இஸ்லாமிய வரலாறு – 07 / பஹாயி மற்றும் காதியானி பிறழ்வுகள் (பாகம் 3) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

காதியானிகள்

வரலாற்றுப் பின்புலம்

காதியானிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றினர். சில நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை முஸ்லிம்கள் ஆண்டனர். இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை தோற்றுவித்தவர் மஹ்மூத் கஸ்னவி என்று சொல்லப்படுகிறது. அன்று இந்தியாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினராகவும் சிறிய அளவில் பௌத்தர்களும் இருந்தனர். அங்கிருந்த மதங்களிடையே நடந்த கருத்துப் பரிமாற்றத்தின் விளைவாக பல்வேறு சமய சிந்தனைகளின் கலப்பு ஏற்பட்டது. அதில் ஒன்று —16 அல்லது 17-ம் நூற்றாண்டில் என நினைக்கிறேன்— நானக் என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர் ஹிந்து மதத்தின் சில கூறுகளையும் இஸ்லாத்தின் சில கூறுகளையும் கலந்து சீக்கிய மதத்தை தோற்றுவித்தார்.

ஆழமான கலாச்சாரப் பின்னணி கொண்ட ஒரு வகை இஸ்லாமியப் புரிதலை இங்கு நாம் எதிர்கொள்கிறோம். இந்த வகை புரிதலானது, சில வேளை, பிராமண அல்லது பௌத்த கலாச்சாரங்களின் பிடியிலிருந்து முற்றிலும் விடுபடாத ஒன்றாக இருந்தது. அன்று முஸ்லிம்களிடையே இந்து கலாச்சாரம் ஆழமாக வேரூன்றி இருந்தது. மேலும் அச்சமயம் பிரிட்டிஷ் காலனித்துவம் இந்தியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அப்போது சில இந்தியர்கள் கிறிஸ்துவர்களாகவும் மதம் மாறினர்.

இறைத்தூதர் காலத்தில் அரேபியர்கள் குறித்து இறக்கப்பட்ட “நாங்களும் நம்பிக்கை கொண்டோம்’ என்று நாட்டுப்புறத்து அரபிகள் கூறுகிறார்கள். ‘நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. எனினும் நாங்கள் வழிபட்டோம் என்று (வேண்டுமானால்) கூறுங்கள்’ என்று கூறுவீராக. ‘ஏனெனில் உங்களுடைய இதயங்களில் நம்பிக்கை (ஈமான்) நுழையவில்லை” (49:14) என்ற வசனம் இந்தியாவில் பழைய கலாச்சாரத்தை தங்களுக்குள் பாதுகாத்து, வெளித்தோற்றத்திற்கு முஸ்லிம்களாக மாறியவர்களுக்கும் பொருந்தக் கூடும். இவர்கள் பெயரளவில் முஸ்லிம்களாக இருந்து கொண்டு, முந்தைய கலாச்சாரத்தோடு வலுவான தொடர்புகளைக் கொண்டிருந்தனர். அத்தோடு, பிரிவினைவாதக் கூறுகளை உருவாக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தூண்டுதலும் இருந்தது. இந்தச் சூழலில், இத்தகைய மக்களிடையே காதியானி இயக்கம் தோன்றியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

மிர்சா குலாம் அஹ்மது காதியானி

காதியானி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் மிர்சா குலாம் அஹ்மத் அல் காதியானி ஆவார். லாஹூரிலிருந்து 60 மைல் தொலைவில் இருக்கும் காதியான் என்ற இடத்திலிருந்து வருவதால் அவர் காதியானி என்று அழைக்கப்பட்டார். 1908-ம் ஆண்டு மே 26 அன்று இறந்த அவர், அங்குதான் அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய அடக்கத்தலத்தில் ‘மிர்சா குலாம் அஹ்மத் மௌவூத்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அல் மௌவூத் என்ற அரபிச் சொல் இரு விஷயங்களை குறிக்கக் கூடும். வஅத என்ற வேர்சொல்லிலிருந்து வந்த மௌவூதை ‘வாக்களிக்கப்பட்டவர்’ என்ற பொருளில் ‘சுவனம் வாக்களிக்கப்பட்ட நபர்’ என்று பொருள் கொள்ளலாம். அல்லது ‘எதிர்பார்க்கப்பட்டவர்’ என்ற பொருளில் இறைத்தூதர் என்றும் பொருள் கொள்ளலாம். ஏனெனில் அவர் தன் வாழ்நாளில் தன்னை அப்படித்தான் கூறினார். இன்னும் சிலர், அவரை அல் மஹ்தி முக்ததர் என்று கருதுகின்றனர்.

மிர்சா குலாம் தன் சமயப் பணியை இந்தியாவில் முஸ்லிம்கள் மத்தியில் செய்யத் துவங்கினார். அப்போது அவர் கஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் யூசுஃப் அசாஃப் என்ற பெயர் கொண்ட ஒரு முஸ்லிம் மகானின் அடக்கத்தலத்தை கண்டார். முஸ்லிம்கள் இதை தரிசித்தவண்ணம் இருந்தனர். ஆனால் மிர்சா குலாம், ‘இது அந்த மகானின் அடக்கத்தலம் அல்ல. இது மர்யமின் குமாரர் ஈசாவின் அடக்கத்தலம்’ என்றார். ‘அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு அவரைப் போன்ற ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்.’ (4:157) என்று குர்ஆன் கூறுகிறது. எனவே யூதர்களிடமிருந்து தப்பித்த ஈசா இங்கு வந்ததாகவும், சிலகாலம் இங்கேயே வாழ்ந்து பின்னர் மரணித்ததாகவும், அவர்தான் இங்கு அடக்கப்பட்டுள்ளதாகவும் மிர்சா குலாம் கூறினார்.

ஈசா (அலை) ஸ்ரீநகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற மிர்சா குலாமின் கூற்று குர்ஆனின் —குறைந்தது— இரு வசனங்களோடு முரண்படுகிறது. “அல்லாஹ் தன் அளவில் அவரை உயர்த்திக் கொண்டான் (பல் ரஃபாஅஹு இலைஹி)” (4:158) என்றும் “நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன், இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன் (வ ரஃபியுக்க இலைஹி)” (3:55) என்றும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். இவ்வசனங்களை படிக்கும் 99.99% முஸ்லிம்கள், அல்லாஹ் ஈசாவை (அலை) அவருடைய உடல் மற்றும் ஆன்மாவோடு சேர்த்து உயர்த்தினான் என்றுதான் புரிந்துகொள்வர். ஆனால் மிர்சா குலாம், அல்லாஹ் ஈசாவின் ஆன்மாவை மட்டும்தான் உயர்த்தினான் என்றும் அவருடைய உடல் இந்த அடக்கத்தலத்தில்தான் உள்ளது என்றார்.

அல் காதியானி என்ற பெயரில் பிரபலமடையப் போகும் இந்நபர், தன்னை ஒரு முஜத்தித் (புத்தாக்கவாதி) —அதாவது இஸ்லாத்தை புத்தாக்கம் செய்ய வந்தவர்— என்று கூறினார். ‘நிச்சயமாக அல்லாஹ் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மார்க்கத்தை புத்தாக்கம் செய்யும் ஒருவரை சமூகத்தின்பால் அனுப்பி வைப்பான் (இன்னல்லாஹ யப்அசு அலா ரஅசி குல்லி மிஅதி சனத்தின் மன் யுஜத்திது பி ஹாதிஹில் உம்மதி அமர தீனிஹாத்)’ என்ற நபிமொழியை பூர்த்தி செய்யும் விதமாக தான் வந்துள்ளதாகக் கூறினார்.

பண்புகள்

மர்யமின் குமாரர் ஈசா மசீஹின் ஆன்மா தன்னுள் அவதாரம் எடுத்துள்ளது என்றும் தான் அல் மஹ்தி அல் முன்ததர் என்றும் மிர்சா குலாம் கூறினார். (மகத்துவமும் உயர்வும் மிக்க) அல்லாஹ்வின் சார்பாகப் பேசுவதால், தான் சொல்வது அனைத்தும் சத்தியம் என்றும் அதை யாரும் எதிர்க்கக் கூடாது என்றும் கூறினார்.

தன்னை மஹ்தி என்று சொல்லிக் கொண்டதோடு —பஹாவுல்லாவை போல— தனக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாகவும் கூறினார். மனிதத் தன்மையும் தெய்வீகத் தன்மையும் ஒருசேர பூமியில் வாழும் ஒரு மனிதருள் அடங்கியுள்ளது என்ற கிறிஸ்துவர்களின் நம்பிக்கையைப் போல இது இருக்கிறது.

தான் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியவர் என்றும் கூறினார். ஒருமுறை ஹி. 1312-ல் (கி.பி. 1894) ரமளானின் போது சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஒரே மாதத்தில் நிகழ்ந்தது. இதை நிகழ்த்தியது தான்தான் என்றார்.

இறைத்தூதர்

மேலும் தான் அல்லாஹ்விடமிருந்து வரும் தூதர் என்றும், தன் தூதுத்துவம் முஹம்மதின் (ஸல்) தூதுத்துவத்துக்கு எதிரானது அல்ல என்றும் கூறினார். முஹம்மதுக்குப் (ஸல்) பிறகு அவருடைய பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒருவரைத் தவிர வேறு இறைத்தூதர்கள் இருக்க முடியாது என்று அவர் கூறினார். அந்தந்த காலகட்டத்தில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள், இறைத்தூதரின் நிழலாக இருப்பர் என்று இதற்கு விளக்கம் அளித்தார். எனவே அவர் தன்னை இறைத்தூதர் என்று நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக சொன்னார். இந்த விஷயத்தில்தான் காதியானிகளும் முஸ்லிம்களும் வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் ஈசா தன்னுள் இருப்பதாகவும், தூதுத்துவத்தின் இறுதித்தன்மை குறித்தும் அவர் பேசத் துவங்கிய போது இவற்றுக்கு வேறு சாக்கு சொல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டார். ஏனெனில் “முஹம்மதைப் போல நானும் ஒரு இறைத்தூதர். முஹம்மத் இறுதித் தூதர் அல்ல. அவருக்குப் பிறகு தொடர்ந்து இறைத்தூதர்கள் வருவார்கள்” என்று அவர் கூறியிருந்தால், முஸ்லிம்கள் அவரை செவிமடுத்திருக்க மாட்டார்கள்; அவர் கடுமையான எதிர்ப்பை சந்தித்திருப்பார். முஸ்லிம்களும் செவிமடுக்கும் வண்ணம் தன் கருத்துகளை அவர் விளக்க வேண்டியிருந்தது.

அவருடைய விளக்கம் பின்வருமாறு இருந்தது: ‘முஹம்மதின் (ஸல்) தூதுத்துவத்தைத் தவிர மற்ற எல்லா தூதுத்துவமும் நிறைவடைந்துவிட்டது. முஹம்மதின் (ஸல்) செய்தியையும் பணியையும் முன்னெடுத்துச் செல்லும் பிற தூதர்களின் மூலம் முஹம்மதின் தூதுத்துவம் தொடர்ந்து நீடிக்கும். அத்தகைய தூதர்கள் புதிய சட்டதிட்டங்களைக் கொண்டு வருவதில்லை. ஏற்கனவே குர்ஆனில் சட்டதிட்டங்கள் உள்ளன. இத்தூதர்களின் பணி, புது வேதத்தைக் கொண்டு வருவதல்ல. மாறாக முஸ்லிம்கள் ஏற்கனவே கொண்டுள்ள வேதத்தை புதிப்பிப்பதுதான் அவர்களுடைய பணியாகும். எனவே இவர்களும் இறைத்தூதர்களே.’

யூதர்களும் கிறிஸ்துவர்களும்

மேலும் குர்ஆனில் யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்களைப் பற்றி அனுகூலமான கருத்துகள் உள்ளன என்று காதியானிகள் கூறுகின்றனர். கடந்தகாலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமின்றி நம் காலத்தில் வாழும் யூதர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதை கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்றும் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் செய்யும் நற்செயல்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும் காதியானி கூறினார். முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களுக்கு கீழ்ப்படிவது இஸ்லாத்தின் ஒரு அங்கம் என்று இஸ்லாம் கருதுகிறது என்று வெளிப்படையாகவே கூறினர்.

ஜிஹாத்

அடுத்து மிர்சா குலாமின் கூற்றுகள் சிலவற்றை மேற்கோள் காட்டுகிறேன். அவர் கூறியதாவது, “என் கொள்கை என்னவெனில், இஸ்லாம் இரண்டு முக்கியமான விஷயங்களில் நிலை கொண்டுள்ளது. ஒன்று அல்லாஹ் தபாரக வ தஆலாவுக்கு கீழ்படிவது. இரண்டாவது, நாம் —முஸ்லிம்களாக அல்லது காதியானிகளாக— அரசாங்கத்தை எதிர்த்து வாழக் கூடாது. ஏனெனில் அவை நம்மை பாதுகாக்கின்றன; நம்மை வாழ வைத்து ஆதரிக்கின்றன. இது ஆங்கிலேய அரசாங்கத்துக்கும் பொருந்தும். இக்கொள்கைகளைத்தான் நான் எப்போதும் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்கிறேன்.” இஸ்லாமிய உள்விவகாரங்களில் ஆங்கிலேயர்களின் சித்து விளையாட்டு, ஆரம்பம் முதலே இங்கு வெளிப்படையாகத் தெரிகிறது.

மேலும் அவர் “ஜிஹாத் முடிவடைந்துவிட்டது” என்று கூறினார். இஸ்லாத்தின் ஆரம்பகாலங்களில் ஜிஹாதின் பணி நிறைவேற்றிவிட்டது என்றும் இப்போது முஸ்லிம்கள் அதுபற்றி பேசத் தேவையில்லை என்றும் கூறினார். அடுத்து “நான் என்னை ரத்தம் சிந்தக்கூடிய மஹ்தியாகவோ, ஹாஷிமியாகவோ அல்லது குறைஷியாகவோ பார்க்கவில்லை” என்று கூறினார். அதாவது மஹ்தி, மக்களின் ரத்தத்தை சிந்தக் கூடியவர் அல்ல என்கிறார்.

மஹ்தி வருவார் என்றும் அவர் வந்து அநீதியையும் அடக்குமுறையையும் அகற்றி நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவார் என்றும் ஒரு நபிமொழி உள்ளது. இத்தகைய நபிமொழிகள் எதுவும், உலகில் ரத்தக்களரி ஏற்படும் என்று சொல்லவில்லை என்று காதியானி கூறினார். அதாவது உலகில் போர்களும் சண்டை சச்சரவுகளும், போர்களின் விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படாது என்று கூறுகிறார்.

மேலும் “நானே வாக்களிக்கப்பட்ட மீட்பர் ஆவேன். ஆனால் ஒரு மீட்பரின் தன்னடக்கத்தோடு வாழ்கிறேன்” என்று கூறினார். “எனக்கும் போருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போர்களிலும் சண்டைகளிலும் ஈடுபடுபவர்களிலிருந்து நான் பரிசுத்தமானவன். என்னைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்க அதிகரிக்க ஜிஹாதை நம்புபவர்கள் குறைந்து கொண்டே இருப்பார்கள்” என்றும் கூறினார். இக்கூற்றுகளிலிருந்து அவர் இஸ்லாத்தின் ஜிஹாத் கோட்பாடு மீது வெறுப்பு கொண்டிருந்தவர் போல கிட்டத்தட்ட வெளிப்படையாக தெரிகிறது. மேலும் மீட்பர் மீதும் மஹ்தி மீதும் நம்பிக்கை கொள்வதென்பது ஜிஹாதை துறப்பதாகும் என்றார்.

இக்கூற்றுகள் இடம்பெற்றுள்ள அவருடைய நூல்கள் சில பின்வருமாறு: ‘அத் தஅலீம்’ (கற்பித்தல்), ‘அத் தஜல்லியாத் அல் இலாஹியா’ (தெய்வீக வெளிப்பாடுகள்) மற்றும் ‘தப்லீக் அல் ரிஸாலா’ (செய்தியை அறிவித்தல்). அவர் இவற்றை ஆங்கிலத்தில்தான் எழுதினார் என்று நினைக்கிறேன்.

‘வாளைக் கொண்டும் தடியைக் கொண்டும் நம்பிக்கையை (ஈமான்)  ஒருவரின் உள்ளத்தில் செலுத்த முடியாது’ என்றும் காதியானி கூறினார். மேலும் அவர் சஹீஹ் அல் புகாரியிலிருந்து ஒரு நபிமொழியை மேற்கோள் காட்டினார். அதில் அல் மசீஹ் ஈசா இப்னு மர்யம் போரை ரத்து செய்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினார். இதன் மூலம், ஜிஹாதை நம்பும் முஸ்லிம்களின் பண்பு, போர் செய்வதை தடை செய்யப் போகும் அல் மசீஹின் பண்புக்கு முரணாக உள்ளது என்று தன் பின்பற்றாளர்களுக்கு சொல்கிறார். ‘தரைக் அல் குலூப்’ (உள்ளத்துக்கான மருந்து) என்ற அவருடைய நூலில் இது இடம்பெற்றுள்ளது.

வலிய செய்யப்படும் ஜிஹாத் குறித்துதான் அவர் பேசினார் என்று அவருடைய பின்பற்றாளர்கள் கூறுகின்றனர். அதாவது தற்காப்புக்காக செய்யப்படும் ஜிஹாதை அவர் அனுமதித்தார் என்றும் முதலில் தாக்கும் ஜிஹாதை அனுமதிக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கும் தொனியில் அவர்கள் பேசுகின்றனர். இதற்குக் காரணம், முஸ்லிம்களின் பொதுப்புத்தி ஏற்படுத்திய அழுத்தம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தங்களுடைய கருத்துகளை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று உணர்ந்த அவர்கள், இத்தகைய விளக்கங்களை உருவாக்கினர்.

பிற அம்சங்கள்

காதியானிகளின் மற்றொரு அம்சம் என்னவெனில் அவர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாத முஸ்லிம்களை நிராகரிப்பாளர்கள் (காஃபிர்) என்று சொல்வதில்லை. அவர்களைப் பொருத்தவரை ஒருவர் எப்படி வேண்டுமானலும் முஸ்லிமாக இருக்கலாம். அவர்களை பற்றி முஸ்லிம்கள் தவறாக எதுவும் சொல்லாதவரை, அவர்களும் தவறாக எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அவர்களை காஃபிர் என்று ஒரு முஸ்லிம் கூறினால், பதிலுக்கு அவர்களும் அவரை காஃபிர் என்று கூறுவர். அதாவது முஸ்லிம்கள் தக்ஃபிர் பிரச்சினையை தொடங்காதவரை அவர்களும் தொடங்க மாட்டார்கள்.  முஸ்லிம்களின் ஜனாஸா தொழுகையில் அவர்கள் பங்கேற்பார்கள். ஆனால் இறந்த அந்த முஸ்லிம் காதியானிகளை காஃபிர் என்று கருதியிருந்தால், அவருடைய ஜனாஸா தொழுகையில் பங்கேற்க மாட்டார்கள்.

கலப்புத் திருமணம் என்று வரும்போது, முஸ்லிம்கள் வேதக்காரர்கள் (யூதர்கள், கிறிஸ்துவர்கள்) விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படித்தான் காதியானிகள் முஸ்லிம்கள் விஷயத்தில் நடந்துகொள்கிறார்கள். அதாவது ஒரு காதியானி ஆண் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணையும் திருமணம் செய்ய முடியும். ஆனால் ஒரு காதியானி பெண் காதியானி ஆணைத்தான் திருமணம் செய்ய முடியும்.

மறைவு

மிர்சா குலாம் அஹ்மது காதியானி இறப்பதற்கு முன், அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தன் நம்பிக்கைக்குரிய சில நபர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். ஆன்மீக வழிகாட்டியாக விளங்கிய தங்கள் தலைவர்களை காதியானிகள் கலீஃபா என்று அழைத்தனர். இப்படியாக அவர்களின் அடுத்த கலீஃபாவாக பதவியேற்றவர் மௌலாயா நூரத்தீன் என்பவர் ஆவார். இவருடைய காலத்தில் காதியானிகள் அதிவேகமாக தங்கள் சமயப் பணியை மேற்கொண்டனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது நடந்தது. அப்போதுதான் அவர்கள் அமெரிக்காவிலும் தோன்றி பல இடங்களில் முனைப்புடன் செயல்பட்டனர். வாரிதீன் முஹம்மதின் தந்தையாகிய எலீஜா முஹம்மதையும் இவர்கள் தொடர்பு கொண்டனர் என்று சிலர் கூறுகின்றனர்.

மிர்சா குலாம் அஹ்மதின் மறைவுக்குப் பிறகு காதியானிகள் இரண்டு திசைகளில் பிரிந்து சென்றனர். ஒரு சாரார் அவரை இறைத்தூதர் என்றும் மற்றொரு சாரார் அவரை புத்தாக்கவாதி என்றும் கூறினர். ஆக மிர்சா குலாம் அஹ்மது இறைத்தூதரா அல்லது தன் கருத்தை கவர்ச்சிகரமாக முன்வைக்கும் திறமை பெற்ற உள்ளுணர்வு கொண்ட ஒரு நபரா என்பது குறித்து அவர்களுக்குள்ளாகவே கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால் பெரும்பாலான காதியானிகள் அவரை அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்றே கருதுகின்றனர்; ஒரு இறைத்தூதருக்கு செலுத்த வேண்டிய மரியாதையை அவருக்கு செலுத்துகின்றனர். உதாரணத்திற்கு, அவருடைய பெயர் உச்சரிக்கப்பட்டவுடன், ‘அவர் மீது சாந்தி உண்டாகட்டும்’ என்ற அடைமொழியை மொழிகின்றனர். மேலும் அவர் சில அற்புதங்களை நிகழ்த்தி தன் தூதுத்துவத்தை உறுதி செய்தார் என்றும் கூறுகின்றனர்.

மேலும் காதியானிகள் வளமாக இருப்பதற்கும் ஆங்கிலேயர்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சிக்கும் தொடர்பு இருப்பது போலத் தெரிகிறது. ஆங்கிலேயர்கள் வளர்ச்சி அடையும் போது காதியானிகள் செழிப்பாகவும் அவர்கள் வீழ்ச்சி அடையும் போது இவர்கள் பின்னடைவை சந்திப்பதையும் காணமுடிகிறது.

முடிவாக, இறைத்தூதுத்துவம் குறித்து ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கொண்டுள்ள கருத்தோடு காதியானிகள் முரண்படுகின்றனர் என்று சொல்லலாம். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் இறுதித்தூதர் என்று நாம் அறிவோம். இமாம்கள், ஞானிகள், அறிஞர்கள், இறைநேசர்கள் என்று அகத்தூண்டுதல் பெற்ற பலர் இருந்தார்கள் என்றாலும் அவர்கள் யாரும் இறைத்தூதர்கள் அல்ல. ஆனால் காதியானிகள் மிர்சா குலாமை இறைத்தூதர் என்றும் மசீஹ் ஈசா இப்னு மரியம் அவருள் அவதரித்துள்ளார் என்றும் சொல்லும் போது, அவர்கள் மற்ற எல்லா முஸ்லிம்களும் கொண்டிருக்கும் ஒருமித்த கருத்தை அவமதிக்கின்றனர்.

♦ ♦ ♦ ♦ ♦

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *