இஸ்லாமிய வரலாறு – 09 / இஜ்திஹாத் ஹனஃபி (பாகம் 3) – இமாம் முஹம்மது அல் ஆஸி
Posted onஇஸ்லாமிய வரலாறு – 09 / இஜ்திஹாத் & ஹனஃபி (பாகம் 2)
♦ ♦ ♦ ♦ ♦
மரம் ஒன்று கிளைகள் வெவ்வேறு
இந்தச் சிந்தனைப் பள்ளிகள் அனைத்தும் துவக்கத்தில் வெறும் சிந்தனைப் பள்ளிகளாகவே இருந்தன. அவை தனித்தனி அடையாளங்களாகவோ வழிமுறைகளாகவோ (மதாஹிப்) இருக்கவில்லை. இந்த உண்மை இன்றைய முஸ்லிம்களின் பொதுப் புத்தியிலிருந்து மறைந்துவிட்டது. ஆரம்பத்திலிருந்தே இவை தனி வழிமுறைகளாக உருவாயின என்று மக்கள் நினைக்கின்றனர். அது அப்படி அல்ல. அப்போது சிந்தனை முயற்சி (இஜ்திஹாத்) முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆகவே அப்போது அவை சிந்தனா முயற்சி சார்ந்த, இணக்கமான கருத்துகளாக, சிந்தனைப் பள்ளிகளாகவே துவங்கின. பிற்காலத்தில், நாம் ஏற்கனவே பார்த்த அரசியல் நிகழ்வுகளின் காரணமாக அவை தனி அடையாளங்களாக மாறின. நான் இங்கு ‘தனிப் பிரிவுகள்’ என்று சொல்லாமல் ‘தனி அடையாளங்கள்’ என்றே குறிப்பிடுகிறேன். எந்தவொரு முஸ்லிமும் சிந்தனைப் பள்ளிகளைக் குறிப்பிட ‘பிரிவு’ என்ற சொல்லை பயன்படுத்தமாட்டார் என்று நம்புகிறேன்.
இங்கு உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்க வேண்டுகிறேன். இறைத்தூதர் இந்த சிந்தனைப் பள்ளிகள் ஏதாவது ஒன்றைச் சார்ந்திருந்தாரா? இதற்கு விடையளித்து சிந்தித்துப் பாருங்கள். இப்படிக் கேட்பதால் நாம் புண்படும்படி பேசுகிறோம் என்று சிலர் நினைக்கின்றனர். இல்லை. நாம் முற்போக்காகச் சிந்திக்கிறோம். இப்படிச் சிந்தித்துக் கேள்விகள் கேட்பது ஆரோக்கியமானதே. சிந்திப்பது புண்படுத்துவது ஆகாது.
எனவே மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். நாம் இங்கு இந்த சிந்தனை முறைமைகளை படித்துப் புரிந்துகொள்ள மட்டுமே முயற்சிக்கிறோம். அவற்றின் விவரங்களுக்குள் செல்லவில்லை. இவற்றை விரிவாகப் பார்க்கும்போது சில சட்டவியல் அறிவுசார் கருத்துக்கள் தமக்குள்ளாகவே தீவிரமாக முரண்படுவதை பார்ப்பீர்கள். அப்படியிருந்தும் அவை இஸ்லாத்தின் குறிக்கோளை ரத்து செய்துவிடாது; இஸ்லாத்தின் சாராம்சத்தை குறைத்துவிடாது. ஒரு விஷயத்தை வேறுவகையிலும் புரிந்துகொள்ளலாம் என்பதையே இக்கருத்து முரண்பாடுகள் உணர்த்துகின்றன. அல்லாஹ்வின் வேதமும் இறைத்தூதரின் வழிகாட்டுதலும் என ஒரே மூலாதாரங்களின் பக்கம் சுட்டும்போதும் பல்வேறு சிறப்பான முடிவுகளை அடையும் மனித ஆற்றலையே இவை உணர்த்துகின்றன. இதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இதை ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே நம்மை நாம் ஒட்டுமொத்தமாக வலுப்படுத்தும் வழியைக் கண்டடைய வேண்டும். ஒரு சாரார் பலவீனமாக இருக்க மற்றொரு சாரார் வலுவோடு இருக்க முடியாது. இதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் சிலர் இதைப் புரிந்துகொள்வதற்குச் சிரமப்படுகின்றனர்.
சட்டவியலாளர்கள் அனைவரும் குர்ஆன் மற்றும் இறைத்தூதரின் புனிதத்தை பாதுகாப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர். அவர்கள் வேறுபடுவது கிளைப் பிரச்சனைகளில் (ஃபுரூஆ) மட்டுமே; அடிப்படை (உசூல்) விவகாரங்களில் அல்ல. அவர்கள் அனைவரும் ஒரே விதையைத்தான் விதைக்கின்றனர். அதிலிருந்து வளரும் மரமும் ஒன்றுதான். எனினும் அதில் பல கிளைகள் உள்ளன. மரத்துக்கு கிளைகள் இருக்கக் கூடாதா என்ன? கூடாது என்று சொல்லி கிளைகளை வெட்டுபவர்கள் அம்மரத்தையே அழிக்கப் பார்க்கிறார்கள். மரத்தின் கிளையை ஒவ்வொன்றாக வெட்டுபவர் அம்மரத்தை அழித்துவிடுவார். இஸ்லாத்தின் பெயரால் செயல்படும் வெறியர்கள் இதைத்தான் செய்கின்றனர். கிளைகளை வெட்டுவதன் மூலம் இஸ்லாம் என்னும் மரத்தை அழிக்கின்றனர்.
சில மேற்கோள்கள்
அடுத்து, சட்டவியலாளர்கள் தம் சிந்தனைப் பள்ளிகளை தோற்றுவித்தபோது கூறிய சில கூற்றுகளை மேற்கோள் காட்டுகிறேன். அபூ ஹனீஃபா கூறியதாவது, “நாம் அடைந்த மிகச்சிறந்த முடிவு இதுதான். இதைவிடச் சிறப்பானதை யாரும் கண்டால் அவர் அதை பின்பற்றட்டும்” (ஹாதா அஹ்ஸனு மா வஸல்னா இலை ஃபமன் ர’அ ஹய்ரன் மின்ஹு ஃபல் யத்பஹு). இது அனைவருக்கும் உரிமம் வழங்குவது போலாகும். ‘நான் சொல்வதுதான் இறுதி முடிவு. இதை நீங்கள் பின்பற்றாவிட்டால் வழிதவறிவிடுவீர்கள்’ என்று அவர் சொல்லவில்லை.
இமாம் ஷாஃபியி கூறியதாவது: “ஒரு நபிமொழி சரியானது என்ற தரத்தைப் பெற்றால் அதுதான் என்னுடைய வழிமுறை ஆகும் (இலா சஹ்ஹல் ஹதீசு ஃப ஹுவ அல் மத்ஹபி)”. அதாவது தன் அறிவுசார் பணிகளில் சரியல்லாத ஒரு நபிமொழி காணப்பட்டால், அது தன் வழிமுறை அல்ல என்றும் அதைத் தூக்கி எறியலாம் என்றும் எதிர்காலத் தலைமுறைக்கு அனுமதி வழங்குகிறார். ஏனெனில் அன்று நபிமொழிகள் எல்லா இடங்களிலும் பரவிக்கிடந்தன. எகிப்திலிருந்து ஈராக் சென்றதும் இமாம் ஷாஃபியி தன் அறிவுசார் எண்ணங்களை மாற்றிக் கொண்டார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். அதற்குப் பின்னர் அவர் அல் ஏமன், அஷ் ஷாம் அல்லது அல் அந்தலூஸ் என பயணப்பட்டிருந்தால் இன்னும் பல ஆதாரப்பூர்வ நபிமொழிகளைக் கண்டடைந்திருப்பார்; தன் அறிவை மேலும் விசாலமாக்கி இருப்பார். இந்த அறிவுத் தேடல் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கும்.
வளமான நூல்கள்
சட்டவியலாளர்கள் அனைவரும் தம் நூல்களின் பெயரால் வாழ்கின்றனர். அவர்கள் பல நூல்களை இயற்றினர். ஷாஃபியி ‘அல் உம்’ என்ற நூலை இயற்றினார். தாய் என்று பொருள் கொண்டாலும் மூலாதாரம் என்ற அர்த்தத்தில் அவர் இவ்வாறு பெயரிட்டுள்ளார். அதில் இவ்விஷயங்களை விரிவாக எழுதியுள்ளார். இமாம் மாலிக் அல் முஅத்தா என்ற நூலை இயற்றினார். இவையனைத்தும் சாதாரணமான நூல்களல்ல. இவ்விஷயங்கள் பற்றி நீங்கள் ஓரளவு அறியும் பொருட்டு இவற்றை மேலோட்டமாகச் சொல்கிறேன். ஆனால் இவை நுட்பமான, செம்மையடைந்த கருத்துக்களாக இருந்தன.
மேற்குலகில் ரோமானியச் சட்டங்கள் குறித்து பெருமையாகப் பேசப்படுவது உண்டு. அவை அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவதும் உண்டு. ஆனால் நாம் பெற்றிருக்கும் வளம்மிக்க ஏராளமான இஸ்லாமியச் சட்டவியல் இலக்கியத் தொகுப்புகளை ஒன்று சேர்த்து ரோம சட்ட இலக்கியத் தொகுப்புகளுக்கு அருகில் வைத்தால் அது அமெரிக்காவின் தேசிய நூலகத்தை நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் தனி நூலகத்துக்கு அருகில் வைத்தது போலிருக்கும். அந்த அளவுக்கு இஸ்லாமியச் சட்டவியல் தொகுப்புகள் வளமாக உள்ளன. இத்தனைக்கும் இஸ்லாத்தின் நான்காம் நூற்றாண்டிலேயே நம் அறிவுத்திறன் முடக்கப்பட்டுவிட்டது. அன்றைய மன்னராட்சி அரசாங்கங்கள் நம்மை சிந்திக்கக் கூடாது என்றனர். நம் அறிவுச் செயல்பாடு தொடர்ந்து நீடித்திருந்தால் இன்னும் எத்தனை சட்ட இலக்கியங்கள் இயற்றப்பட்டிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
கண்மூடிப் பின்பற்றுதல் (தக்லீத்)
நான்காம் நூற்றாண்டில் நம் அறிவுச் செயல்பாடு முடங்கிய போது, ‘தக்லீத்’ என்ற ஒரு வகையான அந்நியச் செயல்பாடு நம்மை தொற்றிக் கொண்டது. ஒரு முஸ்லிம் தன்னைவிட அறிவு மிகுந்த மற்றொருவரை பின்பற்றுவது தக்லீத் ஆகும். இன்னும் ஒருபடி மேலே சென்று தன்னை விட அறிவு மிகுந்த ஒரு முஸ்லிமின் மீது நம்பிக்கை கொள்வது என்றும் சொல்லலாம். அறிஞர்களுக்கும் சாமானியர்களுக்கும் இடையே உள்ள உறவை இழிவுபடுத்தும் நோக்கத்தில் நாம் இதைச் சொல்லவில்லை. மனிதச் சமூகத்தில் சிலர் வேறு சிலரைவிட அதிக அறிவுபடைத்தவர்களாக இருப்பது இயல்புதான்.
இருநூறு கோடி முஸ்லிம்களைக் கொண்ட —நான் இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை, பிறர் இவ்வெண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுகின்றனர் — இவ்வுலகில் இருநூறு கோடி அறிஞர்களை எதிர்பார்க்க முடியாது. நாம் எத்தனை பல்கலைக் கழகங்களை நிறுவினாலும், எத்தனை இஸ்லாமிய பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்களை நிறுவினாலும் நூறு கோடி அல்லது ஒரு கோடி அறிஞர்களைக் கூட உருவாக்க முடியாது. நல்வாய்ப்பு உள்ளவர்களாக இருந்தால் அதிகபட்சம் பத்து லட்சம் அறிஞர்களை உருவாக்கலாம். எனில் பிற முஸ்லிம்கள் என்ன செய்வது? அவர்கள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய இந்த அறிஞர்களின் பதில்களை எதிர்பார்த்துத்தான் இருப்பர். எனவே இத்தகைய சூழலில் முஸ்லிம் அறிஞர்களுக்கும் முஸ்லிம் சாமானியர்களுக்கும் இடையே ஒரு பரிமாற்றம் நிகழ்கிறது. ஆழ்ந்த அறிவு பெறாத சாமானியருக்கு அவ்வறிஞர் மதிப்புமிக்க தன் கருத்தை வழங்குவார். இதுதான் தக்லீத் ஆகும். இதை இயல்பான தக்லீத் என்று வைத்துக் கொள்வோம். இது ஆரோக்கியமானதே.
ஆனால் அரசாங்கம் “அறிஞர்களே இருக்கக் கூடாது” என்று உத்தரவிட்டால் என்ன நடக்கும்? உண்மையில் வரலாற்றில் அப்படித்தான் நிகழ்ந்தது. இஸ்லாத்தின் நான்காம் நூற்றாண்டில் பாக்தாதில் இருந்த அரசாங்கம் ‘சிந்தனை முயற்சி செய்யக் கூடாது; முஜ்தஹிதீன்கள் இருக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டது. இதில் நகைமுரண் என்னவென்றால் அன்று பாக்தாத்தான் கல்வி மற்றும் அறிவுத்தளத்தில் களைகட்டித் திகழ்ந்தது. நிலைமை கொஞ்சம் மாறிக் கொண்டிருந்தாலும் இன்று அறிவைத் தேடி ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் மக்கள் படையெடுப்பதைப் போல அன்று அறிஞர்களின் கேந்திரமாக ஈராக்கும் அந்தலுசும் விளங்கின. ஆனால் அன்று அரசாங்கம் அவ்வாறு உத்தரவிட்ட போது முஸ்லிம் பொதுமக்கள் தக்லீதின் பக்கம் திரும்பினர். சமகாலப் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறும் அறிஞர்கள் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் முந்தைய தலைமுறையில் வாழ்ந்த அறிஞர்களை பின்பற்றத் துவங்கினர். இதன் விளைவு முஸ்லிம் சமூகத்தையே முடக்கிப் போடுவதாக இருந்தது. இஸ்லாத்தின் மிகப்பெரிய வீழ்ச்சி அன்றிலிருந்து துவங்கியது.
குர்ஆனை வாசிக்கும் எவரும், இறைத்தூதரின் வரலாற்றைக் கற்கும் எவரும் அறிவு என்பது தேடிச் சென்று அடைய வேண்டிய ஒன்று என்பதை அறிவார். முஸ்லிம்களுக்கும் அறிவுக்கும் இடையே யாரும் தடுப்பை ஏற்படுத்த முடியாது. ஆனால் அன்றைய அரசாங்கங்கள் —இன்றுவரை நீடிக்கும்— ஒரு தடுப்பை ஏற்படுத்தின. இன்று கூட முஸ்லிம்கள் மத்தியில் ‘இஜ்திஹாதுக்கான ஒரு பேரியக்கம் நமக்குத் தேவை’ என்று சொல்வதே சிரமமாக இருக்கும் அளவுக்கு அவர்கள் அதை நீண்டகாலமாக நிறுவனமயப்படுத்திவிட்டார்கள்.
ஒரு மிகப்பெரும் இஸ்லாமிய அறிவுத்தளத்தை நாம் ஒன்றுகூட்ட வேண்டும். ஏனெனில் இந்த கண்மூடித்தனமான தக்லீத் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக உறுதியாகக் கட்டமைந்துவிட்டது. இன்று ஒருவர் ‘நான் ஷாஃபியி அல்ல, ஹனஃபியும் அல்ல, நான் எதுவும் அல்ல. நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எனக்குத் தெரிந்த அளவு பின்பற்றும் ஒரு முஸ்லிம்’ என்று சொன்னால் அவரை சந்தேகத்தோடு பார்க்கும் அளவுக்கு இந்த தக்லீத் நம் கண்களை மறைத்துவிட்டது. இதற்குக் காரணம், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நம்மிடமிருந்து மறைந்துவிட்ட அறிவுச் செயல்பாடுதான்.
தக்லீத் பற்றி நாம் இதுவரை கூறியதனைத்தும் சன்னி முஸ்லிம்களைச் சார்ந்த நான்கு பிரதான சிந்தனைப் பள்ளிகளுக்கே பொருந்தும். ஷியாக்களைப் பொருத்தவரை, அவர்களிடையே தக்லீத் கோட்பாட்டளவிலும் சிறிதளவில் நடைமுறையிலும் உள்ளது. ஏனெனில் தேவையான வாய்ப்பு வசதிகள் இருந்தாலொழிய ஒரு முஜ்தஹித் சிறந்து விளங்க முடியாது. குறிப்பிட்ட வரம்புகளுக்குள் அவர் கட்டுப்படுத்தப்பட்டால் அது அவருடைய திறனை பாதிக்கும். ஆனாலும் ஷியாக்கள், அவர்களுக்கு அமைந்த சூழலில், அவர்களுக்கே உரிய நம்பிக்கைகளின் காரணமாக, குர்ஆன், இறைத்தூதர் மற்றும் இமாம்கள் குறித்த அவர்களுடைய புரிதல்களின் காரணமாக இஜ்திஹாத் முடிந்துவிட்டது என்று —பிற முஸ்லிம்களைப் போல— சொல்லவில்லை. அவர்களுக்கு மத்தியில் தொடர்ச்சியான இஜ்திஹாத் செயல்பாடு நடைபெற்று வந்துள்ளது. அவர்கள் விஷயத்தில், இஜ்திஹாத் என்ற பதம் அதற்குரிய அசல் அர்தத்தை -முழு வீச்சில் இல்லையென்றாலும்- சுமந்து வந்துள்ளது. ஷியாக்கள் —ஸைதிகளும் பன்னிருவர் வகையினரும்— மற்றும் கவாரிஜ்கள் மத்தியில் அறிஞர்களின் இஜ்திஹாத் கட்டாயம் என்ற நிலையில் தொடர்ந்தது. பாவம் சன்னிகள். அவர்கள் மட்டும் சில அரசாங்கங்களின் கொள்கைகளுக்கு இலக்காகிவிட்டனர்.
இஜ்திஹாதின் முடிவுக்குப் பின்
அறிவுத்தளத்தில் இஜ்திஹாத் முடிவுக்கு வந்த போது, அரசாங்கங்கள் அவ்விடத்தை நிரப்பின. அதிகாரத் தலையீட்டின் காரணமாக ஈராக்கில் ஹனஃபி சிந்தனைப் பள்ளி பிரதான சிந்தனைப் பள்ளியாக விளங்கியது. அது போல அல் அந்தலூசில் மாலிக்கி சிந்தனைப் பள்ளியும், சில காலம் அஷ் ஷாமில் ஷாஃபியி சிந்தனைப் பள்ளியும் இருந்தன. ஆனால் இவை பிற்காலங்களில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் மாற்றமடைந்தன. இப்போது ஹனஃபிகள் பெரும்பான்மையாக இந்திய துணைக்கண்டத்திலும் துருக்கியிலும் மத்திய ஆசியாவிலும் உள்ளனர். ஷாஃபியி சிந்தனைப் பள்ளி பிரதானமாக இந்தோனீசியாவிலும் தென் கிழக்கு ஆசியாவிலும் உள்ளது. மாலிக்கி சிந்தனைப் பள்ளி ஆப்ரிக்காவில் பிரதானமாக உள்ளது.
இஜ்திஹாத் மறைந்து, நான் ஏற்கனவே கூறிய தக்லீதை மக்கள் பின்பற்றத் துவங்கிய போது அவர்களுக்கு மத்தியில் சகிப்பின்மை உருவானது. ஒருமுறை ஹனஃபி மற்றும் ஷாஃபியி சிந்தனைப் பள்ளிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் அரசாங்கங்கள் தலையிட்ட போது அன்று நிலவிய இறுக்கத்தை குறைக்க அது உதவியது.
தக்லீத் தோன்றி அரசாங்கங்களின் தலையீடும் ஏற்படத் துவங்கிய பிறகு மக்கள் சட்டவியலில் இருந்த தொழுகை முறை, நோன்பின் சட்டங்கள் போன்ற சடங்கு தொடர்பான அம்சங்களை மட்டும் இறுகப்பற்றிக் கொண்டனர். அவற்றிலிருந்த பிற சட்டங்கள், அறிஞர்களின் சட்டக் கருத்துக்கள் போன்றவை வெவ்வேறு அரசாங்கங்கள் மற்றும் நிர்வாகங்களால் ஓரங்கட்டப்பட்டன. அதாவது ஒவ்வொரு அரசாங்கமும் தனக்குச் சாதகமாக இருந்த கருத்துகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றை அதிகாரப்பூர்வமானதாக அறிவித்தது. எடுத்துக்காட்டாக உஸ்மானிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வழிமுறையாக (மத்ஹப்) ஹனஃபி சிந்தனைப் பள்ளி விளங்கியது. அதிலிருந்த அரசாங்கக் கொள்கைகளுக்கு ஏதுவான கருத்துகள் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அவற்றோடு முரண்படும் அனைத்தும் வெறும் காகிதத்தில் இருந்ததேயொழிய நடைமுறையில் இருக்கவில்லை.
தற்போது ஆங்காங்கே உள்ள இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்த பல முஸ்லிம் அறிஞர்கள் விழிப்படைந்துள்ளனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்களை யாரோ தலையில் அடித்து எழுப்பியது போல, விழித்து “நாம் இஜ்திஹாத் செயல்முறையைத் தொடர வேண்டும்” என்கின்றனர். இதுகுறித்து விழிப்புடன் இருக்கும் பல சமகால அறிஞர்களுக்கு மத்தியில் சூடானின் ஹசன் அத் துராபி முக்கியமானவர். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் அனைவரும் மீண்டும் —இஜ்திஹாத் செயல்பட வேண்டும் என்பதை அறிந்திருந்தாலும்— அரசாங்கங்களின் தலையீட்டை சந்திக்க வேண்டியுள்ளது. அன்று துவங்கிய அரசாங்கங்களின் தலையீடு இன்றும் தொடர்கிறது. அரசாங்கங்கள்தான் இப்போது தடையாக உள்ளன. ஆனால் இதில் ஒரு நன்மை என்னவென்றால், மக்கள் இந்தப் பிரச்சனையை அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். அடுத்து அதைத் தீர்க்க வேண்டும். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போது இறுதியாக இதுகுறித்து ஏதாவது செய்தாக வேண்டும் என்ற பொதுக்கருத்து ஏற்படத் துவங்கியுள்ளது.
அறியாமை
“ஒவ்வொரு தலைமுறையும் அதற்குரிய அறிஞரைப் பெற்றிருக்கும்” என்று அஹ்மது இப்னு ஹன்பல் கூறினார். ஆனால் வரலாற்றைப் படித்தால் அப்படி நடக்கவில்லை என்று பார்க்கிறோம். இந்த சிந்தனைப் பள்ளிகளுக்கும் வரலாற்று நிகழ்வுகளுக்கும் இடையே இப்படிப் பல முரண்பாடுகளைக் காண முடிகிறது. முஸ்லிம்களில் கிட்டத்தட்ட 95% பேருக்கு இந்த அறிஞர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன என்று தெரியாது. “இமாம் ஷாஃபியியை பின்பற்றுகிறீர்களே, அவர் தன்கால ஆட்சியாளர்களைப் பற்றி என்ன நினைத்தார்?” என்று கேட்டால் “தெரியாது” என்பதுதான் பதிலாகக் கிடைக்கும். இத்தனைக்கும் அவர்கள் அவரை கவனமாகவும் பிரக்ஞையுடனும் பின்பற்றுகின்றனர். இதுகுறித்த எந்தத் தகவலும் வெளியே கசியாமல் அன்றே தடுக்கப்பட்டது போலத் தெரிகிறது. இப்படிப் பல விஷயங்களைக் கூறலாம்.
இந்த வெறுமை அன்றிலிருந்து இன்றுவரை நீடிக்கிறது. அறிவெழுச்சி மிகுந்த காலத்தில் வாழ்வதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் அறிவு பெறும் உரிமையுடையவர்களாக இருக்கிறார்கள். ஒரு நூலை வாங்கவோ படிக்கவோ யாரும் தடை போட முடியாது. நல்ல தரமான நூல்கள் கிடைப்பது வேண்டுமானால் சிரமமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அவற்றை விரும்பினால் உங்களைத் தடுக்கும் சட்டம் எதுவும் இல்லையே! அப்படி இருந்தும் அறியாமையில் வாழ்கிறோம் எனில் இது இயல்பாக நடப்பதாகத் தெரியவில்லை. நம்மை இச்சூழலில் ஆழ்த்தும் விதத்தில், நம்மை அறியாமையில் இத்தனை காலம் கட்டிப் போடும் ஏதோவொன்று செயல்படுகிறது.
சிந்திக்கும் ஒருவர் “இந்தத் தகவல்கள் ஏன் எனக்குக் கிடைக்கவில்லை?” என்று கேட்பது மிக முக்கியம். இன்று ஒரு அரசியல் அறிஞர் இருக்கிறார் எனில் எகிப்து, பாகிஸ்தான், துர்க்கி, சவூதி அரேபியா போன்ற நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் குறித்து அவருடைய கருத்தைக் கேட்பதில் மக்கள் ஆர்வமாக இருப்பது இயல்பு. எனில் இமாம் அபூ ஹனீஃபா அல்லது வேறு இமாம்களை தொழுகை, நோன்பு போன்றவற்றில் கவனமாக, முழுமையாகப் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள், அன்றைய ஆட்சியாளர்கள் பற்றி அவர்களுடைய கருத்தை அறிய ஏன் விரும்புவதில்லை?
இஸ்னா அஷரி (பன்னிருவர்) அல்லது ஸைதிகளைச் சார்ந்த ஷியாக்கள் வேண்டுமானால் அக்கால அரசாங்கங்கள் விஷயத்தில் தங்கள் இமாம்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டின் காரணமாக, இது பற்றி அறிந்து வைத்துள்ளனர் என்று சொல்லலாம். இவர்கள் விஷயத்தில் மட்டும் இந்த அறிவு இன்னும் உயிரோடு இருக்கிறது. இவர்களைத் தவிர பிற சாமானிய முஸ்லிம்களிடம் இது பற்றி கேட்டுப்பாருங்கள். எடுத்துக்காட்டாக ஒரு ஷியாவிடம் உமைய்யா அரசாங்கத்தின் கடைசி காலம் மற்றும் அப்பாஸி அரசாங்கத்தின் துவக்க காலத்தில் இருந்த இமாம் அபூ ஹனீஃபாவின் அரசியல் நிலைப்பாடு என்ன என்று கேட்டுப்பாருங்கள். ‘தெரியாது’ என்பதுதான் அவருடைய பதிலாக இருக்கும். சன்னி, ஷியா, கவாரிஜ் என எல்லோரிடத்திலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.
இந்தச் சட்டவியலாளர்கள் சிந்தனாவாதிகள்; இஸ்லாமிய அறிஞர்கள். பல்வேறு சட்டவியல் விஷயங்களின் ஆழ-அகலத்தைக் கண்டவர்கள். இத்தகையவர்கள் தங்கள் கால ஆட்சியாளர்களின் சட்டப்பூர்வ தன்மை குறித்து சிந்தித்திருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?! நிச்சயமாக சிந்தித்திருப்பார்கள். “இல்லை” என்று சொல்பவர்கள் நம் அறிவை கேலி செய்பவர்களாகத்தான் இருக்க முடியும். சொல்லப்போனால் சில அறிஞர்கள் அரசியல் எதிர்ப்பியக்கத்தில் செயல்பட்டனர்.
அபூ ஹனீஃபாவும் ஷாஃபிஈயும் தம் கால ஆட்சியாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டனர். இப்போது கேள்வி என்னவென்றால் இந்தச் செய்திகள் ஏன் வெளியே வருவதில்லை? ஏனெனில் இன்று இஸ்லாமிய உரைகளுக்கு, செயல்பாடுகளுக்கு, திட்டங்களுக்கு, மாநாடுகளுக்கு, பல்கலைக்கழகங்களுக்கு, பாடத் திட்டங்களுக்கு பொறுப்பில் இருப்பவர்கள் இவற்றை வேண்டுமென்றே முஸ்லிம் பொதுத்தளத்தில் தவிர்க்கின்றனர். முஸ்லிம் பொதுமக்களும் ‘அவரைப் போல நான் தொழுதுவிட்டேன், அவரைப் பின்பற்றிவிட்டேன். அல்லாஹ் இதை பொருந்திக் கொள்ளட்டும்’ என்று சொல்லி திருப்தி அடைந்து கொள்கிறார்கள். இதைத் தாண்டிப் பார்த்தால் நம்மிடம் வெறுமையைத் தவிர வேறு எதுவும் இல்லை.
இந்த விஷயத்தில் சன்னிகளை விட ஷியாக்கள் ஒருபடி மேலே உள்ளனர். சன்னிகள் தாங்கள் வாழும் அறியாமை நிலைக்கு துணைபோனவர்களாக உள்ளனர். அரசியல், கொள்கை, நிர்வாகம், எதிர்ப்பியக்கம் போன்றவற்றில் அவர்களுடைய தலைவர்களின் கருத்தை அவர்களே அறியாமல் இருக்கக் காரணம் என்ன?
சன்னிகள் மத்தியில் சையது குதுப், மௌதூதி, ஹசன் அல் பன்னா, தகிய்யுத்தீன் நபஹானி போன்ற அறிவுக்கூர்மை பெற்ற அறிஞர்கள் இருந்தனர். அவர்கள் இந்த வரலாறுகளை முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தனர். அவர்களுக்கு இது பற்றிய தெளிவான புரிதல் இருந்தது. எனினும் தனிமனிதர்கள் பொதுமக்களுக்கு ஈடாக முடியாதே! அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது தலைமறைவு வாழ்க்கை வாழ நிர்பந்திக்கப்பட்டனர். தியாகிகள் ஆயினர். தனிநபராக இந்த விஷயங்களை சாதிக்க இயலாது. பெருந்திரளான மக்கள் அணிதிரண்டால்தான் சரியான திசையில் விரும்பும் மாற்றம் ஏற்படும். இந்த அறிஞர்கள் உருவாக்கிய இயக்கங்கள் மாற்றத்தை உருவாக்க முற்பட்டபோது அரசாங்கங்கள் அவர்களைத் தடுத்தன. எப்படியாவது உயிரை வாங்கத் துடிக்கும் அரசாங்கங்கள் இருக்கும்போது நிலைமை இன்னும் சிக்கலாகிறது. இப்பணி எல்லா முஸ்லிம்களின் பங்களிப்பையும் வேண்டி நிற்கிறது.
இங்கு மற்றொரு விஷயத்தை கனத்த இதயத்துடன் பதிவு செய்ய விரும்புகிறேன். சிந்தனைத் தெளிவுமிக்க அறிஞர்கள் உருவாகும் போது, வருந்தத்தக்க விதமாக, முஸ்லிம்கள் அவர்களை அடையாளம் காணும் முன் எதிரிகள் அவர்களை அறிந்து கொள்கின்றனர். வரலாறு நெடுகிலும் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளாக உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் முஸ்லிம்களில் யாராவது கண்விழிக்கிறார்களா என இஸ்லாத்தின் எதிரிகள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். நித்திரையிலிருந்து எழுந்து யாரேனும் நேர்திசையில் செல்ல முற்பட்டால் அவர்களைப் பிடித்துக் கொன்றுவிடுகின்றனர். அதன் பிறகு முஸ்லிம்கள் வந்து “ஆஹா! அவர் மிகப் பெரிய அறிஞர்!” என்று கூறும்போது காலம் கடந்துவிடுகிறது.
♦ ♦ ♦ ♦ ♦
இஸ்லாமிய வரலாறு – 09 / இஜ்திஹாத் & ஹனஃபி (பாகம் 4)