மதமும் அறிவியலும் – டாக்டர் எம்.ஏ.எம்.சுக்ரி
Posted onஅறிவியலும், தொழில்நுட்பமும் மாபெரும் வளர்ச்சியைக் கண்டு மனித வாழ்வில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள இன்றைய காலகட்டம் அறிவியல் யுகம் என அழைக்கப்படுகின்றது. பகுத்தறிவுக் கும், சுதந்திரமான சிந்தனைக்கும், ஆய்வு முயற்சிகளுக்கும் அறிவியல் வளர்ச்சி களம் அமைத்துக் கொடுத்துள்ள நவீன காலப் பிரிவில் நம்பிக்கை, விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையப்பெற்ற மதத்தின் நிலைபற்றிய வினாக்கள் அவ்வப்போது எழுப்பப்படுவதைப் பார்க்கின்றோம். மனித வரலாற்றில் மத நம்பிக்கைகள் செல்வாக்குச் செலுத்திய காலம் மறைந்து, அறிவியல் ஆதிக்கம் செலுத்தும் புத்துலகம் தோன்றிவிட்டதாக ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
மதத்தினதும், அறிவியலினதும் களங்களையும், பரிமாணங்களையும் தெளிவுபடுத்தி ஐரோப்பிய வரலாற்றில் மத்திய காலப்பிரிவில் மதத்திற்கும், அறிவியலுக் குமிடையில் நடைபெற்ற போராட்டத்தின் வரலாற்றுப்பின்னணியை விளக்கி, மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றிய இஸ்லாமிய நோக்கை இந்நூல் விளக்குகின்றது. சிந்தனைத் தெளிவை வேண்டி நிற்கின்ற ஒரு தொனிப்பொருள் பற்றிய இந்நூல் வாசகர்களின் அறிவுக்கு விருந்தாக அமையும் என்ற நோக்கில் இதனைச் சமர்ப்பிக்கின்றேன்.
– டாக்டர் எம்.ஏ.எம். சுக்ரி