இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ் வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 3) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ்  வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 2)

♦ ♦ ♦ ♦ ♦

இஜ்திஹாத்

அபூபக்கர், உமர் மற்றும் உஸ்மான் ஆகியோர் பதவிக்கு வந்த முறைகளை பார்த்தோம். இவை அனைத்தும் சன்னி பார்வையில், இஜ்திஹாத் அடிப்படையிலான முறைகள் ஆகும். திருக்குர்ஆனிலோ இறைத்தூதரின் ஹதீஸ்களிலோ இது இப்படித்தான் செய்யப்பட வேண்டும் என்று விரிவாக எதுவும் கூறப்படவில்லை. ‘நாம் செய்தது சரியாக இருக்கும்பட்சத்தில் அல்லாஹ்விடமிருந்து கூலியைப் பெறுவோம். அது தவறாகிவிட்டால், நம்மால் இயன்றவரை முயற்சி செய்தோம். அல்லாஹ் அதை மன்னிக்கக் கூடும்’ என்ற அடிப்படையில் தான் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், நாம் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் நிறைந்த இருபதாம் நூற்றாண்டு அரேபியாவைப் பற்றி இங்கு பேசவில்லை. இவையெல்லாம் கடினமாக இருந்த அரேபியாவைப் பற்றிப் பேசுகிறோம். அதேவேளை அபூ பக்கரிடமிருந்து உமர், அவரிடமிருந்து உஸ்மான் மற்றும் அலீயின் காலம் வரை இஸ்லாமியப் பிரதேசம் எட்டுத்திக்கிலும் விரிவடைந்து கொண்டே இருந்தது. ஆகவே இன்று நடப்பது போல ஒரே நாளில் தேர்தல் நடத்தி சில மணி நேரங்களில் முடிவு அறிவிப்பது போல அன்றைய தேர்வு நடைபெறவில்லை. எனில் மதீனாவாழ் முஸ்லிம்கள்தான் அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலீயை தலைவராக தேர்ந்தெடுத்தனர். ஆகவே கருத்தொற்றுமை எனச் சொல்லும் போது அது முதலில் மதீனாவாழ் முஸ்லிம்களின் கருத்தொற்றுமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிற பகுதி மக்கள் அனைவரும் மதீனாவாழ் மக்கள் மீது கொண்டிருந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவர்களது முடிவை ஏற்றுக் கொண்டனர். ஆகவே மதீனாவில் தோன்றிய கருத்தொற்றுமை, பின்னர் பிற பகுதிகளிலும் பரவியது. இந்த அர்த்தத்தில்தான் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

முஆவியா

பிரச்சனை என்னவென்றால், தலைவருக்கான கூறுகள் என நாம் பார்த்த ‘குறைஷி’ ஆக இருத்தல் , பற்றுறுதி (பைஅத்), ஆலோசனை(ஷூரா) ஆகியவை முஆவியாவை அடையும் போது தனி அழுத்தம் பெறுகின்றன. தனக்கு முன்னர் இருந்தவர்கள் தவிர்க்க முயற்சி செய்ததை அவர் வெளிப்படையாகவே செய்தார். அதாவது இஸ்லாமிய அரசாங்கம் என்பது குடும்ப விவகாரம் என்ற பொதுப் பார்வையை நிறுவினார். இதுவரை இருந்த எல்லா நியதிகளையும் தலைகீழாக புரட்டி போட்டார். இது போதாதென்று, “இஸ்லாமிய அரசாங்கம், ஒரு குடும்ப விவகாரம்தான்; அதுவும் எங்கள் உமைய்யா குடும்ப விவகாரம் என்று எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று அறிவித்தார். இதன் காரணமாகத்தான் சன்னி நூல்களிலேயே முஆவியா குறித்து கடுமையான விமர்சனங்கள் உள்ளன.

எனினும் சவூதி பணம், அறிவார்ந்த ஆய்வுகளைவிட சப்தமாகப் பேசும் இன்றைய காலத்தில் இவற்றையெல்லாம் பொது மேடைகளிலும் விவாதங்களிலும் நீங்கள் கேட்க முடியாது. எனினும் உண்மையை யாரும் மறைக்க முடியாது. தெற்கு ஈராக்கின் பஸ்ராவில் வாழ்ந்த பிரபல சன்னி அறிஞரான ஹசன் அல் பஸரியின் கூற்றை இங்கே மேற்கோள் காட்டுகிறேன். முஆவியா குறித்து அவர் கூறியதாவது: “அர்பவு ஹிசாலின் ஃபீ முஆவியா லௌ லம் தகுன் ஃபீஹி இல்லா வாஹிதத்துன் ல கானத் மு’பிக ஹுரூஜுஹு அலா ஹாதிஹில் உம்மத்தி பிஸ்ஸுஃபஹா ஹத்தப் தஸ்ஸஹா பி ஹைரி மஷூரதுன் மின்ஹா. இஸ்திக்லாஃபு இப்னஹூ யஸீது வ ஹுவ சிக்கீருன் ஃகம்மீருன் யல்பிஸுல் ஃகரீர் வ யல்ரிபு பித் தனாபீர்…” இதன் பொருள்: “முஆவியாவிடம் நான்கு பண்புகள் இருந்தன. அவற்றுள் ஏதாவது ஒன்று இருந்தால் கூட அது அவரை நரகத்தில் புகுத்துவதற்கு போதுமானது. முதலாவது ஆலோசனை (ஷூரா) நிகழ்முறை இன்றி மக்களை மிரட்டும் முட்டாள் கவர்னர்களையும் அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்திடமிருந்து விலகி இருந்தது.

இரண்டாவது தன் மகன் யஸீதை பட்டத்து இளவரசனாக நியமித்தது. அவரோ குடிகாரராகவும், போதைக்கு அடிமையானவராகவும், போரை வெறுப்பவராகவும் இசைக் கருவிகளை வாசிப்பவராகவும் இருந்தார்”. (அதுவரை பட்டத்து இளவரசர் என்றொரு பதவி இருக்கவில்லை. முஆவியாதான் இதை உருவாக்கினார்.) “மூன்றாவதாக ஸியாதை முஆவியா தன் சகோதரர் எனக் கூறியது. (அதாவது ஸியாத் முஆவியாவின் சொந்த சகோதரன் இல்லாதபோதும் அவரை ‘தன் சகோதரன்’ எனக் கூறி ஸியாத் இப்னு அபி சுஃப்யான் என்று முஆவியா அழைத்தார்.” இது இறைத்தூதர் காட்டித்தந்த “ஒரு குழந்தை தன் தந்தையின் பெயரைக் கொண்டே குடும்பப் பெயரைப் பெறும்” என்ற வழிகாட்டுதலுக்கு மாறானது.)

“நான்காவது ஹுஜ்ர் இப்னு அதீயை முஆவியா கொலை செய்தது.” (ஹுஜ்ர் இப்னு அதீ முஆவியாவை எதிர்த்தவர். இமாம் அலீக்கு அறம் சார்ந்த ஆதரவளித்து அவருக்காக வெளிப்படையாகப் பேசியவர். எந்தக் காரணமும் இன்றி, அவரை தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவரைக் கொலை செய்ய முஆவியா உத்தரவிட்டார்). இது ஒரே ஒரு சன்னி அறிஞரின் விமர்சனம் மட்டுமே. இதைப் போல பிற விமர்சனங்களும் காணக் கிடைக்கின்றன.

தலைவராவதற்கான தகுதிகள் என சில கூறுகளை நாம் ஏற்கனவே பார்த்தோம். முஆவியாவைப் பொருத்தவரை, குறைஷி என்பதைத் தவிர பிற கூறுகளை அவர் பூர்த்தி செய்யவில்லை. தலைமைப் பதவி குறைஷிகளுக்கே உரியது என்ற புரிதலை மறுக்கும் விதமான ஹதீஸ்களையும் நாம் பார்த்தோம். எனவே இத்தகைய ஹதீஸ்களை அவற்றின் காலச்சூழல் எதையும் கணக்கில் கொள்ளாமல் கண்மூடி நம்பும் ஒருவர் கூட, குறைஷி என்பதாலேயே தலைவர் ஆவதற்கு முஆவியா தகுதி பெற்றுவிட்டார் எனச் சொல்ல முடியாது.

ஆகவே இப்போது சன்னி பார்வையில், யார் ஆட்சிசெய்வது, அது எப்படி அமைய வேண்டும் போன்ற கேள்விகளுக்கு விடை காண்பதில் ஒரு வகையான நெருக்கடி உருவாகியுள்ளது போலத் தெரிகிறது. முஆவியாவைப் பொருத்தவரை அதிகாரத்தைக் கொண்டு —கிலாஃபா என்று அவரே சொல்லிக்கொண்ட— பதவியை அபகரித்துக் கொண்டார் என்பதை சன்னி அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். தலைமை குறித்த பிற கூறுகள், மற்ற முஸ்லிம்கள் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் போன்றவற்றையெல்லாம் அவர் பொருட்படுத்தவேயில்லை. அவர் முஸ்லிம்களின் தலைவராக தன்னை வலிந்து திணித்துக் கொண்டார். அவர்களும் அவரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

நான் முஆவியாவை சட்டவிரோத தலைவர் என அழைக்கிறேன். இப்படிச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. முஆவியா குறித்து வேறு சிலர் கொண்டிருக்கும் கருத்துகளை பற்றி நான் கவலைப்படவில்லை. உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். இஸ்லாமிய ஆட்சி முறையை அதன் உச்ச நிலையிலேயே கிட்டத்தட்ட நிர்மூலமாக்கிய முதல் நபர் முஆவியாதான். திருக்குர்ஆனையும் இறைத்தூதரையும் ஆழமாகப் படிக்கும் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்: “முஆவியா எதிர்க்கப்பட வேண்டியவர் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை”.

சட்டவிரோதத் தலைவரை எதிர்த்தல்

எனினும் ஒரு சாதாரண சன்னி அறிஞரிடம், “முஆவியா, யஸீத் மற்றும் இவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் போன்றவர்கள் தலைவர்களாகி விட்டால் நாம் என்ன செய்வது? அவர்கள் எப்படி பதவிக்கு வந்தார்கள் என்று நமக்குத் தெரியும். தலைமைத்துவத்துக்கான உங்கள் இலக்கணப்படியே இவர்கள் தலைவர்கள் ஆக முடியாதே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டால் அவர், “அவர்களை எதிர்க்கக் கூடாது. அவ்வாறு எதிர்த்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். குழப்பம் ஏற்பட்டு நிலைமை கைமீறிவிடும்; அதைத் தவிர்க்க வேண்டும் (த ஜன்னுபல் லில் ஃபித்னா) எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். ஆகையால் இதை சகித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் அவர்களோடு உடன்படவில்லை; எனினும் அவர்களை எதிர்த்து ஆயுதம் தாங்கி போர் செய்யவும் மாட்டோம்” என்று கூறுவார்.

அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிய மறுக்கும் ஆட்சியாளருக்கு நாம் கீழ்ப்படியத் தேவையில்லை என்ற சிந்தனையும் சில ‘சன்னிகள்’ மத்தியில் நிலவுகிறது. அதாவது மிகத் தெளிவான விஷயத்தில் அவர் இஸ்லாமிய சட்டத்துக்கு புறம்பாக தீர்ப்பு வழங்குகிறார் எனில் அவருக்கு கீழ்ப்படியத் தேவையில்லை. உதாரணத்திற்கு அரசுத் துரோகம் செய்தவருக்கு (முர்தத்) மரணதண்டனை விதிக்க வேண்டும் என்பது தெளிவான இஸ்லாமிய சட்டம். ஆனால் ஒரு ஆட்சியாளர் இத்தகைய ஒருவருக்கு பரிசளித்து கௌவரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது வெளிப்படையான விதி மீறல். இத்தகைய சூழலில் அவருக்கு கட்டுப்படத் தேவையில்லை.

இத்தகைய ஆட்சியாளரிடம் உண்மை மற்றும் நீதியை எடுத்துரைப்பது மட்டுமே அவருக்கு காட்டும் உச்சபட்ச எதிர்ப்பாக இருக்க முடியும் என்றும் சில சன்னிகள் கூறுகின்றனர். அதாவது இத்தகைய ஆட்சியாளரை எதிர்த்து அதிகபட்சம் நாம் செய்யக்கூடியது என்னவெனில் அவர்களுக்கெதிராக பேசுவதற்கான ஒரு மேடையை அமைப்பதுதான். இதற்கு அவர்கள் “கொடுங்கோல் ஆட்சியாளனுக்கு எதிராக உண்மையை உரைப்பதுதான் மிகச் சிறந்த போராட்டம் (அஃப்லலு ஜிஹாத் கலிமத்து ஹக்கின் இந்த சுல்தானின் ஜாஹில்)” என்ற இறைத்தூதரின் ஹதீஸை மேற்கோள் காட்டுகின்றனர்.

நேர்வழி நடந்த கலீஃபாக்கள் (கிலாஃபா அர் ராஷிதா)

இப்போது சிந்தனையைத் தூண்டும் சில விஷயங்களின் பக்கம் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இறைத்தூதரின் காலம் சன்னி, ஷியா, கவாரிஜ் என அனைவராலும் கண்ணியப்படுத்தப்படும் காலம். அதைத் தொடர்ந்து வந்த காலத்தில்தான் கருத்து வேறுபாடுகள் தோன்றின. நான் இங்கு ‘சன்னி’, ‘ஷியா’ அல்லது ‘கவாரிஜ்’ என்று சொல்லும்போது அவற்றின் தூய அர்த்தத்தில் அச்சொற்களைப் பயன்படுத்தவில்லை. மாறாக இன்று அனைவராலும் பயன்படுத்தப்படும் அர்த்தத்தில்தான் இச்சொற்களை பயன்படுத்துகிறேன் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். ‘சன்னி’ என்று சொல்லும்போது மிகப் பரந்த எல்லைகளைக் கொண்ட கருத்துகள் அதில் அடங்கியுள்ளன. கவாரிஜ்களும் ஷியாக்களும் தங்கள் கொள்கைகளுக்கு பல்வேறு விளக்கங்களைக் பெற்றிருப்பினும், சன்னிக்களுடையது அவற்றைவிட பரந்தது. கிட்டத்தட்ட மற்ற எல்லாவற்றிலும் நீங்கள் காணும் எல்லா கருத்துகளும் இவர்களின் எழுத்துக்களிலும் காணக்கிடைக்கும். ஆனால் அவை நீர்த்துப் போயிருக்கும்.

இத்தகைய சிந்தனை கொண்ட மக்களுள் பெரும்பாலானவர்களிடம் தனித்து நிற்கும் ஒரு விஷயம், நேர்வழி நடந்த கலீஃபாக்கள் (கிலாஃபா அர் ராஷிதா) என்று அழைக்கப்படும் கால கட்டம் குறித்து அவர்களிடம் காணப்படும் ஒருவித மரியாதை ஆகும். இறைத்தூதர் மறைந்த தினத்தில் தொடங்கி முஆவியா பதவி ஏற்றுக்கொண்டது வரை நீடிக்கும் இக்காலம் ஒளிவட்டம் பொருந்திய காலமாகக் கருதப்படுகிறது. அதை விமர்சிப்பது அவ்வளவு எளிதல்ல. எனினும் சில துணிச்சலான முஸ்லிம் உள்ளங்கள் அக்காலகட்டம் குறித்து சீரிய ஒழுங்குடன் ஆழ்ந்த பார்வையை செலுத்தியுள்ளனர். குறிப்பாக உஸ்மான் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் அவர்களின் குரல் மிக மெல்லியதாக இருந்தது; இன்றும் அப்படித்தான் இருக்கிறது. இன்றும்கூட அக்காலகட்டம் ஏதோ ஒருவகையில் சிறப்பு வாய்ந்ததாகவே நீடிக்கிறது. இத்தகைய பின்னணியிலிருந்து வருபவர்கள் அல்லது சன்னி கொள்கையின்பால் மேலதிகமாகக் கவரப்பட்டவர்களை, இயலுமாயின் இந்தக் காலகாட்டம் குறித்த புனிதக்கூட்டிலிருந்து  வெளியே வந்து சிந்திக்க வேண்டுகிறேன்.

அடுத்து மற்றொரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. ‘ஷியா’ அல்லது ‘கவாரிஜ்’ மனநிலை கொண்டவர்கள் இதை எளிதாக எதிர்கொண்டுவிடுவர். இதற்கு ‘ஆம்’ என பதிலளிப்பவர்களோடு நான் முரண்படுகிறேன் என்பதை முன்கூட்டியே தெரிவித்து விடுகிறேன். கேள்வி இதுதான்: நீங்கள் ‘சன்னி’ பின்னணியிலிருந்து வரவில்லையெனில், அபூபக்கர் ஒரு அரசர் என்று சொல்வது சரியாகுமா? அபூபக்கரையும் முஆவியாவையும் சமமாகப் பார்ப்பது சரியாகுமா? நேர்வழி நடந்த கலீஃபாக்கள் காலத்தில் சிறப்பு எதுவும் இல்லை, மற்ற காலங்களைப் போலத்தான் இதுவும் என்று கருதுபவர்களுக்கு இக்கேள்விகள் சாதாரணமாகத் தோன்றிவிடும். ஆனால் ‘சன்னி’ பின்புலத்திலிருந்து வருபவருக்கு இத்தகைய கேள்விகளே எழாது. இத்தகைய கேள்விகள் சிலருக்கு தோன்றுவதே, அவர்கள் பிற முஸ்லிம்களை புரிந்துகொள்ள முற்றிலும் தவறிவிட்டார்கள் என்பதை குறிக்கிறது. சக முஸ்லிமோடு நாம் கொண்டுள்ள உறவு முறிந்து விட்டதின் வெளிப்பாடுதான் இது.

இன்னும் ஒருபடி மேலே செல்வோம். அபூபக்கர் தலைமை வகித்த அரசாங்கம் பதவி வெறி பிடித்த அரசாங்கமாக இருந்ததா? அது இரக்கமற்ற அரசாங்கமாக இருந்ததா? அல்லது முஸ்லிம் பொதுப்புத்தியின் பங்களிப்பை உறுதிப்படுத்திய, கலந்தாலோசனை, பற்றுறுதி மற்றும் நீதி ஆகியவற்றை நடைமுறைப்படுத்திய அரசாங்கமாக இருந்ததா? இங்கு அபூபக்கர் எனச் சொல்லும் போது மற்ற மூவரையும் சேர்த்துத்தான் குறிப்பிடுகிறேன். அவ்வரசாங்கம் ஒரு தேசியவாத அரசாங்கமாக இருந்ததா? அல்லது நிலவிரிவாக்க, காலனித்துவ, ஏகாதிபத்திய நோக்கங்களை கொண்டதாக இருந்ததா?

இந்த இடத்தில் மற்றொரு வரலாற்று உண்மையையும் சொல்லியாக வேண்டும். உமருடைய ஆட்சிக் காலத்தில் விடுதலைக்கான இஸ்லாமிய இயக்கம் கிழக்கு எல்லையில் வேகமெடுத்துச் செயல்பட்டது. ஒரு காலத்தில் பைசாந்தியர்களும், பாரசீகர்களும் அரேபியாவை ‘சீண்டுவதற்கே லாயக்கற்ற’ பகுதிகளாகக் கருதின. ஆனால் உமருடைய காலத்தில், அரேபிய தீபகற்பத்தில் புதிதாகத் தோன்றியவர்களிடம் வெகுவிரைவாக பாரசீகப் பகுதிகள் தம் நிலப்பரப்பை இழந்து கொண்டிருந்தன. தேசியவாதத்தை தொக்கி நிற்கும் சில பாரசீக முஸ்லிம்களுடைய உணர்வுகளை இச்சம்பவம் சீண்டியிருக்கக் கூடும். தேசியவாதிகளுக்கும் —இன்றளவும் சமாதானப்படுத்த முடியாத— இந்த இஸ்லாமிய இயக்கம் குறித்து அவர்கள் கொண்டுள்ள கருத்துகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கக் கூடும்.

அபூ சுஃப்யான் கூறியதாக ஒரு செய்தி ‘சன்னி’ நூல்களில் மட்டுமின்றி பிற நூல்களிலும் உள்ளது. அவர் கூறியதாவது: “அரளீதும் யா பனீ அப்து மனாஃப் அன் யலிய அலைக்கும் தைய்மீயுன் வல்லாஹி ல’அம் ல’அன்னல் வாதி கைரிம் வ ரிஜ்லா”. இதன் பொருள்: “அப்து மனாஃப் கோத்திரத்தார்களே! இப்போது உங்களுக்கு மகிழ்ச்சிதானா?! உங்களை ஆள்வதற்கு ஒரு ‘தைமி’ (அபூ பக்கர்) வந்துள்ளாரே! இந்தப்பள்ளத்தாக்கு முழுவதையும் குதிரைகளையும் படைகளையும் கொண்டு நான் நிரப்பப் போகிறேன்”.

அப்து மனாஃப் என்பது உமவிகளை உள்ளடக்கிய வலுவான ஒரு குறைஷிக் கோத்திரம். ‘தைமி’ என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட கோத்திரத்தைக் குறிக்கும் சொல். இன்றைய அமெரிக்காவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளான மிசிசிபி, மேற்கு விர்ஜீனியா, அலபமா, லூயிசியானா போன்ற பகுதிகளிலிருந்து ஒருவர் அதிபர் ஆனால் எப்படியிருக்கும்?! அதேபோல ‘தைமியைச் சார்ந்த அபூபக்கர் ஆட்சிக்கு வந்துள்ளாரே! இப்போது உங்களுக்கு மகிழ்ச்சிதானா?! இதைத் தடுக்க நான் என்னால் இயன்ற முயற்சி செய்யப் போகிறேன்’ என்று கூறி இஸ்லாம் தோன்றுவதற்கு முன் நிலவிய பகையையும் வெறுப்பையும் மக்கள் மத்தியில் அபூ சுஃப்யான் தூண்ட முயற்சித்தார்.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ்  வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *