இஸ்லாமிய வரலாறு – 01 / அஹ்லுத் தஷய்யு சிந்தனைப் பள்ளி (பாகம் 3) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 01 / அஹ்லுத் தஷய்யு சிந்தனைப் பள்ளி (பாகம் 2)

♦ ♦ ♦ ♦ ♦

இமாம் அலீ

தலைவருக்கான பண்புகள் குறித்து முஸ்லிம்களை ஒற்றைக் கருத்தில் இணைக்கும்படியான உறுதியான திருக்குர்ஆனின் வசனம் அல்லது ஹதீஸ் ஒன்று கூட இல்லை என்னும் தகவலை நினைவூட்ட விரும்புகிறேன். அது முஸ்லிம்களாகிய நம் அறிவு முதிர்ச்சிக்கு சவாலாக விடப்பட்டுள்ளது. எனினும் ஷியா அல்லது இமாமத் கோட்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல் தலைமுறை முஸ்லிம்கள், சில ஹதீஸ்களை மேற்கோள் காட்டுகின்றனர். இமாம் அலீ எப்பேர்பட்டவர் என்பதையும் அவரது தகுதியையும் உணர்த்தும் இறைத்தூதரின் அறிவிப்புகள் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

இறைத்தூதர், இமாம் அலீயிடம் கூறியதாவது,  “உமது போர் எனது போர் ஆகும். உமது அமைதி எனது அமைதி ஆகும் (ஹர்பீ வ ஹர்புக், ஸில்மீ வ ஸில்முக்)”. நிச்சயமாகவே இது —எதிர்கால நிகழ்வுகளிலும் தாக்கம் ஏற்படுத்தும்— வலுவான கூற்றாகும்.

அதிகம் மேற்கோள் காட்டப்படும் பிரபலமான மற்றொரு அறிவிப்பின்படி, இமாம் அலீயைக் குறித்து இறைத்தூதர் கூறியதாவது, “யா அல்லாஹ்! அவருடைய முக்கிய ஆதரவாளராக நீயே இருப்பாயாக! அவரை எதிர்ப்பவர்களின் எதிரியாக நீயே இருபாயாக! (அல்லாஹும்ம வாலி மன் வாலா வ ஆதி மன் ஆதா)”. மிகத் தெளிவான பொருள் கொண்ட, வலுவான வாக்கியங்கள் இவை.

மேலும் மற்றொரு ஹதீஸ் இமாம் அலீயைக் குறித்து, “ஒரு நம்பிக்கையாளர் மட்டுமே உம்மை விரும்ப முடியும், ஒரு நயவஞ்சகர் மட்டுமே உம்மை வெறுக்க முடியும் (லா யுஹிப்புக இல்லா முஃமின் வ லா யக்லிபுக இல்லா முனாஃபிக்) என்கிறது.

இவையனைத்துமே தெளிவான பொருள் கொண்ட வலுவான ஹதீஸ்களாக இருந்த போதிலும், அவை இமாம் என்ற சொல்லை உள்ளடக்கியதாக இல்லை. பிற முஸ்லிம்களைப் பார்த்து, “எனக்குப் பிறகு அலீதான் உங்கள் இமாம்” என்று தெளிவாகக் கூறும் ஹதீஸ் இல்லவே இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் நாம் இப்போது இங்கே இது குறித்து பேசிக்கொண்டிருக்க மாட்டோம். நாம் அனைவரும் ஒற்றைக் கருத்தில் ஒன்றியிருப்போம்.

முஆவியாவின் எதிர்ப்பு

இப்போது நான் உங்கள் கவனத்தை எனது வெள்ளிக்கிழமை உரைகளின்பால் திருப்புகிறேன். அவற்றைக் கேட்போர் இவ்விஷயங்களை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்வர். வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் அத் தஷய்யு சிந்தனையை உணர்ச்சிகரமான, பிரபல்யமான ஒரு சக்தியாக மாற்றியது. இமாம் அலீயின் முக்கிய, தீவிர எதிரியான முஆவியா ஒரு கட்டளையிட்டார். தன் கட்டுப்பாட்டில் இருந்த இலாக்காக்களின் பள்ளிவாசல்கள் அனைத்திலும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை உரைக்குப் பின்னரும், உரை நிகழ்த்துபவர் இமாம் அலீயையும் அவரது மகன்கள் ஹஸன், ஹுஸைன் மற்றும் அவரது பிற குடும்பத்தினரையும் மேடையிலிருந்தே (மிம்பர்) சபிக்க வேண்டும் என்றார். இமாம் அலீயை வெறுத்த முஆவியா அவ்வெறுப்பை தந்திரமாக அரசியல்மயப்படுத்தினார்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! முஸ்லிமாக இருக்கும் ஒருவர், இறைத்தூதரை நன்கு அறிந்தவர், மக்கா மற்றும் மதீனாவில் நிகழ்ந்த போராட்டங்களை அறிந்தவர், இவையனைத்திலும் இமாம் அலீயின் முக்கியப் பங்கை அறிந்தவர் இவற்றை எப்படிப் பார்ப்பார் என்று சிந்தித்துப் பாருங்கள்! அக்கறையின்றி, சமூக நிகழ்வுகள் எதிலும் பங்குபெறாமல் அலட்சியமாக இருக்கும் ஒருவர் கூட வெள்ளி உரைக்குப் பிறகு ‘அல்லாஹும்ம இல்அன்’ —லஅன (சாபம்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது— என்று கேட்டபோது அவரது மனம் இறைத்தூதர்பால் மேலும் நெருங்கியது. முஆவியா விரும்பாவிட்டாலும் மக்கள் மத்தியில் இமாம் அலீ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவான ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு உருவாகியது. அதன் நீட்சியாக, அப்போது இமாம் அலீயின் அரசியல் முயற்சிகளை முன்னெடுத்திருந்த ஷியாக்கள் மத்தியில், நிலமையை மாற்றியமைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மேலோங்கியது.

இச்சம்பவங்களைக் கேள்வியுற்ற இறைத்தூதரின் மனைவி உம்மு சல்மா முஆவியாவிற்கு இவ்வாறு கடிதம் எழுதினார்: “அபூதாலிபின் மகனாகிய அலீயை சபித்து நிந்திப்பதன் மூலம் நீங்கள் உங்கள் மேடையிலிருந்து அல்லாஹ்வையும் அவனது தூதரையும் சபித்து, நிந்திக்கிறீர்கள். இதற்கு நானே சாட்சியாக இருக்கிறேன்.” அதாவது அவர் கூறுவது என்னவெனில் அல்லாஹ் இறைத்தூதரை நேசிக்கிறான். இறைத்தூதரோ அலீயை நேசித்தார். எனவே அலீயை சபிப்பது அல்லாஹ்வை சபிப்பதற்குச் சமமாகும் என்கிறார். இவ்வாறு வெள்ளி உரையின் இறுதியில் அலீயை சபிக்கும் வழக்கம் உமர் இப்னு அப்துல் அஜீஸ் பதவிக்கு வரும்வரை நீடித்தது. நீதிநெறி கொண்ட உமைய்யா ஆட்சியாளர்களுள் ஒருவரான உமர் இப்னு அப்துல் அஜீஸ்தான் இதற்கு முடிவு கட்டினார்.

பின்னர் கர்பலாவில் அந்தத் துர்சம்பவம் நிகழ்ந்தது. இமாம் ஹுஸைன் முஆவியாவின் மகன் யஜீதால் படுகொலை செய்யப்பட்டார். இமாம் ஹஸன் மற்றும் ஹுஸைன் குறித்து இறைத்தூதர் கூறிய  “அவர்களிருவரும் சுவனத்தில் இளைஞர்களின் தலைவர்களாக இருப்பர் (சைய்யிதா ஷபாபி அஹ்லுல் ஜன்னத்)” என்ற பொன்மொழியை நாம் அனைவரும் அறிவோம். மேலும் கர்பலாவிற்குப் பிறகு இமாம் ஹுஸைன் மற்றும் இமாம் அலீயின் புதல்விகள், யஜீதால் கைது செய்யப்பட்ட சம்பவமும் இத்தகைய அரசியல் சிந்தனைக்கு வலு சேர்த்தது. இவையனைத்தும் முஸ்லிம் பொதுப்புத்தியில், முஆவியாவிற்கு எதிராக ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அரசவை அறிஞர்கள்

எனினும் சில அறிஞர்கள் இருந்தனர்; இவர்களை நான் ‘அரசவை அறிஞர்கள்’ என அழைப்பதுண்டு. அவர்கள் தம் சொற்களால் அரசர்களையும் அரசாங்கத்தையும் —அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக இருந்த போதிலும்— பாதுகாக்க முற்படுவர். அத்தகைய ஒரு அறிஞர்தான் அஷ்-ஷஅபி. அவர் ஷியாக்கள் குறித்து கூறுவதாவது: “பிரினைவாதிகளான, அலீயின் ஆதரவாளர்களான ஷியாக்கள்தான் நம் சமூகத்தின் யூதர்கள் (அஷ்ஷியாவு யஹுது ஹாதிஹில் உம்மத்)” என்கிறார்.

அழ்ழாஹிரி சிந்தனைப் பள்ளியின் நிறுவனரான அந்தலூஸ் நகரத்தில் வாழ்ந்த மற்றொரு சட்டவியலாளர் (ஃபகீஹ்) இப்னு ஹஜமும் “ஷியாக்கள் யூதர்களின் வழியில் சென்றுவிட்டனர்” என்கிறார். இறைத்தூதராகிய இல்யாஸ் (அலை) மற்றும் இப்னு ஹாரூன் என்ற யூத துறவி இருவரும் இன்றுவரை உயிரோடு உள்ளனர் என யூதர்கள் கூறுவதைப் போலவே ஷியாக்களும் இமாம் மஹ்தீ இன்றளவும் உயிரோடு இருப்பதாகக் கூறுகின்றனர் என்கிறார். ஆனால் சில சூஃபிகளும் கூட கிள்ரு (அலை) மற்றும் இல்யாஸ் (அலை) அவர்கள் இருவரும் இன்றளவும் உயிரோடு இருப்பதாகக் கூறுகின்றனர். இவையனைத்தும் நம் வரலாற்றில் உள்ளது; இஸ்லாமியக் கலாச்சாரம் என நாம் சொந்தம் கொண்டாடும் கலாச்சாரத்தில் உள்ளது. இவற்றை யாரும் மறுக்க முடியாது.

இமாம் அலீயின் மேன்மை

இமாம் அலீயின் தலைமை குறித்து சந்தேகம் எழுப்புபவர்களுக்கு பதில் கூறும் விதமாக ஷியாக்கள் மற்றொரு அம்சத்தை சுட்டிக்காட்டுகின்றனர். இறைத்தூதரின் வாழ்ந்த காலத்தில் இமாம் அலீ தனக்கு மேலான பதவியில் இறைத்தூதரைத் தவிர வேறெவெரையும் ஒருமுறை கூட கொண்டிருக்கவில்லை. ஆனால் அபூபக்கர் மற்றும் உமரின் நிலை இவ்வாறில்லை. உதாரணமாக உசாமா போரை எடுத்துக்கொள்ளலாம். இறைத்தூதரின் காலத்தில் நிகழ்ந்த கடைசி இரு போர்களில் —அப்படையில் உமர் மற்றும் அபூபக்கர் இருந்த போதிலும்— இறைத்தூதர் உசாமா பின் ஜைதை தளபதியாக நியமித்தார்.

மற்றொரு சமயம் ஹஜ்ஜின் போது இறைத்தூதர் அபூபக்கரை மக்காவிற்கு அனுப்பியிருந்தார். பின்னர் அலீயையும் மக்காவிற்கு அனுப்பி அவரிடமே அத்தியாயம் பராஅ அல்லது அத்தியாயம் தவ்பாவின் வசனங்களை ஓதுவதற்குப் பணித்தார். குழுவின் தலைவராக அபூபக்கர் இருந்த போதிலும் அப்பொறுப்பை அவரிடம் கொடுக்காமல் இறைத்தூதர் இமாம் அலீக்கே கொடுத்தார். இவையனைத்தும் மற்ற எல்லோரையும்விட இமாம் அலீதான் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவர் என விளக்குவதற்கு சொல்லப்படுகிறது. நம் இஸ்லாமிய வரலாற்றின் முற்பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவங்கள் இமாம் அலீயின் தகுதி குறித்து விளக்குவதற்கு எடுத்துரைக்கப்படுகிறன.

தலைமை – மக்களின் ஒப்புதல்

தலைமைப் பதவி குறித்து இமாம் அலீ என்ன கருதினார் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. மேலும் இது விஷயத்தில் அபூபக்கர் மற்றும் உமரின் கருத்து என்ன என்றும் கேட்கப்படுகிறது.

இக்கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக அக்கால நிகழ்வுகளை நான் உங்கள் கண் முன்னே கொண்டுவர வேண்டியுள்ளது. நீண்ட காலமாக வெள்ளிக்கிழமை உரைகளில் இது குறித்து பேசியுள்ளேன். இறைத்தூதர் இவ்வுலகை விட்டு மறைந்த போது உலகம் வெற்றிடமாக இருக்கவில்லை. அதில் பல்வேறு மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். இஸ்லாத்திற்கு முந்திய அரசியல் போக்குகள் இருந்தன; ஒரு வலுவான கலாச்சாரம் இருந்தது. இஸ்லாம் வந்த பிறகு அம்மக்கள், கலாச்சார நீக்கம் பெற்றனர்.

முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு அபூபக்கரும் உமரும் தகுதியானவர்கள் என்று அப்போது வாழ்ந்த பெரும்பாலான மக்கள் கருதினர்; அவர்கள் இருவரும் அதை ஏற்றுக் கொண்டனர். இது அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில் செய்யப்பட்டது அல்ல. இங்குதான் சிலர் நம் வரலாறை தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். தலைமைப் பொறுப்பு விஷயத்தில் இறைத்தூதருக்கும் இமாம் அலீக்கும் நடுவில் அபூபக்கரும் உமரும் தம்மை புகுத்திக்கொண்டனர் என்று சிலர் கருதுகின்றனர். இது உண்மையல்ல.

நிச்சயமாக இறைத்தூதர் இமாமாக இருந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்தான்  முஸ்லிம்களின் தலைவராக (வலீ அல் அம்ர்) இருந்தார். மேலும் அக்காலத்தில் மக்களை வழி நடத்துவதற்கு இமாம் அலீ ஆகத்தகுதியானவராக இருந்தார் என்பதும் உண்மைதான். எனினும் முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பு என்பது அத்தலைமையில் அவர்கள் கொண்டுள்ள ஈடுபாடு சார்ந்தும் உள்ளது. இந்த விதி இறைத்தூதர்களுக்கும் பொருந்தும்.

இறைத்தூதர் என்பவர் இறைவனின் தூதர்தான். எனினும் அவரது தலைமை பற்றிய விஷயம், அம்மக்களின் ஒத்துழைப்பு சார்ந்து இருக்கிறது. நூஹ், இப்ராஹீம், மூசா, ஈசா, இறுதித்தூதர் என எல்லா இறைத்தூதர்களுக்கும் இது பொருந்தும். எனவே பிற சில இறைத்தூதர்கள் இமாமாக இருந்தும் அல்லது இமாமத் தகுதி பெற்றிருந்தும் அவர்களால் மக்களின் தலைமையை ஏற்க முடியவில்லை எனில், அதற்குக் காரணம் அவர்களின் தகுதிக் குறைபாடு அல்ல. மாறாக அவர்களுக்கு மக்களின் ஒப்புதல் கிடைக்காததே காரணமாகும். இதுபோலத்தான், இமாம் அலீயும் ஆகத்தகுதியானவராக இருந்தபோதிலும், மக்களின் ஒப்புதல் இன்றி அவர்களை அவர் வழிநடத்த முடியாது.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 01 / அஹ்லுத் தஷய்யு சிந்தனைப் பள்ளி (பாகம் 4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *