இஸ்லாமிய வரலாறு – 08 / இஜ்திஹாத் (பாகம் 2) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 08 / இஜ்திஹாத் (பாகம் 1)

♦ ♦ ♦ ♦ ♦

முக்கிய ஆவணம்

இஜ்திஹாத் குறித்து மற்றொரு மிக முக்கிய இஸ்லாமிய வரலாற்று ஆவணமும் உள்ளது. இறைத்தூதர், முஆத் இப்னு ஜபலை ஏமன் நாட்டின் நீதிபதியாக நியமித்தார். ஏமனுக்கு புறப்படும் முஆதை அழைத்த இறைத்தூதர் “எந்த அடிப்படையில் நீர் தீர்ப்பு வழங்குவீர்?” எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த முஆத், “நிச்சயமாக அல்லாஹ்வின் வேதத்தின் அடிப்படையில் நான் தீர்ப்புகள் வழங்குவேன்” என்றார். இறைத்தூதர் அவரிடம், “ஒரு விஷயம் குறித்து அல்லாஹ்வின் வேதத்தில் எந்த வழிகாட்டலையும் காணவில்லை எனில் என்ன செய்வீர்?” எனக் கேட்டார். “அல்லாஹ்வின் தூதராகிய உங்களிடமிருந்து கற்றுக் கொண்டதிலிருந்து தீர்ப்புகள் வழங்குவேன்” என்று முஆத் பதிலளித்தார். மீண்டும் இறைத்தூதர் “அல்லாஹ்வின் வேதத்திலும் என்னுடைய வழிகாட்டலிலும் அவ்விஷயம் குறித்து நீர் எதையும் காணவில்லை என்றால் என்ன செய்வீர்?” என்று கேட்டார். இதற்கு பதிலளித்த முஆத், “என்னுடைய சிந்தனையை பயன்படுத்தி அதிலிருந்து தீர்ப்பு காண முற்படுவேன்” என்றார். இங்கு முஆத் அஜ்தஹித் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதைக் கேட்ட இறைத்தூதர், அதை பெரிதும் வரவேற்றவராக இவ்வாறு கூறினார்: “அல்லாஹ்வுடைய தூதரின் தூதரை நேர்வழியில் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்”. இஜ்திஹாத், ஆரம்பகால முஸ்லிம் வரலாற்றின் உள்ளார்ந்த அங்கமாக —அல்லாஹ்வின் தூதர் காலத்திலேயே— விளங்கியதை உணர்த்தும் மற்றொரு நிகழ்வு இது.

குர்ஆன் மற்றும் நபிவழியின் ஒளியில் இஜ்திஹாத்

குர்ஆனையும் இறைத்தூதரின் முன்மாதிரியையும் (சுன்னாஹ்) பெற்றுள்ள நாம், இவற்றின் ஒளியில் இஜ்திஹாதை எப்படி விளக்க முடியும்? இஜ்திஹாதின் அர்த்தமாவது, அல்லாஹ் மற்றும் அவனது தூதரை புரிந்து கொண்டதன் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட்ட அறிவார்ந்த கருத்து எனலாம். இதை இன்னும் தெளிவாக விளக்குவதற்கு பின்வரும் உதாரணத்தை பார்ப்போம். குர்ஆனில் ஃகமர் குறித்த வசனங்கள் உள்ளன. நம் சிந்திக்கும் திறனை பாதிக்கும் எந்த ஒரு பொருளும் ஃகமர் எனப்படும். ஃகமர் என்பதன் சொற்பொருள் இதுதான். அன்று அரேபியாவில் இவ்வசனங்களை பெற்ற அம்மக்களின் சிந்திக்கும் திறனை பாதிக்கும் வகையில் இருந்தது, பேரீத்தம்பழங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மது வகைகளாகும். அதேபோல ஹிஜாஸின் பிற பகுதிகளில், திராட்சையிலிருந்து தயாரிக்கப்பட்ட மது வகைகள் இருந்தன.

அன்று கொகெய்ன், மெதெம்ஃபெடமீன் போன்ற போதைப் பொருட்கள் இருக்கவில்லை. எனினும் முஸ்லிம்கள் அரேபியாவுக்கு வெளியே பரவத்துவங்கிய போது, பிற கலாச்சாரங்களை, உணவுப் பழக்கவழக்கங்களை எதிர்கொண்ட போது, மேலும் பல பொருட்கள் இப்பட்டியலில் இருப்பதை அறிந்தனர். அந்த வசனத்தின் அர்த்தத்தை உள்வாங்கிய முஸ்லிம்கள், இத்தகைய போதைப் பொருட்களையும் முற்றிலும் தவிர்த்தனர். ஃகமர் போலவே சிந்திக்கும் திறனை, சுயநினைவை இழக்கச் செய்யும், போதை ஏறச் செய்யும் பொருட்கள் அனைத்தும் தடுக்கப்பட்டவை (ஹராம்) என்றனர். அறிவைக் கொண்டு சிந்தித்து, ஒரே மாதிரியான விளைவை ஏற்படுத்தும் பிற பொருட்களையும் ஃகமர் என்றே கருதினர். இது ஒருவகையான இஜ்திஹாத் ஆகும்.

ஒருமித்த முடிவு

அடுத்து, இஸ்லாமிய வரலாறு வளர்ந்து வந்த விதத்தையும் நாம்கவனிக்க வேண்டும். அல் ஹிஜாஸ், ஈராக் மற்றும் ஷாம் பகுதிகளில் நடந்த நிகழ்வுகளை இங்கே நினைவு கூர்வது நல்லது. வீடுகளில் அமர்ந்து கொண்டு நூல்களை மட்டுமே படித்துக் கொண்டிருந்த கல்வியாளர்களைப் பற்றி மட்டும் நாம் இங்கு பேசவில்லை. இஸ்லாமிய அரசியல் மற்றும் கோட்பாட்டு ரீதியான கருத்து வேறுபாடுகள் தீவிரமாக நிலவிய காலச் சூழலில்தான் இஜ்திஹாத் பற்றிய விவாதமும் வளரத் துவங்கியது. நாம் ஏற்கனவே கூறிய வரலாற்றுப் பின்புலத்தில், இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகு ஹிஜாஸ் பகுதியில், மதீனவாசிகளை கலந்தாலோசிக்கும் வழக்கம் (இஸ்திஷாரத் அஹ்ல் அல் மதீனா) தோன்றியது. இதை ஒரு கொள்கை என்று நான் கூறமாட்டேன். எனினும் இது மதீனாவாசிகளின் நிரந்தர அடையாளமாக மாறியது.

பலதரப்பட்ட மக்களும், பல ஆளுநர்களும் கூட “இந்த விஷயம் குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று மதீனாவாசிகளிடம் கேட்டனர். இதற்குக் காரணம் மதீனாதான் முஸ்லிம்களின் சிந்தனை மையமாக விளங்கியது. முஹாஜிரீன்களையும் அன்சார்களையும் உள்ளடக்கிய மதீனாவாசிகள், இறைத்தூதருக்கு நெருக்கமாக இருந்தவர்கள். ஆனால் மக்கா, புவியியல் ரீதியாக விடுதலை அடைந்த போதிலும் உளவியல் மற்றும் சமூக ரீதியாக விடுதலை அடையாததாகவே இருந்தது. இந்த வகையில் மக்காவைவிட மதீனா ஒரு படி மேலே இருந்தது. எனவேதான் மக்கள் மதீனாவாசிகளிடமிருந்து அறிவைப் பெற ஆர்வம் காட்டினர்.

இவ்வாறாக மதீனவாசிகளிடம் “இந்த விஷயம் குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று வினவி அவர்களின் கருத்தை கேட்பது என்பது, இஸ்லாமிய வரலாற்றில் ‘ஒருமித்த முடிவு’ (இஜ்மா) என அறியப்படுவதன் முதல் அறிகுறியாகும். இப்போது இஜ்திஹாதில் எண்ணிக்கையும் ஒரு கூறாக சேர்ந்து கொள்கிறது. ஒரு பிரச்சனையில், மதீனத்து முஸ்லிம்களின் கூட்டுக் கருத்து என்ன என்று கேட்கும்போது, ஒரு அறிஞரின் இஜ்திஹாதுக்கு பதில் ஒரு பொதுப் புத்தியின் இஜ்திஹாதைப் பற்றிப் பேசுகிறோம். இதுதான் இஜ்மா என்ற சொல்லின் துவக்கம். பின்னர் இது பல்வேறு அர்த்தங்களை உள்வாங்கிக் கொண்டது.

நடைமுறையில் இஜ்திஹாத்

இப்போது, உண்மையிலேயே இஜ்திஹாதிய கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்திய சில பிரச்சனைகளைப் பற்றி பார்ப்போம். குர்ஆனில் பின்வரும் வசனம் உள்ளது: தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று ‘குரூஃ’ ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும் (2:228).

‘குரூஃ’ என்பது ‘குர்ஃ’ என்பதன் பன்மை ஆகும். இதுதான் காத்திருப்பு (இத்தா) காலம் என்று விளக்கப்படுகிறது. இங்கு இஜ்திஹாத் கோரும் கேள்வி என்னவெனில் ‘குரூஃ’ என்பதன் பொருள் என்ன? சில முஸ்லிம் அறிஞர்களின் ஆராய்ச்சியின் பலனாக நமக்கு இரண்டு கருத்துகள் கிடைத்தன.

இரு வேறு கருத்துகள் உள்ளன என்பதனாலேயே முஸ்லிம்களுக்கு மத்தியில் சச்சரவுகளும் பிரச்சனைகளும் ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சில வேளை, சில மனிதர்களால் பிரச்சனை ஏற்பட்டுவிடுகிறது. சரி, இப்போது ‘குர்ஃ’ என்பதன் விளக்கத்தைப் பார்ப்போம். சில சட்டவியலாளர்களும், ஃபுகஹாக்களும் ‘குர்ஃ என்பது பெண்ணின் குஹர் காலம்’ என்று கூறினர். குஹர் என்பது இரு மாதவிடாய்களுக்கு இடையே உள்ள —உதிரப்போக்கு இல்லாத— காலம். இது ஒரு விளக்கம்; ஒரு இஜ்திஹாத். மற்றொரு விளக்கத்தின் படி, ஒரு குர்ஃ என்பது ஒரு மாதவிடாய் காலம். இரு விளக்கங்களையும் எடுத்துக் கொண்டு காத்திருப்புக் காலத்தை கணக்கிட்டால், ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே ஏறத்தாழ ஒரு மாதகாலம் வித்தியாசம் வருகிறது. இந்த விளக்கங்களைக் கேட்டு சிலர் மிகவும்அதிருப்தி அடைகின்றனர். “ஓரிரு நாட்கள் வித்தியாசம் என்றால் பரவாயில்லை. ஒரு மாதகால வித்தியாசத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.

நாம் என்ன சொல்கிறோம் என்றால், இந்த இஜ்திஹாத் இந்த அளவு நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது எனில், நாம் அதை பயன்படுத்திக் கொள்வோமே! இத்தனை காலம் இக்கருத்துக்கள் நம்மிடையே நிலைத்துவிட்டன. அது இப்படியே நீடித்துவிட்டுப் போகட்டுமே. எனினும் சிலர் பிடிவாதமாக “இல்லை இல்லை. இப்படி வெவ்வேறு கருத்துக்களை நாம் அனுமதிக்க முடியாது” என்று கூறுகின்றனர். இதிலிருந்து இஜ்திஹாத் எப்படி மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹிஜாஸ் மற்றும் பஸ்ராவின் இஜ்திஹாத்

இஜ்திஹாத் விஷயத்தில், பரிசுத்தமான அல்லாஹ்வையும் இறைத்தூதரையும் (ஸல்) புரிந்துகொள்ளும் விதம் இரண்டு எதிர் கூறுகளாக உருவாயின. ஒன்று ஹிஜாஸிலும் —அல் மதீனா மற்றும் மக்கா— மற்றொன்று ஈராக்கிலும் —பஸ்ரா மற்றும் கூஃபா— வளர்ச்சி பெற்றது. ஹிஜாஸின் இஜ்திஹாத், ஒப்பு நோக்கல் (கியாஸ்) அல்லது இஜ்திஹாதை குறைவாகப் பயன்படுத்தி, இறைத்தூதரின் அறிவிப்புகளை அணுகுவதை —அவற்றை சேகரிப்பது, புரிந்து கொள்வது போன்றவற்றை— அதிகம் வலியுறுத்தியது. இதற்குப் போட்டியாக இருந்த ஈராக்கிய இஜ்திஹாதின் கருத்து இவ்வாறு இருந்தது: “எங்களிடம் உள்ள இறைத்தூதரின் அறிவிப்புகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எனினும் போதுமான அறிவிப்புகள் இல்லாதபோது எங்கள் இஜ்திஹாதை பயன்படுத்தும் சுதந்திரம் எங்களுக்கு உண்டு”. ஆரம்ப நாட்களிலேயே இஸ்லாமிய களத்தில் தோன்றிய, தீவிரமாக மாறுபட்ட இரண்டு கருத்துகள் இவை. இவை வெறுமையில் நடக்கவில்லை. இவை அனைத்தும் நாம் ஏற்கனவே கூறிய வரலாற்றுப் பின்புலத்தில் நிகழ்ந்தன என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

இன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாகப் பின்பற்றும் சட்டவியலாளர்கள் —கால வரிசைப்படி— பின்வருமாறு: இமாம் ஸைத் இப்னு அலீ, இமாம் ஜாஃபர் அல் சாதிக், இமாம் அபு ஹனீஃபா,  இமாம் மாலிக், இமாம் ஷாஃபி மற்றும் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல். இவர்கள் அனைவரும் ஹிஜ்ரி 80 அல்லது 90 ஆண்டுகளுக்குப் பின்னுள்ளவர்கள். இவர்களுக்கு முன் ஹிஜாஸில் முக்கியமான அறிஞராகக் அறியப்பட்டவர் சஈது இப்னு அல் முசைய்யார் ஆவார். இவருடைய சட்டவியல் கோட்பாடு (ஃபிக்ஹ்) அல் அசர் என்று அறியப்படுகிறது. நாம் ஏற்கனவே சொன்னது போல, இவர் ‘ஆய்வு செய்யும் பிரச்சனை குறித்த மொத்த ஹதீஸ்களையும் காணும் முன் முடிவைப் பற்றி சிந்திக்க வேண்டாம்’ என்ற மனப்பாங்கை கொண்டவர்.

ஈராக்கில் வளர்ந்த சட்டவியல் கோட்பாடு ‘கருத்துச் சட்டவியல் கோட்பாடு’ (ஃபிக்ஹ் அர் ரஈ) என அறியப்பட்டது. பிற்கால இஸ்லாமிய வரலாற்றில் ‘ரஈ’ (கருத்து) என்பதன் அர்த்தம் ‘ஒருவர் தன் சொந்த கருத்தை வெளிப்படுத்துவது’ என்று மாறியது. ஆனால் அன்று ஈராக்கில் தோன்றிய இந்தக் கோட்பாட்டின் அர்த்தம் இதுவல்ல. இங்கு ‘ஃபிக்ஹ் அர் ரஈ’ என்பது ‘குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து தங்களுக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டு முஸ்லிம் அறிஞர்கள் சுயாதீன சிந்தனையை செலுத்தினர்’ என்று பொருள்படுகிறது. இந்த அறிஞர்கள், ஒரு விஷயத்துக்கு தீர்வு காண வேண்டிய நிலையில், அதற்கான ஹதீஸ்களை தேடி அலைந்து கொண்டிருக்காமல், குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து தங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு இஸ்லாமிய சட்டவியல் ஷரீஅத் முடிவை எடுத்து முன் நகர்ந்து செல்ல விரும்பினர். இவர்கள் கருத்துவாதிகள் (அஹ்ல் அர் ரஈ) என்று அழைக்கப்பட்டனர். இவர்களுள் முக்கியமானவர் இப்ராஹீம் அல் நகயீ ஆவார்.

ஹதீஸ் நூல்களில் உள்ள சில பிரச்சனைகள்

அடுத்து, சன்னி தகவல் தொகுப்புகளில், அவர்களின் இலக்கியங்கள், நூல்களில், சன்னிகள் கவனிக்கத் தவறும் ஒரு பிரச்சனை உள்ளது. அது ‘நபித் தோழர்களின் அதிகாரம்’ (சஹாபாக்களின் ஹுஜ்ஜியா) பற்றியது. நீங்கள் எந்த சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், சன்னிகள் மத்தியில் அதிகாரப்பூர்வமாக உள்ள ஹதீஸ் நூல்களை படித்துப் பாருங்கள். அவற்றில் சில, அசலில் ஹதீஸ்களே அல்ல என்பதை காண்பீர்கள். அவை சில நபித்தோழர்களின் கூற்றுகள் ஆகும். எனினும் அவை ஹதீஸின் முழு பலத்தைப் பெற்று இந்நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை அதிக எண்ணிக்கையில் இல்லை என்றாலும், இப்படியும் ஒரு பிரச்சனை உள்ளது என்பதை இங்கே பதியவைக்கிறேன்.

மேலும் சன்னி ஆதார நூல்களைப் பார்த்தால், இமாம் அலீ, ஃபாத்திமா ஸஹ்ரா, ஹசன் அல்லது ஹுசைன் ஆகியோரிடமிருந்து வரும் ஹதீஸ் அறிவிப்புகள் சொற்பமாகவே இருப்பதைக் காணமுடிகிறது. இவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அறவே இல்லை என்று நான் சொல்லவில்லை. என்னை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். எனினும் இவர்களிடமிருந்து வரும் அறிவிப்புகள் எந்த அளவுக்கு இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு இல்லை.

இமாம் அலீ, இறைத்தூதரின் வீட்டிலேயே, அவருடைய கண்காணிப்பிலேயே வளர்ந்தவர். தன் வாழ்க்கை முழுவதையும் இறைத்தூதரோடு இருந்தவர். அப்படியிருக்க பற்பல ஹதீஸ்களை அவர் அறிவித்திருப்பார் என ஒருவர் எண்ணக் கூடும். ஆனால் இறைத்தூதரின் பொன்மொழிகளை மற்ற யாரையும் விட அதிகமாகச் செவியுற்றிருந்த அவருடைய நெருங்கிய குடும்பத்தினர் அறிவிக்கும் ஹதீஸ்களை தேடித் தேடித்தான் பெற வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது இதன் பின்னணியில் ஏதோ நடந்திருக்கிறது என்ற ஐயம் எழுகிறது. சராசரி முஸ்லிம்களாகிய நீங்கள் அறியாத, உணராத மற்றொரு விஷயம் என்னவெனில், இறைத்தூதரோடு மிக நெருக்கமாக இருந்த, இமாம் அலீயைப் போலவே ஆரம்பத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற அபூ பக்கர் அறிவிக்கும் ஹதீஸ்களும் சன்னிகள் மேற்கோள் காட்டும் ஹதீஸ் நூல்களில் மிகச் சொற்பமாகவே உள்ளன.

இறைத்தூதர் இறந்த இரண்டு ஆண்டுகளில் அபூ பக்கரும் இறந்துவிட்டார். ஆகவே அவரிடமிருந்து பெறப்படும் ஹதீஸ் அறிவிப்புகள் குறைவாகவே இருக்கும் என்பது உண்மைதான். எனினும், நான் சொல்ல வரும் செய்தி வேறு. நாம் ஒரு உணர்ச்சிமயமான வரலாற்றுப் பின்னணியை பெற்றுள்ளோம். இங்கு சிலர், அபூ பக்கரும் உமரும் உஸ்மானும் இமாம் அலீக்கு எதிராக சதியில் ஈடுபட்டனர் என்று கருதுகின்றனர். இது உண்மையெனில், அபூ பக்கர், உமர் மற்றும் உஸ்மானிடமிருந்து ஏராளமான ஹதீஸ்கள் வந்திருக்க வேண்டும்.

உமர் அறிவித்த ஹதீஸ்களைப் பற்றி நான் ஆய்வு செய்யவில்லை. அபூ பக்கரை விட அவை அதிகமாகவே இருக்கும். இமாம் அலீக்கு எதிராக அபூ பக்கர் சதியில் ஈடுபட்டார் எனில் அவரிடமிருந்து அதிகமான ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி எதையும் நாம் காண முடியவில்லை. எனவே இத்தகைய சதிக் கோட்பாட்டை முன் வைப்போர் அதை மீளாய்வு செய்ய வேண்டும். சதித் திட்டங்கள், அன்று அல்ல. அதற்குப் பிறகு வந்த முஆவியா மற்றும் அவரது கூட்டத்தால்தான் தீட்டப்பட்டன என்பதுதான் நான் சொல்ல வரும் கருத்து.

தஷய்யு இஜ்திஹாத்

அடுத்து அன்று நிலவிய அரசியல் சூழலைப் பற்றி பார்ப்போம். நாம் ஏற்கனவே இது பற்றி பேசியிருந்தாலும், இந்த தருணத்தில் அதை நினைவுபடுத்துவது நல்லது எனக் கருதுகிறேன். அன்று, இஜ்திஹாத் முஸ்லிம்களின் வாழ்வின் அங்கமாக மாறிக் கொண்டிருந்த போது, பல்வேறு அரசியல் சிந்தனைகள் நிலவின. அவை ஷியா, காரிஜி மற்றும் சன்னி அல்லது ஜமாயி (சன்னி சிந்தனையை சில நூல்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றன) சிந்தனைகள் ஆகும்.

சில வரலாற்றாசிரியர்கள் தஷய்யு சிந்தனையின் தோற்றத்தை இறைத்தூதரின் இறுதி நாட்கள் அல்லது அவர் மரணித்த நாளோடு தொடர்பு படுத்துகின்றனர். இன்னும் சிலர் ஷியாவின் தோற்றத்தை உஸ்மான் காலத்தோடும், வேறு சிலர் இமாம் அலீ ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தோடும் தொடர்பு படுத்துகின்றனர். இந்தப் பின்னணியில் இஜ்திஹாத் பற்றிய கருத்துகளை சிந்திக்க வேண்டும் என நான் கருதுகிறேன். இது ஒரு கருத்து மட்டுமே. எந்த ஒரு முடிவை நோக்கியும் நான் உங்களை இட்டுச் செல்லவில்லை. இஜ்திஹாதை இந்த முழுமையான கோணத்தில் சிந்திக்க வேண்டும் என்று மட்டுமே கூறுகிறேன்.

முஸ்லிம்களின் தலைமை அல்லது இறைத்தூதருக்குப் பிறகு வரப் போகும் தலைமை குறித்த பிரச்சனையை ஷியாக்கள் எப்படி அணுகினர் என்று சுருக்கமாகக் கூறுகிறேன். அவர்கள் கூறியதாவது, ‘முஸ்லிம்களின் தலைமை என்பது அவர்களின் முயற்சியால் வருவது அல்ல. அதாவது தலைமையை தேர்ந்தெடுப்பதில் சமூகத்துக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. மாறாக முஸ்லிம்களின் தலைமை என்பது இஸ்லாத்தின் உள்ளார்ந்த கூறு ஆகும். சொல்லப்போனால் அது இஸ்லாத்தின் அடிப்படை ஆகும்.

ஒரு இறைத்தூதர் இஸ்லாத்தின் இந்த உள்ளார்ந்த கூறை அலட்சியமாகக் கருதியிருக்கமாட்டார். அவர் தலைமையை தேர்ந்தெடுக்கும் இப்பொறுப்பை முஸ்லிம் மக்களிடம் விட்டிருக்க வாய்ப்பில்லை. அவரே தனக்கு அடுத்து பொறுப்பேற்கப் போகிறவரை நியமித்து, முஸ்லிம்களின் தலைவர் யார் என்பதை சொல்லியிருப்பார். நாம் இங்கு இஜ்திஹாத் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். முஸ்லிம்களின் தலைமையை இவ்வாறு விளக்கினால், அதில் இஜ்திஹாத் செய்வதற்கு இடமே இல்லை. முஸ்லிம்களின் தலைவர் யார், அவர்களின் சார்பாக இறுதி முடிவெடுக்கப் போகிறவர் யார், அவர்களுக்காக திட்டங்கள் தீட்டப் போகிறவர் யார் என்பதெல்லாம் குறித்து ஒரு முஸ்லிம் என்ன கருத்து கொண்டிருந்தாலும், இந்தச் செயல்முறையில் அவருடைய பங்கு எதுவும் இல்லை.

இந்த விவகாரத்தை இன்னும் விரிவாகப் பார்க்கலாம். தஷய்யு என்பது ஒற்றைக் கருத்து கொண்ட சிந்தனைப் பள்ளி அல்ல; அதாவது அது ஒற்றை இஜ்திஹாத் அல்ல. ஸைதி வகை ஷியாக்கள் இறைத்தூதருக்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்றவர்களை, அதற்குத் தகுதியானவர்களை பின்வருமாறு வரிசைப் படுத்துகின்றனர்: இமாம் அலீ, அவருக்குப் பிறகு அல் ஹசன் மற்றும் ஹுசைன், அவர்களுக்குப் பிறகு ஹசன் அல்லது ஹுசைனின் வாரிசுகள்.

இஸ்னா அஷரி என்று அழைக்கப்படும் பன்னிருவர் வகை ஷியாக்கள் பன்னிரண்டு இமாம்களை பெற்றுள்ளனர். இமாம் அலீயில் துவங்கி இமாம் அல் மஹ்தி வரையுள்ள அவர்கள் அனைவரும் தெளிவாக அறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை பிற முஸ்லிம்கள் அணுகுவது போல இஜ்திஹாத் கோரும் பிரச்சனையாகக் கருதினால், முஸ்லிம்களின் உட்சபட்ச தலைமைப் பொறுப்பை தேர்ந்தெடுப்பதில் அவர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. இந்த விஷயத்தில் இஜ்திஹாத் அறவே இல்லை என்பது தெளிவாகிறது.

அடுத்து இஸ்மாயிலீ தஷய்யு. இவர்களும் இஸ்னா அஷரிகளும் ஆறாவது இமாம் வரை ஒத்த கருத்து கொண்டுள்ளனர். அதற்கடுத்து வரும் ஏழாவது இமாம் யார் என்பதில் இவர்கள் இருவரும் இரு சகோதரர்களிடையே கருத்து வேறுபாடு கொண்டனர். மேலும் இஸ்மாயிலீக்கள் ‘மறைவான இமாம்’ (இமாம் அல் மக்ஃதூம்) என்ற கோட்பாட்டையும் முன்வைத்தனர். மக்ஃதூம் என்றால் மறைவான என்று பொருள். அந்த இமாம் யார் என்று பொதுமக்கள் அறியமாட்டார்கள். காலப்போக்கில் இஸ்மாயிலீகளிடமிருந்து பிற கிளைகள் தோன்றின. அவற்றில் ஒன்றுதான் எகிப்தை சிலகாலம் ஆண்ட ஃபாதிமீய்யாக்கள். இவர்கள்தான் கெய்ரோவில் உள்ள அஸ்ஹர் பல்கலைக்கழகத்தை (ஜாமியா அல் அஸ்ஹர்) கட்டினர். முக்கியமான இஸ்லாமிய கல்வி மையமாக இன்றளவும் இது நீடிக்கிறது.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 08 / இஜ்திஹாத் (பாகம் 3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *