ஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு

Posted on
பக். 264 ₹ 150

உலக வளங்களை தாமே துய்க்கவேண்டும் என்ற பேராசையே மனித சமூகத்திற்கு மிகப்பெரும் அழிவை ஏற்படுத்துகின்றது. இஸ்லாம் நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வில் மூழ்கி மனிதன் மறுவுலக வாழ்க்கையை மறந்துவிடுவது குறித்து எச்சரிப்பதோடு, இவ்வுலக வாழ்விலும் நடுநிலையைக் கடைபிடிக்க வழிகாட்டுகின்றது.

ஸகாத் இறைவனுக்கு மனிதன் நிறைவேற்றவேண்டிய கடமை; அதுவே சகமனிதர்களுக்கு நிறைவேற்றவேண்டிய கடமையாகவும் உள்ளது. இஸ்லாம் செல்வம் தேங்கிக்கிடப்பதை அனுமதிக்கவில்லை. இக்காலத்தில் உபரிமதிப்பை பங்கிடுவதற்கான மிகச் சிறந்த வழி ஸகாத்தை நடைமுறைப்படுத்துவதே. செல்வச்சுழற்சி ஏற்பட்டால் தான் சமூகத்தில் பலதரப்பட்ட பிரிவினரும் பலன் பெறமுடியும். வாழ்க்கை ஓட்டத்தில் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயலாதவர்களை சமூகத்தின் பொறுப்பாக்கியது இஸ்லாம். அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதோடு அவர்களுடைய கண்ணியமும் காப்பாற்றப்படவேண்டும் என வலியுறுத்துகிறது. இதை ஓர் அறநெறிப் போதனையாக மட்டுமின்றி மார்க்கக் கடமையாகவும் ஆக்கியுள்ளது.

இஸ்லாம் கடமையான வணக்கங்களைக் கூட்டாக நிறைவேற்றுவதை வலியுறுத்துகிறது. கடமையான தொழுகைகள் கூட்டாக நிறைவேற்றப்படும்போது இருபத்தேழு மடங்கு நன்மைகள் அதிகம் உண்டு என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளமையும் கடமையான நோன்பு ரமழான் மாதத்தில் உலககெங்கிலும் நோற்கப்படுவதையும் காணலாம். ஹஜ் பயணமும் கூட்டாகவே நிறைவேற்றப்படுகிறது. இறைவன் ஸகாத்தை சேகரித்து வினியோகம் செய்யும்படி இறைத் தூதர்(ஸல்) அவர்களை பணித்தான். அவர்களும் அவர்களுக்குப் பின் வந்த நேர்வழிபெற்ற கலீஃபாக்களும் அவ்விதமே ஸகாத்தை ஒரு பொது மையத்தில் சேகரித்து வினியோகித்தனர். அதன் காரணமாக சமூகத்தில் வறியவர்களின் துன்பம் நீக்கப்பட்டு சில ஆண்டுகளில் அப்பகுதிகளில் வறுமை முழுமையாக நீங்கியதையும் நாம் ஆதாரபூர்வமான செய்திகளின் வாயிலாக அறியலாம்.

இந்நூல் ஸகாத்தை ஒரு கடமையாக, கோட்பாடாக நம்முன் வைக்கிறது. பொருளியல் பரிமாற்றங்கள் மிகவும் விரிவடைந்துள்ள இந்நாளில் அவைகளில் எவ்வாறு ஸகாத் கணக்கிடுவது என்பதை விவாதங்களின்வழி தீர்வுகளை நம்முன் வைக்கிறது. இந்நூல் நிறுவன ரீதியில் ஸகாத்தை சேகரித்து வினியோகம் செய்வோருக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *