சூஃபியிசம் என்றால் என்ன? – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)

Posted on
பக். 176 ₹ 110

இந்த நூலின் தலைப்பே ஒரு கேள்வியாக அமைந்துள்ளது. மேற்குலகில் அந்தக் கேள்விக்கு அண்மைக் காலத்தில் ஒருவித போலித்தனமான, சந்தேகத்திற்குரிய சில பதில்கள் தரப்பட்டுள்ளன. மட்டுமின்றி, சூஃபியிசம் குறித்த ஆர்வமும் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, ஒரு நம்பத்தகுந்த அறிமுக நூலின் தேவை மென்மேலும் அதிகரித்துள்ளது. அத்தகு அறிமுக நூலின் தேவையை இந்த நூல் பூர்த்தி செய்கிறது. அறிமுக நூல் எனும்போது, அதனை வாசிப்பதற்குச் சிறப்பு அறிவுப் பின்னணி எதுவும் தேவையாக இருப்பதில்லை. அதுபோலவே, நம்பத்தகுந்த நூல் எனும் போது, அது உண்மையின் ஆழத்தைச் சமரசப்படுத்தும் அளவுக்கு எளிமைப்படுத்தப்படுவதும் இல்லை.

அத்தகையதொரு நூல் சிறப்பு அறிவுப் பின்னணி எதையும் முன்நிபந்தனையாக அவசியமாக்குவதில்லை என்றபோதிலும், ஆன்மீக விஷயங்களில் ஓர் ஆழிய நாட்டமும் தேட்டமும் இருப்பதை அது முன் நிபந்தனையாக அவசியமாக்குகிறது. இன்னும் குறிப்பாகச் சொன்னால், நேரடி அகமிய விளக்கம் பெறுவதற்கான குறைந்தபட்ச துளியளவு சாத்தியமாவது இருக்க வேண்டும் என்பதை அது முன் நிபந்தனையாக விதிக்கிறது —ஏனெனில் அந்த ஒரு துளி பின்னர், அடையத்துடிக்கும் பேரார்வத்துக்கான ஒரு விதையாக மாறக் கூடும். அல்லது மிகக் குறைந்தபட்சமாக, இத்தகையதொரு சாத்தியத்துக்கான வாசலை அந்த ஆன்மா அடைத்துவிட்டிருக்கக் கூடாது என்பதை அது முன்நிபந்தனையாக்குகிறது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஒரு மாபெரும் மெய்ஞானி சூஃபியிசத்தை ‘ருசி’ என்பதாக வரைவிலக்கணம் செய்தார். ஏனெனில் அதன் நோக்கம் மற்றும் அடைவின் சாரமே, எட்டாநிலை உண்மைகளை நேரடியாக அறிதல்தான் எனக் கூறலாம். எனவே, அத்தகு நேரடியான அறிதலைப் பெற்றுக் கொள்வதானது, மனஅறிதலைக் காட்டிலும் புலன் அனுபவங்களுக்கு நெருக்கமான தன்மையுடையதாக இருக்கிறது.

இந்நூலை வாசிக்கும் மேற்கத்திய வாசகர்களில் பெரும்பாலானோர் தம் வாழ்வின் மிக இளம் பிராயங்களிலேயே ‘தேவனின் ராஜ்ஜியம் உமக்குள் உள்ளது’ என்று கூறக்கேட்டிருப்பார்கள். ‘தேடுங்கள் காட்டப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற சொற்களையும் செவியேற்றிருப்பார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர் அந்தத் ‘தேடும் வழி’ பற்றியோ ‘தட்டும் கலை’ பற்றியோ கல்வி பெற்றிருக்கிறார்கள்? இக்கடைசி நான்கு சொற்களை எழுதும்போது என்னுள் ஒரு சிந்தனை எழும்புகிறது: நமது நூலின் தலைப்பு தொடுக்கும் கேள்விக்கு இச்சொற்கள், குறிப்பிட்ட இந்தக் கருத்துச்சூழலில், ஒரு பதிலாக அமைகின்றனவோ என்று தோன்றியது.

ஆக, இப்பாடப்பொருளைத் தொகுத்துச் சுருக்கமாக வழங்கலாம் என்றபோதிலும் இதை ஒருபோதும் மேம்போக்காக வழங்க முடியாது என்பதை தெளிவுபடுத்துவதற்கு மேற்கூறிய விளக்கம் போதுமானது. மேம்போக்காக அலசுவது முரணான கூற்றுக்குச் சமமாகி விடும். காரணம், சூஃபியிசம் ஓர் உரைகல்; சமரசத்துக்கு இடங்கொடுக்காத ஓர் நிர்ணய அளவுகோல். அது தனக்கு நிகராவனவற்றைத் தவிர மற்றனைத்தையும் வெறும் இருபரிமாண சமதள மட்டத்துக்குத் தாழ்த்திவிடுகிறது. தான் மட்டுமே உயரம் மற்றும் ஆழத்தின் நிஜப் பரிமாணம் எனச் சரியாகக் கருதுகிறது. இந்நிலையில், இது போன்றதொரு விசாலமான கருப்பொருளுக்கு இத்தகையதொரு சிறிய புத்தகம் ஒரு தொகுப்புரையாக மட்டுமே அமையவியலும்.

– மார்டின் லிங்க்ஸ் [லண்டன் 1973]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *