சிரியாவின் நிலை (பகுதி 4) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்
Posted on♣ ♣ ♣ ♣ ♣
YouTube link: The Syrian situation part 4
உரையாற்றிய நாள்: 21-12-24
மேலே படத்தில்: ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) தலைவர் அபு முகமது அல் ஜொலானியை ஐ.நா. சிறப்புத் தூதர் கெய்ர் பெடர்சன் சந்தித்தார். புகைப்பட உதவி: AFP
♣ ♣ ♣ ♣ ♣
உலகளாவிய விவகாரங்கள், குறிப்பாக முஸ்லிம் உலகில் நடக்கும் விஷயங்கள், அதிலும் குறிப்பாக சிரியா நடப்புகள் குறித்த கிரசன்ட் இன்டெர்நேஷனல் – ICIT கண்ணோட்டத்தின் மற்றொரு அத்தியாயத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.
அபூ முஹம்மது அல் ஜொலானி சி.ஐ.ஏ. மற்றும் மொசாதின் ஏஜென்ட்தானா என்று இன்னும் சந்தேகத்தில் இருக்கும் முஸ்லிம்கள் இருந்தால், அவர்கள் பின்வருவதை பரிசீலிக்க வேண்டும் என்று வேண்டுகிறோம். தீவிரவாத பட்டியலில் இருந்து ஜொலானியை நீக்கிவிட்டதாக டிசம்பர் 20 அன்று அமெரிக்கா அறிவித்தது. தங்கள் கோட்டையான இட்லிப் பகுதியிலிருந்து, நவம்பர் 27 அன்று வெடித்துக் கிளம்பிய ஆயுதம் தாங்கிய இந்த குண்டர்கள், டமாஸ்கசை தாக்கிய இரண்டு வாரங்களில் இந்த அறிவிப்பு வெளியானது.
டிசம்பர் 6 அன்று, அலெப்போவில் ஜொலானியுடன் சி.என்.என். நடத்திய நேர்காணலுக்குப் பிறகு, “அவர் மிதவாதியாக மாறிவிட்டார்” என்று அது கூறியது. மனித உறுப்புகளை உண்டு செரிமானப் பிரச்சனை ஏற்பட்டதால் அதை உண்பதை நிறுத்திவிட்டதாக ஜொலானி சொன்னார் என்று நல்லவேளை, சி.என்.என்.சொல்லவில்லை!
ஜொலானி தனது தலைப்பாகையை தூக்கி எறிந்துவிட்டு, தாடியை குறைத்து விசித்திரமாக, சியோனிசத்தின் நிறுவனரான தியோடர் ஹெர்ஸல் போல தோற்றமளிப்பதுதான் அவர் மிதவாதியாகிவிட்டார் என்பதற்கான ஒரு அடையாளம். சி.என்.என். நேர்காணலுக்குப் பிறகு, ஜொலானி உண்மையில் மிதவாதியாக மாறிவிட்டார் என்பதை உறுதி செய்வதற்கு அவருடைய செயல்பாடுகளை காண விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். இரண்டே வாரங்களில் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கு, ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் (HTS) அமெரிக்காவை திருப்திபடுத்தும் விதத்தில் போதுமான அளவு செயல்பட்டிருக்க வேண்டும்.
ஜொலானியின் கூற்றுகள் சிலவற்றை நினைவு படுத்துவோம். பஷார் அல் அசதின் அரசை கவிழ்த்துவிட்டதாகவும், சிரியாவில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாஹ்வின் இருப்பை நீக்கிவிட்டதாகவும் அவர் கூறினார். இது அமெரிக்காவை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது என்பது வெளிப்படையானது. இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுப்பதற்கு சிரியா பயன்படுத்தப்படாது என்றும் அவர் அறிவித்தார். மேலும் சிரியாவின் ராணுவத் தளவாடங்கள், அதன் நிலையிருப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் குண்டு வீசிய போதிலும், சிரியாவின் பெரும் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்யும் போதிலும் இஸ்ரேலுக்கு எதிராக போரிடப் போவதில்லை என்று சபதம் செய்தார்.
அல் ஜொலானி பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது, அப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மற்றவர்களுடன் மாறுபட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.பயங்கரவாதச் செயல்கள் எதிலும் ஈடுபடாத போதிலும் தாலிபான் தலைவர்கள் அமெரிக்க பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை.அவர்கள் செய்த குற்றம் என்ன? அமெரிக்காவை வீழ்த்தி அதன் ராணுவத்தை ஆஃப்கானிஸ்தானிலிருந்து 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ம் தேதி விரட்டியடித்ததுதான் அவர்கள் செய்த குற்றம்.
இவ்விஷயத்தில் நெல்சன் மண்டேலாவுடன் இன்னும் குறிப்பிடத்தக்க மாறுபாடு தெரிகிறது. அவர் 1988-ல் அமெரிக்க பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டார். 1994-ல் தென் ஆப்ரிக்காவின் அதிபர் ஆன பிறகும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பெற்ற பின்னரும் கூட அவரது பெயர் அமெரிக்க பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்து நீடித்தது. 2008-ல் தான் அதில் இருந்து அவருடைய பெயர் நீக்கப்பட்டது. மண்டேலாவை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்குவதற்கு 20 வருடங்கள் ஆனது. ஆனால் வெறும் 14 நாட்களிலேயே அல் ஜொலானி அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அல் ஜொலானி மண்டேலா அல்லவே. ஜொலானி ஒரு அடியாள். ஒரு சியோனிச ரவுடி.
மேற்கத்திய ஊடகங்களின் பிரச்சாரங்களுக்கு எப்படி சில பிரிவினைவாத முஸ்லிம்கள் இரையாகின்றனர் என்பதையும் நாம் பேசியாக வேண்டும். காஸா அல்லது பாலஸ்தீன் விஷயத்தில் அவர்கள் சி.என்.என்., பி.பி.சி. போன்ற பிற ஊடகங்களை நம்புவதில்லை. அது நல்லதே. ஆனால் சிரியா விஷயத்தில் அவற்றின் உளறல்களை அப்படியே நம்பிவிடுகின்றனர். பஷார் அல் அசத் அரசு செய்த குற்றங்களை நாம் தற்காக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆனால் போலிச் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இரண்டு நிகழ்வுகள் இதை முன்னிலைப் படுத்திக் காட்டுகின்றன.
முதலாவது, கடந்த வாரம் மேற்கத்திய ஊடகங்கள் 1,00,000 சடலங்கள் புதைக்கப்பட்ட மிக பெரிய சவக்குழியை கண்டுப்பிடித்ததாக பேசின. இந்த எண்ணிக்கையில் திருப்தி அடையாமல் அதை 1,50,000-ஆக உயர்த்தின. அட்டகாசமான இந்த எண்ணிக்கையை அவர்கள் எப்படி கண்டடைந்தார்கள்?! இது, ஐ.நா. வின் தலைமை ஆயுத ஆய்வாளர் மறுத்த போதிலும், சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தார் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் கூறியதுடன் ஒப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 2002-ல் ஜுடித் மில்லர் சதாம் உசேனின் பேரழிவு ஆயதங்கள் பற்றி நியூயார்க் டைம்ஸில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டார். அமெரிக்காவின் மிகத் தீய அரசியல்வாதிகளில் ஒருவரான டிக் செனாய் இப்பொய்களை மில்லருக்கு புகட்டினார். பின்னாட்களில் இது பொய் என்று அம்பலமானாலும் அவர்களுடைய நோக்கம் பூர்த்தி ஆனது.
இரண்டாவது, சிரியாவின் செட்னயா சிறையில் அரங்கேற்றப்பட்ட மீட்பு நடவடிக்கை. டிசம்பர் 13-ம் தேதி, சி.என்.என்.-ன் க்ளாரிசா வார்டு கொடுமைகளுக்கு பேர் போன அச்சிறையில் ஒரு கைதியை தற்செயலாகக் கண்டதாகச் சொன்னார். அவர் சிறை அறையில் கம்பளி போர்த்திய ஒருவரை கண்டதாகவும், அவர் 3 மாதங்களாக இருட்டறையிலேயே அடைக்கப்பட்டிருந்ததாகவும், பல நாட்களாக உணவு தண்ணீர் வழங்கப்படாமல் இருந்ததாகவும் தன்னிடம் சொன்னதாகக் கூறினார்.அந்த நபரின் பெயர் அஹ்மது கர்பால் என்றும் அவர் ஹும்ஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு கிளர்ச்சிப் போராளி என்றும் வார்டு கூறினார். ஆனால் இது எல்லாமே பொய்.
ஹும்ஸ் பகுதி மக்கள் அவரை துரிதமாக அடையாளம் கண்டனர். அவருடைய உண்மையான பெயர் சலாமா முஹம்மது சலாமா என்று தெரிய வந்தது. அவர் சிரிய விமானப்படையின் உளவுத்துறை அமைப்பின் இடைநிலை அதிகாரி என்பதை உண்மை கண்டறியும் குழு வெளிப்படுத்தியது. அவர் ஊழல் குற்றச்சாட்டிற்காக அசத் அரசால் சிறைபிடிக்கப்பட்டார்.அவர் பட்டினி கிடந்ததாகத் தெரியவில்லை. உண்மையில் அவர் முன்தள்ளிய வயிறுடன் பெரிய உருவமாக நன்றாக உணவருந்தியவர் போல தெரிந்தார். அவர் சூரிய ஒளியை பார்க்கும்போது, கண்களை சிமிட்டக்கூடவில்லை.
க்ளாரிசா வார்டு தன் டிவிட்டர் பக்கத்தில், தனது 20 வருட பத்திரிக்கையாளர் வாழ்வில் இப்படி ஒரு அனுபவத்தை பார்த்ததேயில்லை என்று கூட எழுதினார். நிச்சயமாக அதை நாம் நம்புகிறோம். ஏனெனில் அவருடைய மோசடி விரைவில் அம்பலமானது. இவை அனைத்தும் போலி என்றானது.
இத்தகைய பொய் பிரச்சாரங்களுக்கு முஸ்லிம்கள் எத்தனை முறை தான் தொடர்ந்து பலியாக வேண்டும்? நாம் ஒவ்வொருவரும் பின்வரும் சாதாரண கேள்வியை நம்மை நாமே கேட்க வேண்டும். முஸ்லிம்களின் ஏஜன்டுகள் முன்னணியில் இருக்கும் போதிலும் சியோனிச ஆக்கிரமிப்பில் இருக்கும் சிரியா முஸ்லிம்களுக்கு நன்மை பயக்குமா?
ஈராக் மற்றும் லிபியாவில் நடந்த அவலங்கள் மற்றும் பயங்கரங்களில் இருந்து நாம் பாடம் கற்க மாட்டோமா? தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றி சிந்திக்க முஸ்லிம்களுக்கு விருப்பமில்லையா?இந்த கேள்விகளை நாம் தொடர்ந்து கருத்தில் கொள்வதும், மேற்கத்திய ஊடகங்களும் மேற்கத்திய அரசுகளும் நமக்குச் செய்வதை கேள்விக்கு உட்படுத்துவதும் முக்கியமானதாகும்.
♣ ♣ ♣ ♣ ♣