இஸ்லாமிய வரலாறு – 09 / இஜ்திஹாத் & ஹனஃபி (பாகம் 2) – இமாம் முஹம்மது அல் ஆஸி
Posted onஇஸ்லாமிய வரலாறு – 09 / இஜ்திஹாத் & ஹனஃபி (பாகம் 1)
♦ ♦ ♦ ♦ ♦
நபித்தோழர்களின் ஒருமித்த கருத்து
அறிவார்ந்த அபிப்பிராயம் (ரஈ), ஒப்பு நோக்கல் (கியாஸ்) மற்றும் ஒருமித்த கருத்து (இஜ்மா) ஆகிய கருதுகோள்களை ஓரளவு புரிந்து கொண்டோம். அடுத்து வரலாற்று ரீதியாகவும் சமகாலத்திலும் ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்படுகிறது. நபித்தோழர்கள் என்று அழைக்கப்படும் முதல் தலைமுறை முஸ்லிம்கள் ஒரு விஷயத்தில் ஒருமித்த கருத்து கொண்டிருந்தால், அது பிற முஸ்லிம்களின் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? அது ‘ஹுஜ்ஜா’ ஆகக் கருதப்படுமா? அதாவது அவர்களுடைய ஒருமித்த கருத்து பிற முஸ்லிம்களை கட்டுப்படுத்துவது ஆகுமா?
முக்கியமான நான்கு சன்னி சிந்தனைப் பள்ளிகளும் —அல் அஹ்னாஃப், அல் ஷவாஃபிஹ், அல் மாலிகியா மற்றும் அல் ஹனாபிலா— “ஆம், இறைத்தூதரோடு இருந்த எல்லோரும் ஒரு சட்டத் தீர்ப்பில் உடன்பட்டிருந்தால் பிற முஸ்லிம்களும் அதில் உடன்பட வேண்டும். அது பிற முஸ்லிம்களையும் கட்டுப்படுத்தும்” என்று கூறுகின்றன.
ஷியாக்கள், கவாரிஜ்கள் மற்றும் சில முஃதசிலாக்கள் “இல்லை. அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் கருத்துகள்தான் முஸ்லிம்களை கட்டுப்படுத்துமே தவிர நபித்தோழர்களின் ஒருமித்த கருத்து அவர்களைக் கட்டுப்படுத்தாது” என்றனர். ஷியாக்கள் இமாம்களின் கருத்துகளையும் இதில் கூடுதலாக சேர்த்துக் கொண்டனர். நபித்தோழர்களைப் பொருத்தவரை “அவர்கள் ஒருமித்த கருத்து கொண்டிருக்கலாம். அது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. அது எங்களைக் கட்டுப்படுத்தாது” என்றனர்.
நபித்தோழர்களைத் தொடர்ந்து வந்த தலைமுறையின் ஒருமித்த கருத்து
அடுத்து, நபித்தோழர்களைத் தொடர்ந்து வந்த தலைமுறையை (தாபியீன்) பார்ப்போம். இவர்கள் ஒருமித்த கருத்து கொண்டிருந்தால் அதன் நிலை என்ன? அது பிற முஸ்லிம்களை கட்டுப்படுத்துமா? நபித்தோழர்களின் ஒருமித்த கருத்தே தங்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறிய ஷியாக்களும், கவாரிஜ்களும், சில முஃதசிலாக்களும் நபித்தோழர்களைத் தொடர்ந்து வந்தவர்களின் ஒருமித்த கருத்தும் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது என்றனர். ஆனால் சன்னி சிந்தனைப் பள்ளிகளைப் பொருத்தவரை, இதில் கருத்து வேறுபாடு இருந்தது. இது விஷயத்தில் அவர்கள் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தனர்.
இவற்றை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும் என நினைக்கிறேன். வாரிசுரிமை சட்டம் (மீராஸ்) பற்றிய விவகாரம் இது. ஒரு மனிதர் இறந்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் விட்டுச் சென்ற சொத்தில் அவருடைய சொந்த சகோதரர்களும் மாற்றாந்தாய் மூலம் உள்ள சகோதரர்களும் பிறரும் எத்தனை பங்கு பெறுவார்கள் என்பதில் கிட்டத்தட்ட உடன்பாடு உள்ளது. ஆனால் அம்மனிதரின் பாட்டனாரும் உயிரோடு இருந்தால் அவருக்கு இறந்தவரின் சொத்தில் பங்கு உண்டா? ‘உண்டு’ எனில் எத்தனை பங்கு? இதுபற்றி உங்கள் சிந்தனைப் பள்ளியின் கருத்தையே நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இதுபற்றி நீங்கள் எந்த அறிஞரின் கருத்தையும் பின்பற்றிக்கொள்ளுங்கள். அது பற்றிக் கவலையில்லை. ஆனால் இவ்விவகாரம் இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகு வாழ்ந்த முதல் தலைமுறையினரின் காலத்தில் எப்படி அணுகப்பட்டது என்பதை விளக்க முயற்சிக்கிறேன். இவ்விவகாரத்தில் அவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவியது.
இது குறித்து கருத்து கூறிய அபூ பக்கர், “இறந்தவரின் தந்தைக்குக் கிடைக்கும் அளவே அவருடைய பாட்டனாருக்கும் கிடைக்கும்” என்றார். இது ஒரு கருத்து; ஒரு இஜ்திஹாத். இமாம் அலீ இறந்தவரின் சகோதரர்கள், மகன்கள் மற்றும் மாற்றாந்தாய் சகோதரர்களுக்கு கிடைக்கும் பங்கு எவ்வளவு என்பதில் பிறரோடு உடன்பட்டார். மேலும் சகோதரர்களுக்கு கிடைக்கும் பங்கைப் போலவே இறந்தவரின் பாட்டனாருக்கும் கிடைக்கும் என்றார். எனினும் அது சொத்தில் ஆறில் ஒரு பங்குக்கும் குறையாமல் இருக்க வேண்டும் என்றார். ஸைத் இப்னு சாபித், பாட்டனாருக்கு சொத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறையாமல் கொடுக்க வேண்டும் என்றார்.
இம்மூன்று கருத்துக்களுக்கும் இடையே பெருமளவு வேறுபாடு காணப்படுகிறது. இங்கு நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே கூறியுள்ளேன். இது போன்ற தீவிரமான வேறுபாடு உள்ள பல விஷயங்கள் உள்ளன. இவற்றை அறிஞர்கள் ஆய்வு செய்து கொண்டுதான் இருந்தனர். எனினும் இவற்றைக் காரணம் காட்டி யாரும் தங்களுக்கிடையே போர் செய்யவில்லை.
இத்தகைய எல்லா விஷயங்களையும் ஒன்றிணைத்துப் பாருங்கள். முதல் தலைமுறை முஸ்லிம்கள் மத்தியிலேயே இது போன்ற பரந்த வேறுபாடு கொண்ட சரியான சட்ட அபிப்பிராயங்கள் இருந்த போதிலும் இதைக் காரணம் காட்டி யாரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வெறுப்பு பாராட்டவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் மனசாட்சிக்கேற்ப தங்கள் கருத்துகளைக் கூறியதால் எல்லா கருத்துகளையும் அங்கீகரித்தனர். இப்போது இந்த மனப்பான்மை ஏன் மறைந்துவிட்டது என்று எனக்குப் புரியவில்லை.
ஒரு நபித்தோழர் கருத்து வேறுபடுதல்
நபித்தோழர்கள் மத்தியில் நிலவும் ஒருமித்த கருத்து பற்றி பார்த்தோம். அதிலிருந்து ஒரு நபித்தோழர் மட்டும் கருத்து வேறுபட்டால் என்ன செய்வது? அவர் முறை தவறியவர் ஆகிவிடுவாரா? அல்லது அவரிடம் ஏதாவது கோளாறு இருக்கிறதா? அல்லது விஷயத்தை அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா? இதை எப்படி விளங்கிக் கொள்வது?
இதையும் ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளங்கிக் கொள்ள முயற்சிப்போம். ‘முத்ஆ’ எனப்படும் நிபந்தனைத் திருமணத்தை எடுத்துக் கொள்வோம். சிலர் இதை தற்காலிகத் திருமணம் என்று கூறுகின்றனர். என்னைப் பொருத்தவரை அப்படிச் சொல்வது இழிசொல்லாகும். ‘முத்ஆ’வோடு உடன்படுபவர்கள் கூட ‘தற்காலிகத் திருமணம்’ என்று சொல்லும்போது அறியாமலேயே தங்களைத் தாங்களே பழித்துக் கொள்கின்றனர். மாறாக ‘நிபந்தனைத் திருமணம்’ என்று சொல்லும்போது, அதோடு உடன்படாவிட்டாலும் அதற்கு நியாயம் செய்வதாகப்படுகிறது. மேலும் நிபந்தனைத் திருமணம் என்பது ‘முத்ஆ’ என்பதின் நேர்பொருள் அல்ல. அதன் எல்லா கூறுகளையும் உள்ளடக்கிப் பார்த்தால் நிபந்தனைத் திருமணம் என்று சொல்வதுதான் அதற்கான பொருத்தமான மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன். இது ஏதோ புதிதாகத் தோன்றிய பிரச்சனை அல்ல. வருந்தத்தக்க விதமாக இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகுதான் இப்பிரச்சனை எழுந்தது. அவருடைய வாழ்நாளில் ‘முத்ஆ’ கடைபிடிக்கப்பட்டது. அதன் பிறகுதான் கருத்து வேறுபாடுகள் தோன்றின. சிலர் இறைத்தூதர் தன் இறுதி ஆண்டில் அதைத் தடை செய்தார் என்கின்றனர். மற்றொரு சாரார் ‘இறைத்தூதர் அதைத் தடை செய்யவில்லை; உமர் தன் ஆட்சிகாலத்தில் அதைத் தடை செய்தார்’ என்கின்றனர். நாம் இந்தப் பிரச்சனைக்குள் இப்போது செல்லவில்லை.
கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இதைப் பார்ப்போம். சன்னி சட்டவியல் மற்றும் வரலாற்று நூல்களில் இந்த வகை திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது என்பதாக நபித்தோழர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இருந்தது என்ற தகவலைக் காண முடிகிறது. எனினும் சட்டவியலில் முன்னோடியாக விளங்கிய இப்னு அப்பாஸ் ‘நிபந்தனைத் திருமணம் கூடும்’ என்கிறார். இது பெரும்பான்மைக் கருத்தோ குறிப்பிடத்தக்க எண்ணிக்கை கொண்டவர்களின் கருத்தோ அல்ல. ஆனாலும் தன் கருத்துக்காக அவர் பழிக்கப்பட்டார் என்றோ, குற்றம் சாட்டப்பட்டார் என்றோ, வெட்டி வீழ்த்தப்பட்டார் என்றோ வரலாற்று மற்றும் சட்டவியல் நூல்களில் நாம் காண முடியவில்லை. விதிவிலக்காக இருந்த அவருடைய கருத்துக்காக யாரும் அவரை —இன்று போல— ‘நிராகரிப்பாளர்’ என்று சொல்லவில்லை. “நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”, “என்ன காரியம் செய்கிறீர்கள்?”, “இப்படி செய்வது முறையா?” என்று கூட யாரும் கேட்கவில்லை. சிலர் பிற்காலங்களில் இப்னு அப்பாஸ் தன் கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார் எனக் கூறுகின்றனர். இது உண்மையல்ல. பிற்காலங்களில் ஷியா-சன்னி வேறுபாடு முற்றிய போது அரசாங்கங்கள் சன்மானம் அளித்து இத்தகைய கருத்துகளை புனைந்தனர்.
சன்னி சட்டவியல் நூல்களைப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகிறது. ‘முத்ஆ’ விஷயத்தில் பிற சட்டவியலாளர்களோடு கருத்து வேறுபட்டு நின்றாலும் இப்னு அப்பாஸின் கருத்து மற்றவர்களின் கருத்தை ரத்து (நக்த்) செய்யவில்லை. இது விஷயத்தில் அவர் தன் சொந்த கருத்தைக் கொண்டிருந்தார் என்ற அளவிலேயே அது பார்க்கப்பட்டது. மற்ற அனைவரும் நிபந்தனைத் திருமணம் கூடாது என்று கூறியதால், அவர்களுடைய ஒருமித்த கருத்தே மேலோங்கி நின்றது.
இது போன்ற சட்டவியல் தீர்ப்புகள் இஸ்லாத்தின் அடிப்படையை மீறுவதாக அமையவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்வரும் வகுப்புகளில், இதுபோன்ற பல மேற்கோள்களை நாம் பார்ப்போம். மாலிக் இப்படிச் சொன்னார், ஸைத் இதைச் சொன்னார், ஜாஃபர் இவ்வாறு கூறினார், அஹ்மது இப்னு ஹன்பல் இப்படிக் கூறினார், இப்னு ஹஸம் இதைச் சொன்னார் என்று பார்ப்போம். இப்படிச் சொல்லும் போது இவர்கள் யாரும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு, அதன் சாராம்சத்துக்கு தீங்கு விளைக்கவில்லை என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.
மதீனாவாசிகளின் ஒருமித்த கருத்து
இஜ்மா பற்றி பேசும் போது அதில் மற்றொரு அம்சமும் உள்ளது. மாலிகி சிந்தனைப் பள்ளியில் மதீனாவாசிகளின் ஒருமித்த கருத்து பிறரை கட்டுப்படுத்தும் வலிமை கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. அதாவது ‘மதீனாவாசிகள் அனைவரும் ஒரு விஷயத்தில் உடன்பட்டால் அதில் ஏற்கத்தக்க விஷயங்கள் இருக்கும். எனவே அதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதற்குரிய முக்கியத்துவம் அளித்து அதன் மீது சிந்தனையை செலுத்த வேண்டும்’ என்பது மாலிக்கி சிந்தனைப் பள்ளியின் பார்வை.
மக்காவாசிகள் அல்லாமல் ஏன் மதீனாவாசிகளின் ஒருமித்த கருத்து பிறரை கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும்? மக்கா விடுதலைக்குப் பிறகு இறைத்தூதர் மதீனா திரும்பினார் என்று ஏற்கனவே பார்த்தோம். அவர் மக்காவில் தங்கவில்லை. அதற்கு தக்க காரணம் இருந்தது. இஸ்லாத்தின் தலைநகரம் மதீனாவாகவே இருந்தது. அபூ பக்கர், உமர், உஸ்மான், அலீ என யாரும் மக்காவை தலைநகரம் ஆக்கவில்லை. ‘மக்காவில் புனிதப் பள்ளிவாசல் உள்ளதே; இஸ்லாமிய வரலாற்றுக்கு, அதன் மைல்கற்களுக்குச் சொந்தமான மக்கா, இப்ராஹீம் (அலை) வரை நீழும் பாரம்பரியம் கொண்ட மக்காவை விடுத்து இறைத்தூதர் ஏன் மதீனாவில் தங்க வேண்டும்? இஸ்லாத்தை மையமாகக் கொண்டு முஸ்லிம்களின் மீது ஆட்சி செலுத்தியவர்கள் மக்காவை விடுத்து ஏன் மதீனாவில் இருந்தனர்?’ என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும். இக்கேள்விகளுக்கு விடை தெரிந்தால், இமாம் மாலிக் “மதீனாவாசிகளின் கருத்து நம்மை கட்டுப்படுத்தும்” என்று ஏன் கூறினார் என்பது தெரிய வரும்.
இமாம் மாலிக்கின் இக்கருத்தோடு மற்ற எல்லா சட்டவியலாளர்களும் முரண்பட்டனர். “மதீனாவாசிகள் தனிக் கருத்தை கொண்டிருக்கலாம். எனினும் அது நம்மை கட்டுப்படுத்துவது ஆகாது” என்று அவர்கள் கூறினர். உண்மையைச் சொன்னால், சட்டவியலாளர்களின் வரலாற்றைப் படிக்கையில் அஷ்-ஷாஃபியி ஆரம்பத்தில் இமாம் மாலிக்கின் இக்கருத்தோடு உடன்பட்டார் என்றும் பிற்காலத்தில் தன் கருத்தை மாற்றிக் கொண்டார் என்றும் பார்க்க முடிகிறது. மதீனாவாசிகளின் அபிப்பிராயம் பிற முஸ்லிம்களை கட்டுப்படுத்தாது என்ற ரீதியில் அவர் சில குறிப்புகளை எழுதியுள்ளார். எகிப்தில் இருந்த போது அவர் சில கருத்துகளைக் கொண்டிருந்தார். பின்னர் ஈராக் சென்ற பிறகு அவற்றை மாற்றிக் கொண்டார். இப்படியாக இமாம் ஷாஃபியி இரு சிந்தனைகளைக் கொண்டிருந்தார் என்று கூறலாம்.
மேலும் இங்கு மதீனாவாசிகளின் கருத்து என்று சொல்லும்போது, இஸ்லாத்தின் முதல் இருநூறு ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறோம். அதற்குப் பிறகு வந்தவர்களைப் பற்றியல்ல என்பது தெளிவு.
நபித்தோழர்களின் அபிப்பிராயங்களும் நான்கு சிந்தனைப் பள்ளிகளும்
நான்கு சிந்தனைப் பள்ளிகளும் நபித்தோழர்களின் சட்டத் தீர்ப்புகளை பொதுவாக ஏற்றுக் கொண்டனர். இங்கு மற்றொரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான்கு சிந்தனைப் பள்ளிகள் என்று நாம் அடிக்கடி குறிப்பிடுகிறோம். ஆனால், இஸ்லாத்தின் முதல் முன்னூறு ஆண்டுகளில், அறிவுச் செயல்பாடு உச்சத்தில் இருந்தபோது நூற்றுக்கணக்கான சட்டவியலாளர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் மறைந்து விட்டனர். நாம் பேசும் சட்ட விஷயங்கள் பற்றி அவர்களுடைய கருத்து என்ன என்று யாருக்கும் தெரியாது. இந்த நான்கு சிந்தனைப் பள்ளிகள் மட்டுமே பல லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றும் சிந்தனைப் பள்ளிகளாக திகழ்கின்றன.
நான்கு சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களும் நபித்தோழர்களின் கருத்தை எப்படி அணுகினர் என்பதை அறிய பின்வரும் மேற்கோள்கள் உதவும். அபூ ஹனீஃபா இவ்வாறு கூறுகிறார்: “ஒரு விஷயம் குறித்து நபித்தோழர்கள் அனைவரும் ஒரே கருத்தை கொண்டிருப்பின் அதை நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால் அவர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தால், அதில் எது சரி என எனக்குப்படுகிறதோ அதை தேர்ந்தெடுப்பேன். வேறு யாருடைய கருத்தையும் நான் இப்படி அணுக மாட்டேன்”.
மாலிக், நபித்தோழர்களின் கருத்தை கடமை (வாஜிப் அல்லது ஃபர்ளு) என்றில்லாமல் ‘வழிமுறை’ (சுன்னத்) எனக் கருதினார். இங்கு சுன்னத் என்பது இறைத்தூதரின் வழிமுறையைக் குறிப்பது அல்ல. அவர் இப்பதத்தை ஷரியத் அடிப்படையில் கறாரான பொருளில் பயன்படுத்தாமல் இறைத்தூதரின் வழிமுறைக்கு அடுத்த நிலையில் உள்ளதைக் குறிப்பிட உரிமையோடு பயன்படுத்தியுள்ளார். அஹ்மது இப்னு ஹன்பலைப் பொருத்தவரை, இன்னும் ஒருபடி மேலே சென்று நபித் தோழர்களுடைய தோழர்களின் பெரும்பான்மைக் கருத்தும் தான் எடுக்கும் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தும் என்றார்.
அஷ் ஷாஃபியி தன் அறிவுச் செயல்பாட்டின் ஆரம்ப ஆண்டுகளில் நபித்தோழர்களின் அபிப்பிராயங்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார். ஆனால், பின்னாட்களில் பாக்தாதுக்குச் சென்ற பிறகு தன் கருத்தை மாற்றிக் கொண்டார். அஷ் ஷாஃபியி நபித்தோழர்கள் பற்றிய தன் கருத்தை மாற்றிக்கொண்ட போது இவ்வாறு கூறினார்: “இறைத்தூதரின் கூற்றுகளையும் வேறு நபர்களின் (அதாவது நபித்தோழர்கள்) கூற்றுகளையும் ஒரே தரத்தில் வைத்து எப்படி என்னால் பார்க்க முடியும்? நான் அப்போது வாழ்ந்திருந்தால் அவர்களோடு விவாதத்தில் அல்லவா ஈடுபட்டிருப்பேன்? (கைஃப அதாவு ரஸுலில்லாஹி கவ்லி ரஜுலின் லவ் அஸர்துஹு லா ஹாஜஜ்துஹு).” அதாவது தனக்கும் அவர்களுக்கும் ஒரே மாதிரியான அறிவுத்திறன், சிந்தனைத்திறன் இருக்கும்போது, தன்னோடு கிட்டத்தட்ட சமமாக இருந்து விவாதிக்கும் தகுதியுடைய ஒருவரின் கருத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்று கேட்கிறார். இவைதான் நபித்தோழர்கள் பற்றி பிரதான நான்கு சன்னி சிந்தனைப் பள்ளிகளின் கருத்தாகும்.
மறுபுறம் ஷியாக்களும் கவாரிஜ்களும் நபித்தோழர்களின் தனிப்பட்ட அல்லது ஒருமித்த கருத்துக்களை எவ்வகையிலும் தங்களைக் கட்டுப்படுத்துபவையாகக் கருதவில்லை. மேலும் கேட்பதற்கு வினோதமாகத் தோன்றினாலும், பிற்காலத்தில் ழாஹிரி சிந்தனைப் பள்ளி, ஷியா மற்றும் கவாரிஜ்களின் இக்கருத்தோடு உடன்பட்டது என்று அறிகிறோம்.
நபித்தோழர்களின் கருத்துக்களையும் மூலாதாரம் எனக் கருதி தங்கள் சிந்தனைப் பள்ளியை வளர்த்தெடுத்த சில சட்டவியலாளர்கள், ஒரு விஷயம் குறித்து நபித்தோழர் ஒருவர் தன் சிந்தனையின் அடிப்படையில் கருத்தளித்தார் என்று நம்பகமான ஆதாரங்களிலிருந்து அறிய வந்தால், தங்கள் பகுத்தறிவையும் சிந்தனை முயற்சியையும் பயன்படுத்துவதுக்குப் பதிலாக அந்நபித்தோழரின் கருத்தையே எடுத்துக் கொண்டனர். இப்படிபட்ட விஷயங்களில் தாங்கள் சிந்தனை முயற்சி (இஜ்திஹாத்) செய்யத் தேவையில்லை என்று கூறினர்.
சட்டவியலாளர்களைப் பார்க்கும்போது ஒவ்வொருவரும் வெவ்வேறு நபித்தோழர்களின் செல்வாக்குக்கு ஆளாயினர் என்று அறிகிறோம். அபூ ஹனீஃபா இப்னு மஸ்வூதின் சிந்தனை, சொல் மற்றும் அபிப்பிராயங்களின் செல்வாக்குக்கு உள்ளாயினார். அபூ ஹனீஃபா என்று சொன்னால் கிட்டத்தட்ட இப்னு மஸ்வூத் என்று சொல்லிவிடலாம். அதே போல ஷாஃபியி, ஸைத் இப்னு சாபித் என்ற நபித்தோழரின் செல்வாக்குக்கு ஆளானார்.
சில சட்டவியலாளர்கள், தனிநபர்களாக நபித்தோழர்கள் கொண்டிருந்த கருத்து நம்மை கட்டுப்படுத்தாது என்று கூறினர். சட்ட முடிவுகளை எடுக்கும் போது அவற்றை கருத்தில் கொள்ளலாம் என்றாலும் அவர்களுடைய ஒருமித்த கருத்தைப் போல தனிநபர்களின் கருத்து நம்மைக் கட்டுப்படுத்தாது என்றனர்.
இரண்டாம் தலைமுறை முஸ்லிம்களின் அபிப்பிராயங்கள்
கவாரிஜ்கள், ழாஹிரி மற்றும் ஷியா சிந்தனைப் பள்ளிகள் நபித்தோழர்களை அடுத்து வந்த இரண்டாம் தலைமுறை முஸ்லிம்களின் (தாபியீன்) கருத்துகள் நம்மை கட்டுப்படுத்தாது என்று கூறினர். அபூ ஹனீஃபாவும் ஷாஃபியியும் இவ்வாறே கூறினர். இப்படிச் சொல்வதன் மூலம் அம்முஸ்லிம்களின் சிறப்புக்கும் கண்ணியத்துக்கும் யாரும் பங்கம் விளைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். வேறுசிலர், இரண்டாம் தலைமுறை முஸ்லிம்களின் கருத்துகளும் நம்மை கட்டுப்படுத்தும் என்றனர்.
இங்கு இரண்டாம் தலைமுறை முஸ்லிம்களின் மதிப்பு, மரியாதை, அவர்களுடைய முயற்சிகள், தியாகம் போன்றவற்றை யாரும் கேள்விக்குட்படுத்தவில்லை. மாறாக இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளை தோற்றுவித்தவர்களின் மனதில் அவர்கள் எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்தினர் என்ற உண்மையை மட்டுமே சுட்டிக்காட்ட முயற்சிக்கிறோம். இச்செய்திகளால் சிலர் உணர்ச்சிக்குள்ளாகக் கூடும் என்பதால் இதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
சன்னி சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்த மாலிக் மற்றும் அஹ்மத், இவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர் அல்லது அவர்களுடைய கருத்துக்களைக் கூர்ந்து கவனித்தனர். அக்கருத்துகளின் மீது அதிக கவனம் செலுத்தினர். எனினும் அவற்றை தங்களைக் கட்டுப்படுத்துபவையாகக் கருதவில்லை.
♦ ♦ ♦ ♦ ♦