மர்யம் ஜமீலா

மரியம் ஜமீலா நியூயார்க்கில் 1934 -ம் ஆண்டு, பொருளாதாரப் பெருவீழ்ச்சியின் உச்சகட்டக் காலத்தில் பிறந்தார். அவர் ஜெர்மானிய-யூத பூர்வீகக் குடும்பத்தில் பிறந்த ஓர் நான்காம் தலைமுறை அமெரிக்கர். அவரது வளர்ப்பு, நியூ யார்க்கின் மிக வசதிவாய்ந்த, ஜனரஞ்சகமான புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றான வெஸ்ச்செஸ்டரிலும்; அவரது படிப்பு, முழு மதச்சார்பின்மையான அமெரிக்கக் கல்வி பயிற்றுவிக்கும் உள்ளூர் பொதுப் பள்ளிக்கூடங்களிலும் அமைந்தன. எப்பொழுதுமே சராசரிக்குக் கூடுதலானதொரு மாணவியாகத் திகழ்ந்த அவர், விரைவில் ஓர் பேரார்வமுள்ள புத்திஜீவியாகவும், தாகமடங்காத புத்தகப்பிரியராகவும் உருவெடுத்தார். புத்தகமும் கையுமாக இருந்த அவர், தனது பள்ளிக்கூடப் பாடங்களின் தேவைக்கு வெகு அப்பால் வாசிப்பு வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டார். பருவம் எய்தியபொழுது அவர் அனைத்துவித சில்லரைக் கேலிக் கூத்துகளையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு, மிகுந்த கவன உள்ளம் படைத்தவராக மாறினார். இது ஓர் அழகான, கவர்ச்சியான யுவதியினிடத்தில் மிக அரிதாகவே காணப்படும் பண்பு ஆகும்.

அவரது முக்கிய ஆர்வப் பாடங்கள்: சமயம், சித்தாந்தம், சரித்திரம், மனிதவியல், சமூகவியல், உளவியல் மற்றும் உயிரியல். அவருக்கு பள்ளிக்கூட மற்றும் உள்ளூர் சமூகப் பொது நூலகங்களும், பிறகு நியூ யார்க் பொது நூலகமும் இரண்டாம் இல்லமாக விளங்கலாயின.மரியம் 1952 -ம் ஆண்டு கோடைகாலத்தில் தனது மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்று நியூ யார்க் பல்கலையில் நுழைவு பெற்றார். அங்கே ஓர் பொதுவான தாராள-கலைத்துறைப் பாடத்தை எடுத்துப் படித்தார். பல்கலைப் படிப்பின் போது, 1953 -ல் மோசமாக நோய்வாய்ப்பட்டார். நோய் தொடர்ந்து மேலும் மோசமடையவே, கல்லூரிப் படிப்பை இரண்டு வருடம் கழித்து – பட்டம் எதுவும் பெறாமலேயே – நிறுத்த வேண்டியதாயிற்று. இரண்டு வருடங்களாக (1957-1959) பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட பிறகே தனக்குள்ள எழுத்தாற்றலை கண்டுகொண்டார்.

அல்லாமா முஹம்மது அஸதின் இரண்டு நூல்கள் – அவரது சுயசரிதைத் தகவல்கள் அடங்கிய மக்காவுக்குச் செல்லும் பாதை மற்றும் நாற்சந்தியில் இஸ்லாம் ஆகியன – மரியமிற்கு இஸ்லாத்தின் பால் ஆர்வத்தீயை மூட்டியது. பின்னர், முஸ்லிம் நாடுகளில் சில பிரபல முஸ்லிம்களுடன் கடிதத் தொடர்பு கொண்ட பிறகும்; நியூ யார்க்கில் மதம் மாறிய சில முஸ்லிம்களுடன் நெருங்கிய நட்புறவு ஏற்படுத்திக்கொண்ட பிறகும், அவர் இஸ்லாத்தைத் தழுவினார். நியூ யார்க்கில் புரூக்கிலினிலுள்ள இஸ்லாமியப் பிரச்சாரகத்தில் ஷெய்கு தாவூத் அஹ்மது ஃபைசலின் கரங்களில் இஸ்லாத்தைத் தழுவிய மார்கரட் மார்கஸுக்கு தாவூத், மரியம் ஜமீலா எனப் பெயர் சூட்டினார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள முஸ்லிம்களுடன் நீண்ட காலமாக கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டபோதும்; வாசிப்புச் செய்தும், ஆங்கிலத்தில் வெளிவந்த முஸ்லிம் இதழ்களுக்கு கட்டுரைகள் எழுதி வந்தபோதும் அவருக்கு மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதியின் எழுத்தாக்கங்கள் அறிமுகமாயின. எனவே, 1960 -ம் ஆண்டு டிசம்பர் தொட்டு, அவர் மௌலானாவுடனும் தொடர்ந்து கடிதப் பரிமாற்றம் செய்து வந்தார். 1962 -ம் ஆண்டு மாரி காலத்தில், மௌலானா அவர்கள் மரியம் ஜமீலாவை பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து வந்து லாஹூரில் தனது குடும்பத்தில் ஒருவராக வாழ வரவேற்று அழைப்புக் கொடுத்தார். அழைப்பை ஏற்று குடிபெயர்ந்து வந்த மரியம் ஜமீலா, ஒரு வருடம் கழித்து முஹம்மது யூசுஃப் கானை – ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒரு முழு நேர ஊழியர் – மனந்தார். இவரே பின்னர், மரியமின் நூல்கள் அனைத்திற்கும் வெளியீட்டாளரானார். அதைத் தொடர்ந்து மரியம் நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி தனது மக்களுடனும், சக மனைவியுடனும் (சக்காலத்தியாருடனும்) மாமனாரது ஒரு பெரிய, கூட்டுக் குடும்ப வீட்டில் வசித்து வருகிறார்.

மரியம் நாத்திகம் மற்றும் பொருளாயதத்தின் அனைத்து வித பழைய, புதிய வெளிப்பாடுகளின் மீதும் ஆழ்ந்த வெறுப்புக் கொண்டுள்ளார். சம்பூரணமான, நிலையான, பரலோக அறங்களின் பால் தனக்குள்ள தீராத் தேடுதலிற்கு விடையாக இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கிறார். அதுவே, வாழ்வுக்கு (மற்றும் சாவுக்கு) அர்த்தமும் திசையும் நோக்கமும் மதிப்பும் வழங்கும் இறுதி மெய்மை குறித்த – உணர்வு மற்றும் அறிவு ரீதியில் – மிக திருப்திகரமான விளக்கம் என்கிறார்.