அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? (பாகம் 5) – டாக்டர் பர்வேஸ் ஷாஃபி

Posted on

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? (பாகம் 4) – டாக்டர் பர்வேஸ் ஷாஃபி

இஸ்லாத்தின் இலக்குகள் மற்றும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகளை வரலாற்றுப் பரிணாமத்தினூடாகத் தெளிவுபடுத்தும் வகையில் இங்கு தரப்பட்டுள்ள இக்கோட்பாட்டியல் பின்னணியில், முஸ்லிம் உலகின் சமீபத்திய நிகழ்வுகள் பற்றி கட்டுரையின் துவக்கத்தில் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு விடைகாண முடியும். குறிப்பாக இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்கம் ஆதரித்த ஒரு அரசியல் கட்சி தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள எகிப்தையும் மற்றொரு கண்ணோட்டத்தில் துருக்கியையும் எடுத்து நாம் ஆய்வு செய்வோம்.

அந்நிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமடைய வேண்டுமென்ற முஸ்லிம்களின் ஏக்கமும் எழுச்சியும் மெய்யானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தைத் தன்வசப்படுத்தி அசல் மாற்றத்தை அதன் புரட்சிகர ஆன்மாவிலிருந்து விலக்கி வெறும் அதிகாரவர்க்க மட்டத்தில் நிகழும் மாற்றமாக திசைதிருப்புவதற்கு அமெரிக்கா மும்முரமாகப் பணியாற்றி வருகிறது. அவ்வியக்கத்தின் தலைவர்களுக்கு சில அரசாங்கப் பதவிகளைக் கொடுத்துவிட்டு அசல் அதிகாரத்தை இராணுவத்திடமும் பழைய நிர்வாகத்திடமும் தக்க வைப்பதன் மூலம் தானே அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொள்வதுதான் அதன் திட்டம். தற்போது நடந்தேறும் நிகழ்வுகளே இஃக்வானுல் முஸ்லிமூன் செய்துகொள்ளும் சமரசங்களையும், அது ‘யதார்த்தத்துடன்’ அனுசரித்துப் போகும் கதையையும் சொல்லுகின்றன. இவர்களின் செயல்பாடுகளையும் அதோடு சம்பந்தப்பட்ட கோட்பாடுகளையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

வில்லியம் பர்ன்ஸ்

முஸ்லிம்களின் எழுச்சி துவங்கி ஓராண்டுக்குப் பிறகு, இவ்வாண்டின் (2011) துவக்கத்தில் அமெரிக்காவின் துணை உள்துறைச் செயலாளர் வில்லியம் பர்ன்ஸ் இஃக்வான்களின் துணைப் பொது ஆலோசகர் கைராத் அல் ஷாத்திரைச் சந்தித்தார் (அற்ப காரணங்களைக் கூறி தேர்தல் ஆணையம் இவரது வேட்புமனுவை நிராகரிப்பதற்கு முன், இவர்தான் பெரும் செல்வாக்குமிக்க அதிபர் வேட்பாளராக இருந்தார்). இஸ்ரேலுடனான அமைதி உடன்படிக்கை தொடர்ந்து பேணப்படுமாயின் சர்வதேச நாணய நிதியம் மற்றும் வளைகுடா ஷெய்க் ஆட்சிகளிடமிருந்து 20 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியுதவி பெற்றுத் தரப்படுமென பர்ன்ஸ் வாக்களித்தார். இஃக்வான்கள் இதற்கு உடனே ஒப்புக் கொண்டனர். ஆனால் இதற்கு முரணாக இருந்த அவர்களின் அறிக்கை பொதுமக்களைத் திருப்திப் படுத்துவதற்காக மட்டுமே வெளியிடப்பட்டது (செயலுத்தி சார்ந்த உதவிக்காக மூலோபாயம் சார்ந்த சமரசம் செய்துகொள்ளல், நண்பரையும் பகைவரையும் வேறுபடுத்திக் காணமுடியாதிருத்தல்). அதிபர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் 11 பிப்ரவரி 2011இல் ஹோஸ்னி முபாரக் பதவி இறக்கப்பட்ட பின் எகிப்தை ஆட்சி செய்துவரும் நீதித்துறையும் ஆயுதப் படைகளின் உயர்மட்டக் கவுன்சிலும் (Supreme Council of the Armed Forces -SCAF) சேர்ந்து, இஃக்வான்கள் ஏற்கனவே வென்றிருந்த பாராளுமன்ற தேர்தலை அதிரடியாக ரத்து செய்தன. இஃக்வான்கள் இதை எதிர்த்தபோதும் இதுவரை ஒரு பலனுமில்லை (ஒரு துறையைக் கொண்டு மற்றொன்றை தடுத்தல்).

கைராத் அல் ஷாத்திர்

அதிபராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, ஜூலை 11 அன்று முஹம்மது முர்ஸி சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். ஹிலாரி கிளிண்டன் கெய்ரோ வருவதற்கு முன் இது நிகழ்ந்தது. மன்னர் குடும்பத்துக்கு நெருக்கமான சவூதி கல்வியாளர் ஒருவர் லண்டனிலிருந்து வெளிவரும் அல் ஹயாத் செய்தித்தாளில் ‘இஃக்வான்களின் முர்ஸியிடம் வளைகுடாக்காரர்கள் எதிர்பார்ப்பது என்ன?’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில் எழுப்பியிருந்த கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதாக இப்பயணம் அமைந்தது. அதில் அவர் வளைகுடா ஷெய்க் ஆட்சிகளோடு தொடர்புடைய நான்கு முக்கிய விவகாரங்களில் முர்ஸி பகிரங்க உத்தரவாதம் வழங்க வேண்டுமெனக் கேட்டிருந்தார்:

1. ஷெய்க் ஆட்சிகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு அந்த நாடுகளிலுள்ள இஃக்வான் உறுப்பினர்களையோ வலையமைப்புகளையோ பயன்படுத்தக் கூடாது.

2. ஈரானுக்கு எதிராகத் தங்களுக்கு உதவவேண்டும்.

3. ஜனநாயக துருக்கியைக் காட்டிலும் சவூதி அரபியாவுடனும் அதன் அண்டை நாடுகளுடனும் வலுவான உறவைப் பேணவேண்டும்.

4. ஹமாஸ் இஃக்வான்களின் கிளையமைப்பாகவே இருப்பினும், பாலஸ்தீனர்களின் உட்பூசல் அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டும்.

தன் அறிக்கைகள் மூலம் ஒரே வாரத்தில் முர்ஸி எல்லா கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்தார். சவூதி அரேபியாவில் இருக்கும் போதே அந்நாட்டு மன்னரிடம் எகிப்துக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே உள்ள தந்திரோபாயக் கூட்டணிக்கு உறுதியளித்தார். மேலும் பிராந்தியத்தில் அதிகாரச் சமநிலையைப் பேணுவதற்கு ஆதரவளித்தார். இது நேரடியாகவே வளைகுடா மன்னராட்சிகளுக்கு ஈரானிடமிடருந்த வந்த சவால்கள் குறித்ததாகும். இவ்வாறாக எகிப்து ‘மிதவாத சன்னி’ கூட்டணியில்தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினார். பாகிஸ்தானின் முன்னாள் தளபதி பர்வேஸ் முஷரஃப்பின் ‘முதலில் பாகிஸ்தான்’ கொள்கையைப் போலவே, எகிப்து ‘முதலில் அரபு’ எனும் கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்கும் என்றும் இதற்கெதிராக துருக்கியின் ஜனநாயகத் தளிர்கள் வளர உதவி செய்யாது என்றும் தன் விருந்தோம்பிகளுக்கு உறுதியளித்தார். மேலும் முர்ஸி தன்னிடம் கேட்டுக் கொண்டபடியே, பாலஸ்தீன குழுக்களிடமிருந்து விலகியே  இருப்பதாக வாக்களித்தார். இன்னும் ஒருபடி மேலே சென்று, பாலஸ்தீனப் போராட்டத்துக்கு எதிராக சவூதி மற்றும் இஸ்ரேலின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளோடு சேர்ந்து பணியாற்றவும் தயார் என்றார் (உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் சுயசார்பற்ற, அமெரிக்காவுக்கும் அதன் சவூதி ஏஜண்டுகளுக்கும் அடிபணியும் உள்ளூர் மேட்டுக்குடிகள், எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற குறுகிய நலன்களால் உந்தப்பட்டு, தம் சொந்த சகோதரர்களுக்கு எதிராகவே மேற்கத்திய ஏகாதிபத்திய மற்றும் ஒடுக்குமறைச் சக்திகளோடு சேர்ந்து பணியாற்றல்).

முஹம்மது முர்ஸியும் ஹிலாரி கிளிண்டனும்

இதற்குப் பின்னர் அமெரிக்க உள்துறைச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் முர்ஸியைச் சந்திக்க எகிப்து வந்தார். அச்சந்திப்புக்குப் பிறகு அவர், “எகிப்து சிவில் ஆட்சியை நோக்கி முழுமையாக நகர்வதையும், அது ஏற்படுத்தும் விளைவுகளையும் சேர்த்து அமெரிக்கா ஆதரிக்கிறது” என்று அறிவித்தார். மறுநாளே எஸ்.சி.எ.எஃப்.இன் படைத்தளபதி ஹுஸைன் தன்தாவியைச் சந்தித்து இந்தச் சிவில் அமைப்போடு இணங்கிப் போகுமாறு வலியுறுத்தியதோடு, எகிப்திய இராணுவம் மீண்டும் “தேசப் பாதுகாப்புப் பணியை” மட்டுமே செய்வதை அமெரிக்கா விரும்புகிறது என்று தெரிவித்தார். இதற்குப் பகரமாக, இராணுவத்துக்கு இன்னும் பல கோடி டாலர்கள் நிதி அளிக்கப்படும் என்று வாக்களித்தார் (அமெரிக்கா பல பலகீனமான அதிகார மையங்களை தனித்தனியாகக் கையாளுதல்).

ஹுஸைன் தன்தாவி

சீர்கெட்டுக் கிடக்கும் அதே சன்னி அரசியல் சிந்தனை மீது எழுப்பப்பட்டுள்ள மேற்கத்திய ஜனநாயக மாதிரி அமைப்பு சிரியாவில், நண்பரையும் பகைவரையும் பிரித்தறியத் தவறிவிட்டது. எல்லா முஸ்லிம் நாடுகளிலும் கொடிய சர்வாதிகாரிகளே ஆட்சிபுரிகின்றனர். இதற்கு சிரியாவும் விதிவிலக்கல்ல. ஆனால் குறைந்தபட்சம் சிரியா, கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து இஸ்ரேலை வலுவாக எதிர்த்து வந்துள்ளதோடு பல பாலஸ்தீன போராட்டக் குழுக்களை ஆதரித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி மற்றும் பிற ஷெய்க் ஆட்சிகள் சேர்ந்து அஸத் ஆட்சியை நிலைகுலையச் செய்ய கடும் முயற்சி செய்து வரும் நிலையில், அவ்வாட்சியை நிலைகுலைக்காமல் இருப்பதற்கு அவர்கள் பாலஸ்தீனை ஆதரிக்கிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டுமே போதுமானது.

இது மற்றொரு கேள்வியை எழுப்புகிறது. ஏமனிலும் பஹ்ரைனிலும் அரசாங்கத்தை எதிர்த்தவர்கள் முதலில் மக்கள் போராட்டத்தைத் துவங்கினர். ஆனால் லிபியா மற்றும் சிரியாவில் அப்படிச் செய்யாமல் எடுத்த எடுப்பிலேயே அவர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்தது ஏன்? சன்னி அரசியல் சிந்தனைக்குள்ளாகவே வன்முறை மற்றும் படையை (force) சார்ந்திருப்பது கட்டமைக்கப்பட்டுள்ளது என்றாலும் மேற்கத்திய, சவூதி மற்றும் ஸியோனிச ஆயுதங்கள் மற்றும் கூலிப்படைகளால் அம்மனப்பான்மை மேலும் தூண்டிவிடப்படுகிறது.

முஆவியா அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து இதுவரை சன்னி அரசியல் சிந்தனையின் முன்மாதிரியில் அமைதிகரமான அதிகார மாற்றம் ஒருபோதும் நிகழ்ந்ததே இல்லை. இங்கு இரண்டில் ஒன்றுதான் சாத்தியம். தன் எதிராளிகளைக் கீழடக்குவதற்கு வரைமுறையற்ற வலிமையை பிரயோகிக்க வேண்டும் அல்லது தான் அடக்கப்பட்டு படுகொலைச் செய்யப்படவும் தயாராகிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக இங்கு இதற்கான வேறு சட்டதிட்டங்களோ முன்னுதாரணங்களோ இல்லை. பஹ்ரைன் அல்லது ஏமனில் நடந்தது போல சிரியாவிலும் எதிர்தரப்பினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு எடுத்தவுடன் வன்முறையை நாடாமல் மக்கள் போராட்டங்களை நிச்சயமாக நடத்தியிருக்க முடியும். ஆனால் இத்தகைய சமரசமற்ற நிலையை அவர்கள் எடுப்பதற்குக் காரணம் தம்மை எதிர்ப்பவர்களை விலக்கி வைப்பதற்கே ஆகும். இதனால்தான் கொடிய சர்வாதிகாரிகளும் அவர்களின் சாம்ராஜ்யமும் பல்லாண்டுகள் நீடிக்க முடிகிறது. இந்த அரசியல் மனப்பான்மை இன்றளவும் நீடிக்கிறது (எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்த எடுத்த எடுப்பிலேயே திணறடிக்கும் அளவு வன்முறையைப் பிரயோகிப்பதே சர்வாதிகாரிகள் நீண்டகாலம் வாழ்வதன் ரகசியம்).

தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை —முஸ்லிம் நாடுகளுள் — வேறு எந்த நாட்டையும் விட துருக்கி சிறப்பாக செயல்படுவது போலத் தெரிகிறது. அப்படியிருந்தும் அது அமெரிக்க மேலாதிக்கத்தையும் அதன் உலகளாவிய மற்றும் பிராந்தியத் திட்டங்களையும் ஏற்றுச் செயல்படுகிறது. மேலும் இஸ்ரேலோடு நட்பு பாராட்டுவதோடு, அமெரிக்காவின் மூலோபாய நலன்கள் குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பாமல் அமைதியாகவே இருக்கிறது. எனவேதான் பிற முஸ்லிம் நாடுகளுக்கு ஒரு ஜனநாயக முன்மாதிரியாக துருக்கியை முன்னிறுத்துவதில் அமெரிக்காவுக்கு சிரமம் எதுவும் இருப்பதில்லை. அந்நாடுகளில் அமெரிக்கா ஆதரிக்கும் சர்வாதிகாரிகள் தூக்கி எறியப்பட்டால், அவர்கள் துருக்கி பாணி ஜனநாயகத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இவ்வாறு துருக்கியின் சமயவாத அரசியல் கட்சி அணுகுமுறையுடன் பத்தாண்டுகால அனுபவம் பெற்றுவிட்ட அமெரிக்கா, இப்போது எகிப்திலும் ஜனநாயக ஒழுங்கை நோக்கிய நகர்வைக் கையாளுவதில் தன்னம்பிக்கையோடு இருக்கிறது. அதேவேளை பஹ்ரைனில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதைக் காட்டிலும் அடக்கு முறையையும் துன்புறுத்தலையும் பயன்படுத்தவே அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஏனெனில் அங்குள்ள பிரபுத்துவ மன்னராட்சியைக் கவிழ்ப்பது, தன் மூலோபாய நலன்களை நேரடியாகவே பாதிக்கும் என்பதை அது உணர்ந்திருக்கிறது (எந்த நாடுகளில் மாற்றம் அனுமதிக்கப்படும், எங்கு அனுமதிக்கப்படாது என்பது அமெரிக்காவின் மூலோபாய நலன்களைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்).

மேற்குலகோடு நட்பு பாராட்டாத அரசாங்கத்தை தூக்கியெறிய விரும்பும் எந்தவொரு குழுவையும் சித்தாந்தவாதிகளையும் —அது அல்காயிதா அல்லது பிற பிரபல பயங்கரவாதிகள் யாராக இருப்பினும் — ஆதரிப்பதில் அமெரிக்காவுக்கும் ஸியோனிஸ்டுகளுக்கும் எந்தத் தயக்கமும் இல்லை (அப்பயங்கரவாதிகளின் செயல்கள் அமெரிக்க நலன்களுக்கு உகந்தவையா இல்லையா என்பது மட்டுமே இங்கு அளவுகோலாக இருக்கிறது).

முடிவுரை

‘மிதவாத சன்னி’ அரசு என்று சொல்லப்படும் அரசுகளின் செயல்பாடுகள் வெளிப்படுத்தும் சன்னி அரசியல் சிந்தனை சீரழிந்து, மாசுபட்டு, மறு பரிசீலனை மற்றும் சீர்திருத்தத்தை வேண்டி நிற்கிறது என்பது இந்த வரலாற்றுப் பரிணாமத்தின் ஊடாகத் தெளிவாகத் தெரிகிறது. முஸ்லிம் அரசுகளின் வீழ்ச்சியும் நலிவும் ஏற்படுத்தும் இழிவு வெளிப்படையானது. எனவே நாம் அவற்றின் கருத்தியல் ஏற்று நிற்கும் கற்பிதங்களைச் சவாலுக்கு உள்ளாக்க வேண்டும். வெறுமனே மேற்பூச்சான ஒரு அரசியல் அதிகாரத்தைப் பெறுவது மட்டும் போதாது. அது யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் கைப்பற்றப்படுகிறது என்பதே இங்கு அசல் கேள்வி.

அமெரிக்காவுக்கும் ஸியோனிஸ்டுகளுக்கும் அடிபணிந்து கொண்டே ஜனநாயக முகமூடியணிந்து நிற்கும் சன்னி-மேற்குலக-ஸியோனிஸ்டுகள் கூட்டு நிபந்தனையின் பேரிலா அல்லது ஊக்கமிகு இஸ்லாமியச் சமூகமாக மாற்றமடைந்த வெகுமக்களின் புரட்சிகர உணர்வை நம்பி நிற்கும் சொந்த நிபந்தனைகளின் பேரிலா? உண்மையான இஸ்லாமிய இயக்கத்தாலன்றி ஒரு சமயவாத அரசியல் கட்சியால் இதைச் செய்ய இயலாது. இது சாத்தியமானால் மட்டுமே இப்பணி யாருடைய தயவுமின்றி சுயேட்சையாக இஸ்லாமியத் திசையில் முன்னேற முடியும். ஆனால் இதற்கு முன்நிபந்தனையாக, மன்னராட்சி காலத்திலிருந்தே தேக்கமடைந்து சீர்கெட்டுக் கிடக்கும் உலக நோக்கின் அடிப்படைக் கற்பிதங்களையும் அதன் மேல் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் மேற்கத்திய ஜனநாயக விழுமியங்களையும் கேள்விக்குட்படுத்த வேண்டும். திருக்குர்ஆன் பிரகடனம் செய்வது போல், “மக்கள் தமது மனப்பாங்கை மாற்றிக்கொள்ளாத வரை, அல்லாஹ் அந்த மக்களின் நிலைமைகளை மாற்ற மாட்டான்…” (13:11). ஆக சமூகத்தின் உள்ளம் மாறாதவரை அச்சமூகத்தின் நிலைமை மாறாது. அதாவது உள்ளம் மற்றும் உலகநோக்கில் ஏற்படும் மாற்றம் உலகியல் நிலைமைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

நாம் முஸ்லிம் அரசியல் சிந்தனையின் உயர்ந்த நிலையை நோக்கிப் பரிணமிக்க வேண்டுமெனில் சன்னி அரசியல் சிந்தனையில் அறிமுகப்படுத்தப்பட்ட துவக்ககால வரலாற்று முரண்பாடுகளைக் களைய வேண்டும். இத்தகைய சீர்திருத்தங்கள் நம்மை வரலாறு மற்றும் கால ஓட்டத்தில் ஒரு உண்மையான இணைப்புப் புள்ளிக்கு இட்டுச் செல்லும். அதுதான் உட்பிரிவுவாதமோ பரஸ்பர பகைமைகளோ இல்லாதிருந்த, இறைத்தூதர்(ஸல்) இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற காலகட்டம். இயல்பாகவே இதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக பெயரளவிலான ‘மக்களாட்சியை’ நிராகரிப்பது என்றும் அரசியல் அதிகாரத்தை அடைவதற்கான ஜனநாயக பாணி குறுக்கு வழியைக் கைவிடுவது என்றும் வெளிப்படையாகப் பிரகடனம் செய்வதாக இருக்கும். இவ்விரு மாற்றங்களும் அகவயப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில் வன்முறை தொடரவே செய்யும். பிற நடவடிக்கைகளால் வேறு ஏதேனும் புரட்சி சாத்தியமாகலாம்; ஆனால் இஸ்லாமியப் புரட்சி சாத்தியமாகாது. நாம் முன்னர் குறிப்பிட்ட குர்ஆன் வசனத்தின்படி பார்த்தால் ஏற்கனவே இருக்கும் தவறான, முரண்பாடுகள் நிறைந்த உலகநோக்கை நம் உள்ளத்தில் மாற்றி, அகவயப்படுத்தி சீர்திருத்தம் செய்வதற்கு அதிக காலம் பிடிக்கும் என்பதை கவனத்தில் கொள்க. ஆனால் அது திறந்த மனதோடு விவாதத்தின் மூலம் செய்யப்பட்டால், புற உலக நிலைமை மாறுவதற்கு சொற்ப காலமே போதுமானது. கால நிகழ்வின் இத்தகைய தன்மை இறைத்தூதர்(ஸல்) வரலாற்றில் நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளது.

டாக்டர் பர்வேஸ் ஷாஃபி
டாக்டர் பர்வேஸ் ஷாஃபி

♦ ♦ ♦ ♦ ♦

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *