இஸ்லாமிய வரலாறு – 01 / அஹ்லுத் தஷய்யு சிந்தனைப் பள்ளி (பாகம் 4) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 01 / அஹ்லுத் தஷய்யு சிந்தனைப் பள்ளி (பாகம் 3)

♦ ♦ ♦ ♦ ♦

அசபியா

முஸ்லிம்களை வழிநடத்துவதற்கு தான் தகுதியானவர் என்ற உண்மையை இமாம் அலீ அறிந்தே இருந்தார். அவர் சாதாரண மனிதரல்ல. உண்மைகளை அறிந்திருந்த ஒரு தனித்துவமான ஆளுமை அவர். தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருந்த முரண்பாடுகளை அவர் அறிந்திருந்தார். ஆனால் மனிதர்களின் குறைபாடுகளால் ஏற்பட்ட முரண்பாடுகளையும் தீய எண்ணத்தால் ஏற்பட்ட முரண்பாடுகளையும் அவரால் பிரித்தறிய முடிந்தது. ஆனால் 1400 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் நம்மால் இதை அறிந்து கொள்ள முடியவில்லை. இதை இன்றைய மக்கள் புரிந்துகொண்டு பேசாமல் இருக்கிறார்களா அல்லது அவர்கள் இதை புரிந்து கொள்ளவேயில்லையா என்பதை நான் அறியேன்.

பிரச்சனை என்னவென்றால் அக்காலச் சமூகம் ஒரு ‘அசபியா’ சமூகமாக இருந்தது. அசபியா என்பது குலம் சார்ந்த நேசம் ஆகும். அது குலம், கோத்திரம் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது இனம், தேசம் மற்றும் தோற்றம் சார்ந்ததாக இருக்கலாம். அன்றைய அரேபிய சமூகத்தில் காணப்பட்ட கோத்திரவாதத்தை இன்றைய தேசியவாதத்தோடு ஒப்பிடலாம். இதை முழுமையாக வெற்றிகொள்வது சற்றே கடினமானது.

இறைத்தூதரின் காலத்தில், இந்தக் கோத்திரவாதம் (அசபியா) மேலோட்டமாக வீழ்த்தப்பட்டதென்றாலும் வேரறுக்கப்படாமலேயே இருந்தது. மீண்டும் தலைதூக்குவதற்கு தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தது. இருபது வருடங்களுக்கும் மேலாக அரேபியாவில் இறைத்தூதரை எதிர்த்துக் கொண்டிருந்த மக்கள், எதிர்காலம் இஸ்லாத்திற்கே சொந்தம் என்ற நிலை உருவானபின், இப்போது முஸ்லிம்களாக மாறியிருந்தனர்; இஸ்லாத்தின் வெற்றி முடிவாகி அது தன்னை நிலைநாட்டியிருந்தது; அதை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் சாத்தியமற்றுப் போயிருந்தன.

இந்த நிலையில் அம்மக்கள் “நாங்கள் பற்றுறுதி மிக்க முஸ்லிம்கள்” என்றனர். அவர்களுக்கான பதில் அல்லாஹ்விடமிருந்து வந்தது:   நபியே நீர் அவர்களிடம் கூறுவீராக! “நீங்கள் பற்றுறுதி கொண்டவர்கள் அல்ல. நீங்கள் மனமின்றி இணங்கியுள்ளீர்கள். எனினும் நம்பிக்கை (ஈமான்) உங்கள் உள்ளத்தை அடையவில்லை (வ காலதில் அ’ராபு குல்லம் துஃமினு வலா கின் கூலு அஸ்லம்னா வ லம்மா யத்குலில் ஈமானு ஃபீ குலூபிகும்).”

இப்போது இறைத்தூதர் இறந்துவிடுகிறார். அத்தினத்தில் (தகீஃபா) இறைத்தூதரின் உடலைக் குளிப்பாட்டிவிட்டு அங்கு கூடியிருந்த மக்களிடம் இமாம் அலீ வருகிறார். அப்போது அவர்கள் அனைவரும் அபூபக்கரை தலைவராகத் தேர்ந்தெடுக்கத் தயாராக இருக்கின்றனர். ஆனால் அபூசுஃப்யான் மட்டும் இமாம் அலீயிடம், “உங்கள் கையை நீட்டுங்கள். நான் உங்களுக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) செய்கிறேன்” என்றார். ஆனால் இமாம் அலீ அதற்கு சம்மதிக்கவில்லை. அன்று அவர் மட்டும் சம்மதித்திருந்தால் வரலாறு அபூசுஃப்யானின் விருப்பப்படி மாறியிருக்கும். அவர் அபூசுஃப்யானையும் அந்தச் சமூகத்தையும் நன்கு அறிந்திருந்தார். இறைத்தூதரின் போராட்டங்களில் அவரும் பங்கு பெற்றிருந்தார்; அவருடைய 23 ஆண்டுகள் இமாம் அலீயுடையதாகவும் இருந்தன.

அப்போது கோத்திரவாதம் தலைதூக்குவதற்கு ஆயத்தமாக இருந்தது. முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குவதற்கு ஆகத்தகுதியானவராக அவரது மருமகனும், சிறிய தந்தையின் மகனுமான இமாம் அலீ இருந்தாரெனினும், இறைத்தூதரின் உறவினர் அவர். அன்று அவர் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தால் அம்மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? அவர்களுள் பெரும்பாலானோர் ஒருசில வருடங்களுக்கு முன்னர்தான் முஸ்லிம்களாக மாறியிருந்தனர். இறைத்தூதர், நம்மிடமிருந்து அதிகாரத்தைப் பறித்து தம் குடும்பத்தார் வசம் ஒப்படைக்கிறார் என அவர்கள் கருதியிருக்கமாட்டார்களா? “அவர் செய்த பிரச்சாரமெல்லாம் ஒரு கண் துடைப்புதான். வாருங்கள்! இவர்களை அழித்து நாம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்” என்று எண்ணியிருக்கமாட்டார்களா?

இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பத்திலேயே கர்பலாவும் ஆஷுராவும் நிகழ்ந்திருக்கும். அப்போதே இமாம் அலீயும் இறைத்தூதரின் உறவினர்களும் இத்தகைய தேசியவாத சக்திகளால் வீழ்த்தப்பட்டு “நாங்கள்தான் தலைவர்கள். நீங்கள் அல்ல” என்று சொல்லும் நிலை ஏற்பட யாரேனும் விரும்புவார்களா? இவ்வாறு நிகழ்வது உகந்ததா அல்லது அத்தகைய கோத்திரவாதத்தை மீண்டும் தலைதூக்க விடாமல் மட்டுப்படுத்துவது உகந்ததா? இக்கேள்விகளை உங்கள் அறிஞர்களிடம், உங்கள் ஆசிரியர்களிடம் மற்றும் உங்கள் தலைவர்களிடம் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அபூபக்கரும் உமரும் கூட இவ்விஷயங்களை நன்கு உணர்ந்திருந்தனர். இத்தகைய கோத்திரவாத சக்திகள் மீண்டும் தலைதூக்கி விடாமல் தடுக்கவே அவர்கள் விரும்பினர். இதன் காரணமாக தம் குடும்பத்தினர், கோத்திரத்தார் என எவரையும் அவர்கள் பதவியில் அமர்த்தவேயில்லை.

வஞ்சகம் இல்லை

எனினும் உஸ்மான் வந்தபின் நிலைமை தலைகீழாக மாறிப்போனது. கோத்திரவாதத்தை எதிர்கொள்ளும் விதம் மாறியது. பிரச்சனைகள் உருவாகின. அவர் எல்லாவற்றையும் திறந்துவிட்டார். உஸ்மான், தான் செய்ததை அறிந்து செய்தாரா அல்லது அறியாமல் செய்தாரா என்பது அறிஞர்களின் விவாதப் பொருளாகும். ஏனெனில் அவர் வயது முதியவராக இருந்தார். தான் செய்ததெல்லாம் சரியானது என அவர் உளமாரக் கருதியிருக்கலாம். தான் தவறேதும் செய்யவில்லை என நினைத்திருக்கலாம். வயது முதிர்வின் காரணமாக அவரது நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். இத்தனை தவறுகளுக்குப் பிறகும் அவருக்குச் சாதகமாக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அவர் மக்களோடு மக்களாக இருந்தார்; அவர்களோடு பள்ளிவாசலுக்குச் சென்றார்; சிப்பாய்கள் புடைசூழ அவர் தன்னை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தவில்லை.

வஞ்சகத்தோடு இருக்கும் ஒருவர் இப்படி இருந்திருப்பாரா? இன்றைய ஆட்சியாளர்களைப் பாருங்கள். ஆட்சியைக் கைப்பற்றி தம் குடும்பத்தார், கோத்திரத்தார் அல்லது தம்மைச் சார்ந்தவர்களோடு மட்டுமே அதிகாரத்தைப் பங்கிடுபவர்கள், மக்களிடமிருந்து வெகுதூரமாக இருக்கின்றனர். உஸ்மான் தன்னை எதிர்ப்பவர்களுக்கெதிராக அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்ற போதிலும் அது வஞ்சக எண்ணத்தோடு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. நிச்சயமாக அவர், குர்ஆனால் கண்டிக்கப்பட்ட ஒருவரை ஒரு பகுதியின் ஆளுனராக நியமித்தார். அவர் முஸ்லிமாக இருந்து நிராகரித்து மீண்டும் முஸ்லிமானவர். இத்தகைய ஒருவரை எப்படி அவர் பதவியில் அமர்த்தினார் என்பது எனக்கு விளங்கவில்லை. எனக்குக் கிடைத்த நூல்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அப்போது என்னதான் நடந்தது என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கிறேன். எனவே உஸ்மான் விஷயத்தில் இருபுறமும் வாதம் செய்யமுடியும்.

அபூபக்கர் மற்றும் உமருக்கு மக்கள் அனைவரும் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தபின், இமாம் அலீ மட்டும் தயங்கினார் என்றபோதிலும், சில காலம் கழித்து அவர் பைஅத் செய்தார் என நூல்கள் கூறுகின்றன. அவர்களிருவரும் தொழுகையில் தலைமை தாங்கியபோது அவர்களின் பின்னால் இவரும் வரிசையில் நின்று தொழுதார். அவர்கள் வஞ்சகத்தோடு செயல்படுகிறார்கள் என்று இமாம் அலீ உணர்ந்திருந்தால் அவர்கள் பின் நின்று தொழுதிருப்பாரா?

இமாம் அலீயும் அவரது குடும்பத்தாரும் அபூபக்கர் மற்றும் உமரின் குடும்பத்தோடு திருமண உறவும் செய்திருந்தனர். பகையுணர்வு இருந்திருந்தால் இது சாத்தியமாகியிருக்குமா? ஆனால் உஸ்மானைப் பொறுத்தவரை அவர் சில கடுமையான தவறுகளைச் செய்தார். ‘அவர் செய்தது அரசியல் குற்றம்’ என்று கூட சிலர் அவர் மீது குற்றம் சுமத்துகின்றனர். அப்படியிருந்தும், அவர் தன் வீட்டில் சிறைபிடிக்கப்பட்டபோது, இமாம் அலீ தன் மகன்களை அனுப்பி அவருக்கு உணவும் தண்ணீரும் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

எனவே இவ்விஷயங்களைக் கொண்டு அவ்வளவு எளிதாக நாம் நம்மிடையே பகையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மாறாக புரிதலை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இதைச் செய்யத் தவறிவிட்டால், இவ்வுலகில் இயங்கும் சில கொடூர கொலைகாரர்களுக்கு நாம் இரையாக வேண்டியிருக்கும். அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நம் வரலாறை கற்று, நம் உளவியலை அறிந்து, முஸ்லிம்களாகிய நம்மிடையே பகையை விதைத்து ஒருவருக்கொருவர் அடித்துச் சாகும் நிலைக்கு நம்மை தள்ளிவிடுவர். இதைத்தான் அவர்கள் ஈராக்கில் செய்து கொண்டிருக்கின்றனர். சில விஷயங்களை அலட்சியம் செய்த காரணத்தினால், நாமே நம் ரத்தத்தைச் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. நம்மில் சிலர் இவ்வரலாறுகளை உணர்ச்சிப்பூர்வமாக அணுகினர். இன்னும் சிலர் அவற்றை அலட்சியத்தோடு அணுகினர். ஆனால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் இவ்வரலாறை மரபுகளிலிருந்து விலக்கி, இத்தனை காலமாக உருவாகியுள்ள எதிர்மறை எண்ணங்களைக் களைந்து அறிவார்ந்த நோக்கில் அணுக வேண்டும்.

பிறழ்வுகள்

இறுதியாக மேலும் சில மக்களைப் பற்றிப் பார்ப்போம். அவர்கள் கொண்டிருந்த சில சிந்தனைகள், அவர்களை முஸ்லிம்கள் என எளிதாக வரையறுப்பதை விட்டும் தடுக்கின்றன. ‘சில’ என நான் சொல்லும்போது அவர்கள் உண்மையிலேயே சொற்பமானவர்கள். நாம் பின்னர் பார்க்கப் போகும் கவாரிஜ்களுள் சிலரும் வினோதமான கருத்துகளையும் இஜ்திஹாதையும் கொண்டிருந்தனர்; அவர்களை நாம் பொதுமைப்படுத்த முடியாது. அதேபோல இவர்களையும் நாம் பொதுமைப்படுத்த முடியாது. நாம் கவனமாகவும் துல்லியமாகவும் இதை அணுகவேண்டும்.

ஷியாக்கள் என சொல்லும்போது அவர்களுள் சிலர், இமாம் அலீ ஏதோ ஒருவிதத்தில் தெய்வீகமானவர் எனக் கூறினர். இங்குதான் நாம் மர்மமான பகுதிகளை நெருங்குகிறோம். மக்கள் பிற மனிதர்களை மனிதத்துக்கு அப்பாற்பட்டு உயர்த்திப் பார்க்கும் போது இத்தகைய நிகழ்வுகள் நடந்துவிடுகின்றன. இமாம் அலீ ஏதோ ஒரு அர்த்தத்தில் கடவுள் என்ற நிலைக்கு அவரை உயர்த்திவிடுகின்றனர். இது நம் வரலாற்றின் உண்மை. காலங்காலமாக இத்தகையவர்கள் இருந்தனர். இப்போதும் —மிகச் சொற்பமாக— இருக்கின்றனர். அவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் தங்களுக்குத் தாங்களே விளக்கம் அளித்துக் கொள்ளட்டும்.

நீங்கள் அவர்களைக் காண நேர்ந்தால், அவர்களிடமே கேளுங்கள். எனினும் அவர்கள் பதிலளிக்க மிகத் தயங்குவர் என்பதையும் சொல்லிவிடுகிறேன். ஆகவே, அவர்களுள் திறந்த மனம் கொண்ட ஒருவரை நீங்கள் கண்டால் “இமாம் அலீ தெய்வீகமானவர் அல்லது கடவுள் அல்லது அதுபோல ஏதோவொன்று என்று நீங்கள் சொல்லும்போது, என்ன சொல்ல வருகிறீர்கள்?” என அவர்களிடமே கேளுங்கள். இமாம் அலீ ஒரு மனிதர்தான். சிறப்புவாய்ந்த மனிதர் அவர். ஆனால் கடவுள் அல்ல.

♦ ♦ ♦ ♦ ♦

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *