ஹெச்.ஏ.எல்.க்ரெய்க் (ஹாரி க்ரெய்க்) 1921ஆம் ஆண்டு அயர்லாந்தி லுள்ள கவுண்டி கார்க் என்னும் இடத்தில் பிறந்தார். க்ரெய்க்கும் அவருடைய இரட்டைச் சகோதரர் டிக்கும் லிமரிக் என்ற இடத்தில் ஷானான் நதியின் அருகே குலோன்லாரா என்ற தங்களது தந்தையின் மடத்தில் வளர்ந்தனர். பிறகு அவர்கள் டூப்ளினிலுள்ள டிரினிடி கல்லூரியில் கல்வி பயின்றனர். க்ரெய்க், 1940-50களில் ‘சீன் ஓ’ஃபாலின் (Sean O’Faolain)’ உடன் சேர்ந்து செல்வாக்கு மிகுந்த இலக்கிய இதழான ‘தி பெல்’லின் (The Bell) ஆசிரியரானார். அதன்பிறகு அவர் 1950களின் மத்தியில் லண்டனுக்குச் சென்றார். அங்கு அவர் எழுதிய ரேடியோ நாடகங்கள் பிபிசி’யால் தயாரிக்கப்பட்டு ‘தி தேர்டு புரொக்ராமில்’ (The Third programme) ஒளிபரப்பாயின; மேலும் அவர் தற்கால நிகழ்வுகளை அலசும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். ‘தி நியூ ஸ்டேட்ஸ்மேனில்’ (The New Statesman) நாடக விமர்சகராக நீண்டகாலம் பணியாற்றினார். பிறகு 1968இல் ஹாரி தனது மனைவி பெக்கி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இத்தாலியிலுள்ள ரோமுக்குச் சென்றார்; அங்கு வெற்றிகரமான ஒரு திரைக்கதை ஆசிரியரானார். அவருடைய ஆரம்பகால திரைப்படங்கள் ‘டினோ டி லாரண்டீஸ்’ஸால் (Dino de Laurentis) தயாரிக்கப்பட்டன; அவை பொதுவாக சர்வதேசத் தரத்தைப் பெற்றிருந்தன; எடுத்துக்காட்டாக, ‘வாட்டர் லூ’ (Water Loo) என்னும் போர் சினிமாவைச் சொல்லலாம். மேலும் இவர் ‘ஆன்சியோ’ (Anzio), ‘ஃப்ரௌலின் டொக்டர்’ (Fraulein Doktor) ஆகிய இரண்டு வரலாற்றுப் போர் படங்களுக்கும் திரைக்கதை ஆசிரியர். பின்னர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் முஸ்தஃபா அக்காத்’தின் புகழ்பெற்ற ‘தி மெஸேஜ் (The Message)’, ‘உமர் முக்தார் – லயன் ஆஃப் தி டெசர்ட்’ (Omar Mukhtar – Lion of the Desert) ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகப் பணிபுரிந்த ஹெச்.ஏ.எல். க்ரெய்க் அக்டோபர் 1978இல் நுரையீரல் புற்றுநோய் காரணமாக ரோமில் காலமானார்.