இஸ்லாமிய வரலாறு – 19 / அல் தசவ்வுஃப் சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

♣ ♣ ♣ ♣ ♣

இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழி பெயர்த்து, தலைப்புகளை அளித்துள்ளோம் – மொழி பெயர்ப்பாளர்.

உரையாற்றிய நாள்: 05-05-2009, இடம்: வாஷிங்டன் டி.சி., அமெரிக்கா

♣ ♣ ♣ ♣ ♣

இன்றைய தலைப்பு ‘தசவ்வுஃப்’ அல்லது ‘சூஃபியிசம்’ ஆகும். இச்சொல்லை நாம் பலமுறை கேட்டிருப்போம். வரும் காலங்களில் இன்னும் பலமுறை கேட்போம். ஏனெனில் அடுத்து வரவிருக்கும் அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்லாம், தசவ்வுஃபிற்கு தகவமைக்கப்பட்ட இஸ்லாம் ஆக இருக்கும். இதை வைத்து சில காலம் ஓட்டலாம் என்பது அவர்களின் திட்டமாக உள்ளது. கடந்த 20-30 ஆண்டுகளாக சவூதிகள் முன்னிறுத்திய இஸ்லாத்தை அமெரிக்கக் கொள்கைகளும், கோட்பாட்டாளர்களும் ஆதரித்தனர். ஆனால் அது தன் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது. எனவே தற்போது ஏகாதிபத்தியவாதிகளின் அலுவலகங்களில் புதிய வகை இஸ்லாமிய சிந்தனைகளும் போக்குகளும் உருவாக்கப்படுகின்றன.

இமாம் அலீ இறந்த போது, இஸ்லாமிய சமூகத்தில் அல் தஷய்யு, தசவ்வுஃப் மற்றும் இஃதிசால் என்ற மூன்று வகை போக்குகள் இருந்தன என்று முன்னர் கூறினோம். எதை மறந்தாலும் இந்தச் செய்தியை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். இமாம் அலீயின் இறப்புக்குப் பிறகு இஸ்லாமிய சமூகத்தில் இம்மூன்று போக்குகளும் பிரிவினைப் பண்புகளாக மாறின. இஸ்லாமிய அரசு நிர்வாகம் திசை மாறியதை சரி செய்வதற்குக் கிளம்பிய அரசியல் இயக்கம்தான் அல் தஷய்யு. அக்கால சிந்தனைசார், மெய்யியல், கோட்பாட்டுச் சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக முஸ்லிம் சிந்தனையை முடுக்கிவிடப் புறப்பட்டது அல் இஃதிசால்.

இமாம் அலீயின் இறப்புக்குப் பிறகிலிருந்து, ஆரம்ப நாட்களிலிருந்தே தசவ்வுஃப் ஒரு தனிப் போக்காகத் துவங்கிவிட்டது என்று நாம் சொன்னோம். எனினும் இது குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன. இஸ்லாத்துக்கு வெளியிலிருந்து கீழைத்தேயவாதிகளும், மேற்கத்திய அறிஞர்களும் ‘தசவ்வுஃப் என்று முஸ்லிம்கள் சொல்லும் நடத்தை அல்லது போக்கு அல்லது வாழ்க்கைமுறை இஸ்லாத்துக்கு முன்னிருந்த கிறித்துவத்திலேயே இருந்தது’ என்று கூறுகின்றனர். இதன்படி பார்த்தால், தசவ்வுஃப் என்பது புதிதல்ல என்றும் முஸ்லிம்கள் துறவிகளாக (ஸாஹித்) மாறியபோது அதற்கு தசவ்வுஃப் என்ற பெயர் கிடைத்தது என்றும் ஆகிறது. ஆக இக்கீழைத்தேயவாதிகள், மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் மெய்யியலாளர்கள் ஆகியோர், ‘இஸ்லாத்துக்கு முன்னிருந்த ஒன்றின் இஸ்லாமியப் பெயர்தான் தசவ்வுஃப்’ என்கின்றனர்.

இவ்விரண்டுக்கும் மத்தியில் சில ஒற்றுமைகள் இருக்கக் கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதை வைத்து மட்டும் இரண்டும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. இஸ்லாமிய வட்டத்துக்கு வெளியே இதே போன்ற சிந்தனைகள் உள்ளவர்களோடு சில பொதுப்பண்புகளைக் கொண்டிருந்தாலும் தசவ்வுஃப்புக்கு என்று தனிப்பண்புகள் உண்டு.

ஆத்மார்த்தமான உறவு

அப்பாஸி வம்சத்தின் முதல் இரு தலைமுறைகளின் காலத்தில் அல் இஃதிசால் உச்சத்தை அடைந்தது என்று முந்திய அத்தியாயங்களில் பார்த்தோம். அப்போதுதான் முஃதசிலாக்கள் தங்கள் கொள்கைகளை, அன்று முன்வைக்கப்பட்ட இறையியல் மற்றும் மெய்யியல் வாதங்களுக்கான எதிர்வாதங்களை வளர்த்தெடுத்தனர். அதே காலத்தில் தசவ்வுஃப்பும் முன்னில்லாத வகையில் பெருமளவு வளர்ச்சியடைந்தது. அன்று முஃதசிலாக்கள் எழுப்பிய வாதங்களைக் கேட்ட ஒரு சூஃபி ‘சரி, அதனால் என்ன?’ என்று கேட்கக் கூடியவராக இருந்தார். அதாவது ‘குர்ஆன் படைக்கப்பட்டதா?’ போன்ற விவாதம் அல்லது அது போன்ற பிற விவாதங்கள் குறித்து சீரான சமநிலையான வாதங்கள் முன்வைக்கப்பட்ட போது, அதைக் கேட்ட சூஃபி ‘இதில் எனக்கு ஆர்வம் இல்லை; அக்கறை இல்லை’ என்றார்.

இதை மனித இயல்பிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். முஃதசிலாக்களின் பகுத்தறிவுசார் வாதங்களானாலும் சரி, ஷியாக்களின் அரசியல்சார் பேச்சுக்களானாலும் சரி, சூஃபிகளைப் பொறுத்தவரை ‘இவற்றில் எங்களுக்கு அக்கறை இல்லை’ என்பதே பதிலாக இருந்தது. ‘என்னுடைய நலனுக்கோ, முன்னேற்றத்துக்கோ இவை பங்களிக்கவில்லை; அல்லாஹ்வோடு எனக்கிருக்கும் உறவை மேம்படுத்துவதில் இவ்விவாதங்கள் பங்களிக்கவில்லை’ என்றுதான் ஒரு சூஃபி சொல்வார். இத்தகைய விவாதங்கள் அவர்களை உளப்பூர்வமாக சமாதானப்படுத்தவில்லை. உலகத்திலேயே தலை சிறந்த ஷியாவானாலும் சரி, தலை சிறந்த முஃதசிலியானாலும் சரி, அவர்களோடு பேசுவது இவர்களுக்கு உற்சாகத்தை அளிப்பதில்லை.

அல்லாஹ்வோடு ஒரு ஆத்மார்த்தமான உறவை மேற்கொள்வதன் மூலம் சூஃபிகள் தங்கள் வாழ்வை மெய்ப்படுத்துகின்றனர். அல்லாஹ்வோடு மிக நெருக்கமான உறவைப் பேணுவதன் மூலம் தங்களின் வாழ்க்கைப் பலனை தங்களுக்குள்ளாகவே அடைகின்றனர். இதற்கென்று ஒரு பாதை, வழிமுறை, மார்க்கம் அல்லது தரீக்கா உள்ளது. அம்மார்க்கத்தை ‘வாழ்வின் கவர்ச்சிகளைத் துறப்பது’ என்று பொதுவாக விவரிக்கலாம். உங்கள் உள்ளம் அல்லது மனச் சாய்வு ஒன்றை செய்யத் தூண்டுகிறது என்றால் அதைச் செய்யாமல் இருப்பதுதான் அந்த வழிமுறை. இப்படியாக உணர்ச்சிகளை மறுப்பதன் மூலம் நீங்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமாக முடியும். இப்படியாகத்தான் அவர்கள் தசவ்வுஃப்பைத் துவக்கினர்.

இந்த உணர்ச்சித் துறப்பு ஒரு சில நாட்கள் என்றில்லாமல் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். அது ஒரு வாழ்க்கைத் தேட்டம். உடற்பயிற்சி செய்வது போலத்தான் இதுவும். உடற்பயிற்சி செய்பவர்கள் அதைத் தொடர்ந்து செய்வதன் மூலம் கட்டுமஸ்தான உடலைப் பெற முடியும். அதற்கு ஆண்டுகள் சில ஆகலாம். அதுபோலத்தான் ஆன்மீக சூஃபியை கட்டியெழுப்பவும் பல ஆண்டுகள் ஆகும். அதற்கு பற்பல ஆண்டுகள் உணர்ச்சித் துறப்பில் ஈடுபட வேண்டும். இறுதியாக அவர்கள் அல்லாஹ்வோடு ஐக்கியம் அல்லது இசைவு என்ற நிலையை அடைவதாக் கூறுகின்றனர். இதற்கு அல்லாஹ்வின் அவதாரம் என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே வேறுபாடு இல்லா நிலை. இது குறித்து நாம் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

அடிப்படைக்குத் திரும்புதல்

‘சூஃபி’ என்ற சொல் கிரேக்க மூலங்களில் இருந்து பெறப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். ‘Sophist’, ‘Philo-sophy’ போன்ற சொற்களோடு இதைத் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். எனினும் முஸ்லிம்கள் தங்களுக்கே உரிய வகை துறவறத்தை கடைபிடிப்பதால், இந்த விளக்கம் குறித்து நாம் பெரிதும் அக்கறை கொள்ளத் தேவை இல்லை என்று கருதுகிறேன். இன்னும் சிலர் சஃபா என்ற அரபிச் சொல்லிலிருந்து சூஃபி என்ற சொல் வருகிறது என்கின்றனர். சஃபா என்றால் தூய்மை என்று பொருள். இன்னும் சிலர், அஹ்லுஸ்ஸுஃப்பாஹ் அல்லது அஸ்ஹாபுஸ்ஸுஃப்பா (திண்ணைத் தோழர்கள்) என்பதோடு சூஃபி என்ற சொல்லை தொடர்பு படுத்துகின்றனர். நபிப் பள்ளிவாசலில் ஒரு திண்ணை இருந்தது. அதில் சில தோழர்கள் அமர்ந்திருப்பர். மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா வந்த மிக ஏழ்மையான அகதிகள் அவர்கள். அத்திண்ணையில் இருந்த அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளை -இறைத்தூதரின் அனுமதியோடு- உணவு அல்லது செல்வத்தைக் கொடுக்கும் வசதி படைத்தவர்களிடமிருந்து பெற்றனர். வரலாற்று நூல்களில் இவர்களைப் பற்றிய தகவல்கள் அதிகம் இல்லை. இது ஏனென்று எனக்குப் புரியவில்லை. அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்திருக்கக் கூடும். அதனால்தான் அவர்களைப் பற்றிய தகவல்கள் அதிகம் இல்லை என்று நினைக்கிறேன்.

எனினும் இத்தகைய தோழர்கள் இருந்தது உண்மை. அவர்கள் தேவையுடையவர்களாக இருந்தனர். இறைத்தூதர் (ஸல்) ‘தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கு வீட்டில் ஏதாவது உள்ளதா?’ என்று கேட்பவர்களாக இருந்தனர் என்று வரலாற்று நூல்களில் பார்க்கிறோம். இறைத்தூதரே பல வாரங்களாக கொடுப்பதற்கு எதுவும் இல்லாமல் இருந்தார் என்பது மற்றொரு உண்மை. காரணம் அவர் வீட்டிலேயே எதுவும் இருக்கவில்லை. ஆனால் அச்சமூகத்தில் வசதிபடைத்தவர்களும் இருந்தனர். தேவையுள்ளவர்களுக்குக் கொடுக்குமாறு அவர்களை இறைத்தூதர் தூண்டினார். பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பும் கடமையும் செல்வம் பெற்றவர்கள் மீது உள்ளது என்ற கருத்தில் இறைவசனங்களும் இறங்கின. இப்படியாக பெறக்கூடிய சமூகத்தை விட கொடுக்கக் கூடிய சமூகத்தை உருவாக்கவே இறைத்தூதர் முற்பட்டார். எந்தவொரு சமூகத்திலும் கொடுப்பவர்களும் பெறுபவர்களும் இருக்கத்தான் செய்வர். பெறுபவர்களை விட கொடுப்பவர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று இறைத்தூதர் விரும்பினார். அந்த திண்ணைத் தோழர்கள் (அஹ்ல் அஸ் சுஃப்பாஹ்) தங்களுக்கென வீடு எதுவும் இல்லாமல் மதீனாவின் நபிப் பள்ளிவாசலிலேயே தங்கி இருந்தனர். இன்றைய பள்ளிவாசல்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்!

சூஃபி அல்லது தசவ்வுஃப் என்ற பதத்துக்கான பொருத்தமான வேர் சொல் சூஃப் என்பதிலிருந்து வருகிறது என்று நான் கருதுகிறேன். சூஃப் என்றால் கம்பளி என்று பொருள். இறைத்தூதர் காலத்தில் வாழ்ந்த முதல் தலைமுறை முஸ்லிம்கள் பலர் கரடுமுரடான கம்பளி ஆடைகளை அணிபவர்களாக இருந்தனர். அணிவதற்கு அத்தனை எளிதாக இருக்காது அது. அதை அணிவதே ஒரு சித்தரவதை போல இருக்கும். ஆனால் அன்று அது வாழ்வின் எளிமையை அடையாளப்படுத்தி நின்றது; வாழ்வின் அலங்காரங்கள் மற்றும் அதன் சொகுசுகளினால் சலுகை காட்டப்படுவதிலிருந்து காப்பாற்றியது. இறைத்தூதரோடு வாழ்ந்த பலர் அப்படித்தான் இருந்தனர். சொகுசான வாழ்க்கைக்கு அவர்கள் ஆட்படவில்லை. இறைத்தூதரின் வீட்டைச் சார்ந்தவர்கள் உட்பட இத்தகைய கம்பளியை அணிந்து வாழ்வின் சொகுசுகளிலிருந்து விடுபட்டவர்களுள் பின்வருவோர் அடங்குவர்: உமர் இப்னுல் கத்தாப், சல்மான் அல் ஃபாரிசி மற்றும் அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ்.

முஸ்லிம்கள் தொடர்ந்து வருமை நிலையில் இருக்கவில்லை என்று வரலாற்றிலிருந்து அறிகிறோம். திடீரென அவர்களிடம் செல்வம் செழிக்கத் துவங்கியது. உமருடைய ஆட்சிக்காலத்தில் பஹ்ரைனிலிருந்து -பஹ்ரைன் தீவு உட்பட பிற பகுதிகளை அது அடங்கியிருக்கலாம்- ‘ஒரு மில்லியன்’ நாணயங்கள் வந்துள்ளன என்று அவரிடம் சொல்லப்பட்டது. ‘ஒரு மில்லியன்’ என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்று எப்படி ‘ஒரு ஸில்லியன் (Zillion)’ என்று சொன்னால் கணிதத் துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே புரியுமோ அப்படித்தான் அன்று அவருக்கு இருந்தது. இப்படியாக இஸ்லாமியச் சமூகத்தில் செல்வம் கொழிக்கத் துவங்கியது. செழுமையோடு சேர்ந்து பொருள்முதல்வாதம் வரத் துவங்கியது. பொருள்முதல்வாதம் என்ற சொல் மிக முக்கியமானது.

சிலர் இதை எதிர்க்கத் தலைப்பட்டனர். அவர்கள் செல்வத்தாலும், வாழ்வில் கிடைத்த ஆடம்பரத்தாலும் சீர்கெட்டுப்போக விரும்பவில்லை. எனவே அவர்கள் அந்தக் கரடுமுரடான கம்பளியை அணியத் துவங்கினர். இறைத்தூதர் காலத்தில் இது இயல்பாக இருந்தது. ஆனால் இப்போதைய நிலைமையே வேறு. முஸ்லிம் சமூகத்தில் செல்வம் செழிக்கத் துவங்கிய போது, சமூக எதிர்ப்பு இயக்கம் என்ற அர்த்தத்தில் அவர்கள் கம்பளி அணியத் துவங்கினர். வழக்கொழிந்து போன பிறகு, யாருமே அதைச் செய்யாத போது அதை அவர்கள் உடுத்தினர். இதை அடிப்படைக்குத் திரும்புதல் என்று அவர்கள் கூறினர். இறைத்தூதர் காலத்தில் இதுதான் அடிப்படை என்று கருதப்பட்டது. எனவே ‘இஸ்லாமியச் சமூகத்தில் ஊடுருவியுள்ள இந்த பொருமுதல்வாதத்தை எதிர்த்து நாங்கள் அடிப்படைக்குத் திரும்புகிறோம்’ என்றனர். ஊதாரித்தனத்தோடு பொறுப்பின்மை பெருகி, தேவை உடையோருக்குக் கொடுப்பது போன்ற பழக்கங்கள் விடுபட்டுப் போன நிலையில் மக்களை அடிப்படைக்கு மீட்டெடுக்க அவர்கள் விரும்பினர். அவர்கள்தான் சூஃபிய்யீன் என்று அழைக்கப்பட்டனர். இதிலிருந்துதான் இச்சொல் பிறந்தது என்று சிலர் கூறுகின்றனர். இது ஹி. 150 முதல் 200-க்கு இடையே நடந்தது.

ஆரம்ப கால சூஃபிகள்

அடுத்து சூஃபிசம் பற்றிய விளக்கங்களுக்குள் செல்லலாம். பாரசீகக் கவிஞர் ஒருவர் யார் முதல் சூஃபி என்று அறிய முற்பட்டார். அவர் தன் நூலில் அபூ ஹாஷிம் என்ற பெயரைக் குறிப்பிட்டு அவர்தான் முதல் சூஃபி என்று கூறியுள்ளார். அவருடைய முழுப் பெயர் என்னவென்று தெரியவில்லை. கூஃபாவில் பிறந்த அவர், தன் வாழ்வின் பெரும்பகுதியை அல் ஷாமில் கழித்தார். ஹி. 160 வாக்கில் மரணித்தார். பின்னர் தசவ்வுஃப் சில பழக்கவழக்கங்கள் என்பதோடு நிற்காமல் தனக்கென கொள்கைகளையும் வளர்த்தெடுக்கத் துவங்கியது.

நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சொற்களுக்கு சூஃபிகள் நம்மைப் போலன்றி வேறுவிதமான விளக்கங்களை கொடுக்கின்றனர். நாம் பயன்படுத்தும் சொற்களை ஒரு சூஃபி தன் உரையில் பயன்படுத்தும் போது, நாமும் பிறரும் அதை எப்படிப் புரிந்து கொள்வோமோ அந்த அர்த்தத்தில் அவர் அதைச் சொல்வதில்லை. அவர்கள் தங்களுக்கே உரிய விளக்கங்களைக் கொண்டுள்ளனர்.

கொள்கை ரீதியாக அத் தசவ்வுஃப் எப்படி வளர்த்தெடுக்கப்பட்டது என்று அறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எகிப்தைச் சார்ந்த துன்னூன் என்பவரிடமிருந்து அது துவங்கியது என்று சிலர் கூறுகின்றனர். ஹி. 200 மற்றும் 300-க்கு இடையில் வாழ்ந்த அவர் இமாம் மாலிக்கின் மாணவர் ஆவார். அத் தசவ்வுஃபை விளக்கிச் சொல்லி, சாதாரண மக்களும் அணுகும் வகையில் புரியவைத்து பிரபலப்படுத்திய நபர் அல் ஜுனைத் பாக்தாதி ஆவார். ஹி. 398 -ல் அவர் காலமானார். அடுத்து ஷிப்லி என்பவர் ஈராக் பிரதேசத்தில் -பல இடங்களில் தடை செய்யப்பட்ட நிலையிலும்- அத் தசவ்வுஃபை வெள்ளிக்கிழமை மேடைகளுக்கு எடுத்துச் சென்று உரையாற்றினார். அவர் ஹி. 434-ல் காலமானார்.

சூஃபி இலக்கியங்களில் நன்கு அறியப்பட்ட மற்றொரு பெயர் ராபிஆ பின்து இஸ்மாயீல் அல் அதவிய்யா. ராபிஆ என்றால் பெண்பாலில் நான்காமவர் என்று பொருள். பெண் சூஃபியான அவர் குடும்பத்தில் நான்காவதாகப் பிறந்திருக்கக் கூடும். பஸ்ராவில் பிறந்து, வளர்ந்து, மரணித்த அவர் தன் வாழ்வை -நான் இச்சொல்லை பயன்படுத்த விரும்பவில்லை என்றாலும் இலக்கியங்களில் அப்படித்தான் உள்ளது- ஒரு அடிமையாகத் துவக்கினார். அடிமையாக விற்கப்பட்ட அவர், பின்னர் தசவ்வுஃபினால் அதிலிருந்து “மீண்டார்”. அவர் பெண்ணியத்துக்கு ஆதரவாக சில கவிதைகளை இயற்றியுள்ளார். அதில் ஒன்று ‘ஆண்களை விட பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்ல’ என்ற பொருளில் வருகிறது.

அவரது மற்றொரு பிரபலமான கூற்று பின் வருமாறு:

إِلَهِ تَحْرِق قَلْبًا يُحِبُّكُ

“என் இறைவா! உன்னை நேசிக்கும் இதயத்தை நீ எரிக்கிறாய்”.

‘எந்த அளவுக்கு உன்னை நேசிக்கிறேனோ அந்த அளவுக்கு நீ என் இதயத்தை எரிக்கிறாய்’ என்ற அர்தத்தில் இது வருகிறது. திருமணம் செய்திராத அவர் இதை ஒரு புகாராகக் கூறுகிறார். அது ஒரு காதலியின் புகாராக வெளிப்படுகிறது.

அவர் வழங்கும் மற்றொரு அறிவுரை பின்வருமாறு:

أُكْتُمُوا حَسَنَاتِكُمْ كَمَا تَكْتُمُونَ سَيِّئَاتِكُمْ

“எப்படி உங்கள் தீமைகளை மறைப்பீர்களோ அதே போல உங்கள் நன்மைகளையும் மறைத்து வையுங்கள்”

இப்பண்பை நாம் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இரவின் பெரும்பகுதியை தொழுகையில் கழிப்பவராக அவர் அறியப்படுகிறார். அவர் இறந்த போது அவர் அணிந்திருந்த கம்பளி ஆடையுடனேயே அடக்கம் செய்யப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. 99% முஸ்லிம்கள், அடக்கம் செய்யப்படும் போது எளிய பருத்தித் துணியில் வைத்து அடக்கம் செய்யப்படுவதுதான் வழக்கம். எனினும் ராபிஆ தன் கம்பளித் துணியோடுதான் அடக்கம் செய்யப்பட்டார். ஹி. 138-ல் மரணமடைந்த அவர் பஸ்ராவில் அடக்கம் செய்யப்பட்டார் என்றும், அல் குத்ஸ் ஜெரூசலத்தில் அடக்கம் செய்யப்பட்டார் என்றும் இருவேறு தகவல்கள் உள்ளன.

தசவ்வுஃப் என்ற கருதுகோள் அல்லது எண்ணம் முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக பாரசீகத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் மத்தியில் வளர்ச்சி பெற்றது. தசவ்வுஃப் முழுவதையும் உற்று நோக்கினால், அதன் சில கருத்துக்களை கிரேக்க மெய்யியலோடு தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். தசவ்வுஃபில் ‘பிளேட்டோனியக் காதல்’* என்ற கருதுகோள் உண்டு. அதன் எளிய பொருள் ‘ஆன்மா மீதான காதல்’. உடல், வெளிப்பார்வை, ஈர்ப்பு, இயல்பாக நிகழும் ரசாயன மாற்றங்கள் போன்றவை எதுவும் இதில் இல்லை. புலன்சார் உணர்வுகளுக்கோ, வேறு எந்தக் குறுக்கீடுகளுக்கோ இங்கு இடமில்லை. நேசித்தால் நேரடியாக ஆன்மாவையே நேசிப்பது.

(*) காமம் சாரா தீவிர அன்பு

சுயம் அற்ற நிலை

தசவ்வுஃப்புக்கான விளக்கத்தை சுருக்கிக் கூற முற்பட்டால் சுயம் இல்லாமை என்றும், உடல் உலர்ந்து போய் மனித ஆன்மா குறித்த உயர்நிலை உணர்வு கொள்ளுதல் என்றும் சொல்லலாம். இதைவிட எளிதாக நம்மால் இதை விளக்கிச் சொல்ல முடியாது. நாம் ஏற்கனவே சொன்னது போல தசவ்வுஃபை சிலர் இந்தியா மற்றும் கிரேக்கத்தோடு தொடர்பு படுத்துகின்றனர். தசவ்வுஃபின் சில வடிவங்கள் இந்தியாவிலும் வேறு சில வடிவங்கள் கிரேக்கத்திலும் பிறப்பு கொண்டிருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை. தசவ்வுஃபை ஆளமாகப் படித்த சிலர் அரபு நாடுகளில் காணப்படும் தசவ்வுஃபில் கிறித்துவ துறவறம் மிகைத்துக் காணப்படுகிறது என்றும் பாரசீகப் பகுதிகளில் காணப்படும் தசவ்வுஃபில் புத்த மத தியானச் சிந்தனைகள் மிகைத்துக் காணப்படுகின்றன என்றும் கூறுகின்றனர்.

நாம் பல தொகுதி முஸ்லிம்களைப் பற்றி பேசினோம்: சன்னி, ஷியா, ஃகவாரிஜ், முஃதசிலா, முர்ஜியா, மாதுரிதிய்யா என இஸ்லாத்தினுள் உள்ள கோட்பாட்டு, அரசியல் மற்றும் மெய்யியல் வகைபாடுகள் பற்றி பேசினோம். இவற்றில் சூஃபிகள் எங்கு பொருந்துகின்றனர் என்று கேட்டால் அவர்களுள் பெரும்பாலானவர்கள் ‘சன்னி’ உலகில் பொருந்துகிறார்கள் என்று சொல்லலாம்.

அல் முஃதசிலாக்களும் அல் முதசவ்விஃபாக்களும், அதாவது பகுத்தறிவுக்காரர்களும் தசவ்வுஃப்காரர்களும், அல்லாஹ்தான் ஒவ்வொரு இயக்கத்தையும் துவக்கி வைப்பவன் என்ற கருத்தில் ஒன்றிணைகின்றனர்.

وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ

“அல்லாஹ்வின் சித்தம் இன்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது”

என்ற கருத்தில் ஒன்றிணைகின்றனர். ஆனால் நன்கு வேரூன்றிய, ஆளமாகச் சென்ற, தேர்ந்த சூஃபிகள் ஒரு படி மேலே செல்கின்றனர். இங்குதான் சிக்கலான பகுதியை அடைகிறோம். அல்லாஹ்வின் உள்ளமை தவிர வேறு எதிலும் எந்த உள்ளமையும் இல்லை என்று அவர்கள் கூறினர். இங்குதான் அனைத்திறைக் கொள்கையை அடைகிறோம் (pantheism). அல்லாஹ் என்பது வேறு கிடையாது என்று சொல்வது அனைத்திறைக் கொள்கை. அல்லாஹ்வின் சித்தத்தில் பிணைக்கப்பட்ட, அதில் இரண்டரக் கலந்த ஒருவர் எப்படி வேறொன்றாகவோ அல்லது அல்லாஹ் எப்படி வேறாகவோ இருக்க முடியும்? இதுதான் அவர்களுடைய கேள்வி. நாம் ஏற்கனவே சொன்னது போல, நன்கு வேரூன்றிய, கற்றுத் தேர்ந்த, ஆள்ந்த ஞானம் கொண்ட சூஃபிதான் இப்படிக் கூறுவார்.

இங்குதான் அவர்கள் எல்லாவற்றிலும் நிலவும் இஸ்லாமிய ஒருமித்த கருத்திலிருந்து விலகிச் செல்கின்றனர். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? நாம் தான் அல்லாஹ் என்றா? நம்மில் அல்லாஹ் ஒரு பகுதி என்றா? அல்லாஹ் மன்னிக்க வேண்டும். இது இயேசுவின் விஷயம் போன்றதாகிவிடாதா? எங்குதான் இதன் எல்லையை வரைவது? இப்னு தைமிய்யா மற்றும் தசவ்வுஃப் அல்லது சூஃபிய்யாவோடு அவருக்கிருந்த பிரச்சனைகள் குறித்து நாம் பேசினோம். இதுதான் அது. கம்பளி அணிவது, வாழ்வின் ஆடம்பரங்களிலிருந்து விடுபடுவது போன்றவை எல்லாம் சரிதான். ஆனால் அனைத்திறைக் கொள்கை போன்றவை மூலம் அவர்கள் எதை நோக்கிச் செல்கிறார்கள்? எந்தப் புள்ளியில் விலகல் துவங்குகிறது என்று இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

இங்கு மற்றொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். சூஃபிகள் சொல்லும் கருத்துக்களை மற்றவர்கள் சொல்வதைப் புரிந்து கொள்வது போலப் புரிந்து கொள்ள முடியாது. இது மற்றொரு பிரச்சனை. அவர்கள் ஒரு கருத்தைச் சொல்கிறார்கள் எனில், கேட்பவர்கள் அச்சூஃபிகள் சொல்ல விளையாத வேறொரு கருத்தாக அதைப் புரிந்து கொள்வது சாத்தியம். எனவே சூஃபிகள் சொல்வதைக் கேட்ட மக்கள் ஒரு சூஃபியின் சாராம்சம் அல்லது சுயம்தான் அல்லாஹ்வின் (சுப்) சுயம் என்று அவர்கள் சொல்வதாகப் புரிந்து கொள்ளத் துவங்கினர்.

அதிகமான சூஃபிகள் இஸ்லாமிய உலகின் சன்னி பகுதியில் வாழ்ந்தனர். அந்த ‘சன்னிகள்’ அவர்களை நோக்கி “அல்லாஹ்வுக்கு உருவம் கற்பித்தவர்களின் குற்றத்துக்கு இணையானது உங்கள் குற்றம்” என்றனர். அதாவது ‘இயேசுதான் கடவுள் என்று சொன்ன கிறித்தவர்களுக்கும் உங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை’ என்பது போலக் கூறினர். சூஃபிகளின் வியாக்கியானங்கள், விளக்கங்கள், வரையறைகள் போன்றவற்றைப் பார்த்த அவர்கள் அவற்றை திரித்துவக் கொள்கையோடு ஒப்பிட்டனர். இப்படித்தான் சூஃபிகளுக்கும் சூஃபி அல்லாதோருக்கும் இடையே உருவகம் மற்றும் அவதாரம் ஆகிய கோட்பாடுகள் விவாதத்துக்கு வந்தன.

அல் ஹல்லாஜ்

அல் ஹுசைன் இப்னு மன்சூர் அல் ஹல்லாஜ் ஒரு பிரபலமான சூஃபி. அவரை எதிர்ப்பவர்கள், தூற்றுபவர்கள், அவர் மீது குற்றம் சுமத்துபவர்கள், அவர் தனக்கு இறைத்தன்மை இருப்பதாகக் கோரினார் என்கின்றனர். அவர் தன்னை கடவுள் என்றார் என்கின்றனர். அவர் அப்பாசி மன்னர் -நூல்கள் இவரை கலீஃபா என்கின்றன; ஆனால் அப்படிச் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை- அல் முக்ததிர் அல் அப்பாசி ஆட்சி காலத்தில் வாழ்ந்தவர். அல் ஹுசைன் இப்னு மன்சூர் அல் ஹல்லாஜின் பட்டப் பெயர் அபு முகீத் ஆகும். மரணம் அல்லது அழிவிலிருந்து பாதுகாக்கும் எதுவொன்றுக்கும் ஃகைத் அல்லது ஃகவ்த் என்று அரபியில் சொல்லப்படும். அதிலிருந்து வரும் சொல்தான் முகீத்.

அசலில் அவர் பாரசீகத்தைச் சார்ந்தவர். அவருடைய மூதாதையர்கள் இஸ்லாத்துக்கு முன், பாரசீகத்தில் வழக்கத்தில் இருந்த மதத்தை பின்பற்றியவர்கள். அவர் பாரசீகத்தில் அல்-பைளா (அரபு மொழியில் பெண்பால் வெண்மையை குறிக்கும் சொல்) என்ற இடத்தைச் சார்ந்தவர் என்று சிலர் கூறுகின்றனர். எனினும் ஈராக்கின் வாசித் என்ற பகுதியில் அவர் வளர்ந்தார். பிறகு பாக்தாத் சென்று அங்கேயே வசித்தார். அங்கு சூஃபி பின்னணி கொண்டவர்களோடு அவருக்கு தொடர்பு கிடைத்தது. மக்கள் மத்தியில் அல் தசவ்வுஃபை பிரபலப்படுத்திய -நாம் ஏற்கனவே சொன்ன- ஜுனைதோடு அவர் பயணித்தார். அல் ஹல்லாஜ் பாக்தாதின் பிற சூஃபிகளோடும் தொடர்பில் இருந்தார்.

ஹல்லாஜ் என்பதன் பொருள் என்ன? ஹல்லாஜ் என்ற சொல் பருத்தியோடு தொடர்புடையது. பருத்தியில் பஞ்சும் விதையும் சேர்ந்து இருக்கும். பஞ்சிலிருந்து விதையை பிரிப்பவருக்கு அரபியில் ஹல்லாஜ் என்று சொல்லப்படும். இப்பெயர் இவருக்கு வழங்கப்படுவதற்குக் காரணம் அவர் ஒரு மனிதரின் செயற்கைத்தன்மையை அவருடைய அசல் தன்மையிலிருந்து எளிதில் பிரித்துச் சொல்லிவிடுவார். இது அவருடைய பண்பிலேயே இருந்தது. நம் வரலாறில் பல சூஃபிகள் உள்ளனர். அதிலிருந்து யாராவது ஒருவரை முன்னிறுத்திப் பேசுவதன் மூலம் அத் தசவ்வுஃபின் இயங்கியலை வெளிக்கொணர முடியும்; இன்று அது எதைக் குறிக்கிறது என்று புரிந்து கொள்ள முடியும். நான் அல் ஹல்லாஜை எடுத்துப் பேசுகிறேன்.

முரணான அர்த்தங்களை வெளிப்படுத்தும் பேச்சுக்கள் மூலம் அல் ஹல்லாஜ் தன் சூஃபி வாழ்வை துவங்கினார். அவர் எப்போதும் கூட்டத்தோடு கலந்து இருப்பார். ஷியாக்கள் மத்தியில் இருக்கும் போது ஷியா போலவும், சன்னிகள் மத்தியில் சன்னி போலவும், சூஃபி அல்லது முஃதசிலாக்கள் மத்தியில் அவர்களைப் போலவும் இருப்பார். கூட்டத்தில் அவரைப் பார்ப்பவர்கள் “யார் நீங்கள்? இங்கு என்ன செய்கிறீர்கள்?” என்று சந்தேகம் கொள்ளாத அளவுக்கு அவர்களோடு கலந்து இருப்பார். எனவே ஆரம்பத்தில் யாரும் அவரை வேறுபடுத்திப் பார்க்கவில்லை.

அவருடைய பழக்கவழக்கங்களும் முரணாகவே இருந்தன. சிலசமயம் சூஃபிகளைப் போல கம்பளி அணிவார். மற்றொரு சமயம் பிற மக்களைப் போல உடை அணிவார். சில சமயம் அமாமா அணிவார். ராணுவத்தில் இருக்கும் போது  ராணுவ உடை அணிவார். எனவே இவர் உண்மையானவர்தானா என்று மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிறருக்குக் காண்பிப்பதற்காக இப்படிச் செய்கிறாரா என்று மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பயணங்கள்

அல் ஹல்லாஜ் அதிகம் பயணம் மேற்கொள்பவராக இருந்தார். இந்தியா, குராசான், மத்திய ஆசியா, துர்கிஸ்தான் என பல இடங்களுக்குச் சென்றார். அவருடைய நண்பர் ஒருவர், “நான் ஹல்லாஜோடு மக்கா சென்றேன்” என்று அறிவித்துள்ளார். ஹாஜிகள் அனைவரும் அங்கிருந்து கிளம்பிய பிறகும், ஹல்லாஜ் மக்காவிலேயே தங்கினார். பல நாட்கள் அவர் அங்கு தங்கினார். இன்று நடப்பது போல எந்த அரசாங்கமும் அவரை விரட்டவில்லை. பின்னர் ஹல்லாஜ் தன் நண்பரிடம், “நீர் ஈராக்குக்கு திரும்பச் செல்ல விரும்பினால் செல்லலாம். என்னோடு இங்கேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார். அதற்கு அவருடைய நண்பர், “நான் உங்களோடு இருக்க விரும்புகிறேன்.” என்றார். ஹல்லாஜோ தான் இந்தியா செல்லவிருப்பதாகச் சொன்னார். அதற்கு அந்நண்பர் தானும் இந்தியா வருவதாகக் கூறினார்.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் ஒரு பெண்மணி குறித்து ஹல்லாஜ் விசாரித்தார். அப்பெண்மணியின் இருப்பிடத்தை அறிந்ததும் அங்கு சென்ற ஹல்லாஜ் அவரோடு பேசத் துவங்கினார். இது சாதாரண விஷயம் அல்ல. அவர்கள் என்ன மொழியில் பேசினார்கள் என்றெல்லாம் தெரியாது. அப்பெண்ணும் அவர் சொல்வதைப் புரிந்து கொண்டு ஹல்லாஜோடு உரையாடினார். பாவம் கூட வந்த ஈராக்கி. என்ன நடக்கிறது என்று புரியாமல் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் என்ன பேசினார்களோ தெரியாது, இறுதியில் அப்பெண்மணி “நாளை” என்றார்.

அடுத்த நாள், அப்பெண்ணும் ஹல்லாஜும் கடற்கரை சென்றனர். அப்பெண் தன்னோடு சில நூல் இளைகளை கொண்டு வந்தார். அவற்றில் சில முடிச்சிகளை போட்டார். அதைப் பார்க்கும் போது நூலிளைகளால் ஆன ஒரு ஏணி போலத் தெரிந்தது. ஈராக்கியரும் ஹல்லாஜும் அப்பெண் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் அப்பெண் சில சொற்களை உச்சரித்தார். அவர் என்ன சொன்னார் என்று ஈராக்கியருக்குப் புரியவில்லை. பின்னர் திடீரென அந்நூல் ஏணியில் ஏறத் துவங்கினார். ஈராக்கியர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஏறி ஏறி மறைந்து போய் விட்டார். அது கயிற்றால் ஆன ஏணி கூட அல்ல. வெறும் மெல்லிய நூல் இளைகளால் ஆனது என்பதை கவனத்தில் கொள்க. ஹல்லாஜோடு சென்ற ஈராக்கிய நண்பர்தான் இவையனைத்தையும் நமக்கு அறிவிக்கிறார்.

இது வேடிக்கையாகத் தோன்றலாம். இதைப் படிக்கும் போது ஒரு இறைத்தூதருக்கும் மாயாஜால வித்தைக்காரருக்கும் நடுவே ஒருவரைப் பார்ப்பது போலத் தெரிகிறது. ஆனால் ஹல்லாஜை விரும்பும் மக்கள், அவர் இறைநேசராகவும் புனிதராகவும் இருந்தார் என்றும் இத்தகைய சம்பவங்கள் நடந்தன என்றும் அவருக்கு சுயம் என்பதே இல்லை என்பதால், இது பெரிய விஷயம் இல்லை என்கின்றனர். சுயம் இல்லாதவருக்கு எதுவும் சாத்தியம். அத்தகையவருக்கு வான் நோக்கி செல்வது சாகசமும் இல்லை. கீழ் நோக்கி வருவதில் பாதகமும் இல்லை. நாம் சாதரணமாகப் புரிந்து கொள்வது போல இவை நிகழ்வதில்லை. சுய எதிர்வினை இன்றி இவை நிகழ்கின்றன. ஆனால் இத்தகைய அனுபவங்களுக்கு வெளிப்புறம் இருந்து பார்ப்பவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. இந்த ஈராக்கியரைப் போல. “இது நிஜமா?! மாயாஜலமா? என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லையே!” என்பார் அவர்.

கடைசியாக அந்நண்பரிடம் வந்த ஹல்லாஜ், “இப்பெண்மணியின் காரணமாகத்தான் நான் இந்தியா வந்தேன்” என்றார். நம்மைப் போன்ற சாதாரண மக்களிடம் ஒரு பெண் சம்பந்தப்பட்ட இச்சம்பவத்தைப் பேசும் போது உடல் சார்ந்த ஈர்ப்பு, காமம் போன்றவை விவாதத்துக்கு வரும். ஆனால் தசவ்வுஃப் விஷயத்தில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை என்பதை நினைவில் கொள்க. எனவே இச்சம்பவம் முழுவதும் உணர்ச்சிகளின் உள்ளீடு இன்றி நடப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். தசவ்வுஃபை புரிந்து கொள்பவர்களுக்கும் அதை புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது தவறாகப் புரிந்து கொள்பவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான்.

வித்தைக்காரரா?

இதைப் புரிந்து கொள்ளாதவர்கள், இது அனைத்தும் மூடநம்பிக்கை என்றனர். அன்றிருந்த சமய வர்க்கம், ஆட்சியாளர்கள் ஆகியோர் இவ்விஷயங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்லலாம். இன்று போலத்தான் அன்றும் நடந்தது. “அவர் மறை கழன்றவர். அவரொரு மந்திரவாதி” என்றெல்லாம் சொல்லி அவரை புறக்கணித்தனர். ஆனால் மக்களில் வேறொரு சாரார் அவரால் ஈர்க்கப்பட்டனர்; அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.

ஹல்லாஜை எதிர்த்தவர்கள் அல்லது அவர் வேடிக்கையான பண்புகளைக் கொண்டிருந்தார் என்று குற்றம் சாட்டியவர்கள், அவர் கராமிதாவைச் சார்ந்தவர் என்று கூறினர். கராமிதா பற்றி நாம் ஏற்கனவே பேசினோம். பஹ்ரைன் பகுதியில் தோன்றிய கராமிதாக்கள் இன்றைய கம்யூனிஸ்டுகள் போல செயல்பட்டனர். பொதுவுடைமை பேசிய அவர்கள், கஃபாவின் கருப்புக் கல்லை எடுத்துச் சென்று பல ஆண்டுகள் தங்கள் நாட்டில் வைத்திருந்தனர் என்று சொல்லப்படுகிறது. பின்னர் அது திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

அல் ஹல்லாஜ் தன் வாழ்வின் ஆரம்ப காலத்தில் இமாம் அல் ரிதா மற்றும் நபி வீட்டாரின் ஆதரவாளராக இருந்தார் என்று சொல்லப்படுகிற்து. பொதுக் கருத்தும் அதிகார வர்க்கமும் தசவ்வுஃபுக்கு எதிராக இருக்கும் சூழலில் ஒரு சூஃபியாக இருந்து கொண்டு தஷய்யுவை அரசியல் பண்பாகக் கொண்டிருப்பதில் உள்ள சிக்கல்களை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். அவருக்கு எதிராகச் சொல்லப்படும் பெரும்பாலான கருத்துக்களையும் இந்தப் பின்னணியில்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தனைக்கும் மத்தியில் ‘யார் இவர்?’, ‘இவர் என்ன செய்கிறார்?’ என்று பலர் உண்மையாகவே அவர் மீது ஆர்வம் காட்டினர்; அவர்பால் ஈர்க்கப்பட்டனர்.

அல் ஹல்லாஜை இழிவாகக் காட்ட நினைப்பவர்கள் மற்றொரு சம்பவத்தையும் சொல்கின்றனர்: யாரும் பார்க்காத நிலையில் அவர் பூமியில் குழிகள் தோண்டி, ஒரு பாத்திரத்தில் நீரையும் வேறொரு பாத்திரத்தில் உணவையும் வைத்து மூடிவிடுவார். பின்னர் மக்களை அந்தக் குறிப்பிட்ட இடத்துக்கு தன்னை பின்பற்றி வரச் சொல்வார். அவர்கள் தாகம் எடுக்கிறது என்றோ பசி ஏற்படுகிறது என்றோ சொல்லும் போது தன் தடியால் அக்குழிகளைத் தோண்டி திடீரென பூமியிலிருந்து நீரும் உணவும் வருவது போலக் காட்டுவார்.

இப்படியான தந்திரங்களைச் செய்து மக்களை முட்டாளாக்குவார் என்று அவருடைய எதிராளிகள் கூறுகின்றனர். இச்சம்பவங்கள் நடக்கவில்லை என்று யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவர் தந்திரங்களால் இதைச் செய்தாரா அல்லது பிறரிடம் இல்லாத ஆற்றல் அவருக்கு இருந்ததால் அதைச் செய்தாரா என்பதுதான் கேள்வி. பிறரால் செய்ய முடியாத பலவற்றை அவர் செய்தார். “யார் இவர்?” என்று மக்கள் குழப்பத்தில் இருந்தனர்.

மேலும் அவர் கோடை காலங்களில், குளிர் காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழங்களை மக்களுக்கு வழங்குவார்; அதேபோல குளிர் காலங்களில் கோடையில் மட்டுமே கிடைக்கும் பழங்களை வழங்குவார். “இது எப்படி உங்களுக்குக் கிடைத்தது?!” என்று மக்கள் கேட்டனர். மக்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. நாம் ஏற்கனவே சொன்னது போல இச்சம்பவங்கள்  இருவிதமாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. சிலர் அவரை மாயாஜால வித்தைக்காரர் என்றும் இன்னும் சிலர் அவரை புனிதர் என்றும் நினைத்தனர்.

புனிதரா?

மற்றொரு சுவாரஸ்யமான சம்பவமும் சொல்லப்படுகிறது. அப்பாசி மன்னர் முக்ததிரின் பச்சைக் கிளி ஒன்று இறந்துவிட்டது. மன்னர் தன் பணியாளரிடம் அதைக் கொடுத்து அனுப்பி உயிர்ப்பித்துத் தறுமாறு ஹல்லாஜிடம் கேட்டார். அதைப் பார்த்த ஹல்லாஜ், அப்பணியாளரிடம் “என்னைப் பாரும். நான் எப்படி இருக்கிறேன் என்று பாரும். என்னைப் போன்ற ஒருவர் இக்காரியத்தைச் செய்ய முடியுமா?” என்று கேட்டார். அதாவது ஒரு சூஃபியாக தன் ஏழ்மை நிலையைச் சுட்டிக்காட்டி இப்படிச் சொன்னார். அப்பணியாளர் மன்னரிடம் போய் நடந்ததைச் சொன்ன போது மன்னர் மீண்டும் ஹல்லாஜிடம் போய் அக்கிளியை உயிர்ப்பிக்குமாறு கேட்கச் சொன்னார். இம்முறை பணியாளர் சென்ற போது, ஹல்லாஜ் தன்னால் அதைச் செய்ய இயலாது என்றும் அதைச் செய்யக் கூடிய வேறு ஒருவரை தனக்குத் தெரியும் என்றார். அப்பணியாளர் அக்கிளியை ஹல்லாஜிடம் கொடுத்தார். இதற்குப் பிறகு நடந்தவை தெளிவாக இல்லை. அல் ஹல்லாஜ் ஒரு சில கணம் மாயமாக மறைந்து பின்னர் தோன்றினார். அப்போது அந்தப் பச்சைக் கிளி உயிரோடு இருந்தது. இதை ஹல்லாஜே செய்தாரா? அல்லது சூஃபியல்லாத ஒருவரின் மொழியில் சொல்வது போல வேறொருவர் -அதாவது அல்லாஹ்- இதைச் செய்தார் என்று புரிந்து கொள்ள வேண்டுமா?

ஹல்லாஜ் சூஃபியாக மாறுவதற்கு முன், இளம் வயதிலேயே மந்திர தந்திரம், மாயாஜாலம் போன்றவற்றைக் காற்றார் என்ற குற்றச் சாட்டும் உள்ளது. அந்த காலகட்டத்தில்தான் அப்பாசி அரசாங்கம் அறிவியல் புரட்சியைக் கண்டது. அறிவியல் உச்சத்தில் இருந்தது. எனவே ‘அவர் தன் ஆரம்ப நாட்களில் இது போன்றவற்றைக் கற்றார் என்று எங்களுக்குத் தெரியும். இப்போது அந்தத் தந்திரங்களை பயன்படுத்தி நம்மை ஏமாற்றுகிறார்.’ என்று மக்கள் கூறினர்.

அவரை தூற்றுபவர்கள், சூஃபி பின்புலத்திலிருந்து அவரை புரிந்து கொள்ளாமல், சூஃபி கண்ணோட்டத்தில் அவரைப் பார்க்காமல், “அவர் இஸ்லாமிய கொள்கைகளுக்கு மாற்றமான நூல்களை இயற்றியுள்ளார்” என்கின்றனர். மக்கா அல்லாத இடங்களிலும் ஹஜ் செய்வதை அல் ஹல்லாஜ் அனுமதித்தார் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஹஜ் செய்வதற்கு மக்கா செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டு முற்றத்திலேயே ஒரு சதுரத்தைக் கட்டி அதைச் சுற்றி வந்தாலே ஹஜ் நிறைவேறிவிடும் என்பது இதன் அர்த்தம். அதே போல முப்பது அனாதைகளுக்கு உணவு புகட்டி, உடை வழங்கி, ஏழு திர்ஹங்கள் கொடுத்துவிட்டால் அது ஹஜ் செய்வதற்குப் பகரமாகிவிடும்’ என்று அவர் சொன்னதாகச் சொல்லப்படுகிறது.

அவர் சொல்வதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அந்த அர்தத்தில் அது சொல்லப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனினும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் இதை இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும். அதாவது இவ்விஷயங்களில் நம்முடைய புரிதல், நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய அடிப்படைகளுக்கு எதிராக அவரை நிறுத்துகிறது.

ரமளான் மாத நோன்பை விட்டுவிடுவதையும் அவர் அனுமதித்தார் என்று அவருடைய எதிரிகளும் எதிர்ப்பாளர்களும் கூறுகின்றனர். அதாவது ஒருவர் தொடர்ச்சியாக மூன்று பகல் மூன்று இரவுகள் நோன்பு நோற்றால் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார் என்று அவர் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட செடியைக் கொண்டு நோன்பு திறக்க வேண்டும் என்று அவர் சொன்னார். அரபியில் அது அல் இந்தப் என்று சொல்லப்படுகிறது. அதன் ஆங்கிலப் பெயர் என்னவென்று தெரியவில்லை. மேலும் இரவு துவங்கியது முதல் இறுதி வரை ஒருவர் இரண்டு இரண்டு ரக்அத்கள் தொழுதால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் தொழுகையை நிறைவேற்றத் தேவையில்லை என்றும் அவர் சொன்னார். மேலும் ஒருவர் தன்னிடம் உள்ள செல்வம் முழுவதையும் தேவையுடையோருக்கு ஒரே ஒருமுறை வழங்கிவிட்டால் அதற்குப் பிறகு வாழ்நாள் முழுதும் அவர் ஸகாத் கொடுக்கத் தேவையில்லை என்றும் அவர் சொன்னார்.

மேலும் ஒருவர் மக்காவில் அடக்கப்பட்டுள்ள உயிர் தியாகிகளின் (ஷுஹதா) மண்ணறைகளை தரிசித்து பத்து நாட்கள் தொழுது, நோன்பு நோற்று, நோன்பு திறக்கும் போது பார்லி, ரொட்டி மற்றும் உப்பு ஆகியவற்றைக் கொண்டு நோன்பு திறந்தால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் வேறு எந்த வணக்கங்களையும் செய்யத் தேவையில்லை என்றார். இத்தகவல் முழுவதும் அவரிடமிருந்து வருவதல்ல. மாறாக அவருக்கு களங்கம் விளைவிக்க விரும்புபவர்களிடமிருந்து வருகிறது. அவர் சொன்னதாகப் பிறர் கூறியதையே நான் இங்கு சொல்கிறேன் என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.

விலகல் புள்ளி

இறுதியாக “அல்லாஹ் (ஸுப்) தாமாகவே மாறிவிட்டான்” என்று அவர் சொன்னார். இந்தப் புள்ளியில்தான் விலகல் ஏற்பட்டது. தமிழில் இது அவதாரம் (incarnation) என்று சொல்லப்படுகிறது. அவரே இப்போது சுயம் அற்ற நிலையில் உள்ளார் என்பதை நினைவில் கொள்க. தனக்கென்று ஒரு சுயம் இருப்பதை அவர் நிராகரிக்கிறார். நம்முடைய புரிதலோ அல்லாஹ் அவராக மாறிவிட்டான் என்று இருக்கிறது. பலர் சூஃபிகளை புரிந்து கொள்ளாததற்குக் காரணம், அவர்கள் தங்கள் சொற்களை சூஃபிகளின் கலைச் சொற்களோடு குழப்பிக் கொள்கின்றனர். ‘எனக்கே சுயம் இல்லாத போது நான் எப்படி கடவுள் ஆக முடியும்?’ என்று சூஃபிகள் கூறுகின்றனர். அதே சமயம் அல்லாஹ் ‘நான்’ என்ற ஒன்றில் இரண்டரக் கலந்துவிட்டான் என்றும் அவர்களே கூறுகின்றனர். என்னால் இயன்றவரை இதை புரியவைக்க முயற்சிக்கிறேன். அவர்களுடைய பார்வையிலிருந்து நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் பார்வையிலிருந்து அவர்களை புரிந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது. இத்தொடர் முழுவதும் நாம் இதைத்தான் செய்து வந்துள்ளோம்.

அவர் அப்படிச் சொன்னதும் “இது இறை நிராகரிப்பு (குஃப்ர்)” என்று மக்கள் சொல்லத் துவங்கினர். இதுவரை இல்லாமல் திடீரென குஃப்ர் என்ற பதம் பயன்படுத்தப்பட்டு காஃபிர் என்று முத்திரை குத்தப்பட்டார். மேலும் அவர் சூஃபி பார்வையில் இருந்து “நானே நூஹுடைய மக்களை மூழ்கச் செய்தேன்” என்று சொன்னார். அக்காரியத்தை அல்லாஹ்தான் செய்தான் என்று நமக்குத் தெரியும். ஆனால் இவரோ தான் செய்ததாகச் சொல்கிறார். அவர் விஷயத்தில் ‘தான்’ என்பது இல்லை. மேலும் அவர் “நான்தான் ஆது மற்றும் சமூது கோத்திரத்தாரை அழித்தேன்” என்று சொன்னார். வேறு சில நண்பர்களிடம் சென்று “நீர்தான் நூஹ், நீர்தான் மூசா, நீர்தான் முஹம்மது” என்றும் சொன்னார். அவர்கள் நூஹோ, மூசாவோ அல்ல என்பது அவருக்கும் தெரியும். “நான்தான் அவர்களுடைய ஆன்மாவை உங்கள் மீது வரச் செய்தேன்” என்றார். ஆனால் அவரே சுயம் அற்ற நிலையில் இருந்தார். இதையெல்லாம் பார்த்த மக்கள் “நீர் என்னதான் சொல்கிறீர்?!” என்று கேட்டனர்?

வரலாற்று ரீதியாகவே சூஃபிகளைப் புரிந்துகொள்வதில் ஒரு இயலாமை இருப்பதைப் பார்க்க முடிகிறது. இப்போதும் அந்த இயலாமை நம்மில் வெளிப்படுகிறது. திறந்த மனதுடன் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், தவறான புரிதல்கள், பகுதியளவு புரிதல், அல்லது முற்றிலும் புரிந்துகொள்ள இயலாமை ஆகியவை அடங்கிய வரலாறைத்தான் பார்க்கிறோம். ஹல்லாஜின் எதிராளிகள் அவரை பின்பற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் பாமர மக்கள் கூறியதாக மற்றொரு தகவலையும் கூறுகின்றனர். “நாங்கள் அவரை பின்பற்றிக் கொண்டிருந்தோம், பின்னர் அவர் திடீரென மாயமாக மறைந்துவிட்டார்” என்று அவர்கள் கூறினர். இவையனைத்தும் பொது வெளியில் சொல்லப்பட்ட கருத்துக்களே. பிறகு திடீரென அவர் வேறொரு பகுதியில் தோன்றுவார்.

இத்தகைய சூழலைத்தான் அன்றைய அரசாங்கமும், “அறிஞர்களும்”, பொதுக் கருத்தும் சமாளிக்க வேண்டியிருந்தது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அல் ஹல்லாஜின் தசவ்வுஃப் பிரபலமடையத் துவங்கியது. பலர் “அவர் உண்மையானவர்தான், போலியானவர் அல்ல” என்று நம்பத் துவங்கினர். “எங்களால்தான் அவரை புரிந்து கொள்ள முடியவில்லை” என்றனர். குறிப்பாக பாக்தாதின் பொதுமக்கள் கருத்து அவருக்குச் சாதகமாக திரும்பியது. ஈரானில் தாலிகான் என்றொரு இடம் உள்ளது. அங்கும் அவருக்கு ஏராளமான பின்பற்றாளர்கள் இருந்தனர். அவர்கள் அவரால் பெரிதும் கவரப்பட்டனர். ஆனால் பிற மக்களும், மொத்த அரசாங்கமும் அவரை ஒரு அபாயமாகவே பார்த்தது.

‘தங்கள் உணர்ச்சிகளை மறுத்து வாழும் மக்கள் வேறொரு உண்மை நிலைக்கு இடம்பெயரும் சாத்தியம் உண்டு’ என்று அல் ஹல்லாஜ் கூறினார். நாம் இதை சில வார்த்தைகளில் எளிதாகச் சொல்லிவிட்டு கடந்து செல்கிறோம். ஆனால் அவர் சொல்ல வருவதை நின்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும். அந்த வேறொரு உண்மை நிலை எப்படி இருக்கும் என்று அனுபவிக்காத வரை யாருக்கும் தெரியாது. அதை அனுபவித்து அறியாததால் “அவர் என்ன சொல்ல வருகிறார்?!” என்று மக்கள் கேட்கின்றனர். ஒரு தர்பூசனிப் பழம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மனம் விரும்பினாலும் அதை உட்கொள்ளாமல் மறுப்பதுதான் உணர்ச்சிகளை மறுப்பது. ஒரு சில விஷயங்களில் என்றில்லாமல், உங்களுக்கு வேண்டும் என்று என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதற்கு கிட்டத்தட்ட நேர்மாறாகச் செய்வதுதான் உணர்ச்சிகளை மறுப்பது.

நம்மில் யாரேனும் இதை முயற்சித்துப் பார்த்திருக்கிறோமா? இல்லை! எனவே அவர்கள் அடையும் இந்த இணையான உண்மை நிலை எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவர் சொல்ல வருவது என்னவெனில் நீங்கள் அதைத் தொடர்ந்து செய்யும் போது, இறைத்தூதர்கள் மற்றும் வரலாற்றில் அல்லாஹ்வால் பொறுப்பேற்கப்பட்ட மனிதர்களின் நிலையை உங்களால் அடைய முடியும். உங்களுக்கு என்று சுதந்திரமான இருத்தல் இல்லாமல் போகும் அளவுக்கு அது செல்லும். நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் நாட்டமாகவே மாறிவிடும் வரை இது தொடரும். இத்தகைய தரத்தை, வாழ்நாள் சாதனையை அல் ஹல்லாஜ் அடைந்ததாகக் கோரினார் என்று கூறப்படுகிறது.

அவருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் இடையே நடந்த சில கடிதத் தொடர்புகளைப் பார்க்கும் போது அவர்கள் கிட்டத்தட்ட படைப்பாளனோடு உரையாடுவது போல உரையாடுவதைக் காண முடிகிறது. மேலும் அல் ஹல்லாஜின் செல்வாக்கு -ஆரம்பத்தில் அவரை கடுமையாக எதிர்த்த- அரசு அதிகாரிகள் மத்தியிலும் பரவியது. இப்போது அவர்களுள் சிலர் தங்களை ஹல்லாஜின் சீடர்களாகக் கருதினர். அவர் இறந்தவர்களை உயிர்பிப்பார் என்றும் ஜின்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும் தான் விரும்பியதை ஜின்கள் மூலம் செய்து முடிப்பார் என்றெல்லாம் நம்பினர்.

“தான் விரும்பியதை” என்று நாம் சொல்லும்போது இயல்பான மொழியில் அப்படிச் சொல்கிறோம். ஹல்லாஜ் எதையும் விரும்பவில்லை. சுயமற்றவர் எதையும் விரும்ப முடியாது. இவையனைத்தும் அவரை எதிர்ப்பவர்கள் சொல்லும் செய்திகள். மேலும் அவர் இறைத்தூதர்கள் போல அற்புதங்கள் நிகழ்த்தினார் என்றும் சொல்லப்படுகிறது. மனிதனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே இருக்கும் தடுப்பை உடைக்கும் இந்தக் கோட்பாடு பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாக்தாதை தாண்டி சுற்றியிருக்கும் பகுதிகளில் இது பரவியது. மேலும், எல்லா சூஃபிகளும் இவரைப் போல பேசினார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு சிலர் மட்டுமே இந்த அளவுக்குச் சென்று இவ்வாறு தங்களை வெளிப்படுத்தினர்.

அவர் பாடியதாக ஒரு பா சொல்லப்படுகிறது:

நான் யாரை விரும்புகிறேனோ அதுதான் நான்

நான் விரும்புவது என்னையே

ஓருடலில் இரு ஆன்மாக்கள் நாங்கள்

என்னை நோக்கினால் நீங்கள் அவனை பார்க்கலாம்

அவனை நோக்கினால் நீங்கள் எங்களிருவரையும் பார்க்கலாம்.

சூஃபிகள் தங்கள் உணர்வுகளை மறுப்பதன் மூலம் -மற்ற மனிதர்கள் சாதரணமாக இருப்பதைப் போலன்றி- இறை நாட்டத்தில் இரண்டரக் கலந்துவிடுவர் என்று பொருள்படும்படியான வேறு சில பாடல்களும் உள்ளன.

அரசு அச்சுறுத்தல்

அல் ஹல்லாஜின் காலத்தில் இக்கருத்து பிரபலமடைந்த போது, அரசாங்கம் அச்சம் கொண்டது. அவரை அச்சுறுத்தலாகக் கருதிய அன்றைய அரசாங்கம் அவரைக் கைது செய்தது. அவர் இறைத்தன்மை கோரினார், அவதாரக் கொள்கை பேசினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அரசாங்கத்தில் ஹல்லாஜுக்கு ஆதரவானவர்களும் இருந்தனர். அவர்கள் அவரை பாதுகாக்க முயன்றனர். எனினும் அச்சிறு கூட்டத்தால் அவருக்கு ஆதரவான சூழலை உருவாக்க முடியவில்லை. அவர் சூஃபி என்றும் ராஃபிதி என்றும் முத்திரை குத்தப்பட்டார். இறுதியாக ‘அவர் இறை நிராகரிப்பாளர்’ என்று கூறி அவரை தீர்த்துக் கட்ட விரும்பினர்.

அவர்கள் பாக்தாதில் நீதிபதிகளின் குழு ஒன்றை கூட்டி அதில் ஹல்லாஜுக்கு எதிரான சான்றுகளை முன் வைத்தனர். அவர் சொன்னதனைத்தும் இஸ்லாத்துக்கு விரோதமானது, நிராகரிப்புக்கு நிகரானது என்று கூறினர். அந்த நீதிபதிகள் குழுவும் அதை ஏற்றுக் கொண்டு அவர் இறை நிராகரிப்பாளர்தான் என்று முடிவு செய்தது. மன்னர் அவருக்கு 1000 கசையடி தண்டனை வழங்கினார். அவர் இறந்த பிறகு அவருடைய உடல் எரிக்கப்பட்டு சாம்பல் ஈராக்கின் டிக்ரிஸ் நதியில் கரைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால் ஹல்லாஜின் பின்பற்றாளர்கள் அவர் கொல்லப்படவில்லை என்று கூறினர். ஏனெனில் மற்ற மக்கள் நினைத்தது போல ஒரு வாழ்வை அவர் வாழவே இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி அவர்கள் அவரை கொல்ல முடியும்?! ஆனால் அவரைக் கொன்றவர்கள் அவரை கொன்றுவிட்டதாகவே கருதினர். ஹல்லாஜின் ஆதரவாளர்களோ

“அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;” – [அல் குர்ஆன் 4:157]

என்ற இறைவசனத்தை சுட்டிக்காட்டி, ‘அவர்கள் ஹல்லாஜை கொன்றதாக நினைத்தனர்; அவரை எரித்துவிட்டதாக நினைத்தனர் எனினும் அவர்கள் இது எதையும் செய்யவில்லை. அப்படிச் செய்ததாக எண்ணிக்கொண்டனர்’ என்று கூறினர்.

அதற்குப் பிறகு ஹல்லாஜின் ஆதரவாளர்கள் அவரை பார்த்ததாகவும் அவரோடு உரையாடியதாகவும் கூறினர். அவர் கழுதையில் சவாரி செய்தார் என்றும் அப்போது அவரே “அவர்கள் என்னைக் கொல்லவில்லை” என்று கூறினார் என்றனர். மேலும் சிலர் டிக்ரிஸ் நதியில் வெள்ளம் ஏற்பட்டபோது அது ஹல்லாஜின் சாம்பலை கரைத்ததால் ஏற்பட்டது என்றனர்.

சொல் ஒன்று பொருள் வேறு

சூஃபிகளின் வாழ்வு எப்படி இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இவர் ஒரு சாதாரண சூஃபி அல்ல. சூஃபிகள் எந்த எல்லைக்குச் செல்ல முடியும், அதனால் பொது மக்களால் எப்படி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு கண்டிப்புக்கும், சமூக விலக்கலுக்கும் உள்ளாக முடியும் என்று நமக்கு உணர்த்தக் கூடிய ஒருவரின் உதாரணத்தை நாம் எடுத்துப் பேசினோம்.

அல் ஹல்லாஜின் பின்வருமாறும் கூறினார்:

“நான் தான் சத்தியம். அல்லாஹ் என் சட்டையில் உள்ளான்”

இப்னு அரபி என்ற மற்றொரு சூஃபி பின்வருமாறு கூறுகிறார்:

“இருப்பதனைத்தையும் தவிர்க்காமல், நமக்கு உள்ளமை இல்லை”.

“இருப்பதனைத்தையும் தவிர்க்காமல், நமக்கு உள்ளமை இல்லை”.

அதாவது இருக்கும் பொருட்களை ஒருவர் எந்த அளவுக்கு தவிர்த்து நிற்கிறாரோ அந்த அளவுக்கு அதிகமாக உள்ளமை பெறுவார். எந்த அளவுக்கு ஒருவர் பொருட்களின்பால் ஈர்க்கப்படுகிறாரோ, அந்த அளவுக்குக் குறைவாக உள்ளமை பெறுவார்.

சூஃபிகளின் மற்றொரு கூற்று:

“அல்லாஹ்வோடு இருக்கும் நெருக்கமான உறவில் சத்தியத்தைத் தேடுவதில்தான் உள்ளமை இருக்கிறது.”

சூஃபிகளும் சூஃபி அல்லாதவர்களும் பயன்படுத்தும் பொதுவான சொற்களின் விளக்கங்கள் வெவ்வேறாக இருக்கின்றன. சூஃபிகள் நாம் இருக்கும் பொருள்சார் மற்றும் உணர்வுசார் உலகிலிருந்து விலகியிருக்க முயற்சி செய்வர். இதிலிருந்துதான் அவர்களுடைய பயணம் துவங்குகிறது. அவற்றிலிருந்து விலகுபவர்கள், தங்களை மற்றொரு பரிணாமத்தில் புகுத்திக் கொள்கின்றனர். அதில் தங்கள் பௌதீக சுயத்தை அழித்துவிட்டதாகக் கருதுகின்றனர். ஆனால் எவ்வளவு பேசினாலும் நேரடியாக அனுபவிக்காமல் நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. எனினும் இவ்வுரையின் மூலம் நம்மால் இயன்ற வரை அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்தோம்.

நாம் ஏற்கனவே பேசிய சன்னிகள், ஷியாக்கள், கவாரிஜ்கள், முஃதசிலாக்கள் என எல்லாவற்றிலும் இதைத்தான் செய்தோம். அதாவது அவர்கள் தங்களை எப்படி புரிந்து கொண்டார்களோ அப்படியே நாம் அவர்களை புரிந்துகொள்ள முயற்சித்தோம்.

சூஃபிகள் அனைவரும் இதே போல இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இதிலும் நேர்மையற்றவர்கள் இருக்கத்தான் செய்வர். இதை வைத்து பணம் சம்பாதிப்பது, தங்கள் கை கால்களை முத்தமிடச் செய்து, பாதங்களைக் கழுவி அந்த நீரை குடிக்கச் செய்வது, ஆடம்பர விடுதிகளில் தங்குவது போன்றவற்றைச் செய்பவர்கள் இருக்கிறார்கள். இதில் சுயம் உள்ளது. ஆனால் சுயம் என்பது சூஃபிகளுக்கு நேர் எதிரானது. சுயம் வந்துவிட்டாலே சூஃபிகள் அழிந்து விடுவர்.

சூஃபிகள் மத்தியில் உள்ள அவதாரம், சுயமற்ற நிலை போன்ற கோட்பாடுகளின் காரணத்தால் அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள வேறுபாடு மங்கிவிடுகிறது. இது, எல்லாவற்றிலும் கடவுளைப் பார்ப்பவர்கள், புதல்வனிடம் கடவுளைப் பார்ப்பவர்கள் போன்றோருக்கு ஒரு வரமாக அமைந்துவிட்டது. இதைக் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை மிக எளிதாக மாற்றி அமைத்து விட வேண்டும். எனவே அடுத்த 5-10 ஆண்டுகளுக்குள் இதை எதிர்பாருங்கள். கொடுங்கோன்மை மற்றும் அநீதிக்கு எதிராக ஒருபோதும் நிற்காத வகை தசவ்வுஃபை அமெரிக்க மற்றும் உலகளாவிய முஸ்லிம்கள் மத்தியில் பிரபலமாக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. எனினும் இம்முயற்சி அப்படியே உதிர்ந்து கூட போகலாம். அல்லாஹ் அறிவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *