இஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் (பாகம் 2) – கலீல் அப்துர் ரஹ்மான்

Posted on

இஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் (பாகம் 1) – கலீல் அப்துர் ரஹ்மான்

♦ ♦ ♦ ♦ ♦

இன்று மிகப் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் கிரிகோரியன் நாட்காட்டி இத்தகைய கூறுகளை பெருமளவு தன்னில் கொண்டுள்ளது. போலிக் கடவுளரையும் அல்லாஹ்வின் சில படைப்புகளையும் போற்றி வழிபடும் விதமாகவே அதன் மாதங்கள் பலவும், வார நாட்கள் அனைத்தும் பெயரிடப்பட்டுள்ளன. Sunday (ஞாயிறு) அல்லது ‘சூரிய தினம்’ என்பதும், Monday (திங்கள்) அல்லது ‘சந்திர தினம்’ என்பதும் சூரியனையும் சந்திரனையும் மகிமைப்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்டவை. Tuesday (செவ்வாய்), Wednesday (புதன்), Thursday (வியாழன்), Friday (வெள்ளி) ஆகிய அனைத்தும் டியூட்டோனியக் குலமரபுகளின் (Teutonic tribes) போலிக் கடவுளரது பெயர்கள். குறிப்பாக Friday என்பதற்கு ‘ஃபிரையா’ (Fria)-வுடைய தினம் என்று பொருள். ‘ஃபிரையா’ என்பது டியூட்டோனிய மரபில் அன்புக்கான கடவுளைக் குறிக்கிறது. எனில், “Friday தொழுகைக்கு” செல்லுதல் என்பதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா?

நாட்களின் பெயர்களில் இருப்பது என்ன?

ஆங்கிலம்

Sunday – சூரிய தினம்

Monday – சந்திர தினம்

Tuesday – Tiw எனும் போர்க் கடவுளின் தினம்

Wednesday – Woden எனும் பிரதான கடவுளின் தினம்

Thursday – Thonar எனும் வானுக்கான கடவுளின் தினம்

Friday – Fria எனும் அன்புக்கான பெண் கடவுளின் தினம்

Saturday – சனியுடைய தினம்

அறபு

அல்-அஹது – (வாரத்தின்) முதல் நாள்

அல்-இத்னைன் – (வாரத்தின்) இரண்டாம் நாள்

அத்-துலதா – (வாரத்தின்) மூன்றாம் நாள்

அல்-அர்பஆ – (வாரத்தின்) நான்காம் நாள்

அல்-ஃகமீஸ் – (வாரத்தின்) ஐந்தாம் நாள்

அல்-ஜுமுஆ1 – (வாரத்தின்) ஆறாம் நாள்

அஸ்-சபுத் – (வாரத்தின்) ஏழாம் நாள்

அல் ஜுமுஆ என்பது மொழிப்பொருளில் ஒன்றுகூடுதலை குறிக்கிறது (மொழிபெயர்ப்பாளர்).

கிரிகோரியன் நாட்காட்டியில் இடம்பெற்றுள்ள “புனித நாட்கள்” அனைத்துமே (பலதெய்வ வழிபாடு கொண்ட) “பேகன்” (pagan) மரபுகளுடன் பிணைந்தவை. பெரும்பாலான மாதங்களுக்கு போலிக் கடவுளரின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன. இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் அடங்கலாக உலகின் பெரும்பகுதியினர் இந்நாட்காட்டி முறையையே பின்பற்றி வருகின்றனர். பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டுமா, அல்லது அதன் தோற்றத்தைக் கணக்கிட வேண்டுமா, அல்லது இரண்டையும் செய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதையிட்டு முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொரு வருட ரமழானிலும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம். அதே சமயம், தனது தோற்றுவாயையும் இன்றைய இருப்பையும் அல்லாஹ்வுடன் போலிக் கடவுளரை இணையாக்குவதில் மையப்படுத்தி நிற்கும் ஒரு நாட்காட்டியை நமது அன்றாட காரியங்களுக்குப் பயன்படுத்தி வருகிறோம். எனில், நாம் இங்கு ஏதோவொன்றைத் தவறவிட்டு விட்டோம் என்று கூறுதல் பொருந்துமா?

மாதங்களின் பெயர்களில் இருப்பது என்ன?

January – துவக்கங்களின் கடவுளான Janus இன் மாதம்

February – இத்தாலியக் கடவுளான Februss இன் மாதம்

March – போர் மற்றும் வேளாண்மையின் கடவுளான Mars இன் மாதம்

April – அன்புக்கான பெண் கடவுளான Aphro இன் மாதம்

May – மரியாதைக்கான பெண் கடவுளான Maiesta இன் மாதம்

June – இத்தாலியப் பெண் கடவுளான Juno இன் மாதம்

July – Julius Caesar இன் மாதம்

August – Augustus Caesar இன் மாதம்

September – Septern (ஏழாம்) மாதம்

October – Octo (எட்டாம்) மாதம்

November – Novern (ஒன்பதாம்) மாதம்

December – Decern (பத்தாம்) மாதம்

அல்லாஹ்வின் பேரருள்

அல்லாஹ்வின் இறுதித் தூதரின் பிரியாவிடை ஹஜ்ஜின் போது மனிதகுலத்திற்கு இரு வேதவெளிப்பாடுகள் அருளப்பட்டன. முதலாவது, ‘இடைச் செருகல்’ நடைமுறையை அதிகாரபூர்வமாக ரத்து செய்தது. அதாவது, நாட்காட்டியில் காலத்தைக் கூட்டுவதோ குறைப்பதோ சட்டவிரோதமானது என்பது இதன் பொருள். இரண்டாவது, ஆதிப் படைப்பின் தருணத்தில் வழங்கியிருந்த அசல் வடிவத்திற்கே அல்லாஹ் காலத்தை மீட்டுக் கொண்டுவந்து விட்டான் என்ற பிரகடனம்.

இவ்வேதவேளிப்பாடுகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றின் ஊடாக அல்லாஹ் பரிபூரண முறையில் காலத்தை வரைவிலக்கணம் செய்திருக்கிறான் (இது மனிதர்களால் சாதிக்க முடியாதவொன்று). இடைச் செருகலை ரத்து செய்ததன் விளைவாக, ‘கால இடைவெளி’ அல்லது ‘கால அளவு’ என்ற காலத்தின் பண்பினை தெளிவாக வரைவிலக்கணம் செய்ய முடிந்திருக்கிறது. அதாவது, மாதங்களுடன் சில நாட்களையோ நாளின் ஒரு பகுதியையோ கூட்டிக் குறைத்து மாதங்களை நீட்டவோ சுருக்கவோ முடியாது என்பதை இது குறிப்பதுடன், ஒவ்வொரு மாதமும் காலம் பற்றிய தனித்துவமான விவரணமாக அமைந்திருப்பதையும் இது தெரிவிக்கின்றது. முஹர்ரம், சஃபர், … முதலிய மாதங்கள் அனைத்தும் தெளிவான காலத் தொகுதிகளைக் குறிக்கும் பெயர்களாக அமைகின்றன.

இரண்டாவது வேதவெளிப்பாட்டின் ஊடாக, ‘சகாப்தம்’ (epoch) அல்லது ‘கால அமைவிடம்’ (location) என்ற காலத்தின் மற்றொரு பண்பினை அல்லாஹ் வரைவிலக்கணம் செய்திருக்கிறான். இதன் மூலம், மாதங்களின் வரிசையொழுங்கை அவன் தனது ஆதிப் படைப்பை ஆரம்பித்த கணப் புள்ளியுடன் பொருத்துகிறான். எனவே, நாம் ஒவ்வொரு ஆண்டு ரமழானை அடையும்போதும் மெய்யாகவே ரமழானைத்தான் அடைகிறோம் எனபதை இதிலிருந்து புரிந்து கொள்கிறோம். மற்ற மாதங்களுக்கும் இது பொருந்தும். ஒவ்வொரு ஆண்டிலும் நம் வாழ்வின் பன்னிரண்டில் பதினோரு காலத் தொகுதிகளை அவை பிரதிநிதித்துவம் செய்கின்றன என்ற வகையில் அவற்றின் முக்கியத்துவம் இங்கு எவ்வகையிலும் குறைந்தல்ல.

மேற்கூறியதன் ஒளியில் பார்க்கையில், ஆண்டின் மாதங்களுக்குப் பெயரிடுவதோ, மாதங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்களை வழங்குவதோ நமது சொந்த விருப்பத்தின்பாற் பட்டதல்ல என்பது தெளிவாகிறது. வேறு வார்த்தைகளில் கூறின் “இன்று எந்த நாள்?”, “நாம் இப்போது எம்மாதத்தில் உள்ளோம்?” என்ற கேள்விகளுக்கு “மிகச் சரியான பதில்கள்” இருக்கின்றன. அல்லாஹ் மனித குலத்திற்கு இந்நாட்காட்டியை வழங்கியதன் மூலம், இக்கேள்விகளுக்கு “மிகச் சரியான பதில்களை” வழங்கியிருக்கிறான்.

நம் அன்றாட வாழ்வின் மற்ற அம்சங்களில் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள இலக்குகளை எட்டவும், குறிக்கோள்களை நிறைவேற்றவும் கடுமையாக பிரயத்தனம் எடுக்கக் கடமைப்பட்டுள்ளதைப் போலவே, காலத்தைப் பேணும் முறைமையைத் தெரிவு செய்வதிலும் பிரயத்தனம் எடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இன்னும் கூறுவதெனில், இலக்குகளை நிர்ணயித்து குறிக்கோள்களை நிறைவேற்ற முயலும் செயல்முறைக்காகவே நாம் இஸ்லாமிய நாட்காட்டி முறையை புரிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் வேண்டியுள்ளது.

அல்லாஹ் காலத்தை விரும்பியவாறு கையாளும் திறன் என்ற சிறப்புப் பரிசொன்றை மனிதர்களுக்கு வழங்கியுள்ளான். இதனால், நிகழ்வுகளை காணொளிப் பட்டை, மின்னணு ஊடகம் போன்றவற்றில் பதிவுசெய்து கடந்தகாலத்தை மீட்டிப் பார்க்க முடிகிறது. நாம் நினைவாற்றலைக் கொண்டிருப்பதுடன், வரவிருப்பவற்றை ஊகிப்பதற்கும், கற்பனையையும் தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்துவதற்கும் இயலுமை கொண்டிருக்கிறோம். கடந்த கால, நிகழ் கால மற்றும் எதிர்கால நிகழ்வுகளை நமக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதற்கான நமது தனித்திறமை, பொறுப்புகளை நிறைவேற்றவும் வருங்காலத்திற்கு ஆயத்தமாகவும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

நாம் இஸ்லாமிய நாட்காட்டிமுறை குறித்த நமது புரிதலை மேம்படுத்திக் கொள்வதும், வருங்கால நிகழ்வுகளைத் திட்டமிடுவதற்கு அதைப் பயன்படுத்துவதும் சாத்தியமில்லை என்ற தீர்மானத்திற்கு வரும் பட்சத்தில், மற்ற நாட்காட்டி முறைகளைப் பயன்படுத்துவதே நம் முன்னுள்ள ஒரே தெரிவாக மாறும். அவையோ மனிதகுலத்திற்குப் பேரருளாக அல்லாஹ் வழங்கிய வேதவெளிப்பாடுகளை மீறுபவையாக இருக்கின்றன. இத்தகைய முடிவு “சமய நிகழ்ச்சிகளுக்கு” மட்டும் இஸ்லாமிய நாட்காட்டியை பயன்படுத்திக் கொண்டுவிட்டு, “சமூக விவகாரங்களுக்கு” போலிக் கடவுளர் வழிபாட்டின் அடிப்படையில் அமைந்த பிற நாட்காட்டிகளை பயன்படுத்தும் நடைமுறை தொடரவே வழிவகுக்கும்.

நமது சமுதாயச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் சமயங்களில் நாம் இப்பிற நாட்காட்டிளுள் ஒன்றைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதே இதன் பொருள்; ஏனெனில், குறித்த எந்தவொரு நாளும் இஸ்லாமிய நாட்காட்டியில் எந்நாளுடன் இணங்கி வருகிறது என்பதை அறியாதவர்களாகவோ, அல்லது அது குறித்து உடன்பாடு காணாதவர்களாகவோ தான் நாம் இருக்கிறோம். அது மட்டுமின்றி, நமது அமைப்புகள் தமக்கான மூலோபாயத் திட்டங்களை உருவாக்க முயற்சிக்கும் வேளையிலும் வேறேதேனுமொரு நாட்காட்டியையே பயன்படுத்த வேண்டியிருக்கும் என்ற பொருளையும் இது தருகிறது. இவ்வாறு நமது திட்டமிடலுக்குப் பயன்படுத்த முடியாதவொரு நாட்காட்டியை அல்லாஹ் நமக்கு வழங்கியிருப்பான் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதே போல், வருங்காலத்திற்காக மூலோபாய ரீதியில் ஆயத்தமாகும் ஒரு இஸ்லாமிய அமைப்பு, போலிக் கடவுளர் வழிபாட்டின் மீதமைந்த ஒரு நாட்காட்டியை அதற்குப் பயன்படுத்துவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? உண்மையிலேயே இது கவனத்தை ஈர்க்கக் கூடியதொரு சூழ்நிலைதான்.

♦ ♦ ♦ ♦ ♦

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *