இஸ்லாமிய வரலாறு – 07 / பஹாயி மற்றும் காதியானி பிறழ்வுகள் (பாகம் 2) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 07 / பஹாயி மற்றும் காதியானி பிறழ்வுகள் (பாகம் 1)

♦ ♦ ♦ ♦ ♦

பஹாவுல்லாஹ்

மிர்சா அலி இறக்கும் முன், தனக்கு நெருங்கிய இருவருக்கு உயர் அந்தஸ்து வழங்கினார். ஒருவர் சுப்ஹி அஸல். மற்றொருவர் பிரபலமாக அறியப்படும் பஹாவுல்லாஹ். இருவரும் ஈரானிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். சுப்ஹி அஸல் சைப்ரஸில் குடியேறினார். இன்று அமெரிக்காவில் வீசும் சூஃபி அலை சைப்ரஸிலிருந்து வருவதை அவதானிக்க முடிகிறது. சைப்ரஸுக்கு ஏதாவது பிரத்யேகத் தன்மை இருக்கிறதா என்பதை நான் அறியேன். பஹாவுல்லாஹ் துர்க்கியில் உள்ள எடியர்னே நகரில் குடியமர்ந்தார்.

இவ்விருவருக்கும் இடையே ஒருவித இறுக்கம் இருந்தது. குறிப்பிட்ட சில விஷயங்களில் அவ்விருவரும் கருத்து ஒத்துப் போகவில்லை. எனவே அன்றைய உஸ்மானிய அரசாங்கம், பஹாவுல்லாஹ்வை பாலஸ்தீனிலிருந்த அக்கா நகரத்துக்கு (இன்று இஸ்ரேல் என்று அழைக்கப்படுவதன் பகுதியாக இருக்கும் Acre) நாடு கடத்தியது.

இங்கு வசித்த போது பஹாவுல்லாஹ் ‘அல் கிதாப் அல் அக்தஸ்’ என்ற பெயரில் ஒரு நூலை எழுதினார். அரபியில் பைபிளைக் குறிக்கும் கிறித்துவச் சொல்லாக ‘கிதாப் அல் முகத்தஸ்’ என்பது பயன்படுத்தப்படுகிறது. இவரோ அதற்கும் மேலாக ‘ஆகப் புனித நூல்’ என்று பொருள்படும் வகையில் ‘அல் கிதாப் அல் அக்தஸ்’ என்று தன் நூலுக்கு பெயரிட்டார். மேலும் எதிர்பார்த்தது போலவே, இது அல்லாஹ்வால் தனக்கு அருளப்பட்டது என்றார். அவர் தன் நூல்களை பாரசீக மற்றும் அரபு மொழியில் எழுதியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவருடைய சில எழுத்துக்கள், பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படாமல் அவருக்கு நெருக்கமாக இருந்த சிலருக்கு மட்டும் வெளியிடப்பட்டது. அவர்கள் இவற்றை பொதுப்பார்வைக்கு வெளியிட முடியாத அளவுக்கு அதிமுக்கியமானது என்று கருதுகின்றனர்.

இதுவரை, பஹாயி பிறழ்வைச் சார்ந்தவர்கள் தங்களை ஏதோ ஒரு விதத்தில் முஸ்லிம்கள் என்றே கருதி வந்தனர். ஆனால் இந்த நூல் வெளிவந்த பிறகு, அவர்கள் தங்களை முஸ்லிம்களாகக் கருதுவதை தவிர்த்தனர். பஹாய் மதத்துக்கும் —இதை மதம் என்று சொல்வது பொருத்தமானது என்று நினைக்கிறேன் — இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றானது.

முஸ்லிம்களல்ல

பஹாயியிசத்தை தோற்றுவித்த ‘அல் பாப்’, இஸ்லாத்துக்கு புத்தியிரூட்ட வந்தவராக தன்னைக் கருதினார். ஆனால் பஹாவுல்லாஹ் தன் ஆசானைப் போல நினைக்கவில்லை. இப்போது பஹாயிகள் தங்களைக் கருதும் விதத்தில் பெரிய மாற்றத்தைக் காண முடிகிறது. அவர்கள் தங்கள் ஸ்தாபகரிடமிருந்து வெகுதூரம் விலகி நின்றனர். பஹாவுல்லாஹ் தன் புனித நூலை ஆசியா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா என உலகம் முழுவதுமுள்ள ஆட்சியாளர்களுக்கு அனுப்பி வைத்தார். இங்குதான் காலனித்துவத்தின் கை இருப்பதை உணர முடிகிறது.

கடவுள் தன்னுள் அவதரித்துள்ளதாக இந்நூலில் வலியுறுத்திக் கூறினார். இதில் குர்ஆனைப் போல அத்தியாயங்களையும் (சூரா) அவரே பெயரிட்டு அமைத்தார். மேலும் மறைவானவற்றின் (யஃலமுல் ஃகைப்) ஞானம் தனக்கு இருப்பதாகக் கூறினார். எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கவும் செய்தார். இவர் முன்கூட்டியே கணித்த நிகழ்வுகளுள் ஒன்று பிரான்சில் மூன்றாம் நெப்போலியனின் ஆட்சி கவிழும் என்று கூறியதாகும். இவரது சிந்தனையும் உள்ளமும் எங்கு குவிந்துள்ளது என்பதற்கு இது இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. எப்போது, எப்படி என்று சொல்லாமல் பொத்தாம் பொதுவாக அவர் கூறியது, நான்கு ஆண்டுகள் கழித்து நிகழ்ந்தது. இதை வைத்து அவரது பின்பற்றாளர்கள் “ஆஹா! இவருக்கு மறைவானவற்றின் ஞானம் இருக்கிறது” என்று அவரை மெச்சினர். ஆனால், இது பெரிய விஷயம் அல்ல. இன்று, அமெரிக்காவின் வீழ்ச்சியைக் கூட அரசியல் விமர்சகர் ஒருவர் கணித்துக் கூறவிட முடியும்.

தன் பின்பற்றாளர்களுக்கு அவர் அளித்த தனித்துவமான அறிவுரைகளில் ஒன்று, அந்நிய மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது ஆகும். இதில் இரண்டு கோணங்கள் உள்ளன. அந்நிய மொழிகளைக் கற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை. ‘உங்கள் எதிரியின் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று இறைத்தூதரின் ஒரு ஹதீஸும் உள்ளது. இது புரிந்துகொள்ளத்தக்கதுதான். ஆனால், இவருடைய விஷயத்தில், இது எதிரியை அறிந்து கொள்வதற்காகச் சொல்லப்படவில்லை. மாறாக இஸ்லாத்திலிருந்து மக்களை அந்நியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லப்பட்டது ஆகும். இதை அன்றைய காலத்தில் நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். அன்றைய நிகழ்வுகள், சூழல், ஊடுருவல்கள், படையெடுப்புகள், காலனித்துவம் ஆகியவற்றின் பின்புலத்தில் அவர்கள் எப்படி முஸ்லிம் பொதுப் புத்தியைக் கவர முயற்சி செய்தனர் என்ற கோணத்தில் இதைப் பார்க்க வேண்டும். இதில் பஹாவுல்லாஹ் தன் பங்குக்கு தன் பின்பற்றாளர்களை அந்நிய மொழிகளைக் கற்றுக் கொள்ள ஊக்குவித்தார்.

கொள்கைப் பிறழ்வுகள்

இஸ்லாத்தினுள் கருத்து வேறுபாடுகளும் இஜ்திஹாத்களும் இருந்தன. ஆனால் யாரும் இஸ்லாத்திலிருந்து பிரிந்து செல்லவில்லை. ஆனால் பஹாவுல்லாஹ்வின் கொள்கைகள் இஸ்லாத்திலிருந்து தனியே பிரிந்து செல்வதாக அமைந்தன. அவற்றுள் முக்கியமானவற்றை இப்போது பார்ப்போம். முதன்மையாக அவர் இஸ்லாம் விதித்த கட்டுப்பாடுகள் எதுவும் செல்லாது என்றார். ஒரு விஷயத்தை அல்லது செயலை செய்யக் கூடாது என்று குர்ஆன் அல்லது இறைத்தூதர் விதித்த எந்தக் கட்டுப்பாடாக இருப்பினும், அது செல்லாது என்றும் இறைவன் அவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றும் பஹாவுல்லாஹ் கூறினார். இங்கே மீண்டும் தன் ஆசான், பாபுல்லாஹ்விடமிருந்து (மிர்சா அலி)  அவர் விலகிச் செல்வதை காண்கிறோம்.

பஹாயி மதத்தில் ஷரீயத் என்பது வழக்கற்றுப் போன ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது குர்ஆன் மற்றும் நபிவழியின் (சுன்னாஹ்) சட்டதிட்டங்கள் எதுவும் செல்லுபடி ஆகாது என்றும் முஸ்லிம்கள் தங்கள் சமூக வாழ்வில் இவற்றைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் பஹாயிகள் நம்புகின்றனர்.

பஹாவுல்லாஹ் தன் ஆசானை வழிமொழிந்து, மனிதர்கள் அனைவரும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் அனைவரும் சமத்துவத்தோடு வாழ வேண்டும் என்றும் கூறினார். நாம் ஏற்கனவே சொன்னது போல இது கேட்பதற்கு சரி எனப்பட்டாலும், பிரச்சனை என்னவென்றால் இது முஸ்லிம்களை உலகின் பிற மதத்தவர்களுக்கு இணையானவர்களாகக் கருதுகிறது. முஸ்லிம்களின் தனித்தன்மை, அவர்கள் சுமந்து நிற்கும் பொறுப்புகள் மற்றும் இஸ்ரவேல் சமூகத்தை விடுவித்து அவர்களுக்குப் பதிலாக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வழங்கிய உடன்படிக்கை ஆகியவற்றை இது ரத்து செய்கிறது.

எல்லா மதங்களும் சமம் என்று சொல்லும்போது அவை எல்லாமே சரி என்றாகிறது. ‘யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் மதச் சடங்குகள் போலத்தான் முஸ்லிம்களின் சடங்குகளும். ஒன்று சரி, மற்றொன்று தவறு என்று சொல்வதற்கில்லை’ என்றாகிறது. இது இஸ்லாத்தின் சத்தியத்தை பிற மதங்களின் அசத்தியத்தில் நீர்த்துப் போகச் செய்வதாகும். ஆனால் இதை அவர் கவர்ச்சிகரமான தத்துவம் போல பிரச்சாரம் செய்தார். இதைக் கேட்கும் எவருக்கும் ‘இதில் என்ன தவறு இருக்கிறது?’ என்றுதான் கேட்கத் தோன்றும்.

புத்த மதம், ஈரானின் சொரோஸ்டிரியன்கள், மஜூஸிகள் போன்றவை குறித்து அவ்வப்போது அவர் பேசினாலும் அவருக்குப் பின்னால் காலனித்துவத்தின் கை இருந்தததை உணர்த்தும் விதமாக அவரது கவனம் முழுவதும் யூத, கிறித்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களின் மீதுதான் இருந்தது.

மேலும் அவர் தனது சமத்துவக் கோட்பாட்டை மனித உரிமைக் கண்ணோட்டத்தில் சொல்லவில்லை. ஏனெனில் மனித உரிமைக் கண்ணோட்டம் மதச்சார்பின்மையின் அடிப்படையில் சொல்லப்படுகிறது. இவரோ மதத்தின் அடிப்படையிலேயே தன் கோட்பாடுகளை முன்வைத்தார். மேலும் யூதர்கள், கிறித்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தங்களிடையே வேற்றுமை பாராட்டுவதால், அவர்களைவிட பஹாயிகள் சிறந்தவர்கள் என்றார்.

முஸ்லிம்களோடு அடையாளப்படுத்த முடியாது

அடுத்து, குடும்பவியல் தொடர்பான விவகாரங்களில் பஹாவுல்லாஹ் கொண்டிருந்த கருத்துகளை பார்ப்போம். அவை, முஸ்லிம் குடும்பம் தொடர்பாக இருந்த அடிப்படை அறிவு, புரிதல் மற்றும் நியமங்களுக்கு முரணாக இருந்தன. விதிவிலக்கான சூழலில் அன்றி பலதாரமணம் கூடாது என்றார். அப்படியே விதிவிலக்கு ஏற்பட்டாலும் ஒரு ஆண் இரு பெண்களை மட்டுமே மணமுடிக்க முடியும் என்றார்.

மேலும் விவாகரத்து கூடாது என்றார். ஆனால் இதற்கும் விதிவிலக்கு உண்டு என்றார். கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்ற நிலையில், சேர்ந்து வாழ்வது நரக வாழ்க்கை போலாகிவிடும் என்ற நிலையில் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும் என்றார்.

இத்தா என்ற காத்திருப்புக் காலத்தை எல்லா முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்கின்றனர். விவாகரத்தான முஸ்லிம் பெண் மீண்டும் மணமுடிக்கும் முன் குறிப்பிட்ட காலம் காத்திருப்பதுதான் இத்தா ஆகும். கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்ததால், உடல் ரீதியான சுத்திகரிப்பு காலமாக இது இருக்கலாம். அறிவியில் ரீதியாக இதை நிரூபிக்கம்படியான ஆய்வுக்கூடங்கள் முஸ்லிம்களாகிய நம்மிடம் இல்லை. பஹாவுல்லாஹ் இத்தா காலத்தை மறுத்தார். கணவன் மனைவி இடையே விவாகரத்து நிகழ்ந்தால் அடுத்த நாளே அப்பெண் மீண்டும் மணமுடிக்க முடியும் என்றார். எப்படி இவர்கள் இஸ்லாத்திலிருந்து விலகிச் சென்றார்கள் என்பதை இது மீண்டும் காட்டுகிறது.

மேலும் பஹாயிகளிடம் கூட்டு வழிபாட்டு முறை (ஜமாஅத்) இல்லை. அவர்கள் தனித்தனியாகத்தான் தங்கள் வழிபாடுகளை செய்வர். மீண்டும் விதிவிலக்காக, ஒருவர் இறந்த பிறகு நடக்கும் தொழுகையில் (சலாத்துல் ஜனாஸா) மட்டும் அவர்கள் கூட்டு வழிபாடு செய்வர்.

மேலும் பஹாயிகள் கஃபா வழிபாட்டுத் திசை (கிப்லா) அல்ல என்றனர். “கிறிஸ்துவர்களுக்கு, யூதர்களுக்கு, முஸ்லிம்களுக்கு என்று வழிபாட்டுத் திசைகள் உள்ளனவே. நீங்கள்தான் அறிவு முதிர்ச்சி அடைந்தவர்கள் ஆயிற்றே. வேறு எதுதான் வழிபாட்டுத் திசை என்று கூறுங்கள்” என்று அவர்களிடம் கேட்டால், “எங்கள் மதத் தலைவர் எங்கு இருக்கிறாரோ அதுதான் எங்கள் திசை ஆகும்” என்று அவர்கள் பதிலளிக்கின்றனர். அதாவது பஹாவினுள் இறைவன் அவதரித்துள்ளதால், அவர் இருப்பதுதான் வழிபாட்டுத் திசை என்கின்றனர். பஹாவுல்லாஹ் இருப்பதுதான் அவர்களுடைய திசை. பஹா இடம் மாறினால், அவர்களுடைய வழிபாட்டுத் திசையும் இடம் மாறும்.

நாம் கடந்த வகுப்புகளில், முஸ்லிம்களிடையே இருக்கும் பல வேறுபாடுகளை பார்த்தோம். அவற்றில் ஒரு நெகிழ்வுத் தன்மை இருந்தது. எந்தக் கருத்தின் பக்கமும் ஒருவர் சாய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் பஹாயிகளைப் பொருத்தவரை, அவர்களோடு எப்படி ஒரு முஸ்லிம் தன்னை அடையாளப்படுத்த முடியும்?! அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்பே இல்லை என்று தெரிகிறது. அவர்கள் இஸ்லாத்தின் எல்லைகளை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

தூய்மை சார்ந்த விஷயங்களில் மட்டும் அவர்கள் இஸ்லாத்தோடு ஒன்றிப் போகிறார்கள். அது மனத் தூய்மையாக இருந்தாலும் சரி; உடல் தூய்மையாக இருந்தாலும் சரி. வழிபடும் முன் உளூ செய்கிறார்கள். மேலும் ஜனாபா நிலையில் கடமையான குளிப்பையும் மேற்கொள்கிறார்கள்.

மேலும் அவர்கள் உணவுப் பழக்கங்கள் மற்றும் பொருளாதார பரிவர்த்தனைகளில் இஸ்லாம் விதித்த விதிமுறைகள் அனைத்தையும் ரத்து செய்தனர். இவ்விஷயங்களில் அனுமதிக்கப்பட்டது-விலக்கப்பட்டது என்று பிற முஸ்லிம்கள் அறிந்து வைத்திருந்த அனைத்தையும் செல்லாது என்றனர். இஸ்லாமிய விதிமுறைகளை பகுத்தறிவைக் கொண்டு மாற்றினர். உணவு விஷயத்திலும் பொருளாதார விஷயத்திலும், ஒருவரின் பகுத்தறிவுக்கு சரி எனப்பட்டால் ஒன்றைச் செய்யலாம் என்றும் இல்லை என்றால் அது கூடாது என்றனர்.

அவர்கள் இன, மத பேதமின்றி சமத்துவக் கோட்பாட்டை வலியுறுத்தினர் என்று ஏற்கனவே பார்த்தோம். ஆனால் அவர்கள், குடிமக்களிடையே இத்தகைய சமத்துவத்தை கடைபிடிக்கவில்லை. மன்னரும் சராசரி குடிமகனும் சரி சமமானவர்கள் என்று அவர்கள் கருதவில்லை. அன்று மன்னர்கள் தெய்வீக உரிமை கோரினர். ஆகவே பஹாயிகள், மன்னர்களை சிறப்பு வாய்ந்தவர்கள் என்றனர். ஒரு மன்னர் தெய்வீக உரிமை கோருவதற்கும் ஒரு ஆன்மீகவாதி தன்னுள் இறைவன் அவதரித்துள்ளான் என்று கூறுவதிலும் ஒற்றுமை உள்ளது. ஒருவர் மற்றவரை கேள்வி கேட்கக் கூடாது என்று இருவருக்கும் இடையே பரஸ்பர புரிதல் உள்ளது. இதன் பின்னணியிலும் காலனித்துவமும் ஐரோப்பிய சக்திகளும் இருப்பதை நீங்கள் உணரலாம்.

இஸ்லாமிய அறிஞர்கள் விஷயத்தில் பாபுல்லாஹ்வுக்கும் பஹாவுல்லாஹ்வுக்கும் இடையே இருந்த வேறுபாடுகள் எனப் பார்த்தால் பாபுல்லாஹ், தனிப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களை எதிர்த்தார். பஹாவுல்லாஹ்வோ, இஸ்லாமிய அறிஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளை, இஸ்லாமிய அறிஞர்களின் அமைப்பு முறையையே எதிர்த்தார்.

பஹாவுல்லா 1892-ம் ஆண்டு மே 16 அன்று இறந்தார்.

அப்பாஸ் எஃபென்டி

பஹாவுல்லாஹ்வின் மறைவுக்குப் பிறகு அவரது இடத்தை அவருடைய மகன் அப்பாஸ் எஃபென்டி நிரப்பினார். சிலர் அவரை அப்துல் பஹா என்றும் இன்னும் சிலர் அவரை உஸ்மி ஆதம் என்றும் அழைக்கின்றனர். உஸிம் என்றால் கிளை என்று பொருள். ஆதம் என்பது ‘பெரிய ஒருவர்’ என்ற பொருளைக் குறிக்கிறது. பஹாவை பின்பற்றிய யாரும் அவருடைய மகனை எதிர்க்கவில்லை. இதற்குக் காரணம், அவர்கள் பஹா மீது கொண்டிருந்த அன்பு என்று நம்பப்படுகிறது.

இந்த அப்பாஸ் எஃபென்டி மேற்கத்திய நவநாகரிகத்தில் திளைத்திருந்தார்; அதற்கு மிக நெருக்கமாக இருந்தார். மேலும் பாலஸ்தீனத்தில் பிறந்ததால் தன்னைச் சுற்றி இருந்த அரபு கலாச்சாரத்தோடும் நெருக்கம் பாராட்டினார். இவர் பஹாய் மதத்தை —எதிர்பார்த்தது போலவே— மேற்கத்திய திசையில் கொண்டு சென்றார். நான் பஹாய் ‘மதம்’ என்றே குறிப்பிடுகிறேன். இதை விடப் பொருத்தமான வேறு வார்த்தை தெரிந்திருந்தால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேற்கத்திய சூழலில், யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மத்தியில் அவதாரக் கொள்கை எடுபடாது என்று தெரிந்து, அப்பாஸ் அதை வலியுறுத்தவில்லை. மேலும் தன் தந்தையைப் போல அல்லாமல், தான் அற்புதங்கள் நிகழ்த்துவதாகக் கூறவில்லை. இவர் வெளிப்படையாகவே யூதர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் நெருக்கமானவராக இருந்தார். அவர்களுடைய கலாச்சார மற்றும் சமய நூல்களை நன்கு கற்றிருந்த அப்பாஸ் எஃபென்டிக்கு —தன் தந்தையைக் காட்டிலும்— இஸ்லாத்தை பழித்துரைப்பதும் துறப்பதும் கடினமாக இருக்கவில்லை. இப்படியாக அல் பாபில் தொடங்கி பஹா, இப்போது எஃபன்டி என படிப்படியாக இஸ்லாத்திலிருந்து இவர்கள் விலகுவதையும் இஸ்லாத்தைத் தூற்றுவதையும் காண முடிகிறது. மேலும் பஹாயிகளுக்கும் குர்ஆனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர்களுடைய ஒரே ஆதார நூல் ‘அல் கிதாப் அல் அக்தஸ்’ மட்டுமே என்று அப்பாஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

மேற்குலகில் பஹாயிசம்

இதுவரைக்கும் இந்த பஹாய் மதம் முஸ்லிம் உலகில் மட்டுமே வளர்ந்து வந்தது. ஆனால் இப்போது அப்பாஸின் கொள்கைகள் காரணமாக இது மேற்குலகில் யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மத்தியில் பிரபலமடையத் துவங்கியது. அம்மக்கள் இதை உகந்ததாகக் கருதி பஹாயிகளாக மாறத் துவங்கினர். இப்படித்தான் முஸ்லிம்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாத பஹாயிகள், செழித்தோங்குவதற்கு வேறு வளமான இடங்களைத் தேடிச் சென்றனர்.

எப்படியோ அவர்கள் துர்க்மேனிஸ்தானில் காலூன்றினர். பெரிதாக இல்லை என்றாலும் அவர்களுக்கென ஒரு இடமும் சில பின்பற்றாளர்களும் அங்கு கிடைத்தனர். ஆனால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அவர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றனர். பின்னர் 1910-ல் ஒரு பத்திரிக்கையை வெளியிடத் துவங்கினர். ஆண்டுக்கு 19 முறை அது வெளிவந்தது. இங்கு அமெரிக்காவில், சிக்காகோவின் வடக்கு புறநகர் பகுதியில் அவர்களுடைய உலகத் தலைமையகம் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு பார்வையாளர்களுக்காக அதைத் திறந்திருந்தனர். அப்போது நான் அங்கே சென்றிருந்தேன். அது சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி நிறைந்து இருந்தது. பஹா என்றால் ஒளிர்வது என்று பொருள். சராசரி மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அவற்றை அமைத்திருந்தனர். ஆனால் அது எல்லாமே ஒருவித வித்தைதான்.

முதலில் அவர்கள் பஹாவுல்லாஹ் இருக்கும் இடம்தான் கிப்லா என்றனர். பிறகு அவர் தங்கிய ‘அக்கா’ நகரம்தான் கிப்லா என்றனர். பிறகு இதையெல்லாம் விட்டுவிட்டனர். மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறிய அப்பாஸ் எஃபென்டி, இத்தகைய கருத்துகளை ரத்து செய்திருக்கக் கூடும். இப்போது ‘அக்கா’ அவர்களின் சமய தலைநகரம் என்றும் ‘சிகாகோ’ அவர்களின் செயல் அலுவலகம் என்றும் புரிந்துகொள்ளலாம்.

பஹாயிகள், சேவைப் பணிக்குத் தேவையான நிதியை எப்படி திரட்டினர் என்பது குறித்த தகவல்களை நான் அதிகம் காணவில்லை. ஆனால் மேலோட்டமாக பார்க்கும்போது, அவர்களுக்கு பிரிட்டிஷார் நிதி அளித்தனர் என்று தெளிவாகத் தெரிகிறது. பஹாவுல்லாஹ்வின் மகன் அப்பாஸுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் சர் பட்டம் வழங்கியது என்ற தகவலையும் இங்கே நினைவூட்டுகிறேன்.

பஹாயிகள் குர்ஆனை எப்படி அணுகினர் என்று பார்ப்போம். குர்ஆன் பற்றிய அவர்களின் கண்ணோட்டம் பல படிநிலைகளைக் கொண்டிருந்தது. முதலில் அவர்கள் குர்ஆனை நிராகரிக்கவில்லை. பாபுல்லாஹ் தன்னை ஒரு இஸ்லாமிய சமய புத்தாக்கவாதியாகத்தான் கருதினார். மறைவான இமாம் குறித்த கோட்பாட்டை கொஞ்சம் நீட்டித்து, மறைவான இமாமை தூயவனான  அல்லாஹ் பாதுகாக்கின்றான் எனில் அதே அல்லாஹ் தன்னுள் அவதாரம் எடுக்கவும் முடியும் என்று கூறினார். இதுதான் பஹாயிகளின் முதல் முக்கிய கொள்கை மீறல். இதுதவிர பிற விஷயங்களில் அவர்கள் —பின்னர் வந்த பஹாயிகளோடு ஒப்பிடும்போது— முஸ்லிம்களாகத்தான் இருந்தனர். பஹாவுல்லாஹ்வின் வருகைக்குப் பிறகுதான் பெரிய மாற்றம் ஏற்பட்டது. குர்ஆனிய கட்டளைகள், அனுமதிக்கப்பட்டது-விலக்கப்பட்டது என பல விஷயங்கள் குறித்து அவர்கள் கூறியதை நாம் ஏற்கனவே பார்த்தோம். கடைசியாக வந்த அப்பாஸ் எஃபென்டி, பஹாயிகளின் அசல் முகத்தை உலகுக்கு வெளிக்காட்டினார். ஐரோப்பிய கைக்கூலியாக மாறி அவர்களின் அங்கமாகவே ஆகிவிட்டார். இப்போது அவர்களுக்கு குர்ஆன் என்பது, தவ்ராத் மற்றும் நற்செய்தி (காஸ்பெல்) போல மற்றொரு தொன்மையான நூல். அவ்வளவுதான். மற்றபடி அதன் போதனைகள்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியமெல்லாம் இல்லை என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

பஹாயிகள், அவர்கள் கூறுவதை விட அதிக எண்ணிக்கையில் இருப்பதாக மேற்கத்தியர்கள் கூறுகின்றன. மேலும் பஹாயிகளில் பலர் தங்கள் உண்மையான அடையாளத்தையும் நம்பிக்கையையும் மறைத்து பாசாங்கு செய்து வாழ்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர். பஹாயிகள் பற்றிய செய்தி அவ்வப்போது தலைதூக்கிய வண்ணம் இருக்கிறது. எகிப்தில் இந்தப் பிரச்சனை அடிக்கடி எழும். சமீபத்தில் அங்கு சில பஹாயிகள், அவர்களின் நம்பிக்கைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பினர். ஆனால் எகிப்திய மதச்சார்பற்ற அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. முஸ்லிம் சமூகத்தை கொண்டிருக்கும் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கமே இவர்களுக்கு அனுமதி மறுக்கும் அளவுக்கு அவர்கள் இஸ்லாத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டனர் என்பதையே இது காட்டுகிறது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்குப் பிறகு அவர்களின் வளர்ச்சியில் திடீர் ஏற்றம் தெரிந்தது. மேலும் எப்போதெல்லாம் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளில் வெற்றிபெற்றதாகக் காட்டிக் கொள்கிறதோ அப்போதெல்லாம், எப்படியோ பஹாயிகள் பற்றிய செய்தி வருகிறது. அவர்கள் மேற்குலகின் நலன்களை மனதில் கொண்டு செயல்படுகின்றனர் என்பதற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு.

சில பிரபல பஹாயிகள்

இறுதியாக ஓரிரு பிரபல பஹாயிகளின் பெயர்களை குறிப்பிட்டு இப்பகுதியை நிறைவு செய்கிறேன். மஹ்மூத் அப்பாஸ் (பாலஸ்தீன அதிபர்) ஒரு பஹாயி. அவரது குடும்பமே பஹாயி குடும்பம் என்று அறிந்தவர்கள்கூட அதுகுறித்து வாய்திறக்காதபடி அந்த உண்மையை அவர் கச்சிதமாக மறைத்துவிட்டார். தொழுவது, ரமழானில் நோன்பு நோற்பது, வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றுவது என்று முஸ்லிம்கள் கடைபிடிக்கும் எல்லா புற வழிபாட்டுமுறைகளை தானும் கடைபிடிப்பதன் மூலம் இதை அவர் சாதித்தார். மஹ்மூத் அப்பாஸின் விசுவாசம் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்தின்பால் அன்றி மேற்குலகின்பால்தான் இருந்தது. இதன் காரணமாகத்தான் இஸ்ரேலிகள் அவரை விரும்பினர். அவருக்கு பதவி வழங்கப்பட்டது. முடிவெடுக்கும் இடத்தில் மேற்குலகம் இருக்கும் நிலையில் யாரோ ஒருவர் அதிபர் ஆகிவிட முடியாது அல்லவா!

பாலஸ்தீனத்தில் ஒரு பஹாயி சமூகமே இருக்கிறது. ‘அக்கா’ நகரத்தை மையமாக கொண்டிருந்ததால் அவர்கள் அங்கு சமயப் பணியாற்றினர். இதன் மூலம் சில பாலஸ்தீனர்களை தங்கள் பக்கம் கவர்ந்தனர். எத்தனை பாலஸ்தீனர்கள் பஹாயிகளாக மாறினர் என்ற புள்ளிவிவரம் எங்கும் இல்லை. எனினும் ஊகத்தின் அடிப்படையில் அவர்கள் 15,000 முதல் 45,000 பேர் வரை இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். அங்கு வாழும் பாலஸ்தீனர்களோடும் நான் இதுபற்றி விவாதித்திருக்கிறேன். ஆனால் அவர்களின் எண்ணிக்கை பதினைந்தாயிரமா அல்லது நாற்பத்தி ஐந்தாயிரமா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவர்கள் 15,000 பேர்தான் இருக்கக் கூடும் என்றே நான் ஊகிக்கிறேன்.

மற்றொரு பிரபல பஹாயி, பிரான்சுக்கான பாலஸ்தீன தூதர் ஆவார். அப்பெண் மிக நீண்ட காலம் இப்பதவியில் உள்ளார். யாசர் அரஃபாத் நோய்வாய்பட்ட போது சிகிச்சைக்காக பிரான்சுக்குச் சென்றார் என்பதை நினைவில் கொள்ளவும். அவர் எச்.ஐ.வி. வைரஸால் தாக்கப்பட்டு எய்ட்ஸ் நோயால் மரணித்தார் என்று அவருடைய இறுதிநாட்களில் அவரோடு மருத்துவமனையில் இருந்த ஒரு சகோதரர் சொல்லியிருக்கிறார். இஸ்ரவேலர்கள்தான் அவருக்கு எச்.ஐ.வி. வைரஸை செலுத்தினர் என்றும் அச்சகோதரர் கூறினார். முன்னணி பத்திரிக்கைகள் எதிலும் இந்தச் செய்தி வெளிவரவில்லை.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 07 / பஹாயி மற்றும் காதியானி பிறழ்வுகள் (பாகம் 3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *