இஸ்லாமிய வரலாறு – 09 / இஜ்திஹாத் & ஹனஃபி – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 09 / இஜ்திஹாத் & ஹனஃபி (பாகம் 2)

இஸ்லாமிய வரலாறு – 09 / இஜ்திஹாத் & ஹனஃபி (பாகம் 3)

இஸ்லாமிய வரலாறு – 09 / இஜ்திஹாத் & ஹனஃபி (பாகம் 4)

♦ ♦ ♦ ♦ ♦

இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, தலைப்புகளைக் கொடுத்துள்ளோம். படிக்க எளிதாக இருக்கும் பொருட்டு மூன்று பாகங்களாகப் பிரித்துள்ளோம். அவருடைய மற்ற ஆங்கில உரைகள் Abu Uthman என்ற யூடியூப்  சேனலில்  உள்ளன – மொழி பெயர்ப்பாளர்.

உரையாற்றிய நாள்: 29-07-2008

YouTube Link: Islamic History, Ijtihad & Hanafi

♦ ♦ ♦ ♦ ♦

நாம் இந்தத் தொடர்வகுப்பின் மூன்றாவதும் கடைசியுமான பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இது அனைவருக்கும் அறிமுகமான ‘ஃபிக்ஹ்’ என்பதைப் பற்றியதாகும். சிலர் இதை ‘சட்டவியல்’ என்று மொழிபெயர்க்கின்றனர். அறிவார்ந்த, இஸ்லாமிய, சொந்த அபிப்பிராயம் கலந்த மதிப்பீடுகளை, தீர்ப்புகளை சட்டவியலாளர்கள் (ஃபுகஹாக்கள்) வெளிப்படுத்தியபோது அவர்கள் தாமாக, வெறுமையில் இருந்து கொண்டு அப்படிச் செய்யவில்லை. அதற்கு ஒரு பின்னணி இருந்தது. கடந்த வகுப்பில் இறைத்தூதர் காலத்திலிருந்து துவங்கி இந்தப் பின்னணியைப் புரிந்து கொள்வதற்கான களத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோம். இஜ்திஹாத் குறித்து பேசிய நாம், இஜ்திஹாதிய விவகாரங்கள் எனக் கருதப்படும் சிலவற்றில் இறைத்தூதர் (ஸல்) எவ்வாறு தன் கருத்துகளை வெளிப்படுத்தினார் என்று அறிந்தோம்.

இப்போது இறைத்தூதர் காலத்திலிருந்து முஜ்தஹிதீன்களின் காலத்துக்கு நகர்ந்து வரப்போகிறோம். முஜ்தஹிதீன்கள் என்போர் தம் காலத்தில் சந்தித்த பிரச்சனைகளுக்கு இயன்றளவு சிறப்பான தீர்வுகளை கொடுக்கத் தகுதிபெற்ற கற்றறிந்த அறிஞர்கள் ஆவர்.

அறிவார்ந்த கருத்து (அர் ரஈ)

சட்டவியல் துறையில் ‘அர் ரஈ’ என்றொரு பதம் உள்ளது. சாதாரணமாக இது ‘ஒருவரின் கருத்து’ என்று பொருள்படும். எனினும் ஷரீயத்தின் அடிப்படையில் பார்த்தால் இதற்கு ‘ஒரு விவகாரம் குறித்த அறிவார்ந்த மதிப்பீடும் அதைத் தொடர்ந்து வரும் அறிவார்ந்த தீர்வும்’ என்ற அர்த்தம் உள்ளது. அவ்விவகாரங்கள் சமயச் சடங்குகள், சமூக-பொருளாதார வாழ்வு அல்லது சட்டம் மற்றும் ராணுவ விவகாரங்கள் என எதுவாகவும் இருக்கலாம்.

மக்களுக்கு கேள்விகள் எழும்போதெல்லாம் அவர்கள் அறிஞர்களை அணுகி அதுகுறித்து கேட்பர். அதுபற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸில் நேரடிக் குறிப்புகள் இல்லையெனில் அவ்வறிஞர்கள் தாம் பெற்ற மொத்த அறிவையும் பயன்படுத்தி, குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து அது தொடர்பாக பொதுவாக உள்ள கருத்துகளை ஒன்றுசேர்த்து தம் இறுதிக் கருத்தை வகுக்கும் போது அது ‘அர் ரஈ’ என்றாகிறது. ஆக ‘அர் ரஈ’ என்பது வெறுமனே ஒரு கருத்து என்பதைத் தாண்டி, ஒருவகையில் குர்ஆன் மற்றும் இறைத்தூதரோடு தொடர்புபடுத்தக்கூடிய கருத்தாகும்.

இதை ஆரம்பத்திலேயே புரிந்துகொள்வது அவசியம். ஒருவரின் சாதாரண கருத்து என்பதோடு இதை குழப்பிக் கொள்ள வேண்டாம். இன்று ‘அர் ரஈ’ என்பது வேறு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒருவர் குர்ஆனுக்கு விளக்கமளிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர் அவ்விளக்கத்தை எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக நீட்டினால், ‘அவர் தஃப்சீர் ரஈ செய்கிறார்’ என்று அவர் மீது குற்றம் சாட்டப்படுவதை பார்க்க்கிறோம். இப்படிச் சொல்வது அவரை கிட்டத்தட்ட இகழ்ந்து கூறுவது ஆகும். ஆகவே நாம் பயன்படுத்தும் சொற்களையும் விளக்கங்களையும் ஆரம்பத்திலியே தெளிவுபடுத்துவது நல்லது. சட்டவியலாளர்கள் குறித்துப் பேசும்போது ‘அர் ரஈ’ என்பதற்கு நாம் முன்னர் சொன்ன விளக்கத்தையே மனதில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

இன்று சட்டவியலாளர்கள் சொற்பமாகவே உள்ளனர். அவர்களைக் காண்பதே அரிதாக உள்ளது. ஆனால் இஸ்லாமிய விஷயங்களை சிந்திப்பது பொதுவாழ்வின் அம்சமாக இருந்த அன்றைய காலத்தில் அவர்கள் பலர் செழித்தோங்கி இருந்தனர். அறிவார்ந்த கருத்துகளை நமக்களித்த அச்சட்டவியலாளர்களை அவதானிக்கும்போது அவர்களுள் பெரும்பாலோர் ‘அந்-நஸ்’ இல்லாத நிலையில் ‘அர் ரஈ’யில் உடன்பட்டனர் என்று அறிய வருகிறோம். அதாவது, வேத வசனத்தின் நேரடி அறிவிப்பு அல்லது இறைத்தூதர் மொழியின் நேரடி அறிவிப்பு இல்லாத நிலையில் அறிவார்ந்த கருத்தை பிரயோகிப்பதில் உடன்பட்டனர் என்று அறிகிறோம். அவர்கள் ஒரு கேள்விக்கு குர்ஆன் மற்றும் இறைத்தூதரிடமிருந்து நேரடி பதில் கிடைக்காதபோது ‘அர் ரஈ’யை பயன்படுத்துவதில்  தவறு காணவில்லை.

எல்லாவற்றிலும் இருப்பது போல இதிலும் விதிவிலக்கு உள்ளது. மற்ற எல்லா சிந்தனைப் பள்ளிகளுக்கும் மாறாக ழாஹிரி சிந்தனைப் பள்ளி இஸ்லாத்தில் ‘ரஈ’ கூடாது என்றது. இதைத் தோற்றுவித்தவர் தாவூத் அல் ழாஹிரி ஆவார். எனினும் இத்தகைய சிந்தனையை ஆதரித்ததற்காக பிரபலமாக அறியப்படுபவர் அந்தலூசில் (இஸ்லாமிய ஸ்பெயின்) வாழ்ந்த இப்னு ஹஸம் என்ற இஸ்லாமிய அறிஞர் ஆவார். இவர்களின் கூற்றுப்படி ‘இஸ்லாத்தின் கட்டளைகள் அல்லது அறிவார்ந்த கருத்துக்கள் அதன் மூல உரைகளிலிருந்து பெறப்பட வேண்டும்.

இஸ்லாமிய மூல உரைகளோடு நேரடியாகத் தொடர்புபடுத்த முடியாத எதுவும் இஸ்லாமாக இருக்க முடியாது. அதை ஒருவரின் கருத்து அல்லது சிந்தனாமுறை என்று சொல்லலாமே ஒழிய அது இஸ்லாம் ஆகாது’. ஆக இஸ்லாமிய வரலாற்றின் மிக ஆரம்பத்திலேயே ஒரு விதிவிலக்கைக் காண முடிகிறது. தாவூத் அல் ழாஹிரி உமைய்யாக்களின் இறுதி காலத்தில், அப்பாஸிகளின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்தார். அதிலிருந்து சுமார் நூறு ஆண்டுகள் கடந்து இப்னு ஹஸம் வாழ்ந்தார். இது இஸ்லாத்தின் இரண்டாம் நூற்றாண்டுகளின் காலகட்டம் ஆகும்.

ஒப்பு நோக்கல் (கியாஸ்)

இறைவேதமும் இறைத்தூதர் வழிகாட்டுதலும் நேரடியாகப் பேசும் பிரச்சனைகளுக்கான இஸ்லாமியச் சட்டங்கள் தெளிவாக உள்ளன. இவற்றுக்கு இணையான, இவற்றை ஒத்த பிற பிரச்சனைகள் எழும்போது அறிஞர்கள் தம் இறுதி அபிப்பிராயத்தை வகுப்பதற்கு —’ரஈ’யை பயன்படுத்தாமல்— கியாஸ் எனும் வழிமுறையை பயன்படுத்தினர். கியாஸ் என்றால் ஒப்பு நோக்கல் என்று பொருள்.

இதை பின்வரும் எடுத்துக்காட்டின் மூலம் விளங்கலாம். குர்ஆனில் ஃகமர் குறித்து கூறப்பட்டுள்ள வசனங்களை எடுத்துக் கொள்வோம். ஃகமர் தடை செய்யப்பட்டது (ஹராம்) என்று குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. சிலர் ‘ஃகமர்’ என்றால் மது என்கின்றனர். ஆனால் அதன் பொருள் விசாலமானது. சிந்தனையை மட்டுப்படுத்தும் எதுவும் ஃகமரில் அடங்கும். மது அருந்தி போதை ஏறுவதன் காரணமாக சிந்தனை சிதைவதால் மது ‘ஃகமர்’ ஆகிறது. அன்று மக்கள் அருந்திய மதுபானங்கள் ‘ஃகமர்’ என்று அழைக்கப்பட்டன. ‘ஃகமர் தடை செய்யப்பட்டது’ என்று குர்ஆன் சொல்லும்போது அது நேரடித் தடை ஆகும்.

பிற்காலங்களில், சிந்தனையை மட்டுப்படுத்தும் மெதம்ஃபெடமைன், கொகெய்ன் போன்ற பல்வேறு போதைப் பொருட்கள் உருவாயின. இவற்றையும் தடை செய்யப்பட்டது என்று அறிவித்த சட்டவியலாளர்கள், குர்ஆன் இவற்றை நேரடியாகத் தடை செய்திருக்கிறது என்பதாலோ தங்கள் அபிப்பிராயத்தை பயன்படுத்தியோ அவ்வாறு சொல்லவில்லை. மாறாக ஃகமரின் விளக்கத்தோடு இப்போதைப் பொருட்களை ஒப்பிட்டு அவ்வாறு கூறினர். ‘குர்ஆன் ஃகமரை தடை செய்துள்ளது; இப்போதைப் பொருட்களும் ஃகமரில் அடங்கும். ஆகவே இவையும் தடை செய்யப்பட்டவை’ என்று முடிவு செய்தனர். இவ்வாறு முடிவு செய்வதுதான் கியாஸ் ஆகும். இது சட்டவியலாளர்களின் அபிப்பிராயமோ (ரஈ) மூல உரைகளிலிருந்து நேரடியாகப் பெறப்படும் சட்டமோ (அந் நஸ்) அல்ல.

மேலோட்டமான பார்வை

அடுத்து ஒவ்வொரு சிந்தனைப் பள்ளியையும் விரிவாகப் பார்க்கும் முன் அவற்றை மேலோட்டமாக ஒருமுறை பார்த்துவிடுவோம். ஒரு சட்டம் ‘ஷரியத் சட்டம்’ என்று கருதப்படுவதற்கு அது நேரடியாக மூல உரைகளிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும் அல்லது குர்ஆன் மற்றும் இறைத்தூதருடைய உரைகளின் பொதுவான சூழமைவோடு பொருந்திப் போக வேண்டும் என்று ஷாஃபியீ சிந்தனைப் பள்ளி கூறுகிறது. ஹனஃபி சிந்தனைப் பள்ளியும் இவ்வாறே கூறியது என்றாலும் கூடுதலாக ‘இஸ்திஹ்சான்’-ஐ சேர்த்துக் கொண்டது.

‘இஸ்திஹ்சான்’ என்பதற்கு மேம்படுதல் அல்லது ‘மேம்படும் வழிமுறையினூடாக’ என்று பொருள் கொள்ளலாம். ‘மேம்படுதல்’ என்ற கருதுகோளின் கீழ் வழக்காறுகள் (அல் உர்ஃப்), இன்றியமையாமை (அஸ் ஸரூரா) மற்றும் பொது நன்மை (அல் மஸ்லஹா) ஆகியவை உள்ளடங்கி உள்ளன. பல தலைமுறைகளாக, பல காலம் பெற்ற அனுபவங்களினூடாக நிறுவப்பட்டுவிட்ட வழக்காறுகள் (அல் உர்ஃப்) நம்மிடையே உள்ளன. அவை சமூகத்துக்குச் சமூகம் மாறுபடும். ஒரு சமூகத்தில் நிலவும் வழக்காறுகள் மற்றொரு சமூகத்தில் இருப்பதிலிருந்து வேறுபடும். ஹனஃபி சிந்தனைப் பள்ளி ஒரு விஷயம் குறித்து இறுதி முடிவெடுப்பதில் இந்த வழக்காறுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறி அவற்றை அங்கீகரித்தது. எனினும் இவை குர்ஆனையும் இறைத்தூதரின் வழிமுறையையும் மீறியதாக இருக்கக் கூடாது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாம் இங்கு பேசும் அனைத்தும் -இல்லை என்று நாம் சொல்லாத வரை- ஏதோ ஒரு விதத்தில் குர்ஆனுக்கும் இறைத்தூதரின் வழிமுறைக்கும் இணக்கமான கருத்து என்றே பொருள் கொள்ள வேண்டும்.

ஆக ஹனஃபி சிந்தனைப் பள்ளி பிற சிந்தனைப் பள்ளிகளிலிருந்து ஒருபடி மேலே சென்று இக்கூறுகளை மேலதிகமாகப் பெற்றிருந்தது. இதன் காரணமாக பிற சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்த சில இறுக்கமான பின்பற்றாளர்கள், அபூ ஹனீஃபாவை “கொள்கை துறந்த சட்டவியலாளர்” என்றும் அவர் “வரம்புமீறி சென்றுவிட்டார்” என்றும் கூறுகின்றனர். மேலும் அவரை தூற்றும் நோக்கத்தில் “மிகத் தாராளவாத சட்டவியலாளர்” என்றும் குறிப்பிடுகின்றனர். இக்கூறுகளை அவர் கருத்தில் கொண்டிருக்கக் கூடாது என்கின்றனர். இவை பலரும் அதிகம் அறிந்திராத அகக்கருத்துகள் ஆகும்.

மாலிக்கிகள், ஸைதிகள் மற்றும் ஹன்பலி சிந்தனையை பின்பற்றும் சிலர் ‘அர் ரஈ’க்கு விரிவான விளக்கத்தைக் கொண்டிருந்தனர். அவர்களிடம் ஒப்பு நோக்கல் மற்றும் மேம்படுதலின் சில கூறுகளையும் காண முடிகிறது. அபூ ஹனீஃபாவைப் போல வெளிப்படையாக, தெளிவாக இவற்றைப் பேசாதபோதிலும், அவர்களுடைய சில கருத்துகளைக் கூர்ந்து கவனித்தால், அபூ ஹனீஃபா பகிரங்கமாகப் பேசியதைத்தான் இவர்களும் செய்ய முயற்சிக்கின்றனர் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இக்கருத்துகள் அனைத்தையும் நாம் பின்னர் விரிவாகப் பார்ப்போம். ஆனால் இப்போது இவற்றைப் பார்க்கையில் ஒரு விஷயம் புலனாகிறது. இக்கருத்துக்கள் அனைத்தும் ‘அஷ்-ஷர்ர அல்-இஸ்லாமியா’ எனப்படும் இஸ்லாமிய சட்டதிட்டங்களின் பொதுக் குறிக்கோள்களோடு பொருந்திப் போகின்றன. சட்டவியலாளர்கள் அனைவரும் ஒவ்வொரு விஷயத்திலும் தம் இறுதித் தீர்ப்பை வழங்கியபோது, அது இஸ்லாத்தின் குறிக்கோள்களுக்கு இசைவாக இருக்கின்றது என்ற உறுதியுடனே அவ்வாறு செய்தனர். ஒருவர் கூட இஸ்லாத்துக்கு முரணானது என்று தெரிந்தே எந்தத் தீர்ப்பையும் வழங்கவில்லை.

இங்கு மற்றொரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எல்லா சிந்தனைப் பள்ளிகளும் மூல உரைகளை (அந் நஸ்) குர்ஆன் வசனங்கள் மற்றும் இறைத்தூதரின் மொழிகள் என்று வரையறுத்தன. ஆனால் ஷியா இமாமியாவைப் பொருத்தவரை, மூல உரை என்பது குர்ஆன் வசனங்கள், இறைத்தூதரின் மொழிகள் என்பதோடு இமாம்களின் உரைகளும் உள்ளடக்கியது ஆகும். எடுத்துக்காட்டாக இஸ்னா அஷரி (பன்னிருவர்) வகை ஷியா சிந்தனைப் பள்ளியை எடுத்துக் கொண்டால், குர்ஆன் வசனங்கள், இறைத்தூதரின் மொழிகள் ஆகியவற்றோடு இமாம்களின் உரைகளையும் சேர்த்துத்தான் அவர்களுடைய மூல உரைகளாகக் கொள்ள வேண்டும்.

ஒருமித்த கருத்து

அடுத்து ‘இஜ்மா’ பற்றி பார்ப்போம். இஜ்மா என்றால் ‘ஒருமித்த கருத்து’ என்று பொருள். யாருடைய ஒருமித்த கருத்து என்ற கேள்விக்கு இஸ்லாமிய புலமை பெற்ற நிபுணர்களின் ஒருமித்த கருத்து என்று பதிலளிக்கலாம். ஏதாவது ஒரு விஷயம் குறித்து எடுக்கப்படும் முடிவில் அல்லது ஒரு தீர்ப்பில் அவர்கள் முழுமையாக உடன்பட்டால் அது இஜ்மா ஆகும்.

எடுத்துக்காட்டாக தொழுகைகளில் உள்ள ரக்அத்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்வோம். குர்ஆன், இறைத்தூதரின் மொழிகள், நூல்கள் என எதை ஆராய்ந்தாலும் எல்லா சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்தவர்களும் இந்த எண்ணிக்கைகளில் ஒன்றுபடுவதைப் பார்க்கிறோம். எனவே இதில் ‘இஜ்மா’ இருக்கிறது. அதாவது தினசரி தொழுகைகளில் உள்ள ரக்அத்களின் எண்ணிக்கையில் ‘புலமையும் நிபுணத்துவமும் வாய்ந்த ஒருமித்த கருத்து’ உள்ளது என்று கூறலாம்.

அதேபோல தினசரி தொழுகைகளின் எண்ணிக்கையையும் (அதத்  ஸலாத்) எடுத்துக் கொண்டால், எல்லா சட்டவியல் நூல்களும் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழ வேண்டும் என்று கூறுகின்றன. இதுவும் ஒருமித்த கருத்து உள்ள (இஜ்மா) விஷயம் ஆகும். ஆனால் எப்படித் தொழ வேண்டும் என்பதில் ‘இஜ்மா’ இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக தினசரி தொழுகைகளின் எண்ணிக்கையாகிய ஐந்தும், அத்தொழுகைகளில் உள்ள ரக்அத்களின் எண்ணிக்கையாகிய பதினேழும் எல்லா அறிஞர்களும் உடன்பட்ட ‘அல்-அசல்’ எனப்படும் சட்டவியல் அடிப்படைகள் ஆகும்.

இவை தவிர கிளை விவகாரங்களும் (ஃபர்ரா) உள்ளன. ஒருமித்த கருத்து ஏற்பட்ட விவகாரங்களிலிருந்து தோன்றும் கிளைகள் மாறுபட்டு இருக்கக் கூடும். தொழுகையில் கை கட்டி நிற்க வேண்டுமா அல்லது கட்டாமல் நிற்க வேண்டுமா என்பது இதற்கு ஒரு உதாரணம். இது அடிப்படை விஷயம் அல்ல. ஆனால் இன்று சிலர் கிளை விவகாரங்களை அடிப்படை விவகாரங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்படிக் கிளை விவகாரத்தை அடிப்படை விவகாரமாக மாற்றுவது அவர்களிடம் குடிகொண்டுள்ள வெறியே தவிர அறிவு அல்ல.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 09 / இஜ்திஹாத் & ஹனஃபி (பாகம் 2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *