இஸ்லாமிய வரலாறு – 16 / ஸைதி சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி


♣ ♣ ♣ ♣ ♣
இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழி பெயர்த்து, தலைப்புகளை அளித்துள்ளோம் – மொழி பெயர்ப்பாளர்.
உரையாற்றிய நாள்: 03-03-2009, இடம்: வாஷிங்டன் டி.சி., அமெரிக்கா
♣ ♣ ♣ ♣ ♣
இந்த வாரம் நாம் அல் இமாம் ஸைத் இப்னு அலீயைப் பற்றி பேசப் போகிறோம். உங்களில் எத்தனை பேருக்கு இந்த வரலாறு பரிச்சயமாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது. என் அனுபவத்தில் இமாம் ஸைத் இப்னு அலீயை அறிந்தவர்கள் மிகக் குறைவு. அவர் ஹிஜ்ரி 80-ல் பிறந்து ஹி. 122-ல் உயிர் தியாகம் செய்தார். ஆக அவருடைய வாழுங்காலம் 42 வருடங்களாக இருந்தது. கர்பலா துயர் சம்பவத்தில் இமாம் ஹுசைனின் குடும்பத்திலிருந்து உயிர் பிழைத்த ஒரே ஒருவரான அலீ இப்னு ஹுசைனின் மகன்தான் இமாம் ஸைத் இப்னு அலீ.
தந்தை
அலீ இப்னு ஹுசைன், இமாம் ஸைனுல் ஆபிதீன் என்றும் அழைக்கப்படுகிறார். சிலர் தங்கள் நூல்களில் அவரை இப்படித்தான் அடையாளப்படுத்துகின்றனர். இமாம் ஸைனுல் ஆபிதீன் மதீனாவின் நிரந்தரக் குடியாக இருந்தார். அன்று மதீனா உண்மை முஸ்லிம்கள், ஞானமிகு, அறிவுசார் முஸ்லிம்கள், பாசமிகு முஸ்லிம்கள் என அனைவரும் —ஒப்பீட்டளவில்— நிம்மதியாக வாழத்தகுந்த கேந்திரிய நகரமாக விளங்கியது. இமாம் ஸைதின் தந்தையைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவருடைய ஆளுமை உணர்ச்சி மிகுந்ததாக இருந்தது. மிகவும் உணர்ச்சிவசப்படுபவர் என்று அவரைச் சிலர் கூறுவர். ஒருமுறை ஒருவர் அவரைப் பார்த்து “நீங்கள் அசாதாரணமாக உணர்ச்சி வசப்படுபவராக இருக்கிறீர்களே!” என்று கேட்டார். அதற்கு அவருடைய பதில் பின்வருமாறு இருந்தது. “தன் மகனைத் தொலைத்த இறைத்தூதர் யாகூபின் கண்கள் வெண்மையாகிவிட்டன. மகன் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று அறியாத யாகூப், அவர் மீது கொண்ட பாச உணர்ச்சியால் அழுதழுது பார்வை இழந்து நின்றார். நானோ, சிறுவயதிலேயே என் கண் முன்னால் என் குடும்பத்தின் 12 உறுப்பினர்களை இழந்து நின்றேன். நிச்சயமாக அது என் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது”.
இமாம் ஸைனுல் ஆபிதீன் குறித்து பிரபல அரபுக் கவிஞர் ஒருவர் இயற்றிய 3 அல்லது 4 அடிகள் கொண்ட மிக அழகிய பா ஒன்று உள்ளது. அதைச் சொல்லி விளக்க முற்பட்டால், வகுப்பின் பெரும் பகுதி நேரத்தை அது எடுத்துக் கொள்ளும். எனினும் எனக்கு மிகப் பிரியமானதாக இருந்ததால், விளக்கிப் பேசமாட்டேன் என்று தெரிந்தே அதை எழுதி எடுத்து வந்துள்ளேன். அன்றைய மன்னர் —வரலாற்று நூல்கள் இவர்களை கலீஃபா என்று சொல்வதில் எனக்கு காட்டமான விமர்சனம் உண்டு— ஹிஷாம் இப்னு அப்துல் மலிக்(??) ஹஜ்ஜுக்கு வந்த சமயம் இது பாடப்பட்டது.
இன்று லட்சக்கணக்கானோர் குறுகிய இடத்தில் குறுகிய காலத்தில் ஒன்று கூடுவது போல அன்றைய ஹஜ் இருக்கவில்லை. எனினும் அன்றும் கஃபாவைச் சுற்றி நெரிசல் இருக்கத்தான் செய்தது. மக்கள் மன்னரைக் கண்டு கொள்ளாதது போல சென்று கொண்டிருந்தனர். அவர் தனக்கு உரிய மரியாதை செலுத்தப்படவில்லை என்று உணர்ந்தார். கருப்புக் கல் அருகே அவர் வந்த போது, சட்டென மக்கள் அனைவரும் யாரோ ஒருவருக்காக வழிவிட்டு விலகி நிற்பதைக் கண்டார். அப்போது அழகிய உடையில் ஒருவர் வருவதையும் மக்கள் அவர் மீது நேசம் கொண்டு மரியாதை செலுத்துவதையும் கண்டார். மன்னராகிய தனக்குக் கிடைத்த கவனத்தை விட அம்மனிதருக்கு மக்கள் அதிக மரியாதையும் கவனம் செலுத்துவதையும் கண்டு எரிச்சலுற்ற மன்னர், அவரை மட்டம்தட்டும் விதத்தில் தகாத சொற்களைப் பயன்படுத்தி ‘யார் இந்த…?’ என்பதாகக் கேட்டார். இச்சம்பவத்தின் போது அங்கிருந்த இந்தப் பிரபல கவிஞர், மன்னர் சொன்னதைக் கேட்டு அதன் பின் பாடியதுதான் இந்தப் பா. மிக அருமையான பா இது. எனினும் இது குறித்து பிறிதொரு தருணத்தில் விளக்குகிறேன்.
ஆகப் புனித ஷியாக்கள்
இமாம் ஸைனுல் ஆபிதீனின் காலத்தில் மற்றொரு வகையினரும் இருந்தனர். இம்மாதிரியானவர்களைக் குறிப்பிடும் சொற்களை மொழிபெயர்த்துச் சொல்வது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது; வேறு சிலருக்கு அது துல்லியமற்றதாகப்படுகிறது. அவர்களை ‘இமாம் அலீயைவிட தீவிர அலவிகளாக இருக்கும் ஷியாக்கள்’, அல்லது ‘ஆகப் புனித ஷியாக்கள்’ என்று நாம் அழைப்போம். இமாம் ஸைனுல் ஆபிதீனின் காலத்தில்தான் இத்தகையவர்கள் முளைக்கத் துவங்கினர். கர்பலா பெருந்துயர் சம்பவத்துக்குப் பிறகான காலம் அது. அவர்கள் இமாமை சந்திப்பது வழக்கமாக இருந்தது. அப்போது இமாம் ஸைதின் தந்தையிடம் வந்து “அபூ பக்கர் மற்றும் உமர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்பர். மேலும் அவர்கள் குறித்து தகாத சொற்களைப் பயன்படுத்துவர். ஒருமுறை இருமுறை என்றில்லாமல் இது ஒரு வழக்கமாகவே இருந்தது. அப்போது இமாம் ஸைத் சிறுவராக இருந்தார். இத்தகைய சூழலில்தான் அவர் வளர்ந்தார். இன்றும் கூட இக்கேள்வி கேட்கப்படுகிறது என்று நினைக்கிறேன். இதற்கு சிலர் சுற்றி வளைத்து பதில் கூறுவர்; இன்னும் சிலர் நாம் பேசும் வரலாற்று நிகழ்வுகளை மீண்டும் நினைவு கூறுவர்.
இப்படியாக ஒருமுறை ஒரு குழு இமாம் ஸைனுல் ஆபிதீனிடம் வந்து அபூ பக்கர் மற்றும் உமரைப் பற்றி கேள்வி எழுப்பியது. இவர்கள் அனைவரும் இமாம்கள், தஷய்யு, உமவிகளை எதிர்த்த அலவிகள் ஆகியவற்றின் ஆதரவாளர்களாகக் கருதப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்க. அவர்களின் கேள்விக்கு பதிலளித்த இமாம் ஸைனுல் ஆபிதீன், “சரி அது இருக்கட்டும், உங்களைப் பற்றி முதலில் சொல்லுங்கள். நீங்கள் முதன்மையான முஹாஜிரீன்களிலிருந்து (அல் முஹாஜிரீன் அல் அவ்வலீன்) வருகிறீர்களா?” எனக் கேட்டார். இது பின்வரும் குர்ஆன் வசனத்தை ஒட்டி கேட்கப்பட்ட கேள்வியாகும்:
لِلْفُقَرَآءِالْمُهٰجِرِيْنَالَّذِيْنَاُخْرِجُوْامِنْدِيَارِهِمْوَاَمْوَالِهِمْيَبْتَغُوْنَفَضْلًامِّنَاللّٰهِوَرِضْوَانًاوَّيَنْصُرُوْنَاللّٰهَوَرَسُوْلَهٗؕ اُولٰٓٮِٕكَهُمُالصّٰدِقُوْنَۚ
[அல் குர்ஆன் 59:8]
அதாவது, “மக்காவிலிருந்து மதீனாவுக்குக் குடிபெயர்ந்த முதல் தலைமுறை முஸ்லிம்களைச் சேர்ந்தவர்களா நீங்கள்? செல்வம் கைப்பற்றப்பட்டு வீடுகளிலிருந்து விரட்டப்பட்டவர்களைச் சேர்ந்தவர்களா நீங்கள்? அவர்களோ அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறும் முயற்சியிலும் அல்லாஹ் மற்றும் அவனது தூதருக்கு ஆதரவாகச் செயல்படும் பொருட்டும் இதை அனுபவித்தனர்” என்ற அர்தத்தில் இக்கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர்கள் “இல்லை” என்று பதிலளித்தனர். இமாம் அலீ மற்றும் நபிவீட்டாரின் (அஹ்ல பைத்) நிலைப்பாடு குறித்து ஆர்வக் கோளாறோடு பேசிய மக்களுக்கு குர்ஆனின் வார்த்தைகளிலேயே இமாம் ஸைனுல் ஆபிதீன் பதிலளித்தார். அவர்கள் யாருமே முஹாஜிரீன்கள் அல்ல. அவருடைய கேள்வி, “இக்குர்ஆன் வசனங்களின் கண்ணியமான அர்த்தத்தோடு தொடர்புடைய இரு நபர்களைக் குறித்து நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா?” என்ற ரீதியில் இருந்தது.
அத்தோடு அவர் நிற்கவில்லை. மேலும் தொடர்ந்து, “நீங்கள்தான் அடைக்கலம் வழங்கியவர்களா? (அ ஃப அன்தும் மினல்லதீன தபவ்வஉத் தாரா வல் ஈமான மின் கப்லிஹிம் யுஹிப்பூன மன் ஹாஜர இலைஹிம்)” எனக் கேட்டார். இதற்கும் அவர்கள் “இல்லை” என்று பதிலளித்தனர். எதுவுமே இன்றி மக்காவிலிருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கி தார்மீக மற்றும் பொருள் ரீதியானஆதரவு வழங்கிய அல் அன்சார் தொடர்பானது இது. அடுத்து அவர், “இப்போது நீங்களே உங்களைக் குறித்து சாட்சி கூறினீர்கள். நீங்கள் முஹாஜிரீன்களிலிருந்தும் இல்லை அன்சார்களிலிருந்தும் இல்லை. மூன்றாவது வகையான
وَالَّذِيْنَجَآءُوْمِنْۢبَعْدِهِمْيَقُوْلُوْنَرَبَّنَااغْفِرْلَـنَاوَلِاِخْوَانِنَاالَّذِيْنَسَبَقُوْنَابِالْاِيْمَانِوَلَاتَجْعَلْفِىْقُلُوْبِنَاغِلًّالِّلَّذِيْنَاٰمَنُوْارَبَّنَاۤاِنَّكَرَءُوْفٌرَّحِيْمٌ
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். [அல் குர்ஆன் 59:10]
என்பவர்களிலிருந்தும் நீங்கள் இல்லை என்று நான் சாட்சி பகர்கிறேன். இப்போது நீங்கள் கிளம்பலாம். நீங்கள் இஸ்லாத்தை சிறுமைப் படுத்துகிறீர்கள். பொறுப்பான முஸ்லிம்களின் பண்புகளை நீங்கள் பிரதிபலிக்கவில்லை” என்றார். இதை நான் அசல் வார்த்தைகளிலல்லாமல் பொழிப்புரையாகவே சொல்கிறேன். இமாம் ஸைத் பிறந்த சமயம், அன்றைய சூழல் எப்படி இருந்தது என்பதை எடுத்துரைக்கும் ஒரு சம்பவம் இது.
ஆக கிட்டத்தட்ட பதட்டமான,சமூகப் பிளவுகள் நிலவிய ஒரு சூழலில் இமாம் ஸைத் பிறந்தார். கர்பலா நிகழ்வை ஒரு தோல்வியாகப் பாவித்த சிலர் அது குறித்து தீவிர உணர்ச்சி நிலையில் இருந்தனர். ஏதாவது செய்தாக வேண்டும் என்று எண்ணிய அவர்கள், இமாம்களிடம் சென்று இப்படியான முறையற்ற வழிகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துபவர்களாக இருந்தனர்.
குடும்பப் பின்னணி
மிக உறுதியான, மிகவும் உண்மையான, பலதரப்பட்ட முஸ்லிம்கள் —அவர்கள் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்— ஒன்று கூடி வாழ்ந்த மதீனத்துச் சூழலில் இமாம் ஸைத் பிறந்தார். அவருடைய தந்தையாகிய இமாம் ஸைனுல் ஆபிதீன், அறிவுப் புலமை மிக்கவராக —ஆனால் கர்பலா சம்பவம் காரணமாக உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கியவராக— இருந்தார். இறைத்தூதரின் மாசற்ற சந்ததியில் தோன்றிய அவர், மதீனாவில் மிகவும் பிரபலமானவராக இருந்தார். மேலும் அவர் கீழ்தட்டு மக்கள்பால் பெருந்தன்மை கொண்டவராக இருந்தார். இமாம் ஸைதின் பாட்டனார் தியாகிகளின் தந்தையாகிய இமாம் ஹுசைன் ஆவார். அவருடைய பூட்டனார், இஸ்லாமிய வரலாற்றில் ராணுவப் பின்னணி கொண்டவராக அறியப்படும் இமாம் அலீ ஆவார். அவரை, இறைத்தூதர் ‘அறிவு நகரத்தின் நுழைவாயில்’ என்று குறிப்பிட்டுள்ளார். இமாம் அலீ நபித் தோழர்கள் மத்தியில் மிகவும் விவேகம் மிக்கவராக அறியப்பட்டவர். மதீனாவில் ஆரம்ப ஓரிரு ஆண்டுகளின்போது முஸ்லிம்கள் மத்தியில் சகோதரத்துவ ஏற்பாடு செய்யப்பட்டபோது இறைத்தூதரின் சகோதரராக இருந்தவர் இமாம் அலீ.
இமாம் ஸைத் ஹிஜ்ரி 80-ல் பிறந்தார் என்று சொன்னோம். அவர் ஹி. 122-ல் மறைந்தார் என்று பெரும்பாலான வரலாற்றுத் தரவுகள் சொல்கின்றன. இறைத்தூதரின் நகரமான மதீனாவில் அவர் வளர்ந்தார். அங்குதான் அறிஞர்கள் ஒன்று கூடினர். நபித்தோழர்களும் அவர்களுடைய பெரும்பாலான தோழர்களும் அங்குதான் குவிந்து இருந்தனர். ஈராக் மற்றும் ஷாமில் சமூகச் சூழல் சீர்கெடும் போது மக்கள் மதீனா நோக்கி செல்பவர்களாக இருந்தனர். இத்தகைய சூழல்களில் அவர்களை ஈர்க்கும் காந்த நகரமாக விளங்கியது —மக்கா அல்ல— மதீனாதான் என்பதை கவனிக்கவும்.
பல வழிகளில் இறைத்தூதரோடு தொடர்புடையவராக இருந்த இமாம் ஸைத், நபிவீட்டுப் பிள்ளையாக வளர்க்கப்பட்டார் என்று கருதலாம். அவருடைய தாய் சிந்து பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. சிந்து இந்திய துணைக்கண்டத்தில் உள்ளது. இமாம் ஸைதின் தாயை இமாம் ஸைனுல் ஆபிதீன் மணமுடித்தார் என்று அறிகிறோம். ஆனால் அவர் வேறு யாரையும் திருமணம் செய்தாரா என்று எனக்குத் தெரியாது. அவர் வேறு திருமணங்கள் செய்திருக்கக் கூடும். அன்று நிலவிய அரபு தேசியவாத எண்ணங்களில் இது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தியது என்று பின்னர் பார்ப்போம்.
கல்வி
அறிவுசார் குடும்பத்தில், அறிவுசார் நகரத்தில் வளர்ந்த இமாம் ஸைத் அறிஞர்களை உருவாக்கும் தகவல்களுக்கு பழக்கமானார். குர்ஆன் மற்றும் ஹதீஸைக் கற்ற அவர் அச்சமயம் அறிஞர்கள் மத்தியில் பரவலாக இருந்த பிறவற்றையும் கற்றார். அன்று நபிப் பள்ளிவாசலில் பலவகை வகுப்புகள் நடந்தன என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். அவற்றுள் சில —இன்று நாம் அழைக்கும்— ஷியா வகுப்புகளாகவும், மேலும் சில —இன்று நாம் அழைக்கும்— சன்னி வகுப்புகளாகவும் இருந்தன. ‘உங்கள் கருத்துகளை, உங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்தக் கூடாது’ என்று யாரும் யாரிடமும் கூறவில்லை. இத்தகைய கட்டுப்பாடுகள் சமீபத்திய வரலாறில்தான் தோன்றின.
இமாம் ஸைத் தன் தந்தை, இமாம் ஹுசைன் மற்றும் இமாம் அலீ வழியாக இறைத்தூதரின் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். எனினும் இமாமியா ஷியாக்களைப் போலன்றி —இமாம் ஜாஃபர் அல் சாதிக்கை பின்பற்றும் பன்னிருவர் வகை ஷியாக்கள்— இவர் மதீனாவில் பிரபலமான ஆனால் ஷியா அல்லாத வட்டங்களில் மட்டுமே சொல்லப்பட்ட ஹதீஸ்களையும் மேற்கோள் காட்டினார். எனவே ஸைதி சிந்தனைப் பள்ளியின் சட்டவியல் மற்றும் ஹதீஸ் நூல்களை ஆய்வு செய்யும் ஒருவர், இமாம் ஸைத் தனக்கு முந்தைய இமாம்கள் வழியாக இறைத்தூதர் வரை அடையும் ஹதீஸ்களை அறிவிப்பதைக் காண்பார். அத்தோடு பன்னிருவர் வகை ஷியாவினர் கேள்விக்குள்ளாக்கும் அல்லது ஆட்சேபனை தெரிவிக்கும் ஹதீஸ்களையும் இமாம் ஸைத் மேற்கோள் காட்டியிருப்பதைக் காண்பார். ‘தக்க அறிவிப்பு வரிசை’க்கு (ஹதீஸ் சில்சிலா அத் தஹபியா*) வெளியேயும் இமாம் ஸைத் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். குர்ஆனுக்கும் பிற ஹதீஸ்களுக்கும் பொருந்திப் போகும் ஒரு ஹதீஸைக் கண்டால், அதை அறிவிப்பதிலும் சட்டவியலுக்கு பயன்படுத்துவதிலும் அவர் தயக்கம் காட்டவில்லை. இதைப் புரிந்து கொள்வது அவசியம். இமாம் ஸைதின் தந்தை, இமாம் ஸைனுல் ஆபிதீனும் நபி வீட்டாரின் ஆதரவாளர்கள் என்று வகைப்படுத்தப்படாத அறிஞர்களிடமிருந்து ஹதீஸ்களை மேற்கோள் காட்டியுள்ளார். அவையும் ஸைதி சிந்தனைப் பள்ளியின் ஹதீஸ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
(* ஷியா இமாம்களை மட்டுமே அறிவிப்பாளர் வரிசையில் பெற்றுள்ள ஹதீஸ் – மொ.ர்.)
இமாம் ஸைனுல் ஆபிதீன் ஹி. 94-ல் மறைந்தார். அப்போது இமாம் ஸைதுக்கு சுமார் 14 வயது ஆகியிருந்தது. தந்தையின் மரணத்துக்குப் பிறகு கல்வி கற்பதில் அவர் மீது பெரிதும் செல்வாக்கு செலுத்தியவர், அவருடைய சகோதரர் இமாம் முஹம்மது அல் பாகிர் ஆவார். இமாம் ஸைதுக்கும் இமாம் முஹம்மது அல் பாக்கிருக்கும் இடையே, தந்தை-மகன் என்று கருதும் அளவுக்கு பெரிய வயது வித்தியாசம் இருந்தது. முஹம்மது அல் பாக்கிரின் மகனான இமாம் ஜாஃபர் அல் சாதிக் கிட்டத்தட்ட இமாம் ஸைதின் வயதை ஒத்தவராக இருந்தார். இமாம் ஸைதின் சகோதரரான இமாம் முஹம்மது அல் பாக்கிரும் மதீனாவில் பிரபலமான, பெரிதும் மதிக்கப்பட்ட, கண்ணியம் நிறைந்த அறிஞராகத் திகழ்ந்தார்.
இமாம் முஹம்மது அல் பாக்கிரைச் சந்தித்து அவருடைய செல்வாக்குக்கு ஆளான வேறு சில அறிஞர்களும் இருந்தனர். அவர்களுள் பிரதானமானவர் இமாம் அபூ ஹனீஃபா ஆவார். இமாம் அபூ ஹனீஃபா மதீனாவுக்கு வந்து அங்கு நடந்த வகுப்புகளில் கலந்து கொள்பவராக இருந்தார். அவர் அவ்வகுப்புகளைக் கவனித்து, கற்று தனக்குக் கிடைத்த அறிவை பெருக்கிக் கொண்டார். அதில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. இன்று சிலர் சொல்வது போல “நான் ஹனஃபி ஆயிற்றே! நான் ஏன் ஒரு ஷியா அறிஞர் சொல்வதை செவிமடுக்க வேண்டும்?” அல்லது “நான் ஷியா ஆயிற்றே! நான் ஏன் ஒரு ஹனஃபி அறிஞர் சொல்வதை செவிமடுக்க வேண்டும்?” என்று யாரும் சொல்லவில்லை. இத்தகைய மனப்பாங்கு அன்று இருக்கவில்லை. வெளிப்படையான அல்லது அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு அறிவுச் சூழல் அவர்களை ஒன்று சேர்த்தது. அவர்கள் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தனர்; அவர்களுக்கிடையே வேறுபாடுகள் இருந்தன. ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் விலக்கவில்லை. இன்றைய உலகில் நாம் பலமுறை பார்ப்பதைப் போல அவர்களுக்கிடயே தகவல் இறுக்கம் இருக்கவில்லை.
இமாம் ஸைதின் காலத்தில் அலவி குடும்பத்தில் மற்றொரு பிரபல அறிஞர் இருந்தார். அவர்தான் இமாம் ஹசனின் மகனாகிய இமாம் அப்துல்லாஹ் இப்னு ஹசன். இமாம் ஸைத் இவருடைய வகுப்புகளிலும் கலந்து கொண்டார். இருவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்பதால் அவர்களுக்கிடையே இருந்த உறவு அறிஞர்கள் என்பதையும் தாண்டியதாக இருந்தது. அபூ ஹனீஃபாவும் அப்துல்லாஹ் இப்னு ஹசனின் வகுப்புகளில் கலந்து கொண்டார். இதிலும் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. யாரும் இதை பெரிதுபடுத்தவில்லை. இது அனைத்தும் இயல்பாகவே நடந்தது. எப்படி இயல்பாக இருக்க வேண்டுமோ அப்படி அது இயல்பாகவே இருந்தது.
ஹதீஸ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டால், இமாம் மாலிக் ஹதீஸ்களில் கவனம் செலுத்தினார் என்று நாம் அறிவோம். அவர் தனது ஹதீஸ் தொகுப்பான முவத்தாவில் அப்துல்லாஹ் இப்னு ஹசனிடமிருந்து பெறப்படும் ஹதீஸ்களையும் மேற்கோள் காட்டியுள்ளார். இதிலும் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. யாரும் இதை பெரிதுபடுத்தவதில்லை. அப்துல்லாஹ் இப்னு ஹசன் உமவிகளின் கடைசி காலத்திலும் அப்பாஸிகளின் ஆரம்ப காலத்திலும் வாழ்ந்தார். அன்றைய உமவி ஆட்சியாளர்களும் சரி, அப்பாஸி ஆட்சியாளர்களும் சரி, அவர் மீது மரியாதை கொண்டிருந்தனர். விதிவிலக்கான ஆட்சியாளரான உமர் இப்னு அப்துல் அஸீசும் அவரை பெரிதும் மதித்தார். உமர் இப்னு அப்துல் அஸீசை ‘மன்னர்’ என்று சொல்ல முடியாது. ஆனால் மற்ற ஆட்சியாளர்களை அப்படி அழைப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
அப்பாஸி ஆட்சியின் துவக்கத்தில் ஆட்சி புரிந்த மன்னர் அபூ ஜாஃபர் அல் மன்சூரும் அப்துல்லாஹ் இப்னு ஹசனை பெரிதும் மதித்தார். ஆனால் அப்துல்லாஹ் இப்னு ஹசனின் புதல்வர்கள் அப்பாஸி அரசகுலத்தின் அரசியல் எதிர்ப்பாளர்களாயினர். இதன் காரணமாக தான் மதித்த நபருக்கு எதிராகத் திரும்பிய மன்னர் அவரை சிறையில் அடைத்தார். அப்துல்லாஹ் இப்னு ஹசன், தனது 75-ஆவது வயதில் சிறையில் மரணத்தைத் தழுவினார்.
இமாம் அல் ஸைத் சுமார் 20 வயதைஅடைந்தபோது மதீனாவை விட்டு வெளியே பயணிக்க ஆரம்பித்தார். அதுவரைக்கும் பல இமாம்கள் மதீனாவையே தங்கள் சொந்த ஊராகக் கருதினர். அவர்கள் மதீனாவை விட்டு வெளியே செல்பவர்களாக இருக்கவில்லை. இந்த வழக்கத்திலிருந்து முதன் முதலாக விலகியவர் இமாம் ஸைத் ஆவார். அவர் மதீனாவிலிருந்து புறப்பட்டு ஈராக், அரேபியாவின் பிற பகுதிகள், ஷாம் போன்ற நகரங்களுக்குச் சென்று மீண்டும் மதீனா திரும்புபவராக இருந்தார். தனது தந்தை அல்லது மாமா போல மதீனாவிலேயே அடங்கிக் கிடப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. அவருடைய குடும்பத்தில் இருந்த மற்ற இமாம்கள் ஹஜ்ஜுக்காக மட்டுமே மதீனாவை விட்டு வெளியேறுபவர்களாக இருந்தனர். கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம்தான் அவருக்கு மதீனாவை விட்டு வெளியே செல்வதற்கான உந்துதலாக இருந்தது. ஈராக்கில் கல்விச் செல்வம் கொட்டிக் கிடந்தது. அதுதான் அவரை பிராதனமாக ஈர்த்தது.
ஈராக்கில் அவர் முஃதசிலா சிந்தனைப் பள்ளியை தோற்றுவித்த வாசில் இப்னு அதாவை சந்தித்தார். சம வயதுடையவர்களாக இருந்த இருவரும் மிகவும் அன்யோன்யமாக மாறினர். அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட உள்ளம் திறந்து கருத்துகளைப் பரிமாரிக்கொண்டனர் எனலாம். எனவேதான் வரலாற்று நூல்களைப் பார்க்கும் போது பலர் கோட்பாடு —சட்டவியல் அல்லது அரசியல் அல்ல. வெறும் கோட்பாடு— என்று வரும்போது ஸைதிகளையும் முஃதசிலாக்களையும் இணைத்துப் பேசுவதை பார்க்க முடியும். அத்தீபகற்பத்தை விட்டுச் செல்லும் போது இமாம் ஸைத் பல அறிஞர்களோடு நல்லுறவை வளர்த்துக் கொண்டார். அதில் வாசில் இப்னு அதாவுடனான உறவு தனிச் சிறப்பு கொண்டதாக இருந்தது.
தனிச் சிறப்பு
இச்சமயத்தில் இமாம் ஸைத் ஒரு அறிஞராக வளர்ந்து நின்றார். அவருடைய வகுப்புகளில் பங்கெடுக்க மாணவர்கள் வரத் துவங்கினர். இமாம் ஸைத் தீவிரமாகக் குர்ஆனில் மூழ்கியவராக அறியப்படுகிறார். நாம் இதற்கு முன்னர் பார்த்த பிற அறிஞர்கள் —குர்ஆனை மனனம் செய்தனர் என்றாலும்— ஹதீசுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலிருந்து துவங்கினர். ஆனால் இமாம் ஸைதின் குர்ஆனிய அறிவு, அவரை மற்றவர்களிலிருந்து தனிச் சிறப்பான இடத்தில் வைக்கிறது.
ஒரு விஷயத்தில் தன் சகாக்களை விட பல மடங்கு முன்னேறியவராக இமாம் ஸைத் இருந்தார் எனில் அது குர்ஆனின் பாராயணம் (கிரா’த்) பற்றிய ஞானத்தில் ஆகும். குர்ஆனுக்கு ஏழு வகையான பாராயண முறைகள் உண்டு. பன்னிருவர் வகை சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த சில அறிஞர்கள் இக்கருத்தில் உடன்படுவதில்லை என்று நான் அறிவேன். அதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது –அவர்களுக்கு அரபு மொழி தெரியாது. இதன் காரணமாக அவர்கள் ‘ஏழு பாராயண முறைகளா?!’ என்று கேட்கின்றனர். ஒரு பாராயண முறைக்கும் மற்றொன்றுக்கும் இடையேயான வேறுபாட்டை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் ஏழு முறைகள் உண்டு என்பதே உண்மை. இதை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்காக நாம் வருந்துகிறோம். இதற்குள் சென்று விளக்குவதற்கு இப்போது நேரம் இல்லை. எனினும் இப்பாராயண முறைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் எதிர்-எதிரானதோ குழப்பமானதோ அன்றி அவை ஒன்றை ஒன்று பலப்படுத்தும், ஒன்றுக்கொன்று துணை நிற்கும் வேறுபாடுகள் ஆகும். இதில் தீமை எதுவும் இல்லை. இதை புரிந்து கொள்ளாதவர்கள் கடைசிவரை புரிந்து கொள்ளவே மாட்டார்கள். இவ்விஷயத்தில் இமாம் ஸைத் பெரிதும் ஞானம் மிக்கவராக இருந்தார். தன் காலத்தில் இருந்தவர்களை விட பற்பல முறை அவர் முன்னேறியிருந்தார்.
பாராயண முறைகளின் எண்ணிக்கை குறித்து சிலர் பத்து என்றும்,வேறு சிலர் பதிநான்கு என்றும் கூறுகின்றனர். ஆனால் ஏழு என்ற எண்ணிக்கையில் அனைவரும் உடன்படுகின்றனர். இப்போது இவற்றுக்குள் செல்ல நாம் விரும்பவில்லை. அனைவரும் அறிந்த, அனைவராலும் நன்கு கற்கப்பட்ட, நீடித்து வாழ்ந்த முறைகள் ஏழு ஆகும்.
அடுத்து இமாம் அபூ ஹனீஃபாவின் கூற்று ஒன்றை மேற்கோள் காட்டுகிறேன். அவர் கூறியதாவது, “ஸைத் இப்னு அலீயின் காலத்தில் அவரை விட அறிவானரை நான் பார்த்ததில்லை. ஒரு விஷயத்துக்கு மறுமொழி சொல்வதில் அவரைவிடத் துரிதமானவரை நான் பார்த்ததில்லை. அவரை விடச் சிறப்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர் யாரும் இல்லை. அவருக்கு இணை யாரும் இல்லை”. அப்துல்லாஹ் இப்னு ஹசன், இமாம் ஸைதின் மகன் ஹுசைனிடம் பின்வருமாறு கூறினார்: “உம் தந்தையருள் —அதாவது தந்தை, பாட்டனார், மாமா போன்ற ஹசனி மற்றும் ஹுசைனி குடும்பத்தவர்களுள்— ஸைத் தான் எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவருக்கு இணை யாரும் இல்லை.”
அரசியல் சூழல்
அந்த சமயத்தில், உங்களுக்கு பரிச்சயமான அல்லது பரிச்சயமற்ற காரணங்களுக்காக, இமாம்கள் —இமாம் ஸைனுல் ஆபிதீன், இமாம் முஹம்மது அல் பாகிர், இமாம் ஜாஃபர் அல் சாதிக் ஆகியோர்— அன்றைய அரசியல் விவகாரங்களில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தனர். இதன் பொருள் அவர்களுக்கு அரசியல் தெரியாது என்பதல்ல. அல்லது அவர்கள் மனதளவில் பலவீனர்களாக இருந்தார்கள் என்பதும் அல்ல. அவர்களுக்கே உரிய பிரத்தியேகக் காரணங்களால் அவர்கள் அரசியலில் ஈடுபடவில்லை. அவர்கள் தங்களுடைய எழுத்துகளில் அரசியல் தலைவரை ‘முஃமீன்களின் தலைவர்’ (அமீருல் முஃமினீன்) என்று கூட அழைத்தனர். இது பாசாங்காகக் (தகியா) கூட இருக்கலாம். அன்று அவ்வரசாங்கத்துக்கு துடிப்பான, ஒருங்கிணைந்த எதிர்ப்பு இருக்கவில்லை. அவர்கள் மதீனாவிலேயே தங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். மதீனாவில் இருந்ததால் அவர்கள் தங்களை அரசியலில் ஈடுபடுவதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடிந்தது. மேலும் முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு -என்று இன்று சிலர் சொல்வது- போன்ற பணிகளில் அவர்களால் ஈடுபட முடிந்தது. ஆனால் அவர்கள் ஈராக்கில் இருந்திருந்தால் விஷயம் வேறு மாதிரியாக மாறியிருக்கும். இந்த வழக்கத்திலிருந்து முதலில் விலகியவர் அல் இமாம் ஸைத் ஆவார். எப்படி அவர் தன்னை மதீனாவிலேயே சுருக்கிக் கொள்ளவில்லையோ அதே போல அவர் —தன் தந்தை அல்லது மாமா அல்லது ஒன்று விட்ட சகோதரர் போல— துடிப்பற்ற அரசியல் எதிர்ப்பில் தன்னை சுருக்கிக் கொள்ளவில்லை.
அடுத்து அன்றைய அரசியல் சூழல் எப்படி இருந்தது என்று பார்ப்போம். அன்றைய உமவி அரசாங்கம் இரத்தக்களரியான, கொடூர அரசாங்கமாக இருந்தது. ஈராக்கை ஆண்ட ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் என்ற ஒரு நபர் மட்டும் தன் கையாலேயே 1,20,000 ஈராக்கியர்களை கொலை செய்ததாக அறியப்படுகிறார். இன்றும் ஈராக்கில் நடக்கும் கொலைகளை* நாம் செய்திகளில் கேள்விப்படுகிறோம். இன்றைய ஈராக்கின் மக்கள் தொகை மூன்று கோடிக்கு மேல் இருக்கும். ஆனால் அன்றைய ஈராக்கின் மக்கள் தொகை கிட்டத்தட்ட நாற்பது லட்சம் இருந்திருக்கும் என்பது என் கணிப்பு. நாற்பது லட்சம் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 1,20,000 பேரை கொலை செய்வது என்பது இன்றைய அரசியல் குற்றவாளிகளோடு போட்டி போடுவதாக உள்ளது.
(*2000-களில் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய சமயத்தில் இந்த உரை நிகழ்த்தப்பட்டது)
இன்று அப்பகுதியில் எப்படி பொதுமக்களின் மனநிலை ஆளும் வர்க்கத்துக்கு எதிராக உள்ளதோ அப்படித்தான் அன்றும் இருந்தது. இந்நிலையில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரான செயலாண்மையற்ற மனநிலையிலிருந்து இமாம் ஸைத் விலகியபோது, ஏற்கனவே இந்த ஆட்சியாளர்களால் வெறுத்துப் போயிருந்த மக்களின் வரவேற்பு அவருக்குக் கிடைத்தது.
இமாம் அலீயை சபிக்கும் உத்தரவு
இங்கு மற்றொறு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன். அன்று ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பள்ளிவாசலில் இமாம்கள் அனைவரும் ஜும்ஆ மேடையில் நின்று, இமாம் அலீ, ஃபாத்திமா, ஹசன் மற்றும் ஹுசைன் ஆகியோரை சபிக்க வேண்டும் என்ற அரசாங்க உத்தரவு நடைமுறையில் இருந்தது. இதைக் கேட்கும் பல முஸ்லிம்கள், பொதுமக்களின் மனப்பாங்கை ஆட்சியாளர்களோடு குழப்பிவிடுகின்றனர். இன்று ஈராக்கின் ஆட்சியாளர்கள், பள்ளிவாசலில் இருப்பவர்களிடம் இப்படி உத்தரவு பிறப்பித்து அதை அவ்வதிகாரிகள் செயல்படுத்தினால், அது பொதுமக்களின் மனப்பாங்கை பிரதிபலிக்கிறது என்று நாம் எடுத்துக் கொள்ள முடியுமா என்ன? நிச்சயமாக இல்லை. பொதுமக்களையும் அரசாங்கங்களையும் பிரித்துப் பார்க்க வேண்டிய தேவை அன்றைய முஸ்லிம்களிடம் துவங்கி இன்று வரை மிகப் பெரும் பிரச்சனையாக நீடிக்கிறது.
இந்த உத்தரவை முதலில் பிறப்பித்த முஆவியாவுக்கு, இறைத்தூதரின் மனைவி உம்மு சல்மா பின்வருமாறு கடிதம் எழுதினார்: “உங்கள் மேடைகளிலிருந்து நீங்கள் அலீ இப்னு அபீ தாலிப் மற்றும் அவருக்குப் பிரியமானவர்கள் மீது சாபம் இடுவதன் மூலம் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் மீது சாபம் இடுகிறீர்கள். ஏனெனில் அல்லாஹ்வும் அவனது தூதரும் இமாம் அலீயை நேசித்தார்கள். இதற்கு நானே சாட்சி.” இந்த கடிதத்தை முஆவியா மதித்திருப்பார் என்று நினைக்கிறீர்களா? அவர் அதை குப்பையில் போட்டிருப்பார். எந்த மாற்றுமும் இன்றி நிலைமை அப்படியே தொடர்ந்தது.
இதற்கு எதிர்வினையாக ஷியாக்கள் அபூ பக்கர் மற்றும் உமரை சபிக்கின்றனர். இது சரியல்ல. ஷியாக்கள் அபூ பக்கர் மற்றும் உமரை முஆவியா மற்றும் யஸீதோடு குழப்பிக் கொள்கின்றனர். அபூ பக்கர் மற்றும் உமரின் செயல்பாடுகள் வேறு விதமாக இருந்தன; முஆவியா மற்றும் யஸீதின் செயல்பாடுகள் வேறு விதமாக இருந்தன. இவற்றுக்கு இடையே மலையளவு வேறுபாடு உள்ளது. இதை பிரித்துப் பார்க்கும் முதிர்ச்சியை அவர்கள் அடைய வேண்டும். இது எப்போது நடக்கும் என்று எனக்குத் தெரியாது. எனினும் இதை அறிந்த ஷியாக்களும் சிலர் உள்ளனர் என்பதையும் நாம் இங்கு சொல்லியாக வேண்டும்.
அதே வேளை சன்னிகளும் இவற்றை குழப்பிக் கொள்கின்றனர். சன்னிகளும் சரி, ஷியாக்களும் சரி முஆவியாவை கலீஃபா என்று சொல்லும் போது இந்தக் குழப்பம் வெளிப்படுகிறது. இருவர் சொல்வதும் தவறு. அவர் கலீஃபா அல்ல. இந்த ஒரு வேறுபாட்டை துல்லியமாகப் புரிந்து கொள்ளவில்லை எனில் அவர்கள் கொஞ்சம் கூட வரலாறை கற்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அரசாங்கத்தை எதிர்த்துப் பயணம்
இமாம் ஸைதின் காலத்தில் ஆட்சியில் இருந்த அப்துல் மலிக் இப்னு மர்வான் ஒரு முறை ஹஜ்ஜில் இருந்தார். பல முஸ்லிம்கள் அங்கு கூடி அல்லாஹ்வுக்கு தங்கள் பக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அம்மன்னர் பின்வருமாறு கூறினார்: “யார் என்னிடம் ‘அல்லாஹ் குறித்து பிரக்ஞையோடு இருங்கள்’என்று சொல்வாறோ அவரது தலையை வெட்டிவிடுவேன் (மன் கால இத்தகில்லாஹ கதஅதஹு ரகபத)”. ஹஜ்ஜில், அதுவும் அத்தனை முஸ்லிம்கள் குழுமியிருந்த போது இப்படிச் சொல்கிறார் எனில் அவர் எதை உணர்த்த விரும்புகிறார்? அச்சமயத்தில் இருந்த அரசியல் சூழலை, எப்படிப்பட்டவர்களை எதிர்த்து இமாம் ஸைத் செயல்படத் துவங்கினார் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
இமாம் ஸைத் அரேபியத் தீபகற்பம் முழுதும் —குறிப்பாக ஈராக்— பயணம் மேற்கொண்டார். அன்று பொதுமக்களின் எதிர்ப்பு பல படித்தரங்களில் இயங்கிக் கொண்டிருந்தது என்று சொன்னோம். உமவிகளை இரத்தக்களறியான வன்முறையோடு எதிர்த்த கவாரிஜ்கள் ஒருபுறம் இருந்தனர். மற்றொருபுறம் சாதாரணமான, இயல்பான பொதுமக்களின் அதிருப்தி இருந்தது. உமவி ஆட்சி ஒழிய வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவ்வாட்சியில் பங்கெடுக்காமல் பலர் இருந்தனர். இந்தப் பொது உணர்வை திருடித்தான் தங்களை ஷியாக்களாக முன்னிறுத்தி அப்பாஸிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். இது இல்லையென்றால் அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.
சில ஷியாக்கள் எல்லை மீறி சென்றதை அல் இமாம் ஸைத் தன் பயணங்களின் போது கண்டார். அவர்கள் தங்கள் எதிர்ப்பில் சமநிலையின்றி இருந்தனர். பல இடங்களில் அவர்களோடு நிகழ்ந்த சந்திப்புகளில் அவர்களை சரி செய்ய தன்னால் இயன்ற அளவு இமாம் ஸைத் முயன்றார். எங்கு சென்றாலும், எப்போது சென்றாலும் இத்தகைய நபர்களை கண்காணிக்கும் எல்லா அரசுகளையும் போல உமவி அரசும் இவரை கண்காணித்துக் கொண்டிருந்தது. எங்கும் செல்லாமல் மதீனாவிலேயே இருக்கும் இமாம்கள் எனில் அவர்களை சமாளிப்பது எளிது. கிட்டத்தட்ட அந்நகரத்தில் சிறைபட்டது போலத்தான் அவர்களின் நிலைமை. ஆனால் ‘இவரோ எல்லா இடங்களுக்கும் பயணிக்கிறார். இவர் மீது ஒரு கண் வைக்க வேண்டும். இவர் பிரச்சனைக்குரியவர். நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவார்; ஆட்சிக்கவிழ்ப்பிலும் ஈடுபடக் கூடும். எனவே அவர் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்பது அரசாங்கத்தின் நிலையாக இருந்தது.
அன்று உமவி ஆட்சியின் தலைவராக ஹிஷாம் இப்னு அப்துல் மலிக் இருந்தார். ஹி. 105 முதல் 125 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த அவர், எல்லா இடங்களிலும் தன் ஒற்றர்களையும், உளவாளிகளையும் பரப்பி வைத்திருந்தார். ஆரம்பத்தில் அப்பாஸிகள்தான் ஆங்காங்கே —இன்றைய ஈரான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் இடையே இருந்த குரசான் போன்ற பகுதிகளில்— உமவிகளுக்கு எதிரான கிளர்ச்சியைத் துவங்கினர். இது உமவிகளை கவலைக்குள்ளாக்கியது.
தொடர்ந்து தொல்லை
ஷியாக்கள் எதற்கும் உதவாதவர்கள், தங்களுக்குள்ளாகவே சச்சரவுகளில் ஈடுபடுபவர்கள் என்றெல்லாம் பொதுக் கருத்தை உருவாக்க உமவி அரசு தந்திரமாக முயற்சி செய்தது. அப்போது இமாம் ஸைதின் குடும்பத்துக்குள் ஒரு பிரச்சனை எழுந்தது. மதீனாவில் இமாம் அலீ அளித்த வக்ஃப் சொத்தை யார் நிர்வகிப்பது? ஹசனின் குடும்பத்தினரா அல்லது ஹுசைனின் குடும்பத்தினரா? என்பதுதான் பிரச்சனை. குடும்பத்துக்குள் பிரச்சனை லேசாக எழுந்தவுடன், அது அரசின் காதுகளுக்கு எப்படியோ எட்டியது. இதன் பொருள் அவர்கள் தங்கள் ஒற்றர்களை எல்லா இடங்களிலும் பரப்பி வைத்திருந்தனர் என்பதே. இதை அறிந்த மன்னர், மதீனாவின் ஆளுநரிடம் “நாம் இதை வைத்து விளையாடுவோம். இந்த இமாம்கள் எப்படிபட்டவர்கள் என்று மக்கள் பார்க்கட்டும்” என்றார்.
“இதை ஏன் உங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள் நீதி மன்றத்தில் வைத்துப் பேசலாம்” என்று சொல்லி அவர்கள் பிரச்சனையை நீதி மன்றத்துக்குக் கொண்டு சென்றனர். மதீனாவின் ஆட்சியாளர் முன் இப்பிரச்சனை வந்த போதுதான் என்ன நடக்கிறது என்று இமாம் ஸைத் உணர்ந்தார். ‘நம்மிடையே பிரிவினை உண்டாக்கி நம்மை களங்கப்படுத்த முற்படுகின்றனர்’ என்பதை உணர்ந்த அவர் அங்கேயே “எனக்கு உரியதை உங்களுக்காக விட்டுக் கொடுக்கிறேன்” என்றார். உடனே பிரச்சனை முடிவுக்கு வந்தது. உமவி தலைவர் தீட்டிய திட்டம் தவிடு பொடியானது.
எல்லா காலங்களிலும் “எதைச் சொன்னாலும் அப்படியே செய்வோம்” என்று சொல்லும் எடுபிடிகள் இருக்கத்தான் செய்வர். அன்று மதீனாவிலும் அப்படிச் சிலர் இருந்தனர். நீதி மன்றத்தில் விஷயம் நீர்த்துப் போனவுடன் இவர்களைத் தூண்டிவிட்டு இமாம் ஸைதை மிரட்டிப் பார்த்தனர். ஆனால் அவர் “உங்களைப் போன்றவர்களுக்கு நான் பதிலளிக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டார். எனவே அவர்கள் சட்ட ரீதியாகவும் அவரைச் சிக்க வைக்க முடியவில்லை. தனிப்பட்ட முறையிலும் அவரைச் சிக்க வைக்க முடியவில்லை.
பிறகு இமாம் ஸைத் ஈராக் சென்றார். அங்கு அவர் ஃகாலித் இப்னு அப்துல்லாஹ் அல் கஸ்ரி என்பவரை சந்தித்தார். தெற்கு ஈராக்கின் கூஃபா பகுதியில் அதிகாரியாக இருந்த அவர், இமாம் ஸைதுக்கு நெருங்கிய நண்பரானார். பிறகு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு இந்த நண்பரிடமிருந்து இமாம் ஸைத் பணம் பெற்றார் என்று குற்றம் சாட்டினர். அதை அவர் அரசுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறினர். எல்லா விதத்திலும் அவர்கள் அவரை துன்புறுத்த முயன்றனர். இமாம் ஸைதோ “இவ்விஷயத்தை நான் மேலிடத்தில் பேசிக் கொள்கிறேன்” என்று கூறி ஹிஷாம் இப்னு அப்துல் மலிக்கை சந்திக்க டமாஸ்கஸ் சென்றார். அங்குதான் அதிகார மையம் இருந்தது. அங்கு சென்ற அவர் “நான் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்” என்று கோரிக்கை வைத்தார். ஆரம்பத்தில் மன்னர் “நீங்கள் மதீனாவுக்கே திரும்பி விடுங்கள். உங்களோடு பேச எனக்கு விருப்பம் இல்லை” என்று சொல்லி அவரை சந்திக்க மறுத்துவிட்டார். பல முறை முயன்றும் மன்னரை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடைசியாக, அறிமுகமான வேறு சிலர் மூலம் முயற்சி செய்து மன்னரை சந்திக்க அனுமதி பெற்றார். இமாம் ஸைத் உறுதியாகவும், வெளிப்படையாகவும், சரளமாகவும் பேசும் தன்மை கொண்டவர். நாம் இதற்கு முன்னர் பேசிய எல்லா ஆளுமைகளும் இப்படித்தான் இருந்தனர்.
அல் இமாம் ஸைத், ஹிஷாம் இப்னு அப்துல் மலிக்கை நோக்கி பின்வருமாறு கூறினார்:“ஓரளவாவது இறை பிரக்ஞை (தக்வா) கொண்டவர் எவரும் அந்தஸ்து இழக்க மாட்டார்; சுருங்கும் இறை பிரக்ஞை கொண்டவர் எவரும் அந்தஸ்து பெறமாட்டார்”. (நான் இதை பொழிப்புரையாகவே சொல்கிறேன்) இதைக் கேட்ட மன்னர் மிகவும் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தார். அச்சொற்களின் தீவிரத்தை புரிந்து கொள்வதற்கு இமாம் ஸைதின் கூற்றை நீங்கள் அரபு மொழியில் கேட்க வேண்டும்! இத்தகைய பேச்சைக் கேட்டு சீற்றம் அடைந்த மன்னர் “வாயை மூடு தாயற்றவனே! (உஸ்குத் லா உமலக்)” என்றார். இன்றைய மொழியில் அநாகரிகமாகத் திட்டுவது போலாகும் இது. மேலும், “‘அமா’வின் மகனே! பதவியை அபகரிக்கும் எண்ணத்தோடு பேசுகிறாய்!” என்றார். ‘அமா’ என்பது பெண் அடிமையை குறிக்கும் சொல் – ‘அப்து’ என்பது ஆண் அடிமையை குறிப்பது போல. ‘அப்து’ என்பதற்கு இரு அர்த்தங்கள் உண்டு: அல்லாஹ்வின் அடிமை என்றும் சக மனிதனுக்கு அடிமை பட்டுக் கிடக்கும் மனிதன் என்றும் பொருள் உண்டு. இரண்டாவது அர்த்தத்தைத்தான் மன்னர் குறிப்பிட்டுக் கூறினார். அதாவது சிந்து பகுதியைச் சார்ந்தவரை தாயாகக் கொண்டவரைக் குறிப்பிட்டு “முழு மனிதனாகக் கூடக் கருத முடியாத, அடிமைத்தளையிலிருந்து வந்த ஒரு பெண்ணுக்குப் பிறந்தவர்தானே நீர்” என்று கூறினார்.
இதற்கு இமாம் ஸைதின் பதில் பின்வருமாறு இருந்தது. “அல்லாஹ்விடத்தில் இறைத்தூதரை விட மதிப்பு மிக்கவரோ கண்ணியம் பெற்றவரோ யாரும் இல்லை. நீர் குறிப்பிடுவது போன்ற ஒரு தாய்க்குப் பிறந்த ஒரு இறைத்தூதர் உள்ளார். அவரிலிருந்துதான் உலகின் தலைசிறந்த இறைத்தூதராகிய முஹம்மத் தோன்றினார்.” அடிமையாகிய (அமா) ஹாஜராவுக்குப் பிறந்த இஸ்மாயீலைக் குறிப்பிட்டு இமாம் ஸைத் இவ்வாறு கூறினார்.
இமாம் ஸைதின் புத்திசாலித்தனமும் சமயோஜிதமும் இங்கு வெளிப்படுகிறது. இவ்விஷயங்களைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், மன்னர் போல பேசிக் கொண்டிருந்த ஹிஷாமின் கன்னத்தில் அறைந்தது போல இருந்தது அப் பதில். இதற்கு மேல் மன்னரால் பேச முடியவில்லை. “இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்” என்றார் மன்னர். இதைக் கேட்ட இமாம் ஸைத், “நான் இங்கிருந்து செல்கிறேன். ஆனால் நான் செல்லும் இடம் உமக்குச் சாதகமாக இருக்காது” என்றார். அதாவது ‘நான் எங்கு செல்ல வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ அங்கு போகமாட்டேன்’ என்பது இதன் அர்த்தம். இதை ஹிஷாம் இப்னு அப்துல் மலிக் தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டலாகவே பார்த்தார். அன்றிலிருந்து இமாம் ஸைத் மதீனா, ஈராக் என்று எங்கு சென்றாலும் அரசு அவரை தொல்லை செய்ய ஆரம்பித்தது.
உறுதிப் பிரமாணம்
இம்முறை இமாம் ஸைத் ‘தான் மேற்கொள்ளும் பாதை சரியானது, சத்தியமானது; இதில் மரணம் நிகழ்ந்தாலும் பரவாயில்லை’ என்ற முடிவோடு இருந்தார். செல்வதற்கு எத்தனையோ இடங்கள் இருக்க அவர் யாருக்கும் தெரியாத வண்ணம் மாறுவேடத்தில் கூஃபா சென்றார். அங்கு சென்றவுடன் ஈராக்கிய ஷியாக்கள், அவரிடம் வந்து அவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளித்தனர். அதன் சாரம் இப்படி இருந்தது: “அல்லாஹ்வின் வேதத்துக்கும் முஹம்மதின் (ஸல்) வழிமுறைக்கும் ஆதரவு கோரி உங்களை அழைக்கிறேன். மேலும் அநியாயக்காரர்களுக்கு (ளாலிமீன்) எதிராகவும், ஒடுக்கப்பட்டோருக்கு (முஸ்தல்அஃபீன்) ஆதரவாகவும் போர் செய்வதற்கும், வறியவர்களாக்கப்பட்டவர்களுக்கு (மஹ்ரூமீன்) வழங்குவதற்கும், வருவாயை மக்கள் மத்தியில் சமத்துவத்தோடு மறுபங்கீடு செய்வதற்கும், இங்கு நடக்கும் அநாச்சாரங்களுக்கு முடிவு கட்டவும் உங்களை அழைக்கிறேன்.”
இதற்கு அவர்கள் சம்மதித்தால் அவர்களின் கையைப் பிடித்து, அவர்களுடைய பிரமாணத்தை ஏற்றுக் கொள்வதற்கு அடையாளமாக மற்றொரு கையை அசைத்து ‘அல்லாஹ்வே, நீதான் இதற்கு சாட்சி (அல்லாஹும்ம ஃபஷ்ஹத்)’ என்று சொல்வார். இப்படி அவருக்கு உறுதிப் பிரமாணம் அளித்த மக்களின் எண்ணிக்கையைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். கூஃபாவில் மட்டும் 15,000 பேர் உறுதிப் பிரமாணம் செய்தனர். பின்னர், சுற்றுப் பகுதிகளில் இருந்து வந்த மற்றவர்களையும் சேர்த்தால் அது 40,000 ஆக உயர்ந்தது. இவர்கள் தென் ஈராக்கின் பிற பகுதிகளில் இருந்து வந்தவர்கள். உமவி மன்னராட்சிக்கு எதிராக 40,000 பேர் இமாம் ஸைதுக்கு உறுதிப் பிரமாணம் அளித்தனர்!
அதே வேளை, இமாம் ஸைதுக்கு நன்கு அறிமுகமானவர்கள், ‘இம்முயற்சியில் ஈடுபட வேண்டாம்’ என்று அவரை அறிவுறுத்தினர். காரணம், இது இருதரப்பினருக்கும் இடையே போரில் சென்று முடியும் என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். கூஃபாவாசிகள் இதில் பங்கெடுக்க வரமாட்டார்கள் என்ற பொதுக் கருத்து இருந்தது. இந்த உறுதிப் பிரமாணம் குறித்து இமாம் ஸைத் என்ன கருத்து கொண்டிருந்தாலும் மற்றவர்களுக்கு இதில் பெரிதாக எதிர்பார்ப்பு இருக்கவில்லை.
இமாம் ஸைத் ஹி. 122 சஃபர் மாதத்தில் உமவி ராணுவத்தை எதிர்கொள்ள திட்டமிட்டார். இதை அறிந்த ஹிஷாம் இப்னு அப்துல் மலிக், தெற்கு ஈராக்கின் ஆளுநருக்கு எச்சரிக்கைச் செய்தி அனுப்பினார். “அங்கு என்ன நடக்கிறது? இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா இல்லை வேறெங்காவது இருக்கிறீரா! நிலைமை கைமீறிப் போகும் முன் ராணுவத்தை அனுப்புங்கள். எனினும் முதலில் போர் செய்யாமல் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியுமா என்று ஸைதோடு பேசுங்கள். அவர் அதற்கு மறுத்தால் அவரோடு போர் செய்வதை விட நமக்கு வேறு வழியில்லை” என்ற ரீதியில் இருந்தது அச்செய்தி.
கைவிடுதல்
இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, இமாம் ஸைதுக்கு உறுதிப் பிரமாணம் அளித்தவர்கள் வேறு விதமாக நடக்க ஆரம்பித்தனர். ராணுவம் தயாராகிக் கொண்டிருக்கிறது. போருக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இமாம் ஸைதுக்கு உறுதிப் பிரமாணம் அளித்தவர்கள் வந்து “அபூ பக்கர் மற்றும் உமர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கூறுங்கள்” என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த இமாம் பின் வருமாறு கூறினார், “அல்லாஹ் அவர்களை மன்னிக்கட்டும். என் குடும்பத்தில் யாரும் அவர்களை ஆதரிக்காமல் இருந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. அவர்கள் குறித்து நல்லதைத் தவிர என்னிடம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை” என்றார். அவர்கள் எதிர்பார்த்த பதில் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதற்குத்தான் அவர்கள் காத்திருந்தனர் போலும்.
“அப்படியென்றால் நீர் ஏன் நாடகமாடுகிறீர்?” என்று அவர்கள் கேட்டனர். அதாவது ‘நீர்தான் நபி வீட்டாரை பாதுகாப்பவர் போன்ற ஒரு பிம்பத்தை ஏன் ஏற்படுத்துகிறீர்? எங்களை இந்த நிலைமையில் தள்ளிவிட நீர் யார்?’ என்ற அர்த்தத்தில் அவர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த இமாம் ஸைத் இப்படிக் கூறினார், “நீங்கள் கேட்ட கேள்விக்கு உறுதியான சொற்களில் என்னுடைய பதில் இதுதான்: நபி வீட்டாராகிய நாங்கள்தான் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு ஆகத் தகுதியானவர்களாக இருந்தோம். ஆனால் இவ்விஷயத்தை பொதுக் கருத்து தன் கையில் எடுத்துக் கொண்டு எங்களை விலக்கி வைத்து விட்டது. ஆனாலும் இவ்விஷயத்தில் நிராகரிப்பு இல்லை. அபூ பக்கரும் உமரும் தங்கள் பொறுப்பை ஏற்று நீதியை நிலை நாட்டினர். குர்ஆன் மற்றும் நபிவழியின்படி தங்கள் கடமையை ஆற்றினர்.”
அடுத்து அவர்கள், “அப்படியானால் நாம் ஏன் போர் செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். இதைக் கேட்கும்போது நெஞ்சம் வலிக்கின்றது. அதற்கு அவர், “ஆனால் இந்த உமவி மன்னர்கள் அவர்களைப் போலல்ல. இவர்கள் மக்களுக்கும் தங்களுக்கும் அநீதி இழைத்துள்ளார்கள். எனவே அல்லாஹ்வின் வேதம் மற்றும் இறைத்தூதரின் வழிமுறை ஆகியவற்றின் பக்கம் நிற்குமாறு மட்டுமே நான் உங்களை அழைக்கிறேன். இதற்கு செவி சாய்த்தால் அது உங்களுக்கும் எனக்கும் நன்மை பயக்கும். மாறாக நீங்கள் மறுத்தால், உங்களுக்காக பதில் சொல்பவன் நான் அல்ல. “லைச ஹாவுலாயிக ஹுனலிக் பனீ உமையா ளலமுன்னாஸ் வ ளலமு அன்ஃபுசவும் லஸ்து அலைக்கும் வகீல்”. இதைக் கேட்டதும் அவர்கள், “உங்கள் செயல்பாடுகளில் எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று கூறினர். இதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். போர் நெருங்கி வரும் சமயம் 15,000 பேர் வந்து இப்படிப் பேசினால் எப்படி இருக்கும்?
இதைப் படிக்கும் போது எனக்கு இமாம் அலீயின் கூற்று ஒன்று நினைவுக்கு வருகிறது. தெற்கு ஈராக்கின் மக்களோடு அவர் பழகியதால் அவர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். இச்சம்பவம் நடந்ததிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அவர் ஒற்றை வரியில் இப்படிக் கூறினார்: “இன் உஹ்மில்தும் ஃகுஃப்தும் வ இன் ஃகூரிப்தும் ஃகுர்தும் வ இனிஜ்தம அன்னாசு அலா இமாமதின் கஅன்தும் வ இன் உஜிப்தும் இலா மஷக்க நகஸ்தும்”. மிகவும் செறிவான விளக்கம்!இதை விடச் சிறப்பாகச் சொல்ல முடியாது!இதை மொழி பெயர்ப்பது கடினம். எனினும் இப்படிச் சொல்லலாம், “உங்களை (கூஃபாவாசிகளை) தனியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் ஏதாவது செய்தாக வேண்டும் என்று கிளர்ச்சி அடைவீர்கள். ராணுவத்தை எதிர்கொண்டால் உங்கள் உறுதி தளர்ந்துவிடும். தலைவர் (இமாம்) குறித்து மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்து கொண்டால், நீங்கள் அதைச் செல்லாததாக்கிவிடுவீர்கள். உங்களுடைய இன்னல்களைக் களைய யாராவது வந்தால் நீங்கள் ஓடிவிடுவீர்கள்”. இப்படித்தான் அவர்கள் இமாம் ஹுசைனோடு நடந்து கொண்டனர்; இப்படித்தான் அவர்கள் இப்போது இமாம் ஸைதோடும் நடந்து கொள்கின்றனர். இதைவிடச் சிறப்பாக இவர்களைப் பற்றி சொல்ல முடியாது.
இறுதியாக அம்மக்கள், “இந்த உறுதிப் பிரமாணத்திலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எங்களை எங்கள் வழியில் விட்டுவிடுங்கள், நாங்கள் செல்கிறோம்” என்றனர்.பிறகு அங்கிருந்து சென்று விட்டனர். சென்றது மட்டுமின்றி, செல்லும் போது “ஜாஃபர் சாதிக்தான் உண்மையான இமாம்” என்று கூறிச் சென்றனர்.
கூஃபா மற்றும் தெற்கு ஈராக்கை உமவி ராணுவம் நெருங்கிக் கொண்டிருந்த போது இது அனைத்தும் நடந்தது. ஆங்காங்கே சில பூசல்கள் உருவாயின. ஹி. 122 சஃபர் மாதத்தில் போரைத் துவங்க திட்டமிட்டிருந்த இமாம் ஸைத் இப்போது ஒரு மாதம் முன்கூட்டியே அதைச் செய்ய வேண்டியிருந்தது. ‘யா மன்சூர் யா மக்சூர்’ என்ற —இதை முழக்கம் என்று சொல்ல நான் விரும்பவில்லை; முழக்கம் என்ற சொல் இப்போது மிகவும் களங்கப்பட்டுள்ளது— ஒரு வாக்கியத்தை பயன்படுத்தினார். அவரைப் பின்பற்றுபவர்கள் இதைக் கேட்டவுடன் ஆயுதம் ஏந்தி எதிரியைச் சந்திக்கும் நேரம் வந்து விட்டது என்று புரிந்து கொள்வர். அது ஒரு ரகசிய சமிக்ஞை போல பயன்படுத்தப்பட்டது. அவர் அப்படிச் செய்த போது எத்தனை பேர் வந்தனர் என்று தெரியுமா? கிட்டத்தட்ட 400 பேர். ஆம் வெறும் 400 சொச்சம் பேர்!
ஸைத் அவர்களிடம் பின்வருமாறு கூறினார், “இழிவிலிருந்து மகிமையை நோக்கி வாருங்கள். மார்க்கத்தை நோக்கியும் இவ்வுலகத்தை நோக்கியும் வாருங்கள்; ஏனெனில் நீங்கள் இப்போது மார்க்கத்திலும் இல்லை உலகத்திலும் இல்லை. கூஃபாவாசிகள் மற்றொரு ஹுசைனிய்யாவை நிகழ்த்த ஒத்திகை பார்க்கிறார்களோ என்று நான் அஞ்சுகிறேன். (அதாவது ‘அல் இமாம் ஹுசைனோடுஅவர்கள் எப்படி நடந்து கொண்டார்களோ அதே போலத்தான் என்னிடமும் நடந்து கொள்கிறார்கள்’) அல்லாஹ்வின் மீது ஆணையாக என் இறுதி மூச்சு வரை நான் போராடப் போகிறேன் – அஃக்ரிஜு மினல் ளுல்லி இலல் இஸ் அஃக்ரிஜு இலத் தீனி வத் துன்யா ஃப இன்னகும் லஸ்தும் ஃபீ தீனின் வலா துன்யா அஃகாஃபு அன் யகூனு கத்ஃப கூஃபா ஹுசைனிய்யா அமரல்லாஹி லா யகாதிலன்ன ஹத்தல் மவுத்”. நடப்பது அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அவர், அவர்கள் இறுதி முடிவெடுத்து விட்டனர்; தங்கள் வாக்கைக் காப்பாற்ற மாட்டார்கள் என்பதை அறிந்திருந்தார். ஆனால் அது இமாமை கொஞ்சமும் பாதிக்கவில்லை. “நான் இதை மறுபரிசீலனை செய்கிறேன். சமரசத்துக்கான வழியைப் பார்ப்போம். நமக்கிடையே ஒரு பொதுப் புரிதலை ஏற்படுத்துவோம்” என்று சொல்பவராக அவர் இல்லை.
போர்
கடைசியாக போருக்கான நாள் வந்த போது அல் இமாம் ஸைதோடு உடனிருந்தவர்கள் கிட்டத்தட்ட பத்ருப் போரில் இறைத்தூதரோடு கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை ஒத்திருந்தது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவர்கள் கிட்டத்தட்ட 317 பேர் இருந்தனர். ஆனால் எதிரிகளின் ராணுவத்தில் பத்தாயிரக் கணக்கில் வீரர்கள் இருந்தனர். ஆக இது மற்றொரு சமமற்ற போராக மாறியது. எனினும் அல் இமாம் ஸைதோடு சேர்ந்து போரிட்டவர்களின் மன வலிமை உறுதியாக இருந்தது. போரின் முதல் நாள், இமாம் ஸைதின் பக்கம் நின்ற வீரர்களுக்குச் சாதகமாக இருந்தது. அன்று வில்-அம்பு போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. அவர்கள் வாள் போர் புரிந்தனர். அதில் இமாம் ஸைதின் வீரர்களைக் காட்டிலும் உமவி ராணுவம் மிகப் பெரிய சேதத்தைச் சந்தித்தது. உமவி தரப்பிலிருந்து கிட்டத்தட்ட 70 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இரண்டாம் நாள் உமவிகள் புதிய யுக்தியை கையில் எடுத்தனர். வில்-அம்புகளை பயன்படுத்தினர். பெரும் எண்ணிக்கையில் இருந்ததாலும் நவீன ஆயுதங்களைப் பெற்றிருந்ததாலும் நிலைமை அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. இமாம் ஸைத் தாக்கப்பட்டார். அம்பு ஒன்று அவரது நெற்றிப் பொட்டைத் துளைத்துச் சென்றது. அதை உருவி எடுக்கும் போது அவரது உயிர் பிரிந்தது.
இமாம் ஹுசைனுக்கு என்ன நடந்ததோ கிட்டத்தட்ட அதுவே மீண்டும் நடப்பது போல இருந்தது. ஆளுமைகள்தான் வெவ்வேறாக இருந்தனர். ஆனால் அதன் அர்த்தம், அதன் இயங்கியல், ஈடுபாடு, துரோகம், பலருக்கு எதிராக சிலர் அணிதிரள்தல் போன்றவற்றைப் பார்க்கும் போது, அனைத்தும் ஏற்கனவே நடந்ததை மீண்டும் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.
இமாம் அல் ஸைத் இரவோடு இரவாக நல்லடக்கம் செய்யப்பட்டார். இஸ்லாத்தில் இப்படி இரவுகளில் அடக்கம் செய்யும் வழக்கம் இல்லை. ஆனால் இச்சம்பவத்தில் ராணுவம் ஈடுபட்டிருந்ததாலும், பிற அச்சுறுத்தல்கள் இருந்ததாலும் இது ஒரு விதிவிலக்காகப் பார்க்கப்பட்டது. அவரது மண்ணறையை மறைத்து வைக்கும் விதமாக ஒரு நீரோடையின் கீழ் அவர் அடக்கம் செய்யப்பட்டார் என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன. நீரோடையில் போய் யாராவது கல்லறையைத் தேடுவார்களா என்ன? எனினும் இரவோடு இரவாக, யாருமே கற்பனை கூட செய்யாத இடத்தில், மிகச் சிலர் மட்டுமே நின்று அடக்கம் செய்தும், முன்னெச்சரிக்கைகள் பல செய்த பின்பும் விஷயம் எப்படியோ வெளியே கசிந்தது.
அது எப்படி கசிந்தது என்று எனக்குத் தெரியாது. எல்லா அரசாங்கங்களையும் போல இவ்வரசாங்கமும் தன் ஆட்களை எல்லா இடங்களிலும் பரப்பி வைத்திருந்தது. யாரோ எப்படியோ இதை அறிந்து,அச்செய்தி அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்டது. அரசாங்க அடியாட்கள் வந்து மண்ணறையைத் தோண்டி இமாம் ஸைதின் உடலை எடுத்துச் சென்றனர். அதை அவர்கள் என்ன செய்தனர் தெரியுமா? இமாம் ஸைதின் உடலை அவர்கள் கூஃபாவில் மக்கள் பார்க்கும் வண்ணம் சிலுவையில் ஏற்றினர். எத்தனை நாட்கள் அது அப்படி இருந்தது என்று தெரியாது. பின்னர் அவ்வுடலை இறக்கி அதை எரித்துச் சாம்பலை காற்றில் பறக்க விட்டனர்.இவர்கள்தான் இஸ்லாமிய ஆட்சியாளர்களா? என்ன இது?! எந்த எல்லைக்குத்தான் இவர்கள் போவார்கள்?! எனினும் அன்றைய அரசியல் அரசாங்கங்கள் எப்படி இருந்தன என்பதை இது காட்டுகிறது. இன்றும் கூட அரசாங்கங்கள் தவறான பாதையில் இருப்பதை மக்கள் உணர்வதில்லை.
உமவிகளின் வீழ்ச்சி
கர்பலாவில் இமாம் ஹுசைன் உயிர்தியாகம் செய்த பின் உமவி வம்சத்தின் சுஃப்யானி பகுதி முடிவுக்கு வந்தது. அதன் கடைசி மன்னராக யஸீத் இருந்தார். அதன் பிறகு மர்வானி பகுதி ஆட்சிக்கு வந்தது. மர்வானிகள் இமாம் ஸைதுக்கு இழைத்த கொடுமைகளுக்குப் பிறகு வெறும் பத்து ஆண்டுகளில் உமவிகள் ஆட்சி இழந்தனர். அவர்கள் வரலாறாக மாறிப் போயினர். ஹி. 132-ல் அப்பாசிகள் ஆட்சிக்கு வந்தனர். நிகழ்வுகள் அனைத்தையும் முஸ்லிம்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். உமவிகளுக்கு எதிராக முஸ்லிம் உலகம் முழுதும் வீசிய எதிர்ப்பு அலையில் சவாரி செய்தவர்களாக அப்பாஸிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். நாம் ஏற்கனவே படித்த வரலாற்றுத் தகவல்களைக் கொண்டு இவ்விடத்தை நிரப்புங்கள். அபூ ஹனீஃபா, நஃப்ஸ் அஸ் ஸகியா, பிற அறிஞர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தது போன்றவற்றைக் கொண்டு பார்க்கும் போது உமவிகள் தங்கள் கடைசி காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது.
ஆட்சியை விட்டு வெளியேறக் காத்துக் கொண்டிருந்த உமவிகளுக்கு எதிராக நிலவிய அலையை அப்பாஸிகள் தங்களுக்குச் சாதகமாக தந்திரமாகத் திருப்பிவிட்டனர். இப்படியான நிலையில் அப்பாஸிகள் ஒரு காரியம் செய்தனர். ஷியாக்களை, இமாம்களுக்கு ஆதரவானவர்களின் ஆதரவை வென்றெடுக்கும் பொருட்டு அப்பாஸிகள் உமவிகளின் மண்ணறைகளைத் தோண்டி அவர்களின் உடல்களைக் களங்கப்படுத்தினர். ஹிஷாம் இப்னு அப்துல் மலிக், அப்துல் மலிக் இப்னு மர்வான் ஆகியோரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு சிதைக்கப்பட்டன. ‘நீங்கள் செய்ததைப் போல நாங்களும் செய்கிறோம்’ என்பது போல! ஒரு கொடுமை மற்றொன்றை நியாயப்படுத்திவிடாது. அவர்கள் செய்ததும் தவறுதான்; இவர்கள் செய்ததும் தவறுதான். ஆனால் அரசியல்வாதிகள் தங்களுக்கு எது சாதகமோ அதைத்தான் செய்வர்! அரசியல் லாபம் கிடைக்கும் எனில் அவர்கள் எதையும் செய்வர்.
சட்டவியல்
அடுத்து, இமாம் ஸைதின் சட்டவியலைப் பற்றி பார்ப்போம். இமாம் ஸைதோடு தொடர்புபடுத்தப்படும் இரண்டு நூல்கள் உள்ளன. ஒன்று மஜ்மூ அல் ஹதீஸ், மற்றொன்று மஜ்மூ அல் ஃபிக்ஹ். இவ்விரண்டும் ஒன்றாக பிணைக்கப்பட்டு ஹதீசும் சட்டவியலும் அடங்கிய ஒரே நூலாக மஜ்மூ அல் அக்பர் என்று வழங்கப்படுகிறது. அவருடைய சட்டவியலைப் பொருத்தவரை, நான் ஏற்கனவே சொன்னது போல, சில்சிலா தஹபிய்யா எனப்படும் இமாம் ஸைத், இமாம் ஸைனுல் ஆபிதீன், இமாம் ஹுசைன், இமாம் அலீ, இறைத்தூதர் என்ற அறிவிப்பாளர் வரிசையில் வரும் ஹதீஸ்களை அது மேற்கோள் காட்டுகிறது. இது அவர்களின் பிரதான அறிவிப்பாளர் வரிசை. அத்தோடு, இந்த ஹதீஸ்களோடு முரண்படாத, குர்ஆன் மற்றும் நபிவழியோடு பிரச்சனையின்றி பொருந்திப் போகிற பிற ஹதீஸ்களையும் அவர்கள் கொண்டுள்ளனர். ஸைதிகளின் சட்டவியலை பொதுவாகப் பார்க்கையில் இதற்கு நெருக்கமான மற்றொரு சிந்தனைப் பள்ளி உண்டெனில் அது ஹனஃபி சிந்தனைப் பள்ளி என்று சொல்லலாம். இது பொதுப்படையாகச் சொல்லப்படும் வாக்கியம் என்பதை நினைவில் கொள்க.
இமாமத்
இமாமத்தைப் பொருத்தவரை ஸைதிகள் தங்களுக்குள்ளாகவே பல இஜ்திஹாத்களைப் பெற்றுள்ளனர். ஸைதிகள் என்று சொல்லும் போது அது ஒரேயொரு இஜ்திஹாதைக் குறிப்பதில்லை. அவர்களுக்குள்ளாகவே இஜ்திஹாதின் கிளைகள் உள்ளன. சில ஸைதிகள் இமாம்களின் பிழையாத் தன்மையில்(அஸ்மா) நம்பிக்கை கொண்டுள்ளனர். வேறு சிலர் அதில் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றாலும் அது பிற ஷியாக்கள் கொண்டிருப்பது போல் இல்லை. மேலும் அவர்கள் அல் இமாம் ஹசனின் வரிசை மற்றும் இமாம் ஹுசைனின் வரிசை இரண்டுமே முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்குவதற்கு சமமாகத் தகுதி பெற்றுள்ளது என்றும் இமாம் அல் ஹுசைனின் வரிசை மட்டும் பிரத்தியேகத் தகுதி படைத்தது அல்ல என்றும் நம்புகின்றனர். பன்னிருவர் அல்லது ஜாஃபரி வகை ஷியாக்களோடு ஒப்பிடும் போது இது ஒரு முக்கிய வேறுபாடு. இது அனைத்தையும் அவர்கள் இமாம் அலீ மற்றும் ஃபாத்திமாவோடு தொடர்பு படுத்திகின்றனர். இவர்களின் பிள்ளைகளுள் இமாம் ஹசன் ஒப்பீட்டளவில் கீழான மகன் என்றோ இமாம் ஹுசைனை விட ஒப்பீட்டளவில் கீழான சகோதரர் என்றோ அவர்கள் நம்புவதில்லை. ஆக ஸைதிகளின் மனதிலும் உள்ளத்திலும் பாரபட்சம் இல்லை என்பது தெரிகிறது.
ஜாஃபரிகள் இப்படிக் கூறுகின்றனரா என்று கேட்டால், இல்லை என்றே நினைக்கிறேன். அவர்களைப் பொருத்தவரை இமாமத்தின் வரிசை கறாராக இமாம் அலீ, இமாம் ஹுசைன் மற்றும் 12 இமாம்கள் என்று நீள்கிறது. இமாமத் குறித்து இமாமி (பன்னிருவர் வகை) மற்றும் ஸைதி சட்டவியலின் ஒப்பீடு இரண்டு சொற்களில் சுருங்குகிறது: ஷக்ஸ் மற்றும் வஸ்ஃப். எல்லா முஸ்லிம்களும் ‘மன் குன்தும் மௌலா ஃப ஹாதா அலீயுன் மௌலா’ என்ற இறைத்தூதரின் கூற்றை ஏற்றுக் கொள்கின்றனர். இதைக் கேள்வி கேட்கும் முஸ்லிம்கள் யாரும் இல்லை. ஆனால் இதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதில்தான் வேறுபாடு நிலவுகிறது.
இமாமத் கோட்பாட்டுக்கு நியாய விளக்கம் வகுத்துள்ள ஷியாக்களுள் பன்னிருவர் வகையைப்(அல்லது இமாம் ஜாஃபர் சாதிக்கின் சட்டவியலைப் பின்பற்றுபவர்கள்) பொருத்தவரை ‘இமாம் அலீ பற்றிய இறைத்தூதரின் இக்கூற்று அவரது ஆளுமை –ஷக்ஸ்– குறித்து சொல்லப்பட்டது’ என்கின்றனர். அதாவது அது இமாம் அலீ என்ற மனிதரைக் குறித்துச் சொல்லப்பட்டது என்கின்றனர். ஆனால் ஸைதிகளோ, ‘அது இமாம் அலீயின் ஆளுமையைக் குறிப்பதில்லை. மாறாக அது அவருடைய பண்புகளைக் —வஸ்ஃப் அல்லது அஹ்லியா— குறிக்கிறது’ என்கின்றனர். இருவருக்கும் இடையே நிலவும் இந்நுணுக்கமான வேறுபாடு இறைத்தூதர் மற்றும் அன்றைய பிரச்சனைகளைப் பற்றிய நேர்மையான அறிவுசார் புரிதலில் இருந்து வருபவைதான் என்றே கருதுகிறேன்.
சட்டவியல் ஆதாரங்கள்
சட்டவியலின் பிற கூறுகளைப் பொருத்தவரை, ஏனைய முஸ்லிம்கள் பெற்றிருப்பதைப் போலவே ஸைதிகளும் குர்ஆன் மற்றும் நபிவழியை ஆதாரமாகக் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் ஒப்பு நோக்கல் (கியாஸ்) மற்றும் சட்ட நீட்சி (இஸ்திஹ்சான்) ஆகியவற்றையும் பெற்றுள்ளனர். ஏதோவொரு சட்டவியல் பிரச்சனை, ஒரு குர்ஆன் வசனம் அல்லது ஹதீசின் மூலம் தீர்க்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். பிறகு அதுவல்லாத அல்லது அதைப் போன்ற வேறொரு பிரச்சனை வரும் போது முன்னர் பெற்ற முடிவுகளை இதில் பயன்படுத்துவது கியாஸ் ஆகும்.இஸ்திஹ்சான் என்பது சட்ட நீட்சி ஆகும். ஒரு சட்டவியல் தீர்ப்பை வேறொரு பிரச்சனைக்கு நீட்டித்து தீர்வு காண்பது இஸ்திஹசான் ஆகும். ஆனால் ஸைதி சட்டவியலின் இயங்கியலுக்கு உள்ளே ஆளமாகச் சென்று பார்த்தால் அவர்களும் —ஜாஃபரி சட்டவியலைப் போலவே— ‘குர்ஆன், சுன்னாஹ், ஆக்கில்(குர்ஆன் மற்றும் சுன்னாஹ் குறித்த மனிதனின் பகுத்தறிவுப் புரிதல்)’ ஆகியவற்றை ஆதாரமாகச் சொல்வர். ஸைதிகளின் சட்டவியல் குறித்த சுருக்கமான பார்வை இது.
நான் படித்த நூல்களிலிருந்து ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. ஒரு சமயம் குராசானின் சில பகுதிகளில் ஸைதிகளும் ஹனஃபிகளும் கலந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். அங்கு ஸைதி ஒருவருக்கு ஏதோ ஒரு விஷயம் குறித்து விளக்கம் பெற வேண்டியுள்ளது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அருகில் ஸைதி சட்டவியலாளர் இல்லாதபட்சத்தில், அவர் ‘பரவாயில்லை, ஹனஃபி சட்டவியலாளரிடம் கேட்போம். அதில் பிரச்சனை ஒன்றும் இல்லை’ என்று கூறுவார்.
இன்று ஸைதிகள் அதிகமாக ஏமனில் உள்ளனர். ஏன்? அல் இமாம் ஸைதுக்கு இரு மகன்கள் இருந்தனர். இமாம் ஸைத் உயிர் தியாகம் செய்த பின் அதில் ஒருவர், யஹ்யா, ஏமன் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இமாம் அலீயின் காலத்தில் இருந்தே ஏமன், அவரோடு அனுதாபம் கொண்டிருந்தது. அவர்களால் ஒருபோதும் உமவிகளோடு ஒத்துப் போக முடியவில்லை. ஏமனின் சட்டவியல் என்று எடுத்துக் கொண்டால் அங்கு ஸைதி மற்றும் ஷாஃபியி என இரண்டுதான் உள்ளன. இமாம் ஷாஃபியி உமவீகளால் கைது செய்யப்பட்ட வரலாறை நாம் பார்த்தோம். எனவே ஏமனின் ஒட்டுமொத்த சட்டவியல் சூழல் உமவிகளுக்கு எதிரானதாகவே இருந்தது. ஆண்டுகள் செல்லச் செல்ல ஸைதிகளின் புகழ் ஓங்கியது.
ஒரு காலத்தில் ததரிஸ்தானில் ஸைதிகள் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். அது வடக்கு ஈரானில் இன்றைய கஸ்வீன் பகுதியில் இருந்தது. அங்கு ஸைதிகள் தனி நாடு அல்லது சுய ஆட்சிப் பகுதி போன்ற ஒன்றை பெற்றிருந்தனர். சஃபவிகளின் காலத்தில் அவர்கள் நாடு முழுவதையும் ஒற்றை சிந்தனைப் பள்ளியின் கீழ் கொண்டு வர முயற்சித்த போது ஸைதிகள் பலர் இஸ்னா அஷரிகளாக மாறினர். ஆனால் வரலாற்றைத் தோண்டிப் பார்த்தால் ஸைதிகள் குரசான், ஈரானின் சில பகுதிகள் ஆகியவற்றில் கணிசமாக இருந்தனர். இன்றோ பெரும்பாலான அல்லது 90% ஸைதிகள் ஏமனில்தான் உள்ளனர்.
♣ ♣ ♣ ♣ ♣