எங்களைப் பற்றி

அறிவுசார் விவாதங்கள், ஆய்வுகள் ஆகியன சமூகத்தின் வளர்ச்சியை அதன் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. அறிஞர்கள் மத்தியில், ஆய்வகத்தில் நடத்தப்பெற வேண்டிய வாத-பிரதிவாதங்கள் இன்று எவ்வித முன்னேற்பாடுமின்றி பொதுவெளியில் நிகழ்த்தப் பெறுகின்றன. கேட்பவர்களிடம் உடனடி மதிப்பைப் பெறும் நோக்குடன் அரங்கினில் பேசப்படும்போது, பிளவுகளும் அவநம்பிக்கைகளும் உருவாகக் காரணமாகிவிடுகின்றது.

முஸ்லிம் உலகம் பெரும் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளை சிறுசிறு பிரச்சினைகளைக் கொண்டு பிரதிகள் உருவாக்கப்படுவதையும் அதன்பால் கவனம் ஈர்க்கப்படுவதையும் காணமுடிகிறது. மறுபுறம், இஸ்லாத்தின் செய்தி முழுமனித சமுதாயத்திற்குமானது எனும்போது அறிமுக நிலையிலுள்ள நூல்களே பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன. அவை சொன்னதையே திரும்பச் சொல்கின்றன. அவற்றில் புதிய கூறுகளோ நிகழ்காலப் பிரச்சினைகளைத் தொடும் சமூகவியல் நோக்கோ போதுமானளவு காணப்படுவதில்லை. இவை ஒருவித வாசிப்புச் சோர்வை ஏற்படுத்துகின்றன.

எண்ணற்ற பிரதிகள் கற்றலை மையப்படுத்தியே உருவாக்கப்படுகின்றன. எனினும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தரத்தை மேம்படுத்துதல், ஆய்வு நோக்கில் நூல்களை வெளியிடுதல் என்ற நோக்கில் போதிய அளவு கவனம் செலுத்தப்படுவதில்லை. வரலாறுகளைப் பதிவுசெய்வது, பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையினர்க்கு கொண்டு செல்வது அவசியம். வரலாறு மறந்த சமூகம் நினைவு தவறிய ஒரு மனிதனுக்கு ஒப்பாகும்.

ஆய்வு, புதிய வாசிப்பு முறையை உருவாக்கல், வரலாறுகளை மறுபதிவு செய்தல், அரசியலுக்கான தேவைகள் இவற்றிலிருக்கும் இடைவெளிகளை நிரப்பவேண்டிய தேவையுள்ளது. இத்தேவையை நிரப்பும் முயற்சியின் முதற்கட்டமே மெல்லினத்தின் பிறப்பு.