இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ் வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 2) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ்  வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 1)

♦ ♦ ♦ ♦ ♦

பற்றுறுதி (பைஅத்)

அஹ்ல் அல் சுன்னாஹ் வல் ஜமாஅத்தைச் (சன்னி) சார்ந்தவர்களின் தலைமைத்துவக் கோட்பாட்டின் இரண்டாவது கூறு ‘பற்றுறுதி’ (பைஅத்) ஆகும். சன்னிகள், தலைமை ஏற்கப் போகிறவரின் கோட்பாட்டு அளவிலான பண்புகளைக் கொண்டு மட்டும் திருப்தி அடைந்துவிடவில்லை. மாறாக அவர் மக்களின் பற்றுறுதியையும் உறுதிப் பிரமாணத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்றனர். இந்தக் கூறு இல்லையெனில் தலைமையும் இருக்க முடியாது என்றனர். இதற்குச் சான்றாக இறைத்தூதரைக் குறித்து கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டினர். அவற்றைப் பார்க்கும் முன், இந்த விவாதங்களின் மூலம் நாம் இறைத்தூதரின் தலைமையை கேள்வி எழுப்பவில்லை என்று சொல்லிக் கொள்கிறேன். எந்த வரலாற்றுப் பின்னணியிலிருந்த வரும் முஸ்லிமும் “இறைத்தூதர் எங்கள் தலைவர் அல்ல” என்று சொல்லவில்லை என்பதையும் நான் தெளிவுபடுத்தி விடுகிறேன்.

இறைத்தூதர் குறித்து அல்லாஹ் கூறுவதாவது: நிச்சயமாக எவர்கள் உம்மிடம் வாக்குறுதி (பைஅத்) செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி (பைஅத்) செய்கின்றனர். அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான். [அல் குர்ஆன் 48:10]

இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்தால், மக்களின் பற்றுறுதி இன்றி இறைத்தூதரே தலைவர் ஆகியிருக்க முடியாது என்று தெரிகிறது. சிலர் “அதெப்படி, எப்படியாயினும் இறைத்தூதர்தான் தலைவர்” என்று வாதிடலாம். ஆனால், தலைமை என்பது வழிநடத்துபவருக்கும் அவர் வழிநடத்தும் மக்களுக்கும் இடையே உள்ள உறவைக் குறிக்கிறது. அது ஆக்கப்பூர்வமான, இணக்கம் கொண்ட, ஒருங்கிணைந்த உறவு. இதில் ஒரு கூறு விடுபட்டால், அவர் பெயரளவில் மட்டுமே தலைவராக இருக்க முடியும்.

இறைத்தூதர், அரேபியாவில் அன்று வாழ்ந்த மக்களின் பற்றுறுதியைப் பெறாமலேயே ‘நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனுக்கு மரியாதை செலுத்துங்கள்; பள்ளிவாசல்களில் அவனைப் போற்றுங்கள்’ என்று கூற, அவர்கள் இது எதற்கும் கட்டுப்படவில்லையெனில், இதில் என்ன தலைமை இருக்கிறது? அவர் தன்னளவில் பேசிக்கொண்டே இருந்திருப்பார். குடிமக்கள் இல்லாத ஒரு தேசத்தில் தேசத் தலைமை மட்டும் எப்படி இருக்க முடியும்? இதை, தலைவர் மற்றும் தலைமை என்னும் கட்டுமானத்தை எழுப்புவதற்கு கற்கள் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொண்டால், அவற்றை இணைக்கும் கலவையாக பற்றுறுதி அமைகிறது என்று புரிந்து கொள்ளலாம். அது வழிநடத்துபவரையும் வழிநடப்பவர்களையும் இணைக்கிறது.

மற்றொரு இறைவசனம் இவ்வாறு கூறுகிறது: நபியே! நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் வாக்குறுதி (பைஅத்) செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். [அல்-குர்ஆன் 60:12]

இந்த வசனத்தை எடுத்துக் கொண்டால், ஒருவர் தலைவராகவும் அல்லாஹ்வின் தூதராகவுமே இருந்தாலும் சமூகத்தின் சரிபாதியான பெண்களின் பற்றுறுதி அவருக்கு இல்லையெனில் —எல்லா ஆண்களின் பற்றுறுதியை பெற்றிருந்தாலும் கூட— அவர் தலைவர் ஆக முடியாது என்று சொல்ல முடியும். நான் மேற்கோள் காட்டும் நூல்களில் இவ்வாறு சொல்லப்படவில்லை என்றாலும், எல்லோரையும் உள்ளடக்கிய விரிந்த பார்வை கொண்ட ஒருவருக்கு இப்படி தோன்றலாம். மேலும் நாம் இங்கு தலைவர் எனக் குறிப்பிடுவது செயலூக்கம் உள்ள தலைவரை; வெறும் பெயரளவிலான தலைவரை அல்ல.

இங்கு நான் ஒரு வகையான தகவல்களின் போதாமையை உணர்கிறேன். இந்தப் பகுதிகளை ஷியா அல்லது கவாரிஜ்களின் வரலாற்றில் பார்க்கும் போது, உளக்கேள்விகளை திருப்திப்படுத்தும் வகையிலான தகவல்கள் கிடைக்கின்றன. எனினும் இது பற்றி சன்னி நூல்களைப் படிக்கும் போது, இந்தத் தலைப்பு பற்றி அதிக தகவல்களை பார்க்க முடியவில்லை. வரலாற்றின் இந்தப் பக்கம் இருக்கும் நாம், திரும்பிப் பார்த்து இதற்குக் காரணம் அரசுகள்தான் என்று இப்போது சொல்ல முடிகிறது. தம்மை சன்னிகள் என்று அழைத்துக் கொண்ட மக்களின் முயற்சியை அந்த அரசாங்கங்கள் கடத்தி, அவர்கள் சார்பாக அவை பேச ஆரம்பித்தன. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரசாங்கங்கள் பேசும்போது மக்களின் மனசாட்சியைவிடுத்து தம் நலன்களைப் பற்றியே பேசும் என்பதை நாம் அறிவோம். இன்றும் இதுதான் நடக்கிறது; அன்றும் இதுதான் நடந்தது. சன்னி பொதுப் புத்தியை அரசாங்கங்கள் திருடி விட்டதால் இங்கு தகவல் பற்றாக்குறை நிலவுகிறது.

தலைமையை தேர்ந்தெடுக்கும் முறை

இயல்பான தலைவர்: இந்தப் பின்னணியில், பின்னர் என்ன நடந்தது என்று பார்ப்போம். சன்னி வழக்கில் மூன்று விதமாக ஒருவர் தலைமைப் பதவிக்கு வர முடியும். முதலாவதாக, ஒருவர் தன்னியல்பாக தலைவராகிவிடுவது —அபூ பக்கருக்கு நடந்ததைப் போல. இறைத்தூதர் இறந்த பிறகு அவரை அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்றைய தினம் ‘சகீஃபா’ தினம் என்று அழைக்கப்படுகிறது. சகீஃபாவின் போது பல்வேறு மக்கள் அங்கு கூடி இருந்தனர். அப்போது இனிமேல் முஸ்லிம்களை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்விக்கு விடை காண வேண்டியிருந்தது. அன்றைய தினம் ஒரு சில மணிநேரங்களில் நடந்த நிகழ்வுகளை பற்றித்தான் நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம்.

நம் வரலாற்றில் இன்றுவரை —வருந்தத்தக்க விதத்தில் கிட்டத்தட்ட எல்லோராலும்— சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு நாசூக்கான தருணம் அது. இறைத்தூதரின் வாழ்வில் இதுவரை நடந்த சம்பவங்களையும் அவற்றின் பின்னணியையும் முழுமையாக அறிந்த உமர் ஒரு முடிவெடுத்தார். அந்த கணத்தில் எப்படி மற்ற மக்கள் மீண்டும் தலைதூக்க எத்தனிக்கிறார்கள் என்பதை உணர்ந்த அவர், நேராக அபூ பக்கரிடம் சென்று “உங்கள் கையை நீட்டுங்கள். நான் உங்களுக்கு பற்றுறுதி அளிக்கிறேன்” என்றார். எல்லோர் முன்னிலையிலும் இது நிகழ்ந்தது. அபூ பக்கரும் அவ்வாறே தன் கையை நீட்ட, உமர் அவருக்கு பற்றுறுதி அளித்தார். அரபியில் இதற்கு ‘உபாயியுக’ என்று சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து மற்ற அனைவரும் தாமாகவே முன்வந்து அபூ பக்கருக்கு பற்றுறுதி அளிக்கத் துவங்கினர். இவ்வாறாக சகீஃபா நிகழ்ந்த இடத்திலும் அதைத் தொடர்ந்து மதீனா முழுவதும் அபூ பக்கரின் தலைமைக்கு ஆதரவான ஒருமித்த கருத்து உருவானது.

இதன் பொருள், இது இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அங்கிருந்த எல்லோரும் நினைத்தார்களா? இல்லை. அபூ பக்கருக்கு எதிர்ப்பே இருக்கவில்லையா? இல்லை. அன்றைய நிகழ்வுகள் குறித்து கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்தது. அபூ பக்கருக்கும் ஆரம்பம் முதல் எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது.

அபூ பக்கர் குறித்து சன்னி நூல்களில் மற்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. ‘இறைத்தூதர் தன் இறுதி காலங்களில் அபூ பக்கரை தொழுகைக்கு தலைமை தாங்குமாறு பணித்தார். ஆதலால் இறைத்தூதர் மறைந்த பின்னர் எங்கள் விவகாரங்களுக்கு தலைமைதாங்க நாங்கள் அபூ பக்கரை நியமிப்போம்’ என்று அவர்கள் கூறினர். இது உண்மைதான் என்றாலும் இறைத்தூதர் அபூ பக்கரை தனக்கு அடுத்த தலைவராக ஒருபோதும் முன்மொழியவில்லை என்பதையும் சன்னி அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

அபூபக்கர் தனக்காகவோ, தன் கோத்திரத்திற்காகவோ அல்லது வேறு ஏதோ ஒரு விதத்தில் பதவியை விரும்பினார் என்று வரலாற்றில் எங்குமே பார்க்க முடியாது. அக்காலச் சூழலில் தன்னியல்பாக அவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஏற்புடையதே. மேலும் எந்த நிர்பந்தமும் இன்றி ஒருவர் தலைமையை ஏற்க வேண்டும். அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் இமாம் அலீ ஆகிய நால்வரும் எந்த நிர்பந்தமும் இன்றி பதவி ஏற்றனர். மக்களும் அவர்களை சுதந்திரமாக தேர்ந்தெடுத்தனர்; அவர்களும் சுதந்திரமாக அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

பரிந்துரை அடிப்படையில் தலைவர்: அடுத்ததாக, ஒரு தலைவர் தனக்கடுத்து வர இருக்கும் தலைவரை பரிந்துரை செய்யும் முறை. அவர் அத்தலைவரை நியமிப்பதில்லை; திணிப்பதில்லை. மாறாக பரிந்துறை மட்டுமே செய்கிறார் என்பதை கவனிக்கவும். இதுதான் உமர் விஷயத்தில் அபூபக்கர் செய்தது. அபூபக்கர் அளித்த நற்சான்றின் பேரில் உமர் தலைவரானார்; முஸ்லிம்களும் நல்லெண்ணம் கொண்டு அவரை ஏற்றுக் கொண்டனர். இதுவும் உமர் புறத்திலிருந்து சுயநலமின்றி, குடும்பத்தினர் ஈடுபாடின்றி, பதவிக்கான அதீத தேட்டமின்றி செய்யப்பட்டது. சிலர் இதில் பிரச்சனையை காண்கின்றனர். இது எப்படி சரி ஆகும் எனக் கேட்கின்றனர். சன்னி, ஷியா, கவாரிஜ் என எல்லா தரப்பினரிடமும் நம் வரலாற்றின் இப்பகுதியில் ஒரு குழப்பம் காணப்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்படுகிறது.

இதை விளக்கும் பொருட்டு ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். இறைத்தூதர் மறைந்த பிறகு, தலைமைப் பதவி ஆகத்தகுதியானவருக்கு மட்டுமே —எவ்வித பிரச்சனையுமின்றி பத்திரமாக— அளிக்கப்படலாம் என்ற அளவிற்கு முஸ்லிம் பொதுப்புத்தி பண்பட்டு, விழிப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு நிறைந்து காணப்பட்டதா? அல்லது, இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகு ஒரு இஸ்லாமிய அரசாங்கம் இருந்தது; இஸ்லாமிய அமைச்சு இருந்தது; போர்க்களத்தில் இஸ்லாமிய முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன; இஸ்லாமியப் பொருளாதரமும் கருவூலமும் இருந்தது; இஸ்லாமிய நிலம் மற்றும் வேளாண்மை என எல்லாமும் இருந்தது; எனினும் முஸ்லிம்களாக மாறிய மக்களைப் பொருத்தவரை —குறிப்பாக அரேபிய தீபகற்பத்தில் இஸ்லாம் ஒரு சக்தியாக உருவாகிய கடைசி இரண்டு மூன்று ஆண்டுகளில் பெருமளவில் இஸ்லாத்தைத் தழுவியவர்கள்— அவர்கள் உண்மையிலேயே முஸ்லிம்கள் ஆயினரா? அல்லது பெயரளவிற்கு, சம்பிரதாய அடிப்படையில் மட்டும் முஸ்லிம்கள் ஆயினரா? இக்கேள்வியை எழுப்புவது அவசியமாகிறது. சிலருக்கு இது அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம்.

இறைத்தூதருடைய மறைவின் போது முஸ்லிம்கள் தியாகம் செய்யும் அளவுக்கு பண்பட்டு அர்ப்பணிப்போடு இருந்திருந்தால் துளிர்விட்டுக் கொண்டிருக்கும் அன்றைய இஸ்லாமிய ஒழுங்கிற்கு, ஆகத்தகுதியான ஒருவர்தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அப்படிச் செய்வதுதான் மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பையும் கிளம்பியிருக்காது. ஆனால் அப்போதிருந்த பெரும்பான்மை முஸ்லிம்கள் தங்கள் தலைமைக்கெதிராக போர் தொடங்குவதற்கு வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என நீங்கள் அறியவந்தால், ஆகத்தகுதியானவரை தலைவராக்க வேண்டுமா அல்லது காத்துக்கொண்டிருக்கும் எதிர்ப்பை மட்டுப்படுத்தி அதை திணறச்செய்யும் திறன் படைத்த, இறைத்தூதரின் குடும்பத்தைச் சாராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமா?

முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அபூ பக்கர், இறைத்தூதரின் குடும்பத்தைச் சார்ந்தவர் அல்லர். அவரது தேர்வு ‘இங்கு குடும்ப ஆட்சி நடைபெறுகிறது’ என்று சொல்லும் வாய்ப்பை அரேபியாவின் பிற கோத்திரங்களுக்கும் அதிகார மையங்களுக்கும் வழங்கவில்லை. இஸ்லாமிய சமூகத்தை வழிநடத்துவதற்கு அவர் மிகச்சிறந்தவராக இல்லாமல் இருக்கலாம்; எனினும் இஸ்லாமிய அதிகாரத்துக்கு எதிராக கிளர்த்தெழுவதற்கு வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அத்தகைய மக்களின் திட்டத்தை முறியடிப்பதற்கு அவர் ஆகத் தகுதியானவர் தானே? இதுதான் இங்கு நாம் முன்வைக்கும் கேள்வி.

கலந்தாலோசனை அடிப்படையில் தலைவர்: சன்னி இலக்கியத்தில் தலைவரை தேர்ந்தெடுக்கும் மூன்றாவது விதம், கலந்தாலோசனை அடிப்படையில் (அஷ் ஷூரா) ஆகும். திருக்குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படுகிறது. உதாரணத்துக்கு, ‘வ அம்ருஹும் ஷூரா பைனஹும்’ என்ற வசனத்தைக் கூறலாம். ‘வ ஷாவிர்ஹும் ஃபில் அம்ர்’ என்ற மற்றொரு வசனம் முடிவெடுக்கும் விஷயத்தில் முஸ்லிம்களை ஈடுபடுத்தும்படி இறைத்தூதருக்கு கட்டளையிடுகிறது.

உமர் தன் மரண தருவாயில் ஆறு பேரை குறிப்பிட்டு தானறிந்த வரையில் அவர்களுள் யார் தலைவரானாலும் முஸ்லிம் பொதுப்புத்தி அதை ஏற்றுக் கொள்ளும் என்றார். அவர்கள் இமாம் அலீ, உஸ்மான், தல்ஹா, ஸுபைர், சஅது இப்னு அபீ வக்காஸ் மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ஆகியோர் ஆவர். இவர்களுள் யார் தலைவராக வேண்டும் என்பதை அவர்கள் தங்களுக்குள்ளேயே பேசி முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். அதிலும் குறிப்பாக மூன்று பேரிடம் உமர் தனியாகப் பேசினார். இமாம் அலீ, உஸ்மான் மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ஆகியோரிடம் “உங்களில் ஒருவர் முஸ்லிம்களின் தலைவராக நேர்ந்தால், உங்கள் குடும்பத்தினரை ஆட்சியதிகாரத்தில் ஈடுபடுத்தாதீர்கள்” என்று எச்சரித்தார். இஸ்லாமிய சம்பிரதாயங்களின் போர்வையில் ஒளிந்திருந்த முஸ்லிம்களின் எதிரிகளுக்கு ‘இஸ்லாமிய அரசாங்கம் குலம்சார்ந்த அல்லது குடும்ப ஆட்சியை நிலைநாட்டும் அரசாங்கம்’ என்று சொல்லும் வாய்ப்பை அளிக்க அவர் விரும்பவில்லை. உமர் விடுத்த எச்சரிக்கை, தான் அஞ்சியது நடந்துவிடுமோ என்ற உள்ளுணர்வு கொண்டு மீண்டும் மீண்டும் அது குறித்து நினைவூட்டுவது போல இருந்தது. ஆனால் எது குறித்து உமர் அஞ்சினாரோ அதையே உஸ்மான் செய்தார்.

சன்னி பார்வையில் பார்த்தால், உஸ்மான் பதவிக்கு வந்த விதம் அவர் முஸ்லிம்கள் மீது திணிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. பெரும்பாலான முஸ்லிம்கள் அன்று நிலவிய சூழலை கருத்தில் கொண்டு சில நிபந்தனைகளுடன் அவரை தலைவராக்க ஒப்புக் கொண்டனர்; அவரும் அவற்றுக்குச் சம்மதம் தெரிவித்து அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆறு பேர் கொண்ட ஆலோசனை குழுவை (ஷூரா) உமர் ஏற்படுத்தி அவர்கள் உஸ்மானை தேர்ந்தெடுத்த போதிலும், பிற முஸ்லிம்கள் அவரை ஏற்கவில்லையெனில் உஸ்மான் தலைவராகியிருக்க முடியாது. இந்த இஸ்லாமிய விவரங்கள் குறித்த பகுப்பாய்வு, நம்மை இந்த முடிவுக்குத்தான் இட்டுச் செல்கிறது. முஸ்லிம் பொதுப் புத்தியில் அவர் தலைவராக வேண்டும் என்ற கருத்தொற்றுமை ஏற்பட்டதால்தான் உஸ்மான் தலைவராக முடிந்தது.

முஸ்லிம் சன்னி மனதில், அதிகாரத்தை மரபுரிமையாகப் பெறுவதற்கும் அதை ஷூரா நிகழ்முறை மூலம் முடிவு செய்வதற்கும் இடையே எப்போதும் ஒரு முரண் இருக்கிறது. அதாவது தலைவரை தேர்ந்தெடுக்கும் சவாலை எடுத்துக் கொண்டால், தலைவர், அவருக்கடுத்து அவரது மகன், பின்னர் அவருடைய மகன் என்று இப்படியே தொடரும்படியான தலைமையை —அன்றும் இன்றும்— இஸ்லாமிய பொதுப்புத்தி இயல்பாகவே ஏற்றுக்கொள்ளாது என்பது நிதர்சனம். இஸ்லாமிய அரசாங்கத்தை ஷூரா அடிப்படையில் நிறுவினால், அதிகாரம் மரபுரிமையாக மாற்றப்படுவது தானாகவே தடுக்கப்படும் என்று கிட்டத்தட்ட உறுதியாகக் கூறலாம்.

எனினும் நடைமுறையில் இது கடைபிடிக்கப்பட்டதா என்பது வேறு விஷயம். ‘சன்னி’ வரலாற்று நூல்களிலும் வேறு சிலவற்றிலும் அபூ பக்கர், உமர், சிலரின் கூற்றுப்படி உஸ்மான் மற்றும் மேலும் சிலரின் கூற்றின்படி இமாம் அலீ ஆகியோர் விஷயத்தில் ஷூரா என்னும் கூறு இருக்கத்தான் செய்தது என்று பார்க்கிறோம். உஸ்மான் நடைமுறைப்படுத்திய ஷூரா குறித்து கருத்துகள் இரு துருவங்களாக பிரிந்து கிடக்கின்றன. சுயகொள்கை ஆதரவு பேசும் சிலர் “ஆம். அவர் சரியாகத்தான் ஷூராவை கையாண்டார். அதில் குறை எதுவும் இல்லை” என்கின்றனர். இன்னும் சிலர், “அவர் செய்த ஒவ்வொரு செயலிலும் மிகத் தெளிவாக ஷூராவின் நியமங்களை மீறினார்” என்கின்றனர்.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ்  வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *