சிரியா சூழல் (பகுதி 5) திட்டமா அல்லது செயல்முறையா? டாக்டர் ஸஃபர் பங்காஷ்


♣ ♣ ♣ ♣ ♣
YouTube link: The Syrian Situation Part 5 – Project Or Process
உரையாற்றிய நாள்: 21-12-24
♣ ♣ ♣ ♣ ♣
சிரியாவில் நடக்கும் மாற்றங்களை புரிந்து கொள்வதற்கு, முதலில் அது ஒரு திட்டமா அல்லது செயல்முறையா என்பதை புரிந்து கொள்வது அவசியம். இதைப் புரிந்து கொள்வது, மேற்காசியாவின் எதிர்காலத்தை புரிவதற்கு உதவும்.
நாம் ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். சிரியாவில் நடந்தது ஒரு புரட்சி அல்ல. அரண்மனையில் கூச்சலோடு நடந்த ஆட்சிமாற்றம்கூட அல்ல அது. புரட்சிகள் சூட் மற்றும் டை அணிந்து அதிபர் மாளிகையை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா மற்றும் சியோனிஸ்டுகளின் கைப்பாவைகளால் நடத்தப்படுவதில்லை.

நாம் இன்னும் தெளிவான புரிதலை அடைவதற்கு வரலாற்றில் பின்னோக்கிச் சென்று ஒரு திட்டத்துக்கும் செயல்முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உறுதி செய்ய வேண்டும்.
2010-ம் ஆண்டு டிசம்பர் 17 அன்று துனீசியாவில் முஹம்மது பூஅசீசி என்ற ஒரு ஏழை பழ வியாபாரி, பொதுவெளியில் தன் கன்னத்தில் அறைந்த பெண் காவலரால் ஏற்பட்ட அவமானம் மற்றும் காவல்துறையின் லஞ்ச ஊழல் பிரச்சனையால் நொந்து போய் தீக்குளித்தார். பூஅசீசியின் இந்தத் தீக்குளிப்பு, அரபு வசந்தம் அல்லது இஸ்லாமிய விழிப்புணர்வை தூண்டியது. மேற்காசியா மற்றும் வட ஆப்ரிக்காவின் பெரும்பாலான நாடுகள் ஊழல், பெருமளவிலான வேலை வாய்ப்பின்மை மற்றும் உணவுப் பொருள் விலை ஏற்றத்தால் சிக்கித் தவித்தன. இன்றும் அதே நிலைதான் நீடிக்கிறது.

அதைத் தொடர்ந்து எகிப்தின் ஹோஸ்னி முபாரக், ஏமனின் அலி அப்துல்லாஹ் சாலெஹ் மற்றும் லிப்யாவின் முஅம்மர் கடாஃபி ஆகிய சர்வாதிகாரிகளின் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன.
கடாஃபி, அமெரிக்க ஆதரவு தீவிரவாதிகளால் பொதுவெளியில் அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் ஆப்பிர்க்காவின் வளம்மிக்க நாடு குழப்பத்துக்கு தள்ளப்பட்டது. அதிலிருந்து இன்னும் அது மீளவில்லை.
எகிப்து மீண்டும் இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் வந்துவிட்டது. பஷார் அல் அசதின் ஆட்சியை கவிழ்க்க பல்லாயிரக்கணக்கான கூலிப்படைகள் அனுப்பப்பட்ட போதிலும் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட சிரியா எழுச்சி வெற்றி பெறவில்லை. கடைசியில் அந்தத் தீவிரவாதிகள் இந்த மாதம் வெற்றி பெற்றுவிட்டனர்.
கவனிக்கத்தக்க சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதில் ஒரே ஒரு முடியாட்சி அரசு கூட வீழ்ச்சி அடையவில்லை. பஹ்ரைன் மாற்றத்திற்கு மிக அருகில் வந்தது. ஆனால் சவூதிகளும், அமீரகத்தினரும் அங்கிருந்த சிறுபான்மை கலீஃபா குடும்பத்தை காப்பாற்றுவதற்கு ஆயிரக்கணக்கான துருப்புகளை அவசர அவசரமாக அனுப்பினர். பல மனித உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான அல்லது குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கானவர்கள் இன்னும் சிறையில் வாடுகிறார்கள். சுற்றியிருக்கும் நாடுகளை பயங்கரமாக்கும் அமெரிக்காவின் கடற்படைத் தளம் பஹ்ரைனில்தான் உள்ளது.

சவூதி அரேபியா தலைமையிலான எண்ணெய் வளம் மிக்க முடியாட்சி அரசுகள் தங்கள் மக்களை சன்மானம் மற்றும் தண்டனைகள் மூலம் தங்கள் மக்களை கட்டுபாட்டில் வைத்தன. சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் போராட்டகாரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு நசுக்கப்பட்டனர். எஞ்சிய பகுதிகளில் உள்ள குடிமக்கள் அரசியல் உரிமைகளுக்குப் பதிலாக லஞ்சம் கொடுக்கப்பட்டனர். இசைக் கச்சேரிகள் நடத்துவது மற்றும் சூதாட்ட விடுதிகளை திறப்பதன் மூலம் குடிமக்கள் வக்கிரத்துக்கு ஆளாக்கப்பட்டனர்.
எனவே இந்த பின்னணியுடன், சிரியாவின் நடப்பு நிலைக்கு திரும்புவோம். 9/11 நிகழ்வுக்குப் பிறகு, அமெரிக்க இராணுவ அதிகாரி வெஸ்லே க்ளார்க் பென்டகனுக்குச் சென்றார். அங்கு அவருடைய சக அதிகாரி ஈராக், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான் இறுதியாக ஈரான் என ஏழு நாடுகளை ஐந்து ஆண்டுகளில் வீழ்த்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். 2007 ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி, டெமாக்ரசி நவ் (democracy now) நேர்காணல் நிகழ்ச்சியில் ஏமி குட்மேனிடம் ஜெனரல் வெஸ்லே க்ளார்க் இதைத் தெரிவித்தார்.

1995லேயே பெஞ்சமின் நெதன்யாஹு தீட்டிய திட்டம் இது என்று கொலம்பியா பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார். நெதென்யாஹுவின் அமெரிக்க சியோனிச கூட்டாளிகளான ரிச்சர்ட் பேர்ல் மற்றும் பால் வோல்ஃப்விட்ஸ் வழிநடத்த பிற சியோனிஸ்ட்களோடு சேர்ந்து இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ரிச்சர்ட் பேர்ல் மற்றும் வோல்ஃப்விட்ஸ் ஆகியோர் ஜார்ஜ் புஷ் ஆட்சியின் கீழ் பென்டகனில் உயர் பதவிகளை வகித்தனர்.
ஜெனரல் வெஸ்லே க்ளார்க்குடைய கூற்றின் அடிப்படையில் பார்த்தால் சிரியாவில் நடந்தது திட்டமும் செயல்முறையும் என்பது தெளிவாகிறது. பஷார் அல் அசத் ஆட்சியை கவிழ்ப்பது திட்டம். அகண்ட இஸ்ரேல் திட்டத்தின் ஒரு பகுதியாக சிரியாவின் பெரும் பகுதிகளை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமிப்பது, மற்றும் லெபனானை சீர்குலைப்பது செயல்முறை. ஈராக் பிளவுபடுத்தப்பட்டபிறகு, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா தள்ளப்படும்.
அகண்ட இஸ்ரேல் திட்டத்தில் ஜோர்டான், மெக்கா மற்றும் மதீனா உட்பட்ட சவூதி அரேபியாவின் பெரும் பகுதிகள், எகிப்து, ஈராக் மற்றும் துருக்கி ஆகியவற்றை ஆக்கிரமிப்பது அடங்கும்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் குர்து இன மக்களை பயன்படுத்தி துருக்கி மற்றும் சிரியா, ஈராக், ஈரானை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் போது உதுமானிய பேரரசை உயிர்பிப்பேன் என்ற எர்டோகன் கனவு காண்கிறார்.
முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்கள் குறுகிய சுய நலத்துக்காக சியோனிஸ்டுகள் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளால் முஸ்லிம் சமூகம் அழித்தொழிக்கப்படுவதை அனுமதிக்கத் தயாராக உள்ளனர். வருந்தத்தக்க விதமாக அவர்கள் உணர்ச்சியற்றவர்களாகவே உள்ளனர்.
♣ ♣ ♣ ♣ ♣