எனது ஹஜ் – சையது முஹம்மது

Posted on

எனது ஹஜ் (2)

எனது ஹஜ் (3)

எனது ஹஜ் (4)

எனது ஹஜ் (5) 

♣ ♣ ♣ ♣ ♣

இந்திய ஹஜ் கமிட்டி

இந்திய ஹஜ் கமிட்டி (HCOI) மூலம் இந்த ஆண்டு ஹஜ் செய்ய விரும்புபவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 10-02-23 அன்று கோரப்பட்டன. இது மிகமிகத் தாமதமாகும். இத்தாமதம் ஹஜ் செய்ய விரும்பியவர்களிடையே பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியிருந்தது. 2022ஆம் ஆண்டிற்கான ஹஜ் விண்ணப்பக் கோரல் 21ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதியில் தொடங்கியது என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இது எவ்வளவு தாமதம் என்பது விளங்கும்.

10-03-23 வரை அதற்கு அவகாசம் அளித்தார்கள். பின்பு 20-03-23 வரை நீட்டித்தார்கள். 31-03-23 அன்று நடந்த குலுக்கலில் நான் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டேன் (provisionally selected).

ஹஜ் முன்பணம் (advance) 80,000, செயலாக்க கட்டணம் (processing fee) ரூ. 300, இதர வகைகளுக்காக (miscellaneous dues) 1,500 ஆக மொத்தம் 81,800ஐ 07-04-23க்குள் கட்ட வேண்டும் என்று அறிவித்தார்கள். (Circular no. 8 date: 01-04-23)

ஸ்டேட் பாங்க்  ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா இவை இரண்டில் ஏதாவது ஒன்றில் உள்ள ஹஜ் கமிட்டி கணக்கில் பணம் கட்ட வேண்டும் என்று அறிவித்தார்கள். அதற்கான சலான் ஒன்றையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். அது கொசகொசவென்று இருந்தது. இருந்தாலும் அதைக் கொண்டுதான் பணம் கட்ட வேண்டும். வங்கியின் சலானைக் கொண்டு கட்டவியலாது. அந்த சலானை A4 அளவுள்ள தாளில் பிரிண்ட் எடுக்க வேண்டும். அது மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மூன்றிலும் விபரங்கள் நிரப்ப வேண்டும். அதில் முதல் பகுதியை வங்கியில் கிழித்து எடுத்துக் கொள்வார்கள். அடுத்த பகுதியை கிழித்து ஹஜ் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும். மற்றொன்றை நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

01-04-23 சனிக்கிழமை ஆகும். அடுத்த நாள் ஞாயிறு வங்கி விடுமுறை. திங்கள்கிழமை ஸ்டேட் பாங்கிற்குச் சென்றேன். கவுண்டரில் பணம் செலுத்த டோக்கன் பெற்று அமர்ந்திருக்க வேண்டும். அழைத்தவுடன் சென்று கட்ட வேண்டும். முதல் நாள் விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. 1 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பின் அழைத்தார்கள். நான் சென்று சலானையும் பணத்தையும் கொடுத்தேன். ‘கேஷியர் சலானை படிக்க சிரமப்பட்டார்’ என்று தெரிந்தது. எனினும் பொறுமையாக பார்த்துவிட்டு பணத்தை ஹஜ் கமிட்டியின் கணக்கில் வரவு வைக்க முயன்றார். ஹஜ் கமிட்டியின் சர்வர் வேலை செய்யவில்லை. அவர் மீண்டும் மீண்டும் முயன்றார். பலன் இல்லை. மதியத்திற்கு மேல் வாருங்கள். அல்லது மெயின் பிரான்ச் (main branch) செல்லுங்கள் என்று திருப்பிக் கொடுத்து விட்டார்.

நான் ‘2023 ஹஜ் மதினா வழிகாட்டி குரூப்’ என்ற வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்திருந்தேன். இது ஆம்பூரைச் சேர்ந்த ஒரு ஹாஜியால் ஹஜ் செல்பவர்களுக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட குரூப் ஆகும். அது ரமழான் நோன்பு காலம். “நாங்கள் நோன்பு வைத்துக்கொண்டு வெயிலில் அலைந்து காத்திருந்தும் எங்களால் பணம் செலுத்த முடியவில்லை என்று. ஆன்லைன் ட்ரான்ஸ்பரும் செய்ய முடியவில்லை” பல ஊர்களில் இருந்தும் பணம் கட்டச் சென்றவர்கள் குமுறினார்கள்.

அடுத்த நாள் செவ்வாய் மகாவீர் ஜெயந்தி வங்கி விடுமுறை. பணம் கட்ட கடைசி நாளான 07-04-23ஆம் தேதி நல்ல வெள்ளி எனவே வங்கி விடுமுறை. நடுவில் புதன், வியாழன் இரு தினங்கள்தாம் உள்ளன. இங்கு நான் என்னுடைய தனிப்பட்ட பிரச்சினைகளை பேசவில்லை. இந்த ஆண்டு இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்தவர்களின் எண்ணிக்கை 1,40,000 ஆகும்.

மதியம் மீண்டும் பேங்க் சென்றேன். அதே காஷியர் மீண்டும் மீண்டும் முயன்றார். ஆனால் பலனில்லை. பின்பு மாலையில் சர்வரை சரி செய்திருந்தார்கள். நான் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினேன். அந்தநாள் இந்த அலைச்சலிலேயே சென்றது. எனக்கு மட்டுமல்ல. பணம் செலுத்தியவுடன் ஹஜ் கமிட்டியின் வலைத்தளம் Advance payment (Ist installment) என்ற பத்தியில் 81,800 செலுத்தியதாக காண்பித்தது.

பின்பு 15-04-23 அன்று முதல் தவணை தொகை (first installment) ரூ. 1,70,000 செலுத்த வேண்டும் என்றார்கள். இதுவும் ஹஜ் செல்ல விண்ணப்பித்தவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் Amount to pay என்ற வரியில் Advance payment (Ist installment) என்று போட்டிருந்தார்கள். அப்படியெனில் இரண்டாம் தவணை தொகைதானே கட்ட வேண்டும் அப்போது முதலில் கட்டியது என்ன? என்பதுதான் குழப்பத்திற்குக் காரணம். இதை நான் சில வரிகளில் சொல்லி விட்டேன். ஆனால் அந்நாட்களில் ‘ஹஜ் செல்ல விண்ணப்பித்தவர்கள் இதனால் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள்’ என்பதை அவர்களின் பதிவுகள் காட்டின. ஹாஜிகள் மட்டுமல்ல வாட்ஸ்அப் குரூப்பை நடத்திய அட்மின்களே குழப்பத்திற்கு ஆளானார்கள்.

Advance payment என்பதையும் Ist Installment என்பதையும் தனித்தனி வரிகளில் போட்டிருந்தால் இந்த குழப்பத்தை தவிர்த்திருக்கலாம். ஹாஜிகள் முதல்முறை அதுவும் வாழ்வில் ஒரேயொரு முறை ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் அவர்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்பதில் ஹஜ் கமிட்டியினர் அக்கறை கொள்ளவில்லை.

♣ ♣ ♣

05-06-23 அன்று என்னுடைய விமானப் பயணம் குறித்த தகவல் ஹஜ் கமிட்டியின் வலைத்தளத்தில் பார்த்தேன். அதிகாலையிலே அவர்கள் வெளியிட்டதை நான் காலையில் பார்த்தேன்.  ’11-06-23 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஹஜ் ஹவுஸ் வர வேண்டும்’ என்றும் ’13-06-23 காலை 11.20 க்கு சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம்’ என்றும் அதில் இருந்தது. ஆகவே அதற்கு தக்கபடி அதற்கு முதல் நாள் சனிக்கிழமை இரவு மதுரையில் இருந்து சென்னை வருவதற்கு பஸ்ஸில் டிக்கெட் முன்பதிவு செய்தேன்.

13ம்தேதி காலை 11:20  விமானப் பயணம் என்பது ஒரு ஆஃபர். அதை ஏற்கலாம் அல்லது வேறு நாளுக்கு மாற்றி வைக்க முடியுமா என்றும் கேட்கலாம். அப்படி என்னிடமும் கேட்டார்கள். “13ம் தேதிக்கு பதிலாக 12ம் தேதி மற்றொரு ஹாஜிக்கு பதிலாக செல்ல இயலுமா?” என்று என்னிடமும் கேட்டார்கள்.

09-06-23 அன்று மதுரையைச் சேர்ந்த அப்துல் குத்தூஸ் என்ற சக ஹாஜி கூறினார்: “விமான பயணத்திற்கான உறுதிப்படுத்தலை (confirm) நீங்கள் ஆன்லைனில் செய்ய முடியும். அப்படியான ஆப்ஷனை இப்போது ஹஜ் கமிட்டி கொடுத்திருக்கிறார்கள். அதை நீங்கள் ஆன்லைனில் செய்துவிட்டால் ஞாயிற்றுக் கிழமை காலை நீங்கள் ஹஜ் ஹவுஸிற்கு செல்ல வேண்டியதில்லை. திங்கள்கிழமை சென்றால் போதும்” என்று சொன்னார்.

இதை ஹஜ் கமிட்டியினர், “உங்களால் அதை செய்ய இயலவில்லை என்றால், முன்பு குறிப்பிட்டபடி இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வந்து விடுங்கள். நாங்கள் அதைச் செய்து கொடுத்து விடுகிறோம்” என்று வாட்ஸ்அப் செய்தியாகவும் அனுப்பி இருந்தார்கள்.

இன்டர்நெட்டில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு அது எளிய வேலைதான். நாங்கள் உறுதிப்படுத்தலை இன்டர்நெட்டிலேயே செய்து விட்டோம். அதைச் செய்தவுடன்  reporting time ஞாயிற்றுக் கிழமை காலை 9:00 மணிக்கு சென்னை வரவேண்டும் என்பது திங்கட்கிழமை மதியம் 3:00 மணி என்று மாறி விட்டது.

இது ஒரு வசதி எனினும் இது ஒரு விதத்தில் சிரமத்தை ஏற்படுத்தியது. முன்பதிவு செய்ததை இரத்து செய்து மீண்டும் முன்பதிவு செய்ய வேண்டி இருந்தது. இதை நான்கு நாட்களுக்கு முன்பு சொல்லியிருந்தால் இந்த சிரமம் ஏற்பட்டிருக்காது. இதனால் ஹஜ் செல்ல தயாரானவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள் என்பதை அவர்களின் பதிவுகள் காட்டின. தமிழ்நாட்டிலிருந்து இந்த ஆண்டு 4,500 பேர்கள் ஹஜ் பயணம் செய்தனர்.

இதற்கிடையில் ஹஜ் வாலண்டியர்களால் நடத்தப்பட்ட ’11th Flight’ என்ற வாட்ஸ் அப் குரூப்பில் என்னையும் இணைத்திருந்தார்கள். இதன் டி.பி.யில் புகைப்படம் இல்லை; பெயரும் இல்லை. புனைபெயர்களில் செய்தி அனுப்பினார்கள். அவர்கள் கூறியபடி 12-06-23 அன்று மதியம் 3:30 மணிக்கு சென்னை சூளையிலுள்ள ஹஜ் ஹவுஸ் சென்றபோது அங்கு பெரும் கூட்டமாக இருந்தது. அடுத்த நாள் 13ம் தேதி விமானத்திற்கான documentகளை அப்போது கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அந்த விமானத்தில் 254 ஹாஜிகள் பயணித்தோம். அங்கு இருந்த நீண்ட வரிசையில் காத்திருந்து பாஸ்போர்ட், இ-விசா உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக் கொண்டேன். ஹஜ் ஹவுஸில் ஏற்கனவே மூவர் இருந்த ஒரு அறையில் எனக்கும் தங்க இடம் கொடுத்தார்கள்.

“சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இருந்து ஹஜ் செல்பவர்களுக்கு ஹஜ் ஹவுஸில் தங்க இடம் தரப்பட மாட்டாது” என்று அறிவித்தார்கள். “அவர்கள் ஆன்லைன் விமானப் பயண உறுதிப்படுத்தலை செய்துகொண்டு தங்களின் டாக்குமென்ட்களை பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும். பின்பு அவர்கள் பயண நாளன்று நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையம் வந்து விட வேண்டும்” என்றார்கள். இதனால் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஹாஜிகள் குழப்பத்திற்கு ஆளானார்கள். ஏனெனில் ஹஜ் ஹவுஸ் வந்து தங்கி அங்கிருந்து செல்வதுதான் இதற்குமுன் நடைமுறையாக இருந்தது. ஒரு விஷயத்தை update செய்வதென்றால் அதற்குப் போதுமான அவகாசம் அளித்து பயனாளிகளுக்கு விளக்கி பின்னர் அதை செய்ய வேண்டும். திடீரென செய்தால் சிரமங்கள் ஏற்படத்தானே செய்யும்.

♣ ♣ ♣

மதுரையில் 30-05-23 அன்று ஹஜ் ஹவுஸ் சார்பில் ஹஜ் குறித்து ஒரு விளக்கக் கூட்டம் நடத்தினார்கள். அதில் பேசியவர் ஒருவரின் தவறால் மற்றவர்கள் பாதிக்கப்படலாம் என்று கூறி ஒரு தகவலைக் கூறினார்: சென்ற ஆண்டில் ஒரு பெண் ஹாஜி லிப்டுக்கு அருகில் இன்டக்சன் ஸ்டவ் (induction stove)  வைத்து சமையல் செய்துள்ளார். உடனே தீ அலாரம் (fire alaram)  ஒலிக்க ஆரம்பித்து விட்டது. போலிஸ், ஆம்புலன்ஸ், தீ அணைப்புத் துறையினர் வந்துவிட்டனர். கலெக்டர் தரத்திலுள்ள ஒரு அதிகாரி வந்தார். அப்போது அந்த கட்டிடத்தில் 230 ஹாஜிகள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் வெளியே வரச் சொன்னார்கள். வந்தவுடன் கட்டிடத்தைப் பூட்டி சீல் வைத்துவிட்டு சென்று விட்டனர். பின்பு ஒன்றரை நாள் அப்படியே இருந்தது. ஹஜ் கமிட்டியினர் பேசி சமாதானம் செய்து கட்டிட சீலை அகற்றினர்.இதுதான் அவர் கூறிய செய்தி.

ஹஜ் கமிட்டியின் வாட்ஸ் அப் குரூப்பில்  “இண்டக்சன் ஸ்டவ், எலெக்ட்ரிக் சுடுதண்ணீர் கெட்டில், எலெக்ட்ரிக் குக்கர், அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை கண்டிப்பாக கொண்டு செல்லக் கூடாது” எனக் கூறினார்கள். “இவற்றை நாங்கள் கொண்டு சென்றுள்ளோம். அதனால் எல்லாம் பிரச்னை எதுவும் வராது. எனவே கொண்டு செல்லுங்கள்” என்று ஏற்கனவே சென்று வந்த ஹாஜிகள் முந்தைய வாட்ஸ் அப் குரூப்பில் கூறினார்கள். அடுத்த குழப்பம் தொடங்கிவிட்டது.

நான் மிகுந்த தயக்கத்துடன் ஒரு எலெக்ட்ரிக் சுடுதண்ணீர் கெட்டில் கொண்டு சென்றேன். அங்கு சென்ற பின்பு கவனித்தேன். மேற்சொன்ன பொருட்களை ஹாஜிகள் கொண்டு வந்திருந்தார்கள்; பயன்படுத்தினார்கள்.

நான் மக்கா சென்றவுடன் நான் தங்கியிருந்த கட்டிடத்தில் பார்த்தேன். கட்டிடத்தின் சீலிங் போர்டுகளால் செய்யப்பட்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த அறைகள், வரவேற்பறை முதலியவை ஏ.சி. செய்யப்பட்டிருந்தன. சமையலறை, குளியலறை முதலியவற்றில் exhaust fan வைத்திருந்தார்கள். சமையலறையில் தீ அலாரம் (fire alarm) வைத்திருந்தார்கள். ஒருமுறை எங்கள் சமையலறையில் தீ அலாரம் ஒலித்தது. ஓடிச் சென்று பார்த்தபோது சமையலறை மிகவும் சூடாக இருந்தது. exhaust fan போடாமல் அங்கு சமைத்திருக்கிறார்கள். எனவே வெப்பம் அதிகமாகி அலாரம் ஒலித்துவிட்டது. அங்கு இரு பேன்கள் இருந்தன. அவற்றை ஆன் செய்து ஓடத் தொடங்கியதும் சரியாகி விட்டது.

இந்த விபரங்களின் அடிப்படையில் லிப்டுக்கு அருகில் இன்டக்சன் ஸ்டவ் வைத்து சமைத்த பெண் ஹாஜியின் விஷயத்திற்கு வருவோம். அங்கு தீ அலாரம் இருந்துள்ளது. எக்ஸ்ஹாட் பேன் இல்லை. எனவே சூடு அதிகமானவுடன் அலாரம் ஒலித்து விட்டது. இது தவறுதான். அதற்காக கட்டிடத்தில் இருந்த ஹாஜிகள் அனைவரையும் வெளியேற்றி அவர்களை ஒன்றரை நாள் வீதியில் நிறுத்துவதென்றால் என்னவொரு ஆணவம்?

முஅல்லிம்

ஹாஜிகளை கவனிக்கும் காண்டிராக்டை சவூதி அரசு ஒரு ஷெய்கிடம் கொடுத்து விடுகிறது. அதற்காக அவர் பணம் பெற்றுக் கொள்கிறார். அவரை ‘முஅல்லிம்’ என்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து அரேபியாவிற்கு வேலைக்கு வருபவரின் பாஸ்போர்ட்டை ‘ஹஃபீல்’ வாங்கி வைத்துக் கொள்வது போல ஹாஜிகளின் பாஸ்போர்ட்டை ‘முஅல்லிம்’ வாங்கிக் கொள்கிறார்.

என்னுடைய 25ஆம் சர்வீஸ் சென்டரின் முஅல்லிம் பெயர் ‘சமீர் அப்துல் ரெஹ்மான் சஹட்’ ஆகும். இவர் ஆறாயிரம் பேருக்கு பொறுப்பாளர் என்று ஒரு காதிம் அல் ஹுஜ்ஜாஜ் கூறினார். நாங்கள் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் முஅல்லிமின் ஆட்கள் எங்கள் அனைவரின் பாஸ்போர்டையும் வாங்கிக் கொண்டார்கள். பின்பு அதை நாங்கள் நாடு திரும்பும் நாளன்று மதினா விமான நிலையத்தில்தான் தந்தார்கள்.

உலகில் எந்த நாட்டிலாவது இப்படி நடக்கிறதா? ஏன் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொள்ள வேண்டும்? அது ஒரு எச்சரிக்கை. உங்களின் பிடி என்னிடம் உள்ளது. ‘நீங்கள் உங்கள் நாட்டு அரசியலையும் இங்கு பேசக் கூடாது. இந்த நாட்டு அரசியலையும் இங்கு பேசக் கூடாது’ என்பதே அந்த எச்சரிக்கை.

மதுரையில் நடந்த ஹஜ் வழிகாட்டும் நிகழ்ச்சியில் ஒரு பொறுப்பாளர் கூறினார்: “அங்கு பார்ப்பதற்கு பல்லாயிரம் கேமிராக்கள் இருப்பதுபோல கேட்பதற்கு பல்லாயிரம் மைக்ரோபோன்களும் பொருத்தப்பட்டுள்ளன. எந்த மொழியில் பேசினாலும் அவற்றை உடனுக்குடன் மொழி பெயர்த்துத் தரும் வசதியும் வைத்துள்ளார்கள். அங்கு மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. எனவே அரசியல் பேச வேண்டாம். உங்களுக்கு தீங்கு ஏற்படும்”.

முஅல்லிம் ஆற்றிய சேவை அல்லது வேலை பின்வருமாறு: ஜெட்டா விமான நிலையத்திலிருந்து அஸீஸியாவுக்கு (70 கி.மீ.) பஸ்ஸில் அழைத்துச் சென்றது. அஸீஸியாவிலிருந்து மினாவுக்கு (சுமார் 10 கி.மீ.) பஸ்ஸில் அழைத்துச் சென்றது. மினாவில் கூடாரத்தில் அடைத்து வைத்தது. உணவு, டீ வழங்கியது.

மினாவிலிருந்து அரஃபாவுக்கும் பின்னர் அங்கிருந்து முஜ்தலிஃபாவுக்கும் மெட்ரோ இரயிலில் சென்றது. அஸீஸியாவிலிருந்து மதீனாவுக்கு பஸ்ஸில் அழைத்துச் சென்றது. பின்னர் மதினாவில் நாங்கள் தங்கிய இடத்திலிருந்து விமான நிலையத்திற்கு பஸ்ஸில் அழைத்துச் சென்றது.

இதற்காக முஅல்லிம் கட்டணமாக என்னிடம் பெறப்பட்ட தொகை 7,421.85 ரியால்கள் ஆகும். ஒரு ரியால் 22.50 எனில்  இந்திய மதிப்பில் 1,66,992 ரூபாய் ஆகும். ஒரு ஹாஜியிடம் பெறப்பட்ட தொகை இவ்வளவு என்றால் 6,000 ஹாஜிகளுக்கு எவ்வளவு என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம். எனவே ஹஜ் அவர்களுக்கு கொழுத்த வருவாயை தரும் ஒரு வணிகமாக உள்ளது.

தங்குமிட நெருக்கடி

அஸீஸியா என்பது கஅபா இருக்குமிடத்திலிருந்து 8 கி.மீ. தொலைவுள்ள ஒரு நகர்புற பகுதியாகும். இங்கு பல நூற்றுக்கணக்கான ஐந்து, ஆறு மாடிக் கட்டிடங்கள் உள்ளன. இவற்றை ஹாஜிகளுக்கு வாடகைக்கு விடுகிறார்கள். கட்டிடங்களுக்கு எண்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

நான் தங்கியிருந்த கட்டிடம் ஆறு மாடிகளைக் கொண்டது. இதன் எண் 483. இதில் 600க்கும் மேற்பட்ட ஹாஜிகள் தங்க வைக்கப்பட்டனர். அதில் பாதிபேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். நான் அங்கு தங்கியிருந்த காலத்தில் அஸீஸியாவில் இந்தியா, பாகிஸ்தான் நாட்டு ஹாஜிகள் தாங்கும் கட்டிடங்களை மட்டுமே பார்த்தேன். கட்டிடத்தின் முகப்பில் அந்த நாட்டின் தேசிய கொடி இருக்கும். மற்ற நாட்டு ஹாஜிகள் தங்கும் கட்டிடங்கள் எதையும் பார்க்க முடியவில்லை.

நான் இருந்த கட்டிடம் மற்ற தமிழ்நாட்டு ஹாஜிகள் தங்கும் கட்டிடங்களில் இருந்து அரை கி.மீ. தள்ளி இருந்தது. இதனால் சக ஹாஜிகளுடன் பரஸ்பர உதவி, தொடர்புகள் இல்லாமல் போய்விட்டது. தமிழ்நாட்டிலிருந்து 4,500 ஹாஜிகள் ஹஜ் செய்ய வருகிறார்கள். அவர்கள் ஒரு இடத்தில் சேகரமாக இருந்தால் அனுசரணையாக இருக்கும் என்பதுகூட ஹஜ் கமிட்டியினருக்கு தெரியாதா?

என்னுடைய அறைக் கதவில் படுக்கைகளின் எண்ணிக்கை 4 (No. of beds 4) என்று தகட்டில் பொறித்திருந்தனர். எனவே அது நான்கு பேர்கள் தங்குவதற்கான அரை. அதற்குக் கீழே ஒரு தாளில் படுக்கைகளின் எண்ணிக்கை 7 (No. of Beds 7) என ஹஜ் கமிட்டியினர் ஒட்டியிருந்தனர். அதாவது நான்கு பேர்களுக்கான அறையில் மேலும் 3 கட்டில்களைப் போட்டு விட்டதால் அது ஏழு பேர் கொண்டதாகி விட்டது.

ஹஜ் கமிட்டியின் ஒரு விண்ணப்பத்தில் நான்கு நபர்கள்தாம் விண்ணப்பிக்க முடியும். ஆனால் ஆறு, ஏழு ஹாஜிகளை ஒரு அறையில் தங்க வைத்தனர். என்னுடைய அறையில் என்னையும் சேர்த்து எழுவர் தங்கினோம். நாங்கள் அனைவரும் ஆண்கள். தனித்தனியாக விண்ணப்பித்தவர்கள்.

எனக்குப் பக்கத்து அறையில் 6 ஹாஜிகள் தங்க வைக்கப்பட்டனர். மற்றொரு அறையில் 6 ஹாஜிகள் தங்க வைக்கப்பட்டனர். முன்சொன்ன அறுவரில் தனித்தனியாக வந்த 3 கணவன் மனைவி ஆவர். அடுத்ததிலும் அப்படியே தனித்தனியே வந்த மூன்று கணவன் மனைவி ஆவர். அவையும் நான்கு பேர்களுக்கான அறைகள்தாம். அவர்கள் சுவரில் ஓட்ட வைக்கும் ஒரு கிளிப்பை இரு புறமும் ஓட்ட வைத்து அதில் ஒரு சேலையை தொங்கவிட்டு அங்கு தங்கினார்கள். சேலையும் கனமானதாக இருக்கக் கூடாது. விழுந்துவிடும். அவர்கள் தங்கள் பிரைவசியை பாதுகாத்துக் கொள்ள எவ்வளவு நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்திருக்கும்?

இந்த அறைக்காக என்னிடம் பெறப்பட்ட தொகை 2,250 ரியால்கள். இந்த அறையில் எழுவர் ஒருமாதம் தங்கியிருந்தோம். எனில் 15,750 ரியால்கள் ஆகின்றன. ஒரு ரியாலின் இந்திய மதிப்பு ரூ. 22.50. எனில் இந்த அறையின் ஒரு மாத வாடகை ரூ. 3,54,375 எங்களிடம் பெறப்பட்டது.

நான் ஒரு நண்பரை பார்க்க கட்டிட எண் 467க்கு சென்றேன். அந்த அறையின் அளவே 250சதுர அடிதான் இருந்தது. அதில் ஆறு படுக்கையைப் போட்டு ஆறு ஹாஜிகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆறு பேர் என்றால் தனித்தனியான மூன்று குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவிகள். அங்கு ஸ்கிரீன் கட்டுவதற்கு கூட அமைப்பில்லை.

மற்றொரு அறையில் ஐந்து ஆண்கள் தங்க வைக்கப்பட்டனர். இப்போது நான் என்னுடைய கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் உள்ள நான்கு அறைகளை குறித்து நான் கூறியிருக்கிறேன். இந்த 25 பேர்களுக்கும் ஒரு சமையலறை கொடுக்கப்பட்டது.

உணவுப் பிரச்சனை

ஹஜ் செய்யப் போகிறோம் என்று உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் நான் பயணித்தேன். அந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் அஸீஸியாவை சென்றடைந்ததும் மறைந்து உணவுக்கான போராட்டம் தொடங்கிவிட்டது.

நாங்கள் 13-06-23 அன்று இரவு அந்நாட்டு நேரம் 8.30 மணிக்கு அஸீஸியாவை அடைந்தோம். இரவு உணவுக்காக முஅல்லிமின் ஆட்கள் ஒரு சிக்கன் பிரியாணி பொட்டலத்தைக் கொடுத்தனர். அடுத்த நாள் காலை டீ குடிக்க வேண்டும். சாப்பிட வேண்டும்.

எங்கள் எழுவரில் ஒருவரான அப்துல் மாலிக் என்ற ஹாஜி ஒரு எலக்ட்ரிக் குக்கர் கொண்டு வந்திருந்தார். அவருக்குத் தேவையான பொருட்கள் கொண்டு வந்திருந்தார். அறையில் இருந்த மற்ற சிலர் அரிசி, பருப்பு, வெங்காயம், மசாலாப் பொடிகள் கொண்டு வந்திருந்தனர். நாம் அனைவரும் ஒன்றாக சமைத்துச் சாப்பிடுவோம் என்று அப்துல் மாலிக் கூறியதை ஒருவர் தவிர மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நடைமுறை சிக்கல்கள் என்ன?

நாங்கள் இப்போது உம்ராவுக்கான இஹ்ராம் நிலையில் இருந்தோம். 14-06-23 காலை ஃபஜ்ர் தொழுதபின் டீ போட்டு முடித்துவிட்டு காலை ஒரு சேமியாவும், மதியத்திற்கு ஒரு லெமன் சாதமும் செய்து காலையில் சாப்பிட்டு விட்டு மதிய உணவை எடுத்துக்கொண்டு கஅபாவிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் வேலைகள் முடிய பன்னிரெண்டு மணியானது. ‘ஒரு சேமியாவும் லெமன் சாதமும் செய்வதற்கு நான்கு மணி நேரமா’ என்று கேட்டால். ஆம். நான்கு மணி நேரம்தான்.

முதலாவது பிரச்சனை ஒருவருக்குத்தான் சமையல் தெரிந்திருந்தது. அறுவருக்குத் தேவையான அளவு சமையல் செய்ய பாத்திரங்கள் இல்லை. மூன்றாவது கொண்டு வந்திருந்த பொருட்கள் அனைத்தையும் பிரித்து அடுக்குவதற்கு போதிய இட வசதியில்லை.

நான்காவது நாங்கள் சமையல் செய்து கொண்டிருக்கும்போது பெண்கள் வந்தால் அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டியிருந்தது. பெண்கள் உள்ளே சமையல் செய்து கொண்டிருந்தால் அவர்கள் வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தப் போராட்டம் வெவ்வேறு வடிவில் கடைசி நாள் வரை நீடித்தது.

இதனால் ஒருவேளை குழம்பு வைத்து இரண்டு நாட்களுக்கு வைத்துக் கொள்வது. காலையில் சாப்பிட்டால் மதியம் இல்லை. காலையும் மதியமும் சாப்பிட்டால் இரவு சாப்பிட முடியாமல் ஆவது. ஒரு ஆப்பிளையும் சில பிஸ்கட்டுகளையும் சாப்பிட்டுக் கொள்வது. இப்படியே கடைசி நாள் வரை சென்றது.

கடைசி சில நாட்களில் கேரளா வாலண்டியர்கள் அரிசி கஞ்சி கொண்டு வந்து கொடுத்தார்கள். நம்மூரில் காய்ச்சல் வந்தவர்களுக்கு கொடுக்கும் கஞ்சி. அவர்கள் கொண்டு வந்து கொடுப்பது தெரிந்த அனைவரும் வந்து வாங்கிச் சென்றார்கள். செலவு மிச்சம் என்பதற்காக அல்ல. சமையல் செய்யும் போராட்டத்தில் இருந்து ஒருவேளையாவது விடுமுறை கிடைத்ததே என்பதுதான். எங்களுக்கு மூன்று இரவுகள் அந்தக் கஞ்சிதான் உணவு.

ஆணோ, பெண்ணோ சமைக்கத் தெரிந்தவரோ, தெரியாதவரோ யாரும் இந்தப் போராட்டத்திலிருந்து யாரும் தப்பியிருக்க மாட்டார்கள். அற்ப விஷயத்திற்கெல்லாம் பிறரைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. பாத்திரங்களை ஒருவருக்கொருவர் கடன் வாங்கிக்கொண்டாலும் அவற்றை கழுவி உடனே நம் அறைக்கு எடுத்து வந்து விட வேண்டும். ஏனென்றால் மற்றவர்கள் புழங்க இடம் வேண்டும். ‘சமையலறையில் பெண்கள் இருக்கிறார்களே’ என்று தட்டுகளை கழிவறையில் கழுவ வேண்டியிருந்தது.

தனியார் கேட்டரிங் சர்வீஸ்கள் குறித்து வாட்ஸ்அப்பில் விளம்பரங்கள் வந்தன. அதில் அவர்கள் இருபத்தி இரண்டு நாட்களுக்கான ஒரு மெனு கொடுத்து, அதில் இந்த இந்த உணவுகளைக் கொண்டு வந்துக் கொடுப்போம். அதற்கு நீங்கள் இவ்வளவு பணம் செலுத்த வேண்டி இருக்கும் என்று கூறியிருந்தார்கள். அது  சராசரியாக ஒரு நாளைக்கு ரூ. 750 ஆனது. ஆனால் அவர்கள் அறிமுகமில்லாதவர்கள். ஆகவே அவர்களிடம் மொத்தமாக பணத்தைக் கொடுக்கவியலாது. ஒவ்வொரு வேளையும் போன் செய்து வாங்குவதும் நடைமுறையில் ஒத்து வரவில்லை.

அந்த கேட்டரிங் சர்வீஸ்களில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு ஹாஜிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு நேரத்திற்கு உணவுகளை ஏற்பாடு செய்ய கொடுக்க முடியும். மொத்தமாக எனும்போது செலவும் குறையும். அல்லது ஹஜ் காலத்தில் தமிழ்நாட்டு ஹாஜிகள் தங்கும் இடத்தில் தமிழ்நாட்டு உணவகங்களை தற்காலிகமாக திறக்கச் செய்யலாம். ஹாஜிகளின் நேரங்களைத் தின்றுவிடும் இந்த உணவுப் போராட்டத்திலிருந்து ஹஜ் கமிட்டி ஏன் அவர்களை விடுவிக்கவில்லை?

இதுநடைமுறை சாத்தியமானதுதான் என்பதை பாகிஸ்தான் ஹாஜிகள் விஷயத்தில் தெரிந்து கொண்டேன். அவர்களுக்கான உணவு ஒவ்வொரு வேளையும் வேன்களில் வந்து இறங்கின. பொட்டலங்களாக அல்ல. மூடி போட்ட எவர்சில்வர் அண்டாக்களில் ஃபிரெஷ் ஆக வந்திறங்கின. அவர்களுக்கு அவர்கள் கட்டிடத்தின் வரவேற்பறையில் டைனிங் டேபிள்கள் போடப்பட்டு உணவுகள் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன.

எங்கள் கட்டிடத்திலும் பிரித்து மாட்டும் பிளாஸ்டிக் டேபிள்கள், சேர்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு சீந்துவாரின்றி இருந்தன. அந்த ஹாஜிகள் விருந்தினர்கள் போல உபசரிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நாங்கள் சமையலறையில் அல்லாடிக் கொண்டிருந்தோம்.

மதினாவிலும்…

நாங்கள் அங்கிருந்த 41 நாட்களில் கடைசி 8 நாட்கள் மதினாவில் இருந்தோம். இங்கு நாங்கள் தங்க வைக்கப்பட்ட கட்டிடம் மிகச் சாதாரணமான இருந்தது. நடைமுறை வழக்கில் சொல்வதென்றால் ‘டஞ்சன்’ ஆக இருந்தது. இக்கட்டிடம் நபிப் பள்ளிவாசலில் (மஸ்ஜிதுன் நபவி) இருந்து 2 கி.மீ. தொலைவில் இருந்தது. எங்களை இங்கு அழைத்து வந்தபோது, “இவ்வளவு தொலைவில் இருந்தால் நாங்கள் எப்படி ஐவேளை தொழச் செல்வது. எனவே வேறு இடம் மாற்றிக் கொடுங்கள்” என்று கேட்டோம். பஸ்ஸிலிருந்து இறங்க மறுத்து கடுமையாக ஆட்சேபித்தோம். ஆனால் பயனில்லை. எனவே மதீனாவிலும் ஒவ்வொரு நாளும் 15 கி.மீ.க்கு மேல் நடக்க வேண்டியிருந்தது.

மக்காவில் நாங்கள் இருந்த அறை 400 சதுர அடிகள் கொண்டது. இங்கு 250 சதுர அடிதான். இங்கும் அதே எழுவர் தங்க வைக்கப்பட்டோம். இங்கு எல்லா அறைகளிலும் எழுவர் தங்க வைக்கப்பட்டனர். இங்கு சமையலறை கிடையாது. கழிவறை சில அறைகளில் இருந்தது. சிலவற்றில் இரண்டு அறைகளுக்கு ஓன்று என இருந்தது. அதன் அளவு 15 அடிதான். அறைகள் சிறியதாக இருந்ததால் திரை போடவியலாது. வரவேற்பறை அஸீஸியாவில் இருந்ததில் மூன்றில் ஒரு பங்கு தான் இருந்தது. இந்தக் கட்டிடத்தில் இருந்த லிப்ட் மிகப் பழையது. அது திறந்த நிலையிலேயே மேலே சென்றது; கீழே வந்தது.

நாங்கள் எழுவர் 8 நாட்கள் தங்கியிருந்த இந்த அறைக்கு தலா 750 ரியால் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒரு ரியால் ரூ. 22.50 எனில் எழுவருக்கு 5,250 ரியால்கள் ஆனது. எனவே அந்த அறையில் 8 நாட்கள் நாங்கள் தங்கியதற்கு கொடுத்த கட்டணம் இந்திய மதிப்பில் ரூ. 1,18,125 ஆகும்.

சமையலறை இல்லாததால் வெளியே சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. காலையில் பரோட்டா, இங்கு போடப்படுவதை விட சற்று பெரியதாக இருக்கும். அதற்கு சால்னா தனியாக வாங்க வேண்டும். எனவே பரோட்டாவை மட்டும் வாங்கி டீயில் முக்கிச் சாப்பிட்டார்கள்.

மதியம் வெயிலில் அலைந்து திரிந்து ஒரு பங்களாதேஷி கடையை அடைந்தோம். அது நபிப் பள்ளிவாசலில் இருந்து 1 கி. மீ. தொலைவில் இருந்தது. அங்கு ஒரு தட்டில் முக்கால் வாசி வெந்த பாசுமதி சோறும், கொஞ்சம் காய்கறி கூட்டும் (சப்ஜி), இரசமும் (தால்) கொடுத்தார்கள். இது 8 ரியால் ஆகும். அதற்கு மேல் தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும். அந்தக் கடைக்கு முதல்நாள் நாங்கள் சென்றபோது டேபிள்கள் காலியாகக் கிடந்தன. அந்தக் கடைகாரர் வெளியே நின்று கொண்டு மக்களை கேன்வாஸ் செய்து கொண்டிருந்தார்.

அடுத்த சில நாட்களில் இடம் பிடிக்க நிற்க வேண்டியிருந்தது. கூட்டம் வந்ததும் விலையை கூட்டி விட்டார்கள். முதல் இரண்டு நாள் 2 ரியால் ஆக இருந்த முட்டை விலையை 5 ரியால் ஆக்கி விட்டார்கள். ஒருநாள் இரவு சாப்பிடும்போது சோறு, இரசம், சப்ஜி இந்த மூன்றில் “சப்ஜி இல்லை” என்றார்கள். பக்கத்தில் ஒருவர் வெண்டக்காய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். “சப்ஜி இல்லையென்றால் இதைக் கொடுங்கள்” என்றார் எங்களில் ஒருவர். ஒரு சிறிய தட்டில் கொண்டு வந்து கொடுத்தார்கள். சாப்பிட்ட பின்பு அதற்கு 10 ரியால் வாங்கினார்கள். அங்கு ஹோட்டல்களில் விலைப் பட்டியல் எதுவும் இல்லை.

♣ ♣ ♣ ♣ ♣

எனது ஹஜ் (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *