இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 4) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 3)

♦ ♦ ♦ ♦ ♦

உட்பிரிவுகள்

நான் ஏற்கனவே சொன்னது போல கவாரிஜ்களுள் உட்பிரிவுகளும் உள்ளன. நான் உட்பிரிவு என்ற சொல்லை பிரயோகிக்க விரும்பவில்லை. எனினும் இது புழக்கத்தில் இருப்பதால் இவ்வாறு கூறுகிறேன். அது குறித்து இப்போது பார்ப்போம்.

 அல் அஸாரிகா

முதலாவது அல் அஸாரிகா. இவர்கள் நாஃபி இப்னு அல் அஸ்ரா என்பவரை பின்பற்றியவர்கள். ஒரு காலத்தில் இவர்கள் கவாரிஜ்கள் மத்தியில் மிக முக்கியமானவர்களாகத் திகழ்ந்தனர். அதிக எண்ணிக்கை கொண்டவர்களாகவும் அதிகாரம் பெற்றவர்களாகவும் இருந்தனர். இவர்களின் கொள்கைகளை சுருக்கமாகப் பார்ப்போம். அவர்கள் ‘அல் அஸாரிகாவை எதிர்ப்பவர்கள் அனைவரும் நிராகரிப்பவர்கள் (காஃபிர்); அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்குவர்; அவர்களை எதிர்த்துப் போர் புரிவது ஆகுமானது’ என்றனர். அதாவது தங்களை எதிர்ப்பவர்களை எதிர்த்துப் போர் புரிந்து அவர்களைக் கொல்வது அனுமதிக்கப்பட்டது என்றனர். கவாரிஜ்கள் முஸ்லிம் அல்லாதவர்களை எதிர்த்து போர் புரிந்த நிகழ்வு எதையும் நான் அறியவில்லை என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். எனவே ‘தங்களை எதிர்ப்பவர்கள்’ என அவர்கள் கூறும்போது அது முஸ்லிம்களையே குறிக்கிறது. எனவே அவர்களைப் பொறுத்தவரை தங்களை எதிர்க்கும் முஸ்லிம்களுக்கு எதிராக போர் புரிவதும் அவர்களைக் கொல்வதும் முற்றிலும் சட்டப்பூர்வமானது.

சட்டவியல் (ஃபிக்ஹ்) நூல்களில் போர்ப் பிரதேசம் (தாருல் ஹர்ப்) இஸ்லாமியப் பிரதேசம் (தாருல் இஸ்லாம்) என்று சொல்லப்படுவது உண்டு. அல் அஸாரிகாவின் சட்டவியல்படி அவர்களை எதிர்ப்பவர்களின் பகுதிகள் அனைத்துமே போர்ப் பிரதேசத்தில் அடங்கும். நாம் அறிந்து வைத்துள்ள இஸ்லாமியப் பிரதேசம் என்பது —அகன்ற அர்த்தம் கொண்ட— எல்லா முஸ்லிம்களையும் உள்ளடக்கிய இஸ்லாமியப் பகுதிகளைக் கொண்டது. ஆனால் இப்போது இந்த கவாரிஜ்களின் பார்வையில், இஸ்லாமியப் பிரதேசத்துக்கு உள்ளேயே ஒரு போர்ப் பிரதேசத்தைப் பார்க்கிறோம். மேலும் இந்தப் போர்ப் பிரதேசத்தில் முஸ்லிம்களால் பிற முஸ்லிம் அல்லாத பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் பொருந்தும். அதாவது போர் சட்டம், போர்க் கைதிகள் பற்றிய சட்டம் என எல்லாவற்றையும் முஸ்லிம் பகுதிகளுக்குள்ளாகவே அவர்கள் அமுல்படுத்தினர். ‘பிற முஸ்லிம்களை எதிர்த்து போர் புரியலாம்; அவர்களை சிறை பிடிக்கலாம்; அவர்களின் பெண்களையும் போர்க்கைதிகளாக கைப்பற்றலாம்’ என்றனர்.

மேலும் அவர்கள் தங்களை எதிர்ப்பவர்களின் குழந்தைகளும் நிரந்தரமாக நரகத்தில் தங்கும் என்றனர். குழந்தைகள்! அதாவது அவர்களை எதிர்க்கும் முஸ்லிம்களின் குழந்தைகளும் தம் பெற்றோரைப் போலவே நிராகரிப்பாளர்கள் (காஃபிர்) என்றனர். உறவின் அடிப்படையில் நிராகரிப்பு குற்றத்தைச் சுமத்தி குழந்தைகள் என்றபோதிலும், நிராகரிப்பவர்களின் குழந்தைகள் என்பதால் அவர்களும் நிராகரப்பவர்களே என்றனர். அதுமட்டுமின்றி, அவர்கள் தங்களோடு சேர்ந்து போரில் ஈடுபடாத பிற கவாரிஜ்களையும் நிராகரிப்பவர்களாகவே கருதினர். எனினும் பாதுகாப்பு பெற்றவர்கள் —முஸ்லிம்களோடு வாழ்ந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் (அஹ்ல் அத் திம்மா) — விஷயத்தில் இவர்களின் கொள்கை முரண்பட்டு இருந்தது. பாதுகாப்பு பெற்றவர்களின் உயிரும் அவர்களின் குடும்பத்தினரின் உயிரும் புனிதமானது என்றும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும், அவர்களின் இரத்தத்தைச் சிந்துவது தடுக்கப்பட்டது என்றும் நம்பினர். ஒரு பக்கம் நிராகரிப்பாளர்கள் என அவர்கள் கருதிய முஸ்லிம்களின் குழந்தைகளை கொல்வது ஆகுமானது என்று கூறிய அஸாரிகாக்கள், மறு பக்கம் பாதுகாப்பு பெற்றவர்களை கொல்லக் கூடாது என்றும் கூறினர்.

இவர்களின் சட்டவியலில் நாம் காணும் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், இவர்கள் ‘ரஜ்ம்’ என்னும் தண்டனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘ரஜ்ம்’ என்பது திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்களை கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை முறை ஆகும். அவர்களின் கூற்றுப்படி, இது குர்ஆனிலும் இல்லை. இறைத்தூதரின் வழிகாட்டலிலும் (சுன்னாஹ்) நிறுவப்படவில்லை. ஆதலால் அவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும் இவர்கள், இறைத்தூதர்களும் பெரும்பாவங்கள் (கபாயிர்) மற்றும் சிறுபாவங்களுக்கு (சகாயிர்) ஆட்பட்டவர்கள் என்றனர். இதற்குச் சான்றாக ‘இன்னா ஃபதஹ்னா லக ஃபதஹ்னம் முபீனா லி யக்ஃபிர லகல்லாஹ…நிச்சயமாக உமக்கு வெளிப்படையான வெற்றியளிப்போம். எனவே உம் முந்திய மற்றும் பிந்திய பாவங்களை (தன்ப்) அல்லாஹ் மன்னிப்பான்’ என வரும் வசனத்தை மேற்கோள் காட்டினர். இதைக்கொண்டு அவர்கள் கூறியதாவது, “இறைத்தூதர் முந்திய மற்றும் பிந்திய பாவங்களை (தன்ப்) கொண்டுள்ளார். எனினும் அல்லாஹ் அவற்றை மன்னித்துவிட்டான்; எவ்வாறாயினும் இறைத்தூதர் பாவம் செய்தார்; செய்வார் என்பதையே இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது”. இத்தகையவர்கள்தான் அஸாரிகாக்கள்.

அந் நஜ்தாத்

அடுத்தது, அந் நஜ்தாத் வகை கவாரிஜ்களைப் பற்றிப் பார்ப்போம். இவர்கள் நஜ்தா இப்னு உவைமிர் என்பவரைப் பின்பற்றியவர்கள். அல் அஸாரிகாவைவிட வன்முறை குறைந்த கொள்கைகளை கொண்டிருந்த இவர்கள், பின்வரும் ஒரு சில கொள்கைகளைத் தவிர மற்றவற்றில் ஏறத்தாழ அஸாரிகாவைப் போலவே இருந்தனர். அஸாரிகாவைப் போல இவர்கள் தங்களோடு சேர்ந்து ஆயுதம் ஏந்தி போரில் ஈடுபடாத பிற கவாரிஜ்களை நிராகரிப்பவர்களாகக் கருதவில்லை. மேலும் குழந்தைகளைக் கொல்வது தடுக்கப்பட்டது என்றனர். அதாவது தங்களை எதிர்ப்பவர்களைக் கொல்லலாம்; ஆனால் அவர்களின் குழந்தைகளைக் கொல்லக்கூடாது என்றனர். பாதுகாப்பு பெற்றவர்கள் விஷயத்திலும் இவர்கள் அஸாரிகாவோடு வேறுபட்டனர். பிற விஷயங்களில் பரந்த மனப்பான்மையோடு செயல்பட்ட நஜ்தாத், இவ்விஷயத்தில் “பாதுகாப்பு பெற்றவர்கள் எதிரிப் பிரதேசத்தின் அங்கமாக இருப்பதாலும் நாம் போர்செய்யும் எதிரி மக்களைச் சார்ந்திருப்பதாலும் அவர்களையும் கொலை செய்யலாம்” என்றனர்.

நஜ்தாத்களின் மற்றொரு முக்கிய கொள்கை முஸ்லிம்களுக்கு இமாம் அல்லது கலீஃபா தேவையில்லை என்று கூறியது. இன்று தீவிர வலதுசாரிகள் மற்றும் தீவிர இடதுசாரிகள் மத்தியில், அரசாங்கம் என்ற கருத்தாக்கம் இல்லாமலேயே மக்கள் பொதுவாழ்க்கையை நடத்த முடியும் என்ற ஒரு சிந்தனை நிலவுகிறது. அரசியல் கல்வி பயிலும் மாணவர்கள் இதை அறிந்திருக்கக் கூடும். இங்கு அமெரிக்காவில், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் ஒருவர் அரசாங்கத்தின் பெரும்பகுதியை அகற்றிவிட விரும்புகிறார். வலதுசாரி சிந்தனை கொண்ட அவர் அத்திசையில்தான் செல்கிறார். அதேபோல, “இறுதியில், அரசு வாடிவிடும்” என்பது கார்ல் மார்க்ஸின் கூற்று. இதைச் சொல்வதன் மூலம் கவாரிஜ்களை வலதுசாரிகள் என்றோ இடதுசாரிகள் என்றோ நான் கூறவில்லை. கவாரிஜ்கள் அன்று கூறிய அக்கருத்து இன்று வாழும் நமக்கு புதிதல்ல என்பதையே இங்கு சுட்டிக் காட்டுகிறேன். இன்று எதிர்காலத்துக்காக திட்டமிடும் அரசியல் கோட்பாட்டாளர்களும் கொள்கைவாதிகளும் ‘நாம் வலுவான சமூக சிந்தனை கொண்டவர்களாக இருந்தால் அதிபர், அரசர், இமாம் அல்லது கலீஃபா போன்றவர்களை தலைவராகக் கொண்ட அரசாங்கம் என்ற கட்டமைப்பு இல்லாமலே நம் பிரச்சனைகளை சரி செய்துவிட முடியும். இத்தகைய பதவிகள் தேவையற்றவை’ என்று கூறுவதை நாம் பார்க்கிறோம். இதைத்தான் கவாரிஜ்களும் கூறினர். எனினும் ‘மக்கள் தங்களுக்குத் தாங்களே நீதம் செய்து, அன்றாட வாழ்வில் நீதி நேர்மையை நிலைநாட்டும்படியான சமூகப் பிணைப்புடன் வாழ்வார்களெனில் மட்டுமே இமாம் அல்லது கலீஃபா தேவையில்லை’ என்றும் அவர்கள் கூறினர். மேலும் “வாழ்க்கை என்றுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. சிலசமயம் மேற்கூறியது சாத்தியமில்லாது போய்விடலாம். அப்போது தலைமை தேவைப்படும்” என்றனர். இதை அவர்கள், ‘அல் இமாமத் ஜாயிஸா வ லைசத் வாஜிபா (தலைமை அனுமதிக்கப்பட்டது, கடமையானது அல்ல)’ என்று கூறினார்கள். அதாவது “தலைமையற்ற சமூகத்தை முயற்சி செய்து பின்னர் முஸ்லிம்கள் தமக்கு தலைமை வேண்டும் என்று விரும்பினால் அவர்களின் தேவையை (மஸ்லஹா) பொறுத்து அது கடமை ஆகி விடும் என்றனர்.

மேலும் இவர்கள் ‘தகியா’ கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தினர். அதாவது, அவர்கள் ‘காஃபிர்கள்’ எனக் கருதும் பிற முஸ்லிம்கள் மத்தியில் இருக்கையில், தங்கள் கொள்கைகளை வெளிப்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும் என அஞ்சினால் அதை மறைத்து விடுவர். பிற முஸ்லிம்களைப் போலத்தான் தாங்களும் என பாசாங்கு செய்வர்.  இவ்வாறு செய்வது ஒருவகையான நயவஞ்சகம் அல்லது நேர்மையின்மை என நினைக்கும் பிற கவாரிஜ்களைப் போலன்றி, இத்தகைய சந்தர்ப்பத்தில் தங்கள் அடையாளத்தை மறைப்பதில் தவறேதும் இல்லை என்று நஜ்தாத்கள் கூறினர். ஹிஜ்ரி 66 இல் நஜ்தாத்களின் கட்டுப்பாட்டில் பஹ்ரைன், ஹத்ரமொளத், யமன் மற்றும் தாயிஃப் பகுதிகள் இருந்தன.

இபாதிய்யா

அடுத்ததாக அல் இபாதிய்யா கவாரிஜ்களைப் பற்றி பார்ப்போம். இவர்கள், அப்துல்லாஹ் இப்னு இபாத் என்பவரை பின்பற்றுபவர்கள். இன்று கவாரிஜ் எனும் பொதுப் பிண்ணனி கொண்ட முஸ்லிம்களுள் ஏறத்தாழ 99% பேர் இபாதிய்யாகளாகவே இருப்பர். நான் இவ்வகை கவாரிஜ்களை சந்தித்து அவர்களோடு உரையாடி இருக்கிறேன். உண்மையைச் சொன்னால், கவாரிஜ் என்று அழைக்கப்படுவதை இவர்கள் விரும்புவதில்லை. யாராவது அவ்வாறு குறிப்பிட்டால் இவர்கள் மனம் புண்படுவதை காணலாம். சிலசமயம் அவர்கள் சீற்றமடையவும் கூடும். கவாரிஜ்களின் மத்தியில் மிகவும் நடுநிலையானவர்கள் என கருதப்படுபவர்கள் இவர்களே. பிற கவாரிஜ்களிடம் காணப்படும் தீவிரத்தன்மையோ, பகுத்தறிவற்ற போக்கு அல்லது பொறுப்பற்ற தன்மை இவர்களிடம் காணப்படுவதில்லை. இவர்கள் தங்களை எதிர்ப்பவர்களை நிராகரிப்பவர்கள் (காஃபிரீன்) என்று சொல்வதில்லை. அதேசமயம் அவர்களை நம்பிக்கையாளர்கள் (முஃமின்) என்றும் சொல்வதில்லை. இரண்டுக்கும் மத்தியில் ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள், “சரி, நீங்கள் முஸ்லிம்கள்தான். எனினும் தீவிரமாக ஒருபக்கம் சாய்ந்து உங்களை நிராகரிப்பவர்கள் என்றோ அல்லது மறுபக்கம் சாய்ந்து நம்பிக்கையாளர் என்றோ நாங்கள் சொல்லப்போவதில்லை” என்கின்றனர்.

எனினும் சிலசமயம் இவர்கள், பிற முஸ்லிம்களைக் குறித்து நிராகரிப்பவர்கள்  (குஃப்பார் அல்லது காஃபிரீன்) என்ற சொல்லைப் பிரயோகிப்பதுண்டு. அப்படிச் செய்கையில் அவர்கள் நம்பிக்கை அல்லது கொள்கையில் (அகீதா) நிராகரிப்பவர்கள் என்ற அர்தத்தில் அச்சொல்லை பிரயோகிப்பதில்லை. மாறாக இறைவனின் அருட்கொடைகளை (நிஃமா) நிராகரிப்பவர் என்ற அர்த்தத்திலேயே அதை பயன்படுத்துகின்றனர். கவாரிஜ்களுள் சிந்திக்கத் துவங்கும் மக்களை இங்குதான் நாம் சந்திக்கிறோம். இவர்கள் விஷயங்களை மேலோட்டமாக அல்லது முன்யோசனையின்றி கையாளவில்லை.

நம்பிக்கையில் நிராகரிப்பு (குஃப்ர் ஈமான்) என்றும் இறைவனின் அருட்கொடைகளில் நிராகரிப்பு (குஃப்ர் நிஃமா) என்றும் பிரித்துப் பார்க்கிறார்கள். அதாவது அவர்கள் பிற முஸ்லிம்களைப் பார்த்து, ‘நீங்கள், அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் (காஃபிர்) என்று சொல்லாமல் ‘இறைவனின் அருட்கொடைகளை (நிஃமா) நிராகரிப்பவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நிராகரிப்பாளர்கள் (காஃபிர்)’ என்கின்றனர். மேலும் இறைவனின் அருட்கொடைகளை நிராகரித்தல் என்பது நம்பிக்கை அல்லது கொள்கையை நிராகரிப்பதற்குச் சமமாகாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே அவர்கள் சொல்வதாவது ‘பிற முஸ்லிம்கள், அல்லாஹ் விதித்த சில பொறுப்புகளை நிராகரிப்பவர்கள் (அவர்களின் வார்த்தைகளில் ‘காஃபிரூன பி தன்பில்லாஹ்’); எனினும் அவர்கள் அல்லாஹ்வையே நிராகரிப்பவர்கள் அல்ல. ஆதலால் அவர்கள் நிராகரிப்பு எனும் தண்டனைக்குரிய கருதுகோளுக்கு குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள்’. மேலும் அவர்கள் தங்களோடு முரண்படும் முஸ்லிம்களின் உயிர் மதிப்பு மிக்கது என்றும் பிற முஸ்லிம்கள் வாழும் பகுதிகளும் இஸ்லாமியப் பிரதேசங்களாகவே கருதப்படும் என்று கூறுகின்றனர். ஆகவே பிற கவாரிஜ்களோடு ஒப்பிடுகையில் இவர்கள் உண்மையான, ஆழமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர்.

எனில் இவர்களை கவாரிஜ் என அடையாளப்படுத்துவது எது? பிற முஸ்லிம்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்துவது எது என்று நான் அவர்களிடம் கேட்டுள்ளேன். அவர்கள் கூறியதாவது “அபூபக்கர் மற்றும் உமரின் ஆட்சி நன்றாகவே இருந்தது. உஸ்மானின் முதல் ஆறு ஆண்டுகால ஆட்சியிலும் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் அடுத்த ஆறு ஆண்டுகள் பிரச்சனைக்குரியவை. அதேபோல், மத்தியஸ்தத்திற்கு முன் இமாம் அலீயும் சரியாகவே இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவர் மீது எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு”. பிறரைப் போல அவர்கள் ஒரு தீவிரத்திற்கு செல்லவில்லை என்றாலும் அவர்களுக்கு இமாம் அலீ மீது விமர்சனங்கள் இருந்தன. ஆகவே ‘ஷியா’ மற்றும் ‘சன்னி’களோடு இணங்கிச் செல்லாத ஒரு நிலைபாட்டை அவர்கள் கொண்டுள்ளனர்.

கவாரிஜ்கள் தொடர்ச்சியாக போரில் ஈடுபட்டிருந்தனர் எனப் பார்த்தோம். இத்தகைய போர்களில் ஈடுபட்ட மற்ற கவாரிஜ்கள், “போரில் கிடைக்கும் எல்லா வெற்றிப் பொருள்களும் எங்களுக்குத்தான் சொந்தம்” என்றனர். ஆனால் இபாதா வகை கவாரிஜ்கள் கூறியதாவது, “இல்லை. இத்தகைய போர்களில் கிடைக்கும் வெற்றிப் பொருள்களை நாங்கள் சொந்தம் கொண்டாட மாட்டோம். அதில் கைப்பற்றப்படும் ராணுவத் தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து சாதனங்கள் தவிர்த்து பிற பொருள்களனைத்தும் அம்மக்களுக்கே உரியது. இவ்விரண்டை மட்டும் நாங்கள் எடுத்துக் கொள்வோம். இவையல்லாத நிலம், வீடு போன்ற பிற உடமைகள் அவர்களுக்கே சொந்தம்” என்றனர். ஏனெனில், இவர்கள் யாரை எதிர்த்து போர் செய்தார்களோ அவர்கள் அனைவரும் முஸ்லிம்களே —அதாவது அவர்களுடைய பார்வையில், தவறான அரசியல் பாதையில் இருக்கும் முஸ்லிம்கள்.

மேலும், பிற கவாரிஜ்களைப் போலன்றி இபாதாக்கள் தங்களோடு கருத்து வேறுபாடு கொண்ட பிற முஸ்லிம்களின் சாட்சியங்களையும் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் ‘காபிலூ ஷஹாதத்தல் முஃகாலிஃபீன்’ என்றனர். “நீங்கள் எதிர் தரப்பினர்; ஆதலால் உங்கள் சாட்சியத்தை ஏற்கமாட்டோம்” என்று கூறிய பிற கவாரிஜ்களைப் போலன்றி இபாதாக்கள் பிற முஸ்லிம்களின் சொற்களுக்கு மதிப்பளித்து அவர்களின் சாட்சியங்களும் நீதிமன்றங்களில் செல்லுபடியாகும் என்றனர். இபாதாக்கள் பிற முஸ்லிம்களோடு கலப்புத்திருமணமும் செய்தனர்; வாரிசுரிமை சட்டங்களும் சமமாகப் பொருந்தும் என்றனர். ஆனால் பிற வகை கவாரிஜ்கள், இவை கூடாது என்றனர்.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 01 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *