இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 3) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 2)

♦ ♦ ♦ ♦ ♦

நஹ்ரவான்

இந்தச் சம்பவம்தான் நஹ்ரவான் போர் நடைபெறுவதற்கு காரணமாக இருந்தது. இன்றைய தெற்கு ஈராக்கில் நடந்த அச்சம்பவம் இமாம் அலீயின் காதுகளுக்கு எட்டியது. அவர், “இதற்கு அவர்கள் பொறுப்பேற்று கொலைக்கான நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இதற்கு அவர்கள் பதிலளித்தே ஆக வேண்டும்” என்றார்.  அக்கூட்டத்தில் ஒரு 30-40 பேர் இருந்திருந்தாலும் அனைவரும் சேர்ந்து கொலையில் ஈடுபட்டிருக்க முடியாது; ஒரு சிலர்தான் இத்தகைய மாபாதகச் செயலில் நேரடியாக ஈடுபட்டிருப்பர். அவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க இமாம் அலீ விரும்பினார். ஆகவே கொலையாளிகள் யார் என்று விசாரிக்க அவர்களிடம் சிலரை அனுப்பினார். அவர்களோ “நாங்கள் எல்லோரும்தான் கொலையாளிகள். நாங்கள் அனைவரும் சேர்ந்து அவர்களைக் கொன்றோம்”, என்றனர். இத்தகைய அணுகுமுறையை அவர்கள் கையாண்ட போது, அவர்களைக் கட்டுப்படுத்துவது அவசியமாயிற்று. இதைத் தொடர்ந்துதான் நஹ்ரவான் போர் நடந்தது. இதில் கிட்டத்தட்ட 3000 கவாரிஜ்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் பார்வையில் ‘இமாம் அலீ ஒரு நிராகரிப்பவர் (காஃபிர்)’ என்னும் தவறான கருத்தை இப்போர் மேலும் வலுப்படுத்தியது. ஏனெனில் ‘இப்போது அவர் முஸ்லிம்களைக் கொல்கிறார்; அதுவும் (அவர்களின் பார்வையில்) முஸ்லிம்களிலேயே ஆகச்சிறந்தவர்களான எங்களைக் கொல்கிறார்’ என்றனர்.

முரண்

இவையனைத்தையும் படித்துவிட்டு சிலர் உணர்ச்சிப் பொறிகளில் சிக்கிவிடுகின்றனர். அத்தகைய உணர்ச்சிகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு  கவாரிஜ்களை புரிந்து கொள்ள முயற்சித்தால், அவர்களுடைய பண்புகள், நோக்கம் போன்றவற்றைப் பார்த்தால், அவர்களுடைய செயல்கள் அனைத்திலும் ஒரு நேர்மை இருந்ததை பார்க்கிறோம். அவர்கள் ரத்தக் களரியோடு செய்த ஒவ்வொரு செயலையும் நேர்மையோடு செய்ததாகவே எண்ணினர் என்பதுதான் இங்கு நகைமுரணாக இருக்கிறது. எனினும், இத்தகைய நேர்மை அப்பழுக்கற்றதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதில் ‘இச்செயல் நமக்குச் சாதகமாக இருக்கப் போகிறது; நம் தரத்தை உயர்த்தப் போகிறது; தகுதியில்லாதவர்களிடமிருந்து அதிகாரத்தை பறிக்கப் போகிறது’ போன்ற எண்ணங்கள் கலப்படம் ஆகியிருக்கக் கூடும். எனினும் மாசுபட்டதாகவே இருந்தாலும், அவர்களிடம் ஒரு நேர்மை இருந்ததை உணர முடிகிறது.

ஆகவே, கவாரிஜ்களிடம் உள்ளுக்குள்ளாகவே முரணான இருகூறுகள் இருப்பதை உணர முடிகிறது. ஒருபுறம் அவர்கள் இறைபிரக்ஞையை (தக்வா) வெளிப்படுத்தினர் மறுபுறம் பிற முஸ்லிம்களைக் குறித்து அவர்களிடம் ஒரு கோணல் பார்வை இருந்தது. நிச்சயமாக அவர்கள் இறைபிரக்ஞையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர். அவர்கள் உலகின் எந்தச் சக்தியையும் பொருட்படுத்தவேயில்லை. மரணம் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை, மக்களின் பொதுக்கருத்தையும் அவர்கள் சட்டை செய்யவேயில்லை. அல்லாஹ் என்ற ஒரேயொரு சக்திக்கு மட்டுமே அவர்கள் பதிலளிப்பவர்களாக இருந்தனர். இவற்றோடு அவர்களிடம் இருந்த நேர்மையும் சேர்ந்து இறைபிரக்ஞையின் (தக்வா) சிறப்பான வெளிப்பாடாக தோன்றின. நான் ஏற்கனவே கூறியது போல இது மாசுபட்டிருக்கவும் கூடும்.

இந்த நேர்மையோடு சேர்ந்து அவர்களிடம் பிற முஸ்லிம்கள் குறித்து ஒரு கோணல் பார்வையும் இருந்தது. இதைப் பற்றி விரிவாக பின்னர் காண்போம். அத்தோடு ஒரு வகையான தீவிரத்தன்மை அல்லது வெறித்தனமும் அவர்களிடம் காணப்பட்டது. பிற முஸ்லிம்களிடம் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை வைத்து இதை அறிய முடிகிறது. பிற முஸ்லிம்களைக் கண்டால் அவர்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மாறாக, அவர்கள் தங்கள் கருத்துக்களை பிறர் மீது திணிக்க முயற்சித்தனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிக்கக்கூட விரும்பவில்லை. ‘பிற முஸ்லிம்களின் கொள்கை என்ன’ என்பதை அறிந்து அதன் மூலம் அவர்களை இணைத்துக் கொள்ளவோ அல்லது கொன்றுவிட மட்டுமே நாடினர்; அவர்களோடு கலந்துரையாட விரும்பவில்லை. ‘நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள்; ஆகவே எங்களோடு வந்துவிடுங்கள் அல்லது நீங்கள் எங்களோடு ஒத்துப்போகவில்லை. ஆகவே உங்களை கொன்றுவிடுவோம்’ என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. நாம் இதிலிருந்து பாடம் பெற வேண்டும். நாம் பிற முஸ்லிம்களை புரிந்து கொள்வதை விடுத்து நம் பிரிவு சார்ந்த தனிமையில் சிறைபட்டுக் கிடக்கின்றோம். இத்தகைய செறிவான வரலாறை பெற்றுள்ள நாம் இத்துன்பங்களை மீண்டும் அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவற்றிலிருந்து பாடம் பெற்றாலே போதும்.

சமூகப் பின்னணி

அடுத்து கவாரிஜ்களின் சமூகப் பின்னணி எப்படி இருந்தது என பார்ப்போம். அவர்கள் நகரங்களில் வாழ்ந்த மக்களாக இருக்கவில்லை. அவர்கள் பாலைவனங்களில் தனித்து வாழ்ந்த நாடோடி குழுக்களாக இருந்தனர். வளர்ச்சியடைந்த அல்லது பண்பட்ட வாழ்க்கை முறைகளை அறியாதவர்களாக இருந்தனர். அவர்களுடைய வாழ்க்கை முறையும் சமூகச் சூழலும் அதீத வறுமையால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. வரலாற்றை வர்க்க முரண்பாடுகளின் கண்ணோட்டத்தில் பார்க்கும் சிலருக்கு இது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். எனினும், கவாரிஜ்களின் விஷயத்தில் காணப்படும் ‘சுயமாக தம்மீதே ஏராளமான நன்மைகளை சாட்டும்’ பண்புக்கும் வர்க்க முரண்பாடுகளுக்கும் பழமைவாத முறைகளில் வாழ்க்கையை கழிப்பதற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை. நான் முடிந்தவரை பக்கசார்பு எடுக்காமல் இவர்களின் விஷயத்தில் உண்மையாக இருக்கவே முயற்சிக்கிறேன். நான் ஒரு காரிஜீயும் அல்ல. இஸ்லாமிய வட்டத்தில் தோன்றிய இந்த அரசியல் போக்கின் முக்கிய நபர்களின் சுவடுகளை நாம் ஆராய்ந்தால், அவர்களுடைய குடும்பம், முன்னோர்கள் என அனைவரும் —இஸ்லாத்திற்கு முன்னரும் சரி இஸ்லாத்திற்குப் பின்னரும் சரி— வறுமை நிலையில் வாழ்ந்ததையே பார்க்கிறோம். இந்தச் சமூக இயங்கியல் அவர்கள் மீது ஏதும் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பதை ஒரு கேள்வியாகவே விட்டுவிடுகிறேன்.

இந்தச் சமூக இயங்கியல்களில் செயல்படும் மற்றொரு கூறு என்னவெனில், அரேபிய தீபகற்பத்தில் இரு வகை கோத்திரப் பிரிவுகள் இருந்தன. ஒன்று ‘முழர்’ மற்றொன்று ‘ரபீஆ’. மக்காவின் குறைஷிக் குலம் முழரைச் சார்ந்தது. ஆனால், பிற்காலங்களில் கவாரிஜ்களின் ஆதாரமாக திகழப்போகும் நாட்டுப்புற அரபிகள் ரபீஆ குலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர். நாம் இங்கு முஸ்லிம்களை பற்றித்தான் பேசுகிறோம் என்றாலும் இஸ்லாத்திற்கு முந்திய இந்த நிலை, பிற்காலங்களில் அவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடுமா? ஏனெனில் பிற்காலங்களில், முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் விஷயத்தில் இவர்கள் எப்படி குறைஷ், மக்கா, மதீனா, கோத்திரம் அல்லது மொழி என எதையும் பொருட்படுத்தாமல் இருந்தார்கள் எனவும் பார்ப்போம்.

பிற முஸ்லிம்கள் மேற்கோள் காட்டும் ஒரு ஹதீஸ் ‘அல் இம்மத்து மின் குறைஷ்’ என்கிறது. அதாவது ‘தலைமைத்துவம் குறைஷிகளிடமிருந்துதான் வரும்’ என்பது இதன் பொருள். எனினும் கவாரிஜ்கள் “இல்லை இல்லை. இது உண்மையான ஆதாரப்பூர்வமான (ஸஹீஹ்) ஹதீஸ் அல்ல. இதில் உண்மை எதுவும் இல்லை” என்றனர். ஆக நான் சொல்ல வருவது என்னவெனில், முற்காலங்களிலிருந்த அரேபிய குல முறைமைகளின் அடிப்படையில், கவாரிஜ்கள் ரபீஆ குலத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதும் குறைஷிகள் முழர் குலத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதும் அவர்களின் இலட்சியவாத அல்லது கற்பனாவாத கொள்கைகளுக்கான ஒரு காரணியாக இருந்திருக்குமா? இங்கு நான் ‘இலட்சியவாதம்’ என்று சொல்வதால் சிலரும் ‘கற்பனாவாதம்’ என்று சொல்வதால் வேறு சிலரும் சங்கடப்படக் கூடும். எனினும் முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பு குறித்த விஷயத்தில் கவாரிஜ்கள் உலக நலன்கள் எதையுமே பொருட்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. தலைவர் தேவைப்படும் பட்சத்தில் ‘தகுதி பெற்றவர் தலைமை தாங்கலாம்’ என்பதே அவர்களின் கொள்கையாக இருந்தது. ‘தலைவர் தேவைப்படும் பட்சத்தில்’ என்று சொல்வதன் நோக்கம் அவர்களுள் சிலர் இமாம் (தலைவர்) தேவையே இல்லை என்றும் கூறினர். இதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

மேலும் அவர்களுள் சிலர் சிறந்த பேச்சாளர்களாகவும் இருந்தனர். பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அவர்களால் தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்க முடிந்தது. இதனால் சில உமைய்யா ஆட்சியாளர்கள் அச்சமடையவும் செய்தனர். எனினும், இந்தப் பேச்சாற்றல் நாட்டுப்புற மக்களிடையே மட்டுமே செல்வாக்கு பெற்றதாக இருந்தது. கவாரிஜ்களை சிந்திக்க மறுப்பவர்கள் என்று சொல்வதைவிட சிந்திக்கப் பழக்கப்படாதவர்கள் என்று சொல்லலாம். இதன் காரணமாக சாதாரண மக்களிடையே அவர்களின் பிரச்சாரம் வலிமை வாய்ந்ததாக இருந்தது. பின்னர் சில மாற்றங்கள் ஏற்பட்டன. ஆரம்பத்தில் கவாரிஜ்கள் நாடோடி அரபிகளைக் கொண்டே துவங்கியது. எனினும் ‘அரபிகளும் அரபு அல்லாதோரும் சமம்; குறைஷிகளுக்கு தனி அந்தஸ்து இல்லை’ போன்ற அவர்களின் பிரச்சாரம், முஸ்லிம்களாக மாறிய அரபு அல்லாதவர்களான பாரசீகர்கள், எகிப்தியர்கள் மற்றும் பைசாந்தியர்கள் போன்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படியாக கவாரிஜ்கள் தங்கள் இறுதிக் காலத்தில் அரபு அல்லாத முஸ்லிம்கள் (மவாலிகள்) மத்தியில் செல்வாக்கு பெற்றனர். பிற்காலத்தில் அரபு அல்லாத முஸ்லிம்கள் (மவாலிகள்) வருகைக்குப் பின்னரே அவர்கள் நாகரிகமடைந்தனர் அல்லது நகரக் கலாச்சாரத்துக்கு பழக்கப்பட்டனர் என்று கூறலாம்.

இங்கே மற்றொரு சம்பவத்தையும் கூறுவது முக்கியம் எனக் கருதுகிறேன். ஒருமுறை ஒரு காரிஜீ பெண் ஒரு அரபு அல்லாத முஸ்லிமோடு (மவ்லா) திருமணம் செய்ய நிச்சயிக்கப் பட்டார். இதை அறிந்த கவாரிஜ்கள் ‘நீ எங்களை அவமதித்து விட்டாய்’ என்றனர். அதாவது ஒரு அரபு அல்லாத முஸ்லிமை மவ்லாவை திருமணம் முடிப்பது அவமானம் என்றுக் கூறினர். இவர்கள்தான் சமத்துவம், ஏற்றத்தாழ்வு இல்லை என முழங்கியவர்கள்; எனினும் திருமணம் என வரும்போது அவர்கள் அவமானம் என்கின்றனர். இந்த முரண்பாடும் இருக்கத்தான் செய்தது.

ஆண்-பெண் சமத்துவத்தை முழுமையாகப் பேணிய ஒரே சிந்தனைப் பள்ளி கவாரிஜ் எனலாம். பெண்கள் தகுதியின் அடிப்படையில் தொழுகைக்கு தலைமை தாங்கலாம் என்றும் மக்களை வழிநடத்தும் தலைவர்களாகவும் ஆக முடியும் என்றனர்.

இணைப்புப் புள்ளி

இன்று சன்னிகள் —என அறியப்படுவோர்— மத்தியில் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் அல்லது போக்குகள் இருப்பதைப் போல, அல்லது ஷியாக்கள் —என அறியப்படுவோர்— மத்தியில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் அல்லது பள்ளிகள் இருப்பதைப் போல கவாரிஜ்கள் மத்தியிலும் பல சிந்தனைப் பள்ளிகள் இருந்தன. கவாரிஜ்கள் அனைவரும் ஒரே சிந்தனையைக் கொண்டவர்களாக இருக்கவில்லை. அவர்கள் மத்தியிலும் வேறுபாடுகள் இருந்தன. எனில் அவர்கள் அனைவரையும் ஒற்றைப் புள்ளியில் இணைத்த கொள்கைகள் என்ன? இதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அவர்கள் கலீஃபா அல்லது இமாம் —இன்றைய அரசியல் சொல்வழக்கில் சொல்லப்படும்— சுதந்திர, நீதியான, வெளிப்படையான தேர்தல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்றனர்.

முஸ்லிம்களின் ஒரு குறிப்பிட்ட குழு அல்லது மேல்தட்டு முஸ்லிம்களை மட்டும் கொண்ட ஒரு வர்க்கம் பங்கெடுக்கும் தேர்தலாக அல்லாமல் எல்லா முஸ்லிம்களும் பங்குபெறும் தேர்தலாக அது இருக்க வேண்டும் என விரும்பினர். இது எதைக் குறிக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள். அத்தேர்தல் எல்லா இடங்களிலும் எல்லா பகுதிகளிலுமுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் பங்குபெறக் கூடியதாக இருக்கும். இதன் மூலம் நம்மிடையே சட்டப்பூர்வ மற்றும் செயல்பூர்வ தலைவர் அமைந்துவிடுவார். நீதியாகவும் இஸ்லாமிய சட்டங்களுக்கு பொறுப்பேற்று அவற்றை நடைமுறைப்படுத்தி ஆட்சி புரியும்வரை அவர் தலைவராக நீடிப்பார். ஆனால் அவர் திசைமாறி தன் பொறுப்பை மீறிச் சென்றால், அவரை தேர்ந்தெடுத்த அதே முஸ்லிம் சமூகம் மீது அவரது பதவியை பறிப்பது அல்லது கொல்வது கடமையாகிவிடும் என்றனர்.

மேலும் அவர்கள் குடும்பத்தினர், கோத்திரத்தார் மற்றும் வாரிசுகளுக்கு பதவி பொறுப்புகளில் எந்த முன்னுரிமையும் இருக்க முடியாது என்றனர். அதாவது ‘குறைஷி அல்லது அரபு என்பதெல்லாம் தலைமை பதவிக்கான தகுதியாகிவிடாது. இத்தகைய குலப்பெருமை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல’ என்பதுதான் இதன் கருத்து. சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று இமாம் அல்லது கலீஃபா குறைஷி குலத்தைச் சாராதவராக இருப்பதே விரும்பத்தக்கது என்றனர். ஏனெனில் குறைஷி அல்லாத ஒருவர் தவறு செய்யும்பட்சத்தில் அவரை பதவி நீக்குவது அல்லது கொல்வது எளிது. மாறாக குறைஷி குலத்தைச் சார்ந்த ஒரு இமாம், குர்ஆனுக்கும் தூதர் வழிகாட்டுதலுக்கும் (சுன்னா) மாறு செய்து தவறு செய்யும்பட்சத்தில் அவரை நீக்குவதே பெரும் போராட்டம் ஆகிவிடும் எனக் கருதினர். அவர்கள் இக்கொள்கைகளை வெறும் முழக்கங்களாக மட்டும் முன் வைக்கவில்லை; நடைமுறையும் படுத்தினார்கள். அவர்களுடைய முதல் தலைவரான அப்துல்லாஹ் இப்னு வஹ்ப் அர் ராஷிதி குறைஷி அல்லாதவராகவே இருந்தார்.

கவாரிஜ்களின் மற்றொரு முக்கியமான வரைவிலக்கணம் என்னவெனில், ‘தன்ப்’ செய்கிறவர்கள் அனைவரையும் நிராகரிப்பவர்கள் (காஃபிர்) எனக் கூறிவது. ‘தன்ப்’ என்பது சில சமயம் ‘பாவம்’ என்றும் சில சமயம் ‘குற்றம்’ என்றும் மொழிபெயர்க்கப்படுகிறது. கவாரிஜ்கள் இவ்விரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் அரசாங்கம் அல்லது முஸ்லிம் இமாமிடமிருந்து விலகிக் கொள்வதும், நண்பர் ஒருவரிடம் சிறு பொய் சொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே சமமானதுதான். அவர்கள் ஒரு ‘தன்பு’க்கும் மற்றொரு ‘தன்பு’க்கும் இடையே வித்தியாசம் பார்க்கவில்லை. இதன் காரணமாகத்தான் அவர்கள் இமாம் அலீயை நிராகரிப்பவர் என்றனர். ஏனெனில் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் அவர் பாவம் செய்துவிட்டார் என்றனர். அப்பாவத்துக்கு அளவு எதுவும் கிடையாது. அது கடுமையானதா அல்லது கடுமையற்றதா? அது இஜ்திஹாதா? அது அவருடைய சொந்தக் கருத்தா அல்லது பிற முஸ்லிம்களால் அவர் மீது திணிக்கப்பட்ட கருத்தா? போன்ற கேள்விகளை அவர்கள் கருத்தில் கொள்ளவேயில்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளத் தெரியாத, அடிப்படையில் நாடோடிகளான மக்களைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம் என்பதை நீங்கள் உணர்ந்தால் இவர்களை புரிந்து கொள்ள முடியும்.

இஸ்லாமிய சட்டவியல் கோட்பாடுகளில் பெரும்பாவங்கள் (கபாயிர்), சிறு பாவங்கள் (சகாயிர்) என்று உள்ளது. கவாரிஜ்கள் இவற்றை பிரித்துப் பார்க்க அறிந்திருக்கவில்லை. அவர்களின் சிந்தனைத்திறன் அந்த அளவுக்குத்தான் இருந்தது. ‘இஜ்திஹாத்’ என்பது ஒருவரது பகுப்பாய்வின் முடிவில் அவர் அடையும் ஆகச்சிறந்த கருத்து அல்லது ஆகச்சிறந்த முடிவு ஆகும். காலப்போக்கில்தான் இது சரியானதா அல்லது அதைவிடக் குறைவானதா என்பது தெரியவரும். ஆனால் அவர்கள் காலத்திற்காக காத்திருக்க விரும்பவில்லை. அவர்கள் காட்டும் அவசரத்தில் ஒரு ‘இஜ்திஹாத்’கூட ‘தன்ப்’ ஆகிவிடும்; அதனால் ஒருவர் நிராகரிப்பவராகிவிடுவார்.

இஜ்திஹாதும் ஒருவரை நிராகரிப்பவராக மாற்றிவிடும் பாவத்துக்குச் சமமாகிவிட்டது. இங்கு நாம் மிகக் கடுமையான ‘தீவிரவாதி’களை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த வார்த்தையை உபயோகிக்க நான் விரும்பவில்லை. ஏனெனில் இன்று இது முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுக்க பயன்படுத்தப்படுகிறது. எனினும் வேறுவார்த்தைகள் எனக்குத் தெரியவில்லை. பகுத்தறிவு இல்லாதவர்கள், மட்டுமீறியவர்கள், தர்க்க முரணானவர்கள் என்று கூறலாமா? இச்சொற்களின் அர்த்தங்களையெல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு காந்தத்தைப் போலத்தான் அவர்கள் இருந்தனர். இப்படியாக அவர்கள் இமாம் அலீ நிராகரிப்பவர், தல்ஹா நிராகரிப்பவர், ஸுபைர் நிராகரிப்பவர் என்று கூறினர். எனினும் நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷாவைப் பற்றி கவாரிஜ்களின் கருத்து என்ன என்பதை விளக்கும் எந்த செய்தியையும் நான் காணவில்லை. அவர்கள் இமாம் அலீக்கு எதிராக, உஸ்மானின் இறுதி ஆறு ஆண்டுகள் பற்றி, தல்ஹாவிற்கு எதிராக, முஆவியா மற்றும் அம்ர் இப்னு ஆஸுக்கு எதிராக நிறைய பேசியிருக்கிறார்கள். எனினும் ஆயிஷா பற்றி அவர்களின் கருத்தை அறிய முடியவில்லை.

அடுத்து, மற்றொரு விஷயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். கவாரிஜ்கள் உமைய்யா அரசாங்கத்தோடு தொடர்ச்சியான போரில் ஈடுபட்டுக் கொட்டிருந்த கலகக்காரர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். பெயர், புகழுக்காக அவர்கள் போர் செய்யவில்லை. ஒருமுறை மக்காவில் வைத்து ஹஜ்ஜின்போது, அன்றைய முஸ்லிம்களை பீடித்துள்ள சகல பிரச்சனைகளுக்கும் காரணம் என அவர்கள் கருதிய மூன்று நபர்களை கொல்வதற்கான சதித்திட்டத்தை தீட்டினர். இமாம் அலீ, முஆவியா, அம்ர் இப்னு ஆஸ் ஆகியோர்தான் அம்மூவர். இப்படித்தான் அவர்களின் போர் துவங்கியது. எனினும் அது அத்தோடு நிற்கவில்லை. இமாம் அலீ இறைவனிடம் சென்ற பின்னர் முஆவியா, அவர்களை எதிர்த்து போர் தொடுத்தார். அப்போதும் அவர்கள் உக்கிரமாக போரில் ஈடுபட்டனர். வெறுமெனே ‘உமைய்யா ஆட்சியாளர்கள் தவறு செய்துவிட்டார்கள்; அவர்கள் எல்லோரும் நிராகரிப்பவர்கள்’ என்று பிரச்சாரம் செய்வதன் மூலம் மட்டும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. மாறாக, அவர்களை எதிர்த்து தொடர்ச்சியான போரில் ஈடுபட்டனர்.

அவர்கள் நாற்பது பேர் சேர்ந்துவிட்டால், அது ஒரு போர்ப்படை என்றனர். அதைவிட ஒன்றிரண்டு குறைந்தால் கூட போர் செய்ய மாட்டார்கள்.  ஆனால் நாற்பது பேர் சேர்ந்துவிட்டால் அவர்களால் போர் செய்யாமல் இருக்க முடியாது. எந்தச் சாக்குப் போக்கும் சொல்லாமல் போர் செய்தே தீர்வார்கள். இதுவும் கவாரிஜ்களிடமிருந்த பொதுப்பண்பு எனலாம். உமைய்யா ஆட்சியாளர்களை இப்படித்தான் இவர்கள் கையாண்டனர். இப்படியாக இவர்களின் கையால்தான் ஏராளமான உமைய்யா ஆட்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *