இஸ்லாமிய வரலாறு – 08 / இஜ்திஹாத் (பாகம் 3) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 08 / இஜ்திஹாத் (பாகம் 2)

♦ ♦ ♦ ♦ ♦

ஃகாரிஜி இஜ்திஹாத்

அடுத்து கவாரிஜ்களைப் பற்றி பார்ப்போம். இவர்களின் துவக்கம் ‘மத்தியஸ்தம்’ (தஹ்கீம்) என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. இங்கும் இஜ்திஹாத் உள்ளது. இஜ்திஹாதைப் பொறுத்தவரை கவாரிஜ்கள் மிகத் தீவிரமான, இன்னும் சொன்னால், ரணகளமான அணுகுமுறையை கொண்டிருந்தனர் என்று சொல்வேன்.  திருக்குர்ஆனின் பிரதிகளை உயர்த்திப் பிடித்து மத்தியஸ்தத்துக்கு அழைத்தவர்களை என்ன செய்வது என்று இமாம் அலீயின் படையினரோடு கலந்தாலோசிக்கப்பட்ட போது, ஆரம்பத்தில் மத்தியஸ்தத்துக்கு இவர்கள் ஆதரவளித்தனர். பெரும்பான்மையாக இருந்த இவர்கள், “இனிமேலும் ரத்தம் சிந்த வேண்டாம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை முடித்துக்கொள்ளலாம்” என்றனர். ஆனால் இது உமைய்யாக்களின் தந்திரம் என்பது பின்னர்தான் வெளிப்பட்டது. இப்போதுவரை கவாரிஜ்கள் என்று யாரும் இருக்கவிலை.

தந்திரத்தால் ஏமாற்றப்பட்டவர்கள், அதை உணர்ந்த போது, “அல்லாஹ்வே! நாங்கள் சொன்னதற்கும் செய்ததற்கும் சேர்த்து பாவமன்னிப்பு (தவ்பா) கோருகிறோம்” என்றனர். அடுத்து இமாம் அலீயிடம் சென்று அவரையும் பாவமன்னிப்பு கோருமாறு நிர்பந்தித்தனர். அவர் மறுக்கவே அவருக்கு எதிராகத் திரும்பி அவரை நிராகரிப்பாளர் (காஃபிர்) என்றனர். பாவமன்னிப்புக்கான வாசல் திறந்திருக்கையில் அதை இமாம் அலீ பயன்படுத்தாததால், அவரை நிராகரிப்பாளர் என்றனர். பள்ளிவாசல்களில், வீதிகளில் இமாம் அலீயை பார்க்கும் போதெல்லாம் ‘அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் ஆட்சியதிகாரம் இல்லை (லா ஹுக்ம இல்லா லில்லாஹ்)’ என்று கத்தினர். அதாவது ‘நீங்கள் பதவியில் நீடிக்கக் கூடாது’ என்ற அர்த்தத்தில் அவ்வாறு கூறினர்.

சட்டவியல் சிந்தனைப் பள்ளிகளை பற்றி நாம் இன்னும் பார்க்கவில்லை. இவை வளர்ந்து வந்த பாதையைத்தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்நிகழ்வுகள் அனைத்தும் பிற்காலத்தில் வரப்போகும் சட்டவியல் சிந்தனைப் பள்ளிகள் மற்றும் அவற்றின் கொள்கைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. கவாரிஜ்களின் இஜ்திஹாத் பின்வருமாறு இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை, முஸ்லிம்கள் மத்தியில் ஒரு குடும்பமோ அல்லது கோத்திரமோ மற்றொன்றை விட சிறந்தது அல்ல. ஹாஷிம் மற்றும் குறைஷிக் கோத்திரத்துக்கு எந்த சிறப்பு அந்தஸ்தும் இல்லை. முஸ்லிம்கள் சுயாதீனமாகத் தேர்ந்தெடுப்பதால் மட்டுமே ஒருவர் தலைவர் ஆகிறார். அவர் கோத்திரச் சார்பு (அல் அசபிய்யா) இல்லாதவராக இருக்க வேண்டும். மேலும் அவர் வலுவான கோத்திரப் பின்னணி இல்லாதவராக இருக்க வேண்டும். அப்போதுதான் தவறு செய்யும்பட்சத்தில், நீதி தவறும்பட்சத்தில் அவரை எளிதாக பதவிநீக்கம் செய்ய முடியும்.

வலுவான கோத்திரப் பின்னணி கொண்ட ஒருவர் தலைவரானால், அவரை பதவிநீக்கம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது. அதற்காக பெரும் போரே நிகழ்த்த வேண்டியிருக்கும். மாறாக சாதாரணப் பின்னணி கொண்ட ஒருவரை நீக்குவது எளிது. ‘நீக்குவது’ எனும்போது, பதவிநீக்கம் அல்லது நீதிமன்றத்தில் நிறுத்துவது என்பதையும் தாண்டி அவரை கொலை செய்யும் அர்த்தத்தில் அவர்கள் கூறினர். வருந்த்ததக்க விதமாக, இவ்விவகாரங்களை அவர்கள் தவறாகக் கையாண்டனர். நான் இங்கு கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி இவற்றை விளக்குகிறேன். நீதி தவறும் ஆட்சியாளர்களுக்கு எதிராக, கவாரிஜ்கள் மிகக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினர்.

கவாரிஜ்கள் தங்களோடு முரண்பட்ட அனைவரையும் ‘பெரும்பாவம் செய்தோர்’ (முர்தகிப் அல் கபீரா) என்று கருதினர். அவர்களை உச்சபட்ச குற்றம் இழைத்தவர்களாகக் கருதினர். மேலும் அவர்களை நிராகரிப்பாளர்கள் என்று அழைத்தனர். இவை முஸ்லிம்களின் இசைவு பெற்ற கருத்துக்கள் அல்ல. அல்லாஹ்வின் வேதத்திலும், இறைத்தூதரின் வழிமுறையிலும் இவை இல்லை. இவை அனைத்தும் கவாரிஜ்களின் இஜ்திஹாத் ஆகும். அவர்கள் இவற்றை அல்லாஹ்வோடும் இறைத்தூதரோடும் பொருத்தினர். மேலும், அநியாயக்கார ஆட்சியாளருக்கு எதிராக ஆயுதம் ஏந்தாத ஒவ்வொரு முஸ்லிமும் நிராகரிப்பாளர் ஆவார் என்று கூறினர். ஆக, இன்று நாம் கேள்விப்படும் நிராகரிப்பு முத்திரை சாட்டும் (தக்ஃபீர்) பிரச்சனை புதியது அல்ல. 1400 ஆண்டுகளாக நம்மோடு இருக்கும் பிரச்சனைதான் இது. அவர்களுக்குள்ளும் பல பிரிவுகள் இருந்தன. இவற்றை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

அஸாரிகா வகை கவாரிஜ்கள், மிகத் தீவிரமானவர்கள். தங்களோடு இணங்காத முஸ்லிம்கள் அனைவரையும் குர்ஆனுக்கும் இறைத்தூதருக்கும் எதிரானவர்களாகக் கருதி அவர்களின் ரத்தம் அனுமதிக்கப்பட்டது என்றனர். இதில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று அவர்கள் பாரபட்சம் பார்க்கவில்லை. இபாதா வகை கவாரிஜ்கள் மிகவும் மிதமான போக்கைக் கொண்டவர்கள். இவர்கள் இன்றளவும் ஓமன், அல்ஜீரியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் தான்ஸானியாவின் ஸான்ஜிபார் பகுதிகளில் உள்ளனர். வெவ்வேறு விஷயங்களில் ஷியா சன்னி என இருபக்கமும் சாயக்கூடிய இவர்கள் தங்களை ஷியா என்றோ சன்னி என்றோ கருதுவது இல்லை. திறந்த மனம் கொண்ட ஷியாக்களும் சன்னிகளும் இவர்களைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் தீவிர ஷியா அல்லது சன்னியால் இவர்களை புரிந்து கொள்ளவே முடியாது.

அன்று இஸ்னா அஷாரியா, ஸைதியா மற்றும் இபாதிய்யா ஆகியவை அரசியல் சாயம் பெற்றிருந்தாலும், பிற்காலங்களில் அவை தங்களுக்கென தனி சிந்தனைப் பள்ளிகளையும் பெற்று வளர்ந்தன.

சன்னி இஜ்திஹாத்

இந்தச் சூழலில், நாம் ஏற்கனவே பார்த்த கோட்பாட்டு ரீதியான வித்தியாசங்களும் உருவாயின என்பதை நினைவூட்டுகிறேன். இஜ்திஹாத் குறித்து பேசும் போது, முஃதஸிலா —அடிப்படையில்— ஒரு சிந்தனைப் போக்காகவும், அல் தஷய்யு —அடிப்படையில்— ஒரு அரசியல் செயல்பாடாகவும் உருவாகியது என்று கொள்ளலாம். எனினும் மேலோட்டமாகப் பார்த்தால், அல் இஃதிஸாலும் அல் தஷய்யுவும் ஒத்த கருத்துக்களைக் கொண்டவையாகவும், அதேபோல சன்னிகளும் முர்ஜியாக்களும் ஒத்த கருத்து கொண்டவர்களாகவும் இருந்தன. முர்ஜியாக்களை கவாரிஜ்களுக்கு நேர் எதிரானவர்கள் என்று கருதலாம். கவாரிஜ்கள் கொலை வெறி கொண்டவர்களாக இருந்தனர். கேள்வி கேட்காமல் சகட்டுமேனிக்கு கொலை செய்தனர். கொடுங்கோல் ஆட்சியாளர்களை எதிர்க்காதது போனற ‘பெரும்பாவங்களைச்’ செய்தவர்கள் நிரந்தரமாக நரகத்தில் இருப்பர் (ஃகாலிதீன ஃபின் நார்) என்று கூறினர்.

மறுபக்கம், ‘சன்னி முஸ்லிம்களின்’ பெரும்பகுதியாக மாறியதாக நாம் கூறிய முர்ஜியாக்கள், “ஒருவர் கீழ்படியாமல் இருந்தாலும், அவர் நம்பிக்கையாளராக இருக்கும்பட்சத்தில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல நிராகரிப்பாளராக இருக்கும் ஒருவர் எவ்வளவுதான் அல்லாஹ்வுக்கு கீழ்படிய விரும்பினாலும், அதனால் எந்தப் பலனும் இல்லை (லா யளுர்ரு மஅல் ஈமானி மஃசியா கமா லா யன்ஃபவு மினல் குஃப்ரி தா’அ)” என்றனர். எடுத்துக்காட்டாக, நம்பிக்கையாளர் ஒருவர், ஃபிர்அவ்ன் போன்ற ஒருவனுக்கு அரசியல் ஆதரவளிக்கலாம். அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் இல்லை. அரசியல் ஆதரவு மட்டுமின்றி எல்லாவற்றுக்கும் இவ்விதி பொருந்தும். ஒருவர் நம்பிக்கை கொண்டுவிட்டால் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; அதுவே அவர் நிராகரிப்பாளராக இருந்தால் அவர் என்ன நன்மை செய்தாலும் அது பலனளிக்காது என்பது இதன் அர்த்தம். உமைய்யாக்கள் இத்தகைய சிந்தனைப் போக்கை பெரிதும் ஆதரித்தனர். இதற்கான காரணத்தை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதற்கு மத்தியில் ‘அல் ஜப்ரிய்யா’ என்ற இஸ்லாமிய சிந்தனையும் தோன்றியது. இதன் கொள்கை என்னவென்றால், மனிதன் சுயவிருப்பத் தீர்மானம் கொண்டவன் அல்ல. நன்மையோ தீமையோ, அல்லாஹ்தான் அனைத்தையும் நடத்தி வைக்கிறான். இது பரிதாபகரமான ஒரு கூற்று. இதைப் படிக்கும்போது “என்ன முட்டாள்தனமான கருத்து இது?” என்று கேட்கத் தோன்றுகிறது.

முஃதசிலாக்களின் இஜ்திஹாத்

அடுத்து முஃதசிலாக்கள். அவர்கள் முக்கியமாக ஐந்து கொள்கைகளை கொண்டிருந்தனர். அவை பின் வருமாறு: முதலாவது, ஓரிறைக் கொள்கை (தவ்ஹீத்). இரண்டாவது, மனிதன் தன் செயலுக்கு தானே பொறுப்பானவன் என்ற அர்த்தத்தில் நீதி (அல் அத்ல்). மூன்றாவது, சுவனம் மற்றும் நரகம் குறித்த இறைவாக்கு (அல் வஅத் வ அல் வஈத்). நான்காவதாக, நம்பிக்கையாளர் மற்றும் நிராகரிப்பாளருக்கு மத்தியில் இருக்கும் ஒரு நிலை (அல் மன்ஸில் பைனல் மன்ஸிலதைன்) மற்றும் கடைசியாக நன்மையை ஏவி தீமையை தடுத்தல் (அம்ர் பில் மஃரூஃப் வ நஹீ அல் முன்கர்).

அடுத்து சில பிரபலமான சட்டவியல் அறிஞர்களையும் அவர்களின் ஊர்களையும் பார்ப்போம். கூஃபாவில் அபூ ஹனீஃபா வாழ்ந்தார். மதீனாவின் அறிஞராக மாலிக் இருந்தார். சிரியாவில் (ஷாம்) அல் அவ்ஸாயி மற்றும் எகிப்தில் (மிஸ்ர்) அல் லைஸ் இப்னு சஅத் இருந்தனர். இவர்களுள் கடைசி இருவரின் சட்டங்கள் (ஃபிக்ஹ்) பாதுகாக்கப்படாமல் அழிந்துவிட்டன. அவர்களின் நூல்கள் எதுவும் இப்போது இல்லை. இப்படி இரு அறிஞர்கள் இருந்தனர் என்று எல்லோரும் அறிவர். ஆனால் பிற நூல்களில் காணப்படும் மேற்கோள்களைத் தவிர இவர்கள் இயற்றிய சட்டதிட்டங்கள் என்ன என்ன என்று யாருக்கும் தெரியாது.

பிற அறிஞர்கள், ‘லைஸ் இப்படிச் சொன்னார். அதற்கு என்னுடைய பதில் இது’ என்ற கருத்தில் சொல்லப்பட்டவற்றின் மூலம் மட்டுமே இவர்களைப் பற்றி நாம் அறிகிறோம். இமாம் மாலிக்கின் முஅத்தா அல்லது ஷாஃபியின் அல் உம் போன்ற சட்டவியல் தொகுப்பு நூல்கள் இவ்விருவருக்கும் இல்லை. இவர்கள் உமைய்யா ஆட்சிகாலத்தின் இறுதியில், ஹிஜ்ரி 80 அல்லது 90 களுக்குப்பிறகு உள்ள காலத்தில் வாழ்ந்தனர்.

அடுத்ததாக, இஸ்லாத்தின் அடிப்படைகளில் (உசூல்) இஜ்திஹாதுக்கு வேலை இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘ஃபுரூஆ’ எனப்படும் இஸ்லாத்தின் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை விவகாரங்களில்தான் இஜ்திஹாத் வருகிறது. இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு எடுத்துக்காட்டாக, தொழுகைத் திசையை எடுத்துக் கொள்ளலாம். ‘இஜ்திஹாத் செய்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டு யாரும் வடதுருவத்தை நோக்கி தொழ முடியாது. இத்தகைய விவகாரங்களில் இஜ்திஹாத் இல்லை.

இறைத்தூதரின் ஒரு ஹதீஸ் இவ்வாறு கூறுகிறது: “ஒரு முஜ்தஹித் சரியான முடிவை அடைந்தார் எனில் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். ஒரு முஜ்தஹித், இஜ்திஹாத் செய்து தவறான முடிவை அடைந்தார் எனில் அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும்”. இந்த ஹதீஸ், இஜ்திஹாதில் தவறு நிகழ்ந்தாலும் அதற்கு தண்டனை இல்லை என்று சொல்லி இஜ்திஹாதை ஊக்குவிக்கிறது.

இன்று நம்மிடையே, நன்கு பொருளாதார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள ஒரு அறிஞர் குழு இருக்கிறது. இவர்கள் தங்கள் உரைகள், விவாதங்கள் அனைத்தையும் நபிமொழிகளை மையப்படுத்தியே நிகழ்த்துகின்றனர். அவர்களுக்குத் தோன்றினால், பெரிய மனது வைத்து, சில குர்ஆன் வசனங்களை சேர்த்துக் கொள்கின்றனர். இல்லையெனில் அவர்களின் உரைகள் பெரும்பாலும் நபிமொழிகளை மையப்பட்டுத்தியே இருக்கும். இது மொத்தத்தையும் தலைகீழாக புரட்டுவது ஆகும்.

அசலில், குர்ஆன் வசனங்களை மையப்படுத்தி, அவற்றை விளக்குவதற்காக நபிமொழிகளை மேற்கோள் காட்டுவதுதான் முறை ஆகும். முந்தைய காலங்களில் இப்படித்தான் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் இது —இன்று இருப்பதைப் போல— மோசமாக மாறியது. நான் எதைப் பற்றிப் பேசுகிறேன் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். ஆக ‘சுன்னாஹ்’ என்று நாம் சொல்வது குர்ஆனை விளக்குவதற்காகவே உள்ளது. இறைத்தூதரின் அறிக்கைகள், அவரிடமிருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும் குர்ஆனின் பொதுவான அர்த்தத்தை விளக்குவதற்காகவே உள்ளன. ஆனால் ஒரு விஷயத்தில், இவ்வாறு விளக்கம் அளிக்கும் நபிமொழி இல்லை எனில் என்ன செய்வது? இந்தக் கேள்வியை நாம் முன்னர் கூறிய அசர் மற்றும் ரஈ வகை சட்டவியலாளர்கள் வெவ்வேறு விதமாக அணுகினர்.

ஹிஜாஸ் பகுதியில் வாழ்ந்த ‘அசர்’ வகை சட்டவியலாளர்கள், குர்ஆனின் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து அதன் அடிப்படையில் விஷயங்களை அணுகினர். அவர்களின் இந்த அணுகுமுறையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. குர்ஆனின் மொழியை அவர்கள் தாய்மொழியாகப் பெற்றவர்கள். அதை தனியாக கற்றவர்கள் அல்ல. ஆகவே அவர்கள் மொழியின் அடிப்படைகளில், அதன் நுணுக்குங்களில் புகுந்து அதன் அடிப்படையில் குர்ஆனை புரிந்து கொள்ள முயன்றனர். மறுபுறம் ஈராக்கில் வாழ்ந்த ‘ரஈ’ வகை சட்டவியலாளர்கள், தங்கள் சிந்தனைத் திறனைக் கொண்டு விஷயங்களை அணுகினர்.

இவர்கள் இவ்வாறு செய்ததற்கு மற்றொரு காரணம், ஹிஜாஸில் வாழ்ந்த மக்கள் பெற்றிருந்த எல்லா ஹதீஸ்களையும் இவர்கள் பெற்றிருக்க வாய்ப்பில்லை. இஸ்லாத்தின் ஆரம்பப் பிரதேசங்களிலிருந்து தூரம் செல்லச் செல்ல ஹதீஸ்கள் கிடைப்பதும் குறைவாக இருந்திருக்கும்.

இப்போது கிட்டத்தட்ட 1,300 வருடங்கள் கழிந்து விட்டன. இன்று ஒருவர் ‘வாருங்கள். எல்லா ஹதீஸ்களையும் ஒன்று சேர்ப்போம். அவற்றைத் தொகுத்து ஒன்றாக்குவோம். அதற்குத் தேவையான தொழில்நுட்பம், பொருளாதாரம், அறிவு என எல்லா வசதிகளும் நம்மிடம் உள்ளதே’ என்று சொல்லக் கூடும். ஆனால் இதைச் செய்ய ஏன் யாரும் முன்வரவில்லை? ஏனெனில் முஸ்லிம்களிடையே இழையோடும் வேற்றுமைகள், அவர்களை அச்சுறுத்தும் அளவுக்கு ஆழமாக ஊடுருவி உள்ளது.

ஷியாக்களின் ஹதீஸ்களோடு தங்கள் ஹதீஸ்கள் ஒன்றிணைக்கப்படுவதை சன்னிகளும், சன்னிகளின் ஹதீஸ்களோடு தங்கள் ஹதீஸ்கள் ஒன்றிணைக்கப்படுவதை ஷியாக்களும் அஞ்சுகின்றனர். அவர்களிடையே ஒருவிதமான உணர்ச்சிமயமான அச்சம் நிலவுகிறது. இந்த ஹதீஸ்களை நாம் தொகுக்க முடியாதா என்ன?! இது சாத்தியமானால், என்ன ஆகும் என்று நான் சொல்கிறேன். என்ன ஆகும் என்றால், நம்மிடம் உள்ள 80% ஹதீஸ்களில் நாம் ஒருமித்த கருத்தை அடைவோம். மிச்சமிருக்கும் கருத்துவேறுபாடு கொண்ட ஹதீஸ்களை, நம்மால் இயன்ற அளவு சிறந்த முறையில் அணுகுவதில் என்ன சிக்கல்?

இங்கு மற்றொரு விஷயத்தைச் சொல்வது அவசியம் எனக் கருதுகிறேன். இது சமகாலத்தை விட வரலாற்று ரீதியான கருத்து என்று எனக்குப் படுகிறது. எனினும் இதை இங்கு பதியவைக்க விரும்புகிறேன். குர்ஆன் சொல்ல வரும் செய்திகளை பொதுமக்கள் சிந்தித்துச் சொல்வதற்கான வாய்ப்பு இல்லாமல், குர்ஆனிய அறிவு முழுவதும், இமாம்களோடு பரிபூரணமாக முடிந்துவிட்டது என்று இஸ்னா அஷ்அரி ஷியாக்கள் கருதுகின்றனர். ஷியா இமாம்கள் மக்களின் சிந்தனைக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்ற போதிலும் இந்த விஷயத்தில் நாம் செய்ய வேண்டிய பணி இன்னும் இருக்கிறது.

நான் கடந்த 10, 11 ஆண்டுகளாக குர்ஆனுக்கு விரிவுரை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அதன் முதல் பகுதி சென்ற மாதம் வெளிவந்தது. அது வெளிவந்ததும், எனக்கு நன்கு அறிமுகமான ஒரு ஷியா இஸ்னா அஷ்அரி அறிஞர் என்னை தொலைபேசியில் அழைத்தார். தான் உட்பட 10 பேர் கொண்ட ஒரு குழு, மற்றொரு குர்ஆன் விரிவுரையை ஆங்கிலத்தில் இயற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். ஆனால் அது ஷியா விரிவுரையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. ஷியா அறிஞர்களை, இமாம்களை மேற்கோள் காட்டலாம்தான். அதில் தவறில்லை. ஆனால் ஒருவர் ‘குர்ஆனுக்கு ஷியா விரிவுரை வேண்டும்’ என்றும் மற்றொருவர் ‘சன்னி விரிவுரை வேண்டும்’ என்றும் கூறுவது நல்லதல்ல. எப்படி இருப்பினும் இத்தகைய முயற்சிகள், —முன்னர் இருந்ததைப் போல— நாம் குர்ஆன் பற்றிய இஜ்திஹாதி புரிதல்களில் அதிக நம்பிக்கை வைத்துள்ளோம் என்பதைக் காட்டுகிறது.

அன்றைய மக்கள், அல்லாஹ் தங்களுக்கு அளித்த அறிவைப் பயன்படுத்தி ‘குரூஃ’ என்பதற்கு விளக்கம் காண முற்பட்டார்கள். இன்று நாமும் அவ்வாறே செய்ய வேண்டும். இத்தகைய முயற்சிகளில் ஈடுபடும்போது சில கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். அதைப் பொருட்படுத்தாமல் இம்முயற்சியை துவங்கியே ஆக வேண்டும். இல்லையெனில் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இருந்ததைப் போல நாம் தேக்க நிலையில்தான் இருப்போம். ‘நாம்’ என்று சொல்லும் போது எல்லா முஸ்லிம்களையும் சேர்த்தே சொல்கிறேன். ஏனெனில் நான் என்னை எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவானவனாகவே கருதுகிறேன்.குர்ஆனின் அசல் அர்த்தங்களை இமாம்கள் மட்டுமே தெளிவுபடுத்த முடியும் என்று  இமாம் அல் சாதிக் கூறியதாக ஒரு கூற்று நிலவுகிறது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஷியாக்கள் மற்றும் சன்னிகளிடையே நிலவும் மற்றொரு இஜ்திஹாதிய வேறுபாடு என்னவெனில், ஷியாக்கள் இமாம்களின் கூற்றுகளையும் சுன்னாஹ் என்று கருதுகின்றனர். சன்னிகள் இவ்வாறு கருதுவதில்லை. குர்ஆனையும் இறைத்தூதரையும் மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதம் தொடர்பான மற்றொரு விவகாரம் இது. நான் ‘ஷியா’ ‘சன்னி’ என்று சொல்லும்போது, வரலாறு இப்படித்தான் இவர்களை நமக்கு அளித்துள்ளது என்பதால் இப்படிச் சொல்கிறேன் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல, ஷியாக்கள் ஒரு ஹதீஸை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில், அது குறிப்பிட்ட ஒரு வழிமுறையில் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் அவர்கள் சன்னிகளிடமிருந்து ஹதீஸ்களை மேற்கோள் காட்ட வேண்டுமெனில், அவையும் சில விதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, வெறுமனே ‘இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்’ என்று சொல்லிவிட முடியாது. இதில் தவறு எதுவும் இல்லை என்பது என் கருத்து. முஸ்லிம்கள் அனைவரும் கவனமாகச் சிந்திக்க வேண்டிய ஹதீஸ்கள் சில உள்ளன. அனைவரும் இதை செய்ய வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னது போல, சன்னி ஹதீஸ் மூல நூல்களில் இமாம் அலீ மற்றும் இறைத்தூதரின் குடும்பம் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களின் எண்ணிக்கையில் ஒரு இசைவின்மை உள்ளது. இதோடு பொருத்திப் பார்க்க வேண்டிய ஒன்றாக பின்வரும் சம்பவத்தை பார்க்கிறேன். வெள்ளிக் கிழமை தொழுகைகளுக்குப் பிறகு மேடையிலிருந்தே இமாம் அலீ, ஹசன் மற்றும் ஹுசைனை சபித்து நிந்திக்க வேண்டும் என உமைய்யா அரசாங்கம் கட்டளையிட்டதை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இந்த வரலாற்றுச் சம்பவங்களை சிலர் உணர்ச்சிவசத்தோடு அணுகுகின்றனர். உணர்ச்சிகளை விடுத்து அறிவைக் கொண்டு இவற்றை அணுகுங்கள் என்று நான் அவர்களிடம் கோரிக்கை வைக்கிறேன். அன்றைய உமைய்யா ஆட்சியாளர்கள் அதோடு நின்று விட்டார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? அல்லது அவர்கள் அதிகார வர்க்கத்துக்கு எதிரான கருத்துக்களை கொண்ட முஸ்லிம்களிடம் “இமாம் அலீ கூறிய செய்திகளை நீங்கள் மக்களிடம் சொல்லக் கூடாது” என்று கூறியிருக்கமாட்டார்களா? மேலும் முஸ்லிம்களின் நம்பிக்கை மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் கட்டுப்பாடுகளை, மிரட்டல்களை, விதிகளை அந்த முறைகேடான உமைய்யா அரசாங்கம் விதித்திருக்காது என்று உங்கள் பொது அறிவைப் பயன்படுத்தி உறுதியாகச் சொல்ல முடியுமா?

அகத்தூதர் புறத்தூதர்

ஷியா சட்டவியல் கோட்பாட்டில், புறத்தூதர், அகத்தூதர் என்ற ஒரு கோட்பாடு உள்ளது. முஹம்மது (ஸல்) புறத்தூதராகவும் ஒருவரின் அறிவு, சிந்தனைத் திறன் ஆகியவை அகத்தூதராகவும் பாவிக்கப்படுகிறது. இத்தகைய ஒரு கோட்பாடு சன்னி சட்டவியலில் இல்லை. இதன் பொருள் சன்னிகள் அறிவை அறவே பயன்படுத்துவதில்லை என்பதல்ல. அவர்களும் அறிவைப் பயன்படுத்தி பல கேள்விகளுக்கு விடை கண்டனர். ஆனால் அது கடைசி முயற்சியாக செய்யப்பட்டது. எல்லா முயற்சிகளுக்குப் பிறகு வேறு வழியில்லை எனும்போது அறிவு பயன்படுத்தப்பட்டது. அதே சமயம் இமாம் அபூ ஹனீஃபா போன்ற —இன்றைய மொழியில் சொல்வதானால்— தாராளவாத இமாம்களும் இருந்தனர்.

அபூ ஹனீஃபா உரிமை எடுத்து இஜ்திஹாதை செயல்படுத்தினார். அவர் தன் இஜ்திஹாதை செயல்படுத்துவதற்கு முன் ஹதீஸ்களை துருவித் துருவி சேகரிக்கவில்லை. ஆக சன்னிகள் மத்தியிலும் அறிவுப் பயன்பாடு இருக்கத்தான் செய்தது. இந்தத் தருணத்தில் ஒரு சம்பவத்தை நினைவு கூர்வது பொருத்தமானது. சிலர் அஹ்மது இப்னு ஹன்பலிடம் வந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை வழங்கினர். இதற்கு முன்னர் அதைப் பார்த்திராத அவர், அது என்ன என்று கேட்டார். அவர்கள், ‘இது ஆரஞ்சுப் பழம். மத்திய தரைக்கடல் பகுதியில் இது கிடைக்கிறது. சுவை மிக்கதாக இருக்கும். ஆகவே உங்களுக்காகக் கொண்டு வந்தோம்’ என்று விளக்கமளித்தனர். ஆனால் அவர் அதை உண்ண மறுத்துவிட்டார். ஏன் என்று கேட்கப்பட்டதற்கு அவருடைய பதில் இதுவாக இருந்தது: “ஏனெனில் இறைத்தூதருக்கு இத்தகைய பழம் வழங்கப்பட்டால் அவர் அதை புசித்திருப்பாரா? என்று நான் அறியேன்”. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இமாம் அஹ்மது இப்னு ஹன்பலின் அறிவுத் திறமையை நாம் கேள்விக்குட்படுத்தவில்லை. எனினும் இறைத்தூதரின் செயல்பாடுகளை தங்கள் வாழ்வில் பிரதிபலிப்பதில் அவர்கள் எந்த அளவுக்கு உணர்ச்சி மிக்கவர்களாக இருந்தனர் என்பதை இது காட்டுகிறது.

இறைத்தூதர் ஒரு விஷயத்தை செய்தாரா என்று தெரியாத போது, தங்கள் அறிவைப் பயன்படுத்தி செய்ய வேண்டியதைச் செய்யாமல், அந்த விஷயத்தையே முற்றிலும் தவிர்த்தனர். சன்னிகளின் கோட்பாட்டில், ஒப்புநோக்கல் (கியாஸ்), கூட்டு முடிவு (இஜ்மா), விவேகம் (இஸ்திஹ்ஸான்),  போன்ற சட்டவியல் கோட்பாடுகளும் உள்ளன. ஆனால் இவற்றை பயன்படுத்துவதற்கு முன் மற்ற எல்லா முயற்சிகளையும் செய்துவிட்டுத்தான் இவற்றை பயன்படுத்துவர். சன்னி அறிஞர்களின் இத்தகைய அறிவுப் பயன்பாடு, போதுமான அளவுக்கு இல்லை என்பது என் கருத்து.

பொதுமக்கள் இஜ்திஹாத் செய்ய வேண்டுமா?

சட்டவியல் தொடர்பான விஷயங்களில், பொதுமக்கள் தங்கள் சிந்தனையை பயன்படுத்தாமல், பிறரை பின்பற்றி மட்டுமே சட்டங்களை பெறுவது சரியா? அல்லது அனைவரும் கற்று, சிந்தித்து முடிவெடுக்க வேண்டுமா?

அனைவரும் சிந்திக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் சட்டவியல் தொடர்பான விஷயங்களில் அனைவரும் தேர்ச்சி பெறுவதில்லை. எனினும் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக சிந்திக்க முடியாது என்று சொல்ல முடியாது. ‘எங்கள் முன்னோர்கள் இப்படித்தான் செய்தனர். எங்கள் விவகாரங்களை முந்திய சமூகங்களிலிருந்து இப்படித்தான் நாங்கள் பெற்றோம்.’ என்று சொல்பவர்களை குர்ஆன் எதிர்மறையாகப் பார்க்கிறது. இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. நம்மைவிட தகுதி மிக்க அறிஞர் ஒருவர், ஒரு கருத்தைக் கூறும் போது, நம் சிந்தனையின் அடிப்படையில் அவரோடு முரண்படலாமா? இதற்கு இருபக்கமும் —முரண்படலாம் என்றும் முரண்படக்கூடாது என்றும்— வலுவான வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவ்விரண்டில் எதை ஏற்றுக்கொள்வது என்று நான் சொல்லப் போவதில்லை. நான் சொல்ல வருவதெல்லாம் இதுதான்:

இதுவரை நாம் சிந்தனைக் குறைபாடு உடையவர்களாக இருந்து வந்துள்ளோம். சிந்திக்கும் ஆற்றலை முடுக்கிவிட்டு, நம் புரிதலை மேம்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. அப்படிச் சிந்திக்கும் போது, ஒரு எல்லையை அடைந்து விட்டால், “நான் சிந்தித்த போதிலும் இதற்கு மேல் என்னால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே தகுதி பெற்ற, அந்த விஷயத்தைக் குறித்து நீண்ட நாட்கள் ஆய்வு செய்த, என்னைவிட அதிக அறிவு பெற்ற ஒருவரை நம்பி, அவரை பின்பற்றுகிறேன்” என்று சொல்லலாம். இதுதான் இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாகத்தான் பல முஸ்லிம்கள், சட்டவியலாளர்களின் ஆய்வுகளை மேற்கோள் காட்டுகின்றனர்.

இமாம் ஷாஃபிஈ, தன் வாழ்நாளிலேயே, எகிப்திலிருந்து ஈராக்குக்கு குடிபெயர்ந்த போது, தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டார் என அறிகிறோம். அப்படி இருக்க, இன்று, 1200-1300 ஆண்டுகளுக்குப் பிறகு எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன? எனில் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் இஜ்திஹாத் செய்த ஒருவரை பின்பற்றுவது இஸ்லாத்தின் ஆன்மாவோடு பொருந்துகிறதா? இஸ்லாத்தின் சடங்குகள் மாறுவதில்லை. அதில் இஜ்திஹாத் செய்ய முடியாது. ஆனால் பொருளாதாரம், ராணுவ நடவடிக்கைகள் போன்ற பல விஷயங்கள் நம் தொடர்ச்சியான இஜ்திஹாதை, அறிவு ஊட்டத்தை, நம் அனுபவத்தை கோரி நிற்கின்றன. ‘ஏற்கனவே இருந்த கருத்துகளின் வழியிலேயே இவற்றை அணுகுவோம்’ என்று சொல்லிவிட்டு நாம் அமைதியாக இருந்துவிட முடியாது. இது ஒரு இயக்கம். அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்து நாமும் செல்ல வேண்டும்.

♦ ♦ ♦ ♦ ♦

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *