மக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்

Posted on
பக். 184 ₹ 110

மக்கா நகரின் அந்தஸ்து மற்றும் பாத்திரம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் அறிவர். அல்லாஹ் கடமையாக்கியுள்ள ஹஜ்ஜின் குவிமையமும் மக்காவே. உலகளாவிய முஸ்லிம்களின் வருடாந்திர மாநாடான ஹஜ், முறையாக நிர்வகிக்கப்படுகையில், எண்ணிப் பார்க்கவியலா அளவு ஆற்றலை உற்பத்தி செய்யவல்லது என்பதையும் எவரும் எளிதில் விளங்கிக்கொள்ள முடியும். எனினும், இன்று அது தனிமனித ஆன்மீகப் பரவசத்தை மட்டுமே நோக்காகக் கொண்ட, சமூகளவில் பொருளேதுமற்ற, சடங்கு முறையிலான ஒரு நிகழ்வாகச் சுருக்கப்பட்டிருக்கிறது. அதற்கான காரணங்களுள் ஒன்று, அதை இன்று நிர்வகித்து வரும் சவூதி மன்னர் குடும்பம் என்றால் அது மிகையல்ல.

மக்காவைப் புனிதத் தலமாகவும் அபய பூமியாகவும் அல்லாஹ் திருக்குர்ஆனில் பிரகடனப்படுத்தியுள்ளான். அங்கு, ஹஜ்ஜுக் காலத்தில், விலங்குகளைக் கூட வேட்டையாடக் கூடாதெனத் தடைசெய்திருக்கிறான். இவ்வாறிருக்க, மக்கா-மதீனாவைச் சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்து ஆட்சிசெய்துவரும் சவூதுக் குடும்பத்தினரோ, அல்லாஹ்வின் ஆணைகளைத் துச்சமென மதித்து, 1987-ம் ஆண்டு ஹஜ்ஜு காலத்தில் மக்காவில் வைத்துச் சுமார் 500 ஹாஜிகளைத் தடியடி நடத்தியும், துப்பாக்கிகளால் சுட்டும் ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்த பெருங்கொடுமை பற்றிய நேரடி அறிக்கையே இந்த நூல். இந்த நிகழ்வு சவூதுக் குடும்பத்தின் உண்மை இயல்பினை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்ததெனினும் மேற்குலகின் ஆதரவு, தனது பொய்ப்பிரச்சாரப் பித்தலாட்டங்கள் மற்றும் அரசவை ‘ஆலிம்களின்’ துணைகொண்டு, உலக முஸ்லிம்கள் மத்தியில் இந்நிகழ்வு உண்மையில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய அதிர்வினைக் கட்டுப்படுத்துவதில் அது பெருமளவு வெற்றிபெற்றுவிட்டது என்றே கூறவேண்டும்.

இந்தத் துயர நிகழ்வை நேரில் கண்ட நூலாசிரியர், அதனை விவரிப்பதுடன் நின்றுவிடாமல், எந்தக் கருத்தமைவில் வைத்து அதை நோக்க வேண்டுமோ அதை நமக்குச் சாத்தியமாக்கி இருக்கிறார். இந்நிகழ்வு பற்றி கொஞ்சமேனும் அறிந்திருப்போரின் மனங்களிலும் கூட “இது ஷியாக்களின் சதி முயற்சி” என்பதாகவே பதிந்து போயிருக்கிறது. ஷியா-சுன்னி என்பதாக முஸ்லிம்களிடையே நிலவிவரும் உட்பிரிவுவாத தப்பபிப்பிராயங்களை மூலதனமாக்கி, இந்த அக்கிரமக்காரர்கள் குற்றம் பிடிக்கப்படுவதிலிருந்து லாவகமாகத் தப்பிவிட்டனர். இது தொடர்பிலான பொய்யுரைகள் ஒவ்வொன்றையும் நூலாசிரியர் தோலுரித்திருக்கிறார். வரலாற்றில் இந்தப் புனிதக்கேட்டுக்கு இணையான நிகழ்வுகளாக, மக்காவின் மீது கொடுங்கோலன் யஸீதின் படைகள் நிகழ்த்திய அட்டூழியத்தையும், கராமித்தாக்கள் புரிந்த நாசங்களையும் ஆசிரியர் மிகச் சரியாக பொருத்திக் காட்டுகிறார்.

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய முஜாஹிதுகள் பலரும் எவ்வாறு ஹஜ்ஜிலிருந்து உணர்வூக்கம் பெற்றனர் என்பதை ‘ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம்’ எனும் அத்தியாயம் சித்தரிக்கிறது. இவ்வரிசையில் இந்தியாவின் சையித் அஹ்மது ஷஹீது, செச்சன்யாவின் இமாம் ஷாமில், அல்ஜீரியாவின் அமீர் அப்துல் காதிர், லிபியாவின் சனூசி ஆகியோரை ஆசிரியர் நமக்கு நினைவூட்டுகிறார். ஹஜ்ஜை அதே செயல்திறன் மிக்க ஒன்றாக மீட்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடைமுறை நடவடிக்கைகளை ‘ஹரமைனின் எதிர்காலம்’ எனும் அத்தியாயம் பட்டியலிடுகிறது.

சவூதுக் குடும்பத்தின் அமெரிக்க அடிமைச் சேவகம் இன்று எவரும் அறியாத ஓர் இரகசியம் அல்ல. ஆஃப்கானிஸ்தான், ஈராக், லிபியா என முஸ்லிம் நாடுகள் மீது தொடர்ந்து வரும் அமெரிக்க ஆக்கிரமிப்பு வரைமுறையற்று சிரியா, ஈரான் என்று நீண்டுசெல்ல எத்தனிக்கிறது. இவை அனைத்திலும் முதன்மைச் சேவகனாக இருந்து சவூதி ஆற்றிவரும் பாத்திரமும் தனியே விளக்கத் தேவையற்ற வகையில் துலக்கமாகி வருகிறது. ஸியோனிஸ யூதக் கரங்களிலிருந்து பைத்துல் முகத்தஸையும் ஃபலஸ்தீனையும் விடுவிப்பதற்கான போராட்டம், ஆப்பிரிக்க முஸ்லிம்களின் பட்டினிச் சாவுகள் என உம்மத்தின் எந்தவொரு பிரச்சினையிலும், இந்தச் சவூதிகள் உருப்படியாக எதுவும் செய்வதில்லை என்பது மட்டுமின்றி, அவர்கள் பல விதங்களிலும் இப்பிரச்சினைகளின் மூலவர்களோடு கைகோர்த்து, அவற்றை மேலும் சிக்கலாக்கி வருகிறார்கள் என்பதையும் எளிதில் அவதானிக்க முடிகிறது. மக்காவை முஷ்ரிக்குகளின் கைகளிலிருந்து விடுவித்து, அதை அதன் அசல் நிலைக்கு மீட்பதே இறைத்தூதரின் வாழ்நாள் நீளப் போராட்டத்தின் அடிநாதமாக விளங்கியது. பிரிட்டிஷாரால் பதவியில் அமர்த்தப்பட்ட சவூதுக் குடும்பம், இன்று உலகளாவிய குஃப்ர் மற்றும் ஷிர்கின்தலைமையகமாக விளங்கிவரும் வாஷிங்டனின் விசுவாசமான அடியாளாக விளங்கி, அதன் நலன்களுக்கே சேவை செய்துவருகிறது.

அத்துடன் நில்லாது, இஸ்லாத்தின் துவக்ககால வரலாற்றுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை அறுத்தெறியும் வகையில், இஸ்லாத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடையாளங்களையும் சின்னங்களையும் திட்டமிட்டு அழித்துவருகிறது. இது பற்றிய ஆசிரியரின் ஒரு சமீபத்தியக் கட்டுரையும் பின்னிணைப்பாக தரப்பட்டிருக்கிறது. முஸ்லிம் உம்மத்தின் தலைவிதியோடு நேரிடையாகச் சம்பந்தப் பட்ட இந்த உயிர்நாடியான விடயத்தை இந்நூல் சிறப்பாக விளக்குவதாலேயே, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இதனை இத்தருணத்தில் தமிழில் கொண்டுவரத் தீர்மானித்தோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *