ஹதீஸ்: முறைமையும் தொகுப்புகளும் – டாக்டர் முஹம்மது முஸ்தபா அஸமி
Posted onஹதீஸ் முறைமை குறித்து அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள நூல் களும், மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளும் ஏராளம். இன்றைய தலைமுறையினருள் பெரும்பான்மையினர் அரபுமொழி அறியாத காரணத்தால் அந்நூல்களிலிருந்து பயன் பெற முடியாதிருக்கின்றனர். அரபுமொழி பேசுபவர்கள் கூட, அந்நூல்களில் கையாளப்பட்டுள்ள சொற்பிரயோகங்களில் பல வழக்கில் இல்லாத காரணத்தால் அவற்றைப் பயன்படுத்த இயலாதிருக்கின்றனர். ஹதீஸ் கலை குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு சில நூல்களும் வாசகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவனவாகவே உள்ளன. ஆங்கிலத்தில், தரத்திலும் சிறப்பிலும் மிக்கதான ஒரே நூல் எனக் கொள்ளக் கூடியது பேராசிரியர் ஸுபைர் ஸித்தீகீ எழுதிய ‘Hadith Literature'(ஹதீஸ் தொகுப்புகள்) எனும் நூலாகும். அதனை நான் சுமார் முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னர் வாசித்துள்ளேன். அந்த நூலும் இப்போது கிடைப்பதாயில்லை. எனவேதான் கல்லூரி மாணவர்களும், படித்த சாதாரண மக்களும் பயன்பெறுவதற்காக ‘ஹதீஸ் முறைமையும் தொகுப்புகளும்(Studies in Hadith Methodology and Literature)’ எனும் இந்த நூலை எழுதியுள்ளேன். தேவைக்கு மிஞ்சிய விவரங்களும், கடினமான மொழிநடையும் இயன்றவரை இதில் தவிர்க்கப்பட்டுள்ளன. இதைக் கவனமாக வாசிப்பதன் மூலம் கீழைத்தேயவியலாளராலும் ஏனைய பலராலும் அறியாமை காரண மாக அல்லது ஏதும் தேவை கருதி எழுப்பப்பட்டுள்ள ஏராளமான ஐயங்களுக்குத் தெளிவும் தீர்வும் கண்டு, ஹதீஸ் துறை குறித்த அடிப்படை அறிவினைப் பெற்றுக்கொள்ள இயலும் என்பது என் நம்பிக்கை.
இந்நூலின் முதலாம் பகுதியில் ஹதீஸ் முறைமை பற்றிய விவரங் களைத் தந்துள்ளேன். இரண்டாம் பகுதியில் ஹதீஸ் தொகுப்புகள் குறித்து எழுதியுள்ளேன். இதில் முதன்மையான ஆறு ஹதீஸ் தொகுப்பு களை அறிமுகம் செய்வதோடு ஹதீஸ் நூல்களது தொகுப்புகளின் பல்வேறு கட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த வேறு ஆறு நூல்கள் குறித்த விவரங்களையும் தந்துள்ளேன். ஆரம்ப ஹதீஸ் பதிவுகள் குறித்து மேலும் விவரங்கள் பெற விழைவோர் எனது Studies in Early Hadith Literature எனும் நூலைப் பார்க்கலாம். இஸ்னாத்(அறிவிப்பாளர் தொடர்) பற்றிய பிரச்சனைகள் எனது On Schacht’s Origins of Muhammedan Jurisprudence எனும் நூலில் ஆழமாக ஆராயப்பட்டுள்ளன. ஹதீஸ் திறனாய்வு தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள ஆர்வமுள்ளோர் இமாம் முஸ்லிம் அவர்களின் ‘கிதாப்-அல்-தம்யீஸ்’ எனும் நூலுக்கான எனது முகவுரையிலிருந்து பெரும் பயன் பெறலாம்.
– டாக்டர் எம்.எம். அஸமி