அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? (பாகம் 3) – டாக்டர் பர்வேஸ் ஷாஃபி


♦ ♦ ♦ ♦ ♦
Acquiring political power: on whose terms and conditions? (Part 2) – Pervez Shafi, Crecent International, Shawwal 14, 1433
பர்வேஸ் ஷாஃபி (சிறப்புக் கட்டுரை, கிரசென்ட் இன்டர்நேஷனல் [ஆங்.], தொகுதி 41, எண் 7, ஷவ்வால் 1433)
தன் கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் டாக்டர் பர்வேஸ் ஷாஃபி, சர்வாதிகார மற்றும் எதேச்சதிகார பின்புலத்திலிருந்து இஸ்லாமிய அரசியல் சிந்தனை விடுபடுவதை காலனித்துவமும் நவகாலனித்துவமும் எவ்வாறு தடுத்தன என்பதை ஆய்வு செய்கிறார்.
மேலே உள்ள படம் எகிப்தில் ஹோஸ்னி முபாரக் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் போது எடுக்கப்பட்டதாகும் (மொழிபெயர்ப்பாளர்).
♦ ♦ ♦ ♦ ♦
ஐரோப்பியர்கள் முஸ்லிம் சமூகத்தைத் துண்டாடுதல்
ஏற்கனவே பலவீனமாகி நொறுங்கிக் கொண்டிருந்த கருத்தியலால் குழப்பத்திலிருந்த அரசியல் கட்டமைப்பை வாய்ப்பாக்கி, முஸ்லிம் உலகின் வளங்களைச் சுரண்டுவதற்காக 17ஆம் நூற்றாண்டு வாக்கில் ஐரோப்பியக் காலனித்துவவாதிகள் அவர்களின் உலகத்தை அடைந்த போது முஸ்லிம் வரலாற்றின் இரண்டாம் கட்டம் துவங்கியது. அப்போது முஸ்லிம்களின் அரசியல் திறன் சகல கோணங்களையும் வருங்கால விளைவுகளையும் நுணுகியுணரும் திறன்படைத்ததாக இருக்கவில்லை; அவர்களின் இராணுவமோ சீர்குலைந்து பிளவுபட்டுக் கிடந்ததுடன், அதிக விலை தருவோருக்கே விசுவாசம் என்ற நிலையில் இருந்தது. அங்கு அறிவியல், பொருளாதார மற்றும் தொழிற்துறை உட்கட்டமைப்புகள் என்று எதுவும் இருக்கவில்லை. இவ்வாறு முஸ்லிம்கள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கையில், ஐரோப்பியர்கள் ஏறுமுகத்தில் இருந்தனர். ஒரு உக்கிரமான சண்டைக்குப் பிறகே ஐரோப்பியக் காலனித்துவவாதிகள் முஸ்லிம் உலகைக் கைப்பற்றினர் என்று கூற முடியாது. மாறாக, கொள்ளையர் போல் வந்த ஐரோப்பியர்கள் முஸ்லிம்களைச் சூறையாடிய போது, சிதைவுண்டு வீழ்ச்சிப் பாதையில் இருந்த முஸ்லிம்களுக்கு அது குறித்த தன்னுணர்வு கூட இருக்கவில்லை என்றே கூறவேண்டும்.
முதற் கட்டத்திற்கும் இரண்டாம் கட்டத்திற்கும் இடையில் ஒரு பண்புசார் வேறுபாடு இருந்தது. முதற் கட்டத்தைப் பொறுத்தவரை, வெகுமக்கள் நேரடியாக அரசியல் மற்றும் அரசாங்க விவகாரங்களில் ஆட்சியாளர்களைச் சவாலுக்கு உள்ளாக்காதவரை அவர்கள் தம் போக்கில் விடப்பட்டனர்; இவையல்லாத மற்ற விஷயங்களில் அவர்களின் படைப்பூக்கத்திறன் வளர்ந்து செழிக்க அனுமதிக்கப்பட்டது. எனினும் முந்தைய மன்னர்களைப் போலவே ஐரோப்பியர்களும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டல் குறித்த அச்சத்திலேயே இருந்தனர். உறங்கிக் கொண்டிருக்கும் வெகுமக்கள் விழித்துக் கொண்டால், தமது சுரண்டல் முடிவுக்கு வந்துவிடும் என்பதை அவர்கள் பூரணமாக அறிந்திருந்தனர். எனவே, அவர்கள் மன்னராட்சியைக் காட்டிலும் ஒருபடி மேலே சென்றனர். அம்மன்னர்களாவது முஸ்லிம் சமூகத்தை சமூக ரீதியில் வலிமையான, ஒன்றுபட்ட ஓர் ஒற்றை அமைப்பாகவே விட்டுவைத்திருந்தனர்; ஆனால் ஐரோப்பியர்களோ சமூகத்தை நிரந்தரமாக ஊனப்படுத்தும் நோக்கில் அதைத் திட்டமிட்டுப் பிளந்து துண்டாடினர். முதலில் அவர்கள் இனம், இனக்குழு, மொழி, பொருளாதாரம், மதம் போன்ற வேறுபாடுகளின் அடிப்படையில் சமூகத்தைப் பிரித்தனர். பின்னர் அப்பிரிவினைகளை மென்மேலும் அகலப்படுத்தி நிலைமையை இன்னும் மோசமாக்கினர். வேறுபாடுகள் ஏதும் இல்லாத பட்சத்தில், அவர்களே அவற்றைப் புனைந்து உருவாக்கவும் செய்தனர்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உஸ்மானிய கிலாஃபத்தை உள்ளிருந்து பலவீனப்படுத்துவதற்காக அரேபியத் தீபகற்பத்தில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்றொரு நபரை சமூக-சமய ‘சீர்திருத்தவாதி’ என்ற பெயரில் ஊக்குவித்தது. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் எவ்வாறு வழிநடத்தப்பட்டார்; பயன்படுத்தப்பட்டார்; நிதியளிக்கப்பட்டார்; ஆதரிக்கப்பட்டார் என்பதை ‘ஒரு பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்’ (CONFESSIONS of A BRITISH SPY and British Enmity Against Islam) என்ற ஆங்கிலநூலில் பிரிட்டிஷ் உளவாளியான ஹெம்ஃபர் விரிவாக விளக்கியிருக்கிறார். இதன் விளைவு தெள்ளத்தெளிவாகவும் பேரழிவாகவும் காணக் கிடைக்கிறது. சீர்திருத்தங்கள் என்று அழைக்கப்பட்ட இப்னு அப்துல் வஹ்ஹாபின் கருத்துக்கள் வஹாபிசம் என்ற பெயரில் ஒரு உட்பிரிவாக மாற்றப்பட்டன. இறைத்தூதர்(ஸல்) விட்டுச்சென்ற வரலாற்று மற்றும் பௌதிகத் தடங்கள் அனைத்தையும் துடைத்தழிப்பதும், தமக்கு முன்னிருந்த மன்னராட்சியின் ஏகாதிபத்திய வடிவத்தை இஸ்லாத்தின் பெயரால் மீள்நிறுவுவதுமே வஹாபிசத்தின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. மக்காவில் கஅபாவையும் மதீனாவில் நபிப் பள்ளிவாசலையும் சூழவுள்ள பளபளக்கும் மேற்கத்திய ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு மத்தியில், தமது இஸ்லாமிய ஆன்மிகப் பாரம்பரியம் திட்டமிட்ட முறையில் பெருமளவில் அழிக்கப்பட்டு வருவதை எளிதில் ஏமாறும், அறியாமையில் உழலும் முஸ்லிம் வெகுமக்கள் கவனிக்க மாட்டார்கள் என்றே இவர்கள் நம்பினர்.
இதேபோல பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் பாரசீகத்தில் பஹாவுல்லா என்றொருவரை ஆதரித்தனர். அவர் முஸ்லிம் ஒற்றுமையை உடைக்கும் விதத்தில் பஹாயிசத்தை உருவாக்கினார். இன்று சவூதி அரேபியாவின் வஹாபிசமும் பஹாயி மதமும் மேற்கத்திய காலனித்துவவாதிகளால் வலுவாக ஆதரிக்கப்படுபவையாக இருக்கின்றன.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்திய-பாகிஸ்தான் துணைக் கண்டத்தில் தமது இருநூறு ஆண்டுகால ஆக்கிரமிப்பின் போது ஒரு வெற்றிக் களம் கிடைத்தது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் மீதும் தனித்தனி அடையாளத்தையும் தோற்றத்தையும் திணிப்பதன் மூலம் அவர்களிடையே உயர்வு-தாழ்வு மனப்பான்மையை விதைத்து அவையனைத்தையும் செயலிழக்கச் செய்தனர். 1857-ல் நடைபெற்ற விடுதலைப் போருக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் அபாயத்தை உணர்ந்தனர். இவ்வொற்றுமை பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து நாட்டை விடுவித்துவிடும் என்று அஞ்சி இந்து-முஸ்லிம் சமூகங்களுக்கிடையே தேசியவாதத்தை விதைக்கத் துவங்கினர். பின்னர் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் என்ற இரு அரசியல் கட்சிகளை உருவாக்கினர். இக்கட்சிகள் இரு சமூகங்களின் நலன்களிலும் பிளவை ஏற்படுத்தி, நூறு ஆண்டுகள் கழித்து துணைக் கண்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிவதற்கு வழிவகுத்தன.
எனினும் தேசியம் என்ற அளவில் ஏற்படுத்தப்பட்ட பிரிவினையைக் கொண்டு மட்டும் அவர்கள் திருப்தி அடையவில்லை. முஸ்லிம்களை உள்ளுக்குள்ளாகவே மேலும் பிரிக்க வேண்டும் என்று நாட்டம் கொண்டிருந்தனர். 1857-ன் விடுதலைப் போருக்குப் பிறகு, ஹனஃபி சிந்தனைப் பள்ளி மேலும் உட்பிளக்கப்பட்டது. கீழைத்தேயவாத கண்ணோட்டத்தில் குர்ஆனை வாசித்துவிட்டு இறைத்தூதரின் ஆளுமை மற்றும் வாழ்க்கைப் பணி குறித்த சில அம்சங்களைத் ‘தெளிவுபடுத்த’ வேண்டும் என்று சொல்லி அத்துமீறிய கேள்விகளை முன்வைத்தனர். மார்க்க அறிஞர்கள் மத்தியில் தோன்றிய சூடான விவாதங்களை பிரிட்டிஷார் ஊக்குவித்தனர். இதனால் அவர்களின் நிலைப்பாடு இரு பெரும் துணைச் சிந்தனைப் பள்ளிகளாக இறுகிப் படிகமானதோடு பிரிட்டிஷாரின் நேரடி அல்லது மறைமுக உதவியுடன் அவர்கள் தேவ்பந்திலும் பரேலியிலும் தங்கள் தலைமையகங்களை அமைத்துக் கொண்டனர். இவ்விரு துணைச் சிந்தனைப் பள்ளிகளைத்தான் இன்று நாம் தேவ்பந்தி என்றும் பரேலவி என்றும் அழைக்கிறோம்.
தேவ்பந்திகள் மேலும் பல குழுக்களாகப் பிளவுபடுத்தப்பட்டனர். அதன் ஒரு விளிம்பில், ஜிஹாது மற்றும் அரசியலிலிருந்து அறவே விலகி செயலாண்மையற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் —இதுவே ஒரு அரசியல் நிலைப்பாடுதான்— தப்லீக் ஜமாத் இருக்க, மறுவிளிம்பில் சவூதி வஹாபிசத்தால் ஈர்க்கப்பட்டு, சில சமாதிகளில் நிகழ்த்தப்படும் ‘இணைவைப்பு’ என்று தாம் கருதும் செயல்களைத் துடைத்தழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சர்வசாதாரணமாக தற்கொலைத் தாக்குதல்களை நடத்திவரும் தாலிபான் போன்ற இனக்குழுக்கள் இருக்கின்றனர். இது போதாதென்று, 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தன்னைத்தானே இறைத்தூதர் என்று அழைத்துக் கொண்ட மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி என்பவரையும் பிரிட்டிஷார் ஊக்குவித்தனர் (அல்லாஹ் பாதுகாப்பானாக).
அரேபியத் தீபகற்பத்தில் வஹாபிசம் மத ரீதியாக காலூன்றிய பிறகு, பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் நஜ்து பகுதியின் பாலைவனப் பிரதேசங்களில் சுற்றித்திரிந்து ஹஜ் பயணக் கூட்டங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த சவூதி கோத்திரங்களிலிருந்து தம் பணிக்கு ஆள் பிடிக்கத் துவங்கினர். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இச்சவூதிக் கொள்ளையர்களும் ஹிஜாஸ் பகுதியின் ஷரீஃப் ஹுசைனும் சேர்ந்து கிளர்ச்சி செய்து உஸ்மானிய கிலாஃபத் ஆட்சியை கீழறுப்பதற்கு பிரிட்டிஷாரோடு பல கடிதப் போக்குவரத்துகள் மூலம் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதற்குக் கைம்மாறாக பிரிட்டிஷார் அரேபியாவின் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்குவதாக வாக்களித்தனர். இருவருக்கும் பெருந்தொகைப் பணமும் வழங்கப்பட்டது. இன்று இந்தச் சவூதிகள், ஈரானுக்கு எதிராக அபூ சுஃப்யான் வகை சன்னியிஸத்தை ஊக்குவிக்கின்றனர். இதை அவர்கள் பிரிவினைவாத மட்டத்தில் முன்வைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் கடந்த நூற்றாண்டின் துவக்கத்திலோ, மேலை ஏகாதிபத்தியச் சக்திகளின் தூண்டுதலால் உஸ்மானிய கிலாஃபத்தைச் சார்ந்த தமது சொந்த சன்னி சகோதரர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடுவதில் இவர்களுக்கு எவ்விதத் தயக்கமும் இருக்கவில்லை. ஆக இவர்களின் அளவுகோலெல்லாம் அறம் அல்லது காரணம் சார்ந்ததாக அல்லாமல் பச்சை சுயநலமும் தான்தோன்றித்தனமுமாகவே உள்ளது. இது இன்றளவும் இப்படியே நீடிக்கிறது.
காலனித்துவ நாட்களின் போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட உண்மையான அவலம், அவர்கள் உள்ளிருந்து பிளவுபடுத்தப்பட்டு சிதைக்கப்பட்டது அல்ல. மாறாக அப்பிளவுகளை அவர்கள் தாமாகவே ஏற்றுக்கொண்டு அகவயமாக்கிக் கொண்டதே ஆகும். மேலும் இக்காலனித்துவவாதிகள் எஞ்சியிருந்த இறை பிரக்ஞை மிக்க (முத்தகீ) தலைமைத்துவத்தை அடக்குமுறை, அரசியல் சூழ்ச்சி மற்றும் மகான்-சீடர் என்ற ரீதியில் நிறுவனமயப்படுத்தல் (சீடரின் மீது மகான் கொண்டிருக்கும் சம்பூரண மேலாதிக்கத்தின் அடிப்படையிலான உறவு) போன்ற உத்திகள் மூலம் மேலும் ஓரங்கட்டினர். அதோடு மார்க்க ‘அறிஞர்கள்’ மற்றும் மகான்களின் அடக்கத்தலங்களை பாமர, கல்வியறிவற்ற மக்கள் இணைவைப்பைத் தொடும் அளவுக்கு வணக்கங்களை செலுத்தக்கூடிய புனிதத்தலங்களாக மாற்றுவதை ஊக்குவித்தனர். மறுபுறம், பரேலவிகளைத் தாக்குவதற்கு தேவ்பந்திகளையும் வஹாபிகளையும் கருவியாகப் பயன்படுத்தி, இதன் மூலம் நிரந்தரமான ஒரு பதட்டச் சூழலை உருவாக்கினர்.
இவ்வரலாற்றின் முதற்கட்டத்தின் போது பள்ளிவாசல்களும் மார்க்க நிறுவனங்களும் நன்கொடை அல்லது தானதருமங்களை நம்பித்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தாக்கமே இருக்கவில்லை. பெரிய அளவு விவசாய நிலங்களைச் சொந்தமாகக் கொண்டு இன்னும் பிற சொத்துக்கள் மூலம் வந்த கணிசமான வருமானத்தைப்பெற்று அவை பொருளாதார ரீதியில் ஓரளவு சுதந்திரமாக இயங்கின. ஆனால் இரண்டாம் கட்டத்தில், காலனித்துவவாதிகள் அவ்வளங்களைச் சிறுகச்சிறுகப் பறித்து அவற்றை நன்கொடைகளை மட்டுமே நம்பி இருக்கும் நிலைக்குத் தள்ளினர். இவ்வாறாக, மேற்கத்தியக் கல்வி பயின்ற வர்க்கம் மேலெழுந்து வந்த சமயத்தில் பள்ளிவாசல்கள் தம் முக்கியத்துவத்தை இழந்தன. அறிஞர்களையும், சமூகத்தை வழிநடத்தும் கற்றறிந்த மேதைகளையும் உருவாக்குவதற்குப் பதிலாக அவை, அறிவில் குறைந்த அறிஞர்களையும், மோதினார்களையும், மனனம் செய்பவர்களையும் மட்டுமே உருவாக்கின. இவர்கள் சுயமதிப்பின்றி பிறப்பு அல்லது இறப்பின் போது சாதாரணச் சடங்குகளைச் செய்வதற்கென்றே ஒதுக்கி வைக்கப்பட்டனர். அறிவுப் பரவலுக்கெதிரான இந்த மத நிறுவனம் செயற்துடிப்பு, உலக அறிவியல்கள் பற்றிய அறிவு மற்றும் சமூகத்தை வழிநடத்தும் திறன் போன்றவற்றைக் குறைவாகவே பெற்றிருந்த போதிலும் அது மற்றொரு முக்கியமான பணியைச் செய்தது. அதாவது இஸ்லாத்தை அதன் அடிமட்ட அளவில் உயிர்வாழச் செய்து அதன் மூலம் அந்த நம்பிக்கையற்ற இருண்ட காலனித்துவ நாட்களில் வெகுமக்களின் துயராற்றும் பெறுமதிமிக்க பணிதான் அது.
♦ ♦ ♦ ♦ ♦