இஸ்லாமிய வரலாறு – 18 / இஸ்மாயிலி சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி
♣ ♣ ♣ ♣ ♣
இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழி பெயர்த்து, தலைப்புகளை அளித்துள்ளோம் – மொழி பெயர்ப்பாளர்.
உரையாற்றிய நாள்: 02-06-2009, இடம்: வாஷிங்டன் டி.சி., அமெரிக்கா
♣ ♣ ♣ ♣ ♣
முஸ்லிம்களின் வரலாறு குறித்த இத்தொடரின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இத்தொடர் வகுப்பை முஸ்லிம்களின் சில தரப்புகளைக் கொண்டு முடிக்க விரும்புகிறேன். அவர்களை சிலர் உட்பிரிவுகள் என்றும், வேறு சிலர் சிறுபான்மையினர் என்றும், இன்னும் சிலர் இஸ்லாத்தின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் அழைக்கின்றனர். இத்தகைய வகைப்படுத்தல்கள் குறித்து நான் பெரிதும் அக்கறை கொள்ளவில்லை. இந்த வரிசையில் இன்று இஸ்மாயிலிகளைக் குறித்துப் பார்ப்போம்.
அல் இஸ்மாயிலியா என்ற பெயர் எப்படி வந்தது? (பன்னிருவர் வகை ஷியாக்களின் ஆறாவது இமாமான) இமாம் ஜாஃபர் அல் சாதிக்கின் மூத்த மகன்தான் இஸ்மாயீல். இமாம் ஜாஃபர் அல் சாதிக்கின் இறப்புக்குப் பிறகு அடுத்த இமாம் ஆவதற்கு அவருடைய மற்றொரு மகனான மூசா அல் காதிமை விட மூத்த மகன் இஸ்மாயீல்தான் தகுதிவாய்ந்தவர் என்பது இஸ்மாயிலிகளின் நம்பிக்கை. தனக்குப் பிறகு தன் மகன்களுள் யார் இமாமாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று இமாம் ஜாஃபர் அல் சாதிக் உயில் (வசிய்யா) எழுதினார் என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன. வாழும் இமாம் தன் மகன்களுள் ஒருவரை அடுத்த இமாம் ஆவதற்குத் தகுதி பெறச் செய்தாலும் தகுதி நீக்கம் செய்தாலும் முஸ்லிம்கள் அதை பின்பற்ற வேண்டும் என்கிறது வரலாற்றின் இந்த வடிவம். நிச்சயமாக இது இஸ்மாயிலிகளின் வரலாற்று வடிவம் அல்ல; பன்னிருவர் (இஸ்னா அஷ்’அரி) அல்லது இமாமி வகையினரின் வரலாற்று வடிவம் ஆகும்.
இமாம் ஜாஃபர் அல் சாதிக்குக்கு நான்கு மகன்கள் இருந்தனர். மூத்தவர் இஸ்மாயீல், அடுத்து அப்துல்லாஹ், அதற்கடுத்து இமாம் மூசா, பிறகு முஹம்மத். இந்த வரிசையில் பார்த்தால் இமாம் மூசா, மூன்றாமவர்; முதல் மகன் அல்ல. இந்த வேறுபாடு எப்படி பெரிய பிரச்சனையாக உருவானது என்று சற்று நேரத்தில் பார்ப்போம். முதல் மகனுக்கும் மூன்றாம் மகனுக்கும் என்ன வேறுபாடு? அதுதான் இஸ்மாயிலிகளுக்கும் பன்னிருவர் வகையினருக்குமான வேறுபாடு. இஸ்மாயீல் தன் தாய் வழியில் இமாம் அல் ஹசனின் கொள்ளுப் பேரரும் கூட.
வரலாற்று விவரணைகள்
நான் வரலாற்று விவரணைகளுக்கு நியாயமாக இருக்கவே முயற்சிக்கிறேன். ஒரு கருத்துக்கு எதிராக மற்றொன்றை ஆதரிக்க முயலவில்லை. இதைத்தான் நாம் இத்தொடர் முழுவதும் செய்துள்ளோம். வரலாற்று நிகழ்வுகள் குறித்த தகவல்களை உள்ளது உள்ளபடி சொல்லி வருகிறோம். இயன்றவரை அவை குறித்து தீர்ப்பு கூறுபவர்களாகவோ, மத்தியஸ்தம் செய்பவர்களாகவோ நாம் இல்லை. வரலாறை புரிந்து கொள்வதற்கான முதிர்ச்சியும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு என்று நம்புகிறோம்.
இவ்விஷயத்தில் பல வரலாற்று விவரணைகள் உள்ளன. ஒரு விவரிப்பு ‘இஸ்மாயீல் தன் தந்தை இறப்பதற்கு முன்னரே இறந்துவிட்டார்’ என்கிறது. தந்தை இறப்பதற்கு முன்னரே இறந்துவிட்ட ஒருவர் எப்படி இமாம் ஆக முடியும்? ஆகவே இவரது இமாமத் குறித்த வாதத்தை இந்த விவரிப்பு முற்றிலும் தகர்த்துவிடுகிறது. இமாம் ஜாஃபர் அல் சாதிக் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன், மதீனாவுக்கு அருகில் இருக்கும் அரீள் என்ற நகரத்தில் இஸ்மாயீல் இறந்தார் என்றும் அவரது உடல் சங்கைமிகு மதீனாவுக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பிரபலமானவர்கள் முன்னிலையில் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டு அல்-பகியா அடக்கத்தலத்தில் அடக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இன்று அங்கிருக்கும் ஆட்சியாளர்களால் கிட்டத்தட்ட அழிக்கப்படும் அடக்கத்தலம்தான் அல்-பகியா.
இவ்வரலாறு குறித்த இஸ்மாயிலி விவரிப்பு பின்வருமாறு: ‘தந்தை இறக்கும் போது இஸ்மாயீல் உயிரோடு இருந்தார். தந்தை இறந்து ஐந்து ஆண்டுகள் வரை அவர் உயிர் வாழ்ந்தார்’. ஆக இவ்விஷயத்தில் தீவிர கருத்து வேறுபாட்டை பார்க்க முடிகிறது. இமாம் ஜாஃபர் அல் சாதிக் இறந்த பிறகு இமாம் இஸ்மாயீலை அல் பஸ்ராவின் சந்தைப் பகுதியில் பார்த்த சாட்சிகள் உண்டு என்றும், அவர் ‘அற்புதங்கள்’ (கராமாத்) நிகழ்த்தினார் என்றும் இஸ்மாயிலிகள் கூறுகின்றனர். நடக்க முடியாத, ஊனமுற்ற ஒருவர் இமாம் இஸ்மாயிலிடம் தனக்காகப் பிரார்த்தனை செய்யச் சொன்னார் என்றும் இமாம் இஸ்மாயீல் அம்மனிதரை தன் கையால் பிடித்து எழுப்பிய போது அவர் நடந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இது வரலாறு என்று இஸ்மாயிலிகள் கூறுகின்றனர். மற்றொரு முறை குருடர் ஒருவர் இஸ்மாயிலிடம் பிரார்த்தனை செய்யச் சொல்லி அவர் பிரார்த்தித்ததும் அம்மனிதரின் பார்வை திரும்பியது என்றும் சொல்லப்படுகிறது. இது அனைத்தும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள். எனவே தந்தை இறப்பதற்கு முன்னரே இஸ்மாயீல் இறந்துவிட்டார் என்று இஸ்மாயிலிகளிடம் சொல்ல முடியாது.
இஸ்மாயீல் மற்றும் அவரது சகோதரர் மூசா விஷயத்தில் மூன்றாவதாக மற்றொரு விவரிப்பும் உள்ளது. அதன்படி முஸ்லிம்களின் தலைவராக இஸ்மாயீல் ஆவதை இமாம் ஜாஃபர் அல் சாதிக் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இஸ்மாயீல் ஃகம்ர் -அதாவது மது- அருந்துபவராக இருந்தார் என்றும் பெண் பித்தராக இருந்தார் என்றும் அபூ அல் ஃகத்தாப் அல் அசதி என்ற புறக்கணிக்கப்பட்ட ஒரு நபரோடு நட்பு கொண்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நபர் நாத்திகராக இருந்தார் என்றும் அத்தோடு இமாம் ஜாஃபர் அல் சாதிக்குக்கு இறைத்தன்மை கற்பித்தார் என்றும் சொல்லப்படுகிறது. இக்காரணங்களால் முஸ்லிம்களின் தலைவர் ஆவதிலிருந்து இஸ்மாயீல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது இவ்வரலாறு தொடர்பான மூன்றாவது விவரணை.
இவையனைத்தும் வரலாற்றில் உள்ள தகவல்கள் என்று நீங்கள் அறியும் பொருட்டே இதைச் சொல்கிறேன். ஆனால் இஸ்மாயிலிகள் இவற்றைப் புறக்கணித்து ஜாஃபர் அல் சாதிக்கின் மூத்த மகனான இஸ்மாயீல்தான் முஸ்லிம்களின் தலைவர் என்றும் அவருடைய சகோதரர் மூசாவின் தலைமை சட்டவிரோதமானது என்றும் நம்புகின்றனர்.
இஸ்மாயீல் இறந்த பிறகு தலைமைப் பொறுப்பு அவருடைய மகன் முஹம்மதுக்குச் சென்றது. தந்தை இறந்த போது மகன் ஒப்பீட்டளவில் சிறு வயதினராக இருந்தார். முஹம்மத் ஹி. 121-ல் பிறந்தார். இஸ்மாயீலின் சகோதரர் மூசாவைவிட முஹம்மத் ஏழு வயது மூத்தவர். மூசா அல் காதிம் ஹி. 128-ல் பிறந்தார். முஹம்மத் அரேபிய தீபகற்பத்திலிருந்து ஈரானின் மலைப் பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்தார். பின்னர் அங்கிருந்து ரயீ எனும் நகரத்துக்குச் சென்றார். அவருக்குச் சில புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் ஃகுரசான் பகுதியில் காணாமல் போயினர். வேறு சில புதல்வர்கள், இந்திய துணைக்கண்டத்துக்குச் சென்று அங்கேயே குடியமர்ந்தனர். அன்று அப்பகுதி பிலாத் அல் சிந்த் என்று அறியப்பட்டது.
தஷையுவின் மற்றொரு போக்கு
இச்சம்பவங்களுக்கு முன் வரை கிட்டத்தட்ட ஒன்றாக இருந்த ஷியா தலைமை இப்போது -பன்னிருவர் (இஸ்னா அஷரி) என்றும் இஸ்மாயீலி என்றும்- இரண்டாகப் பிரிந்தது. எண்ணிக்கை என்று பார்த்தால் பன்னிருவர் வகையினர் இஸ்மாயீலிகளை விட மிக அதிகம். அன்றிலிருந்து இன்றுவரை இது அப்படித்தான் உள்ளது. இன்று ‘இஸ்மாயிலிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?’ என்ற கேள்விக்கு ஒரு இஸ்மாயிலி தலைவரைத் தவிர வேறு யாரும் உறுதியான பதிலைத் தர முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் வரலாற்று அடிப்படையில் பார்த்தால் அவர்கள் அதை வெளியே சொல்வதில்லை.
பன்னிருவர் வகை ஷியாக்களின் இமாம்கள் பின்வருமாறு: இஸ்மாயிலின் சகோதரர் இமாம் மூசா அல் காதிம், அடுத்து மூசாவின் மகன் இமாம் அல் ரிளா, பிறகு அவருடைய மகன் முஹம்மத் அல் ஜவ்வாத், பிறகு அவருடைய மகன் அலீ அல் ஹாதி, அடுத்து அவருடைய மகன் அல் ஹசன் அல் அஸ்கரி, பிறகு அவருடைய மகன் முஹம்மத் – இவர் அல் மஹ்தி அல் காயிம் பில் ஹுஜ்ஜா என்று அழைக்கப்படுகிறார். இவர்தான் ஈராக்கின் சமர்ரா நகரிலிருந்து காணாமல் மறைந்து போனவர். அவர் எங்கிருந்து மறைந்து போனாரோ அப்பள்ளிவாசல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்* குண்டு வெடிப்பில் தகர்க்கப்பட்டது. வருங்காலங்களில் அவர் மீண்டும் தோன்றி மனித விவகாரங்களில் நீதியை நிலைநாட்டுவார் என்றும் அப்போது இன்றுவரை நீடித்துவரும் தலைமை பற்றிய குழப்பம் நீங்கிவிடும் என்பதும் நம்பிக்கை. இது தஷைய்யுவின் ஒரு போக்கு.
(*) பிப்ரவரி 2006-ல் ஐசிஸ் தீவிரவாதிகள் அல் அஸ்கரி பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய சம்பவம். – மொ.ர்.
தஷைய்யுவின் மற்றொரு போக்கான இஸ்மாயிலிகள் பற்றிதான் இன்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இது பன்னிருவர் வகையிலிருந்து பிரிந்த ஒரு போக்காகக் கருதப்படுகிறது. இமாம்களின் வரிசையில் இஸ்மாயீலை ஏழாவது இமாமாக அவர்கள் கருதுகின்றனர். எனவே அவர்கள் எழுவர் வகையினர் (சபயீய்யா) எனப்படுகின்றனர். 7ஆம் எண்ணை அவர்கள் முக்கியமானதாகக் கருதுகின்றனர். பிற்காலங்களில் அவர்கள் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டனர். அப்படிச் செய்யும் போது எண் 7-ஐ பிரதானமாக் கருதி அதில் பந்தயம் கட்டுவர்.
இஸ்மாயிலிகள் தங்களை ஃபாத்திமிகள் என்றும் அழைத்துக் கொண்டனர். இஸ்மாயிலிகள் என்று சொன்னாலும் ஃபாத்திமிகள் என்று சொன்னாலும் இரண்டுமே ஒரு பொருள் தரும் இரு சொற்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஸைதிகள், பன்னிருவர் வகையினர் அனைவரும் தங்களை அலவிகள் என்று சொல்லிக் கொண்டபோது, இஸ்மாயிலிகள் அவர்களிடமிருந்து தங்களை தனித்துக் காட்ட வேண்டி தங்களை ஃபாத்திமிகள் என்று அழைத்துக் கொண்டனர். இதைத் தாண்டி இதில் கொள்கை அல்லது தத்துவம் என்று எதுவும் இல்லை. இறைத்தூதரின் மகளார் ஃபாத்திமாவின் பேரைக் கொண்டு அவர்கள் இப்படிக் கூறினர்.
தலைமறைவாகி வெளிப்படுதல்
ஆரம்பகால இஸ்மாயிலி இமாம்கள் தலைமறைவாக இருந்தனர். இஸ்மாயீல் மற்றும் அவரது மகன் முஹம்மதுக்குப் பிறகு ‘நான்தான் இமாம். இவ்வுலகை சீராக்குவோம், நம் இஸ்லாமிய பொறுப்புகளை நிறைவேற்றுவோம்’ என்று அறைகூவல் விடுத்த இஸ்மாயிலி தலைவர் எவரும் இல்லை. இந்நிலை கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் நீடித்தது. இஸ்மாயிலி தலைவர்கள் இருந்தனர்; இஸ்மாயிலி மக்களும் இருக்கத்தான் செய்தனர்; அவர்கள் ஒன்று கூடி கூட்டங்கள் நடத்தினர், அவர்களுக்கென அமைப்புகள் இருந்தன. ஆனால் வெளியுலகுக்கு அவர்கள் இருப்பதே தெரியாமல் போனது. பிறகு அவர்கள் திடீரென இடி முழக்கமாக வெளிப்பட்டனர்.
ஹி. 296-ல் (கி.பி. 908) வடக்கு ஆப்பிரிக்காவில் உபைதுல்லாஹ் அல் மஹ்தி என்ற ஒருவர் தோன்றினார். அவர் தன்னை இறைத்தூதரின் வம்சத்தில் தோன்றியவர் என்று கூறிக் கொண்டார். எல்லா ஷியா போக்குகளும் -உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு- தங்கள் இமாம்கள் அனைவரும் நபி வீட்டார் (அஹ்லல் பைத்) அல்லது அல் அலவீ வீட்டைச் (அல் பைத் அல் அலவீ) சார்ந்தவர்கள் என்றே கூறினர். எனினும் சில வரலாற்றறிஞர்கள் உபைதுல்லாஹ் அல் மஹ்தியின் பூர்வீகத்தை இக்கண்ணியமான பின்னணியோடு தொடர்புபடுத்த முடியும் என்பதை சந்தேகித்தனர்.
தலைமறைவாக இருந்த இஸ்மாயிலிகள் அல்லது ஃபாத்திமிகள் மீண்டும் பொதுவெளியில் வெளிப்படத் துவங்கியது ஏமன் நாட்டில் ஆகும். அங்கு அல் ஹுசைன் இப்னு ஹவ்ஷப் என்றொரு தீவிர இஸ்மாயிலி ஆதரவாளர் இருந்தார். இஸ்மாயிலி நம்பிக்கையை முன்னெடுப்பதில் வெற்றி பெற்ற அவர் அதன் காரணமாக அல் மன்சூர் அல் ஏமன் என்ற பட்டம் பெற்றார். ஏமனில் அவர் வாழ்ந்த பகுதியில்தான் முதன் முதல் இஸ்மாயிலி சட்ட ஆட்சிப் பரப்பு ஒன்று உருவானது. அதை ஒரு முழுமையான அரசாங்கம் என்று சொல்ல முடியாது. அது மிகச் சிறிய பகுதியாக இருந்தது. அதன் பரப்பு, எல்லைகள் போன்ற தகவல்கள் என்னிடம் இல்லை. எனினும் மக்கள், சமூக ஒழுங்கு என்றிருந்த அப்பகுதியில் ஹி. 266-ல் அவர் இதை முதலில் நிறுவினார்.
அலீ இப்னு ஃபழ்ல் என்று மற்றொரு பிரபல இஸ்மாயிலி நபர் ஏமனில் இருந்தார். ஒரு முறை அவர் சன்ஆ பகுதியில் வந்து மக்கள் முன்னிலையில் தன் தலையை மழித்தார். அங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் குழுமியிருந்தனர். இதைப் பார்த்த அவர்கள் அனைவரும் அவருக்கு விசுவாசம் காட்டும் வகையில் தங்கள் தலையையும் மழித்துக் கொண்டனர். அந்த அளவுக்கு அவர் பிரபலமாக இருந்தார். பொதுவாக மையநீரோட்ட வரலாறை படித்தால் இஸ்மாயிலிகள் வேடிக்கையான அல்லது விசித்திரமான மக்கள் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இச்சம்பவத்தைப் பார்க்கும் போது அவர்கள் அனைவரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று தெரிகிறது. அவர்களுள் வேடிக்கையானவர்களும் இருந்தனர். காலப்போக்கில் அவர்கள் மத்தியில் பல்வேறு சீர்கேடுகள் தோன்றின என்றும் இன்னும் சிலர் இஸ்லாத்திலிருந்து முற்றிலும் வெளியேறினர் என்றும் நாம் பார்ப்போம். ஆனால் இதை நாம் பொதுமைப்படுத்த முடியாது. இச்சம்பவங்களை நாம் நேர்மையாக அணுக வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக சிலர் ஆரம்பகால இஸ்மாயிலிகள் மீது ‘அவர்கள் தங்கள் தலைவர்களுக்கு இறைத்தன்மை கற்பித்தனர்’ என்று குற்றம் சாட்டுகின்றனர். வரலாற்றில் இத்தகைய தகவல்கள் இருப்பது உண்மைதான் என்றாலும் அது ஆரம்ப காலத்தில் இல்லை. வரலாறை எழுதுபவர்கள் தங்கள் எதிரிகளை மோசமாகச் சித்திரிக்க முற்படுவது இயல்பு. இந்த அடிப்படையில்தான் இக்குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது என்று நான் கருதுகிறேன். ‘ஆரம்பகால இஸ்மாயிலி தலைவர்கள் இறைத்தன்மை கோரினர்’ என்று சொல்வது அபத்தம். அச்சமயம் வேறு பல நிகழ்வுகளும் நடந்திருக்கக் கூடும். எனவே இதுபற்றி நான் முற்றாய் கருத்து கூற விரும்பவில்லை. நாம் ஒரு ரகசிய சமூகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களுடைய செயல்பாடுகள் ரகசியமாக இருந்தன. அடையாளம் காணப்பட்டால் அவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் சூழல் இருந்தது. இந்நிலையில் சில தலைவர்கள் தங்கள் பின்பற்றாளர்களிடம் ‘நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம்; தொழ வேண்டாம்’ என்று சொன்ன காலகட்டங்கள் உண்டு. ஆனால் இது ‘நான் கடவுள்’ என்று சொல்வதாகாது. வரலாற்று நூல்களில் உள்ள தகவல்கள்தான் இவை. எனவே இந்த ஆரம்பகால தலைவர்கள் இறைத்தன்மை கோரினர் என்று குற்றஞ்சாட்டப்படுவதில் எனக்கு தயக்கம் உண்டு.
முதல் அரசாங்கம்
பிரபல ஏமனி ஹுசைன் இப்னு ஹவ்ஷப், இஸ்மாயிலியாக மாறுவதற்கு முன் பன்னிருவர் வகையினராக இருந்தார். மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததும் இஸ்மாயிலி கொள்கையைப் பரப்புவதற்காக நாலா பக்கமும் -இச்சொல்லை பயன்படுத்த விரும்பவில்லை என்றாலும் அப்படியே வைத்துக் கொள்வோம்- போதகர்களை அனுப்பினார். இப்படி அவர் அனுப்பிய ஒருவரின் பெயர் அப்துல்லாஹ் அல் ஷியாயி. இவர் வடக்கு ஆப்பிரிக்காவுக்கு -குறிப்பாக மொராக்கோவுக்கு- சென்றார். அங்கு அவருக்கு கிதாமா என்ற ஒரு பெரிய குலத்தின் வரவேற்பு கிடைத்தது. அக்குலத்தின் மூத்தவர்களையும் சான்றோர்களையும் இஸ்மாயிலி சிந்தனைப் போக்கை பின்பற்றவும், மறைவான இமாமின் வருகையை எதிர்பார்த்து இருக்கவும் உடன்படச் செய்தார். வடக்கு ஆப்பிரிக்காவில் உபைதுல்லாஹ் அல் மஹ்தி அதிகாரத்தைத் திரட்டும் வரை, மறைவான இமாம் யார் என்று அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அவர்களுடைய இளம் பின்பற்றாளர்களுக்குக் கூட தங்கள் இமாம் யார் என்று தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. சில மூத்த பின்பற்றாளர்கள் கூட உண்மையான இமாம் யார் என்று குழப்பத்திலேயே இருந்தனர்.
அப்துல்லாஹ் அல் ஷியாயி வடக்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்றதும் மக்கள் ஒப்பீட்டளவில் அணிதிரளாக இஸ்மாயிலி சிந்தனையை, நம்பிக்கையை ஏற்கத் துவங்கினர். இச்சூழலில்தான் உபைதுல்லாஹ் அல் மஹ்தி தோன்றி ஒரு அரசாங்கத்தை நிறுவினார். இன்றிருப்பது போல தெளிவான வரையறைகளைக் கொண்ட அரசாங்கமாக அது இல்லையென்றாலும் அன்றைய காலத்தில் அது ஒரு அரசாங்கமாகவே இருந்தது. அவருடைய பெயரிலேயே ‘தவ்லத் அல் உபைதியீன்’ என்று அது அழைக்கப்பட்டது. தவ்லத் என்றால் அரசாங்கம் என்று பொருள். இது நிகழ்ந்தது ஹி. 297-ல் (கி.பி. 909). அங்கு ஏற்கனவே இருந்த அல் அகாலிபா என்ற அரசாங்கத்தை வீழ்த்தினார். அதேபோல இன்றைய அல்ஜீரியா பகுதியில் தவ்லத் ருஸ்தமியா என்ற பெயரில் இபாதி ஃகவாரிஜ்களின் அரசாங்கம் இருந்தது. அதையும் உபைதுல்லாஹ் வீழ்த்தினார். இப்படியாக அவர் அதிகாரத்தைக் குவித்தார்.
வடக்கு ஆப்பிரிக்காவில் உபைதுல்லாஹ் அல் மஹ்திக்கு எதிராக கிளர்ச்சிகள் நடந்தன. ஆட்சியை இழந்த அகாலிபாக்களும், இபாதி ருஸ்தமிகளும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயன்றனர். அதற்காக போரிட்டனர். உபைதுல்லாஹ் அல் மஹ்திக்கு எதிராக நடந்த மூன்று பெரும் கிளர்ச்சிகளும் தோல்வியில் முடிந்தன. ஏமனிலிருந்து வடக்கு ஆப்பிரிக்காவுக்கு வந்து இது அனைத்தையும் துவங்கி வைத்த அப்துல்லாஹ் ஷியாயியை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். பின்னாட்களில் இவருக்கும் உபைதுல்லாஹ் அல் மஹ்திக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அதிகாரத்துக்கு வரும் பெரும்பாலானவர்கள் செய்வது போல -தன் லட்சியங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று உணர்ந்த போது- அப்துல்லாஹ்வையும் அவரது சகோதரரையும் உபைதுல்லாஹ் கொன்று போட்டார்.
வடக்கு ஆப்பிரிக்காவில் மோராக்கோவிலிருந்து துனீசியா வரை அதிகாரத்தைக் கைப்பற்றிய உபைதுல்லாஹ் அடுத்து எகிப்து பக்கம் திரும்பினார். எகிப்துதான் விலையுயர்ந்த பரிசாக இருந்தது. எனவே எகிப்தைக் கைப்பற்றும் முயற்சியில் தன் ராணுவ பலம் மற்றும் அரசியல் செல்வாக்கு முழுவதையும் ஈடுபடுத்தினார். அல் அக்ஷிதியீன் என்ற பெயரில் அன்று எகிப்தில் இருந்த ஆட்சிக்கு எதிராக மூன்று முக்கிய ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டார். கடைசியாக ஹி. 358-ல் அல் முயிஸ் லிதீனில்லாஹ் என்பவர் எகிப்தைக் கைப்பற்றினார். இவர் உபைதுல்லாஹ் அல் மஹ்தீயின் வழித்தோன்றல்களில் ஒருவர்.
கராமிதாக்கள்
ஏமனில் இப்னு ஹவ்ஷப் முதல் இஸ்மாயிலி அதிகாரச் செயல்பாட்டை நிறுவுகையில் மற்றொருபுறம் பஹ்ரைனில் வேறொரு நிகழ்வு நடந்தது. இஸ்மாயிலிகள் என்று தங்களை சொல்லிக் கொண்ட மற்றொரு இயக்கம் அங்கு தோன்றியது. அவர்கள் அல் கராமிதா அல்லது குர்முதி என்ற அரசாங்கத்தை நிறுவினர். இதுபற்றி வரலாற்றில் எழுதப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஒரு அரசியல் அல்லது ராணுவச் சூராவளி போலுள்ளது. சென்ற இடமில்லாம் அது அழிவை ஏற்படுத்தியது. வரலாறை படிக்கும் போது அவர்கள் மதம் சார்ந்த இடங்களைத் தாக்குவதை அதீத பழக்கமாகவே கொண்டிருந்ததாகத் தெரிகிறது. கஃபாவில் இருக்கும் கருப்புக் கல்லை (ஹஜருல் அஸ்வத்) எடுப்பதை அவர்கள் தங்களுக்குத் தாங்களே சட்டப்பூர்வமாக்கிக் கொண்டனர். அதை தங்கள் தலைநகருக்கு எடுத்துச் சென்றனர். அன்று பஹ்ரைனின் தலைநகராக ஹஜர் இருந்தது. இன்றைய மனாமா பகுதியில்தான் அது இருந்ததா என்று எனக்குத் தெரியாது. இப்படியாக கஃபா 22 ஆண்டுகள் கருப்புக் கல் இல்லாமல் இருந்தது.
அன்று அப்பாஸி அரசாங்கம் பாக்தாதை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தது. முஸ்லிம் உலகின் அரசியல் மற்றும் ராணுவ மையமாக பாக்தாதே விளங்கியது. அன்றைய அப்பாஸி அரசாங்கம் அக மற்றும் புறச் சூழல்களால் அச்சுறுத்துலுக்கு உள்ளாகியிருந்தது. எகிப்தில் அக்ஷிதீன்கள் அப்பாஸி அரசிலிருந்து பிரிந்து சென்றனர். வட ஆப்பிரிக்கா முழுவதுமாக அப்பாஸிகளிடமிருந்து உடைந்து சென்றது. ஈரான் மற்றும் பாக்தாதுக்கு கிழக்கேயுள்ள பகுதிகளில் தஷையுவால் அப்பாஸிகளோடு உருவான வித்தியாசங்கள் காரணமாக நேர்ந்த பிரிவினைப் போக்குகள் இருந்தன. மேலும் துருக்கிய செல்ஜுக்குகள் ஒரு பக்கம் தலைதூக்கினர். இவையனைத்தையும் சமாளிப்பதில் மும்முரமாக இருந்த அப்பாஸிகளால் மக்காவைப் பாதுகாக்க முடியவில்லை. அதுகுறித்து அவர்கள் வருந்தியிருக்கக் கூடும்; ஆனால் அதைத் தாண்டி வேறு எதுவும் செய்ய இயலவில்லை.
கராமிதாக்கள் தங்கள் வரலாறை எழுதவில்லை. அவர்களைப்பற்றி பிறர் எழுதியலிருந்துதான் நாம் தகவல்களைப் பெற வேண்டியுள்ளது. இவர்களைப் பற்றி பிறர் சொல்லியிருப்பதைப் பார்த்தால் -இன்றைய அரசியல் சொல்லாடலில்- அவர்கள் அராஜகவாதிகள். கம்யுனிஸ்டுகளைப் போல அவர்கள் தனிச் சொத்துரிமையை ஏற்கவில்லை. அவர்கள் முஸ்லிம் உலகை வன்முறை கொண்டு மாற்றும் பணியில் ஈடுபட்டனர். வன்முறையில் நம்பிக்கை கொண்டனர். அதன் ஒரு பகுதியாக கஃபாவை கைப்பற்ற நினைத்தனர். அவர்கள் மனதில் என்ன இருந்தது என்று நான் சொல்ல முடியாது. எனினும் வரலாறு, இன்றைய நிகழ்வுகள், மனித இயல்பு போன்றவற்றைப் பார்க்கும் போது, அவர்கள் முஸ்லிம்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் பொருட்டு அப்படிச் செய்திருக்கக் கூடும். மக்கள் மத்தியில் நீதியை நிலைநாட்டாத சடங்குகள், கஃபா, கருப்புக் கல் போன்றவை மதிப்பற்றவை என்று முஸ்லிம்களுக்கு உணர்த்துவதற்காகவும் அவர்கள் இப்படிச் செய்திருக்கக் கூடும். மீண்டும் சொல்கிறேன். அவர்களுக்காக நான் பேச முடியாது.
கராமிதாக்களின் முதல் தலைவர் ஹம்தான் இப்னு அல் அஷ்அஸ் ஆவார். இவர் ஹம்தான் குர்முத் என்றும் அழைக்கப்படுகிறார். இதிலிருந்துதான் கராமிதா என்ற சொல் உருவானது. அவர்கள் வன்முறையின் பக்கம் அதிகம் சாய்ந்திருந்தனர்; பிறர் சொத்தை அபகரித்தனர்; பலமுறை மக்காவை தாக்கினர். ஹஜ்ஜுக்கு வருபவர்களையும் கொன்றனர்; அவர்களின் உடல்களை ஸம்ஸம் கிணற்றில் வீசினர். ஈராக் மற்றும் சிரியா உள்ளடங்கிய ஷாம் பகுதியையும் தாக்கினர். பாக்தாத் மற்றும் ஈராக்கில் அப்பாஸிகளுக்கு எதிராகச் சில வெற்றிகளை ஈட்டினர்.
இஸ்மாயிலிகளுக்கு எதிராக கராமிதாக்கள்
கராமிதாக்கள் தங்களை இஸ்மாயிலிகள் என்று சொல்லிக் கொண்டனர். அல்லது வரலாறு அப்படிச் சொல்கிறது; வரலாற்று நூல்கள் அப்படித்தான் சொல்கின்றன. ஆனால் பின்னர் இஸ்மாயிலிகளின் மறைவான தலைவர் என்று சொல்லப்படுபவரிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றனர். மறைவான இமாமைக் குறிப்பதற்கு, பன்னிருவர் வகை ஷியாக்களின் இலக்கியங்களில் ‘அல் இமாம் அல் ஃகாயிப்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இஸ்மாயிலி எழுத்துக்களில் ‘அல் இமாம் அல் மஸ்தூர்’ என்று சொல்லப்படுகிறது. மஸ்தூர் என்றால் ‘ஒருவர் இருக்கிறார் ஆனால் மறைவாக இருக்கிறார்’ என்று பொருள். ‘ஃகாயிப்’ என்றால் ‘மறைக்கப்பட்டவர்’ என்று பொருள். ஆக கராமிதாக்கள் இஸ்மாயிலி இமாமிடமிருந்தும் தங்களை துண்டித்துக் கொண்டனர். அச்சமயம் அவர் சிரியாவில் சலமியா என்ற பகுதியில் இருந்தார். இது இன்றைய சிரியாவின் ஹும்ஸ் நகரத்தில் உள்ளது. அதுதான் இஸ்மாயிலிகளின் மையமாகக் கருதப்பட்டது.
இஸ்மாயிலிகள் கூடும் இடங்கள், அவர்களின் வழிபாட்டு இடங்கள், அவர்களுள் பிரபலமானவர்கள் வசிக்கும் இடங்கள் போன்றவற்றின் மீது கராமிதாக்கள் தாக்குதல் தொடுத்தனர். தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத இஸ்மாயிலி இமாம், கராமிதாக்கள் தன்னைத் தாக்க வருவதை முன்கூட்டியே அறிந்தார் என்று ஒரு வரலாற்றுத் தகவல் சொல்கிறது. வன்முறையாளர்கள் தான் இருக்கும் இடத்தை அடைந்துவிட்டால் தன்னைக் கொன்று விடுவார்கள், அவர்களுடைய படை தன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த இமாம், தன் குடும்பத்தார் மற்றும் நெருங்கியவர்களிடம் ‘இங்கிருந்து வெளியேறிவிடலாம்’ என்று கூறினார். அவர்கள் சலமியாவை விட்டு வெளியேறி ஃபலஸ்தீனுலுள்ள ரம்லாவுக்குச் சென்றனர்.
ரம்லா ஃபலஸ்தீனின் வடக்குப் பகுதியில் உள்ளது. சலமியாவை அடைந்த கராமிதாக்கள், இமாம் ஃபலஸ்தீனுக்குச் சென்றுவிட்டதை அறிந்து அவரைத் துரத்திச் சென்றனர். எல்லா இடங்களிலும் அவரை தேடினர். இமாமின் செல்வத்தை அவர்கள் விரும்பினர். அப்போது அந்த இமாம் பெரிய அளவில் செல்வம் வைத்திருந்தார். கராமிதாக்கள் தன்னை விடாமல் துரத்தி வருவதை அறிந்த இமாம் அங்கிருந்து எகிப்திலிருக்கும் அல் ஃபுஸ்தாத் என்ற நகரத்துக்குச் சென்றார். அன்று எகிப்தின் முக்கிய நகரமாக அல் ஃபுஸ்தாத் விளங்கியது. அதிலிருந்துதான் பின்னாட்களில் கெய்ரோ உருவானது. ஈரானிய வரலாற்றில் எப்படி ரயீ முக்கிய நகரமாக விளங்கி அதிலிருந்து டெஹ்ரான் உருவானதோ அது போலத்தான் இதுவும். அல் ஃபுஸ்தாத்தை அடைந்த இமாம் அதிக நாட்கள் அங்கு தங்கவில்லை. எகிப்துக்கு மேற்கே லிபியாவிலிருந்து மொராக்கோ வரை இஸ்மாயிலிகள் தங்களை நிலைநாட்டியிருந்தனர். எனவே அப்பகுதி தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தவராக அங்கு சென்றார்.
தங்களை இஸ்மாயிலிகளாகக் கருதிய அல் கராமிதாக்கள், இஸ்மாயிலி தலைவர் யார் என்பதை அறிய முடியாத நிலையில் ‘இதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்றவர்களாக இஸ்மாயிலிகளிடமிருந்து முற்றிலும் தங்களை துண்டித்துக் கொண்டனர். இஸ்மாயிலிகளின் ரகசியத் தன்மை மிகத் தீவிரமாக இருந்தது. எந்த அளவுக்கெனில், ஆழமான அறிவு பெற்ற ஒரு இஸ்மாயிலிகூட தன் தலைவர் யார் என்பதை அறியாமல் இருந்தார். அந்த அளவுக்கு குழப்பம் இருந்தது. இதை மேலும் குழப்பும் வகையில், மறைவாய் இருக்கும் இமாம் வேறு சிலரை அவர்கள்தான் இமாம் என்று சொல்லும்படி நியமிப்பார். இதனால் எரிச்சலடைந்த கராமிதாக்கள் ‘இதற்கு மேல் சகிக்க முடியாது’ என்ற நிலையை அடைந்தனர். கடைசியாக ராணுவ ரீதியாக எதிர்க்கும் அளவுக்கு இது சென்றது.
மற்றொரு புறம் அப்துல்லாஹ் அல் ஷியாவும் இஸ்மாயிலிகளின் இமாம் யார் என்பதை சந்தேகிக்கத் துவங்கினார். ஏமனிலிருந்து வட ஆப்பிரிக்கா சென்று பலரை இஸ்மாயிலிகளாக மாற வெற்றிகரமாகச் சம்மதிக்க வைத்தவர் இவர் என்பதை நினைவில் கொள்க. அவர் சிரியா சென்றிருந்த போது இமாம் என்று ஒருவரை சந்தித்தார். பிறகு இமாம் வட ஆப்பிரிக்கா வந்த போது அவரைச் சந்திக்கச் சென்ற இவர் “நான் சந்தித்தது உங்களையல்லவே” என்றார்.
உபைதுல்லாஹ் அல் மஹ்தி
இச்சூழலில்தான் உபைதுல்லாஹ் அல் மஹ்தி தோன்றுகிறார். அதிகாரத்துக்கு வந்த அவர், அதிகாரத்துக்கு வருபவர்கள் வழக்கமாக நடந்துகொள்வது போலவே இரக்கமின்றி நடந்து கொண்டார். இப்படித்தான் அவ்வரசாங்கம் விரிவடைந்தது. தனக்கு நெருக்கமாக இருந்தவர்கள் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட போதும் கூட அவர் பெரிதும் சட்டை செய்யவில்லை. அவர் இரக்கமற்றவராக, ஆனால் தைரியமானவராக அறியப்படுகிறார். அவர் ஹி. 312-ல் துனீசியாவில் அகாலிபா அரசை வீழ்த்தினார். இஸ்மாயிலிகள் சிசிலி தீவையும் ஆண்டனர். அவர்களின் ஆட்சி கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் நீடித்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.
உபைதுல்லாஹ் அல் மஹ்தி தன் அதிகாரத்தை வட ஆப்பிரிக்கா நெடுகிலும் பரப்பிய பிறகு நடந்த சம்பவங்கள் ஆச்சரியமளிக்கின்றன. வட ஆப்பிரிக்காவில் எந்த அடித்தளத்திலிருந்து இஸ்மாயிலி இயக்கம் பிரபலமடையத் துவங்கியதோ அதுவே அவர்களுக்கு எதிராகத் திரும்பியது. மொராக்கோவின் கிதாமா கோத்திரம் நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன். அவர்களே இந்த ஆட்சியாளருக்கு எதிராகத் திரும்பினர். ஹி. 300-ல் இன்றைய லிபியாவான தராப்லுஸ் என்ற இடத்தில் உபைதுல்லாஹ் அல் மஹ்திக்கு எதிராக ஒரு கலகம் நிகழ்ந்தது. பதினைந்து ஆண்டுகள் கழித்து, இன்றைய அல்ஜீரியா இருக்கும் ஸினாடா பகுதியில் பிரபலமான ஒரு கோத்திரத்தைச் சார்ந்த ஒரு அறிஞரின் தலைமையில் மற்றொரு பெரும் மக்கள் திரளான கிளர்ச்சி நடந்தது. ஸினாடாவின் ஃகவாரிஜ்களை கைப்பற்றுவதற்கு உபைதுல்லாஹ் அல் மஹ்தி பதிமூன்று ஆண்டுகள் தயாரிப்பு செய்தார். இக்கிளர்ச்சிகள், கலகங்கள் எதுவும் பலனளிக்கவில்லை.
உபைதுல்லாஹ் அல் மஹ்தி எகிப்துக்கு மூன்று முறை படையனுப்பினார். அவை எதுவும் வெற்றி பெறவில்லை. இப்படையெடுப்புகள் வெற்றி பெறாததற்கு ஒரு முக்கிய காரணம் பாக்தாதின் அரசாங்கம் எகிப்திய அரசாங்கத்துக்கு ஆதரவளித்ததே ஆகும். பாக்தாதின் அரசாங்கம் அப்பாஸி அரசாங்கம் என்பதை நினைவில் கொள்க. வரலாற்றில் பின்னோக்கிச் சென்றால், அப்பாஸி அரசாங்கம் துவக்கத்தில் ஷியா ஆதரவு அரசாங்கமாக இருந்தது. ஆனால் இப்போது வட ஆப்பிரிக்காவில் ‘இஸ்மாயிலி ஷியா’ அரசாங்கத்துக்கு எதிராக எகிப்தின் ‘சன்னி’ அரசாங்கத்துக்கு அது ஆதரவளிக்கிறது. எகிப்தின் நிர்வாகம் நாம் ஏற்கனவே சொன்னது போல தவ்லத் அல் அக்ஷிதியாவாக இருந்தது. வெளித்தோற்றத்தில் தெரிவது போல விஷயங்கள் அவ்வளவு எளிமையாக இல்லை என்பதை விளங்கிக் கொள்ளவும். இம்மூன்று ராணுவப் படையெடுப்புகளின் போதும், உபைதுல்லாஹ் அல் மஹ்தியிடம் அலெக்சான்ட்ரியா சிறிது காலத்துக்கு வசப்பட்டது. எனினும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
நாம் ஏற்கனவே சொன்னபடி பல வரலாற்றாளர்கள் ‘உபைதுல்லாஹ் அல் மஹ்தி இறைத்தூதரின் குடும்பத்திலிருந்து வரவில்லை; அவர் தன் பூர்வீகத்தை இஸ்மாயீல், ஜாஃபர் அல் சாதிக் ஆகியவர்களோடு தொடர்புபடுத்த முடியாது’ என்று நம்புகின்றனர். இன்னும் சில வரலாற்றுக் குறிப்புகள் உபைதுல்லாஹ் அல் மஹ்தி சலமியாவில் வசித்த யூத இரும்புக் கொல்லர் ஒருவரின் மகன் என்கின்றன. அக்கொல்லர் இறந்த பிறகு அவருடைய மனைவி -அதாவது உபைதுல்லாஹ்வின் தாய்- ஒரு அலவியை மணம் புரிந்தார் என்றும் அவர்தான் உபைதுல்லாஹ்வுக்கு கல்வி புகட்டி வளர்த்தார் என்றும் சொல்லப்படுகிறது. உபைதுல்லாஹ் வளர்ந்து பெரியவர் ஆனதும் தான் இறைத்தூதரின் குடும்பத்திலிருந்து வருவதாகக் கூறினார். பாக்தாத் மற்றும் ஈராக்கிய வரலாற்றாளர்களின் கூற்றுப்படி உபைதுல்லாஹ் அல் மஹ்தி, அப்துல்லாஹ் அல் கத்தாஹ் என்பவரின் வழித்தோன்றலிலிருந்து வருபவர் என்று சொல்லப்பட்டுள்ளது. இவர் ஜாஃபர் அல் சாதிக்கின் மவ்லாவாக இருந்தார் என்கிறது. மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். வரலாற்று நூல்களில் உள்ளவற்றை உள்ளபடி உங்கள் முன் வைக்கிறேன். இதுதான் இறுதிக் கருத்து என்று நான் சொல்லவில்லை.
‘உபைதுல்லாஹ் அல் மஹ்தி சிரியாவின் சலமியாவிலிருந்து வருபவர் அல்ல; மாறாக பஸ்ராவைச் சார்ந்தவர். அவர், அப்துல்லாஹ் இப்னு சல்லம் அல் பஸ்ரி என்பவரின் வழித்தோன்றலிலிருந்து வருபவர்’ என்று மொராக்கர்கள் கூறுகின்றனர். ‘முதன் முதிலில் மொராக்கோவின் கய்ரவான் என்ற நகரத்துக்கு அவர் வந்த போது இப்னு அல் பஸ்ரி என்றே அழைக்கப்பட்டார்; பிறகு எப்படி அவரை சலமியாவைச் சார்ந்தவர் என்று சொல்ல முடியும்?’ என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒரே மனிதரைப் பற்றி வெவ்வேறு வரலாற்றாசிரியர்கள், வெவ்வேறு முரணான தகவல்களைச் சொல்வதை நாம் பார்க்கிறோம்.
ஃபாத்திமிகள்
அடுத்து எகிப்தின் இஸ்மாயிலிகள் அல்லது ஃபாத்திமிகளைப் பற்றி பார்ப்போம். வட ஆப்பிரிக்காவின் முதல் இஸ்மாயிலி ஆட்சியாளர் உபைதுல்லாஹ் அல் மஹ்தி ஆவார்; இரண்டாவதாக அல் காயிம் பி அம்ரில்லாஹ் அபூ அல் காசிம் முஹம்மத்; அடுத்து அல் மன்சூர் பில்லாஹ் அபூ தாஹிர் இஸ்மாயீல்; நான்காமவர் அல் முயீஸ் லி தீனில்லாஹ். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் நீடித்த தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, ஹி. 358-ல் இந்த நான்காவது ஆட்சியாளரின் காலத்தில்தான் எகிப்து -அவர்களின் கூற்றுப்படி- விடுவிக்கப்பட்டது. அதை வெற்றி கொண்ட ராணுவத் தளபதியின் பெயர் அல் முஃகஃப்பர் ஜவ்ஹர் அல் சிகலி. சிகலி என்றால் சிசிலிக்காரர் என்று பொருள். அதன் பிறகு எகிப்துக்கு வந்த இஸ்மாயீலி ஆதரவாளர்கள் (தாயீக்கள்) அனைவரும் திடீரென ஒன்று குவிந்தனர்.
எகிப்தில் அபூ ஜாஃபர் இப்னு நஸ்ர் என்றொரு பிரபல இஸ்மாயிலி இருந்தார். அவரை பழித்துக் கூறுபவர்கள் அவர் ஒரு பிரச்சாரகர் என்றும் அவரது ஆதரவாளர்கள் அவரை ஒரு கோட்பாட்டாளர் என்றும் கூறுகின்றனர். அறிஞர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள் போன்றோர் ஒன்று கூடி பல்வேறு விஷயங்களை விவாதிக்கும் ஒரு மன்றத்தை அவர் நடத்தினார். அது அல் ஃபுஸ்தாத்தில் (பழைய கெய்ரோ) இருந்தது. தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் ராணுவ முயற்சி செய்து எகிப்தை அடைந்த பிறகு, அல் ஃபுஸ்தாத் நகரின் மையத்தில் பிரம்மாண்டமான பள்ளிவாசல் ஒன்றை கட்ட வேண்டும் என்று தன் ராணுவத் தளபதி சிகலிக்கு அல் முயீஸ் உத்தரவிட்டார். அப்பள்ளிவாசல்தான் எகிப்தின் கல்விக் கேந்திரமாக, ஃபாத்திமீக்களின் மையமாக பின்னாட்களில் மாறியது. அதுதான் இன்று அல் அஸ்ஹர் என்று அறியப்படுகிறது. அல் அஸ்ஹர் என்ற பதம் ஃபாத்திமா அல் பதூல் அல் ஸஹ்ரா விலிருந்து வருகிறது. அஸ்ஹர் என்பது ஆண்பால், ஸஹ்ரா என்பது பெண்பால். இப்படியாக இஸ்மாயிலி அல்லது ஃபாத்திமிகளின் முக்கியமான, பெரிய அரசாங்கம் எகிப்தில் அமைந்தது. அவர்கள் ஹி. 358-ல் (கி.பி. 968) இருந்து ஹி. 567 (கி.பி. 1171) வரை, கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் எகிப்தை ஆண்டனர். அவை கடினமான காலங்களாகவும் இருந்தன.
அப்போது எகிப்தியர்கள் சிலர் இஸ்மாயிலிகளாக மாறினர். வரலாற்று நூல்களைப் படிக்கும் போது, ‘எகிப்தியர்கள் யாருமே இஸ்மாயிலிகளாக மாறவில்லை’ என்று சில வரலாற்றாசிரியர்களும், ‘எகிப்து முழுவதும் இஸ்மாயிலிகளாக மாறிவிட்டது’ என்று வேறு சிலரும் கூறுகின்றனர். இது எப்படி சாத்தியமாகும்? உண்மை இவ்விரண்டுக்கும் இடையே உள்ளது என்று நினைக்கிறேன். அரசாங்கங்கள் ஆட்சி புரியும் போது, இன்று நடப்பது போல, அவற்றின் தாக்கம் மக்கள் மீது இருக்கத்தான் செய்யும்.
துரூசிகள்
‘ஆரம்பகால இஸ்மாயிலிகள் தங்களுள் சிலருக்கு இறைத்தன்மை கற்பித்தனர்’ என்று சிலர் குற்றம் சாட்டியதற்கு நாம் முன்னர் ஆட்சேபனை தெரிவித்தோம். இஸ்மாயிலி நம்பிக்கையில் அத்தகைய மோசடிகளும் பிறழ்வுகளும் கலந்தது குறித்து இப்போது பார்ப்போம். எகிப்தில் இஸ்மாயிலிகள் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த சமயம், அவர்களுடைய ஆறாவது இமாமான அல் ஹாகிம் பி அம்ரில்லாஹ் என்று அழைக்கப்பட்ட அபூ அலி அல் மன்சூர் கடவுளாகக் கருதப்பட வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவருடைய ஒரு அமைச்சர் ஹம்ஸா இப்னு அலீ என்பவர் இத்தகைய போதனையை துவக்கினார்.
உபைதுல்லாஹ் அல் மஹ்தி அதிகாரத்தைப் பிடித்ததும், அவர் தன்னை இமாம் என்று அறிவித்தார். அன்றிலிருந்து ஆட்சியாளர்தான் அவர்களுடைய இமாமாகவும் இருந்தார். ஆனால் இப்போது விஷயம் அதையும் தாண்டிச் சென்றது. அவர் இமாம் மட்டும் அல்ல; அவர்தான் கடவுள் என்று சொல்லப்பட்டது. இதனால்தான் சன்னி மற்றும் ஷியா சிந்தனைப் பள்ளிகளுள் ‘இஸ்மாயிலிகள் முஸ்லிம்களா இல்லையா?’ என்ற விவாதம் இப்போது எழுந்துள்ளது.
அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், எகிப்து மக்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். பொது மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே தீவிர பிளவு ஏற்பட்டது. இந்த விரோதம் காரணமாக அபூ அலி அல் மன்சூர் அல் ஃபுஸ்தாத் நகரை தீயிட்டுக் கொழுத்தினார். அந்த அளவுக்கு தீவிரமாக இருந்தது அப்பிளவு. அங்கிருந்த மக்களை அவர் காயப்படுத்தவில்லை. ஒரு சில மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். ஆனால் மக்களைக் குறிவைத்து அவர் இதைச் செய்யவில்லை.
வரலாற்றின் இந்த காலகட்டம்தான் முஸ்லிம்களிலிருந்து பிரிந்து சென்ற மற்றொரு பிரிவை நமக்குத் தந்தது. அதுதான் “அல் துரூஸ்”. அல் ஹாக்கிம் பி அம்ரில்லாஹ்வை கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள் ‘துரூசி’ ஆயினர். அதை ஏற்காதவர்கள் முஸ்லிம்களாக இருந்தனர்.
எனினும் இஸ்மாயிலிகள் விஷயத்தில் நியாயமாக இருக்க வேண்டுமென்றால், எகிப்தில் நடப்பதை அறிந்த ஈராக்கிய இஸ்மாயிலிகள் அதை வெளிப்படையாகவே எதிர்த்தனர் என்பதையும் சொல்லியாக வேண்டும். அவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். அது சமயப் புரட்டு என்றனர். ‘குஃப்ர்’ மற்றும் ‘ஃகுரூஜுன் அலல் இஸ்லாம் (இஸ்லாத்திலிருந்து வெளியேறுதல்)’ போன்ற பதங்களை அவர்கள் விஷயத்தில் பயன்படுத்தினர். எனவே ‘இஸ்மாயிலிகள் அனைவரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள்’ என்று சொல்லும் சிறுமதியாளர்கள் உங்களை ஒருபக்கம் இழுப்பதை அனுமதிக்காதீர்கள்.
எகிப்தில் நடந்த இந்த சமயப் புரட்டுக்கு எதிராக பேசிய பிரபல இஸ்மாயிலி அறிஞரின் பெயர் ஹமீத் அல் தீன் அல் கர்மானி. இது குறித்து அவர் ஒரு கிரந்தம் இயற்றினார். அதன் பெயர் அல் ரிசாலா அல் வாயிதா. அதில் அவர் இறை நிராகரிப்புக்கு இட்டுச் செல்லும் இந்தப் பிரிவினைவாத நம்பிக்கையை அம்பலப்படுத்தினார். இஸ்மாயிலிகளை பிற முஸ்லிம்களோடு மோதச் செய்யும் இந்த மக்களை அம்பலப்படுத்தும் பொருட்டு அவர் ஈராக்கிலிருந்து எகிப்துக்குச் சென்றார். இந்த விஷயம் அடங்கும் வரை, அரசர்தான் கடவுள் என்று சொல்பவர் எவரும் இல்லாமல் போகும் வரை, அவர் எகிப்திலிருந்து வெளியேறவில்லை. கடைசியாக கடவுளாகச் சித்தரிக்கப்பட்ட அல் ஹாக்கிம் என்ற அந்த அரசர் கொல்லப்பட்டார்.
மீண்டும் ‘மூத்தவரா இளையவரா?’
பன்னிருவர் வகை ஷியாக்களிடமிருந்து இஸ்மாயிலிகள் பிரிந்ததற்கான காரணத்தை நினைவுகூறுங்கள். மூத்த மகன்தான் இமாம் ஆவதற்கு ஆகத் தகுதி வாய்ந்தவர் என்று இஸ்மாயிலிகள் கூறினர். ஆனால் வரலாற்றின் போக்கில், அவர்களே இதை மீறினர். தந்தையின் மூத்த மகன் அல்லாதவர்களை அவர்களே இமாம்களாகக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்களுக்குள்ளாகவே முரண்பட்டனர். இதுதான் வரலாறு.
அடுத்து, இஸ்மாயிலி வரலாற்றில் மிக முக்கியமான ஒரு கட்டத்தை நாம் அடைகிறோம். அதுதான் ஹி. 487 (கி.பி. 1094) இல் எகிப்தில் இஸ்மாயிலி ஆட்சியாளர் அல் முஸ்தன்சிர் மரணித்த சமயம். இந்த காலகட்டத்தில்தான் சிலுவைப் போர்கள் துவங்குகின்றன. அது குறித்து நான் இங்கு பேசவில்லை. எனினும் அவற்றையும் மனதில் வைத்து நாம் இங்கு ஒற்றைப் பரிமாண வரலாறு குறித்து பேசவில்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அல் முஸ்தன்சிர் இறந்த பிறகு, ஏற்கனவே பல வித்தியாசங்களை, புதிர்களை, ரகசியங்களை உள்ளடக்கியிருந்த இஸ்மாயிலிகள் இரு கிளைகளாகப் பிரிந்தனர். அல் முஸ்தன்சிருக்கு வலக்கரம் போல அல் ஜமாலி என்றொரு அமைச்சர் இருந்தார். இவர் அல் முஸ்தன்சிரின் இளைய மகன் அஹ்மத் அடுத்த இமாம் ஆவதை ஆதரித்தார். அஹ்மதுக்கு அப்போது ஒன்பது அல்லது பத்து வயதே ஆகியிருந்தது. அமைச்சர் ஜமாலி அர்மீனிய பூர்வீகம் கொண்டவர் என்று சில நூல்கள் கூறுகின்றன. அவர் அஹ்மதின் தாய்மாமனும் கூட. ஆனால் இஸ்மாயிலி ஆச்சாரப்படி மூத்த மகன்தான் இமாம் ஆக முடியும். அல் முஸ்தன்சிரின் மூத்த மகனின் பெயர் நிஸார். எனவே மூத்தவரை ஆதரித்தவர்கள் அல் இஸ்மாயிலிய்யா அல் நிஸாரிய்யா என்றும் இளைய மகனை ஆதரித்தவர்கள் அல் இஸ்மாயிலிய்யா அல் முஸ்தஃலியா என்றும் இரு குழுக்களாகப் பிரிந்தனர். அல் முஸ்தஃலியா என்றால் இன்றைய மொழியில் மேட்டுக் குடியினர் என்று சொல்லலாம்.
இரு சகோதரர்களும் தனித்தனியே படைகள் வைத்திருந்தனர். அவர்களுக்கு இடையே போர் மூண்டது. ஆக எகிப்தில் இஸ்மாயிலிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் போர் உருவானது. இதில் மூத்தவர் தோல்வியுற்றார். அல் நிஸாரியாக்கள், கீழைத்தேய இஸ்மாயிலிகள் என்றும் அல் முஸ்தஃலியாக்கள் மேலைத்தேய இஸ்மாயிலிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த வேறுபாடு இன்றளவிலும் நிலைத்திருக்கிறது.
இஸ்மாயிலிகள் இரண்டாகப் பிரியும் அச்சமயம், ஒரு புதிய மனிதர் ஈரானிலிருந்து எகிப்துக்கு வருகிறார். அவர்தான் ஹசன் இப்னு அல் சப்பாஹ். ஆச்சார இஸ்மாயிலிகளின் பக்கம் நின்ற அவர், அவர்களை ஆதரிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அல் முஸ்தன்சிர் மற்றும் அவருடைய மூத்த மகனை ஆதரிப்பதையே தன் யாத்திரை நோக்கமாகக் கொண்டார். நிஸார்தான் சட்டப்பூர்வ ஆட்சியாளர் என்றும் இஸ்மாயிலி அரசின் இமாம் என்றும் கருதினார். ஆனால் எகிப்தில் நிஸாரிகள் தோற்றுப் போகவே அங்கு அவருக்கு இடம் இல்லாமல் போனது. எனவே அவர் மீண்டும் ஈரான் திரும்பிவிட்டார்.
அப்பாஸிகளுக்கும் ஃபாத்திமிகளுக்கும் இடையே சுமூக உறவு இருக்கவில்லை என்று பார்த்தோம். ஆனால் இப்போது ஃபாத்திமிகள் அப்பாஸிகளோடு நட்புறவு பேணத் துவங்கினர். பாக்தாதில் அபூ அல் ஹாரிஸ் அல் பசாசிரி என்றொரு ராணுவத் தளபதி இருந்தார். இவரோடு ஃபாத்திமிகள் நல்லுறவு பேணினர். அது பாக்தாதுக்குள் ஃபாத்திமிகளின் செல்வாக்காக மாறியது. இது நடந்தது ஹி. 450-ல் (கி.பி 1058). குறுகிய காலத்துக்கு இஸ்மாயிலி சிந்தனைப் பள்ளி ஈராக்கில் பரவியது. அங்குள்ள சில பகுதிகளின் ஆளுநர்கள்கூட இஸ்மாயிலிகளாக இருந்தனர். அதே சமயம், சிரியா, ஏமன், ஹிஜாஸ், ஈரான் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் ஆகிய பகுதிகளிலும் இஸ்மாயிலி தாக்கம் பரவியது. எனினும் கிழக்கில் பரவிக் கொண்டிருந்த இஸ்மாயிலி இயக்கம் மேற்கில் தேயந்து கொண்டிருந்தது. வட ஆப்பிரிக்காவில் அவர்களின் பிடி தளர்ந்து கொண்டிருந்தது. அதன் பிறகு தென்மேற்கு ஆசியாவில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது.
ஷாம் பகுதி இஸ்மாயிலிகளின் மையம் சிரியாவில் சலமியாவில் இருந்தது என்று பார்த்தோம். அங்கிருந்து உபைதுல்லாஹ் அல் மஹ்தி வடக்கு ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்றார் என்றும் கூறினோம். அல் ஹசன் இப்னு அல் சப்பாஹ் எகிப்தில் நடந்த அரசியல் நடவடிக்கைகள் காரணமாக அங்கிருந்து வெளியேறினார் என்றும் பார்த்தோம். அவர் எகிப்திலிருந்து சிரியாவுக்குச் சென்றார். அங்கு ஹலப்பில் (அலெப்போ) மூன்றாண்டுகள் தங்கினார். அவர்தான் ஈரானில் ஒரு இஸ்மாயிலி தன்னாட்சிப் பகுதியை நிறுவினார். ஈரானில் இஸ்மாயிலி அரசாங்கம் என்ற ஒன்று எப்போதும் இருக்கவில்லை. அங்கு ஒரு இஸ்மாயிலி அரசாங்கம் இருந்தது என்று சொல்வது கொஞ்சம் மிகையானது. அங்கு அவர் தங்கியிருந்த கோட்டை பிரபலமானது. அதுதான் அலமூத் கோட்டை. அது நிஸாரி ஆட்சியாகவே இருந்தது.
ராஷித் அத் தீன் சினான்
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் ஈராக்கில் வேறு ஒருவர் காட்சிக்கு வருகிறார். அவருடைய பெயர் ராஷித் அல் தீன் சினான். பன்னிருவர் வகை ஷியாவாகத் தன் வாழ்வைத் துவங்கிய அவர், பஸ்ராவில் ஒரு சூஃபியாக தோன்றினார். பிறகு அங்கிருந்து அல் ஷாம் சென்ற அவர் அங்கு இஸ்மாயிலியாக மாறினார். அவர் ஓரளவுக்கு ஹசன் இப்னு அல் சப்பாஹ்வுக்கு இணையானவராக இருந்தார். சிரியாவில் மிஸ்யாஃப் என்றொரு கோட்டை இருந்தது. அங்குதான் இஸ்மாயிலிகள் ராஷித் இப்னு சினானின் தலைமையில் மீண்டும் ஒன்று கூடினர். ஏனென்று தெரியவில்லை! இஸ்மாயிலிகள் கோட்டைகள் மீது சதாவும் ஆர்வம் காட்டினர். லெபனான், சிரியா, பாலஸ்தீனம் பகுதிகளில் பல கோட்டைகள் இருந்தன. அவர்கள் அவையனைத்தையும் தமதாக்க விரும்பினர். ராணுவப் படைகளை அனுப்பியோ, வாய்ப்பிருந்தால் விலை கொடுத்து வாங்கவோ முற்பட்டனர். அக்கோட்டைகளை உடமை கொள்ள பேரார்வம் காட்டினர்.
ராஷித் இப்னு சினானின் பின்பற்றாளர்கள்தான் சலாஹுத்தீன் அல் அய்யூபியைக் கொல்ல முயன்றனர். வரலாறில் இது பற்றி விரிவான் ஒரு தகவல் உள்ளது. ஒருமுறை காலை கண் விழித்ததும் சலாஹுத்தீன் தனக்கருகே ஒரு கடிதம் இருந்ததைக் கண்டார். அதன் மீது ஒரு குத்துவாள் குத்தப்பட்டிருந்தது. இது ராஷித் இப்னு சினானிடமிருந்துதான் வந்துள்ளது என்று அவர் புரிந்து கொண்டார். சில வரலாற்றாளர்கள், ராஷித் இப்னு சினானே இரவோடு இரவாக நேரடியாக வந்து சலாஹுத்தீனின் பாதுகாப்பு அரணை மீறி இப்படிச் செய்தார் என்று கூறுகின்றனர்.
எகிப்து, சிரியா மற்றும் ஈராக்கில் இருந்த சில இஸ்மாயிலிகள் சிலுவைப் போராளிகளோடு கூட்டணி வைத்தனர். இது சலாஹுத்தீனை மிகவும் எரிச்சலுக்குள்ளாக்கியது. எனவே அவர் எகிப்தின் ஃபாத்திமிகளோடு நல்லுறவில் இருக்கவில்லை. இந்நிலையில், தனக்கருகே இருந்த கடிதத்தைப் பார்த்ததும் ஆலோசனை செய்தார். அப்போது அவருடைய ஆலோசகர்கள், ஏற்கனவே அவர்களுக்கு பல புற எதிரிகள் உள்ளனர் என்றும் தற்போது முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்நாட்டுப் போரைத் துவங்குது சரியல்ல என்றும் கூறினர். எனவே சலாஹுத்தீன் ஃபாத்திமிகள் மற்றும் சுற்றியிருந்த இஸ்மாயிலிகள் விஷயத்தில் பொறுமை காக்க நேர்ந்தது. இஸ்மாயிலி நம்பிக்கையில் ராஷித் அத் தீன் இப்னு சினான் இதுவரை இல்லாத ஒரு புதிய கொள்கையை புகுத்தினார். அதுதான் மறுஜென்மக் கொள்கை (அத் தனாசுஃக்).
ஈரானில் இஸ்மாயிலிகளை இறுதியாக அழித்தது மங்கோலியச் சக்கரவர்த்தி ஹுலாகு ஆவார். ஹி. 654 (கி.பி. 1256-ல்) இது நடந்தது. மங்கோலியர்கள் ஈரான்-ஈராக் மீது தாக்குதல் நடத்தி கொண்டிருந்த அதே சமயம் எகிப்திய ஆட்சியாளர் அல் ஸாஹிர் பிபர்ஸ் சிரியாவில் இஸ்மாயிலிகளை தாக்கினார். ஹுலாகுவின் தாக்குதல் மூர்க்கத்தனமாக இருந்தது. அவர் ஈவிரக்கமின்றி அனைத்தையும் தீயிட்டு கொழுத்தினார்; சகட்டுமேனிக்கு அனைவரையும் கொன்று குவித்தார். ஆனால் பிபர்ஸ் இஸ்மாயிலி மக்களுக்கு துன்பம் இழைக்கவில்லை. இஸ்மாயிலி தலைவர்களை, அவர்களுடைய தளபதிகளைக் கட்டுப்படுத்தி அங்குள்ள பிரச்சனைகள் என்று தான் கருதியதை முடிவுக்குக் கொண்டு வருவதுதான் அவருடைய நோக்கமாக இருந்தது.
பொதுமக்கள் தங்கள் சமயச் சடங்குகளை நிறைவேற்றுவது, மதரீதியான நிகழ்வுகளை நடத்துவது, மத உரிமைகளைக் காப்பது போன்றவற்றுக்கு தடை எதுவும் இருக்கவில்லை. ஆனால் ஹுலாகு அப்படி அல்ல. அவர் அனைவரையும் சகட்டுமேனிக்குக் கொன்று குவித்தார். இஸ்மாயிலிகள் ‘சிறுபான்மையினராக’ இருந்ததால் அவர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும் அச்சம் இருந்தது. எனினும் அவர்கள் அதைத் தாக்குப்பிடித்து நின்று வளர்ந்தனர். சிரியாவில் சலமியா அவர்களின் மையமாக இன்றளவிலும் விளங்குகிறது. அங்கு அவர்கள் பிராதனமாக வாழ்கின்றனர். மேலும் அல் ஃகவாபி, அல் கதமுஸ், மிஸ்யாஃப், அல் கஹ்ஃப் ஆகிய நகரங்களில் இன்றளவிலும் வாழ்கின்றனர்.
ஹசன் இப்னு சப்பாஹ்
அடுத்து ஈரானின் இஸ்மாயிலிகள் பக்கம் மீண்டும் திரும்புவோம். ஆரம்பம் முதலே ஈரானில் இஸ்மாயிலிகள் இருந்தனர். எனினும் அவர்கள் பாரசீகத்தில் பிரதான அல்லது அதிகார நிலைக்கு ஒருபோதும் வரவில்லை. அப்பகுதியில் ஒரு இஸ்மாயிலி அதிகாரப் பரப்பை முதலில் உருவாக்கியவர் ஹசன் இப்னு சப்பாஹ் என்று பார்த்தோம். அவர் இஸ்மாயிலி குடும்பத்தில் பிறக்கவில்லை; பன்னிருவர் வகை ஷியாவைச் சார்ந்த குடும்பப் பின்னணி கொண்டவர். துணிவு மிக்கவராகவும் விவேகமானவராகவும் அறியப்படும் அவர் ஒரு விஞ்ஞானி, பொறியாளர், கணிதவியலாளர் மற்றும் வானியலாளரும் கூட. அவருடைய முன்னோர்கள் ஏமனின் ஹிம்யாரிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. அவருடைய பூட்டனார் அல்லது பாட்டனார் கூஃபாவுக்கு இடம் பெயர்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. பிறகு அங்கிருந்து ஹசன் அல் சப்பாஹ்வின் தந்தை கும் நகரத்துக்கு வந்தார்; அங்கிருந்து ரயீ நகரத்துக்குச் சென்றார். ரயீ-ல் ஹி. 428-ல் ஹசன் அல் சப்பாஹ் பிறந்தார்.
ஹி. 471-ல் ஹசன் அல் சப்பாஹ் எகிப்து சென்றார். எகிப்தில் ஒன்றரை வருடங்கள் இருந்தார். ஃபாத்திமி மன்னர் அல் முஸ்தன்சிர் இறந்த போது ஹசன் அல் சப்பாஹ் எகிப்தில் இருந்தார். மேலும் அல் முஸ்தன்சிரின் மகன்கள் இருவரும் போர் செய்த போதும் அவர் அங்குதான் இருந்தார். பிறகு எகிப்தின் அசல் ஆட்சியாளராக இருந்த அல் முஸ்தன்சிரின் இளைய மகனின் தாய் மாமனுக்கும் ஹசன் அல் சப்பாஹ்வுக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. எனவே அவர் அங்கிருந்து வெளியேறினார். அவர் புறப்பட்ட கப்பல் வடக்கு ஆப்பிரிக்காவுக்கு மேற்கு நோக்கிச் செல்வதற்கு பதிலாக வானிலை காரணங்களால் கிழக்கு நோக்கி ஷாம் நகரத்துக்குப் பயணித்தது. அங்கு சென்று ஹலப் (அலேப்போ) நகரத்தில் சில காலம் தங்கினார். பிறகு அங்கிருந்து பாக்தாத் சென்றார். பாக்தாதிலிருந்து இஸ்ஃபஹான், பிறகு கிர்மான், அடுத்து யஸ்த் என்று பயணித்துக் கொண்டே இருந்தார்.
இக்காலம் முழுவது அவர் தன் இஸ்மாயிலி கொள்கையை இருக்கமாக பற்றிப் பிடித்திருந்தார். பிறகு மீண்டும் இஸ்ஃபஹான் சென்ற அவர், அங்கிருந்து ஃகூசெஸ்தான், அடுத்து தமிகான் சென்றார். மூன்று ஆண்டுகள் அங்கு தங்கிய பிறகு குர்கான் மற்றும் அதன் சுற்றுப் புறங்களுக்குச் சென்றார். அப்போது அப்பகுதியின் துருக்கிய சன்னி செல்ஜூக் ஆளுனர் நிளாம் அல் முல்க் என்பவர் (சிலர் இதை நிஸாம் அல் முல்க் என்று தவறாக உச்சரிக்கின்றனர்) ஹசன் அல் சப்பாஹ்வை கைது செய்ய உத்தரவிட்டார். இதையறிந்த ஹசன் கஸ்வீன் நகருக்கு தப்பிச் சென்றார். பிறகு தன் சீடர் ஒருவரை அலமூத் கோட்டைக்கு அனுப்பி அதை ஹி. 483-ல் (கி.பி. 1090) கைப்பற்றினார். அலமூத் என்றால் தண்டனையின் கூடு என்று பொருள். அங்குதான் அவர் ஒரு இஸ்மாயிலி ஆட்சிப் பரப்பை உருவாக்கினார். அது அல் நிஸாரிய்யா, அல் பாதினிய்யா, அஸ் ஸபயிய்யா, அத் தஃளிமியா, அல் ஃகஷாஷீன் அல்லது அல் ஃகஷிஷீய்யா என்று பலராலும் பல பேர்களில் அழைக்கப்படுகிறது.
ஹசன் இப்னு சப்பாஹ் தன் மாணவர்களை சில ராணுவ நடவடிக்கைகளுக்கு அனுப்பும்போது அவர்களை ஒருவித போதை நிலைக்கு ஆட்படுத்தி அனுப்புவார் என்று சொல்லப்படுகிறது. ஷியா கல்வி வட்டங்களில் மனிதனின் பகுத்தறிவுக்கு (அல் அக்ல்) முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் அல் ஹசன் அல் சப்பாஹ் “பகுத்தறிவு மற்றும் அல் அக்லைக் கொண்டு ஒருவர் அல்லாஹ்வை அறிய முடியாது. ஒரு இமாமின் வழிகாட்டுதல் மூலம் மட்டுமே அல்லாஹ்வை அறிய முடியும்” என்றார்.
ஹசன் இப்னு அல் சப்பாஹ் ஒரு கொரில்லா போர்ப் படையை நிறுவினார். அவர்கள் படுகொலைகள் செய்வதற்கு பேர் போனவர்கள். ஹஷாஷீன் என்று அறியப்பட்ட அவர்களிலிருந்துதான் assassination என்ற ஆங்கிலச் சொல் உருவானது. இப்படி படுகொலை செய்யப்பட்டவர்களுள் ஒருவர், முன்னர் ஹசன் அல் சப்பாஹ்வை சிறைபிடிக்க விரும்பிய நிளாம் அல் முல்க். இவர்கள் இருவரும் சிறுவயதில் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள், நன்கு அறிமுகமானவர்கள்.
அல் ஹசன் அல் சப்பாஹ் ஒரு அறிஞராகவும், விஞ்ஞானியாகவும் இருந்தார். அதே சமயம் அவர் ஒரு சூஃபி துறவியாகவும் இருந்தார். தர்வேஷ் என்று சொல்வார்களே, அப்படியான தர்வேஷாகவும் இருந்தார். அவர் தன் இரு மகன்களையும் கொன்றார் என்று சில வரலாற்று நூல்கள் சொல்கின்றன. அதில் ஒருவர் ஏதோவொரு சதியாலோசனையில் பங்கு பெற்றார் என்பதற்காகவும் மற்றொருவர் மது அருந்தியதாலும் கொல்லப்பட்டார் என்று சொல்லபடுகிறது. அல் ஹசன் ஹி. 518-ல் (கி.பி. 1124) தன் 90 ஆவது வயதில் மரணித்தார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் அந்த சுய ஆட்சிப் பகுதியின் ஆட்சியாளராக இருந்த அவர், இறக்கும் தருவாயில் புஸுர்க் உமீத் என்று சொல்லப்படும் அல் ஹசன் இப்னு முஹம்மத் என்பவரிடம் பதவியை ஒப்படைத்தார். அத்தோடு தான் தேர்ந்தெடுத்த மூன்று பேரை அவருடைய ஆலோசகர்களாக நியமித்தார்.
அதன் பிறகு துருக்கிய செல்ஜுக்குகள் அக்கோட்டையை தாக்க ஆரம்பித்தனர். அல் ஹசன் இப்னு சப்பாஹ் இறந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய பின்பற்றாளர்களான இஸ்மாயிலி நிஸாரிகளுக்கும் செல்ஜுக்குகளுக்கும் இடையே நடந்த போரில் கிட்டத்தட்ட 10,000 இஸ்மாயிலிகள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு இஸ்மாயிலிகளும் சன்னிகளைக் கொன்றனர்.
ஹி. 559 (கி.பி. 1163) ரமழானில், புஸுர்க் உமீத் என்ற அந்த நபர், இதற்கு முன் யாருமே கேள்விப்பட்டிராத ஒரு காரியத்தைச் செய்தார். குன்றின் மீது இருந்த அக்கோட்டையில் இருந்து கீழே இறங்கி வந்த அவர், அக்குன்றின் கீழ்ப்பகுதி இருக்கும் இடம்தான் கிப்லா என்று அறிவித்தார். அன்று ரமழான் பதினேழு. கணிசமான அளவு மக்கள் அங்கு ஒன்று கூடி இருந்தனர். மறைவாக இருக்கும் இமாமிடமிருந்து கிடைக்கப் பெற்ற செய்தி என்று எதையோ வாசித்தார். பின்னர் மேடையில் இருந்து வந்து அங்கு குழுமியிருந்த மக்களிடம், தொழுகை மற்றும் நோன்பு நோற்பதிலிருந்து அவர்களுக்கு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்து நோன்பை முறிக்கச் சொன்னார். அவர்களும் அப்படியே செய்தனர். மேலும் மது அருந்துவது ஆகுமாக்கப்பட்டுவிட்டது என்றார். ‘வெளியே சென்று உங்கள் வாழ்க்கையை அனுபவியுங்கள்’ என்றார். அந்த நாளை -ரமழான் 17- பெருநாள் என்று அறிவித்து விடுமுறை அளித்தார். அதை ஈத் அல் கியாம் அல்லது ஈத அல் கியாமத் என்று அழைத்தார். இதன் காரணமாக எழுந்த எதிர்வினையின் காரணமாக அவர் கொல்லப்பட்டார். பிறகு அவருடைய மகனும் தொடர்ந்து பேரனும் தலைமை ஏற்றனர். புஸுர்க் உமீதின் பேரர், முன்னர் நடந்த மதத்திரிபுகளை சரிசெய்ய எண்ணினார். ஆனால் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.
ஆகா ஃகான்
ஹி. 654-ல் மங்கோலியச்சக் கரவர்த்தி ஹுலாகு அக்கோட்டையை அழித்தார் என்று பார்த்தோம். பாரசீகத்தில் தோற்கடிப்பட்ட இஸ்மாயிலிகள் பலர் இந்தியாவுக்குச் சென்றனர். இங்கிருந்து அவர்களுடைய வரலாற்றின் மற்றொரு அத்தியாயம் துவங்குகிறது. இந்தியா சென்ற அவர்கள் அரசியல், நிர்வாகம், ஆட்சி போன்றவற்றை முற்றிலும் கைவிட்டனர். எனினும் தங்கள் சிந்தனைப் பள்ளியை இந்திய துணைக் கண்டத்தில் -குறிப்பாக தீண்டத்தகாதவர்கள் மத்தியில்- பரப்பினர். அங்கிருந்து ஹிந்துக்களோடு தொடர்பில் இருந்த அவர்கள், சில ஹிந்து கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொண்டனர்.
ஈரானில் ஹசன் அலீ ஷாஹ் என்று ஒருவர் தோன்றும் வரை இஸ்மாயிலிகள் இந்தியாவில் தொடர்ந்து வாழ்ந்தனர். கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் முப்பகுதியில் அவர் தோன்றினார். அன்று ஈரானில் சஃபவி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர் பல இஸ்மாயிலிகளை தன்னகத்தே கவர்ந்தார். சில பயணக்கூட்டங்களை கைப்பற்றத் துவங்கினார். இதனால் நிலைத்தன்மை குலைந்தது. பயண மார்க்கங்கள் பாதுகாப்பற்றவையாக மாறின. அவருடைய புகழ் பரவத் துவங்கியது. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் மரண தண்டனையிலிருந்து அவரை காப்பாற்றியது யார் தெரியுமா? பிரிட்டிஷார்.
அவரை ஈரானிலிருந்து நாடுகடத்துவதற்கு சஃபவி அதிகாரிகளை பிரிட்டிஷார் சம்மதிக்கச் செய்தனர். எனவே அவர் அங்கிருந்து ஆஃப்கானிஸ்தான் சென்றார். ஆனால் ஆஃப்கன் மக்கள் அவருக்கு செவிசாய்க்கவிலை. அவரால் ஆஃப்கானிஸ்தானில் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே அங்கிருந்து இந்தியா சென்றார். இந்தியாவில் அன்றைய பாம்பே, இன்றைய மும்பையில் வசித்தார். அவரை இஸ்மாயிலிகளின் இமாமாக பிரிட்டிஷார் அங்கீகரித்தனர். ஆம்! பிரிட்டிஷார்தான் அவரை இஸ்மாயிலிகளின் இமாமாக அங்கீகரித்தனர். அவருக்கு ஆகா ஃகான் என்று பட்டம் வழங்கினர்.
அவர் தன்னை நிஸார் இப்னு அல் முஸ்தன்சிரின் உறவினராகக் கருதினார். தான் ஒரு நிஸாரி, ஃபாத்திமி அல்லது இஸ்மாயிலி என்றும் அதனால் நிஸாரி இஸ்மாயிலிகளின் தலைவர் தானே என்றும் கூறினார். 1881-ல் அவர் மரணித்த பிறகு அவருடைய மகன் ஆகா அலீ ஷாஹ் பொறுப்பை ஏற்றார். இரண்டாம் ஆகா ஃகான் என்று அழைக்கப்பட்ட அவர் தன் தந்தையால் நன்கு தயார் செய்யப்பட்டிருந்தார். சிறப்பான கல்வி பெற்றிருந்தார்; பல மொழிகளில் சரளமாகப் பேசும் ஆற்றல் பெற்றிருந்தார் – அரபியைத் தவிர. பாரசீகம், உருது மற்றும் குஜராத்தி மொழி கவிஞராகவும் இருந்தார். கல்வி விஷயத்தில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். இஸ்மாயிலிகளுக்கு கல்வி புகட்டுவதில் அதிக கவனம் செலுத்தினார். உண்மையைச் சொன்னால் இஸ்மாயிலிகளுக்கும் மட்டும் அல்ல, எல்லா முஸ்லிம்களுக்கும் கல்வி புகட்டுவதில் அக்கறை கொண்டார். இந்தியாவில் பல முஸ்லிமிகள் அவர் மீது மதிப்பு கொண்டிருந்தனர்.
ஷாஹ் ஃபத்ஹ் அலீ யின் மகளான பீபி ஃகான் என்ற ஈரானிய இளவரசியை அவர் மணம் புரிந்தார். 1877-ல் கராச்சியில் அவர்களுக்கு முஹம்மது அல் ஹுசைன் ஷாஹ் என்றொரு மகன் பிறந்தார். முஹம்மது அல் ஹுசைன் ஷாஹ்வுக்கு எட்டு வயது இருக்கும் போது தந்தை இறந்துவிடவே, அப்போதே அவர் இமாமாகப் பொறுப்பேற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர்தான் மூன்றாம் ஆகா ஃகான். எனினும் அவருக்கு ஓரளவு வயது ஆகும்வரை அவருடைய தாய், இஸ்மாயிலிகளின் பொறுப்புகளை கையில் எடுத்து நடத்தினார். மகனுக்கு 16 வயது ஆனபோது இஸ்மாயிலி நிர்வாக அலுவல்களை அவரிடம் ஒப்படைத்தார். அதன் பின்னரும் மகனுக்கு துணையாக நின்று உதவி புரிந்தார்.
மூன்றாம் ஆகா ஃகான் தன்னை புஸுர்க் உமீதின் பின்பற்றாளராகக் கருதினார். இந்தியாவின் மிக முக்கியமான அலீகர் பல்கலைக் கழகத்தை நிறுவுவதில் முக்கிய பங்காற்றிய அவர், அதன் தலைமை ஆசிரியராகப் பலமுறை கவுரவப் பதவி வகித்தார். 1948-ல் ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்மாயிலிகளின் ஆகா ஃகானிய கிளைக்காக ஒரு சாசனத்தை இயற்றினார். அதில் மூன்று நகரங்களை பிராதனமாக முன்வைத்தார்: தாருஸ் ஸலாம், நய்ரோபி மற்றும் கம்பாலா. ஸன்ஜிபார், மடகாஸ்கார் மற்றும் ஸைர் என்று அழைக்கப்படும் பெல்ஜியன் காங்கோ பகுதியின் இஸ்மாயிலிகள் தாருஸ் ஸலாமை மையமாகக் கொண்டனர். அவரது கட்டளைக்கிணங்க உலக இஸ்மாயிலிகளின் மையமாக கராச்சி ஆக்கப்பட்டது.
மூன்றாம் ஆகா ஃகான் சில வினோத பண்புகளைப் பெற்றிருந்தார். சூதாட்டம் மற்றும் குதிரைப் பந்தயங்களில் ஈடுபட்டார். சிற்றின்பங்களில் ஈடுபட்டார். பாரம்பரியத்தைக் கடைபிடித்தவராக அவர் இருக்கவில்லை. குறிப்பாக மனைவிகளை தேர்ந்தெடுப்பதில் அழகை மட்டுமே பிராதனத் தகுதியாக வைத்திருந்தார். ஒரு இஸ்லாமிய தலைவரின் மனைவி இப்படியான பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் கருதவில்லை. அவருடைய பின்பற்றாளர்கள் துலாபாரம் செய்ததாக தகவல்கள் சொல்கின்றன. ஒருமுறை அவருடைய எடைக்கு நிகரான வைரமும், மற்றொரு முறை இரு மடங்கு தங்கமும், மற்றொருமுறை மூன்று மடங்கு பிளாட்டினமும் கொடுத்தனர். எனினும் இவை அவருடைய சொந்தக் கணக்குக்கு செல்லவில்லை. அவை அனைத்தும் ஏழைகள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஆகா ஃகானுக்கு அலீ சுலைமான் ஃகான் என்றொரு மகன் இருந்தார். இவருடைய தாய் இத்தாலிக்காரர். அவருக்கு சத்ர் அத் தீன் ஃகான் என்று மற்றொரு மகனும் இருந்தார். இவருடைய தாய் பிரஞ்சுக்காரர். என்ன ஒரு வரலாறு இது! ஆனால் ஆகா ஃகான் இவ்விருவரையும் அடுத்த தலைவராக அங்கீகரிக்கவில்லை. மாறாக அலீ சுலைமானின் மகனுக்கு அப்பொறுப்பைக் கொடுத்தார்.
♣ ♣ ♣ ♣ ♣
