களில் ஒட்டிக்கொண்டு தன் அடையாளங்களை பதித்து விடுகின்றது. இறுதியில் நாம் சென்றடையும் இலட்சியத்திலும் கூட இந்த அழுக்கு படிந்துவிடுகின்றது. வழிமுறை என்பது ஆன்மாவின் கணிப்பீட்டில் இலட்சியத்தின் ஒரு பகுதியாகும். ஏனெனில், ஆன்மாவின் உலகத்தில் வேறுபாடுகளோ பிரிவுகளோ இல்லை.

சாதாரண மனித உணர்வு கூட ஒரு நல்ல இலட்சியத்தை புரிந்து கொண்டு விட்டால் அதனை அடைவதற்கு தீய வழிமுறையைப் பயன்படுத்துவதனை சகித்துக் கொள்ளாது. அத்தகையவொரு முடிவுக்கு இயல்பாக அது சென்றடைவதுமில்லை.

‘இலட்சியம் வழிமுறையை நியாயப்படுத்தும்’ என்பது மேற்குலகின் பெரிய தத்துவம். ஏனெனில், மேற்குலகம் தன் பகுத்தறிவால் மட்டுமே வாழ்கிறது. பகுத்தறிவின் பார்வையில் இலட்சியங்களுக்கும் வழிமுறைகளுக்கும் இடையில் வேறுபாடுகளும் பிரிவுகளும் தென்படுவது சாத்தியமே.

16

 அடுத்தவர் உள்ளத்தில் ஆறுதல், திருப்தி, உறுதி, நம்பிக்கை, மகிழ்ச்சி போன்றவற்றை ஏற்படுத்த முடியும்போது நாம் பெறும் களங்கமற்ற அந்த ஆத்ம இன்பத்துக்கு நிகராக இந்த வாழ்வில் எதுவுமே இல்லை என்பதை அனுபவபூர்வமாக நான் உணர்ந்திருக்கின்றேன். அது தெய்வீகம் சார்ந்தவோர் அற்புத இன்பம். பூமி சார்ந்த எந்த அம்சத்திலும் அதைக் காண முடிவதில்லை.

எம் இயல்புடன் ஒன்றித்து நிற்கின்ற தூய ஆன்மீக உணர்வுடன் அது உறவாடுகிறது. புறநிலைப்பட்ட பரிசு எதனையும் அது எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில், அதற்குரிய பரிசு அதனுள்ளேயே அடங்கிக் கிடக்கிறது.

இந்த இடத்தில் எவ்விதத்திலும் இதனோடு தொடர்புபடாத அம்சமொன்றை சிலர் நுழைப்பதுண்டு. செய்யப்படும் உபகாரத்துக்கு அடுத்தவர் செய்யும் நன்றிக்கடன் பற்றிய அம்சமே அது. இத்தகைய நன்றியறிதலில் இருக்கின்ற சுய அழகையும், அது உபகாரம் செய்தோருக்கு தருகின்ற மகத்தான மகிழ்ச்சியையும் நான் மறுக்க முயலவில்லை. ஆனால் அது முற்றிலும் வேறுபட்டதொரு விடயம்.

பிறர் நன்றி செலுத்தும்போது அவதானிக்கப்படும் அம்சம் யாதெனில், தான் செய்த நன்மைக்கு புறவயப்பட்ட எதிரொலியொன்று அடுத்தவர் உள்ளத்தில் இருந்து வருவதை காண்பதால் ஒருவருக்கு ஏற்படும் ஆனந்தமாகும்.

இந்த ஆனந்தத்தின் பெறுமானமும், நான் கூறுகின்ற ஆனந்தத்தின் பெறுமானமும் மாறுபட்டவை. ஏனெனில், நான் கூறுகின்ற ஆனந்தம் அடுத்தவர் உள்ளத்தில் ஆறுதலை, திருப்தியை, உறுதியை, நம்பிக்கையை, மகிழ்வை ஏற்படுத்த முடிந்த அந்த நிமிடத்தில் அனுபவிக்கின்ற அகவயப்பட்ட ஆனந்தம். அதுதான் களங்களமற்ற தூய ஆனந்தம்.

எம் உள்ளத்திலிருந்தே ஊற்றெடுத்து, அங்கேயே மீண்டும் அது சென்றுவிடுகிறது. புறநிலையான எந்த தூண்டலும் அதற்குத் தேவைப்படுவதில்லை. தனக்குரிய பரிசை முழுமையாகத் தனக்குள்ளேயே அது பொதிந்து வைத்திருக்கிறது.

17

 மரணம் இப்போது வந்தாலும் நான் திடுக்கிட மாட்டேன்.

இந்த வாழ்க்கையில் நான் அதிகம் பெற்றிருக்கிறேன். அதாவது கொடுத்திருக்கிறேன். சில வேளைகளில் பெறுவதற்கும் கொடுப்பதற்கும் இடையில் வேறுபாடு காண்பது சிரமமாகிவிடுகிறது. ஏனெனில், இவ்விரு சொற்களுக்கும் ஆன்மாவின் உலகத்தில் பொருள் ஒன்றுதான். நான் கொடுத்த ஒவ்வொரு தடவையும் எடுத்துமிருக்கிறேன். யாரோ ஒருவர் எனக்கு கொடுத்தார் என்பதல்ல. நான் யாருக்கு கொடுத்தேனோ அவரது உள்ளத்தை எடுத்துக் கொண்டேன் என்பதே இதன் பொருள்.

கொடுத்ததன் மூலம் நான் பெற்ற மகிழ்ச்சி என்னிடமிருந்து எடுத்தவரின் மகிழ்ச்சியை விட எந்த விதத்திலும் குறைந்ததாக இருந்ததில்லை.

மரணம் இப்போது வந்தாலும் நான் திடுக்கிட மாட்டேன்.

என்னால் செய்யமுடிந்த அளவுக்கு செய்திருக்கிறேன். ஆயுள் நீடித்தால் நான் செய்ய ஆசைப்படுகின்ற பல விடயங்கள் உண்டு. அவை முடியாமற் போனாலும் கவலை என் உள்ளத்தை அரிக்கப் போவதில்லை. அடுத்தவர்கள் நிச்சயமாய் அவற்றை செய்வார்கள்.

நிலைத்து நிற்கத் தகுதி பெற்றிருந்தால், என்றுமே அவற்றுக்கு மரணமில்லை. இப்பிரபஞ்சத்தை அவதானித்துக் கொண்டிருக்கும் அந்த தெய்வீகக் கண்காணிப்பு, ஒரு நல்ல சிந்தனையை சாகவிடாது என்ற திருப்தி எனக்கிருக்கிறது.

மரணம் இப்போது வந்தாலும் நான் திடுக்கிட மாட்டேன்.

என்னால் முடிந்த அளவு நல்லவனாய் இருக்க முயன்றிருக்கிறேன். நான் விட்ட பிழைகளுக்காகவும் தவறுகளுக்காகவும் கைசேதப்படுகிறேன். அவற்றின் முடிவை அல்லாஹ்விடம் ஒப்படைத்து அவனது கருணையையும் மன்னிப்பையும் இறைஞ்சுகிறேன்.

அவன் தரும் முடிவுக்காக நான் கலங்கப் போவதில்லை. ஏனெனில், அது சத்தியத்தின்-நீதியின் முடிவு என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

என் செயல்களின் விளைவு எதுவாக இருந்தாலும், அதை தாங்கப் பழகிக் கொண்டுவிட்டேன். நான் விட்ட தவறுகளின் விளைவு அந்த விசாரணை நாளில் எனக்கு மோசமாக அமையப் போவதில்லை என்றே நம்புகிறேன்.

♦ ♦ ♦ ♦ ♦

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *