இஸ்லாமிய வரலாறு – 12 / ஷாஃபியி சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

♣ ♣ ♣ ♣ ♣

இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, தலைப்புகளைக் கொடுத்துள்ளோம். அவருடைய மற்ற ஆங்கில உரைகள் Abu Uthman என்ற யூடியூப்  சேனலில்  உள்ளன – மொழி பெயர்ப்பாளர்.

உரையாற்றிய நாள்: 11-11-2008, இடம்: வாஷிங்டன் டி.சி.

YouTube Link: Islamic History, Al Shafi’ee School of Thought

♣ ♣ ♣ ♣ ♣

இன்றைய வகுப்பில் அல் இமாம் அஷ் ஷாஃபியி பற்றி பார்க்க இருக்கிறோம். அவருடைய பெயர் முஹம்மது இப்னு இத்ரீஸ் அஷ் ஷாஃபியி. ஹி. 150-ல் பிறந்த அஷ் ஷாஃபியி, 54 ஆண்டுகள் வாழ்ந்து ஹி. 204-ல் மறைந்தார். நாம் இன்னும் சில சட்டவியலாளர்களைப் பற்றி பார்க்க இருக்கிறோம். அவர்களுள் யாரேனும் இவரைவிடக் குறைந்த வயதில் மரணித்தார்களா என்று நான் ஆய்வு செய்யவில்லை. ஆனால் இதுவரை நாம் பார்த்த சட்டவியலாளர்களுள் குறைந்த வயதில் மரணித்தவர் இவர்தான். இமாம் மாலிக் 86 வயது வரை வாழ்ந்தார் என்றும் அபூ ஹனீஃபா கிட்டத்தட்ட 70 வயது வரை வாழ்ந்தார் என்றும் பார்த்தோம். எனவே தன் 50 களில் மரணித்த இமாம் அஷ் ஷாஃபியி, குறைந்த வயதில் மரணித்தார் என்றே கருதுகிறேன். அவருடைய மரணம் குறித்து நாம் பின்னர் பார்ப்போம்.

பிறப்பு

அவருடைய பிறப்பிடம் குறித்து வரலாற்று நூல்கள் இருவேறு தகவல்களைத் தருகின்றன. யாகூத் அல் ஹமவி என்ற நூல், அவர் ஏமனில் பிறந்தார் என்று கூறுகிறது. அவருடைய தாய் ஏமன்காரர் என்கிறது. ஆனால் பெரும்பாலான நூல்கள் அவருடைய பிறப்பிடம் எனக் குறிப்பிடுவது — இன்று (இவ்வகுப்பு 11-11-2008-ல் நிகழ்த்தப்பட்டது -மொ.ர்) மின்சாரம், எரிபொருள் என்று எதுவும் இல்லாமல் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் பகுதியான — காஸா ஆகும். நம் உடலில் கொஞ்சமாவது தெம்பிருந்தால், குறைந்தபட்சம் ஷாஃபியி சிந்தனைப் பள்ளியைப் பின்பற்றுபவர்களாவது —இமாம் ஷாஃபியிக்கு செய்யும் மரியாதையாக— காஸாவில் வாழும் மக்களுக்கு ஆதரவாக சிறிதளவேனும் ஆரவாரம் செய்திருப்பர். மக்கள் கவனக்குறைவாக அல்லது அக்கறையற்று இருப்பதைச் சுட்டிக்காட்டவே இதைச் சொல்கிறேன்.

இமாம் அபூ ஹனீஃபா இறந்த அதே ஆண்டில்தான் இமாம் ஷாஃபியி பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்தி ஆகும். சிலர் இன்னும் ஒருபடி சென்று அபூ ஹனீஃபா இறந்த அதே நாளில்தான் இமாம் அஷ் ஷாஃபியி பிறந்தார் என்கின்றனர். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று நான் அறியேன். இது மிகத் துல்லியமாகச் சொல்லப்பட்டிருப்பதால் எனக்குச் சந்தேகம் எழுகிறது. எனினும் இச்செய்தி நூல்களில் இடம் பெற்றுள்ளது. எனக்குக் கிடைத்த தகவல்களை அப்படியே உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம். இமாம் அஷ் ஷாஃபியி, ரஜப் மாதத்தின் கடைசி தினத்தில் இறந்தார்.

குடும்பப் பின்னணி

அடுத்து அவருடைய முன்னோர்களைப் பற்றி பார்ப்போம். இறைத்தூதரின் கொள்ளுத் தாத்தாக்கள் காலத்தில் நான்கு சகோதரர்கள் இருந்தனர்: ஹாஷிம், அல் முத்தலிப், அப்து ஷம்ஸ் மற்றும் நவ்ஃபல். ஹாஷிமின் வழித்தோன்றல்களிலிருந்து இறைத்தூதர் பிறந்தார். அல் முத்தலிபிலிருந்து அல் இமாம் ஷாஃபியி பிறந்தார். ஆக இச்சகோதரர்களின் தலைமுறையிலிருந்து பார்த்தால், இமாம் ஷாஃபியி இறைத்தூதருக்கு ஒன்று விட்ட சகோதரர் உறவு முறை ஆகிறார். விஷயங்களை விருப்பு வெறுப்பின்றி அணுகுபவர்கள், இத்தகவல்களை பெரிதும் பொருட்படுத்த மாட்டார்கள். அப்படிப் பார்த்தால் உமைய்யாவும் இறைத்தூதரின் ஒன்றுவிட்ட சகோதரர்தான். அப்து ஷம்ஸிலிருந்து தோன்றிய உமைய்யாதான் முஸ்லிம்கள் மத்தியில் தேசியவாதப் பிரச்சனைகளை உருவாக்கினார்.

அல் முத்தலிபின் வழித்தோன்றல்கள், ஹாஷிமின் வழித்தோன்றல்களுக்கு மிக நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்தனர். இஸ்லாத்துக்கு முன்னரும் இஸ்லாத்துக்குப் பின்னரும், ஹாஷிம் கோத்திரமும் முத்தலிப் கோத்திரமும் நெருங்கிய சகோதரர்களாக இருந்தனர். அதனாலேயே அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாயினர். எடுத்துக்காட்டாக, ஹாஷிம் கோத்திரத்தார் மூன்று வருடங்கள் ஊர் விலக்கம் செய்யப்பட்ட போது முத்தலிப் கோத்திரத்தாரும் அவர்களோடு இருந்தனர்.

இஸ்லாமிய போர் சட்டத்தில், போர் வெற்றிப் பொருட்களின் பங்கீடு குறித்துப் பேசும் போது ‘சஹம் அர் ரசூல்’ என்றொரு பங்கு உள்ளது. அதன் பொருள் ‘இறைத்தூதருக்குக் கொடுக்க வேண்டிய பங்கு’. இறைத்தூதர் அதைப் பெறும் போது, அதிலிருந்து சிலதை தன் குடும்பத்தாருக்கும் தன்னோடு இருக்கும் பிற ஹாஷிம் கோத்திரத்தாருக்கும் பகிர்ந்தளிப்பவராக இருந்தார். அவ்வாறே தன்னோடு இருக்கும் அப்துல் முத்தலிப் கோத்திரத்தாருக்கும் அப்பொருட்களை பகிர்ந்தளிப்பவராக இருந்தார். ஆக இறைத்தூருக்கு உரிய பங்கில், அவரது வழிகாட்டலின் பேரில் அப்துல் முத்தலிப் கோத்திரத்தாருக்கும் ஹாஷிம் கோத்திரத்தாருக்கும் பங்கு இருந்தது. இத்தகவல் உங்களுக்கு முக்கியமாகத் தோன்றலாம் அல்லது அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நடந்த நிகழ்வுகள் இவை. இதிலிருந்து சிலர், ஷாஃபியி பிற ‘சாதாரண’ சட்டவியலாளர்களைப் போன்றவர் அல்ல என்று வாதிடுகின்றனர்.

நாம் சொல்ல வரும் செய்தியை விளக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அது குறித்து பார்ப்போம். ஃகைபர் போரில் யூதர்கள் முஸ்லிம்களிடம் தோல்வியடைந்தனர். அதில் கிடைத்த வெற்றிப் பொருள்களை இறைத்தூதர் (ஸல்), ஹாஷிம் கோத்திரத்துக்கும் முத்தலிப் கோத்திரத்துக்கும் வழக்கம் போல பகிர்ந்தளித்தார். ஆனால் அப்து ஷம்ஸ் வழியில் வந்த உஸ்மான் இப்னு அஃப்பானுக்கும் நவ்ஃபல் வழியில் வந்த ஜுபைர் இப்னு முத்இமுக்கும் இதிலிருந்த எந்தப் பங்கும் கிடைக்கவில்லை.

அவர்களும் போரில் கலந்து கொண்டு வேறுவழியில் பகிர்ந்தளிக்கப்பட்ட பங்குகளை பெற்றிருந்தனர். ஆனால் இறைத்தூதருக்கு உரியதிலிருந்து பகிர்ந்தளிக்கப்பட்ட பங்கை அவர்கள் பெறவில்லை. இது பற்றி இறைத்தூதரிடம் கேட்க வேண்டும் என நினைத்து இருவரும் அவரிடம் சென்று இவ்வாறு கூறினர்: “யா ரசூலுல்லாஹி! ஹாவுலாயி இஃக்வதுக மின் பனி ஹாஷிம் லி அன்னல்லாஹ தஆலா ஜஅலக மின்ஹு இன்ன அன்னக அஃதய்த பனி அல் முத்தலிப் வ தரக்தனா வ இன்னமா நஹ்னு வ ஹும் பி மன்ஸிலதி வாஹித”. அதாவது, “இறைத்தூதரே! இவர்கள் ஹாஷிம் வழியில் வந்த உங்கள் சகோதரர்கள். இவர்கள் உங்கள் ஆதரவாளர்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆரம்பம் முதலே அவர்கள் உங்களோடு இருந்தனர். எனவே உங்கள் பங்கிலிருந்து சிலதை அவர்களுக்குக் கொடுத்தீர்கள். அவர்களின் தனியுரிமையை நாங்கள் மறுக்கவில்லை. அவர்களின் வழித்தோன்றல்களிருந்து நீங்கள் வர வேண்டும் என அல்லாஹ் விதித்துள்ளான். ஆனால் முத்தலிப் கோத்திரத்தாருக்கு பங்கு வழங்கிவிட்டு எங்களை விட்டு விட்டீர்கள். எங்களைப் பொருத்தவரை நாங்கள் இருவரும் சமநிலையில் உள்ளவர்களே. அதாவது நாங்கள் இருவரும் உங்களுக்கு ஒன்று விட்ட சகோதரர் உறவு முறையில் வருபவர்களே”, என்று கூறினர்.

இதைக் கேட்ட இறைத்தூதர் இவ்வாறு பதிலளித்தார்: “இன்னஹும் லம் யுதாரிகுனா ஃபி ஜாஹிலியதின் வ லா இஸ்லாம் இன்னமா பனு ஹாஷிம் வ பனு முத்தலிப் ஷையுன் வாஹித்” — ஜாஹிலிய்யா காலத்திலும் சரி இஸ்லாத்தின் காலத்திலும் சரி, முத்தலிப் கோத்திரம் எங்களிடமிருந்து ஒருபோதும் பிரிந்து செல்லவில்லை. ஹாஷிம் கோத்திரமும் முத்தலிப் கோத்திரமும் இப்படி” என்று சொல்லி தன் இரு கைவிரல்களைக் கோர்த்துக் காட்டினார்.

இத்தகைய பின்னணியிலிருந்து இமாம் ஷாஃபியி வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பலர் இவ்விஷயங்களை கவனிப்பதில்லை.

ஆரம்பகால வாழ்க்கை

அஷ் ஷாஃபியி-இன் தாய் ஏமன் நாட்டுக்காரர் என்று பார்த்தோம். அவர் அஸ்து கோத்திரத்தைச் சார்ந்தவர். அவருடைய தந்தை குறைஷ் கோத்திரத்தைச் சார்ந்தவர். சிறு வயதிலேயே —ஏறக்குறைய இரண்டு வயதில்— தந்தையை இழந்த இமாம் அஷ் ஷாஃபியி, அனாதையாக ஏழ்மை நிலையில் வளர்ந்தார். வறுமை காரணமாக அவருடைய தாய் அவரை மக்காவுக்கு அனுப்பினார். முத்தலிப் கோத்திரத்தைச் சார்ந்தவர் என்பதால் ஏதாவது அங்கீகாரம் கிடைக்கும், அவருடைய தந்தைக்கும் பாட்டனாருக்கும் இறைத்தூதர் நிதியுதவி வழங்கியது போல அன்று மக்காவில் ஆட்சி புரிபவர்களும் ஏதாவது உதவி புரிவர் என்ற நம்பிக்கையில் அவர் இமாம் ஷாஃபியி-ஐ மக்காவுக்கு உறவினர்களுடன் வாழ அனுப்பினார். பின்னர் தானும் மகனோடு மக்காவில் தங்கிவிட்டார்.

ஆக இமாம் ஷாஃபியி-இன் ஆரம்பகால வாழ்க்கை அனாதையாக வறிய நிலையில் கழிந்தது. முத்தலிப் கோத்திரத்தைச் சார்ந்தவர் என்ற பின்னணி அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இங்கு, அன்றைய அரசியல் சூழலையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். நபிவீட்டார் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிராக அன்று குரோதம் பரவியிருந்தது. இமாம் ஷாஃபியி-யும் இந்த வகையைச் சேர்வதால் அவருடைய குடும்பமும் அன்றைய அரசியல் அமைப்பின் அழுத்தத்துக்கு உள்ளாக நேர்ந்தது.

மற்ற சட்டவியல் அறிஞர்களைப் போல இமாம் ஷாஃபியி சிறு வயதிலேயே குர்ஆனை மனனம் செய்தார். மேலும் மக்காவில் வளர்ந்த காரணத்தால் அச்சமூகத்தில் அன்று புழக்கத்தில் இருந்த பல நபிமொழிகளையும் மனனம் செய்தார். இமாம் ஷாஃபியி-இன் காலம், பலர் முஸ்லிம்களாக மாறி ‘அரபு’ மயமாகிக் கொண்டிருந்த காலம் ஆகும். நாம் இங்கு ‘அரபுகள்’ என்று சொல்லும் போது தேசியவாதத்தைக் குறிக்கவில்லை. அரபி குர்ஆனின் மொழி ஆகும். மக்கள் முஸ்லிம்களாக மாறிக் கொண்டிருந்தனர். குர்ஆனின் மொழியை கற்கும் ஆர்வம் அவர்களுக்கு இருந்தது. அவ்வளவுதான். இதில் தேசியவாதம் எதுவும் இல்லை. அக்காலத்தில் இத்தகைய மக்களின் வருகையால் அரபு மொழி பாதிப்புக்கு உள்ளாகியது. ‘வெளியோர்’ வருவதற்கு முன்பிருந்த தரத்தையும் சொல்வளத்தையும் அரபு மொழி இழந்து நின்றது. அரபி பேசாத மக்கள், தூர தேசங்களிலிருந்து ஹஜ்-உம்ராவுக்காக வருவதும் அங்கேயே தங்கிவிடுவதும் அரபி மொழி, குர்ஆன், ஹதீஸ் போன்றவற்றைக் கற்பதும் என மக்கா பல்வேறுபட்ட மக்கள் கூடிக்கலந்த நகரமாக இருந்தது.

மக்காவில் அரபு மொழி தரம் குன்றியிருந்ததை இமாம் ஷாஃபியி உணர்ந்தார். எனவே தன் பதின்ம வயதில் மக்காவை விட்டு வெளியேறி பாலைப் பிரதேசத்து மக்களோடு வாழச் சென்றார். அம்மக்கள், அரபு மொழி உச்சந்தொடுவதை மட்டுப்படுத்தும் சூழலுக்கு ஆளாகியிருக்கவில்லை. நகர் பிரதேச அலுவல்கள் மற்றும் பரபரப்புகளிலிருந்து விலகி பாலைப் பிரதேசத்துக்குச் சென்ற இமாம் ஷாஃபியி, உதைஃப் என்ற கோத்திரத்துடன் தங்கினார். தன் பதின்ம வயதில் இத்தகைய சூழலில் வளர்ந்த அவர், பிரத்தியேக மொழிப் புலமையைப் பெற்றார். எடுத்துக்காட்டாக, அபூ ஹனீஃபாவைப் போலல்லாமல் இவருடைய மொழிப் புலமை சிறப்பாக இருந்தது. இதன் பொருள் அபூ ஹனீஃபா திறமை குன்றியிருந்தார் என்பதல்ல. அவரும், ஒரு சட்டவியலாளர் அல்லது அறிஞர் அல்லது முஜ்தஹிதுக்குத் தேவையான மொழியறிவைப் பெற்றிருந்தார்தான். எனினும் அல் இமாம் அல் ஷாஃபியி, மொழி விஷயத்தில், ஒப்பீட்டளவில் மற்ற சட்டவியலாளர்களைவிட முன் வரிசையில் இருந்தார் என்றுதான் நாம் சொல்கிறோம்.

இத்தகைய நாடோடி அல்லது பாலைவனச் சூழலில் இருந்த போது அவர் வில்வித்தையிலும் (அர் ரிமாயா) ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இவ்விஷயத்தில் அவர் கிட்டத்தட்ட உச்சத்தைத் தொட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஒரு இலக்கை நிர்ணயித்து பத்து முறை அம்பு எறிய வேண்டுமெனில், ஒவ்வொரு முறையும் மிகச் சரியாக இலக்கைத் தாக்கும் வரை அவர் தொடர்ந்து பயிற்சி செய்தார். மொழி ஆர்வத்தைப் போல வில்வித்தை ஆர்வமும் அவருடைய உள்ளத்தில் நிரம்பி இருந்தது. வளரும் பருவத்தில் இவ்விரு விஷயங்களும் அவருடைய மனதில் ஊடுருவி இருந்தன.

மக்கத்துச் சூழல்

மக்காவில் இருந்தபோது இமாம் ஷாஃபியி பல அறிஞர்களிடம் கல்வி பயின்றார். அவர்களுள் ஒருவர் சுஃப்யான் இப்னு உயைய்னா; மற்றொருவர் முஸ்லிம் இப்னு ஃகாலித் அஸ் ஸஞ்சி. இவர்கள் இருவரும் மக்காவின் பிரபல அறிஞர்களாக அறியப்பட்டனர்.

இதற்கு முன்னர் அபூ ஹனீஃபா மற்றும் மாலிக் பற்றி படிக்கும் போது மதீனா மற்றும் கூஃபா பற்றி குறிப்பிட்டோம். ஆனால் மக்காவைப் பற்றி நாம் எதுவும் சொல்லவில்லை. மதீனாவின் சூழல் நபிமொழிகளின் சூழலாக இருந்தது. அங்குதான் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை முஸ்லிம்கள் வாழ்ந்தனர். ஆகவே அங்கு பல நபிமொழிகள் புழக்கத்தில் இருந்தன. பலர் மதீனாவை விட்டு வெளியேறி பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தாலும், பெருமளவு மக்கள் மதீனாவில்தான் இருந்தனர். எனவே பெருமளவிலான நபிமொழிகளை மனனம் செய்வது மதீனாவில்தான் நிகழ்ந்தது. இது மதீனத்து சிந்தனைப் பள்ளியின் பண்பாக இருந்தது.

கூஃபாவின் சிந்தனைப் பள்ளிகளின் பண்பு, பகுத்தறிவாக இருந்தது. மதீனாவைப் போல அங்கு நபிமொழிகள் பெருமளவில் இருக்கவில்லை. எனவேதான் அங்குள்ள சிந்தனைப் பள்ளிகள் அல்லது சிந்தனா முயற்சி, பகுத்தறிவு ரீதியானதாக இருந்தது. மதீனத்து மக்களை விட இவர்கள் அதிகம் சிந்திக்க வேண்டி இருந்தது.

மக்காவைப் பொருத்தவரை, அங்குள்ள சிந்தனைச் சூழல் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸின் சிந்தனையாக இருந்தது. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், இமாம் அலீயோடு சேர்ந்து கடைசி வரைக்கும் போர்களில் ஈடுபட்டவர். பின்னர் மக்காவுக்குச் சென்ற அவர், தன் அனுபவங்களைச் சுமந்தவராக அங்கிருந்த அறிவுச் சூழல் மீது செல்வாக்கு செலுத்தினார். இவ்வாறாக இமாம் அஷ் ஷாஃபியி தன் அறிவுசார் வாழ்வின் ஆரம்பத்தில், மக்காவிலிருந்த அப்துல்லாஹ் இப்னு அப்பாஸின் சிந்தனை மற்றும் ஹதீஸ்களின் செல்வாக்குக்கு உள்ளானார்.

இமாம் அல் ஷாஃபியி 20 வயதை அடைந்த போது அல் முஅத்தா முழுவதையும் மனனம் செய்து முடித்தார். அல் முஅத்தா என்பது, நபிமொழிகளின் கேந்திரமாகத் திகழ்ந்த மதீனாவில் வாழ்ந்த அல் இமாம் மாலிக் இயற்றிய நபிமொழித் தொகுப்பு ஆகும். முஅத்தாவை மனனம் செய்த பிறகு இமாம் ஷாஃபியி மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையே பயணப்பட்டுக் கொண்டிருந்தார் என்று அறிகிறோம். அன்று மாணவர்கள், தாங்களே ஆசிரியர்களாகத் தேர்ச்சி பெறும் வரை தங்கள் ஆசிரியரிடமிருந்து விலகிச் செல்லமாட்டார்கள். ஆனால் ஷாஃபியி-க்கும் மாலிக்குக்கும் இடையேயான உறவு அப்படி இருக்கவில்லை. மதீனா சென்ற இமாம் ஷாஃபியி, இமாம் மாலிக் விஷயத்தில் ஆசிரியர்-மாணவர் உறவை கறாராகப் பேணவில்லை.

பதவியும் பதவி பறிப்பும்

இமாம் ஷாஃபியி தன் வாழ்வின் பிற்காலத்தில், உள்ளூராகிய அல் ஹிஜாஸில் எந்த அளவு பயணம் மேற்கொண்டாரோ அதே அளவு, வெளிநாடுகளாகிய ஈராக் மற்றும் எகிப்துக்கும் பயணம் மேற்கொண்டார். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் முன், இமாம் ஷாஃபியி நஜ்ரானின் (இன்றைய மொழியில் சொல்வதானால்) ஆளுநர் பதவியை ஏற்றுக் கொண்டார். இதன் பொருள் அவர் பாக்தாதில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த அப்பாஸிகளோடு முழுச் சம்மதத்தில் இருந்தார் என்பதல்ல. அவருக்காக ஒரு பதவி காலியாக இருந்தது. அதை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார், அவ்வளவுதான். ஐந்து வருடங்கள் அப்பதவியில் நீடித்த அவர், மக்களுக்கு ஒரு புது ரத்தத்தைப் பாய்ச்சினார். பொதுவாக, மக்கள் ஆளுநரை திருப்திப்படுத்தும் நோக்கில் போலியாக நடந்து கொள்வர். ஆனால் இத்தகைய நடவடிக்கைகளை இமாம் ஷாஃபியி சரி செய்ய முற்பட்டார். “சத்தியத்தையும் நீதியையும் மட்டுமே மதித்து நடக்க வேண்டும்” என்றார். அவர் கறாரான ஆளுநராக இருந்தார். உண்மை (அல் ஹக்) விஷயத்தில் மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்தார்.

அவர் பதவி ஏற்று ஐந்து வருடம் ஆன போது, அவ்வாண்டு இறுதியில் அப்பாஸிகளின் அடிவருடி ஒருவர் அப்பதவிக்கு வந்தார். அவர் அப்பாஸிகளுக்குக் காட்டிய விசுவாசத்தில் அப்பாஸிகளையே விஞ்சியவராக இருந்தார். அவர் ‘இமாம் ஷாஃபியி அலவிகளின் அனுதாபி’ என்றார். அவர் புனைந்துரைத்தார் என்று சில நூல்கள் கூறுகின்றன. வேறு சில நூல்கள் அவருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அப்படிச் சொன்னார் என்று கூறுகின்றன. அலவிகள் என்பது ஷியாக்களைக் குறிக்கும். அவர், இமாம் ஷாஃபியிக்கு எதிராக (இன்றைய மொழியில் சொல்வதானால்) ஒரு அறிக்கையை பாக்தாதில் இருந்த ஆட்சியாளரான ஹாரூன் அர் ரஷீதுக்கு சமர்ப்பித்தார். “இங்கு ஒரு நாசகர சக்தி இருக்கிறார் ஐயா! அவர் உங்கள் அனுதாபியாக இல்லாமல் எதிரிகளின் அனுதாபியாக இருக்கிறார்” என்ற ரீதியில் அவ்வறிக்கை இருந்தது.

அதில் சொல்லப்பட்டிருந்த செய்தி இதுதான்: ‘இமாம் ஷாஃபியி மட்டுமல்ல, அவரோடு சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் அப்பாஸி அரசாங்கத்தின் அங்கம் போல நடந்து கொள்கின்றனர். ஆனால் அவர்கள் அப்பாஸி அரசாங்கத்தை எதிர்ப்பவர்களின் ஆதரவாளர்கள். அதாவது ஷியா அல்லது அலவி எதிர்ப்பியக்க ஆதரவாளர்கள். அதில் இருக்கும் முத்தலிபின் வழித்தோன்றல் ஒருவர் —அதாவது இமாம் அல் ஷாஃபியி— நாவன்மை மிக்கவர். வாள்களால் சாதிக்க முடியாததை தன் நாநயத்தால் சாதித்து விடுவார்.’ அதாவது ‘என்னால் இவரை கட்டுப்படுத்த முடியாது; நீங்களே இவரை கவனித்துக் கொள்ளுங்கள்’ என்ற ரீதியில் அந்த அப்பாஸி அடிவருடி பாக்தாதில் இருந்த மன்னர்/கலீஃபாவிடம் கூறினார். சிலர் கலீஃபா என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். எனினும் மன்னர்கள் விஷயத்தில் அப்படிச் சொல்வதை நான் விரும்பவில்லை.

அப்பாஸிகளை எதிர்த்த அலவிகள் மீது இமாம் அஷ் ஷாஃபியி அனுதாபம் கொண்டிருந்தார் என்ற விஷயத்தை அன்று அனைவரும் வெளிப்படையாகவே அறிந்திருந்தனர் என்றே கருதுகிறேன். எனினும் அவரையே அலவி என்றோ ஷியா என்றோ வகைப்படுத்தும் அளவுக்கு அந்த அனுதாபம் இருக்கவில்லை. குழப்பம் அடைய வேண்டாம். இயன்ற அளவு துல்லியமாகப் பேசவே நான் முயற்சிக்கிறேன். அப்பாஸிகளிடமிருந்து அலவிகளுக்கு அரசாங்கம் கைமாற வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது. அடிமனதில் அதைத்தான் அவர் விரும்பினார். எனவேதான் ‘ராஃபிதி’ என்று குற்றம் சாட்டப்பட்டார்.

‘ராஃபித்’ அல்லது ‘ரவாஃபித்’ என்ற பதங்களை அறிவீர்கள் என்று நினைக்கிறேன். அன்று இகழ்ச்சியாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் இவை. ‘ரவாஃபித்’ என்பது ‘நவாசித்’ என்பதன் எதிர்பதம் ஆகும். ஷியாக்களைக் குறிக்க ‘ரவாஃபித்’ என்றும் சன்னிகளைக் குறிக்க ‘நவாசித்’ என்ற பதமும் பயன்படுத்தப்பட்டது. இது குறித்து இமாம் அஷ் ஷாஃபியி கவித்துவமாகக் கூறிய ஒரு கூற்று உள்ளது: “கான ரஃப்தன் ஹுப்பு ஆலி முஹம்மதின் ஃபல் யஷ்ததித் ஃதகலானி அன்னி ராஃபிதுன்முஹம்மதின் உற்றார்கள் மீது அன்பு கொள்வதுதான் ‘ராஃபிதி’ என்றால் மனித வர்க்கமும் ஜின் வர்க்கமும் சாட்சி பகரட்டும், நான் ஒரு ‘ராஃபிதி’ என்று”.

அஷ் ஷாஃபியி விலங்கிடப்பட்டு நஜ்ரானிலிருந்து ஈராக்குக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னணி இதுதான். (இன்றைய மொழியில் சொல்வதானால்) அவர் கைது செய்யப்பட்டு பாக்தாதுக்குக் கொண்டு செல்லப்பட்டார். இது நடந்தது ஹி. 184-இல். அப்போது அவருடைய வயது 34. சமூகத்தில் முக்கியப் பிரமுகராக இருந்த ஷாஃபியி, ஹாரூன் அர் ரஷீத் முன் கொண்டு செல்லப்பட்டார். அப்போது ஹாரூன் அர் ரஷீத், “இக் குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் விளக்கம் என்ன?” என்று கேட்டார். சிக்கலான நிலையில் இருந்த அஷ் ஷாஃபியி பின் வருமாறு பதிலளித்தார்: “யா அமீருல் முஃமினீன் மா தகூலு ஃபி ரஜுலைன் அஹதுஹுமா யரானி அஃகா வல் ஆஃகரு யரானி அப்தஹு — முஃமீன்களின் தலைவரே, ஒருவர் என்னை தன் சகோதரராகக் கருதுகிறார்; மற்றொருவர் என்னை தன் அடிமையாகக் கருதுகிறார். இவர்களிருவருள் நான் யாரோடு நட்பாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?” இதற்கு அர் ரஷீத் “நிச்சயமாக உங்களை சகோதரராக நினைப்பவரோடுதான்” என்று பதிலளித்தார். இதற்கு அஷ் ஷாஃபியி, “ஃப தாக அன்த யா அமீருல் முஃமினீன் இன்னகும் உலீதுல் அப்பாஸ் — அதுதான் நானும் நீங்களும். நீங்கள் அப்பாஸின் வழித்தோன்றல். என்னை அடிமையாக நினைக்கும் அவர்களோ அலீயின் வழித்தோன்றல்கள். நீங்கள் எங்களை (முத்தலிப் கோத்திரத்தை) சகோதரர்களாகக் கருதுகிறீர்கள்” என்று பதிலளித்தார்.

அன்றைய சூழலில் அப்பாஸிகள் முத்தலிப்களை, அலவிகளுக்கு எதிராக, தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்தனர். எனவே ஷாஃபியி —மனதார அல்லாமல், வெறும் ஒரு உக்தியாக— இதை பயன்படுத்திக் கொண்டார். ஏனெனில் அன்று ஹாஷிம் கோத்திரம் முத்தலிப் கோத்திரத்தை விட உயர்வானதாகக் கருதப்பட்டது. எனவே அஷ் ஷாஃபியி கூறியதாவது, “அவர்கள் எங்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதுகின்றனர். ஆனால் நீங்கள் எங்களை உங்களின் அங்கமாகக் கருதுகின்றீர்கள்”.

எனினும் இந்த பதில் அர் ரஷீதை திருப்திப்படுத்தவில்லை. அஷ் ஷாஃபியி-இன் வாதங்களை ஏற்க மறுத்த அர் ரஷீத், முஹம்மது இப்னு ஹசன் அஷ் ஷீபானி என்ற பாக்தாதின் பெரிய நீதிபதி ஒருவரின் உதவியை நாடினார். “இந்த வழக்கில் எனக்கு உதவி புரியுங்கள். இவரை என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை” என்றார். ஷீபானியும் அஷ் ஷாஃபியி-யும் மதீனாவில் இமாம் மாலிக்கின் மாணவர்களாக இருந்தவர்கள்; ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்கள். எனவே அவர் அஷ் ஷாஃபியி-ஐ மாட்டி விடுபவராக இருக்கவில்லை. அவர் மன்னரிடம், ”அப்படி உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால், சந்தேகத்தின் பலனை அவருக்குக் கொடுத்துவிடுங்கள்” என்றார். இதை ஏற்றுக்கொண்ட அர் ரஷீத், “அப்படியெனில் நீங்களே இவரை கவனித்துக் கொள்ளுங்கள்” என்றார். இப்படியாக இமாம் அஷ் ஷாஃபியி மரண தண்டனையிலிருந்து தப்பினார். கொலை செய்யும் எண்ணத்தோடுதான் அவர் பாக்தாதுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

ஆனால் அவரோடு இருந்த மற்றவர்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லை. தேச நலனுக்கு அச்சுறுத்தல் என்று தாங்கள் கருதுபவர்களை அரசாங்கங்கள் என்ன செய்யுமோ அதைத்தான் அந்த அரசாங்கமும் செய்தது. அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இமாம் ஷாஃபியி-க்கு அதிகார வர்க்கத்தில் ஒரு நண்பர் இருந்தார்; பாசாங்கு செய்யாமல் சூழலைப் பொருத்து உக்திகளைக் கையாளவும் அவருக்குத் தெரிந்திருந்தது. இவற்றைக் கொண்டு தன் உயிருக்கு வந்த ஆபத்திலிருந்து அவர் தப்பினார்.

பாக்தாதில்

இப்படியாக இமாம் அஷ் ஷாஃபியி பாக்தாத் வந்தடைந்தார். நான் பார்த்த தகவல்களின் அடிப்படையில், அவர் அங்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தங்கினார் என்ற முடிவுக்கு வருகிறேன். அவர் பாக்தாதுக்குச் செல்வது இது முதல் முறை. பிற்காலத்திலும் அவர் அங்கு சில முறை சென்றார். அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கிய போது ஈராக்கில் இருந்த பகுத்தறிவுச் சிந்தனைப் பள்ளியின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அப்போது அவர் தன் கடந்தகாலத்தை விஞ்சி நிற்கத் துவங்கினார்.

இமாம் மாலிக்கின் வழிமுறை அவர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சர்ச்சைகளை, விவாதங்களை விரும்பாத இமாம் மாலிக்கின் வழிமுறைகள் பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம். ஆனால் இங்கு ஈராக்கின் மொத்தச் சூழலும், ஏதோ ஒரு கருத்துக்காக வாதிடுவதாகவே இருந்தது. நாம் ஏற்கனவே பார்த்த வரலாறுகளை நினைவில் மீட்க வேண்டுகிறேன். ஹிஜாஸைப் போலல்லாமல், ஈராக்கில் அல் முஃதசிலா, இல்முல் கலாம், பல்வேறு சிந்தனைப் பிரிவுகள், பல்வேறு அரசியல் போக்குகள் என எல்லாமே இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்காக வாதிடுவது; குர்ஆன் வசனங்களை, நபிமொழிகளை மேற்கோள் காட்டுவது போன்றவற்றுக்கு இமாம் அஷ் ஷாஃபியி அறிமுகமானார். இக்கணத்தில் அவர், அல் இமாம் மாலிக்கிடமிருந்தும் விலகிய, ஈராக்கின் அறிவுச் சூழலலோடும் முழுவதுமாக உடன்படாத ஒரு நிலையை எடுக்கத் துவங்கினார்.

அவர் சில நூல்களை இயற்றினார். அவற்றில் ஒன்று ஃகிலாஃப் மாலிக் — ‘மாலிக்கிடமிருந்து கருத்து வேறுபடுதல்’; மற்றொன்று ஃகிலாஃப் அல் ஈராக்கிய்யீன் — ‘ஈராக்கியர்களிடமிருந்து கருத்து வேறுபடுதல்’. இந்நூல்களில் அவர் ஒரு சுயாதீன அறிவுசார் பண்பை வெளிப்படுத்தத் துவங்கினார். ‘சட்டவியலுக்கான விதிமுறைகள்’ (உசூல் அல் ஃபிக்ஹ்) என்பதன் நிறுவனர் இமாம் அஷ் ஷாஃபியிதான் என்று பெரும்பாலான வரலாற்று நூல்கள் கூறுகின்றன. உசூல் அல் ஃபிக்ஹ் என்ற பதம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் கவாயித் அல் இஸ்திபாத் (சட்ட விரிவாக்கலின் அடிப்படை) என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் பாக்தாதில் இருந்த பிறகு இமாம் ஷாஃபியி மீண்டும் மக்கா திரும்பினார். அங்கு ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் தங்கினார். இந்த முறை அவர் ஒரு அறிஞராக திரும்பி வந்தார். அன்றைய முஸ்லிம் பகுதிகளுக்கு மத்தியில், மக்கா ஒரு காந்த பூமியாகத் திகழ்ந்தது. மக்கள் மக்காவை நோக்கிச் சென்ற வண்ணம் இருந்தனர். அது ஒரு திறந்த நகரமாக இருந்தது. இன்று போல விசா விண்ணப்பித்து, யாரோ அனுமதி வழங்கிய பிறகுதான் செல்ல முடியும் என்ற நிலைமை அன்று இல்லை. இன்று, ஒன்றல்ல பல அனுமதிகளைப் பெற வேண்டியுள்ளது. முதலில் உங்கள் நாடு அனுமதிக்க வேண்டும்; பிறகு சவூதி அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்; அதன் பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்; உம்ராவுக்குச் சென்றால் ஒரு சில வாரங்கள் மட்டுமே தங்க முடியும். மக்கா என்றுமே இப்படி இருந்ததில்லை. இதுவரையுள்ள பெரும்பாலான காலங்களில் மக்காவுக்குச் செல்வதற்கும் அங்கு தங்குவதற்கும் எத்தகைய கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை.

இப்போது மக்காவில் ஒரு அறிஞராக இருந்த இமாம் ஷாஃபியி-ஐக் காண முஸ்லிம் உலகின் எல்லா பகுதிகளிலிருந்தும் பிற சிறிய அறிஞர்கள் வந்தனர். இப்படி அவரை சந்தித்தவர்களுள் —பின்னர் பெரும் இஸ்லாமிய அறிஞராகவிருந்த— அல் இமாம் அஹ்மது இப்னு ஹம்பலும் ஒருவர். இறைவன் நாடினால், அவரைப் பற்றி பின்னர் பார்ப்போம். அதேபோல இமாம் ஷாஃபியி-ன் தாக்கத்துக்கு உள்ளான மற்றொருவர், இஸ்ஹாக் இப்னு ராஹவை.

ஹி. 195-ல் இமாம் ஷாஃபியி மீண்டும் —இரண்டாவது முறையாக— பாக்தாத் சென்றார். அப்போதுதான் அவர் பல சிறப்பான அறிவுசார் நூல்களை இயற்றினார். பல ஒப்பந்தங்களையும் சான்றாதார நூல்களையும் இயற்றினார். அவர் இயற்றிய பிரதான சான்றாதார நூல்களை அல் குதுப் அல் பாக்தாதியா (பாக்தாதிய புத்தகங்கள்) என்ற பெயரில் வழங்கினார். இவற்றுள் மிகப் பிரபலமானது ‘அல் உம்’ ஆகும். ‘அல் உம்’ என்றால் தாய் என்று பொருள். ஆனால் இங்கு ‘மேற்கோள்’ என்ற பொருளைப் பெறுகிறது. இது சட்டவியலோடு சம்பந்தப்பட்ட கிளைப் பிரச்சனைகள் (அல் ஃபுரூஆஹ்) பற்றிய விரிவான நூல் ஆகும். மற்றொரு முக்கியமான நூல், அர் ரிசாலாஹ். இது சட்டவியலின் விதிகள் (உசூல் அல் ஃபிக்ஹ் அல்லது கவாயித் அல் இஸ்திபாத்) பற்றியது ஆகும்.

இந்த முறையும் அவர் இரண்டு ஆண்டுகள் பாக்தாதில் தங்கினார். முதல் முறை விருப்பமின்றி அங்கு சென்றார் என்று பார்த்தோம். இந்த முறை விருப்பத்துடன் தங்கினார். பின்னர் மீண்டும் மக்கா திரும்பினார். பிறகு மீண்டும் ஹி. 198 இல் பாக்தாத் சென்றார். அதிகம் பயணம் செய்பவராக இவரைப் பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு ஆண்டு கூட தங்காமல் திடீரென —ஹி. 199 இல்— எகிப்துக்குச் சென்றார். ‘இமாம் ஷாஃபியி, பாக்தாதை விட்டு எகிப்துக்கு ஏன் சென்றார்?’ என்ற கேள்வி எழுகிறது.

எகிப்துக்கு

இதற்கு விடையளிக்க முற்பட்டவர்கள், பின் வருமாறு விளக்கம் அளிக்கின்றனர். ஹி. 198 இல் பாக்தாதில் புதிய அரசு நிர்வாகம் ஏற்பட்டது. ஹாரூன் அர் ரஷீதுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்: அல் அமீன் மற்றும் அல் மஃமூன். இவர்களுக்கு மத்தியில் போட்டி நிலவியது. அல் அமீன் அரபு தாய்க்கும், அல் மஃமூன் பாரசீக தாய்க்கும் பிறந்தவர்கள். இதனாலேயே பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் அன்றைய ஈராக் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நிகழ்ந்த சம்பவங்களின் சூழமைவில், பாரசீகப் பின்னணி கொண்ட முஸ்லிம்களின் புரிதல், அரபுப் பின்னணி கொண்ட முஸ்லிம்களின் புரிதலில் இருந்து வேறுபட்டு இருந்தது. ஆட்சி நிர்வாகத்தை நடத்துவது குறித்த இவ்விரு சகோதரர்களின் அணுகுமுறையில் இது வெளிப்பட்டது. இப்போட்டியில் அல் அமீன் தோல்வியுற்று அல் மஃமூன் ஆட்சியாளர் ஆனார்.

இது நடக்கும் போது அஷ் ஷாஃபியி பாக்தாதில் இருந்தார். இஸ்லாமியப் புலமையின் அரபுப் புரிதலுக்கு இசைவற்ற ஒரு நிர்வாகம் பாக்தாதை ஆளப் போகிறது என்பதை உணர்ந்த ஷாஃபியி, அங்கிருந்து எகிப்துக்குச் சென்றார். இதில் தேசியவாதம் எதுவும் இல்லை. பாரசீகர்கள் எதிர் அரபுகள் என்ற கோணத்தில் இதை அணுகக் கூடாது. இது முற்றிலும் அறிவுசார் சிந்தனைப் பள்ளிகள் சார்ந்தது. பாரசீக தளத்தில் பகுத்தறிவுவாதம், அல் முஃதசிலா, இல்முல் குர்ஆன், மெய்யியல் போன்றவற்றுக்கு தீவிர ஆதரவு இருந்தது. அரபு தளத்தில் நபிமொழி, அர் ருஆத், இஸ்லாத்தின் வரலாறு போன்றவற்றுக்கு ஆதரவு இருந்தது. எனவே தன் சிந்தனைப் பாங்குக்கு எதிர் திசையில் செல்லக்கூடிய ஒரு நிர்வாகம் வருவதை உணர்ந்த ஷாஃபியி, பாக்தாதை விட்டு வெளியேறினார்.

அவர் ஏமனுக்கோ, அரேபியா அல்லது ஷாமுக்கோ செல்லாமல் எகிப்துக்குச் சென்றதற்கான காரணம், அன்றைய சூழலில் எகிப்து மற்றொரு நாகரீக மையமாகத் திகழ்ந்தது. புவிசார் சூழலிலும் மக்கள் வளத்திலும், எகிப்தும் ஈராக்கும் முக்கிய இடம் பிடித்தன. எனவேதான் அவர் அங்கு சென்றார்.

இமாம் அஷ் ஷாஃபியி பிரதானமாக, இமாம் மாலிக்கின் மாணவராக இருந்தார் என்று பார்த்தோம். மெய்யியல் குறித்து இமாம் மாலிக் கொண்டிருந்த கருத்தையும் ஏற்கனவே பார்த்தோம். அன்று எழுந்த பிரச்சனைகளுள் ஒன்று, ‘பரிசுத்தமான அல்லாஹ் அரியணையில் அமைந்தான்’ (சும்மஸ்தவா அலல் அர்ஷ்) என்ற குர்ஆன் வசனத்துக்கு விளக்கம் அளிப்பது தொடர்பானதாக இருந்தது. அக்காலத்தில் நிகழ்ந்த ஒட்டுமொத்த வாதப்பிரதிவாதங்களையும் இப்பிரச்சனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது போன்ற விஷயங்கள்தான் பல்வேறு சிந்தனைகள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தன. வாக்குவாதங்கள் புரிவதை இமாம் மாலிக் விரும்பாதவர் என்று அறிவோம். அவர் கூறியதாவது “‘இஸ்தவா’ என்பதன் பொருளை நாம் அறிவோம். ‘அர்ஷ் என்பதன் பொருளையும் அறிவோம். ஆனால் அல்லாஹ்வின் விஷயத்தில் இவை எப்படி பொருந்தும் என்பதை நாம் அறியமாட்டோம். இதோடு இதை முடித்துக் கொள்வோம். இதில் வாக்குவாதங்கள் புரிவதற்கு என்ன இருக்கிறது?”. இமாம் ஷாஃபியி-ன் சிந்தனை உருவாகுவதில், இத்தகைய விளக்கங்கள் செல்வாக்கு செலுத்தின. தான் சாராத ஒரு சிந்தனைப் பரிமாணத்தை நோக்கி, ஈராக்கிய முஸ்லிம் உலகம் நகர்வதை உணர்ந்த அவர், அங்கிருந்து கிளம்பிவிட்டார். மேலும் குர்ஆனின் படைப்புத் தன்மை (ஃகல்குல் குர்ஆன்) போன்ற பிரச்சனைகளும் அன்று எழுந்தன. இமாம் அஹ்மது இப்னு ஹம்பலைப் பற்றிப் பார்க்கும் போது இது குறித்து விரிவாகப் பேசுவோம்.

அல் மஃமூன், இமாம் ஷாஃபியி-க்கு நீதிபதிப் பதவி வழங்கினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இமாம் ஷாஃபியி அதை நிராகரித்துவிட்டார். அன்று இது வழக்கமான நடைமுறையாக இருந்தது. அரசாங்கத்தோடு முரண்பட்ட அறிஞர்களுக்கு நீதித் துறையில் பதவிகள் வழங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அரசாங்கத்தின் நீதித் துறையில் அவர்கள் ஒருவிதத்தில் உள்ளிழுக்கப்பட்டனர். அஷ் ஷீபானி, அபூ யூசுஃப் (அபூ ஹனீஃபாவின் மாணவர்) போன்றோர் விஷயத்திலும் இது நடந்தது.

இமாம் ஷாஃபியி எகிப்துக்குச் சென்ற போது அங்கு அப்துல்லாஹ் இப்னு அப்பாஸின் கொள்ளுப் பேரர் ஆளுனராக இருந்தார். அவருடைய பெயர் அல் அப்பாஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு அல் அப்பாஸ் இப்னு மூசா இப்னு அப்தில்லா இப்னு அப்பாஸ். இமாம் அஷ் ஷாஃபியி எகிப்தில் தங்கியிருப்பதை அறிந்த அவர், அவருக்குரிய ‘சஹ்ம்’ பங்கை —உமவிகளுக்கும் அப்பாஸிகளுக்கும் இடையே நடந்த மோதல்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பங்கு— மீண்டும் வழங்கி ஆதரித்தார். ஆக எகிப்தில் இமாம் ஷாஃபியி, ‘அதிகாரப்பூர்வ எதிர்ப்பு இல்லை’ என்ற அளவில் நிம்மதியாக இருந்தார்.

மறைவு

அவர் எகிப்தில் இருந்த போது ஹி. 204, ரஜப் மாத கடைசியில் மரணமடைந்தார். அப்போது அவருடைய வயது 54. அவர் எப்படி இறந்தார்? அவருடைய மரணம் குறித்து பல விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. வரலாற்று நூல்களில் ஏன் இப்படி பல கோணங்கள் உள்ளன என்று நான் அறியேன். எனினும் நேர்மை கருதி என் கண்ணில் படுவதை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். நோய் காரணமாக படுக்கையில் இருந்து உயிரிழந்தார் என்கிறது ஒரு கோணம் (மாத மஅரிலா ஃபி ஃபிராஷியி).

மற்றொரு கோணத்தின்படி, யாரோ ஒருவர் அவரை தலையில் தாக்கியதன் காரணமாக ஏற்பட்ட காயத்தால் அவர் உயிரழந்தார். எகிப்தில் ஒரு அறிஞராக இருந்த அவர், திறந்தநிலை வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்தார். அதில் யார் வேண்டுமானாலும் வந்து கலந்து கொள்ளலாம். அப்போது, சுதந்திரம் பெறாத ஒருவர் சுதந்திரம் பெற்ற பின் —அடிமை என்ற பதத்தை பயன்படுத்த நான் விரும்பவில்லை என்றாலும் சிலருக்கு அப்படிச் சொல்வது புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்— அவரை வாங்கவோ விற்கவோ முடியுமா? என்ற வாதம் எழுந்தது. அப்போது ஒருவர் பதட்டமடைந்து இமாம் ஷாஃபியி-ஐ தடியால் மிரட்டத் துவங்கினார். அறிவில் ஊறிய இமாம் ஷாஃபியி, உணர்ச்சிவசப்படாமல் சாந்தமாக இருந்தார். ஆனால் அம்மனிதர் அவரை தடியால் தலையில் தாக்கிவிட்டார். அதன் பிறகு சில தினங்களில் இமாம் ஷாஃபியி உயிரிழந்தார் என்பது மற்றொரு கோணம்.

மற்றொரு விளக்கத்தின்படி அவருக்கு மூல நோய் (பவாஸ்ஸீர்) ஏற்பட்டு அது வெடித்ததன் காரணமாக இறந்தார்.

பண்பும் சிந்தனையும்

மக்காவில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் மற்றும் மதீனாவில் அல் இமாம் மாலிக் ஆகியோரின் சிந்தனைப் பள்ளிகள் இமாம் ஷாஃபியி-ன் சிந்தனை மீது செல்வாக்கு செலுத்தின. அவருடைய நினைவுத்திறன் மிகக் கூர்மையாக இருந்தது. அவர் கூர்மதி கொண்டவராகவும் மொழித்திறன் மிக்கவராகவும் இருந்தார். அவருடைய நாவில் வார்த்தைகள் சரளமாக நடனமாடின. அவருடைய மொழிநடை காத்திரமாக இருந்தது. அவருடைய சில மாணவர்கள் அவரைப் பற்றி இவ்வாறு கூறினர்: “தன் நூல்களை விஞ்சிய ஒரு அறிஞரை நான் பார்த்ததில்லை. எப்போதும் ஒரு அறிஞரின் ஆளுமையை விட அவருடைய நூல்கள்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது ஒரு நூலைப் படித்துவிட்டு அதை எழுதிய அறிஞரைப் பார்த்தால் அவரைவிட அவருடைய  எழுத்தாக்கங்கள்தான் மனதில் ஆழப் பதிந்திருக்கும். ஆனால் அஷ் ஷாஃபியி விஷயத்தில் அப்படியல்ல. நான் அவருடைய நூல்களைப் படித்துள்ளேன். அவரையும் பார்த்துள்ளேன். அவருடைய அறிவுசார் ஆக்கங்களைவிட அவருடைய ஆளுமைதான் என் மீது அதிகம் தாக்கம் செலுத்தியது.”

அறிஞர்களிலேயே பேச்சுத்திறன் மிக்கவர் இமாம் அஷ் ஷாஃபியிதான் என்று மற்றொரு மாணவரான ஹாக்கிம் அர் ராஹவை கூறுகிறார். இமாம் அஷ் ஷாஃபியி குறித்து அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் கூறும் கருத்துக்கள் இவை. பெரும்பாலான அறிஞர்களைப் போல இமாம் ஷாஃபியி-யும் நுண்ணறிவு கொண்டவராக இருந்தார்.

இமாம் அஷ் ஷாஃபியி-இன் சில கூற்றுகள் பின்வருமாறு: “இமாமுன் அஹதுன் இல்லா வ தத்ஹபு அன்ஹு சுன்னதுன் பி ரசூலில்லாஹ் (ஸல்). —இறைத்தூதரின் நடத்தை அல்லது சுன்னத்களை எல்லா நேரத்திலும் முற்றிலும் கவனமாக, பிசகாமல் கடைபிடிக்கும் மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. எனவே இறைத்தூதரைக் குறிப்பிட்டு நான் கூறிய அல்லது அடைந்த சட்டங்கள் ஒருபுறம் இருக்க, நீங்கள் புதிதாக வேறு சட்டங்களைக் கண்டறிந்தால் நான் சொன்னதை விட்டுவிட்டு இறைத்தூதர் சொன்ன அசலானதை எடுத்துக் கொள்ளுங்கள். நான் சொன்னவற்றைவிட சரிகாணப்பட்ட இறைத்தூதருடைய அசல் கூற்றுகள்தான் முதலிடம் பெறும்”. மேலும், பணிவுடன் அவர் இவ்வாறு கூறினார்: “மக்கள் அறிவை, சத்தியத்தைக் கற்றுக் கொண்டு அவற்றை என்னோடு தொடர்புபடுத்தாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் அத்தகைய கற்றல்களை என்னோடு தொடர்பு படுத்தாதீர்கள். இதன் மூலம் நானும் நன்மைகளை அடைவேன். மக்களும் தங்கள் நடத்தைகளுக்காக போற்றப்படுவர்.”

மெய்யியல் குறித்து 

இமாம் அஷ் ஷாஃபியி-இன் காலத்தில்தான் பல்வேறு சிந்தனைகள் நுரைத்தெழுந்தன; பல்வகை அறிவுசார் செயல்பாடுகள் நிகழ்ந்தன. அப்போதுதான் ‘மெய்யியல்’ என்ற பதம், இஸ்லாமிய தளத்தில் பிரிவினை ஏற்படுத்தும் சொல்லாக மாறியது. முஃதசிலாக்கள் மேலெழுந்து கொண்டிருந்தனர். இஸ்லாமிய இலக்கியத்தில் பரிசுத்தமான அல்லாஹ்வைக் குறித்துப் பேசும் போது, அவனுடைய சுயம் (அல் தாத்) மற்றும் அவனுடைய பண்புகள் (அல் சிஃபாத்) என பிரித்தறியப்படுபவற்றுள் அவற்றுக்கிடையேயான தொடர்புகள் என்ன? அவை இரண்டும் தனித்தனியாவையா? அல்லது இரண்டுமே ஒன்றுதானா? போன்ற கேள்விகள் எழுந்தன. குர்ஆன் படைக்கப்பட்டதா? என்ற கேள்வி, விதி (கதர்), மனிதனின் சுயவிருப்பத் தீர்மானம், எதுவரை மனித சித்தம்? எது அதற்கு அப்பாற்பட்டது? போன்ற கேள்விகள் எழுந்தன. அரசியல் களத்தில் அப்பாஸிகள், கவாரிஜ்கள், ஷியாக்கள் தோன்றினர். ஆக இமாம் ஷாஃபியி போன்ற ஆளுமைகளை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான சிறந்த வழி, அவர்கள் வாழ்ந்த சூழலை கருத்தில் கொள்வதே ஆகும்.

இந்நிகழ்வுகளின் போது இமாம் அஷ் ஷாஃபியி-ன் நிலைப்பாடு என்னவாக இருந்தது? நடந்தவற்றை அவர் கவனித்துக் கொண்டிருந்தார்; நன்கு புரிந்து வைத்திருந்தார். அதுபற்றி ஒரு அறிவுசார் விவாதம் என வந்தபோது, அவருடைய கருத்து ‘அதைத் தவிர்த்து விடுங்கள்’ என்பதாகவே இருந்தது. இவ்விஷயங்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்பவர்களுக்கு அவருடைய பதில் அதுவாகத்தான் இருந்தது.

இது முக்கியமான விஷயம் என்பதால் அவரையே மேற்கோள் காட்டிவிடுகிறேன். அன்று அவருடைய காலத்தில் உயிர்ப்புடன் இருந்த இவ்விஷயங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் என்ன கூறினார் என்று பார்ப்போம்: “இய்யாகும் வந்நளர் ஃபில் கலாம் ஃப இன்னர் ரஜுல லவ் சுயில அன் மஸ்அல ஃபில் ஃபிக்ஹி ஃப அக்த ஃபீஹா கான அக்தர ஷைஅ அன் யுவ்ஹக மின்ஹு லவ் சுயில அன் ரஜுல கதல ரஜுலன் ஃப காலஹு பி யத்ஹு பைதா வலவ் சுயில அன் மஸ்அல ஃபில் கலாம் ல நுசிப” –  எல்லாவற்றையும் தத்துவ ரீதியில் அணுக வேண்டாம் என எச்சரிக்கிறேன்”, என்றார் அவர். அதற்கு ஒரு உதாரணம் கூறினார். “சட்டவியல் சார்ந்த விஷயங்களில் ஒருவர் தவறு செய்தால், அதிகபட்சம் ஒரு நகைப்புடன் அதை புறந்தள்ளிவிடலாம். உதாரணமாக, ‘ஒரு கொலைகாரன் செய்த கொலைக்கு எவ்வளவு ஈட்டுப் பணம் பெற வேண்டும்?’ என்ற கேள்விக்கு ‘ஒரு முட்டை’ என்று யாராவது பதிலளித்தால், ‘இது முட்டாள்தனம்’ என்று சொல்லி அதைப் புறந்தள்ளிவிடலாம். ஆனால் தத்துவ ரீதியான விஷயங்களில், கேள்வி கேட்டு அதில் தவறிழைத்தால், அது நிராகரிப்புக்கு அருகில் சென்றுவிடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே நீங்கள் எழுப்பும் வாதங்கள் அல்லது கருதுகோள்களால், அதை மறுப்பவர்கள் நிராகரிப்பாளர்களாக மாறிவிடும் அளவுக்கு உங்கள் வாதங்களை இழுத்துச் செல்லாதீர்கள்” என்று அவர் கூறினார். அன்று எழுப்பப்பட்ட, ‘குர்ஆன் படைக்கப்பட்டதா?’ போன்ற கேள்விகளுக்கு எப்படி பதிலளித்தாலும் நிராகரிப்பை தொட்டுவிடும் அபாயம் இருந்தது.

இது போன்ற தத்துவ விவாதங்களில் ஈடுபட்டிருந்த தன் மாணவர்கள் சிலரைக் கண்ட இமாம் ஷாஃபியி இவ்வாறு கூறினார்: “இவ்விஷயங்களை நான் அறியாதவன் என்று நினைக்கிறீர்களா? இதுகுறித்து நான் ஆழமாகச் சென்று சிந்தித்திருக்கிறேன். இது போன்ற தத்துவ விவாதங்கள் குறிக்கோளற்றவை. பிற விஷயங்களில் தவறிழைத்தால் ‘நீங்கள் தவறிழைத்துவிட்டீர்கள்’ என்று மட்டும்தான் சொல்லப்படும். ஆனால் நீங்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் இது போன்ற விஷயங்களில் தவறிழைத்தால், ‘நீங்கள் நிராகரிப்பவர்’ என்று சொல்லப்படும்.” “நீங்கள் முஸ்லிம் அல்ல” என்று சொல்லும் அளவுக்கு ஒரு வாதம் நீள்கிறது எனில், முஸ்லிம்கள் அதில் சிக்கிவிடாமல் இருப்பதற்கு, அதை முற்றிலும் தவிர்த்துவிடுவதே அவரது தீர்வாக இருந்தது.

இது போன்ற பல விவாதங்கள் அன்று நிலவின. மறுமை நாளில் அல்லாஹ்வை பார்ப்பது (ரூபிய்யத்), இறைவனின் சாரம் (அல் தாத்), இறைவனின் பண்புகள் (அல் சிஃபாத்), விதி (அல் கதர்) போன்ற விஷயங்களைச் சுட்டிக்காட்டி, இவற்றுக்கான விடையை குர்ஆனிலும் இறைத்தூதரிடமும் மட்டுமே தேட வேண்டும் என்று இமாம் ஷாஃபியி கூறினார். அன்றைய காலத்தில் பிளவு உண்டாக்கும் விஷயங்களுள் ஒன்று நம்பிக்கை (ஈமான்) பற்றியதாக இருந்தது. இதில் இமாம் ஷாஃபியி, ‘நம்பிக்கை என்பது ஏற்ற-இறக்கம் காணும் தன்மை உடையது’ என்றார்.

அரசியல்

அரசியல் களத்தில் முஸ்லிம்களின் தலைமை (அல் இமாமத்) குறித்த பிரச்சனையும் அன்று இருந்தது. அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிரான ஷியாக்களின் எதிர்ப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தன. இதில் இமாம் ஷாஃபியி-இன் நிலைப்பாடு என்னவாக இருந்தது? இதற்கு மூன்று பதில்கள் உள்ளன. முதலாவதாக, இஸ்லாமிய மார்க்கத்துக்கு தலைமை அவசியம் தேவை என்று ஷாஃபியி கருதினார். “நம்பிக்கையாளர்கள் எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படுவதற்கு ஒரு தலைவர் தேவை. மேலும் நம்பிக்கையாளர்களின் எதிரிகளை அரசியல் மற்றும் சமூக தளத்தில் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு தலைவர் தேவை.” என்று அவர் கூறினார். மேலும் இதற்கு ஆதாரமாக இமாம் அலீயை மேற்கோள் காட்டினார்: “ஹத்தா யஸ்தரிஹா தர்ருன் வ யுஸ்தராஹ மின் ஃபாஜிர்”.

அன்று ஷியா அல்லாத பிற அறிஞர்கள் பெரும்பாலோர், ‘தலைமைப் பொறுப்பு, குறைஷி குலத்துக்கு உரியது’ என்றனர். இமாம் ஷாஃபியி இதை ஏற்றுக் கொள்ளவில்லை. நீதியின் அடிப்படையில் அல்லாத தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. நீதி மிக்க குறைஷி ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. மாறாக நீதியின் அடிப்படையில் அல்லாத குறைஷி ஒருவர், அவர் குறைஷி என்பதாலேயே தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதை இமாம் ஷாஃபியி ஏற்றுக் கொள்ளவில்லை. தலைமைப் பொறுப்பு குறித்து இமாம் ஷாஃபியி கொண்டிருந்த இரண்டாவது கருத்து இது. இதற்கு ஆதாரமாக நபிமொழி ஒன்றை அவர் மேற்கோள் காட்டினார்.

அன்தும் அவ்லா பி ஹாதல் அம்ர் மா குன்தும் அலல் ஹக் இல்லா அன் தஹ்ததினு அன்ஹு” – குறைஷிகளைப் பார்த்து இறைத்தூதர் கூறுவதாவது, “சத்தியத்தை தாங்கிப் பிடிக்கும் வரையில் தலைமைப் பொறுப்பு உங்களுக்கு உரியது. அதிலிருந்து வழிதவறினால், அது உங்களுக்கு உரியது அல்ல”.

அன்று நிலவிய மற்றொரு பிரச்சனை, ஆட்சியாளருக்கு செய்யப்படும் பற்றுறுதி (பைஅத்) தொடர்பானது. ஒரு ஆட்சியாளர் பதவிக்கு வந்த பிறகு, அதிகாரத்தைக் கொண்டு பெறப்படும் பற்றுறுதி செல்லுபடியாகுமா? அல்லது அவர் ஆட்சியாளர் ஆவதற்கு முன்னரே பற்றுறுதி பெறப்பட வேண்டுமா? இதற்கு இமாம் ஷாஃபியி-ன் பதில் பின்வருமாறு இருந்தது: ‘தலைமைப் பதவி ஏற்பவருடைய நீதத் தன்மையைப் பொறுத்துத்தான் அவர் பெறும் பற்றுறுதி செல்லுபடியாகுமா ஆகாதா என்பது தீர்மானிக்கப்படும்’. ஆக தலைமைப் பொறுப்பு குறித்து கேட்கப்படும் கேள்விகள் எல்லாவற்றுக்கும் அவருடைய பதில் நீதியைத் தழுவியதாகவே இருந்தது. முஸ்லிம்களை வழிநடத்த விரும்புபவரின் நீதத் தன்மையை (அல் அதாலத்) கவனிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இறைத்தூதருக்குப் பிந்திய இஸ்லாமிய வரலாறு குறித்து இமாம் ஷாஃபியி-இன் கருத்து என்னவாக இருந்தது? அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலீ குறித்து அவருடைய பார்வை என்ன? முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பை அபூ பக்கர் ஏற்றதை இமாம் ஷாஃபியி சட்டப்படியானது என்று கருதினார். அதே போல உமர், உஸ்மான் மற்றும் அலீ ஆகியோரின் தலைமையையும் சட்டப்படியானது என்று அவர் கருதினார். இந்த வரலாறில் அவர் எந்தப் பிரச்சனையையும் காணவில்லை.

மேலும், அவர் உமவி ஆட்சியாளர்களையும் அப்பாஸி ஆட்சியாளர்களையும் —உமர் இப்னு அப்துல் அஸீசைத் தவிர்த்து— கலீஃபாக்களாகக் கருதவில்லை. இமாம் ஷாஃபியி-ஐப் பொருத்தவரை, இறைத்தூதருக்குப் பிறகு ஐந்து கலீஃபாக்கள் இருந்தனர். இன்று நம் காலத்தில், இப்படிச் சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா?!

அலவி பற்று

உமவி மற்றும் அப்பாஸிகளுக்கு எதிரான அலவி எதிர்ப்பின் மீதும் இமாம் அலீ மீதும் இமாம் ஷாஃபியி மிக ஆழமான அன்பும், நீடித்த நாட்டமும் கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. அவரது வாழ்வைப் படிக்கும் எவரும், இது அவருடைய பண்புகளில் ஒன்று என்பதை அறிந்து கொள்வார் என்றே நினைக்கிறேன்.

ஒரு முறை ஒரு நபர் இமாம் ஷாஃபியி-யிடம் வந்து இமாம் அலீ குறித்து இவ்வாறு கூறினார்: “மக்கள் இமாம் அலீ மீது பெரிதாக ஆர்வம் காட்டாததற்குக் காரணம், அவர் யாரையும் பொருட்படுத்துவதில்லை; யார் குறித்தும் அவர் பெரிதாக அக்கறை கொள்வதில்லை”.

இதற்கு இமாம் ஷாஃபியி இவ்வாறு பதிலளித்தார்: “இமாம் அலீ நான்கு பண்புகளைக் கொண்டிருந்தார். அவற்றிலிருந்து ஏதாவது ஒன்றையேனும் வேறொருவர் பெற்றிருந்தால், அவரும் அப்படித்தான் அக்கறையின்றி இருப்பார்.

“முதலாவதாக, இமாம் அலீ ஒரு ‘ஸாஹித்’ (உலக நாட்டமில்லாத, உலகப் பொருட்கள் மீது பற்றற்றவர்). இத்தகைய பண்பைப் பெற்றிருக்கும் ஒருவர் எப்படி இருப்பார் என்று நினைக்கிறீர்கள்? ஒவ்வொருவர் சொல்வதையும் செய்வதையும் இமாம் அலீ கேட்டுக் கொண்டு வெவ்வேறு திசைகளில் செல்வதாக இருந்தால் அவர் தலைவராக இருக்க முடியாது.

அடுத்து, இமாம் அலீ ஒரு அறிஞராக இருந்தார். அறிவு ஞானத்தைப் பெற்ற ஒருவர், தான் பெற்ற அறிவுக்கு உண்மையாக இருக்க வேண்டும். மக்கள் மாற்றுக் கருத்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக தான் பெற்றிருக்கும் சத்தியத்தை சமரசம் செய்துகொள்ள முடியுமா என்ன?

மூன்றாவதாக, இமாம் அலீ வீரம் மிக்கவராக இருந்தார். வீரம் செறிந்த ஒருவர் என்னதான் பிரச்சனை என்றாலும் அதற்கு அடிபணிய மாட்டார். கடைசியாக அவர் கண்ணியமானவராக இருந்தார். கண்ணியமான ஒருவர் பிறரின் தடுமாற்றங்களுக்கும் அவர்களுடைய ஏறுமாறான கருத்துக்களுக்கும் சரணடைய மாட்டார்.”

சராசரி மனிதர்களின் கருத்துகளுக்கு இமாம் அலீ இன்னும் அதிகம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று சொன்னவரிடம், இமாம் அலீயின் உன்னதமான பண்புகளை ஆதரித்து இமாம் ஷாஃபியி இவ்வாறு பேசினார். ஒவ்வொரு சராசரி மனிதனின் கருத்துக்கும் பதிலளிப்பதாக இருந்தால், அவர்கள் போகிற போக்கில் தலைவரும் போக நேரிடும். இமாம் அலீ அத்தகையவர் அல்ல.

அடுத்து, இமாம் அலீக்கும் முஆவியாவுக்கும் இடையேயான பிரச்சனை, கருத்துவேறுபாடு குறித்து இமாம் ஷாஃபியி இவ்வாறு கூறினார்: “அலீ சத்தியத்தின் பக்கம் இருந்தார்; முஆவியா சத்தியத்தின் பக்கம் இல்லை”. இன்னும் ஒரு படி சென்று “முஆவியா ஒரு வம்புச் சண்டைக்காரர், குற்றவாளி” என்றும் அவர் கூறினார். இதை ஒரு அரசியல் அறிக்கையாகக் கருதுகிறேன். இதிலிருந்து அவருடைய அரசியல் சிந்தனை மயக்கமின்றி தெளிவாகத் தெரிகிறது. இன்றைய உலகை எடுத்துக் கொள்ளுங்கள், குறிப்பாக ஷாஃபியி சிந்தனையை பின்பற்றுபவர்களை. இந்தச் செய்திகளெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா?

மேலும் ஃகவாரிஜ்களைப் பொருத்தவரை, அவர்கள் இமாம் அலீக்கு எதிராக வம்புச் சண்டை புரிந்தவர்கள் என்று இமாம் ஷாஃபியி கருதினார். இத்தகைய வம்புச் சண்டை புரிபவர்கள் மற்றும் குற்றவாளிகள் (பன்மை: ‘அல் புஃகாத்’, ஒருமை: ‘அல் பாஃகி’) குறித்து இமாம் ஷாஃபியி-இன் தீர்ப்புகளைப் படித்தால், அது இமாம் அலீ தன் எதிர்ப்பாளர்களை எப்படி நடத்தினாரோ அதேபோல அச்சு அசலாக இருப்பதைக் காண முடியும்.

ஒருமுறை ஒருவர் இமாம் அஹ்மது இப்னு ஹம்பலிடம் வந்து இப்படிக் கூறினார்: “ஷாஃபியி ஒரு ஷியா என்று உங்களுக்குத் தெரியுமா? வம்புச் சண்டைக்காரர்கள் (அல் புஃகா) விஷயத்தில் அவர் அளித்த தீர்ப்புகளைப் பாருங்கள். இமாம் அலீயின் நிலையை அப்படியே பின்பற்றியுள்ளார்”. இதற்குப் பதிலளித்த இப்னு ஹம்பல் கூறியதாவது, “இவ்விஷயத்தில் இமாம் அலீ அல்லாமல் வேறு யாரை பின்பற்றவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? வம்புச் சண்டைக்காரர்களை எப்படி அணுக வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கான மூல ஆதாரமே இமாம் அலீதான்”.

சட்டவியல்

இமாம் ஷாஃபியி-ன் சட்டவியலைப் பொருத்தவரை, பிற சட்டவியல்களைப் போலவே இதிலும் இறைவேதம், நபிவழி ஆகியவை சான்றாதாரங்களாக உள்ளன. இவற்றிலிருந்து நேரடியாக சட்டங்களைப் பெற முடியாத போது கருத்தொற்றுமையும் (இஜ்மா – நபித்தோழர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்தொற்றுமை) ஒப்புநோக்கல் (கியாஸ்) முறைகளும் பயன்படுத்தப்பட்டன.

இமாம் ஷாஃபியி-ன் சிந்தனைப் பள்ளியை தனித்துக் காட்டும் ஒரு பண்பு உள்ளது. ஒரே விஷயம் குறித்து அவர் பலதரப்பட்ட கருத்துகளைக் கொண்டிருந்தார். ஹிஜாஸில் இருந்த போது ஒரு கருத்தும், பாக்தாதுக்குச் சென்ற பிறகு வேறொரு கருத்தும் பின்னர் எகிப்தை அடைந்த பிறகு அதையும் மாற்றி மற்றொரு கருத்தும் கொண்டிருந்தார்.

ஒரு விஷயம் குறித்து இமாம் ஷாஃபியி-ன் கருத்து என்ன என்று கேட்டால், ‘அவர் இப்படியும் கூறினார் அப்படியும் கூறினார்’ என்று சொல்வதற்கு இடம் உள்ளது. காரணம், அவர் ஈராக்கில் இருந்த போது ஒருவாறாகவும் எகிப்துக்குச் சென்ற பிறகு அதற்கு முரணாக வேறுவாறாகவும் பேசியிருப்பார். பிற சிந்தனைப் பள்ளிகளில் இதைக் காண முடியாது. இமாம் ஷாஃபியி சில விஷயங்களில் தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டார். எனவேதான் இமாம் ஷாஃபியி விஷயத்தில் பழைய கருத்துக்கள் (அக்வாலுஹு கதீமா) என்றும் புதிய கருத்துக்கள் (அக்வாலுஹு அல் ஜதீதா) என்றும் சொல்லப்படுகிறது.

ஒரு உதாரணத்தின் மூலம் இதை விளங்க முயற்சிப்போம். ஒரு மனிதன், தான் குறிப்பிட்ட ஒரு உயர் வம்சத்தைச் சார்ந்தவன் என்று சொல்லி திருமணம் செய்து கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம். திருமணத்துக்குப் பிறகு அவன் அந்த வம்சத்தைச் சார்ந்தவன் அல்ல, அந்தஸ்தில் அதைவிடக் குறைந்த வம்சத்தைச் சார்ந்தவன் எனத் தெரியவருகிறது எனில், இதைக் காரணம் காட்டி அவனுடைய மனைவி திருமணத்தை ரத்து செய்ய இயலுமா? இக்கேள்விக்கு இமாம் ஷாஃபியி “ஆம்” என்றும் “இல்லை” என்றும் பதில் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.

மற்றொரு உதாரணம், விவசாய பரிவர்த்தனை தொடர்பானது. ஒருவர் தன் அறுவடையை மற்றொருவருக்கு விற்றுவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் விற்றவர், அதற்குரிய ஸகாத்தை/ஸதக்காவை செலுத்தவில்லை எனில் அவர் செய்த விற்பனை செல்லுபடியாகுமா? என்ற கேள்விக்கு இமாம் ஷாஃபியி வெவ்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது. வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் எனில், அதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இங்கு இமாம் ஷாஃபியி-யே பல கருத்துகளை தெரிவித்துள்ளார் என்று பார்க்கிறோம்.

இப்பண்பு இமாம் ஷாஃபியி-ன் சிந்தனைப் பள்ளியில்தான் அதிகம் காணப்படுகிறது. ‘இமாம் ஷாஃபியி தந்திரமாக இப்படிப் பல கருத்துக்களைச் சொல்கிறார்’ என்று தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டாம். அப்படி அல்ல. அவர் நேர்மையான ஒரு அறிஞர். அற ஒழுக்கங்கள் நிறைந்தவர். விஷயம் என்னவென்றால் பிற அறிஞர்களைப் போலல்லாமல் அவர் பல இடங்களுக்கு பயணம் செய்பவராக இருந்தார்; மூன்று விதமான சமூக, அரசியல் மற்றும் அறிவுசார் சூழல்களுக்கு உள்ளானார். இதன் காரணமாக தன் சிந்தனையை வெளிப்படுத்துவதில் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தார்.

ஹனஃபிகளும் ஷாஃபியிகளும்

மக்கா, எகிப்து, ஷாம், ஏமன் மற்றும் குராசானில் உள்ள நீசாபூர் ஆகிய பகுதிகளில் ஷாஃபியி அறிஞர்கள் கணிசமாக காணப்பட்டனர். இஸ்லாமிய வரலாற்றை எடுத்துக் கொண்டால் ஹனஃபி மற்றும் ஷாஃபியி அறிஞர்களுக்கு இடையே கசப்பான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. எல்லா சிந்தனைப் பள்ளிகளுக்கு இடையிலும் வாக்குவாதங்களும் கருத்துவேறுபாடுகளும் ஏற்பட்டுள்ளன என்றாலும் மிகவும் கசப்பான, சச்சரவுகளுக்கு உள்ளான விவாதங்கள் என்று எடுத்துக் கொண்டால் அது ஹனஃபி மற்றும் ஷாஃபியி சிந்தனைப் பள்ளிகளுக்கு இடையே ஏற்பட்டவைதான். எங்கோ ஏற்பட்ட தனிப்பட்ட விவாதங்களாக இல்லாமல் பொதுவெளியில், பள்ளிவாசல்களில் இவை நிகழ்ந்தன.

சில பகுதிகளில், சில நேரங்களில், இறுதிச்  சடங்குகளுக்கு (ஜனாஸா) பிறகு கூட மக்கள் இத்தகைய சட்டவியல் சர்ச்சைகளில் ஈடுபட்டனர். ஒரு மனிதர் இறந்துவிட்டால், எல்லா சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்த மக்களும் அவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்வர். ஆனால் அது முடிந்த பிறகு சட்டவியல் சர்ச்சைகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுவர். இத்தகைய சர்ச்சைகளில் ஈடுபடுவது கிட்டத்தட்ட ஒரு சமூக வழக்கமாகவே மாறியிருந்தது. இது ஒருவகையான குழுவாதமாகவே (அசபிய்யா) —அறிவுசார் கருத்துக்கள் குறித்த குழுவாதமாக— மாறிவிட்டது என்று அறிய முடிகிறது.

திருமணம் மற்றும் மது தொடர்பான விஷயங்களில் எப்படி ஹனஃபி மற்றும் ஷாஃபியி சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்தவர்கள் தமக்கிடையே இழிவான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர் என்று வெள்ளிக் கிழமை உரைகளில் விளக்கியுள்ளேன். ஆனால் அஷ் ஷாஃபியி, அபூ ஹனீஃபா குறித்து மரியாதை நிமித்தமாகக் கூறியதை நினைவுபடுத்துகிறேன். “சட்டவியல் தொடர்பான விவகாரங்களில் மக்கள் அபூ ஹனீஃபாவுக்கு பெரிதும் கடமைப்பட்டவர்களாக உள்ளனர்”. சட்டவியலாளர்கள் தமக்கிடையே மரியாதையாக நடந்து கொள்ள, அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி பகைமையில் மூழ்கினர் என்று பாருங்கள்! எனினும் இதுவும் நம் வரலாற்றின் ஒரு பகுதிதான்!

ஷாஃபியிகளின் நிலப்பரப்பு

எகிப்து மற்றும் ஏமனில் ஷாஃபியி சிந்தனைப் பள்ளி பிரபலமடைந்து காணப்பட்டது. ஷாம் மற்றும் பாரசீகத்தின் சில பகுதிகள் மற்றும் இன்றைய மத்திய ஆசியாவின் சில பகுதிகளிலும் ஷாஃபியி சிந்தனைப் பள்ளி பிரபலமடைந்து காணப்பட்டது. எகிப்தில் மம்லூக்குகள் ஆட்சிக் காலம் வரை பெரும்பாலான மக்கள் ஷாஃபியி சிந்தனைப் பள்ளியை பின்பற்றினர். மம்லூக்குகள் ஆட்சிக்கு வந்தபோது, ஷாஃபியி சிந்தனைப் பள்ளிக்கு சிறிதளவு முக்கியத்துவம் அளித்த நிலையில், அதிகாரப்பூர்வ சிந்தனைகளாக நான்கு சிந்தனைப் பள்ளிகளையும் நிறுவனமயப்படுத்தினர். எனவே ஷாஃபியி சிந்தனைப் பள்ளி பிரபலமாக விளங்கியது. அதற்கடுத்து மாலிகி, ஹனஃபி மற்றும் ஹம்பலி என்ற வரிசையில் இச்சிந்தனைப் பள்ளிகள் பிரபலமாக பின்பற்றப்பட்டன.

பின்னர் ஃபாத்திமி ஆட்சிக்குப் பிறகு அய்யூபி அரசு உருவானது. இமாம் சலாஹுத்தீன் அய்யூபி, எகிப்தையும் சிரியாவையும் ஒருங்கிணைத்து, பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த ஐரோப்பிய சிலுவைப் போராளிகளை வீழ்த்தினார். அப்போது அய்யூபி அரசாங்கம், புனித பூமியை சுற்றியிருந்த இவ்விரு பகுதிகளிலும், ஷாஃபியி சிந்தனைப் பள்ளியை ஒருவகையில் திணித்தது. பின்னர் எகிப்தில் உஸ்மானிய அரசு ஏற்பட்டபோது அவர்கள் ஹனஃபி சிந்தனைப் பள்ளியை அதிகாரப்பூர்வ சிந்தனைப் பள்ளியாக அறிவித்தனர்.

ஷாஃபியி சிந்தனைப் பள்ளி, ஈராக்கில் ஒருபோதும் வேரூன்றவில்லை. ஒருசில பகுதிகளில் ஆங்காங்கே ஒருசிலர் அதைப் பின்பற்றினர். ஆனால் ஈராக், ஷாஃபியி சிந்தனைப் பள்ளிக்கான இடமாக இருக்கவில்லை. அதேபோல மேற்கிலும் ஷாஃபியி சிந்தனைப் பள்ளி எந்தவகையிலும் பிரபலமடையவில்லை. மேற்கு என்று நாம் சொல்வது துனீசியா, அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் அந்தலூஸ் —இன்றைய ஸ்பெய்ன் மற்றும் போர்ச்சுகல்— பகுதிகளைக் குறிக்கும். ஒருசிலர் ஆங்காங்கே அதைப் பின்பற்றி இருக்கலாம். ஆனால் சொல்லும் அளவுக்கு இச்சிந்தனைப் பள்ளி அங்கு பிரபலம் அடையவில்லை.

இன்று தென்கிழக்கு ஆசியாவில் ஷாஃபியி சிந்தனைப் பள்ளி அதிகமாகப் பின்பற்றப்படுகிறது. சொல்லப் போனால் இந்தோனீசியா, மலேசியா முழுவதும் ஷாஃபியி சிந்தனைப் பள்ளியினரே உள்ளனர். அதுவே ஒரு மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும். தவிர எகிப்து மற்றும் சிரியா, லெபனான், பாலஸ்தீன், ஜோர்டான் உள்ளடங்கிய லிவான்ட் பகுதியிலும் ஷாஃபியி சிந்தனைப் பள்ளியினர் கணிசமாகக் உள்ளனர். ஏமனில் இரண்டு சிந்தனைப் பள்ளிகள் உள்ளன. ஷியாக்கள் ஸைதி சிந்தனையையும் சன்னிகள் ஷாஃபியி சிந்தனையையும் பின்பற்றுகின்றனர்.

ஆப்பிரிக்காவில், எகிப்து தவிர மற்ற பகுதிகளில் ஷாஃபியி சிந்தனைப் பள்ளி பிரபலம் அடையவில்லை. அப்பகுதிகளில் இமாம் மாலிக்கின் சிந்தனைப் பள்ளிதான் பிரபலமாக உள்ளது. மாலிகி அல்லாத இடங்களில் ஹனஃபி சிந்தனைப் பள்ளி உள்ளது. ஈராக், ஈரான் மற்றும் துர்க்கியின் குர்து மக்கள் பெரும்பாலும் ஷாஃபியி சிந்தனையை பின்பற்றுகின்றனர். ஒருகாலத்தில் பாரசீகத்தில் ஷாஃபியி சிந்தனைப் பள்ளி செழித்துக் காணப்பட்டது. இன்று ஷாஃபியி சிந்தனைப் பள்ளியைப் பின்பற்றுபவர்கள் ஏறத்தாள 30-35 கோடி பேர் இருப்பர் என்று சொல்லலாம்.

கேள்வி – பதில்

கே: இமாம் ஷாஃபியி மெய்யியலுக்கு எதிராக இருந்தார் என்று புரிந்து கொள்ளலாமா?

ப: இமாம் ஷாஃபியி தன்னளவில் மெய்யியலில் புலமை வாய்ந்தவராக இருந்தார். அவருடைய கூற்றுகளிலிருந்தும் அவருடைய மாணவர்களின் கூற்றுகளிலிருந்தும், அவர் மெய்யியலை கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தார் என்று அறிகிறோம். ஆனால் மக்கள் ஒருவருக்கொருவர் நிராகரிப்புக் குற்றச்சாட்டு சுமத்தி, மனச் சங்கடங்கள் ஏற்படும் சூழலை அவர் விரும்பவில்லை. எனவே “மெய்யியலின் திசையில் செல்ல வேண்டாம்” என்றார். மக்கள் சிந்திப்பதையே அவர் விரும்பவில்லை என்று சொல்ல முடியாது. மாறாக மெய்யியல் ஏற்படுத்தும் விளைவுகளை அவர் விரும்பவில்லை. எனவேதான் சிலர், ஷாஃபியி-ஐ பழமைவாத அறிஞர் என்று அழைக்கின்றனர். அறிவுத் தளத்தில் அவர் பழமைவாதியாக இருந்தார். மேலும் பகுத்தறிவுவாதத்துக்கும் முஃதசிலாக்களுக்கும் எதிராக வரலாற்றுப்பூர்வ நிலை எடுத்த, அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி எனும் மெய்யிலாளர் ஒரு ஷாஃபியி என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

கே: இமாம் ஷாஃபியி அப்பாஸி ஆட்சியாளர்களை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ எதிர்த்தாரா? அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் துண்டினாரா?

ப: இமாம் ஷாஃபியி, ஒரு அறிஞராக தன்னளவில் அப்பாஸி மற்றும் உமவி ஆட்சியாளர்களுக்கு எதிராக இருந்தார். ஆனால் அன்று நிலவிய அமைப்பு ரீதியான எதிர்ப்பியங்கள் எதிலும் அவர் பங்கு கொள்ளவில்லை. ஷியா எதிர்ப்பியக்கம், கவாரிஜ்களின் எதிர்ப்பியக்கம் மற்றும் முஃதசிலாக்களின் எதிர்ப்பியக்கம் போன்றவை அன்று இருந்தன. ‘அவர் ஒரு ஷியா’ என்று காழ்ப்புணர்வுடன் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை ஏற்கனவே பார்த்தோம். இது தவிர வேறு எதிலும் ஈடுபடவில்லை. சொல்லப்போனால், இந்தச் சம்பவத்துகுப் பிறகு அவர் அறிவுசார் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினார். எதிர்ப்பியக்கங்களில் துடிப்புடன் செயல்பட அவர் விரும்பவில்லை. எனினும் அவரை ‘அரசவை அறிஞர்’ அல்லது அரசாங்கக் கொள்கைகளை அப்படியே பின்பற்றுபவர் என்று சொல்ல முடியாது.

மேலும் அவர் முஆவியாவை சட்டப்பூர்வ ஆட்சியாளராகக் கருதவில்லை என்பதால் இமாம் அல் ஹசன் மற்றும் பிற எதிர்ப்பியக்கங்களின் தலைவர்களை முஸ்லிம்களின் சட்டப்பூர்வ தலைமை என்று கருதினார் என்று கொள்ளலாம். ஆனால் இது அனைத்தும் கோட்பாட்டளவில்தான் இருந்தது. நடைமுறை என்று வரும்போது அதில் அவர் பங்குபெறவில்லை. இன்றும் பலர் இப்படி இருக்கின்றனர். கோட்பாட்டளவில் ஒத்துப் போனாலும் நடைமுறை என்று வரும்போது கைவிரித்து விடுகின்றனர்.

கே: இமாம் அபூ ஹனீஃபா, இமாம் ஷாஃபியி போன்ற ஆரம்பகால அறிஞர்கள் தத்தம் கால ஷியாக்களோடு இணக்கமாக இருந்தார்கள் என்று பார்க்கிறோம். எனில் இப்போது காணப்படும் விரோதம் எப்போது, எப்படி துவங்கியது?

இந்த விரோதம் —அது சன்னிகளுக்கும் ஷியாக்களுக்கும் இடையே காணப்படுவதாயினும் அல்லது சன்னிகளுக்கு உள்ளாக அல்லது ஷியாக்களுக்கு உள்ளாக காணப்படுவதாயினும்— நம் அறிவுசார் வீழ்ச்சியின் காரணமாக தோன்றிற்று; சிந்தனைப் போக்குகளை (மத்ஹப்) வெறிகொண்டு அணுகியதால் தோன்றிற்று; இச்சிந்தனைப் போக்குகள்தான் இஸ்லாம் என்றும் வாழ்க்கை நெறி (தீன்) என்றும் கருதியதால் தோன்றிற்று. இப்போக்கு எல்லா சிந்தனைப் பள்ளிகளிலும் காணப்பட்டது. இப்படி காலப்போக்கில், இஸ்லாத்தை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட வீழ்ச்சி, மற்றும்  இஸ்லாத்தைக் கொண்டு நாம் நிகழ்த்திய சாதனைகளில் ஏற்பட்ட சுணக்கம் ஆகியவற்றின் காரணமாக இந்த நிலை அப்படியே இறுகிவிட்டது. இத்தகைய இறுகிப்போன நிலையைத்தான் நாம் வாரிசுரிமையாகப் பெற்றிருக்கிறோம்.

இன்றைய முஸ்லிம்கள், அறியப்படாத இவ்வரலாற்றுப் பக்கங்களை திறந்து பார்க்க விரும்புவதில்லை. யாருக்கும் இதில் விருப்பம் இல்லை. நீங்கள் எந்த பள்ளிவாசலுக்கு வேண்டுமானாலும் போய் பாருங்கள். அது எந்த சிந்தனைப் பள்ளியைச் சார்ந்ததாகவும் இருக்கட்டும். அங்கு யாராவது இவ்விஷயங்கள் குறித்துப் பேசுகிறார்களா? அபூ ஹனீஃபா மற்றும் நஃப்ஸ் அஸ் ஸகியா அல்லது இமாம் ஜாஃபருக்கு இடையேயான உறவு என்ன? அல்லது அஷ் ஷாஃபியி மற்றும் அலவிகளுக்கு இடையே என்ன மாதிரியான உறவு இருந்தது? போன்ற கேள்விகளில் நம் கவனத்தை குவிக்கிறார்களா? இத்தனை காலமாக மக்கள் ஒருவிதமான ஏகபோகத் தன்மையை வளர்த்துக் கொண்டார்கள் போலத் தெரிகிறது. “இவ்விஷயங்கள் குறித்து நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதுதான் சத்தியம். அதில் இத்தகைய கேள்விகளுக்கு இடமில்லை. இதைத்தவிர வேறெதுவும் சத்தியம் இல்லை. பிற தகவல்கள் சரியோ தவறோ. அதுபற்றிய கவலை எங்களுக்கு இல்லை” என்பதாகச் சொல்கிறார்கள்.

இத்தகைய அறிஞர்களின் புலமைகளுக்கிடையே —அது சட்டவியல் புலமையாக இருந்தாலும் சரி; அரசியல் புலமையாக இருந்தாலும் சரி— இருக்கும் பாலத்தைக் கடந்து சென்றவர்கள், தனிநபர்கள் மட்டுமே. பெருந்திரளான மக்கள் நடமாட்டம் இதில் நிகழவில்லை. இன்றைய ஆட்சியாளர்களுக்கு இது மிக வசதியாகப் போய்விட்டது. இந்த ஒரு உதாரணத்தைப் பாருங்கள். ஷியாக்களுக்கு எதிரான பொதுக்கருத்தை சவூதி அரேபிய அரசாங்கம் எப்படி தூண்டி விடுகிறது என்று பாருங்கள். நீண்ட காலமாக அது இதைத்தான் செய்கிறது என்றாலும் இப்போது அது உச்சத்தை எட்டியுள்ளது. அதே சமயம் உலக மதங்களுக்கு இடையே அது பாலத்தைக் கட்டுகிறதாம்.

நாளை நியுயார்க் நகரில் ஐ.நா. சபையில் சவூதி மன்னர் அப்துல்லாஹ் உரையாற்றப் போகிறார். அதைத் தொடர்ந்து இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ் உரையாற்றுகிறார். உலக சமயங்களின் இந்த மாநாட்டை ஐ.நா. மூலம் சவூதி அரசாங்கம் நிதியுதவி அளித்து நிகழ்த்துகிறது. ஒருபுறம் முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் பாலத்தை உடைத்துக் கொண்டிருக்கும் போதே, முஸ்லிம்களுக்கும் இஸ்ரேல் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையே பாலத்தை உருவாக்கும் சவூதி அரசாங்கத்தின் முயற்சி தற்செயலானதா என்ன?

இது என்றோ நடந்த வரலாறு அல்ல. நம் சமகால நிகழ்வு. அப்படி இருந்தும் நாம் இதைக் கவனிக்கத் தவறுகிறோம். ஏன்? ஆங்காங்கே சிற்சில தகவல்கள் வருகின்றன. எனினும் யாரும் பிரச்சனையை முழுமையாகப் பார்ப்பதில்லை. இச்சம்பவங்கள் எப்படி திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படுகின்றன என்று யாரும் கவனிப்பதில்லை. சிந்திக்கும் மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி நாம் பேசவில்லை. இவ்வுண்மைகளை புரிந்து கொள்ளும் மக்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அவர்கள் கூறுவது இதுதான்: “இவ்விஷயங்கள் பற்றி நான் பேசினால், என் குடும்பத்துக்கு யார் சோறு போடுவது? இதுபற்றி நான் ஏன் பேச வேண்டும்? ஒரு காலம் வரும். அப்போது முஸ்லிம்களுக்கு இத்தகவல்களின் தேவை ஏற்படும். அப்போது நான் அவர்களுக்கு அதைக் கொடுப்பேன். மக்களுக்கு அக்கறை இல்லை என்றால் எனக்கும் அக்கறை இல்லை”. அவர்களின் சிந்தனை இப்படித்தான் போகிறது. இவர்கள் அறிஞர்களாம்!

கே: இத்தகைய அணுகுமுறை இந்த அறிஞர்களின் காரணமாகவே உருவானதா? இமாம் மாலிக், இமாம் ஷாஃபியி போன்றோர், அரசாங்கத்துக்கு எதிராக மந்தமான எதிர்ப்பைத்தானே வெளிப்படுத்தினர். “அரசியலை லேசாக எடுத்துக் கொள்கிறோம். இதனால் குறைந்தபட்சம் எங்களால் அறிவுசார் பணிகளிலாவது ஈடுபட முடியும்” என்ற ரீதியில்தானே அவர்கள் பணியாற்றினர்?

ப: ஆம். ஒரு விதத்தில் அப்படியும் கூறலாம். ஆனால் நீங்கள் வேறொரு விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அன்றைய அரசாங்கத்தை எதிர்த்து நின்றால், அதில் வெற்றி பெறும் சாத்தியம் இருக்க வேண்டும். அரசியல் தற்கொலை முயற்சியில் அவர்கள் ஈடுபட முடியாது. இமாம் ஷாஃபியி-ஐ எடுத்துக் கொள்வோம். அவருடைய சிந்தனையை நாம் அறிந்தவரையில், அவர் எதிர்ப்பியக்கத்தைச் சார்ந்தவர். இன்று பல முஸ்லிம்களுக்கு இதுவே தெரியாது. ஆனால் ஆட்சியாளர்களின் பதவியைப் பறிக்கும் அளவு செல்வாக்கு திரட்ட முடியாது என்று அறிந்த ஒரு எதிர்ப்பியக்கவாதி, என்ன செய்ய முடியும்? களநிலவரத்தைக் கருத்தில் கொண்டுதானே செயல்பட முடியும்?

மேலும், இந்த அறிஞர்களை நாம் படிக்கும் போது, சடங்குகள் பற்றிய அவர்களுடைய அபிப்பிராயங்களைத்தான் படிக்கிறோம். எப்படித் தொழுவது? காலை எப்படி வைப்பது? கையை எப்படி அசைப்பது? போன்ற விஷயங்களைத்தான் படிக்கிறோம். அரசியல் வெளியில் அவர்களுடைய கருத்து என்ன என்று தேடினால், அத்தகவல்கள் நம்மை வந்தடையவில்லை. அதை அறிந்து கொள்வது சிரமமாக உள்ளது.

இந்த வரலாறை படிப்பவர்கள், இத்தலைவர்களை தம்மளவில் அரசியல் எதிர்ப்பியக்கத்தின் முன்னணித் தலைவர்களாகக் காணவே விரும்புவர் என்று கருதுகிறேன். இன்றும் அப்படித்தான். சங்கடம் ஏற்படக்கூடும் என்பதால் நான் யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. சில சமகால அறிஞர்கள் உள்ளூர என்ன சிந்திக்கிறார்கள் என்று நாம் அறிவோம். அப்படியிருந்தும், நிறுவனமயமாகிவிட்டதை கட்டுடைக்கக் கூடாது என்ற ரீதியில் அவர்களின் நிலைப்பாடு உள்ளது. எல்லா சிந்தனைப் பள்ளிகளிலும் இத்தகைய அறிஞர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஏன் வெளிப்படையாகப் பேசுவதில்லை? குறிப்பாக, முஸ்லிம்கள் ஆட்சிபுரியாத பகுதிகளில் இருப்பவர்கள், ஏன் வெளிப்படையாகப் பேசுவதில்லை?

அன்று இஸ்லாமிய ஆட்சியதிகாரத்துக்கு வெளியில் எந்த முஸ்லிம் அறிஞரும் வாழவில்லை. அவர்கள் வாழ்ந்த அரசாங்கத்தின் அரசியல் இயக்கம், தவறான திசையில் சென்றது. ஆனால் இன்றைய சிந்திக்கும் திறன் கொண்ட, அறிவாற்றால் நிறைந்த, பாண்டித்தியம் பெற்ற முஸ்லிம் அறிஞர்களை என்னவென்பது? பழிவாங்கல், சிறைத்தண்டனை, கொடுமைகள் போன்றவற்றுக்கு அவர்கள் உள்ளாகவில்லை. அப்படியிருந்தும் அவர்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கு திராணியின்றி உள்ளனர்.

இமாம் அஷ் ஷாஃபியி அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ வாழவில்லை. அவர் அதிகம் பயணம் மேற்கொள்பவராக இருந்தார். அப்படியிருந்தும் கிடைத்த சில வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கூட, மரணதண்டனை விதிக்கப்படாமல், இஸ்லாமிய வழியில் தன்னுடைய அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பை அவர் பெறவில்லை. அவர் செய்த சில காரியங்களே அவரை மரணதண்டனைவரை இழுத்துச் சென்றுவிட்டன. இந்த அனுபவத்தால், ‘நம்மால் இயன்ற அளவு முயன்றோம். அடுத்து மக்கள் மத்தியில் ஒரு பொதுக் கருத்தை உருவாக்க முயற்சிப்போம்’ என்று கருதினார்.

இன்றும் இஸ்லாமிய அமைப்புகள், பொதுக் கருத்தை வலியுறுத்துகின்றனர். ஆனால் இவர்கள் சொல்லும் பொதுக் கருத்து —சட்டவியலாளர்கள் செய்தது போலல்லாது— அரசியல் விழிப்புணர்வற்று இருக்கிறது. சட்டவியலாளர்கள் செய்ததும் அரசியலற்றது போலத்தான் தெரிகிறது. அதற்குக் காரணம், சட்டவியலாளர்களின் அரசியல் ஈடுபாடு குறித்த தகவல்கள் வரலாற்றில் விடுபட்டுள்ளது; மக்கள் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுவிட்டது. இது அடுத்த பிரச்சனை. அன்றைய அரசாங்கத்தில் இச்சட்டவியலாளர்களின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிக்கொணர வேண்டும். ஆனால் அது லேசான காரியம் அல்ல.

♣ ♣ ♣ ♣ ♣

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *