இஸ்லாமிய வரலாறு – 09 / இஜ்திஹாத் & ஹனஃபி (பாகம் 4) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 09 / இஜ்திஹாத் & ஹனஃபி (பாகம் 3)

♦ ♦ ♦ ♦ ♦

ழாஹிரியாக்கள்

நாம் ஏற்கனவே ழாஹிரியாக்கள் பற்றிக் குறிப்பிட்டோம். இவர்களைப் பற்றி யாரும் அதிகம் கேள்விப்படுவதில்லை. அவர்களுடைய கருத்து விநோதமாக இருந்தது. பாமரர்களும் சிந்தனை முயற்சி (இஜ்திஹாத்) செய்வது கட்டாயம் என்று அவர்கள் கூறினர். ஒருவர் அறிஞர் இல்லாவிட்டாலும், இஸ்லாத்தில் புலமை பெற்று விளங்காவிட்டாலும், இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் பயிலாவிட்டாலும் தான் தேர்ந்தெடுக்கும் கருத்துக்கு அவரே பொறுப்பாவார் என்றனர். அதாவது ஒருவர் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்கிறார் எனில் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் குறைந்தபட்சம் அதைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்; ஏதாவது ஒருவகையில் இஜ்திஹாதில் பங்குபெற வேண்டும் என்றனர்.

இன்றும் ழாஹிரிகள் இருக்கின்றனர். என்னுடைய கணிப்பில் அவர்கள் சில லட்சம் பேர் இருப்பர் என்று நினைக்கிறேன். இது கொஞ்சம் மிகைப்படுத்திக் கூறுவதாகக் கூட இருக்கலாம். சமீபகாலங்களில் சில சலஃபிகள் தங்களை ழாஹிரிகளோடு அடையாளப்படுத்துவதைக் காண முடிகிறது. இதன் இயங்கியல் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. எனினும் எனக்கு இவ்வாறு தோன்றுகிறது: பெரும்பாலான சலஃபிகள் அசலில் தங்களை அஹ்மது இப்னு ஹன்பலின் பின்பற்றாளர்களாகக் கருதுகின்றனர். பின்னர் அல் இஸ் இப்னு அப்துல் சலாம், இப்னு தைமிய்யா, இப்னுல் ஜவ்ஸி, முஹம்மது இப்னு அப்துல் வஹாப் அதன் பிறகு சமகாலத்தில் சவூதி அரேபியாவில் வாழும் அறிஞர்கள் வரை இப்பட்டியல் தொடர்கிறது. ழாஹிரிகள் இஜ்திஹாத் தொடர்ந்து நிகழ வேண்டும் என்கின்றனர். இது அஹ்மது இப்னு ஹன்பலின் கூற்றாகிய ‘ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு அறிஞர் தோன்றுவார் (குல்லி அசலின் முஜ்தஹிதீன்)’ என்பதோடு ஒத்துப்போகிறது. ஆக இவர்களுக்கிடையே ஒற்றுமைகள் உள்ளன. இதனால் இவர்களுக்கிடையே அறிவுப் பரிமாற்றம் நிகழ்கிறது. இதெல்லாம் கடந்த 20-30 ஆண்டு நிகழ்வுகள் ஆகும். ழாஹிரிகளின் எண்ணிக்கை ஓரளவு அதிகரிப்பதைப் பார்க்கமுடிகிறது. மிகச் சிறிய அளவில் மக்கள் அதில் ஆர்வம் காட்டுவதை பார்க்க முடிகிறது.

ஷரீயத்

ஷரீயத் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டவியல் அமைப்பைக் குறிப்பதாகும். ஷரீயத்தில் இருக்கும் அனைத்தும் நியமனச் சட்டங்களாக, சட்டப்பூர்வமானதாக, நடைமுறைச் சட்டங்களாக, முறைப்படுத்துபவையாகக் கருதப்படுகின்றன. ஷரீயத் என்பது நடைமுறை சாத்தியமானதாகவும் மனித இயல்பை கருத்தில் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என எல்லா சட்டவியலாளர்களும் கூறியுள்ளனர். யூதர்களின் ஷரீயத்தை ஆராய்ந்தால் இந்த விதி அதில் இல்லை என்று பார்க்கமுடிகிறது. அதில் ஒரு சட்டம் உள்ளதெனில், ஒரு மனிதன் தன் வாழ்க்கை முழுவதும் இயல்புக்கு மீறிய துன்பங்களுக்கு ஆளானாலும், தன் சக்திக்கு மீறியதாக இருந்தாலும் அதைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். இஸ்லாமிய ஷரீயத் மனித இயல்போடு கொண்டிருக்கும் அதன் —நான் இச்சொல்லை பயன்படுத்த விரும்பவில்லை; எனினும் புரிதலுக்காகக் கூறுகிறேன்— நெகிழ்வுத்தன்மைக்காக அறியப்படுகிறது.

ஆக இச்சிந்தனைப் பள்ளிகளில் இருக்கும் விதிகள் அனைத்தும் மனிதனை நெறிப்படுத்தவும் சமூக நீதியை நிலைநாட்டவும் மனித இயல்பின் இந்த நெகிழ்வுத்தன்மையைக் கருத்தில் கொண்டே செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டவியல் அமைப்பில் உரிமைக்கும் (ஹக்) கடமைக்கும் (வாஜிப்) இடையே ஒரு தொடர்பு இருக்கிறது. அவை ஒன்றோடொன்று இணங்கிச் செல்கின்றன.

வெள்ளிக்கிழமை தொழுகைகளில் பெரும்பாலும் ஓதப்படும் பின்வரும் வசனம் ஷரீயத்தின் குறிக்கோளை (மகாஸித் ஷரீயத்) ஒருவகையில் தொகுத்துக் கூறுவதாக சிலர் கருதுகின்றனர்.

“நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்குக் கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான்” (அல்-குர்ஆன் – 16:90)

சட்டவியலாளர்களைப் பற்றி பின்னர் விரிவாக நாம் பார்க்கும் போது, இந்தப் பொது வரைச்சட்டத்தில் அவர்களைப் பொருத்திப்பார்க்க இத் தகவல்கள் உதவும்.

ஒட்டுமொத்த ஃபிக்ஹ் அமைப்பும் பின்வரும் ஐந்து விஷயங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது: மார்க்கம் (தீன்), மனித வாழ்வின் புனிதத்துவம் (அல் நஃப்ஸ்), செல்வம் (அல் மால்), சிந்தனைத் திறன் (அல் அக்ல்) மற்றும் எதிர்வரும் சந்ததி (அல் நஸ்ல்).

படித்தரங்கள்

சட்டவியல் இலக்கியங்களில் சட்டக்கருத்துக்கள் சொல்லப்படும்போது அதில் படித்தரங்கள் இருப்பதைக் காண முடிகிறது. இதனுள் விரிவாகச் செல்லாமல், ஒரு சில எடுத்துக்காட்டுகள் மூலம் இதை விளக்குகிறேன். விபச்சாரம் தடுக்கப்பட்டது (ஹராம்) என்று நாம் அறிவோம். அதேபோல எதிர்பாலினத்தவரை முத்தமிடுவதும் உணர்ச்சியோடு கட்டிப்பிடிப்பதும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை ஒரே படித்தரத்தில் உள்ளனவா? இல்லை. இரண்டுமே தடுக்கப்பட்டது என்றாலும் அவற்றின் தரத்தில் ஒன்றைவிட மற்றொன்று அதிகமாக இருக்கிறது.

அதேபோல பன்றியின் இறைச்சியும் மதுவும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் உயிர்போகும் நிலையில் அவை மட்டுமே உங்களைக் காப்பாற்றும் என்றிருந்தால் என்ன செய்வது? மனித வாழ்வின் புனிதத்துவம் என்ற அடிப்படையில் உங்களை உயிரோடு வைக்கப் போதுமான அளவு அவற்றை உட்கொள்ளலாம்.

பொதுநலன்களிலும் (மஸ்லஹாத்) படித்தரம் உள்ளது. ரமழான் மாதத்தில் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் ஒருவர் வேண்டுமென்றே நோன்பை முறித்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கான பரிகாரம் (கஃப்ஃபாரா) என்ன? இதிலும் படித்தரங்கள் உள்ளன. முதல் பரிகாரம் ஒரு அடிமையை விடுதலை செய்வது. அதைச் செய்யமுடியவில்லை எனில், இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால், அறுபது பேருக்கு உணவளிக்க வேண்டும். ஆக இந்தப் பரிகாரங்களிலும் பல தரநிலைகள் இருப்பதைப் பார்க்கிறோம். சட்டவியலாளர்கள் இவற்றை கருத்தில் கொண்டு எது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது எது முக்கியத்துவம் குறைந்தது என்று ஆய்வு செய்ய வேண்டியிருந்தது.

இரு கடமைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்தல்

அடுத்து ‘தக்தீல் வாஜிப் அலா வாஜிப்’ என்ற அம்சம் உள்ளது. இரு கடமைகள் இருக்கும்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது பற்றியது இது. இதை விளக்குவதற்கு சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

ஒருவர் மக்ரிப் தொழுவதற்குத் தயாராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தொழுகைக்கான நேரம் முடிய சில நிமிடங்களே இருக்கும் நிலையில் மற்றொரு நபர் நீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். இந்நிலையில் அவர் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா அல்லது நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவரை காப்பாற்ற வேண்டுமா? அவரைக் காப்பாற்றச் சென்றால் மக்ரிப் தொழுகைக்கான நேரம் தவறி விடும். இறைவனுக்காகத் தொழுவது, உயிரைக் காப்பாற்றுவது – இரண்டுமே கடமைகள்தாம். இந்நிலையில் உயிரைக் காப்பாற்றுவதே முதல் கடமை என்பது தெளிவு. இதுபோன்ற பல விஷயங்களை கருத்தில் கொண்டு சட்டவியலாளர்கள் தம் சிந்தனை முறைமையை வகுத்தனர். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் மற்றொருவரைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? நீரில் குதித்து அவரைக் காப்பாற்றச் சென்றால் தண்ணீர் குடிக்க நேரிடும். இதனால் நோன்பு முறிந்துவிடும் என்பதால் ‘நான் கடமையான நோன்பை விட மாட்டேன். அவர் இறந்து போகட்டும்’ என்று சொல்வது சரியா? இத்தகைய சிந்தனை இஸ்லாத்தின் குறிக்கோள்களில் உள்ளதா? நிச்சயமாக இல்லை. இங்கு மனித வாழ்வின் புனிதத்துவம் என்ற அடிப்படையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவரைக் காப்பாற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது. புரிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும் என்பதால் இத்தகைய எளிய உதாரணங்களைக் கூறுகிறேன்.

தடுக்கப்பட்டுள்ள விஷயங்களிலும் இத்தகைய அம்சங்கள் உள்ளன. மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மது விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவை இரண்டுமே ஒரே தரத்தில் உள்ள தடைகளா? இல்லை. சட்டவியலாளர்கள் இத்தகைய அம்சங்களை சிந்திக்க வேண்டியிருந்தது.

விபச்சாரம் தடை செய்யப்பட்டது. ஆனால் ஒரு ஆண் திருமணம் ஆன பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதும் திருமணம் ஆகாத பெண்ணுடன் விபச்சாரம் செய்வதும் ஒன்றா? இத்தகைய கேள்விகள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. இவைதான் சட்டவியலாளர்களின் சிந்தனையையும் தூண்டின. இத்தகைய சிந்தனைகள்தான் சிந்தனைப் பள்ளிகள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தன.

எனவே இவை அனைத்தும் நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்ட கருத்துகள்தான். சட்டவியலாளர்கள் யாரும் தவறான எண்ணத்தோடு தம் கருத்துகளை முன்வைக்கவில்லை. இது அனைத்தும் அவர்களின் சிறப்பான முயற்சியில் நல்லெண்ணத்தில் செய்யப்பட்டதே ஆகும்.

நான் இப்போது இதுபற்றிய ஒரு கருத்துச்சூழலை உருவாக்கவே முயற்சிக்கிறேன். இதுபோன்ற பல விஷயங்களை பின்னர் விரிவாக பார்ப்போம். அப்போது அவற்றை புரிந்துகொள்ள இந்தத் தகவல்கள் நமக்கு உதவும்.

♦ ♦ ♦ ♦ ♦

கேள்வி – பதில்

(உரையின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இமாம் அல் ஆஸி பின்வருமாறு பதிலளிக்கிறார்)

கேள்வி: இன்று நாம் அனைவரும் மேற்கத்திய மனப்பான்மையுடனே வளர்க்கப்படுகிறோம். மேற்குலகில் எது அறிவியல் என்று கற்பிக்கப்படுகிறதோ அதைத்தான் நாமும் கற்கிறோம். ஆனால் நம்முடைய தேவை முற்றிலும் வேறு. இமாம் அஹ்மது இப்னு ஹன்பலின் ஆரஞ்சுப் பழம் பற்றிய சம்பவத்தை நினைவூட்டுகிறேன். இத்தகைய மனப்பான்மையோடு விஷயங்களை அணுகினால் நம்மால் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது. எனவே என் கேள்வி என்னவென்றால் இப்போது இஸ்லாம் என்று நாம் எதைப் பெற்றிருக்கிறோமோ அதைக் கொண்டு நம் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு காண முடியுமா?

பதில்: ஆம். பொதுவான தீர்வுகளை நாம் பெற முடியும். நாம் அதிலிருந்து விரிவான பதில்களை பெற முடியாமல் போகலாம். ஆனால் நம்முடைய விரிவான பதில்கள் நாம் பெற்ற பொதுவான தீர்வுகளோடு முரண்படாமல் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். நம்மிடம் இருக்கும் பொதுவான தீர்வுகளோடு முரண்படாத விரிவான பதில்களைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் நாம்தான் அதைப் பயன்படுத்தாமல் இருக்கிறோம். விரிவான பதில்களைப் பெறுவதற்கான சிந்தனை முயற்சி (இஜ்திஹாத்) நம்மிடம் இல்லை.

கேள்வி: ஷியாக்கள் மத்தியில் இஜ்திஹாத் இருக்கிறது என்று கூறுகிறோம். ஆனால் அந்த இஜ்திஹாதைப் பார்த்தால் ‘நல்ல வேளை! சன்னிகளிடம் இஜ்திஹாத் இல்லாமல் போனதே!’ என்று சொல்லும் அளவுக்கு அது காலாவதியானதாக இருக்கிறதே?! சமகால வாழ்வோடு சம்பந்தமே இல்லாத பல விஷயங்கள் அதில் உள்ளன. இதற்குக் காரணம் நாம் கொண்டிருக்கும் உலகநோக்கு. இன்று உலகத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கும் அறிவு முழுவதும் —பாரம்பரிய நம்பிக்கைகளல்லாமல்— அறிவியலிலிருந்து பெறப்பட்டது ஆகும். இந்த இரண்டும் சிலவேளை  முரண்படுகின்றன. நாம் கற்கும் அறிவியல் நம் பாரம்பரிய நம்பிக்கைகளிலிருந்து விலகி நிற்கிறது. நம் மதரசாக்கள் மற்றும் ஹவுசாக்களால் இவற்றை இணைத்துப் பார்க்க முடிவதில்லையே?!

பதில்: இஜ்திஹாதின் முழு சக்தியை அடைவதற்கான வாய்ப்பு ஷியா சட்டவியலாளர்களுக்கு கிடைக்காமல் போயிற்று. இதற்குக் காரணம் —நாம் ஏற்கனவே சொன்னது போல— வரலாற்றில் அவர்கள் தள்ளப்பட்ட இடம் ஆகும். ஒரு கோட்பாடாக இஜ்திஹாத் ஷியாக்கள் மத்தியில் இருந்தாலும் அரசியல் எதிர்ப்பியக்கத்தில் இருந்ததால் பல கட்டுத்தடைகளுக்கு மத்தியில்தான் அவர்கள் இருந்தனர். சமூக நிதர்சனத்தின் முன்னோடியில் இல்லாததால் அவர்களுடைய இஜ்திஹாத் நிகழ்காலத்துக்கு ஏற்பவாறு துடிப்பானதாகவும் நடைமுறை சார்ந்ததாகவும் இருக்கவில்லை. ஆனால் இப்போது அவர்கள் ஒரு அரசாங்கத்தைப் பெற்றுள்ளனர். அது இஸ்லாமிய அரசாங்கமாக விளங்க முயற்சிக்கிறது. இது —அறிவியல், இராணுவம், சமூகம் மற்றும் மதம் சம்பந்தமான— பல சவால்களை அவர்களுக்கு முன்னால் நிறுத்துகிறது. இப்போது கேள்வி என்னவென்றால், 1400 ஆண்டுகளாக கோட்பாட்டளவிலும் ஓரளவு நடைமுறையிலும் இஜ்திஹாதை பெற்றிருக்கும் ஷியா அறிஞர்கள், இன்றைய சவால்களை எதிர்கொண்டு இஜ்திஹாத் செய்வதற்கு தயாராக இருக்கின்றனரா? இல்லை ‘இது எங்கள் சக்திக்கு மீறியது’ என்று கூறி தங்கள் ஹவுசாக்களுக்கே திரும்பப் போகின்றனரா?

சன்னிகளைப் பொருத்தவரை அவர்களுக்கு என ஒரு இஸ்லாமிய அரசாங்கம் இல்லை. அவர்கள் இன்னும் இஸ்லாமிய இயக்கத்தின் பயணத்தில்தான் இருக்கின்றனர். நடந்த தவறுகளை எண்ணிப் பார்த்து மீண்டும் இஜ்திஹாதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் உள்ளனர். பத்து வருடங்களோ அல்லது நூறு வருடங்களோ, அது எப்போது சாத்தியமாகும் என்று நமக்குத் தெரியாது. இன்று ஷியாக்கள் இருக்கும் நிலையை சன்னிகள் எப்போது அடைவார்கள் என்று அல்லாஹ்வே அறிந்தவன். அது சாத்தியமாகும் போது, சன்னி அறிஞர்களும் பின்வாங்கப் போகின்றனரா? அப்படியெனில் அவர்கள் அதற்கு என்ன காரணங்களை சொல்லப் போகின்றனர்? இவை அதன் போக்கில்தான் நமக்குத் தெளிவாகும்.

ஆனால் ஷியாக்களாக இருக்கும் அறிஞர்களுக்கு அல்லாஹ் இஜ்திஹாதுக்கான முழு வாய்ப்பை வழங்கியிருக்கிறான் என்பது நிதர்சனம். அப்படியிருந்தும் ‘இல்லை. எங்களால் இதை சமாளிக்க முடியாது. இதை சரிசெய்வதற்கு ஒரு இமாமை எதிர்பார்த்து நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று சொல்லும் அளவுக்கு வரலாறு அவர்களை பாதித்துவிட்டதா என்ன? ஆம் எனில், இது ஷியாக்கள் மத்தியில் —சன்னி உலகில் காணப்படுவதைப் போலவே— இஜ்திஹாதின் தோல்வியாகவே பார்க்கப்படும்.

சன்னிகளைப் பொருத்தவரை அரசாங்கமே அவர்களிடம் ‘இஜ்திஹாதை மறந்துவிடுங்கள். தனிப்பட்ட விஷயங்களில் வேண்டுமானால் அதுபற்றி பேசுங்கள்’ என்று சொன்னது. இதனால் மற்ற விஷயங்களில் இஜ்திஹாதுக்கான வாயில் அடைக்கப்பட்டது. ஆனால் ஷியாக்கள் விஷயத்தில் அப்படி அல்ல. ஈரானின் இஸ்லாமிய அரசாங்கம் ‘நீங்கள் இந்த விஷயங்கள் பற்றியெல்லாம் பேசக்கூடாது’ என்று சொல்லவில்லையே! அறிஞர்கள்தான் ‘அரசியல் விஷயங்களை நாங்கள் சிந்திக்க விரும்பவில்லை’ என்று கூறுகின்றனர். பிரச்சனை இங்குதான் உள்ளது.

கேள்வி: புதிய அறிவைத் தேடுவதற்கு இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் (ஹவ்சா) பெரும் எதிர்ப்பு உள்ளதே? ‘இந்த அறிவு நமக்கானது அல்ல. இது நம் கலாச்சாரத்தில் இல்லாதது, இஸ்லாத்தோடு பொருந்தாதது. இது நிராகரிப்பாளர்களுக்கானது.’ என்ற மனப்பான்மை ஷியா அறிஞர்கள் மத்தியில் உள்ளதே? மேலும் இப்போது இந்த அறிஞர்களுக்கென ஒரு அரசாங்கம் கிடைத்ததும் அவர்கள் பிறருக்கு இடம் கொடுப்பதில்லை. பிற அறிஞர்களிடம் ‘நீங்களும் எங்களைப் போலவே சிந்திக்க வேண்டும்’ என்று கூறுகின்றனர்.

பதில்: இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் இருப்பவர்கள் வளர்ந்து வரும் உலகத்தை ஏன் அங்கீகரிக்க மறுக்கின்றனர் என்பது முதல் கேள்வி. உலகம் பல்வேறு விதங்களில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. ‘நமக்கானது’ என்பதை இவர்கள் எப்படி வரையறுக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. அறிவியல் மனித இனத்திற்குச் சொந்தமானது. அதில் யாருக்கும் தனியுரிமை இல்லை. ஷியாக்களில் சில அறிஞர்கள் கலாச்சாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இஸ்லாத்தையும் கலாச்சாரத்தையும் ஒன்றாகப் பார்க்கின்றனர் என்று நான் கருதுகிறேன். அவர்களுடைய கலாச்சாரத்தோடு இந்த உலகம் பொருந்திப்போகாவிட்டால், முழு உலகத்தையும் நிராகரித்துவிடுகின்றனர். உலகத்தில் பல நன்மைகளும் பல தீமைகளும் உள்ளன. இதை பிரித்தெடுப்பதுதானே இஜ்திஹாத்?! தீமையை விடுத்து நன்மை எடுத்துக்கொள்ளலாமே. அறிவியல் ஆக்கப்பூர்வமானதுதான். அது எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ‘சீனா சென்றேனும் அறிவைத் தேடுங்கள்’ என்ற கூற்றை நினைவூட்ட விரும்புகிறேன். இதைவிடுத்து ‘எங்கள் கலாச்சாரத்தோடு பொருந்திப் போகும் இஸ்லாத்தைத்தான் நாங்கள் ஆதரிப்போம்’ என்று சொன்னால், அவர்கள் வெற்றி பெற முடியாது.

அடுத்த விஷயமான ‘எங்களைப் போலவே நீங்களும் சிந்தியுங்கள்’ என்று இஸ்லாமிய அரசாங்கம் பிற அறிஞர்களிடம் சொல்வது பற்றி பார்ப்போம். அறிஞர்களாக இருந்துகொண்டு அரசியலிலும் ஈடுபடுபவர்கள் அதிலிருந்து விலகியிருக்கும் பிற அறிஞர்களைவிட முன்னிலையில் இருப்பவர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் நிஜ உலகத்தை சந்திக்கின்றனர். தினம் தினம் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். ஆகவே பிற அறிஞர்களிடம் ‘நீங்களும் நிஜ உலகத்தைப் பாருங்கள்; அதை எதிர்கொள்ளுங்கள்; எங்களுக்கும் உதவி செய்யுங்கள்; நாம் அனைவரும் சேர்ந்து இதை எதிர்கொள்வோம். முடியாதெனில், எங்கள் மீது மேலும் அதிக சுமையை ஏற்றிவிடாதீர்கள்’ என்று கூறுவதாகவே நான் இதை பார்க்கிறேன்.

♦ ♦ ♦ ♦ ♦

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *