இமாம் அபூ ஹனீஃபா – முஹம்மது அபூ ஸஹ்ரா

Posted on
பக். 192 ₹ 100

இமாம் அபூ ஹனீஃபா, அவரின் வாழ்வு, அபிப்பிராயங்கள், ஃபிக்ஹு ஆகியவற்றைக் குறித்த ஆய்வே இந்நூல். அவரின் ஆளுமை, மனோ நிலை, சிந்தனை குறித்து புரிந்து கொள்ள ஏதுவாக முதலில் நான் அவரின் வாழ்வைப் பற்றி அலசுகிறேன். இதன் மூலம், இந்த இமாமின் சிறப்புத் திறன்கள் மற்றும் பண்புநலன்களை வெளிப்படுத்தும் அச லானதொரு சித்திரத்தை வாசகருக்கு வழங்க முடியும். அடுத்து சமயக் கோட்பாடு, ஃபத்வாக்கள், ஒப்பு நோக்கு (கியாஸ்) ஆகியன குறித்த அவரது கண்ணோட்டங்களை ஆய்வு செய்கிறேன்.

வரலாறு மற்றும் சரிதை நூல்களில் இருந்து அபூ ஹனீஃபாவின் அசல் சித்திரத்தை உய்த்துப் பெறுவது எளிதான காரியமல்ல. ஏனெ னில், அவரின் சிந்தனா வழியைப் (மத்ஹப்) பின்பற்றுபவர்கள், அவ ரைப் புகழ்வதில், ஏற்கத்தக்க வரம்புகள் அனைத்தையும் மீறியுள்ளனர். மறு புறம், அவரைப் பழிப்பவர்களும் தமது விமர்சனத்தில் அதேயளவு வரம்பு மீறிச் சென்றுள்ளனர். உண்மையை மட்டும் தேடும் ஆய்வாளர் இந்த இரு துருவப் போக்குகளுக்கு மத்தியில் குழம்பி விடக்கூடும். மிகுந்த சிரமமும் பாரிய முயற்சியும் கொண்டுதான், இந்த உறுதியின் மையைத் தீர்ப்பது சாத்தியம்.

இமாம் அபூ ஹனீஃபாவின் உண்மைச் சித்திரத்தை, அதன் அனைத்து ஒளிச் சாயல்கள் மற்றும் கீற்றுகளுடன் வெளிப்படுத்திட என்னால் இயன்றுள்ளது என்றே நான் எண்ணுகிறேன். அதனைக் கண்டறிந்திடும் நிகழ்வு முறையில், அவர் வாழ்ந்த காலம் குறித்து வெளிச்சமூட்டியுள் ளேன்; பெரிதும் குறிப்பிடத்தக்க மற்றும் சமகால சமய உட்பிரிவுகளைப் பற்றிய சில தகவல்களையும் குறிப்பிட்டுள்ளேன். இப்பிரிவினர்க ளுடன் அவர் வாக்குவாதமும் விவாதமும் செய்துள்ளார் என்பதும், அவற் றின் அபிப்பிராயங்கள் மற்றும் கருத்துகள் அக்காலத்தில் பெரிதும் கலந்துரையாடப்பட்டன என்பதும் திண்ணம். அவற்றைக் குறிப்பிடு வது, அந்த யுகத்தின் மனப்பாங்கு மற்றும் அதில் செல்வாக்குப் பெற்றி ருந்த சிந்தனைக் கூறுகளை தெளிவுபடுத்த உதவும்.

அடுத்து, அரசியல் மற்றும் சமயக் கோட்பாடுகள் குறித்த அவரது அபிப்பிராயங்களை நான் ஆய்வு செய்துள்ளேன். ஓர் சிந்தனையாளரின் சகல அறிவுசார் அம்சங்களைக் குறித்தும் நாம் ஆய்வு செய்ய விரும்பி னால், இது அவசியம். அரசியல் பற்றிய அவரது கண்ணோட்டங்கள் அவரின் வாழ்க்கைப் போக்கில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. அவற்றை அலட்சியம் செய்வது, அவரின் ஆளுமை, மனோநிலை, உள் ளம் மற்றும் சிந்தையின் அதிமுக்கிய அம்சங்களை அலட்சியம் செய் வதாகிவிடும். சமயக் கோட்பாடுகளைக் (அகீதா) குறித்த அவரது கண் ணோட்டங்கள், அவரது காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த சகல கருத்துகளுக்குமான தெளிவுரையே. மேலும் மிகை மற்றும் வரம்பு மீறலை விட்டும் தூய்மையாய் இருந்தோரது அபிப்பிராயங்களின் தூய கருப்பகுதியே அவை. முஸ்லிம் சமூகத்துடைய கண்ணோட்டங்களின் நம்பகமான கூற்றுகளே அவை. உண்மையில், அவை தீனின் மையக் கருவும், நிச்சயத்தன்மையின் உயிரோட்டமும் ஆகும்.

அடுத்து, நான் இவ்வாய்வின் முக்கியக் குறிக்கோளான அவரின் ஃபிக்ஹு குறித்து பார்வை செலுத்தியுள்ளேன். அவர் தனது உய்த்து ணர்தலுக்குப் பயன்படுத்திய; அதன் பாதையை வரையறுத்த; மற்றும், அவரது இஜ்திஹாது முறையைத் தெளிவுபடுத்திய பொதுவான கோட் பாடுகளை விளக்குவதைக் கொண்டு இதைத் தொடங்குகிறேன். இதற்கு, தொடக்க கால ஹனஃபிகள் தாங்கள் சார்ந்திருந்த கோட்பாடு கள் குறித்து எழுதியதையும், அபூ ஹனீஃபா பிரயோகித்த முறைகளை யுமே ஆதாரங்களாக எடுத்துள்ளேன். அவற்றைப் பொறுத்து, நான் விரி வாக அன்றி, இரத்தினச் சுருக்கமாகவும்; குறிப்பாக அன்றி பொதுவாக வும் இருப்பதையே விரும்பியுள்ளேன். மேலும், நான் ஹனஃபிகளால் குறிப்பிடப்பட்ட அனைத்து கோட்பாடுகளையும் ஆராய்வதில்லை. ஏனெனில் அவற்றுள் பலவற்றை இமாமுடையவை அல்லது அவரது தோழர்களுடையவை எனக் கூறவியலாது. அவை பிற்காலத்தில் வந்தவையே.

அபூ ஹனீஃபாவின் முறையை இனம் கண்டபின், அவரது வாழ்வு குறித்த விரிவானதொரு ஆய்வின் மூலம், அவரின் கண்ணோட்டங்க ளின் சில இரண்டாம்நிலை வெளிகளின் பக்கம் கவனம் செலுத்த முனைகிறேன். எடுத்துக்காட்டாக, சொத்துரிமை சம்பந்தமாக மனித னின் சுதந்திர விருப்பத்துடன் தொடர்பான ஃபிக்ஹின் பகுதிகள் மற் றும் பொதுவான விதத்தில், வணிகம் மற்றும் வணிகர்கள் தொடர்பான ஃபிக்ஹின் பகுதிகள். அபூ ஹனீஃபாதான் முதன்முதலாக சட்டவியல் உத்திகள் குறித்து பேசியவர் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே அவரது சிந்தனையின் இப்பகுதி குறித்து தெளிவுபடுத்துவதும், —அதாவது, இதையும் அவரின் யதார்த்த செயல்பாடுகளையும் பிரித் தறிதல்— உண்மையில் அவரிடமிருந்து அறிவிக்கப்பட்டவை மற்றும் அவரைக் குறித்துக் கூறப்பட்டவைகளுக்கு இடையில் நடுநிலை பேணு வதும் இன்றியமையாததாகின்றது.

கூறப்படும் சிந்தனா முறைகள் மற்றும் வகைகளில் அவருக்கும் அவரது தோழர்களுக்கும் இடையில் இருந்த சில கருத்து வேறுபாடு களை குறிப்பிடுவதன் மூலம் இமாமின் சிந்தனை தெளிவுபடுத்தப்படு கிறது. அவர்களின் கருத்துகள் மற்றும் சாய்வுகளும் விளக்கப்படுகின்றன. இந்த ஆய்விலிருந்து பயன்மிகு முடிவை பெறுவதற்கு, இமாம் விட்டுச் சென்ற அறிவுசார் பாரம்பரியத்தைப் பொறுத்து ஹனஃபி சட் டவியல் சிந்தனா வழிவந்த பிற்காலத்து பின்பற்றாளர்களின் நடவ டிக்கைகளைத் தெளிவுபடுத்துவதும், தொடர்ந்து வந்த தலைமுறைகள், வேறுபட்ட வழக்காறுகளை எதிர்கொண்டபோது செயல்பட்ட விதத் தைத் தெளிவுபடுத்துவதும் அவசியமாகிறது. மேலும், இந்த சிந்தனா வழியில் உய்த்துணர்தல் முறை எந்தளவிற்குப் பங்காற்றியது; இதன் பொதுவான ஊகவிரிவாக்கக் கோட்பாடுகளின் நெகிழ்வுத் தன்மை எவ்வாறிருந்தது; இத்தன்மை இஸ்லாத்தின் பாதையையும், குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வையும் பேணிப் பாதுகாக்க எத்தகு பங்காற்றியது என்பது குறித்து பரிசீலிப்பதும் அவசியமாகிறது.

இதைச் செய்து முடிப்பதில் எல்லாம் வல்ல அல்லாஹ்வுடைய உதவியின் தேவை அளப்பரியது என்பதை அழுத்தமாக உரைப்பது அவசியம். அவனுடைய உதவியின்றி எவ்வொரு குறிக்கோளையும் அடையவியலாது. எமக்கு உதவுமாறும் வெற்றியளிக்குமாறும் அவனிடம் நாம் இறைஞ்சுகிறோம்.

– முஹம்மது அபூ ஸஹ்ரா. [துல்கஅதா 1364, நவம்பர் 1945]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *