பள்ளிவாசலில் பெண்கள் – நெவின் ரேடா


இந்த ஆய்வுக் கட்டுரை கி.பி.610–925 வரை பெண்களுக்குப் பள்ளிவாசல் நுழைவுரிமை பகுதியாகவோ, முழுமையாகவோ கிடைத்ததைப் பற்றி விவாதிக்கிறது. அக்காலகட்டம் இரண்டு காலப்பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. முதலாவது, 610–34 வரை, அதாவது இறைத்தூதர் மக்காவிலும் மதீனாவிலும் தீவிரமாக இயங்கிய காலம். இரண்டாவது, 634–925 வரை. அதாவது உமரின் ஆட்சியில் தொடங்கி, ஹதீஸ் இலக்கியம் எழுதப்பட்டு, நன்கறியப்பட்ட தொகுப்புகளாக வேரூன்றிவிட்ட வரை நீடிக்கும் காலம்.
இவ்விரு காலப்பிரிவு குறித்தும் இருவகைச் சான்றுகள் ஆராயப்படுகின்றன. ஒன்று ஸ்தூலத் தடயங்கள். மற்றது, நூல் ஆவணங்கள். ஸ்தூலத் தடயங்களில் பல்வேறு பள்ளிவாசல்களின் கட்டிட அமைப்பு அடங்கும். அவற்றில் தடுப்புச் சுவர்களோ, தனித்தனி நுழைவாயில்களோ இருப்பதும் இல்லாமலிருப்பதும் முக்கியத் தடயங்களாக அமையலாம். நூல் ஆவணங்களுள் முக்கியமாக குர்ஆன், ஹதீஸ் தொகுப்புகள் அடங்கும்.
குர்ஆன், ஒரு முதல்நிலை ஆவணமாக முதலாம் காலகட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில் இரண்டாம் கால கட்டத்திற்கான முதல்நிலை ஆவணமாகப் பயன்படுத்தப்படுவது ஹதீஸ் தொகுப்புகள். இந்தத் தொகுப்புகள், நபியவர்களைப் பற்றிய தகவலாதாரமாகப் பயன்படுத்தப்படுவதைவிட, இறைத்தூதரின் மறைவிற்குப்பின் முஸ்லிம் சமூகத்தில் நிலவிய பல்வேறு போக்குகள், திசைகளைப் பிரித்தறிந்து கொள்வதற்கே இங்கு பயன்படுத்தப்படுகின்றன. இது நம்பகத்தன்மை குறித்த பிரச்சனைகளைத் தவிர்க்கிறது. அதே வேளையில், ஹதீஸ் தொகுப்புகளின் பெரும்பகுதி நம்பகமானதாக இருக்கலாம் என்பதை மறுக்கவியலாது.
முதலாம் காலகட்டத்திற்குக் கிடைக்கும் முதல்நிலை ஆதாரங்களைப் பார்க்கையில், பால்வேற்றுமை பற்றிய சான்றுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, ஆதாரங்களெல்லாம் பெண்கள் பள்ளியில் முழுமையாகப் பங்கெடுத்தனர் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. இரண்டாம் காலப்பிரிவிலோ மூவகைப் போக்குகள் தென்படுகின்றன: பால்வேற்றுமைக்கு ஆதரவான போக்கு, பால்வேற்றுமையை எதிர்க்கும் போக்கு மற்றும் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை முற்றிலும் தடைசெய்ய முற்பட்ட போக்கு.