இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை (பாகம் 2) – ஸஃபர் பங்காஷ்

Posted on

இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை (பாகம் 1) – ஸஃபர் பங்காஷ்

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமியப் பாரம்பரியங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்தாபகர், முன்னாள் செயலாட்சி இயக்குனர், மற்றும் வரலாற்றாசிரியரான டாக்டர் இர்ஃபான் அல்-அலவீ, ஹரமைன் மற்றும் சுற்றுப்புறங்களின் அழிப்பு நடவடிக்கையை எதிர்த்து மிக வெளிப்படையாகக் குரல் கொடுப்பவர்களுள் ஒருவர். அவரது கூற்றுப்படி, சென்ற வருடம் இஸ்லாமிய விவகாரங்களுக்கான சவூதி அமைச்சகம், பச்சை நிறக் குவிமாடத்தை இடிக்க வேண்டும் என்று கோரி மஸ்ஜித் அந்-நபவீயில் துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகித்தது. ராஜ்யத்தின் தற்போதைய தலைமை முஃப்தி அப்துல் அஸீஸ் ஆல்-ஷெய்கின் ஒப்புதல்பெற்ற அத்துண்டுப் பிரசுரம் ஆணவத்தோடு பின்வருமாறு பிரகடனம் செய்திருந்தது: “பச்சைநிறக் குவிமாடம் இடிக்கப்பட வேண்டும்; நபிப்பள்ளிவாசலில் உள்ள மூன்று அடக்கத்தலங்களும் (அதாவது இறைத்தூதர், அபூபக்கர் மற்றும் உமர் அடங்கியுள்ள இடங்கள்) தரைமட்டமாக்கப்பட வேண்டும்.” இத்தகு புனிதக்கேடான கூற்றுகளுக்கு அடித்தளம் போட்டுச் சென்றவர், இன்னொரு பிரதான சவூதி அறிஞரான காலஞ்சென்ற முஹம்மது இப்னு அல்-உஸைமீன். 35 வருடகாலம் மஸ்ஜித் அல்-ஹராமில் குத்பாக்கள் ஆற்றிவந்த அவர் “என்றாவது ஒருநாள் இறைத்தூதரின் (ஸல்) பச்சை நிறக் குவிமாடத்தை நம்மால் இடித்துத்தள்ள முடியும் என்று நாம் நம்புகிறோம்.” என்று கூறியதன் ஒலிப்பதிவை டாக்டர் அலவீ வழங்குகிறார்.

இதுவரை, 300 வரலாற்றுத் தலங்கள் இடிக்கப்பட்டுள்ளன, அல்லது இடிப்பதற்குக் காலம் குறிக்கப்பட்டுள்ளன என்பதாக டாக்டர் அலவீ மதிப்பிடுகிறார்.  அவற்றுள் ஒன்று: ஒரு பொதுக் கழிப்பிட வசதிக்கு இடமேற்படுத்தித் தரும் பொருட்டு, உம்முல் முஃமினீன் கதீஜா அல்-குப்ராவுக்குச் (ரழி) சொந்தமாயிருந்த பழைய வீடொன்று சமீபத்தில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. மக்காவிலுள்ள இறைத்தூதரது (ஸல்) பிறந்த வீடு முதலில் ஒரு நூலகமாக மாற்றப்பட்டு, ‘மக்தபா மக்கா அல்-முகர்ரமா’ எனப் பெயரிடப்பட்டது. இப்போது அது வாகன நிறுத்தமாக மாற்றப்பட்டுவருகிறது. நூலகங்கள் முக்கியமானவைதான். ஆனால், இந்தத் திட்டம், கற்றல் மீதான வஹாபிகளின் ஆர்வத்தால் எழவில்லை. மாறாக, இஸ்லாமியப் பாரம்பரியத்தின் சுவடுகளைப் பூண்டோடு அழிக்க வேண்டுமென்ற அவர்களது தீர்மானத்தினாலேயே எழுந்துள்ளது. மக்காவில் எஞ்சியிருக்கும் வரலாற்றுத் தலங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்றும், அவையும் கூட அநேகமாக அடுத்த ஹஜ் காலம் கழிந்தபின் வெகுநாட்களுக்குத் தப்பிப் பிழைக்காது என்றும் டாக்டர் அலவீ கூறுகிறார். “(மக்காவிலுள்ள) அல்லாஹ்வின் இல்லத்துக்கு எத்துணை அற்பமான கண்ணியம் அளிக்கப்படுகிறது என்பது அதிர்ச்சியூட்டுகிறது.”

முதல் கலீஃபா அபூபக்கர் சித்தீகின் (ரழி) பெயர் கொண்ட தொன்மையான பள்ளிவாசல் நின்றிருந்த இடத்தில் இன்று ஏ.டி.எம். (பண உமிழ்வு எந்திரம்) ஒன்று திறக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உஹது, பத்ரு போர்க்களங்கள் இன்று வாகன நிறுத்தங்களாக மாறியிருக்கின்றன. அமீர் ஹம்ஸா உள்ளிட்ட உஹதின் உயிர்த் தியாகிகளது (ரழி) அடக்கத்தலங்கள் இதைக் காட்டிலும் மோசமான அவமதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. அவ்விடம் குப்பைக் கூளங்கள் நிறைந்து கிடக்கின்றன; அந்த அடக்கத்தலங்கள் மீது அடையாளக் குறியீடுகள் எதுவும் இடப்படுவதை வஹாபிகள் திட்டவட்டமாகத் தடைசெய்து விட்டனர் —மீண்டும், இது ஷிர்குக்கு வழிவகுக்கும் என்ற போலியான சாக்குப்போக்கின் பேரில். மதீனாவின் மஸ்ஜித் அந்-நபவீயிலிருந்து நான்கு மைல்கள் தொலைவிலிருந்த, சைய்யித் இமாம் அல்-உரைதி இப்னு ஜாஃபர் அஸ்-ஸாதிக்கின் 1200 வருடப் பழமையான பள்ளிவாசலும் அடக்கத்தலமும் 2002 ஆகஸ்டு 13 அன்று டைனமைட் வைத்துத் தகர்த்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இமாம் அல்-உரைதி, இறைத்தூதரின் (ஸல்) வழித்தோன்றல்கள் வரிசையில் ஒன்பதாவது தலைமுறையைச் சேர்ந்தவர்.

வஹாபிகளின் இந்த ஆர்வவெறியும், ஆயிரக்கணக்கான சவூதி ‘ராஜகுடும்ப’ —சவூதி சாம்ராஜ்ய ஸ்தாபகர் அப்துல் அஸீஸ் இப்னு சவூதின்— புதல்வர்கள், புதல்விகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பேராசையும் தோளோடு தோளிணைந்து செயலாற்றுகின்றன. இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிப்பது, வசதியாக ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் இன்னபிற நவீன கட்டுமானங்களுக்கு வழியேற்படுத்தித் தருகிறது; வசதியாக, ஹாஜிகளுக்கு மேலும் சிறந்த சேவைகளை வழங்குகிறோம் என்பது சாக்காக அமைந்து விடுகிறது. இது ஒரு முழு மோசடியே அன்றி வேறல்ல: மிகப் பெரும்பாலான ஹாஜிகள் இத்தகு ஹோட்டல்கள் விதிக்கும் கட்டணங்களைச் செலுத்தும் அளவுக்கு ஒருபோதும் வசதிபெற மாட்டார்கள்.

என்ன நடந்தேறிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு, சவூதி ராஜ்யத்தின் மிகப்பெரும் கடனளிப்பு நிறுவனங்களுள் ஒன்றான சவூதி பிரிட்டிஷ் வங்கியின் (SABB) பின்வரும் அறிக்கையைப் பாருங்கள். வருகிற நான்கு வருடங்களில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கம்பெனிகள் மக்காவில் மட்டும் சுமார் 30 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவிருக்கின்றன என்று அது கணிக்கிறது. அதிகபட்சம் 130 விண்கோபுரங்கள் எழும்பும்; அதில் 6 பில்லியன் டாலர் அப்ரஜ் அல்-பைத் டவர்களும் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த, ஏழு கோபுரக் கட்டிடங்களைக் கொண்ட அப்ரஜ் அல்-பைத் டவர் திட்டம் 2009-ல் நிறைவுசெய்யப்படும் போது, அது உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களுள் ஒன்றாக இருக்கும். இதில், ஓர் 60 தளங்கள் மற்றும் 2000 அறைகளைக் கொண்ட ஹோட்டல்; 1500 நபர்கள் கூடும் அளவிலான ஒரு நிகழ்ச்சி மையம்; மற்றும், இரண்டு ஹெலிகாப்டர் தளங்கள் இருக்கும். மேலும், இதில் ஸ்டார் பக்ஸ், தி பாடி ஷாப், ஐ.ரா.வில் தளம்கொண்ட ஆடையகத் தொடர் கடையான டாப்ஷாப் (கேட்டி மோஸ் இங்கு ஒரு சிறப்பு உடை வடிவமைப்பாளர்), டிஃப்பனி அண்டு கோ உள்ளிட்ட 600 பிற விற்பனை நிலையங்களைக் கொண்ட ஒரு நான்கடுக்கு வணிக வளாகமும் இடம்பெற்றிருக்கும். பணக்கார ‘யாத்திரிகர்கள்’ இப்போதே ஷாப்பிங் செய்வதற்காக MAC அழகுபொருள் பேரங்காடி, வாவாவூம் வாசனைத் திரவியகம், கிளாயர்ஸ் ஆக்சஸரீஸ் ஆகியவை ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டன. எச்-எம் மற்றும் கார்டியர் தயாராகிக் கொண்டுள்ளன. “உயர் பிராண்டுகள் அனைத்தும் இங்கே படையெடுத்து வருகின்றன” என்பதாக SABB-யின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஜான் எஸ். ஃபாகியானாகிஸ் பெருமையாகக் கூறுகிறார். அப்பட்டமான பொருளாதாயம், ஹஜ்ஜின் ஆன்மிக அம்சங்களுக்குப் பதிலாக புகுந்துகொண்டிருக்கிறது —எல்லாம் வளர்ச்சி என்கிற போர்வையில். மக்காவின் ஹில்டன் ஹோட்டலுக்கு இடம் விடுவதற்காக அபூபக்கரின் (ரழி) வீடு இடித்துத் தள்ளப்பட்டபோது, ஹில்டனின் செய்தித் தொடர்பாளர் இவோர் மெக்பர்னே துணிச்சலாக இவ்வாறு கூறினார்: “சவூதி அரேபியாவின் சமய சுற்றுலாப் பிரிவில் நுழைவதற்கு மாபெரும் வாய்ப்புகள் இருப்பதை நாங்கள் கண்டோம்.”

மக்காவுக்கு வருகைதரும் முஸ்லிம்களுள் பெரும்பாலானோர், ஜபல் அந்-நூரின் (ஒளிக் குன்று) உச்சிக்கு ஏறிச்சென்று ஹிறா குகை யைத் தரிசிக்க ஏங்குகின்றனர். இந்தக் குகையில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாத வணக்கம் மற்றும் தியானத்திற்காக ஒதுங்குவார்கள். இந்தக் குகையில் இருந்தபோது தான் குர்ஆனின் முதல் வேதவெளிப்பாடுகள் அவருக்கு அருளப்பட்டன. இன்று, இந்த குகையை யாத்திரிகள் தரிசிப்பதிலிருந்து தடுப்பதற்காக வஹாபி ஆர்வவெறியர்கள் அந்தக் குன்றையே தகர்க்க விரும்புகின்றனர். குன்றின் அடிவாரத்தில் பின்வரும் ஃபத்வாவை வஹாபிகள் ஒட்டிவைத்துள்ளனர்: “இந்தக் குன்றில் ஏறவோ தொழவோ பாறைகளைத் தொடவோ மரங்களில் முடிச்சுகளிடவோ… கூடாதென முஹம்மது நபி (ஸல்) நமக்குத் தடைவிதித்துள்ளார்கள்.” முஸ்லிம்கள் அங்கு செல்வதை  இறைத்தூதர் (ஸல்) தடைசெய்தார்கள் என்பதற்கு ஆதாரம் எதையேனும் இந்த வஹாபிகளால் தரவியலுமா? அல்லது, இந்த உளறல்கள் எல்லாம், அவர்கள் இஸ்லாத்தின் மீதும்; அல்லாஹ்வின் அன்புத் தூதர் (ஸல்) குறித்து முஸ்லிம்களுக்கு உள்ள பற்று மற்றும் காதல் மீதும் கொண்ட வெறுப்புணர்வின் அடிப்படையிலான வாசகங்களா?

இதற்கு முரணாக, முஸ்லிம்கள் நிராகரிப்பாளர்களை தங்களது அவ்லியாவாக (எஜமானர்கள் மற்றும் பாதுகாவலர்கள்) எடுத்துக் கொள்வதை குர்ஆனும் இறைத்தூதரும் (ஸல்) ஐயமின்றி முற்றாகத் தடைசெய்துள்ளனர். எனினும், சவூதுக் குடும்பம் இஸ்லாத்தின் மிகப்பெரும் எதிரிகளுக்கு அடிபணிந்து சேவையாற்றுவதைக் கண்டித்து இந்த வஹாபி உலமா ஒருபோதும் ஃபத்வா வெளியிட்டதில்லை. மிகச் சமீபத்தில் —கடந்த மே மாதத்தில்— அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சவூதி ராஜ்ஜியத்துக்கு வந்திருந்தார். லட்சக்கணக்கான முஸ்லிம்களின் இரத்தத்தில் தனது கைகளை நனைத்தவர் இந்த புஷ் என்பது பற்றியெல்லாம் சவூதிகளுக்கு எந்தக் கவலையுமில்லை. எனினும், முஸ்லிம்கள் ஜபல் அந்-நூர் மீதேறி ஹிறா குகைக்குச் சென்று இறைவேத வெளிப்பாட்டின் வரலாற்றோடு தங்களை இணைத்துக் கொள்ள விரும்பினால் மட்டும் இந்த வஹாபிகளுக்குப் பைத்தியக் கோபம் வருகிறது. சுன்னாஹ் மீதான முஸ்லிம்களின் பக்தியைக் கண்டு மகா எரிச்சலுறும் இந்த வஹாபிகள், ஒரு குன்றையே தரைமட்டமாக்கிவிட விரும்புகின்றனர். இத்தகைய எண்ணங்களெல்லாம் சாத்தானிய உள்ளங்களிலிருந்தே உருவெடுக்க முடியும். அநேகமாக, இன்னும் சில வருடங்களில் ஓர் இளவரசருக்குச் சொந்தமான ஹோட்டலைக் கட்டுவதற்கோ, அல்லது, இன்னொரு வாகன நிறுத்தம் அமைப்பதற்கோ இந்தக் குன்று வெடிவைத்துத் தகர்க்கப்படலாம்.

ஒவ்வொரு நடவடிக்கையிலும் சவூதிகள் இஸ்லாத்தின் கோட்பாடுகளை மீறிவருகின்றனர். எடுத்துக்காட்டாக, அப்ரஜ் அல்-பைத் டவர்களுக்கான 6 பில்லியன் டாலர் நிதியின் ஒரு பகுதி, மன்னர் அப்துல் அஸீஸ் அறநிலையத்திலிருந்து (வக்ஃபு) வருகிறது. இதற்கு வசதியாக, அந்த டவர்களின் மேம்பாட்டாளர்கள் அதனை, “இஸ்லாமியச் சமூகத்தின் நலவாழ்வுக்கு இன்றியமையாத” நலன்களுக்காக உருவாக்கப்படுகிற ஒரு “மார்க்கச் சொத்து” எனச் சித்தரிக்கின்றனர். சவூதி ராஜகுடும்பத்தினர் வக்ஃபு நிதிகளிலிருந்து கூட திருடித் தங்கள் ஜேப்புகளை நிரப்பிவருகின்ற நிலையில், இந்த டவர்கள் எந்த மார்க்க நலனை வழங்கப்போகிறது? இஸ்லாமியச் சமூகத்தின் நலன்களுக்கு எவ்வாறு அது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது? அவர்கள் இவ்வாறு செய்வது மிகக்கொடிய நயவஞ்சகமும் குற்றமும் ஆகும். அதைவிட, பதிலீடு செய்யமுடியாத வரலாற்றுத் தலங்களை தாறுமாறாக அழித்துக் கொண்டிருக்கிறார்களே, அதுதான் மன்னிக்கமுடியாத ஒரு குற்றம்.

“இது வெறுமனே நமது பாரம்பரியம் மட்டுமல்ல; இது இறைத்தூதரின் (ஸல்) வரலாற்றுக்கான ஆதாரம்” என்கிறார் டாக்டர் அலவீ. “இப்போது நாம் என்ன கூறுவது? ‘இந்த வாகன நிறுத்தம் தான் இஸ்லாத்தின் முதல் பள்ளிக்கூடமாக இருந்தது’; ‘இங்கு இருந்த ஒரு மலை மீது நின்றே முஹம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள்’ என்று கூறுவதா?… வரலாற்றுக்கும் கட்டுக்கதைக்கும் இடையிலுள்ள வேறுபாடுதான் என்ன?” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அவரே அதைக் கூறுகிறார், “ஆதாரம்! அதைத் தான் இந்த வஹாபி ஆர்வவெறியர்கள் மும்முரமாக துடைத்தழித்துக் கொண்டிருக்கின்றனர்”. வருத்தத்துக்குரிய வகையில், முஸ்லிம் உலகில் வெகுசிலரே, சவூதிகளின் காட்டுமிராண்டித்தன இடிப்புகளைத் தடுக்கவேண்டும்; அதன் மூலம், இஸ்லாத்தின் அதிமுக்கிய வரலாறு மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஓரளவு அக்கறையை —அதிர்ச்சியை அல்ல— வெளிப்படுத்தியுள்ளனர்.

இங்கு முக்கியக் கேள்வி என்னவென்றால், இஸ்லாத்தின் அடையாளங்களும், தலங்களும் அழிக்கப்படுவது குறித்து முஸ்லிம்களிடையே இத்தகு அலட்சியப்போக்கு நிலவுகிறதே, அது ஏன்?

♦ ♦ ♦ ♦ ♦

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *