திருமணத்தின்போது ஆயிஷாவின் (ரழி) வயது ஒன்பது அல்ல – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை படிப்பதற்கு எளிதாக இருப்பதற்காக இரண்டு பாகங்களாகப் பிரித்துள்ளோம். படத்தில் இமாம் முஹம்மது அல் ஆஸி. சமகால இஸ்லாமிய சிந்தனை நிறுவன (Institute of Contemporary Islamic Thought – ICIT) ஆராய்ச்சியாளர்.

அல் குர்ஆனின் முதல் ஆங்கில விளக்கவுரை (தஃப்சீர்) The Ascendant Qur’an: Realigning Man to the Divine Power Culture – Volume 14 பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த விளக்கவுரையின் பதினான்கு தொகுதிகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

♦ ♦ ♦ ♦ ♦

உரையாற்றிய நாள்: 09-10-2015

YouTube link: Aa’ishah Wasn’t Married at Nine Years of Age

இமாம் அல் ஆஸியின் ஆங்கில உரையை இங்கே கிளிக் செய்தும் கேட்கலாம்.

தமிழாக்கத்தை கேட்க இங்கே கிளிக் செய்யவும்.

♦ ♦ ♦ ♦ ♦

(பாகம் 1)

உறுதிகொண்ட சகோதரர்களே! முஸ்லிம்களே! நம் கவனத்தைக் கோரும் முக்கியமான விஷயங்கள் பல இருக்கும் போது வேறு விஷயங்களைப் பற்றிப் பேசும் நிர்பந்தம் ஏற்படுவது குறித்து நான் விரக்தியடைகிறேன். எனினும் அல்லாஹ்வின் துணைகொண்டு அவனை எதிர்பார்த்து இருப்பதால் அந்த விரக்திநிலை நம்மை நம்பிக்கையிழந்து ஊக்கமிழக்கச் செய்வதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதாவது நாம் பிற பகுதிகளைச் சுத்தம் செய்யும் முன், நம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே நாம் கூறியது போல நம் வீட்டிலும் மாசு படிந்துள்ளது. இதை ஓரளவிற்காவது —குறைந்தபட்சம் மனதளவில்— சுத்தம் செய்யும் முயற்சியில் நாம் இறங்கியுள்ளோம்.

இறைத்தூதரோடு (ஸல்) பொருந்தாத, ஹதீஸ் இலக்கியத்திலும் சேராத மோசடியான, புனையப்பட்ட, போலியான ஹதீஸ்களைக் குறித்துதான் நாம் இங்கே பேசுகிறோம். இங்கு நான் ஒரு விஷயத்தை மீண்டும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. இறைத்தூதர் (ஸல்) தவறே இழைக்காதவர்; குறைகளற்றவர்; பாவங்கள் செய்யாதவர்; அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானவர். அவர் மீது புனையப்பட்ட கூற்றுகளைக் களைய நாம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியானது, அவர் மீது நாம் கொண்டுள்ள மரியாதையையோ, கண்ணியத்தையோ, அன்பையோ எந்த விதத்திலும் மட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது அல்ல. இதனடிப்படையில், இறைத்தூதர் (ஸல்) குறித்து உள்ள சில கூற்றுகளையும் அவர் பற்றி உள்ள சில அபிப்பிராயங்களையும் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளோம்.

சிஹாஹ் (ஏற்புடைய ஹதீஸ் நூல்கள்) என்று அழைக்கப்படும் நூல்களில் உள்ள இத்தகைய சில ஹதீஸ்களை நாம் களையெடுக்க முற்படும்போது, ஹதீஸ் இலக்கியம் முழுவதையும் நிராகரிக்கிறோம் என்றும், தீய எண்ணத்தோடு செயல்படுகிறோம் என்றும், ஒரு மறைவான செயல்திட்டத்தை முன்னெடுத்து நெறிபிறழ்ந்து செல்கிறோம் என்றும் சில உணர்ச்சிவசவாதிகள் நம்மீது பழி சுமத்துவர். நாம் அவர்களுக்கு தெள்ளத் தெளிவாக சொல்வது இதுதான்: “நீங்கள் சொல்வது தவறு”. ஆகவே, பெரும்பாலான முஸ்லிம்களால் ஏற்புடையது என்று கருதப்படும் சில ஹதீஸ்களை நாம் ஆய்வுக்கு உட்படுத்தும்போது, இறைத்தூதரின் கூற்றுகள் அடங்கிய அழகிய தோட்டத்தில் பொருந்தாத ஹதீஸ்களை களையெடுக்கவே முயற்சி செய்கிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இப்போது அல் புகாரியில் உள்ள ஒரு ஹதீஸை பார்ப்போம். ஒரு உணர்ச்சிமிகு விஷயத்தைப் பற்றிக் கூறும் இந்த ஹதீஸ், பொதுவெளியில் முறையாக அறிவுசார் நோக்கில் ஆராயப்பட்டதே இல்லை. இறைத்தூதருக்கும் (ஸல்) ஆயிஷாவுக்கும் (ரழி) நடந்த திருமணத்தைப் பற்றிய ஹதீஸ்தான் இது. அல் புகாரி மற்றும் முஸ்லிமில் உள்ள இந்த ஹதீஸின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு: ஆயிஷாவிடமிருந்து (ரழி) கேட்டு இதை அறிவிக்கும் நபர்கள் —வரிசையாக பின்வருமாறு: ஃபர்வாஹ் இப்னு அபில் மிக்ஹ்ராப், அலீ இப்னு முஸ்கிர், ஹிஷாம், ஹிஷாமின் தந்தை மற்றும் ஆயிஷா (ரழி). ஆயிஷா (ரழி) கூறினார்: “நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது, இறைத்தூதர் (ஸல்) என்னை திருமணம் செய்தார். ஒன்பது வயதை அடைந்த போது நான் என்னை அவருக்குக் கொடுத்தேன்”.

கீழைத்தேயவாதிகள், வெளியிலிருந்து இஸ்லாத்தைத் தாக்க முற்படுபவர்கள், நமக்குள்ளேயே இருந்து இவர்களின் கூற்றுகளை எதிரொலிப்பவர்கள் ஆகியோருக்கு மத்தியில் இருக்கும் நாம், நம்மைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளை நன்றாகவே அறிவோம். “இது உங்கள் இஸ்லாமிய அடிப்படை நூல்களில் இருப்பதுதானே. வெளியிலிருந்து நாங்கள் எதையும் எடுத்து வரவில்லையே” என்று அவர்கள் கூறுகின்றனர். எனவே இந்தப் பிரச்சனையை யாரும் நிராகரித்துவிட முடியாது.

இந்த ஹதீஸ் திருக்குர்ஆனின் அர்த்தத்தோடு பொருந்தாத, இறைத்தூதரின் (ஸல்) பண்புநலன்களுக்கு ஏற்பற்ற ஒரு ஹதீஸ் என்று நாம் கூறுகிறோம்.

இப்போது, ஆதாரப்பூர்வ இஸ்லாமிய வரலாற்று நூல்களை எடுத்துக்கொள்வோம். இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களும் அறிஞர்களும் மேற்கோள் காட்டும் இத்தகைய பல நூல்கள் உள்ளன. இறைத்தூதரின் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றியும் மக்கா மற்றும் மதீனாவில் 23 ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட பணி குறித்தும் பேசும் இத்தகைய நூல்களுள் சிலவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன்: அல் காமில், சியார் ஆலம் அந்நுபலா, தாரீக் அத் தபரி, தாரீக் திமஷ்க், அல் பிதாயா வல் நிஹாயா, தாரீக் பாக்தாத் மற்றும் வ சயதுல் அஹ்யாம். இறைத்தூதரின் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றி பேசும் எல்லா முஸ்லிம் அறிஞர்களும், ஏதோ ஒரு விதத்தில் மேற்கோள் காட்டும் நூல்கள்தான் இவை.

இந்த நூல்கள் எல்லாமே, மக்காவில் இறைத்தூதரின் (ஸல்) பணி —பி’ஸா முதல் புலப்பெயர்வு (ஹிஜ்ரத்) வரை— ஏறத்தாழ 13 ஆண்டு காலம் நீடித்தது என்று கூறுகின்றன. இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. அதன்பிறகு மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) வாழ்ந்த காலம் 10 ஆண்டுகள் என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. ஆகவே இறைத்தூதரின் (ஸல்) பணி மொத்தமாக 23 ஆண்டுகாலம் நீடித்தது. ஆங்கில நாட்காட்டிப்படி, கி.பி. 623இல் புலபெயர்வு (ஹிஜ்ரத்) நிகழ்ந்தது. இறைத்தூதரின் (ஸல்) மறைவு 633இல் நிகழ்ந்தது. இவையனைத்தும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகளே. மாதங்களில் வேண்டுமானால் ஒருசில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் வருடத்தைப் பொருத்தவரை, இவையனைத்தும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே. இதை வாசகர்கள் மனதில் பதித்துக்கொள்ள வேண்டுகிறேன். ( பி’ஸா: மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக மற்றொரு மனிதரை இறைவன் தேர்ந்தெடுத்து அனுப்புவது – மொழி பெயர்ப்பாளர்)

அல் புகாரி, முஸ்லிம் மற்றும் வேறு சில ஹதீஸ் நூல்களிலுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், ஹிஜ்ரத்துக்கு மூன்று ஆண்டுகள் முன்னர் ஆயிஷாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதாவது மக்காவில் இறைத்தூதர் தம் பணியைத் துவங்கி 10 ஆண்டுகள் கழித்து, இறைத்தூதர் ஆயிஷாவை திருமணம் முடிக்க விருப்பம் தெரிவித்தார். ஆங்கில நாட்காட்டியின்படி இது 620-ல் நிகழ்ந்திருக்க வேண்டும். நாம் ஏற்கனவே மேற்கோள் காட்டிய ஹதீஸின் அடிப்படையில், இறைத்தூதர் ஆயிஷாவை திருமணம் முடிக்க கேட்டுக்கொண்ட போது, ஆயிஷாவின் வயது ஆறு. அதாவது, தூதுத்துவப் பணியின் பத்தாவது ஆண்டில் ஆயிஷாவின் வயது ஆறு. பின்னர், இறைத்தூதர் அவரை முறையாகத் திருமணம் முடிக்கும் போது —அரபியில் இதற்கு ‘தகஹல பிஹா’ என்று சொல்லப்பட்டுள்ளது— அவரின் வயது ஒன்பது. இதனடிப்படையில் பார்த்தால், ஆயிஷா 614-ல் பிறந்திருக்க வேண்டும். அப்போதுதான் 620-ல் —இறைத்தூதர் அவரை திருமணம் முடிக்க விருப்பம் தெரிவிக்கும் போது— அவர் ஆறு வயதை அடைந்திருக்க முடியும். இவையனைத்துமே அல் புகாரி மற்றும் முஸ்லிமின் ஆதாரத்தில் சொல்லப்படுகிறது.

இப்போது இத்தகவல்களை விமர்சன நோக்கோடு பார்ப்போம். நாம் ஏற்கனவே கூறிய வரலாற்று நூல்கள் அனைத்தும் ஆயிஷாவின் சகோதரி அஸ்மா, அவரைவிட பத்து வயது மூத்தவர் என்று கூறுகின்றன. இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. அஸ்மா ஹிஜ்ரத்துக்கு 27 ஆண்டுகள் முன்னர் பிறந்தார் என்பதும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றொரு கருத்து. இறைத்தூதர் மக்காவிலிருந்து மதீனா செல்லும் போது அஸ்மாவின் வயது 27 எனில், அதற்கு 13 ஆண்டுகள் முன் —இறைச்செய்தி (வஹீ) துவங்கிய போது— அவரது வயது 14 ஆக இருக்கும். இவரைவிட ஆயிஷா பத்து வயது இளையவர் எனில், வஹீ துவங்கிய போது ஆயிஷாவின் வயது நான்கு. ஆனால் அல் புகாரியிலுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இறைச்செய்தி (வஹீ) துவங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவர் பிறந்திருக்க வேண்டும். ஆனால் எல்லா வரலாற்று நூல்களின் அடிப்படையிலும் பார்த்தால், அவர் அப்போது இதைவிட பல ஆண்டுகள் மூத்தவராக இருந்தார் என்று பார்க்கிறோம். இங்கு ஒரு முரண் ஏற்படுவதைப் பாருங்கள். ஆகவே இதில் எங்கோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த வரலாற்று நூல்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இறைதூதர் ‘இக்ரா’ மற்றும் ‘யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்’ வசனங்களை துவக்க காலத்தில் பெற்றபோது, ஆயிஷாவின் வயது நான்கு. பத்து வருடங்கள் கழித்து —அதாவது புலபெயர்வுக்கு (ஹிஜ்ரத்) மூன்று வருடங்கள் முன்—- இறைத்தூதர் ஆயிஷாவை திருமணம் முடிக்கக் கேட்ட போது, ஆயிஷாவின் வயது பதினான்கு. எனில், அப்போது அவருக்கு ஆறு வயது என்று ஏன் இந்த ஹதீஸ் நூல்கள் கூறுகின்றன? இதை நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பின்னர் அல் மதீனாவில் முதல் வருடத்தில்தான் இறைத்தூதர் ஆயிஷாவை அசலில் திருமணம் முடித்தார். எனவே நான்கோடு பதிமூன்று வருடங்களைச் சேர்த்தால், அப்போது ஆயிஷாவின் வயது 17 என்றாகிறது. இன்னும் சொல்லப்போனால், அல் மதீனாவில், முதல் வருடத்தின் இறுதியில்தான் இத்திருமணம் நடைபெற்றது என்று நாம் அறிகிறோம். எனவே அப்போது ஆயிஷாவின் வயது 18 ஆகியிருக்கும்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் நாம் நம் ஆய்வுகளை மேற்கொண்டிருக்க வேண்டும். நாம் அறிந்தவரையில், இவ்வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மையை எந்த அறிஞரும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. அப்படி இருக்கையில், இந்நூல்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று நாம் ஏன் இதுவரை பார்க்கவே இல்லை? இந்த வரலாற்றாசிரியர்கள் அனைவரும் சொல்லிவைத்தாற்போல ஒரே தவறை செய்து, அல் புகாரியும் முஸ்லிமும் மட்டும் இதைச் சரியாகச் சொல்லிவிட்டார்களா என்ன? இக்கேள்விகளை நாம் கேட்டாக வேண்டும்.

♦ ♦ ♦ ♦ ♦

திருமணத்தின்போது ஆயிஷாவின் (ரழி) வயது ஒன்பது அல்ல (பாகம் 2) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *