இஸ்லாமிய வரலாறு – 17 / அல் ஜாஃபரி சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி
♣ ♣ ♣ ♣ ♣
இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழி பெயர்த்து, தலைப்புகளை அளித்துள்ளோம் – மொழி பெயர்ப்பாளர்.
உரையாற்றிய நாள்: 07-04-2009, இடம்: வாஷிங்டன் டி.சி., அமெரிக்கா
♣ ♣ ♣ ♣ ♣
ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றில் இருந்த பல்வேறு சட்டவியலாளர்கள் மற்றும் இமாம்களைப் படித்து நெடும் பயணம் மேற்கொண்டவர்களாக இவ்விடத்தை அடைந்துள்ளோம். இத்தொடரை ஷியா அரசியல் சிந்தனைப் பள்ளியிலிருந்து துவங்கினோம். இப்போது ஷியா சட்டவியல் அல்லது இமாம் ஜாஃபர் அல் சாதிக்கை படித்தவர்களாக நிறைவு செய்வோம். ‘ஒன்றில் துவங்கி வேறொன்றில் நிறைவு செய்கிறீர்கள்’ என்று யாரும் சொல்வதை நாம் விரும்பவில்லை. அப்படிச் செய்வது இத்தகைய பெரும் ஆளுமைகளுக்கு நியாயம் செய்வதாகாது.
அல் இமாம் ஜாஃபர் அல் சாதிக் ஹி. 80-ல் பிறந்து ஹி. 148-ல் மறைந்தார். அக்காலத்தில் நிகழ்ந்த கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் இருப்பது போல இதிலும் கருத்து வேறுபாடு உள்ளது. எனினும் அவர் ஹி. 80-ல் தான் பிறந்தார் என்று சொல்வது சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அவர் அல் மதீனாவில் பிறந்து வளர்ந்தார். நாம் ஏற்கனவே சொன்னது போல அன்று மதீனா இஸ்லாமிய உலகின் முக்கிய அறிவுசார் நகரங்களில் ஒன்றாக விளங்கியது. மற்றொரு பக்கம் (கூஃபா) ஈராக் என இவ்விரு நகரங்களும் இஸ்லாமிய உலகின் இரு அறிவுசார் மையங்களாக விளங்கின.
அறிவுத் தளம்
நபி வீட்டார் (அஹ்லுல் பைத்) தொடர்பான ஆரம்பகால அரசியல் நிகழ்வுகள் மற்றும் பாரதூர விளைவுகளை நாம் ஏற்கனவே பார்த்தோம். அத்தகவல்களை நினைவு மீட்டிப் பார்த்தால், இஸ்லாமிய விவகாரங்களில் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு ஒருவகையில் ஏதுவான நகரமாக மதீனா ஏன் மாறியது என்று புரியும். அறிவுத் துறையில் மதீனாவின் அந்தஸ்துக்கு கண்ணியம் செலுத்தும் பொருட்டு நபி வீட்டாரும் அங்கேயே வசித்தனர். இதில் இமாம் ஸைத் மட்டும் விதிவிலக்கு என்று முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.
அல் மதீனா பற்றி மனதில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில் அது மாணவர்கள் மற்றும் அறிஞர்களால் ஜொலித்துக் கொண்டிருந்தது. அறிவுத் தரம் மற்றும் புலமைக்குப் பெயர் பெற்ற குடும்பப் பின்னணியில் இருந்து இமாம் ஜாஃபர் அல் சாதிக் வருகிறார். இதற்கு பரவலான அங்கீகாரம் இருந்தது. அதே சமயம் அரசியல் மட்டத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வ அச்சம் இருந்தது. மேலும் மதீனா இமாம் ஜாஃபரின் பாட்டனார் இமாம் அலீ ஸைனுல் ஆபிதீன் மற்றும் இமாம் ஜாஃபரின் தந்தை இமாம் முஹம்மது அல் பாக்கிரின் வசிப்பிடமாகவும் இருந்தது.
மக்காவைப் பற்றி தனியாகச் சொல்லத் தேவையில்லை. மக்காவின் இணைநகரம் போல மதீனா இருந்தது. முஸ்லிம்கள் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக மக்காவுக்குச் செல்லும் போதெல்லாம் மதீனாவுக்கும் சென்றனர். அப்படிப் போகும்போது அங்கிருந்த பள்ளிவாசல்களில் நடைபெற்ற பல்வேறு வகுப்புகளில் கலந்து கொண்டனர். இமாம் ஜாஃபர் சாதிக் காலத்திலும், அதற்கு முன்னர் அவருடைய தந்தையும், அதற்கு முன்னர் அவருடைய பாட்டனாரும் நடத்திய வகுப்புகள் முஸ்லிம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. அதேபோல இமாம் மாலிக், சுஃப்யான் அல் தவ்ரி என மேலும் பல அறிஞர்கள் வகுப்புகள் நடத்தி தங்கள் கருத்துகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர்.
இவ்வகுப்புகளில் பங்குபெற்ற மக்கள், யாருடைய கருத்துகளை ஏற்றுக் கொள்வது என்று தாமாகவே முடிவு செய்பவர்களாக இருந்தனர். உதாரணமாக இமாம் ஜாஃபர் அல் சாதிக்கின் கருத்துகளை ஏற்பதா அல்லது இமாம் மாலிகின் கருத்துகளை ஏற்பதா என்பதை அவர்களே முடிவு செய்வர். இதில் தடங்கல் எதுவும் இருக்கவில்லை. இப்படியாக முஸ்லிம் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் இமாம் ஜாஃபர் அல் சாதிக்கின் கருத்துகளைக் கேட்டு அவரின் பின்பற்றாளர்களாக மாற விருப்பம் தெரிவித்தனர். அரபியில் இது ‘யதஷைய்யவூன லி அஹ்லல் பைத்’ என்று சொல்லப்பட்டது. இதன் பொருள்: ‘(முந்தைய ஆண்டுகளில் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்களின்) சந்ததியினரின் அணியில் —தளத்தில் மட்டுமின்றி அரசியல் தளத்திலும்— சேர்கிறோம்’.
இப்படி இமாம்களை பின்பற்றியவர்களுள் —அவர்களுடைய மாணவர்கள், பணியாளர்கள், பின்பற்றாளர்கள் என— நேர்மையானவர்களும் இருந்தனர்; நேர்மையற்றவர்களும் இருந்தனர். இமாம் ஸைனுல் ஆபிதீன், முஹம்மது அல் பாகிர், ஜாஃபர் அல் சாதிக் என அனைவரும் ‘நேர்மையான பின்பற்றாளர்கள், வெவ்வேறு நலன்களுக்காகப் பின்பற்றியவர்கள்’ என்ற பிரச்சனையை சந்திக்க வேண்டியிருந்தது.
பிரபலமான இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் இமாம் ஜாஃபர் அல் சாதிக்கின் வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களாக இருந்தனர். அவர்களுள் சிலரின் பெயர்கள் பின்வருமாறு: சுஃப்யான் அத் தவ்ரி, சுஃப்யான் இப்னு உயைனா, அபூ ஹனீஃபா மற்றும் மாலிக். இவர்கள் அனைவரும் சில மாதங்கள் அல்லது ஓரிரு வருடங்கள் என வெவ்வேறு கால அளவில் அவருடைய வகுப்புகளில் கலந்து கொண்டனர்.
இறுக்கம் இல்லை
அன்றைய காலம் குறித்த புரிதலைத் தரும் ஒரு சம்பவத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஒருமுறை அல் சாதிக்கின் தந்தை இமாம் முஹம்மது அல் பாக்கிர் குர்ஆன், ஹதீசை விளக்கி தன் கருத்துகளை எடுத்துரைத்துக் கொண்டிருந்த போது அபூ ஹனீஃபா அங்கு வந்தார். ஈராக்கில் வசித்த அபூ ஹனீஃபா மதீனா சென்ற போது இமாம் அல் பாக்கிரைச் சந்திக்க எண்ணி அங்கு சென்றார். அபூ ஹனீஃபா தீவிர சுயகருத்துச் சார்பு கொண்டவர் என அன்று அறியப்பட்டிருந்தார். சில இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் செயல்களைக் கொண்டு மட்டும் பெயர் பெறுவதில்லை. ஹதீஸ்கள் அல்லது ஒரு கருத்தின் சூழல் என்பது பற்றியெல்லாம் பெரிதும் கவலைப்படாமல் தன் சுய கருத்தை தாராளமாக விதியாக்குபவர் என்று அபூ ஹனீஃபா பேர் பெற்றிருந்தார். இத்தகைய சூழலில், இமாம் அல் பாக்கிர் அபூ ஹனீஃபாவை இதற்கு முன் சந்தித்திராத நிலையில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.
அவர்களிடையே நிகழ்ந்த உரையாடல் பின்வருமாறு இருந்தது:
இமாம் பாக்கிர்: என் பாட்டனாரின் மார்க்கத்தில் (தீன்) நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்கள் என்று பரவலாகப் பேசப்படுகிறதே?
அபூ ஹனீஃபா: நான் இவ்விஷயத்தை அப்படிப் பார்க்கவில்லை. உங்களுக்காக இதை விளக்கிச் சொல்கிறேன். பலவீனமானவர் யார்? ஆணா பெண்ணா?
இமாம் பாக்கிர்: பெண்தான்.
அபூ ஹனீஃபா: எனில் (வாரிசுரிமை சட்டத்தில்) பெண்ணின் பங்கு என்ன?
இமாம் பாக்கிர்: ஆணுக்கு இரண்டு மடங்கு. பெண்ணுக்கு ஒன்று.
அபூ ஹனீஃபா: நானும் இப்படித்தான் விளக்கமளித்தேன். உங்கள் பாட்டனாரும் (இறைத்தூதர்) இப்படித்தான் கூறியுள்ளார். நான் அலட்சியமாக உள்ளேன் எனில், என் மீது சுமத்தப்படும் குற்றம் உண்மையாக இருந்திருந்தால், ‘பெண் பலவீனமானவள் என்பதால் அவளுக்கு இரண்டு மடங்கு ஆணுக்கு ஒரு மடங்கு’ என்றல்லவா சொல்லியிருப்பேன்.
அபூ ஹனீஃபா மேலும் தொடர்ந்தார்.
அபூ ஹனீஃபா: தொழுகை, நோன்பு இரண்டில் எது முன்னுரிமை பெறுகிறது?
இமாம் அல் பாக்கிர்: தொழுகை.
அபூ ஹனீஃபா: இதைத்தான் உங்கள் பாட்டனாரும் சொன்னார். என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு உண்மை எனில், ஒரு பெண் தன் மாதவிலக்கு முடிந்த பிறகு தான் விட்ட தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டும் என்றல்லவா சொல்லியிருப்பேன். ஆனால் ஒரு பெண் தான் விட்ட நோன்புகளைத்தான் மீண்டும் நோற்க வேண்டும். தொழுகையை அல்ல.
மேலும் தொடர்ந்த இமாம் அபூ ஹனீஃபா, பின்வருமாறு கேட்டார்.
அபூ ஹனீஃபா: எது அதிகம் அசுத்தமானது? சிறுநீரா விந்துவா?
இமாம் அல் பாக்கிர்: சிறுநீர்தான் அதிகம் அசுத்தமானது.
அபூ ஹனீஃபா: இதைத்தான் இறைத்தூதரும் கூறினார். நான் உட்பட பிறரும் இதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பிறர் சொல்வது போல நான் சுயகருத்துக்கு முன்னுரிமை வழங்கியிருந்தால், என்னுடைய சட்டவியல் கருத்து, ‘ஒருவர் ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின் குளிக்க வேண்டும். தாம்பத்திய உறவுக்குப் பின் உளு செய்ய வேண்டும்’ என்றல்லவா இருந்திருக்கும்.
இதைக் கேட்டதும் இமாம் அல் பாக்கிர் அபூ ஹனீஃபாவை ஆரத் தழுவி முத்தமிட்டார். இதிலிருந்து அறிஞர்கள் மத்தியில் அவர்களுடைய அறிவுசார் சிந்தனா முயற்சிகளுக்கு (இஜ்திஹாத்) மதிப்பு இருந்தது என்பது தெரிகிறது. ஆனால் இன்றைய கல்வியறிவற்ற முஸ்லிம்களின் பேச்சைக் கேட்டால், இவ்வறிஞர்களுக்கு மத்தியில் ஒருவித இறுக்கம் அல்லது பகை கூட இருந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் வரலாறு அப்படிச் சொல்லவில்லை. அறிஞர்களுக்கு மத்தியில் பகை இருக்கவில்லை என்பதைக் காட்டும் இச்சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. இன்றுதான் இப்படியான பகை உள்ளது. அன்று அப்படி இருக்கவில்லை.
அபூ பக்கரும் உமரும்
அடுத்து மற்றொரு பிரச்சனை உள்ளது. அது முஸ்லிம் பொதுப் புத்தியில் அன்றும் இருந்தது; இன்றும் தொடர்கிறது. அதுதான் அபூ பக்கர் மற்றும் உமர் தொடர்பான பிரச்சனை. வரலாறை படிக்கும் சிலர், இமாம்கள் அபூ பக்கர் மற்றும் உமரை வெறுத்தனர் என்று நினைக்கின்றனர். வெறுக்கவில்லை என்றாலும் அவ்விருவர் விஷயத்தில் ஆர்வமின்றி இருந்ததாக அவர்கள் நினைக்கின்றனர். இந்த எண்ணம் அன்றும் இருந்தது; இன்றும் உள்ளது.
இவ்விஷயம் குறித்து நான் தாழ்மையுடன் படித்தவரையில் சொல்கிறேன்: இமாம் ஸைனுல் ஆபிதீன், இமாம் முஹம்மது அல் பாக்கிர் மற்றும் இமாம் ஜாஃபர் அல் சாதிக் ஆகியோரின் பண்பு அப்படி இருக்கவில்லை. பிற இமாம்கள் பற்றி இவ்வகுப்புக்காக நான் படிக்கவில்லை என்றாலும், அவர்கள் குறித்தும் என்னால் இப்படிக் கூற முடியும். இமாம் அல் பாக்கிரும் அவருடைய மகன் இமாம் அல் சாதிக்கும் அபூ பக்கர் மற்றும் உமர் குறித்து சாதகமாகவே பேசியுள்ளனர். எனினும் இதில் உஸ்மானைச் சேர்க்க முடியாது. ஏனெனில் உஸ்மானின் காலம் குறித்து பல்வேறு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நம்மால் முன்வைக்க முடியும்.
இமாம் அல் பாக்கிர்
இமாம் சாதிக்கின் தந்தை அல் இமாம் அல் பாக்கிர் ஆவார். அவர் குர்ஆன், ஹதீஸ் மற்றும் சட்டவியல் குறித்த ஞானத்துக்கு பெயர் பெற்றவர். இங்கு ஹதீஸ் குறித்து மற்றொரு செய்தியைச் சொல்லியாக வேண்டும். மதீனாவில் இருந்த இமாம்கள், இமாம்களின் அறிவிப்பு வரிசையில் வராத பிற அறிவிப்புகளை அறியாமல் இருந்தனர் அல்லது அவற்றுக்கு செவிசாய்க்காமல் இருந்தனர் என்று சிலர் நினைக்கின்றனர். இந்த எண்ணம் சரியல்ல என்று நினைக்கிறேன். மதீனா அறிவுக் கேந்திரமாக இருந்தது. நபித் தோழர்களும் இரண்டாம் தலைமுறையினரும் (தாபியீன்) மேற்கோள் காட்டிய ஹதீஸ்களை இந்த இமாம்கள் கேட்டனர். அவை அவர்களின் குர்ஆனிய அறிவோடும், அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்த ஹதீஸ்களோடும் முரண்படாத வரையில் அந்த ஹதீஸ்களை மேற்கோள் காட்டுவதில் அவர்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. இன்று ‘ஷியா’ சிந்தனை கொண்ட பலர் கொண்டுள்ள கருத்துக்கு இது மாற்றமானது என்று நான் நினைக்கிறேன்.
தந்தையை அறிவது மகனைப் பற்றிய புரிதலைத் தரும் என்பதால் இங்கு இமாம் முஹம்மது அல் பாக்கிரைப் பற்றி பேசுகிறேன். இதே குடும்பத்தில் பிறந்த இமாம் சாதிக், தந்தையின் அறிவுக்கு நேரடியாக ஆட்பட்டிருந்தார். அல் இமாம் அல் பாக்கிர் இவ்வாறு கூறினார்: “மா தஃகல கல்ப இம்ரியின் ஷைய்வுன் மினல் கிப்ரி இல்லா மகச மின் அஃக்லிஹி மா தஃகல”. ஆழமான அறிவையும், அதிகமான வாழ்வியல் அனுபவத்தையும், மனித இயல்பு பற்றிய அளவிடற்கரிய புரிதலையும் இக்கூற்று வெளிப்படுத்துகிறது. இதன் பொருள்: ‘மனிதனின் உள்ளத்தில் இம்மியளவு அகந்தை புகும்போதெல்லாம் அது அவனுடைய அறிவில் குறையை ஏற்படுத்திவிடும்’.
வாழ்க்கை குறித்து தந்தை மகனுக்கு அளித்த ஆழமான மற்றும் முழுமையான புரிதலைத் தரும் மற்றொரு அறிவுரை பின்வருமாறு: “உன் வாழ்க்கையில் சோம்பல் மற்றும் எரிச்சல் அடைவது குறித்து எச்சரிக்கிறேன். இவ்விரண்டும் எல்லா அழிவிற்கும் திறவுகோல். நீ வாழ்க்கையில் உந்துதல் இன்றி இருந்தால் உன் மீது பொறுப்பாக இருக்கும் சத்தியத்தை நிலைநாட்ட முடியாமல் போகும். அதே போல எரிச்சலுற்று இருந்தால் உன் வாழ்வு முழுதும் உன்னோடு பிணைக்கப்பட்டுள்ள சத்தியத்தை பொறுமையாகக் கையாள முடியாமல் போகும்.” அவர் மேலும் கூறியதாவது, “செல்வந்தர்களோடு இணக்கம் காட்டும் அறிஞரைப் பார்த்தால் அவர் உலகாதய அறிஞர் என்று அறிந்துகொள். அதிகாரிகள் அல்லது ஆட்சியில் இருப்பவர்களோடு தேவையின்றி உறவு பாராட்டும் அறிஞர், திருடன் என்று அறிந்துகொள்”.
இமாம் அல் பாக்கிர் ஹி. 114-ல் மறைந்தார். சில வரலாற்று நூல்கள் அவர் ஹி. 115-ன் துவக்கத்தில் மறைந்தார் என்கின்றன.
இரண்டு வம்சங்களையும் சார்ந்தவர்
இமாம் அல் சாதிக்கின் தாயாரான இமாம் முஹம்மது அல் பாக்கிரின் துணைவியார் பெயர், ஃபர்வா பின்து அல் காசிம் இப்னு முஹம்மது இப்னு அபூ பக்கர். ஆரம்பகால அரசியல் வரலாற்று விளக்கங்களுக்குச் சென்றால், இமாம் அலீ மற்றும் முஆவியாவுக்கு இடையே நடந்த போரில் இமாம் அலீயின் பக்கம் நின்ற முஹம்மது இப்னு அபூ பக்கர் அருவருக்கத்தக்க வகையில் கொல்லப்பட்டார் என்று அறிகிறோம். கண்டந்துண்டமாக வெட்டப்பட்டு, அவருடைய உடல் பாகங்கள் கழுதையின் வயிற்றில் திணிக்கப்பட்டன என்று சில நூல்கள் கூறுகின்றன. இமாம் சாதிக்கின் தாயாருடைய பாட்டனாருக்கு நடந்த கதி இது.
ஆனால் ஏதோ காரணத்துக்காக சன்னிகள் மத்தியிலும், ஷியாக்கள் மத்தியிலும் இது பரவலாகப் பேசப்படுவதில்லை. இது ஏன் என்று நான் அறிவேன். அபூ பக்கரின் கொள்ளுப் பேத்தியைத்தான் இமாம் அல் பாக்கிர் திருமணம் புரிந்தார் என்ற தகவல் ஏன் கவனம் பெறுவதில்லை என்பதற்கான காரணத்தை விளங்கிக் கொள்வதற்குப் போதுமான தகவல்களை நீங்களும் பெறுகிறீர்கள் என்று நம்புகிறேன். நமக்குச் சொல்லப்படும் வரலாறுகளைக் கேட்டால் ‘இது உண்மையாக இருக்க முடியாது’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. பலர் இது குறித்து பேச விரும்புவதில்லை. இதுதான் இங்கு பிரச்சனை. என்னைப் பொருத்தவரை இது ஒரு முக்கியமான விஷயம். இது குறித்து பலர் சிந்திக்க வேண்டும். முஸ்லிம்களை கொஞ்சமாவது நெருக்கமாகப் பிணைக்கும் தகவல் இது. இந்த நெருக்கம் நமக்கு இப்போது அவசியம் தேவைப்படுகிறது.
இமாம் அலீயின் வீட்டில்தான் முஹம்மது இப்னு அபூ பக்கர் வளர்க்கப்பட்டார். இமாம் அலீதான் அவரை வளர்த்தார். ஆக முஹம்மத் இப்னு அபூ பக்கர், இமாம் ஹசன் மற்றும் இமாம் ஹுசைன் ஆகியோரை நெருங்கிய நண்பர்கள் அல்லது சகாக்கள் என்று சொல்லலாம்.
இப்பொதுவான பின்னணியை வைத்துப் பார்த்தால், இமாம் அல் சாதிக் அறிவுப் பணியாற்றிய, கற்றல், ஆய்வுகள் போன்றவற்றில் ஈடுபட்ட குடும்பத்திலிருந்து வருகிறார் என்ற பிம்பம் கிடைக்கிறது. அவர் ஹி. 80-ல் பிறந்தார் என்று கூறினேன். வேறு சில நூல்கள் அவர் ஹி. 83-ல் பிறந்தார் என்கின்றன. இந்த வேறுபாட்டை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஹி. 80 என்று சொல்வதில் நான் திருப்தி அடைகிறேன். ஹி. 80-ல் தான் இமாம் ஸைதும் பிறந்தார். ஆக, சிறிய தந்தையும், மகனும் ஒரே ஆண்டில் பிறந்தனர். (இமாம் ஸைது இமாம் ஜாஃபர் சாதிக்கின் சிறிய தந்தை ஆவார்) இதே ஆண்டில்தான் இமாம் அபூ ஹனீஃபாவும் பிறந்தார். இந்த ஆண்டில்தான் சட்டவியலாளர்கள் உருவாகத் தோன்றினர் என்று படுகிறது.
இமாம் ஜாஃபர் சாதிக்கின் பாட்டனார் அறிஞராகவும் இமாமாகவும் இருந்தார். அவருடைய தந்தையும் அறிஞராகவும் இமாமாகவும் இருந்தார். எனவே இவரும் அறிஞர் மற்றும் இமாம் ஆவதற்கு முன்னணி நிலையில் இருந்தார். ஜாஃபர், ஸைத் மற்றும் அபூ ஹனீஃபாவின் சமகாலத்தில் இப்னு ஷிஹாப் அஸ் ஸுஹ்ரி என்று மற்றொரு அறிஞர் இருந்தார். நபித் தோழர்களின் தோழராக இருந்த இவர் —மற்ற சட்டவியலாளர்களைக் காட்டிலும்— ஸைதுக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார்.
ஜாஃபரின் தாயார் காசிமுடைய மகள் என்று பார்த்தோம். காசிம், முஃமின்களின் அன்னையார் ஆயிஷாவின் வீட்டில் வளர்க்கப்பட்டார் என்பது வரலாற்றின் இடுக்குகளில் ஒளிந்துள்ள, சாதாரண முஸ்லிம்களின் மனதில் பதியாத மற்றொரு செய்தி. எப்படி முஹம்மது இப்னு அபூ பக்கர் இமாம் அலீயின் வீட்டில் வளர்க்கப்பட்டாரோ அதே போல காசிம் தன் அத்தை ஆயிஷாவின் வீட்டில் வளர்க்கப்பட்டார்.
இமாம் ஜாஃபர் தனது பதின் பருவத்தில், இருபதுகளில் தன் தாய்வழிப் பாட்டனாரை சந்தித்தார். அவர்களுக்கிடையே நெருக்கமான உறவு இருந்தது. இத்தகவல்களை நான் இங்கே சொல்லியாக வேண்டும். ஏனெனில் நமக்குக் கிடைக்கப் பெற்ற வரலாறு அவர் ஒரு வம்சத்தை மட்டும் சார்ந்தவர் என்றும் மற்றொரு வம்சத்தைச் சாராதவர் என்றும் சொல்கிறது. அவர் இரண்டு வம்சங்களையும் சார்ந்தவரே. இவ்விஷயத்தில் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். இமாம் சாதிக்கின் பாட்டனார், அல் காசிம் ஹி. 108-ல் —இமாம் சாதிக்கின் தந்தை மரணிப்பதற்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்— மறைந்தார். அன்றைய நிகழ்வுகளின் போது அல் காசிம் ஆயிஷாவின் கருத்துகள் பக்கம் மனச்சாய்வு கொண்டிருந்தார். இவர் குறித்து சிலர் பேசாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.
வரலாற்று நூல்களில் மற்றொரு தகவலையும் நான் பார்த்தேன். அபூ பக்கர் இறந்த பிறகு அவருடைய மனைவியை இமாம் அலீ மணம் புரிந்தார் என்கிறது அத்தகவல். நான் இதை அங்கீகரிக்கவோ மறுக்கவோ இல்லை. உள்ள தகவலை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இது சரியாகவும் உண்மையாகவும் இருக்கும்பட்சத்தில் —சிலர் நாம் நம்ப வேண்டும் என்று நினைக்கிறபடி— எதிர் துருவங்களில் இருக்கும் இவ்விருவருக்கும் இடையே இணக்கம் காணமுடியாத அளவு வேறுபாடு இருக்கவில்லை என்று தெரிகிறது.
அல் காசிம் மிகவும் கற்றரிந்த மனிதராக இருந்தார். ஹதீஸ், குர்ஆன் பற்றிய அறிவும் தனக்கென சுய அபிப்பிராயமும் கொண்டிருந்தார். அவருக்கென சட்டவியலும் இருந்தது. அவர் சாதாரண மனிதராக இருக்கவில்லை.
இமாம் அல் பாக்கிர் இறந்த போது அவருடைய மகன் இமாம் சாதிக்குக்கு கிட்டத்தட்ட 34 அல்லது 35 வயது இருந்திருக்கும். எனவே தந்தையிடமிருந்து கல்வி கற்பதற்கு அவருக்கு நீண்ட காலம் கிடைத்தது. குர்ஆன், ஹதீஸ், சட்டவியல் போன்றவற்றை தந்தையிடம் கற்ற இமாம் அல் சாதிக், அவருடைய மறைவுக்குப் பிறகு மதீனாவுக்கு வரும் மாணவர்களை ஈர்க்கும் மையமாக விளங்கினார்.
அறிவியல்
இமாம் அல் சாதிக்குக்கு ஜாபிர் இப்னு ஹையான் என்றொரு மாணவர் இருந்தார். இன்றைய மொழியில் சொன்னால் அவர் ஒரு விஞ்ஞானி. இயற்பியல், வேதியியல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்த அவர், இமாம் அல் சாதிக்குக்கு நெருக்கமானவராக இருந்தார். சில —இப்படிச் சொல்ல நான் விரும்பவில்லை என்றாலும் அப்படித்தான் சொல்ல வேண்டியுள்ளது— சன்னி வரலாற்று நூல்களில் ஜாபிர் இப்னு ஹையான் ‘ரஜுலுன் ஃபீஹி தஷைய்யு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளார். ‘தஷைய்யுவின் தாக்கத்துக்கு ஆளானவர்’ என்பது இதன் பொருள். அதாவது ‘போலி ஷியா’ என்பதுதான் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது.
எனினும் அவரை எப்படி வகைப்படுத்தினாலும் தன்னளவில் அவர் ஒரு விஞ்ஞானியாக அறியப்படுகிறார். அவருடைய அரசியல் அல்லது சட்டவியல் சாய்வுகளை ஒரு கணம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் அவருடைய படைப்புகள் கறாராக அறிவியல் சார்ந்து இருந்தன. அல் கவுனியாத் என்று அன்று சொல்லப்பட்ட, நம்மைச் சுற்றியுள்ள பௌதீக உலகத்தைப் பற்றி அவர் பல நூல்கள் இயற்றியுள்ளார். அவர் இமாம் அல் சாதிக்கின் கிட்டத்தட்ட 500 ஆக்கங்களை பதிப்பித்ததாக —‘பதிப்பித்தல்’ என்றொரு பணி அன்று இருக்கவில்லை. அதற்கு இணையான பணியைச் செய்ததாக— அறியப்படுகிறார்.
சட்டவியலாளர்களின் வாழ்க்கை வரலாறை படித்துக் கொண்டிருக்கும் நாம், அறிவியல் சிந்தனை கொண்டவர்கள் சட்டவியலாளர்களின் மாணவர்களாக இருப்பதை முதல் முறையாக இங்கு எதிர்கொள்கிறோம். பிற சட்டவியலாளர்கள் மற்றும் இமாம்களை படித்த போது, ஜாபிர் இப்னு ஹையான் போன்ற ஒருவரை நான் எதிர்கொள்ளவில்லை. அக்கால சட்டவியலாளர்களின் பண்பாக இருந்த பாரம்பரிய சட்டவியல் என்பதைத் தாண்டி கற்பித்தலின் வட்டம் இப்போது விரிவடைந்து இருந்தது. இமாம் அல் சாதிக்கும் இப்படிப்பட்ட அறிவுக்கு பரிச்சயமானவராகவும், அதில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தார். நிச்சயமாக அது குர்ஆனுக்கு முரணாகவோ அல்லது குர்ஆனோடு பொருந்தாததாகவோ இருக்கவில்லை. அவருடைய அணுகுமுறை, கல்வி, புரிதல் மற்றும் உண்மைகள் பற்றிய உரைகள் அல்லது அறிவியல் தர்க்கங்கள் அனைத்தும் குர்ஆனிய, இஸ்லாமிய பின்புலத்தில்தான் இருந்தன.
இந்த காலகட்டத்தில்தான் உலக தத்துவங்கள் —குறிப்பாக ஐரோப்பிய மற்றும் இந்திய தத்துவங்கள்— முஸ்லிம் உலகினுள் கசியத் துவங்கின. ஏற்கனவே சிறப்புத் தகுதி பெற்றிருந்த மக்கா மற்றும் மதீனா நகரங்களோடு சேர்ந்து கூஃபா, பஸ்ரா, பின்னர் பாக்தாது, டமாஸ்கஸ் ஆகிய நகரங்களும் இத்தகைய அன்னிய தத்துவங்களை ஈர்க்கும் அறிவுசார் காந்தங்களாக மாறின.
எனினும் அறிவுசார் விவகாரங்களில் மக்கா பெரிய அளவில் பங்களிக்கவில்லை. அன்றைய அரேபியச் சூழலில், அரேபியர்கள் பிராதனமாக வாழ்ந்த அரபு தீபகற்பம் மற்றும் அதன் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தத்துவம் என்ற ஒன்று இருக்கவில்லை. பிற பகுதிகளில் இஸ்லாம் பரவியபோதுதான் இஸ்லாமிய சிந்தனை இத்தகைய தத்துவ உள்ளீட்டை பெற்றது. அறிஞர்களாக இருப்பவர்கள்தான் இத்தகைய தத்துவ அலை வீச்சை முதலில் உணர்வர். அன்றிருந்த இமாம் ஜாஃபர் சாதிக் இதை நன்கு அறிந்திருந்தார்.
அல் ஜஃப்ர்
அடுத்து மற்றொரு விஷயத்துக்கு வருவோம். சிலர் இதை சர்ச்சையாகவும், வேறு சிலர் நகைப்புக்குரியதாகவும் இன்னும் சிலர் கேள்விக்குறியாகவும் பார்க்கின்றனர். அதுதான் அல் ஜஃப்ர். வரலாற்று ரீதியாகவும் மரபு ரீதியாகவும் தங்களை இமாம் அல் சாதிக் மற்றும் தஷய்யுவோடு தொடர்புபடுத்துபவர்கள், பிற மனிதர்கள் யாருக்கும் வழங்கப்படாத, இமாம்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒரு வகையான ஞானம் உள்ளது என்று கூறுகின்றனர். இதன் மூலம் இமாம்கள் மறைவானவற்றை —அல் ஃகைப்— அணுகும் வழி பெற்று கிட்டத்தட்ட இயற்கைக்கு அப்பாற்பட்டவற்றை அறிவர் என்கின்றனர். இந்த வகை ஞானம்தான் அல் ஜஃப்ர் ஆகும். அல் ஜஃப்ர் என்பதற்கான மிக எளிமையான விளக்கம் இது.
ஷரீயத், சட்டவியல், குர்ஆனிய ஞானம் ஆகியவற்றோடு இந்த வகை ஞானமும் உள்ளது என்றும் இறைத்தூதர் (ஸல்) தாமே இந்த வகை ஞானத்தை இமாம் அலீக்கு வழங்கிய போது இது துவங்கியது என்றும் அன்றிலிருந்து அடுத்தடுத்த இமாம்களுக்கு தொடர்ந்தது என்றும் கூறப்படுகிறது. பன்னிரண்டாவது இமாமின் மீள்வருகை வரை இது தொடரும் என்று நினைக்கிறேன்.
மொழியியல் ரீதியாகப் பார்த்தால் ஜஃப்ர் என்ற சொல்லை பின்வருமாறு விளக்கலாம். அதிகமாக இரை உண்ட சிறிய ஆடு ஒன்று நன்கு கொழுத்துக் காணப்படும். இப்படி அது சேர்த்த மிகைப்படியான சதையை ஜஃப்ர் என்பர். இதை ஷரீயத் அர்த்தத்துக்கு மாற்றினால் அது மிகைப்படியான ஞானம் என்று பொருள்படும். கற்றல் (தலக்கீ) மூலம் பெற்ற ஞானம் அல்ல இது. அறிவு பொதுவாக அனுபவம், ஆய்வுகள் மற்றும் கண்டுபிடித்தல் ஆகியவற்றிலிருந்து வரும். ஆனால் இந்த வகை அறிவு தெய்வீக மூலத்திலிருந்து வருகிறது.
சில ஷியா அறிஞர்கள், ஜஃப்ர் என்பது எழுத்துக்கள் பற்றிய ஞானம் என்கின்றனர். அரபி எழுத்துகளான அலிஃப், பா, தா எனத்தொடரும் எழுத்துகள் வாழ்வின் முக்காலங்களில் நிகழும் சம்பவங்கள் தொடர்புடைய அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன என்கின்றனர். அல் ஜஃப்ர் என்பதற்கான ஒருமித்த விளக்கம் அல்ல இது. சில அறிஞர்கள் இதை இப்படி விளக்கினர். உலக முடிவு வரை இது தொடரும் என்றனர்.
“எங்களிடம் —அதாவது இமாம்கள்— அல் ஜஃப்ர் உள்ளது” என்று அல் இமாம் அல் சாதிக் சொன்னதாக சில வரலாற்று நூல்கள் கூறுகின்றன. அல் ஜஃப்ர் என்பது தோலினால் செய்யப்பட்ட ஒரு கொள்கலன்; அதில் பனீ இஸ்ராயீல் முதல் முன்னிருந்த அறிஞர்கள் அனைவரின் ஞானமும் அடங்கியுள்ளது என்று அவர் விளக்கியதாக இந்நூல்கள் கூறுகின்றன. இஸ்லாமிய பின்புலத்தில் ‘பனீ இஸ்ராயீல்’ என்பதைக் கேட்கும்போது நான் அதை கவனமாக அணுக முற்படுகிறேன். என்னளவில் இது ஒரு இஸ்ராயிலியாத்* என்பதாகத் தெரிகிறது. குர்ஆனிலேயே இஸ்ராயிலியாத் புகுந்த போது இமாம்களைப் பற்றிய பேச்சுக்களில் புகுந்திருக்காதா என்ன?
(*) யூத அல்லது கிறித்துவ பின்புலத்தில் இருந்து தோன்றிய தகவல்கள். (மொ.ர்)
இத்தகவல்களின் மூலம் பின்வரும் நூல்களாகும்: இப்னு ஃகல்லிகான் எழுதிய ‘வ ஃபியதுல் ஆயான்’, ஷேக் ஹுசைன் அல் முளஃப்ஃபர் எழுதிய ‘அல் சாதிக்’ மற்றும் மூசா ஜாதல்லாஹ் எழுதிய ‘ஷியா ஃபில் அகாயித் ஷியா’. குறிப்பாக நான் இப்போது பேசும் இஸ்ராயிலியாத் தொடர்பான தகவல் அல் சாதிக் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இவர் —பொதுவான அர்த்தத்தில்— ஷியா அறிஞர் ஆவார். அல் ஜஃப்ர் என்பது பற்றி பல்வேறு தகவல்கள் உள்ளன. இது பற்றி மக்கள் விழித்தெழுந்து இயன்ற அளவு சிறப்பாகச் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.
எப்படி சன்னிகளுக்கு அல் புகாரி உள்ளதோ அப்படி ஷியாக்களுக்கு அல் குலைனி என்ற நூல் உள்ளது. பன்னிருவர் வகை ஷியாக்களின் முக்கிய நான்கு உசாத்துணை நூல்களுள் அல் குலைனியும் ஒன்று. அதில் ‘அல் ஜஃப்ர் என்பது மூசாவின் தவ்ராத், ஈசாவின் இஞ்சீல் (புதிய ஏற்பாடு), அனைத்து இறைத்தூதர்கள், அவுசாக்கள், பனீ இஸ்ராயிலின் முந்தைய அறிஞர்கள் ஆகியோரின் ஞானம், அனுமதிக்கப்பட்டது மற்றும் தடுக்கப்பட்டது, கடந்த காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் ஞானத்தை உள்ளடக்கியது’ என்று சொல்லப்பட்டுள்ளது. மீண்டும் சொல்கிறேன்: நம் சிந்தனையையும், இயன்ற அளவு பகுத்தறிவு ரீதியான விளக்கத்தையும் இது வேண்டி நிற்கிறது.
என்னளவில் நான் ஜஃபர் பற்றிய செய்திகளை சந்தேகத்துடனேயே அணுகுகிறேன். என்னைப் போன்ற அடக்கமான அல்லது சாந்தமான ஒருவர் இப்படிச் சொல்லும்போது, அது இமாம் அல் சாதிக்கின் செல்வாக்கு அல்லது மதிப்பை ஏதோ விதத்தில் குறைத்துவிடும் என்று சிலர் நினைக்கின்றனர். நிச்சயமாக இல்லை. இல்லவே இல்லை. உண்மையில் இது போன்ற விஷயத்தோடு அவரை தொடர்பு படுத்துவதுதான் அவருடைய செல்வாக்கையும் மதிப்பையும் குறைக்கும்.
இப்படியொன்று தோன்றியதற்கு ஏதாவது வரலாற்றுப் பின்புலம் இருக்கக் கூடும். மக்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கபடும் போது இப்படித்தான் நடக்கும். இமாம் அல் சாதிக்கின் பின்பற்றாளர்கள் நெருக்கடியில் இருந்தனர். மக்களை அதிகாரப்பூர்வ நெருக்கடிக்கு ஆளாக்கும் போது இப்படிப்பட்ட விஷயங்கள் தோன்றுவது இயல்பு. இது ஷியாக்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது அல்ல. இமாம் அல் சாதிக்கின் பின்பற்றாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது அல்ல. இதுதான் மனித இயல்பு. இன்றைய உலகில் சன்னிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களும் அரசியல் அல்லது சமூக அழுத்தத்துக்கு உள்ளாகும் போது வினோதமான சித்தாந்தங்களை உருவாக்கத் துவங்குகின்றனர்: உதாரணத்துக்கு ‘எல்லா முஸ்லிம்களும் நிராகரிப்பாளர்கள்’ என்று சொல்வதை எடுத்துக் கொள்ளலாம். இப்படியான உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம். இது மறுக்க முடியாத உண்மை. இதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. தங்களை முஸ்லிம்கள் என்று கருதிக் கொள்பவர்கள் முழுமையாக இஸ்லாத்தை பின்பற்றவில்லை என்று சொல்வதற்கும் அவர்களை நிராகரிப்பாளர்கள் என்று சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. முதலாவதை நியாயப்படுத்தி பேச முடியும்; ஆனால் இரண்டாவது, அப்படியல்ல.
முஸ்லிம்களிடம் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிய முற்படுவது நல்லதுதான். அது முன்னேற்றப் பாதையில் ஒரு படியாகும். கடந்த காலப் பிரச்சனையோ; இல்லை நிகழ்கால அல்லது எதிர்காலப் பிரச்சனையோ, அவற்றைக் கண்டறிய முற்படுவதில் எந்தத் தவறும் இல்லை. அல் ஜஃப்ர் என்பதை கேள்விக்குட்படுத்துவதன் மூலம் இமாம் அல் சாதிக்கின் செல்வாக்கையோ, மதிப்பையோ நாம் குறைக்கவில்லை. நம் அறிவைக் கொண்டு பார்க்கும் போது இது ஏற்றுக் கொள்ள முடியாததாகவே உள்ளது.
அல் ஜஃப்ருக்கான ஆதாரம் பெரும்பாலும் அல்-குலைனியில் உள்ளது. எப்படி அல் புகாரியில் சரியில்லாத சில ஹதீஸ்கள் உள்ளனவோ அதே போல அல் குலைனியிலும் சரியில்லாத சில ஹதீஸ்கள் உள்ளன. முதலிலிருந்து கடைசிவரை சரியாக இருக்கும் ஒரு நூல் உண்டென்றால் அது குர்ஆன் மட்டுமே. அதையொத்த வேறொன்று எதுவும் இல்லை. ஆம்! இறைத்தூதரின் சொற்களைத் தொகுக்க மனிதர்கள் முற்பட்டனர். சிலர் அதில் அதிக அளவு வெற்றி பெற்றனர். இன்னும் சிலர் அதில் குறைந்த அளவு வெற்றி பெற்றனர். ஆனால் தவறில் விழாத நூலை யாருமே தொகுக்கவில்லை. எனவே உலகில் வேறு யாரும் பெறாத இந்த வகையான அறிவை இமாம் அல் சாதிக்கும் பிற இமாம்களும் பெற்றிருந்தனர் என்று அல் குலைனி சொல்வாரானால் அவர் எல்லை மீறிச் செல்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
அல் குலைனி மேலும் சொன்னதாவது, “இன்ன ஃபில் குர்ஆனி நக்ஸா – குர்ஆனில் குறை உள்ளது”. ஆனால் பிற ஷியா இஸ்லாமிய அறிஞர்கள் இதை கேள்விக்குட்படுத்தினர். “நீங்கள் எப்படி இப்படிச் சொல்லலாம்?”, என்றனர். ஆக நாம் சில ஷியா அறிஞர்களோடு உடன்படுபவர்களாக, வேறு சில ஷியா அறிஞர்களோடு உடன்படாதவர்களாக, இக்கூற்றில் எந்த உண்மையும் இல்லை என்கிறோம். இது பற்றி விளக்கமாக பின்னர் பார்ப்போம்.
சில ஷியா அறிஞர்களும், வரலாற்றாளர்களும் அல் ஜஃப்ர் பற்றி விரிவாக விளக்கமளிக்காமல் வெறும் குறிப்பாக மட்டும் சொல்லியுள்ளனர். இதிலிருந்து அவர்கள் இவ்விஷயத்தில் முழுமையாக உடன்படவில்லை என்று தெரிகிறது. இவர்களில் சமகால அறிஞர்களும் உள்ளனர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த அன்றைய அறிஞர்களும் உள்ளனர்.
அல் ஃகத்தாபியா என்று பெயர் கொண்ட தஷய்யுவின் ஒரு கிளை உள்ளது என்று சிலர் நம்புகின்றனர். அபுல் ஃகத்தாப் முஹம்மது இப்னு ஸைனப் என்பவரை பின்பற்றிய இவர்கள் இஸ்லாத்தில் பிரதான ஒரு சிந்தனைப் பாங்காக இருக்கவில்லை. ஈராக்கைச் சார்ந்த அவர் தன்னை ஆகப் புனிதராக கருதிக் கொண்டார். அவர்தான் இமாம் அல் சாதிக் இப்படியான ஒரு அறிவை பெற்றுள்ளார் என்று பரப்புரை செய்தார்.
சன்னிகளும் கலந்து கொண்டனர்
இமாம் அல் சாதிக்கிடம் வந்த, மதீனாவில் குழுமிய அறிஞர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களாக இருந்தனர். பொதுவான அறிவுத் துறைகளில் அனைவரும் ஆர்வம் காட்டினர் என்றாலும் சிலர் குர்ஆனில் அதிக ஆர்வம் காட்டினர்; வேறு சிலர் ஹதீசிலும், இன்னும் சிலர் சட்டவியலிலும் அதிக ஆர்வம் காட்டினர். அனைவரும் ஒன்று கூடி தம் அறிவை மேம்படுத்தினர்.
ஷியாக்கள் மட்டுமே இமாம் அல் சாதிக்கின் வகுப்புகளில் கலந்து கொண்டனர் என்று சொல்வது மிதமிஞ்சிய கருத்து. அவருடைய அபிமானிகள், ஆதரவாளர்கள், சீடர்கள், கட்சிக்கார்கள் அனைவரும் அவரிடம் வருவர் என்பது நிச்சயம். ஆனால் சன்னி சட்டவியலாளராகக் கருதப்படும் சுஃப்யான் அத் தவ்ரி போன்ற ஒருவரும் அவருடைய வகுப்புகளில் கலந்து கொண்டார். இமாம் மாலிக்கும் அன்று இமாம் சாதிக்கின் வகுப்புகளில் கலந்து கொண்டார். அவ்வாறே இமாம் அபூ ஹனீஃபாவும். அபூ ஹனீஃபா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இமாம் அல் சாதிக்கின் வகுப்புகளில் கலந்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. ‘லவ்லஸ் ஸனதான்; லஹலக நுஃமான்’ என்பது அபூ ஹனீஃபாவின் பிரபலமான கூற்று. ‘அந்த இரண்டு ஆண்டுகள் இல்லையெனில் நான் அழிந்து போயிருப்பேன்’ என்று இமாம் அல் சாதிக்கின் வகுப்புகளில் கலந்து கொண்ட இரண்டு ஆண்டுகளுக்கு பெருமதியளித்து, ஒலிநயத்துடன் இமாம் அபூ ஹனீஃபா கூறியுள்ளார்.
இமாம் அல் சாதிக் பல்வேறு அறிவுத்துறைகளில் அறிவுப் பரவல் செய்தவறாக அறியப்படுகிறார். அரபு மொழியில் சொல்வதானால், அவர் ஒரு ஹாக்கிம், வதஅ, ஸாஹித் மற்றும் ஆபித் ஆக இருந்தார். இச்சொற்களை மொழிபெயர்ப்பது அவற்றின் அசல் பொருளை குறைத்துவிடும். எனினும் அவற்றை இப்படிச் சொல்லலாம்: ஹாக்கிம் – ஞானி; வதஅ – பக்திமான். தகி என்பதை பக்திமான் என்று புரிந்து கொள்ள வேண்டாம். இவ்வார்த்தைகளை குழப்பிக் கொள்ளாதீர்கள்; ஸாஹித் – உலகப் பற்றற்றவர். பல்வேறு விஷயங்களில் அவருக்கென்று சுயாதீனமான ஒரு உலக நோக்கு இருந்தது. எனவே அவரோடு உடன்படுபவர்கள்தான் பெரும்பாலும் அவருடைய வகுப்புகளில் கலந்து கொள்வர்.
அரசியல்
இமாம் ஜாஃபர் அல் சாதிக் ஈராக் சென்றார் என்றும் சொல்லப்படுகிறது. அப்படிச் சென்றார் எனில், அது குறுகிய காலத்துக்காகவே இருந்தது. அரசியல் விவகாரங்களில் அவர் தன் கருத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தவில்லை என்பது என் கவனத்தை ஈர்க்கிறது. ஆனால் ஷியாக்கள் இது தகியா வின் வெளிப்பாடு என்கின்றனர். அதாவது பாதுகாப்பு கருதி அரசியல் கருத்துகளை அவர் வெளிப்படுத்தவில்லை என்கின்றனர். அவர் அரசியல் அதிகாரத்தை அடைய நினைத்தார் என்று சுட்டும் எந்தவொரு ஆதாரத்தையும் நான் பார்க்கவில்லை. இதன் பொருள் அவர் அன்றைய அதிகார இயங்கியல் குறித்து அறியாமையில் இருந்தார் என்பதல்ல. அது பற்றி அவர் அறிந்தே இருந்தார். இதன் அர்த்தம் அது பற்றி அவர் அக்கறை கொள்ளவில்லை என்பதும் அல்ல. அவர் இது குறித்து அக்கறை கொண்டிருந்தார்.
எனினும் இவரை இமாம் ஸைதோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இமாம் ஸைத் —இப்படிச் சொல்வதை பிரச்சனையாகப் பார்க்காதவர்களுக்கு- இன்றைய மொழியில் ஒரு புரட்சியாளர். இப்படிச் சொல்வதில் பல்வேறு கோட்பாட்டு மற்றும் பாரம்பரிய சிக்கல்கள் -முஸ்லிம் பொதுச் சமூகத்தில்- குறுக்கிடுகின்றன என்பதை நான் அறிவேன். எனினும் விஷயங்களை சார்பொருளின்றி நேரடியாக விளங்கிக் கொள்பவர்களுக்கு, இமாம் ஸைத் இன்றைய உலகில் ஒரு சே குவேரா போல என்று சொல்வேன். அவர் எதையும் சுற்றி வளைக்காமல் நேரடியாக அணுகுபவர். ‘முஸ்லிம்களுக்கு அரசியல் சேதம் நேர்ந்துவிட்டது; அது சரி செய்யப்பட வேண்டும்; யாராவது ஏதாவது செய்தாக வேண்டும்; நாம் செயலற்றுப் போய்விடக் கூடாது’ என்பதை அவர் அறிந்திருந்தார்.
இமாம் அல் சாதிக்கை எடுத்துக் கொண்டால், ‘ஏதாவது செய்தாக வேண்டும்’ என்று அறிந்திருந்தாலும், அச்செயல்பாட்டில் கலந்து கொள்பவராக அவர் இருக்கவில்லை. ‘ஏதாவது செய்தாக வேண்டும்’ என்று நான் சொல்வது இலக்கை நிர்ணயித்து, மக்களை ஒருங்கிணைத்து உலக மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகச் செயல்படுவதை குறிக்கும். இமாம் அல் சாதிக்கின் திட்டம் அதுவாக இருக்கவில்லை. இதன் பொருள் அவர் மாற்றத்தை விரும்பவில்லை என்பதல்ல. தயவு செய்து இதை மிகக் கவனமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
இது குறித்து அவர் பின்வருமாறு கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அத் தகியா என்னுடைய வழிமுறை மற்றும் என் முன்னோர்களின் வழிமுறை – அத் தகிய்யது தீனி வ தீனு ஆபாதி’. இது அவருடைய பிரபலமான கூற்று. தகியா குறித்த அவருடைய நிலைபாட்டை இது விளக்குகிறது. அத்தகியா என்பது பின்வரும் குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
لَا يَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ فَلَيْسَ مِنَ اللّٰهِ فِىْ شَىْءٍ اِلَّاۤ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰٮةً
முஃமின்கள் முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை… [அல் குர்ஆன் 3:28]
இந்த வசனத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் அக்காலச் சூழலுக்குச் செல்ல வேண்டும். முஸ்லிம்கள் அரேபியாவில் ஒரு சமூக அரசியல் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருந்தனர். மதீனாவில் ஒரு இஸ்லாமியச் சமூகமும் அரசாங்கமும் இருந்தது. மக்கள் முஸ்லிம்களாக மாறிக் கொண்டிருந்தனர். இந்த இஸ்லாமிய நிதர்சனம் மதீனாவில் நீடிப்பதையும் அங்கிருந்து வளர்வதையும், அரசியல், கோட்பாடு மற்றும் ராணுவ ரீதியாக எதிர்த்த மக்கள், அதிகார வர்க்கங்கள், குழுக்கள் மற்றும் குலங்கள் அரேபியாவில் இருந்தன.
மதீனாவில் இறைத்தூதரோடு சேர்ந்து இந்த இஸ்லாமிய நிதர்சனத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருந்தவர்கள் முஃமின்கள் என்று அழைக்கப்பட்டனர். கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் வழியாக நடைமுறையிலும் கோட்பாட்டளவிலும் இதை எதிர்த்தவர்கள் காஃபிர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவற்றை மனதில் நிறுத்திக் கொண்டு இந்த வசனத்தை மீண்டும் படியுங்கள்.
இவ்விரு நிதர்சனங்களும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்த சமயம், கொள்கையில் உறுதியாக இருந்த முஸ்லிம்களுக்கு வானிலிருந்து செய்தி வந்தது. அவர்கள் முஃமின்களின் நலன்களைப் பணயம் வைத்து காஃபிர்களுடன் அரசியல் உறவோ, விசுவாசமோ பேணக்கூடாது என்றது அச்செய்தி. உயிர்பிழைக்கவன்றி யார் அவ்வாறு இஸ்லாமிய அதிகாரத் தொகுதியிலிருந்து காஃபிர்களின் அதிகாரத் தொகுதிக்குச் செல்வாரோ அவர் அல்லாஹ்வைச் சார்ந்தவர் அல்ல.
மதீனாவில் அல்லாமல் மக்காவில் -அன்றைய முஷ்ரிக் மக்கா; காஃபிர் மக்கா; மதீனாவோடு போரில் ஈடுபட்டிருந்த மக்கா- ஒரு உறுதிமிக்க முஸ்லிம் வாழ்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தன் இஸ்லாமிய விசுவாசத்தையும் அடையாளத்தையும் வெளிப்படுத்தினால் அவருடைய தலை வெட்டப்படலாம் அல்லது தாங்க முடியாத அளவு சித்திரவதைக்கு ஆளாக்கப்படலாம் அல்லது அது போன்ற எதுவும் அவருக்கு நிகழக்கூடும் என்ற பட்சத்தில் அல்லாஹ் அவருக்கு விதிவிலக்கு அளிக்கிறான் – இல்லா அன் தத்தகு மின்ஹும் துகா.
ஆக இமாம் அல் சாதிக் ‘அத் தகியா என்னுடைய வழிமுறை மற்றும் என் முன்னோர்களின் வழிமுறை’ என்று சொன்னபோது, அன்று நிலவிய அரசியல் பிறழ்வுக்கு எதிராக அவர் நிகழ்த்தக் கூடுமாய் இருந்த எதிர்ப்பு அவருடைய உயிருக்கும் அவருடன் இருந்தவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும், அவர்களின் இருப்பே கேள்விக்குள்ளாகும் என்ற சூழலை அவர் சுட்டுகிறார். அதற்குப் பகரமாகத்தான் அவர் ‘அத் தகியா என்னுடைய வழிமுறை மற்றும் என் முன்னோர்களின் வழிமுறை’ என்று கூறினார்.
இமாம் அல் சாதிக்கை புரிந்து கொள்வதில் ஷியாக்கள் என்போருக்கும் சன்னிகள் என்போருக்கும் இடையே ஒரு நுணுக்கமான வேறுபாடு உள்ளது. இவ்வரலாறை சன்னி பார்வையில் பார்ப்பவர்கள் இமாம் அல் சாதிக் அதிகாரத்தை அடைவதில் அக்கரை காட்டவில்லை என்கின்றனர். ஆனால் ஷியாக்கள் விஷயத்தில் இக்கேள்வியே அர்த்தமற்றது. ஏனெனில் இமாம் என்பதின் விளக்கமே ‘அதிகாரம் உரித்தான ஒருவர்’ என்பதுதான். அவ்வதிகாரம் அவருக்கு வாய்க்கப் பெறாமல் போகலாம். ஆனால் அது அவருக்குரியது.
சமுதாயத்தை கட்டெயெழுப்புவது இமாமின் கடமையல்லவா?
கேள்வி: இமாம் என்று சொல்லும் போது அல்லாஹ்வின் கட்டளை மற்றும் அறிவுறுத்தலுக்கேற்ப சமூகத்தை வழிநடத்துவதற்காக ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுபவர் – குறிப்பாக அரசியல் விவகாரங்களில் அமைப்புகளை உருவாக்குபவர் என்று புரிந்து கொள்கிறோம். இதுதானே இமாம் மற்றும் நபி ஆகியோருக்கிடையேயான வித்தியாசம்? ஒரு நபிக்கு அத்தகைய அமைப்புகள் இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு இமாம் இத்தகைய அமைப்புடன்தான் செயல்பட வேண்டும். அது இல்லாவிடில் அதை உருவாக்க வேண்டும் அல்லவா?
பதில்: ஆம். அதைத்தான் இமாம் அல் சாதிக் செய்து கொண்டிருந்தார். அவர் அவ்வமைப்பை கட்டியெழுப்பிக் கொண்டிருந்தார். எனவேதான், தான் பரப்பிக் கொண்டிருந்த அறிவில் -மக்களின் மனங்களில் விஷயங்களை அவற்றின் சூழலில் அமைக்கும் முயற்சியில்- அவர் கவனம் செலுத்தினார். பல துயரங்கள் அவர் கண் முன் நிகழ்ந்தன. முந்தைய இமாம்களான இமாம் அல் ஹுசைன், அல் இமாம் ஸைத், இமாம் ஸைதின் குழந்தைகள், முஹம்மது அல் நஃப்ஸ் அஸ் ஸகியா, அவருடைய சகோதர் இப்ராஹீம் ஆகியோர் விஷயத்தில் நிகழ்ந்த துயரங்கள் இமாம் அல் சாதிக்கின் காலத்துக்கு முன் அல்லது அவருடைய காலத்தில் நிகழ்ந்தவை. இவற்றை அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
நீங்கள் சொல்வது போல, இமாம் என்பவருக்கான ஒரு பண்பு, அவர் அச்சமூக ஒருங்கிணைப்பை முன்னெடுக்க வேண்டும், விஷயங்களை -குறிப்பாக அரசியல் களத்தில்- சரியான பாதைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் தன் அனுபவம் மற்றும் தான் பார்த்தவற்றைக் கொண்டு இதைச் செய்வதற்கான வழி, முஸ்லிம்களுக்கு சரியான அறிவை புகவட்டுவதே என அவர் முடிவெடுத்தார். அதாவது, ஏற்கனவே நிகழ்ந்துவிட்ட அரசியல் பிறழ்வை சமயம் வரும்போது சரி செய்யும் வகையில் அடிமட்ட நிலையில் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப முயன்றார். இதுதான் அவருடைய புரிதலாக இருந்தது.
கிட்டத்தட்ட ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு இதைச் சொல்வது நமக்கு எளிதாக இருக்கிறது. நம்மில் பலர் பல்வேறு பாரம்பரியங்களை மனதில் இருத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்பாரம்பரியங்களிலிருந்து ஒப்பீட்டளவில் விடுபட்டவர்களிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நாம் படித்த இஸ்லாமிய அறிஞர்களை ஒருவருக்கொருவர் துணை நிற்பவர்கள் என்ற கண்ணோட்டத்தில் அவர்களுடைய வரலாறுகளைப் படிக்குமாறு ஊக்கப் படுத்துகிறேன். நம்மில் பலர் இவ்வரலாறுகளை உதிரிகளாகப் பார்க்கின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் துணை நிற்காதது போலவும், ஒருவரையொருவர் பலப்படுத்தாதது போலவும் இவ்வரலாறுகளை நாம் படிக்கிறோம். ஆனால் அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வலுவூட்டினர். அனைவரும் தங்களுக்கே உரிய பாணியில் முஸ்லிம்களின் அரசியல் திடசித்தத்தை மீட்டெழுப்ப முயன்றனர்.
சமூக அளவில், தார்மீக அளவில் முஸ்லிம்கள் முஸ்லிம்களாகத்தான் இருந்தனர். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் சேதம் அரசியல் மட்டத்தில் நிகழ்ந்திருந்தது. இதுதான் மீள்கட்டமைக்கப்பட வேண்டியிருந்தது. இதைத்தான் அவர்கள் அனைவரும் தத்தம் சக்திக்கேற்ப செய்து கொண்டிருந்தனர். எனினும் இதற்கான பலன் ஏற்படாததற்கான காரணம், அன்றைய அரசாங்கங்கள் கொடியவையாக இருந்ததே. பல முஸ்லிம்கள் இந்த விஷயத்தைப் பார்க்கவே விரும்புவதில்லை. கண் திறந்து பாருங்கள். பல கொடிய அரசாங்கங்கள் நம்மிடையே இருந்தன.
இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இமாம் அல் ஸைதும், அல் இமாம் ஹுசைனும் இல்லையென்றால் இந்த அரசாங்கங்களின் இயல்பு வெளியே தெரிந்திருக்காது. அவை வெளியே தெரிந்ததால் அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எனவே அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் துணைநின்று முஸ்லிம்களின் அரசியல் திடசித்தத்தை முன்னிறுத்தினர். இந்த முயற்சி இன்றும் தொடர்கிறது என்றே நினைக்கிறேன். நம் உழைப்பை ஒன்றிணைக்கும் முஸ்லிம்களின் வரலாற்று முயற்சியை சிதறடிப்பதன் மூலம் இந்த அரசாங்கங்கள் தப்பித்துக் கொள்கின்றன என்று நினைக்கிறேன்.
இமாமத்
அடுத்து இமாமத் குறித்து பேசுவோம். முஸ்லிம்களின் தலைவராக யார் இருக்க முடியும் என்பது குறித்து கருத்து வேறுபாடு உள்ளது. இவ்வரலாற்று ஓட்டத்தில் ஷியாக்களைப் பொருத்தவரை, அவர்கள் இமாம் அல்லது இமாமத் என்று சொல்லும் போது, சாதாரண மனிதர்களைவிட உயர்ந்த ஆனால் இறைத்தூதர்களின் அந்தஸ்த்தைவிடக் குறைந்த ஒரு நிலையை குறிக்கின்றனர். இமாமத் பதவி தெய்வீக மூலம் கொண்டது என்று அவர்கள் நம்புகின்றனர். யார் இமாம் என்பது குறித்து எவரும் விவாதிக்க முடியாது. இறைத்தூதருக்குப் பிறகு இமாம் அலீ. அதிலிருந்து துவங்கி இப்போது மறைவாக இருக்கும் பன்னிரெண்டாவது இமாம் வரை இது தொடர்கிறது. மக்களுக்குப் பிடித்திருந்தாலும் இல்லையென்றாலும் அவர்கள்தான் இமாம். மக்களின் உள்ளீடு இங்கு இல்லை. இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று.
சன்னிகளைப் பொருத்தவரை அவர்கள் இந்த விளக்கத்தை ஏற்பதில்லை. அவர்கள் இமாமத்தை ஒரு அரசியல் தலைமைப் பொறுப்பாகப் பார்க்கின்றனர். முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் தகுதி பெறுபவர்கள் அப்பதவியை அடைவார்கள். அவர்கள் சொல்வதாவது, ‘இல்லை, நீங்கள் சொல்வது தவறு. யார் தேவையான தகுதிகளைப் பெற்றுள்ளாரோ அவர்தான் இமாம். அதற்குரிய பண்புகளை அவர் பெற்றிருக்க வேண்டும். எவரும் இமாம் ஆகிவிட முடியாது. இமாம் ஆவதற்கான பண்புகளைப் பெற்றிருந்து அத்தோடு முஸ்லிம் பொதுமக்களின் பற்றுறுதியையும் ஒருவர் பெறுவாரானால் அவர்தான் தலைவர்’.
ஆனால் நிஜ உலகில் இது எதுவுமே நடப்பில் இல்லை. சன்னியோ ஷியாவோ இருவருக்குமே இன்று நடைமுறையில் இமாம் என்று யாரும் இல்லை. வரலாற்று ரீதியாக இருந்திருக்கலாம் அல்லது கோட்பாட்டு ரீதியாக இருக்கலாம். ஆனால் இமாமுக்கான இலக்கணத்தை அசலில் பூர்த்தி செய்த ஒருவரை இமாமாக இருவருமே இப்போது பெற்றிருக்கவில்லை. நீண்ட நெடுங்காலமாக இது இப்படித்தான் நீடிக்கிறது.
சன்னிகள் கலந்தாலோசனை (ஷூரா) என்பதையும் இமாமத் விஷயத்தில் அவசியத் தேவையாக முன்வைக்கின்றனர். அவர்கள் ‘கலந்தாலோசனை இன்றி எப்படி இமாமைப் பெற முடியும்?’ என்பர்.
ஐரோப்பிய சீர்திருத்தத்துக்குப் பிறகு மேற்கத்திய அரசாங்கங்கள் ‘சமூக ஒப்பந்தம்’ என்ற ஒரு கருதுகோளை முன்வைத்தன. மேற்கத்திய ஜனநாயகத்தில், ஆட்சிக்கு வரும் நபர் மக்களுடன் சமூக ஒப்பந்தத்தில் இருப்பார் என்ற கருத்தில் அனைவரும் உடன்பட்டனர். சமூக ஒப்பந்தம் என்ற அந்த ஐரோப்பியக் கருதுகோள், சன்னி அரசியல் மற்றும் வரலாற்று விவரிப்பிலிருந்து உருவானது. இமாம் என்பதற்கான சன்னி விளக்கத்தில் ‘சமூக ஒப்பந்தம்’ என்ற கருதுகோள் முக்கியமானது. அவர்களின் விதிப்படி, திணிக்கப்பட்ட இமாம் இருக்கவே முடியாது. உலகின் தலைசிறந்த மனிதராக இருந்தாலும் அவரை விரும்பாத மக்கள் மீது தலைவராக அவரை திணிக்க முடியாது.
நூறாவது முறையாகச் சொல்கிறேன். ஷியா என்றோ சன்னி என்றோ சொல்லும் போது நான் அச்சொற்களை அவற்றின் அசல் பொருளில் பயன்படுத்தவில்லை. மாறாக வரலாற்று ரீதியாக உருவாகி வந்துள்ள மக்கள் குழுக்களைக் குறிப்பிட்டே அச்சொற்களை இங்கு பயன்படுத்தியுள்ளேன்.
இது ஒரு புறமிருக்க, இமாம் அல் சாதிக்கின் காலத்தில் ஈராக்கில் வாழ்ந்த கணிசமான தொகை மக்கள், அவர்தான் தங்களுடைய செயல்திறமிக்க, மெய்யான தலைவராக, அரசியல் ரீதியாக வர வேண்டும் என்று விரும்பினர். மதீனாவில் வெறும் ஒரு அறிஞராக இருந்தால் மட்டும் போதாது, அவர் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று விரும்பினர். அவர்தான் இஸ்லாமிய அரசின் தலைவராக வேண்டும் என்று விரும்பினர். இதைப் படிக்கும் போது -அன்றைய மற்றும் இன்றைய- ஈராக்கிய மக்களைப் பற்றி என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. என்னை மன்னியுங்கள்; நானும் மனிதன்தானே. அம்மக்களின் வாய் நீளமாக இருக்கிறது; ஆனால் செயல் என்று வரும்போது அவர்கள் பதுங்கிவிடுகின்றனர். இதைத்தான் அவர்கள் இமாம் அலீ, அல் இமாம் ஹுசைன், இமாம் ஸைத், முஹம்மது இப்னு நஃப்ஸ் அஸ் ஸகியா, அவருடைய சகோதரர் இப்ராஹீம், இமாம் ஸைதின் மகன் இமாம் யஹ்யா ஆகியோர் விஷயத்தில் செய்தனர். பொறுப்பை நிறைவேற்ற முடியவில்லை எனில் அவர்கள் அமைதியாக இருக்கலாம்தானே? ‘உங்களுக்கு ஆதரவளிப்போம். உங்களுடனேயே இருப்போம்’ என்று சொல்லிவிட்டு, இமாம்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வரும்போது அவர்களோடு நிற்காமல் விலகிவிட்டால் என்ன அர்த்தம்?
நமக்கு இது வரலாறு. ஆனால் இமாம் அல் சாதிக் இதை வாழ்ந்து கொண்டிருந்தார். எனவே அவர்கள் சொல்ல வருவதை அறிந்த அவர், எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை.
கொடூர அரசாங்கங்கள்
அடுத்து வேறொரு பிரச்சனையும் இருந்தது. ஈராக்கில் ஆகப் புனிதமானவர்களாக சில ஷியாக்கள் சிலர் இருந்தனர். அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெகு தொலைவான சில விஷயங்களைச் சொல்லத் துவங்கினர். மற்றொருபுறம், அன்று ஆட்சிபுரிந்தவர்களின் இயல்பை இது எடுத்துச் சொல்கிறது. கடந்த முறை இமாம் ஸைத் குறித்து பேசினோம். எப்படி அவர்களால் அவரைக் கொல்ல முடிந்தது? மேலும் எப்படி அவருடைய உடலைத் தோண்டி எடுத்துச் சிலுவையில் அறைய முடிந்தது? எனக்குத் தெரிந்தவரை முழு அரேபிய வரலாற்றிலும் சிலுவையில் அறையும் பழக்கம் இருக்கவில்லை. இஸ்லாத்துக்கு முன்னரும் அரேபியாவில் பல போர்கள், சண்டைகள் நிகழ்ந்தன. இறைத்தூதர் காலத்திலும் போர்கள் நடந்தன. ஆனால் சிலுவையில் அறையும் பழக்கம் இருக்கவே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் பிறரை சிலுவையில் அறைவதை இப்போதுதான் பார்க்கிறோம்.
நான் இதை அதிகம் பேச விரும்பவில்லை என்றாலும் இக்கேள்வி நியாயமானது. சிலுவையில் அறைவது பைசாந்தியர்களின், ரோமானியர்களின் பழக்கம். வரலாற்றில் பதியப்பட்டுள்ள இவ்விஷயம் அனைவரும் அறிந்ததுதான். அவர்கள் ஈசாவை (அலை) சிலுவையில் அறைய முயன்றனர். மற்ற குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தனர். அரசாங்கங்கள் -இன்றைய சிரியாவிலோ அல்லது ஈராக்கிலோ யாராக இருந்தாலும்- முஸ்லிம்களைச் சிலுவையில் அறையும் போது அல்லது அறைய முயற்சி செய்யும் போது அல்லது காட்டுமிராண்டித்தனமாகக் கொலை செய்யும் போது, இச்செயல் உள்ளூர் பழக்கத்திலிருந்து வருவதல்ல; வேறு எங்கோ இருந்து வரும் பழக்கம் என்று நாம் அறிய வேண்டும்.
இவ்விஷயங்கள் குறித்த முக்கிய தகவல்களை வெளிக்கொணரக் கூடிய, ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம் அறிஞர்கள் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். டமாஸ்கசில் உமவீ அரசவையில் யோஹன்னா திமஷ்கி அல்லது டமாஸ்கஸ்காரர் ஜான் என்ற நபர் இருந்தார் என்றும் அவர் முஆவியாவின் ஆலோசகராக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரைக்குமான தகவல் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. ஆனால் அரசியல் எதிரிகளுக்கு எதிராக இந்த அரசாங்கங்கள் நிகழ்த்திய இத்தகைய மனிதாபிமானற்ற, காட்டுமிராண்டித்தனமான, ரத்தக்களரியான செயல்களுக்கான தூண்டுதல் இன்னும் அதிகமாக இருந்தது என்று சொல்லும்படியான தரவுகள் எதுவும் நம்மிடம் இல்லை. ஆம்! இன்றைய மொழியில் சொன்னால் அவர்கள் அரசியல் எதிரிகள்தான். அதற்காக அவர்களை யாரும் சிலுவையில் ஏற்றுவதில்லையே!
கிளர்ச்சியாளர்கள், நாசகர சக்திகள் போன்றவை இருக்கத்தான் செய்யும். மேலும் போரில் சண்டையிடும் கோரில்லா போராளிகளும் இருப்பர். துப்பாக்கிச் சூட்டில் எதிரிகள் இறப்பது இருக்கட்டும். ஆனால் இவை எல்லாவற்றிலும் எதிரியைப் பிடித்தால் அவரைச் சிலுவையில் ஏற்றுதல் என்பது எங்கிருந்து வந்தது? தவறான திசையில் வழிமாறிச் சென்ற அரசாங்கங்கள் அன்று இருந்தன. இதிலிருந்து அனைவரும் பாடம் படிக்க வேண்டும். ஆனால் அத்தகைய பாடம் -குறிப்பாக சன்னி உலகில்- தவறவிட்ட பாடமாகத்தான் உள்ளது. அன்று என்ன நடந்தது, இப்போது என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் கண் திறந்து பாருங்கள்!
சமகால அரசியல்
இவ்விடத்தில் சமகால அரசியல் குறித்துப் பேசுவது பொருத்தமாக இருக்கும்*.
(*) இவ்வுரை 2009-ல் நிகழ்த்தப்பட்டது.
முஸ்லிம் உலகில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். எந்த அளவுக்கு நாம் இழிவுக்குள்ளாக்கப் படுகிறோம் என்று பாருங்கள். இஸ்ரேலியர்கள் காசாவில் அக்கிரமம் செய்தனர்; மூர்க்கத்தனமாக, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர். எங்கு பார்த்தாலும் ராணுவ முகாம்கள்! மக்களை பிரதிநித்துவப்படுத்தும் அரசாங்கங்கள் எங்குமே இல்லாத நிலை. வெற்றி என்று கௌரவமாக நாம் கருதக்கூடிய நிகழ்வு ஒன்று உண்டென்றால் அது ஈரானில் நிகழ்ந்த வெற்றி மட்டுமே. சிலர் இதை உணரத் துவங்கியுள்ளனர். ஆனால் வேறு சிலர் என்ன செய்கின்றனர் என்று பாருங்கள். ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஈரானுடனான உறவை மொராக்கோ முறித்துக் கொண்டது.
இதற்குச் சொல்லப்பட்ட காரணங்களுள் ஒன்று, ‘மொராக்கோவின் உள்விவகாரகங்களில் ஈரான் தலையிடுகிறது; அங்குள்ள சில மக்களை ஷியாக்களாக மாறத் தூண்டுகிறது’. உலக நடப்புகளை கவனிக்கும் மக்கள், தங்கள் சகோதரர்களுக்கு நடப்பவற்றை பார்க்கும் மக்கள், தாமாக முன்வந்து -யாரும் அவர்களைத் தூண்டவில்லை; ஈரானிலிருந்து யாரும் மொராக்கோவில் மருத்துவமனைகள் கட்டி சமயப்பரப்புப் பணி செய்யவில்லை- ஷியாக்களாக மாற நினைத்தால், அதில் என்ன தவறு? அங்கு ஷியாக்கள் யாரும் சன்னிகளை ஷியாவாக மாற்றுவதற்காகப் பணியாற்றவில்லை. இதைவிட ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிசத்துக்கு முழு அடிமையாக இருப்பது சிறந்ததா என்ன? இதைக் காரணம் காட்டி ஈரானின் தூதரை மொராக்கோ திரும்பப் பெறுவதாக அறிவித்தது. நாம் இங்கு அரசாங்கங்களைப் பற்றியே பேசுகிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மற்றொருபுறம், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 80,000 மொராக்கர்கள் கிறித்துவர்களாக மாறியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. மொராக்கோவின் மக்கள் தொகை சுமார் மூன்றரை கோடி. இதில் ஷியாக்களாக மாறியவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் முதல் மூன்றாயிரம் இருக்கும். அவர்கள் முஸ்லிம்களாகத்தான் உள்ளனர். ஆனால் மாலிக்கியிலிருந்து ஷியாக்களாக மாறியுள்ளனர். இதில் என்ன பிரச்சனை? ஆனால் 80,000 பேர் கிறித்துவர்களாக மாறியது பற்றி யாரும் பேசுவதில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது இந்த அரசாங்கங்களில் தவறு உள்ளது என்று சொல்லத் தோன்றுகிறது.
ஒளிவட்டம்
இமாம் அல் சாதிக்குக்கு ஒளிவட்டம் இருந்தது. இதை அபூ ஹனீஃபா கூறியுள்ளார். அல் இமாம் அல் சாதிக் ஒரு முறை ஈராக் சென்ற போது அல் மன்சூர் அவரை அழைத்தார். அப்பாசிகள் ஆட்சிக்கு வந்தவுடன், அலவீ கொள்கைகளோடு பரிவு காட்டும், அவற்றைப் புரிந்து கொள்ளும் ஒரு அரசாங்கம் வந்துள்ளதாக ஷியா பிரிவு மக்களிடையே ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. இச்சூழலில் அபூ ஜாஃபர் அல் மன்சூரை சந்திக்க அல் இமாம் அல் சாதிக் சென்றார். இச்சந்திப்பிற்கு அபூ ஹனீஃபாவும் அழைக்கப்பட்டிருந்தார்.
இமாம் அல் சாதிக்கின் ஒளிவட்டத்தை விவரித்த அபூ ஹனீஃபா ‘அபூ ஜாஃபர் அல் மன்சூர் முக்கியமற்றவராகத் தெரிந்தார்’ என்ற அளவுக்குச் சொன்னார். அபூ ஹனீஃபா மன்னர் அல் மன்சூரை சட்டை செய்யவே இல்லை. அவருடைய பார்வையில் மன்னர் வெறுமையாகத் தெரிந்தார். ‘அச்சமயம் நான் இமாம் அல் சாதிக்கின் ஒளிவட்டத்தை உணர்ந்தேன்’, என்றார் அபூ ஹனீஃபா.
குர்ஆனில் குறையா?
‘குர்ஆனில் குறைபாடு உள்ளது; அது முழுமை பெறாமல் உள்ளது’ என்ற அர்த்தத்தில் இமாம் அல் சாதிக் பேசியதாகப் பிரபல ஷியா ஹதீஸ் நூலில் ஒரு செய்தி உள்ளது என்று கூறினேன். அதன் விவரம் பின்வருமாறு:
یٰۤاَیُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ ؕ
தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை எடுத்துக் கூறிவிடும்… [அல் குர்ஆன் 5:67]
எனத் துவங்கும் வசனத்தை அலீ இப்னு அபூ தாலிபின் இமாமத்தை உறுதி செய்யும் வசனம் என்று பல ஷியாக்கள் மேற்கோள் காட்டுகின்றனர். இவ்வசனத்தில் ‘அலீ’ என்ற சொல் விடுபட்டுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
அதாவது அவ்வசனம்,
தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை ‘அலீயிடம்’ எடுத்துக் கூறிவிடும்…
என்று இருந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் குர்ஆனைப் படித்து விளங்கத் தெரிந்த ஷியாக்கள் இது உண்மையல்ல என்று அறிவர்.
வார்த்தைகள் விடுபட்டுள்ளதாக அவர்கள் சொல்லும் மற்றொரு வசனம்
وَسَیَعْلَمُ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَیَّ مُنْقَلَبٍ یَّنْقَلِبُوْنَ
அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் திட்டமாக அறிந்து கொள்வார்கள். [அல் குர் ஆன்: 26:227]
என்று முடியும் வசனம்.
இவ்வசனத்தில் ‘ஆல் முஹம்மத்’ என்ற சொற்கள் விடுபட்டுள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். அதாவது
‘முஹம்மதுக்கு நெருக்கமானவர்களுக்கு’ அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.
என்று அவ்வசனம் இருந்திருக்க வேண்டும் என்கின்றனர்.
ஆம். இது வேடிக்கையாகத்தான் உள்ளது. ஆனால் இது இருப்பது உண்மை. நமக்குள்ளாக சுத்திகரிப்புப் பணி தேவைப்படுகிறது. ஆனால் அதைச் செய்யும் அளவுக்கு நாம் இன்னும் முன்னேறவில்லை.
சட்டவியல்
சட்டவியலைப் பொருத்தவரை, ஜாஃபரி சட்டவியலுக்கும் இஸ்லாத்தின் மற்ற ஐந்து பிரதான சட்டவியல்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. சில விஷயங்கள் தனித்து நிற்கின்றன. உதாரணமாக விவாகரத்து (தலாக்) தொடர்பான சட்டத்தைச் சொல்லலாம். விவாகரத்து என்பது ஒரு செயல்முறை (process). அதற்கு மூன்று கட்டங்கள் உண்டு. ஒவ்வொன்றும் ‘தல்லக்துகி’ என்று மொழிவதலிருந்து துவங்குகிறது. இச் செயல்முறை நிகழ்வதற்கு ஓராண்டும் ஆகலாம் அல்லது பல ஆண்டுகளும் பிடிக்கலாம். ‘தல்லக்துகி, தல்லக்துகி, தல்லக்துகி’ என்று மூன்று முறை சொன்னாலே விவாகரத்துக்கான செயல்முறை முடிந்துவிடும் என்று சில சன்னி சட்டவியலாளர்கள் கூறுகின்றனர்.
அல் இமாம் அல் சாதிக்கும் ஜாஃபரி சிந்தனைப் பள்ளியும் சொல்வதாவது, “அது அப்படியல்ல. அவ்வார்த்தையை மூன்று முறை மொழிந்தாலும் அது ஒரு கட்டத்தைத்தான் குறிக்கும். விவாகரத்து முழுமையடைவதற்கான மூன்று கட்டங்களையும் அது குறிக்காது.”
சில சன்னி சட்டவியல் பள்ளிகள் தலாக் பற்றிய தம் கருத்தை மறுபரிசலனை செய்தன. இப்னு தைமியாவின் கருத்தின் அடிப்படையில் அவர்கள் தம் கருத்தை மறுபரிசலனை செய்தனர். இப்னு தைமியா முக்கியமான சலஃபி அறிஞராகக் கருதப்படுகிறார். ஆனால் தன் கருத்தை நபி வீட்டாரின் சட்டவியலிலிருந்து எடுத்ததாக அவரே சொல்லியுள்ளார். இன்று இப்னு தைமியாவை ஷியாக்களுக்கு எதிரானவர் என்று சொல்பவர்கள் இதை கவனிக்கவும். அவர்கள் ஷியாக்களுக்கு எதிராக இருப்பதனால், வரலாற்று அறிஞர்களையும் தம் பக்கம் நிறுத்த விரும்புகின்றனர். ஆனால் அவரோ சன்னி சிந்தனைப் பள்ளியைச் சாராத; ஜாஃபரி சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த ஒரு கருத்தை சுவீகரித்துள்ளார்.
முத்அ
அடுத்து முத்அ பற்றி பேசுவோம். தற்காலிகத் திருமணம் எனப்படும் முத்அ என்பதை அனைத்து சன்னி சிந்தனைப் பள்ளிகளும் நிராகரிக்கின்றன. ஆனால் கடந்த 10-15 ஆண்டுகளாக, அதிகம் பயணம் மேற்கொள்ளும் சவூதி அரேபியர்களும், அமீரகத்தினரும், குவைத்காரர்களும் பெண்களுடன் தற்காலிகமாக உறவுமுறை பாராட்டுவதற்கு எப்படியாவது வழி ஏற்படுத்திக் கொடுங்கள் என்று அறிஞர்களிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளனர். இதற்கேற்ப அவ்வறிஞர்கள் சட்டவியல் நூல்களைத் துளாவி ‘ஸவாஜ் அல் மிஸ்யார்’ என்ற ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
ஷியா சிந்தனைப் பள்ளியில் உள்ள தற்காலிகத் திருமணம் போன்றுதான் இதுவும்; பெயர் மட்டுமே வேறு. ஒரு பெண்ணை குறிப்பிட்ட காலத்துக்காக, அவளுக்குரிய வரதட்சணையை கொடுத்து திருமணம் புரிய வேண்டும். குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அப்பெண் அவர் வழியில் சென்று விடுவார்; ஆண் தன் வழியில் சென்று விடுவார். அப்பெண் கருவுறாமல் இருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. கருவுற்றால் அதோடு வரும் பொறுப்புகள் தொடர்ந்து வரும்.
சமீப கால நிகழ்வுகள் ஒருபுறமிருக்கட்டும். பன்னிருவர் வகை ஷியாவைச் சார்ந்த பெரும்பலான அறிஞர்கள் இவ்வகை ஏற்பாடு செல்லும் என்று கூறுகின்றனர் -அது ஒரு சில நாட்கள் அல்லது மிகக் குறுகிய காலத்துக்காக இருந்தாலும் சரியே. எனினும் பெரும்பாலான ஸைதி அறிஞர்கள் இவ்விஷயத்தில் உடன்படுவதில்லை. இதை நியாயப்படுத்தும் ஷியா அறிஞர்கள் பின்வரும் குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் அப்படிச் செய்கின்றனர்.
فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِیْضَةً
….எனவே இவ்வாறு பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்… [அல் குர்ஆன்: 4:24]
எனினும் குர்ஆனில் உள்ள மற்றொரு வசனத்தை அவ்வறிஞர்கள் புறக்கணிக்கின்றனர் என்று எனக்குத் தோன்றுகிறது.
مُحْصِنِیْنَ غَیْرَ مُسٰفِحِیْنَ وَلَا مُتَّخِذِیْۤ اَخْدَانٍ
…உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது… [அல் குர்ஆன்: 5:5]
இதிலுள்ள ஃகதன் என்ற சொல் (பன்மை: அஃக்தான்) அந்த ஷியா அறிஞர்களின் சிந்தனையில் தோன்றவில்லை. எனவே இவ்வசனத்தை அவர்கள் ஆளமாகச் சிந்திக்க வேண்டும் எனக் கோருகிறேன்.
அதே போல மற்றொரு வசனம் இவ்வாறு கூறுகிறது:
وَّاَخَذْنَ مِنْكُمْ مِّیْثَاقًا غَلِیْظًا
உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! [அல் குர்ஆன்: 4:21]
இதில் சொல்லப்பட்டுள்ள ‘உறுதியான வாக்குறுதி’ ஒரு சில நாட்களோ மாதங்களோ கொண்டதாக இருக்க முடியாது.
ஆக இவ்வகை உறவுமுறைக்கு குர்ஆனில் எவ்வித நியாயமும் இல்லை. இது எப்படி தோன்றியது என்பதை அறிய இவ்விஷயத்தை யாராவது போதிய அளவு ஆய்வு செய்து நமக்குத் தெரிவிக்க வேண்டும். எனினும் அடக்குமுறைகள் அதிகரிக்கும் போது இது போன்ற பல விஷயங்கள் நடக்கும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்
♣ ♣ ♣ ♣ ♣
