இஸ்லாமிய வரலாறு – 05 / முஃதசிலா சிந்தனைப் பள்ளி (பாகம் 3) – இமாம் முஹம்மது அல் ஆஸி
Posted onஇஸ்லாமிய வரலாறு – 05 / முஃதசிலா சிந்தனைப் பள்ளி (பாகம் 2)
♦ ♦ ♦ ♦ ♦
அஷாயிரா
அடுத்து, அபு அல் ஹஸன் அல் அஷ்அரியைப் பற்றி பார்ப்போம். இவரை நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பஸ்ராவைச் சேர்ந்த இவர் ஹி. 260 முதல் ஹி. 330 வரை வாழ்ந்தார். அவரது புகழ்பெற்ற புத்தகத்தின் பெயர் ‘விளக்கம்’ (அல்-இபானாஹ்). வாசில் இப்னு அதாவின் மாணவராக இருந்த அவர், குறிப்பிட்ட காலம் வரை தன் ஆசிரியரோடு இணக்கமாக இருந்தார்; அவரிடமே கல்வி கற்றார். ஆனால் சில காலம் கழித்து கருத்து வேறுபட்டு சுயமாக ஒரு நிலையை எடுத்தார். தான் பயின்ற பள்ளிக்கும், தன் ஆசிரியர்களுக்கும் எதிராகத் திரும்பினார்.
‘முஃதசிலாக்கள் இணைவைப்பாளர்களைப் போன்றவர்கள்’ என அஷ்அரி கூறினார். இறைத்தூதர் காலத்தில், அல்லாஹ்விடமிருந்து வந்த வேதவெளிப்பாட்டை ‘இது வெறும் மனிதச் சொல்லன்றி வேறில்லை’ என்று இணைவைப்பாளர்கள் கூறினர். ஆகவே இப்போது, ‘குர்ஆன் அல்லாஹ்வின் படைக்கப்பட்ட வார்த்தைகளே’ என்று முஃதசிலாக்கள் சொன்னபோது அவர்களும் மக்காவின் இணைவைப்பாளர்களைப் போன்றவர்களே என அபு அல் ஹசன் அல் அஷ்அரி கூறினார்.
அடுத்து, அல்லாஹ்வின் நாட்டம் (அல் மஷீயா) குறித்த விவாதங்களிலும் இவர்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. குர்ஆனில் ‘அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் நாடமாட்டீர்கள்’ [81:29] என்று ஒரு வசனம் உள்ளது. மனிதன் தான் செய்யும் செயல்களை கட்டுப்படுத்தக்கூடியவன் என்றும் அவனே அதற்கு பொறுப்பாளர் என்றும் முஃதசிலாக்கள் தெளிவாகக் கூறினர். ஆனால் அஷ்அரி, ‘இல்லை. அல்லாஹ்தான் மனிதனின் செயல்களையும் செய்கிறான்’ என்றார். “நாம் ஒரு காரியத்தைச் செய்யும் வாய்ப்பும் சக்தியும் பெற்றிருந்தால் அது நோக்கி தள்ளப்படுவோம். எனினும் அச்செயல் செய்து முடிக்கப்பட்ட பின், அல்லாஹ்வும் அதில் ஒன்றியுள்ளான்” என்று அஷ்அரிக்கள் கூறினர். இது நுணுக்கமான தத்துவ விவாதமாக அன்று அரங்கேறியது.
மனிதனின் நாட்டத்தில் அல்லாஹ்வின் நாட்டம் இணைந்துள்ளதா அல்லது அவை இரண்டும் தனித்தனியே இயங்குகின்றனவா? என்பதே இங்குள்ள கேள்வி. இதை பின்வரும் உதாரணத்தைக் கொண்டு விளக்கலாம்: ஒரு முஸ்லிம் ஒரு பொருளை திருடிவிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். இது பற்றி முஃதசிலாக்கள் அஷ்அரிகளிடம் “மனிதச் செயல்களில் அல்லாஹ் ஒன்றியுள்ளான் என்று கூறுகிறீர்களே. எனில் அல்லாஹ்வும் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளானா? இதற்கு உங்கள் பதில் என்ன?” என்று கேட்பர். அஷ்அரிக்கள் “இல்லை. இச்செயலுக்கு அல்லாஹ் பொறுப்பாக மாட்டான். மனிதன்தான் இதற்கு பொறுப்பானவன். ஆனால் அல்லாஹ் அச்செயலை சாத்தியமாக்குகிறான். மனிதன் தானாக அச்செயலை சாத்தியமாக்க முடியாது. அக்காரியத்தை செய்யும் வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்துகிறான் அல்லது அதை அனுமதிக்கிறான் எனில் அல்லாஹ் அதை செய்கிறான் என்று பொருள் கொள்ளக் கூடாது” என்றனர். இப்படியாக இந்த விவாதம் நீண்டு கொண்டே சென்றது.
‘கீழ்ப்படியாத நம்பிக்கையாளர்கள் நரகத்துக்குச் செல்வர்’ என்றும் ‘அவர்கள் அங்கே நிரந்தரமாகத் தங்குவர்’ என்றும் முஃதசிலாக்கள் கூறினர். இதற்குப் பதிலளித்த அஷ்அரி “அப்படியெனில், ‘இணைவைப்பல்லாத மற்ற பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுவான்’ [4:116] என்ற வசனத்தை எப்படி விளக்குவீர்கள்?” என்று கேட்டார். ‘மன்னித்துவிடுவதாக அல்லாஹ் கூறிய பிறகும் நீங்களாக எப்படி பாவம் செய்த ஒரு முஸ்லிமை நரகத்துக்கு அனுப்ப முடியும்?’ என்று அஷ்அரி கேட்டார்.
‘அல்லாஹ்வுக்கு கை, கண், முகம் போன்ற உறுப்புகள் இல்லை’ என்று முஃதசிலாக்கள் கூறினர். அஷ்அரியோ ‘இல்லை! அல்லாஹ்வுக்கு இவையனைத்தும் உண்டு’ என்றார். இதற்கு ஆதாரமாக குர்ஆனின் பின்வரும் வசனங்களை முன்வைத்தார். ‘மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும் [55:27]’, ‘இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு சிரம் பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? [38:75]’, ‘நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது [54:14]’.
இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் நிறுவனமயமாக்கப்பட்ட கொள்கையாக அல் அஷாயிரா மாறிவிட்டது. அஷாயிரா பற்றிப் பேசும் போது அது அபுல் ஹசன் அஷ்அரியால் துவங்கப்பட்டது என்பதும் அச்சமயத்தில் இது அஷாயிரா என்று அழைக்கப்பட்டது என்பதும் உண்மைதான் என்றாலும் நாம் முன்னர் சொன்ன விஷயங்களில் அன்றிலிருந்து இன்று வரை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் அபிப்பிராயங்களை இது பிரதிபலிக்கிறது. ஆகவே, இப்போது —1200 வருடங்களுக்குப் பிறகு— இந்த வேறுபாடுகளை முஃதசிலாக்களுக்கும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு என்றே சொல்லலாம்.
அல்லாஹ், தான் அரியணையில் அமைந்தான் என்று கூறுகிறான். இதை நேர்பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது என்று முஃதசிலாக்கள் கூறினர். அல் அஷ்அரியோ, விளக்க முடியாததாக இருப்பினும் இதை நேர்பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் சக்தி, அவனது ஞானம் போன்றவற்றை அவற்றின் நேர்பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றனர். (இவர்களுடைய கொள்கையின் சாரத்தை உங்களுக்குச் சொல்ல முற்படுகிறேன்).
மேலும் அஷ்அரிக்கள் ‘கிப்லாவைச் சேர்ந்த யாரையும் நிராகரிப்பாளர்கள் என்று நாங்கள் சொல்ல மாட்டோம்’ என்றனர். அதாவது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒருவர் விபச்சாரம், திருட்டு, மது அருந்துதல் போன்ற எதைச் செய்தாலும் அவர்களை நிராகரிப்பாளர்கள் என்று சொல்ல முடியாது என்றனர். இதுவும் முஃதசிலா கொள்கைக்கு மாற்றமாக இருந்தது. இன்றைய முஸ்லிம் உலகையும் அஷ்அரி சிந்தனையையும் நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் அபுல் ஹசன் அஷ்அரி கூறியதாவது: ‘இறைத்தூதரின் பரிந்துரையின் (ஷிஃபாஅத்) பேரில் அல்லாஹ் மனிதர்களை நரக நெருப்பிலிருந்து மீட்டெடுப்பான்’. “இன்னல்லாஹ யுஹ்ரிஜு மினன்னாரி கவ்மன் ஃபி ஷஃபஅதி முஹம்மது (ஸல்)”. இவை அவருடைய வார்த்தைகள். மேலும் மண்ணறையின் வேதனையை தான் நம்புவதாகக் கூறினார் (வ நுஃமினு பி அதாபில் கப்ர்). தொடர்ந்து, நம்பிக்கை (ஈமான்) என்பது சொல்லும் (கவ்ல்) செயலும் (அமல்) பிணைந்தது என்றும் அது அதிகரிக்கவும் குறையவும் கூடியது என்றும் கூறினார்.
மேலும் அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலீ ஆகியோர் இறைத்தூதருக்குப் பிறகு வந்த தலைவர்கள் என்றார். (இங்கு தலைவர் என்பதற்கு இமாம் என்ற பதத்தை அவர் பயன்படுத்துகிறார்). ஹிஜ்ரி 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அல் பாகில்லானி மற்றும் ஹி. 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அல் கஸ்ஸாலி ஆகியோர் பிரபல அஷ்அரி அறிஞர்கள் ஆவர்.
இமாம் சாதிக்கின் நிலைப்பாடு
முஃதசிலா, அஷ்அரிய்யா, நாம் ஏற்கனவே பார்த்த அல் ஜபரிய்யா, கதரிய்யா என்ற இவை அனைத்திலும் இமாம் அல் சாதிக்கின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பின்வருமாறு பதிலளிக்கலாம்: இமாம் அல் சாதிக்கும் வாசில் இப்னு அதாவும் சம காலத்தோர். அவர்கள் இருவருமே ஹி. 80-ல் பிறந்தவர்கள். ஆனால் வாசில் இப்னு அதாவின் ஆயுட்காலம் குறைவாக இருந்தது. இமாம் சாதிக்கைவிட 16 ஆண்டுகள் முன்னர் அவர் இறப்பை எய்தினார்.
அல் இமாம் சாதிக் மற்றும் முஃதசிலா சிந்தனைப் பள்ளிகளை —அன்றும் இன்றும்— ஆய்வு செய்த பல இஸ்லாமிய அறிஞர்கள் அவை இரண்டிலும் ஒற்றுமையை காண்கின்றனர். அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கோட்பாடுகளை அஷ்அரியா பிரதிநிதித்துவம் செய்கிறது என்று ஏற்கனவே கூறினோம். அதே போல —குறிப்பான சில விஷயங்களில் வேறுபட்டாலும்— பொதுவாகப் பார்த்தால் இமாம் சாதிக் மற்றும் பன்னிருவர் (அல் இஸ்னா அஷரியா) சிந்தனைப் பள்ளியை முஃதசிலா பிரதிநிதித்துவம் செய்கிறது என்று கூறலாம். எனினும் பன்னிருவரின் கோணத்திலிருந்து பார்த்தால் அவர்கள் முஃதசிலாக்களைப் பின்பற்றுபவர்கள் அல்ல என்றும் முஃதசிலாக்களே இமாம்களின் செல்வாக்குக்கு உள்ளானவர்கள் என்றும் அதன் அடிப்படையிலேயே தங்கள் கொள்கைகளை வகுத்துக் கொண்டனர் என்றும் கூறுகின்றனர்.
ஆக குர்ஆன் படைக்கப்பட்டது-படைக்கப்படாதது, சாராம்சமான பண்புகள், வினைப் பண்புகள் போன்றவற்றைப் பற்றி பேசுகையில் இமாம் சாதிக்கின் கருத்து கிட்டத்தட்ட முஃதசிலாக்களினுடையது போனறதே என்று சொல்லலாம்.
முஃதசிலாவும் கிரேக்க மெய்யியலும்
சிலர் முஃதசிலா இயக்கம் கிரேக்க மெய்யியல் கோட்பாடுகளில் இருந்து தோன்றியது என்றும் பிளேட்டோ, சாக்ரடீஸ் போன்ற அறிஞர்களின் படைப்புகள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இது வளர்ந்தது என்றும் கூறுகின்றனர். மேலும் இஸ்லாத்துக்கு வெளியிலிருந்து இவர்கள் தோன்றினர் என்றும் இது இஸ்லாத்தின் உள்ளார்ந்த கோட்பாடு அல்ல என்றும் கூறுகின்றனர். இது உண்மையல்ல.
இது கீழைத்தேயவாதிகளின் வரலாற்றுக் கண்ணோட்டம் ஆகும். அன்று இஸ்லாம் சந்தித்த சவால்களுக்கு உள்ளார்ந்த பதிலாக தோன்றியதுதான் முஃதசிலா கொள்கைகள். முஸ்லிம்களின் முன்னால் பல்வேறு சமய மற்றும் மெய்யியல் விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. அவர்கள் அவற்றுக்கு பகுத்தறிவு ரீதியில் பதிலளிக்க வேண்டிய தேவை இருந்தது. அல்லாஹ் மற்றும் அவனது தூதரிடமிருந்து மேன்மையான தகவல்களைப் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு அவ்வாறு பதிலளிப்பது சாத்தியமானதே. ஆகவே அங்கு இருந்த கிரேக்க, ரோம, பாரசீக, ஹிந்து, எகிப்திய கொள்கைகளோடு தொடர்பிலிருந்த முஸ்லிம்கள் அவர்களின் சமய, மெய்யியல் அல்லது அரசியல் கேள்விகளுக்கு தகுந்த பதிலை கொடுக்க வேண்டியிருந்தது.
இவர்கள் அனைவரும் தங்கள் அறிவு மேன்மையை முஸ்லிம்களுக்கு மேல் நிலைநாட்ட முயன்றனர். ஆரம்ப காலங்களில் அரேபிய தீபகற்பத்திலிருந்து வந்த முஸ்லிம்களிடம் மெய்யியல் கோட்பாடுகளோ, இறையியல் கொள்கைகளோ இருக்கவில்லை. அவர்களிடம் இருந்ததெல்லாம் ஒன்றுதான்: தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே இருந்த எளிய உறவு. அதை அப்படியே புரிந்து கொண்டு அதே அளவில் செயல்படுத்தவும் துவங்கினர்.
எனவே காலங்காலமாக விவாதங்களையும் பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு விரிவான கோட்பாடுகளை உருவாக்கி வைத்திருந்த மக்களோடு முஸ்லிம்களுக்கு தொடர்பு ஏற்பட்ட போது, அவர்களும் —இஸ்லாமிய வட்டத்துக்குள் இருந்து கொண்டே— பகுத்தறிவு ரீதியான விளக்கங்களை ஏற்படுத்துவது இயல்பானதே. இதைத்தான் முஃதசிலாக்கள் நேர்மையோடும் நல்லெண்ணத்தோடும் செய்தனர்.
மேலும் அன்று முஸ்லிம்களாக மாறியவர்கள் கிறிஸ்துவ, யூத, கிரேக்க, பாரசீக அல்லது எகிப்திய பின்னணி கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் தங்களுக்கு ஏற்ப இஸ்லாத்தை வளைத்துக்கொள்ளும் அபாயம் இருந்தது. இவ்வாறு நிகழ்வதை முஃதசிலாக்கள் தடுத்தனர்; அம்மக்களின் பழைய கொள்கைகளில் இஸ்லாம் தொலைந்து விடாமல் பாதுகாத்தனர். முஃதசிலாக்கள் மற்றெல்லாரையும் விட அதிகமாக பாரசீகர்களோடு வாக்குவாதங்களில் ஈடுபட்டிருந்தனர். எப்படிப் பார்த்தாலும் முஃதசிலா என்பது எந்த வகையிலும் பிற கோட்பாடுகளின் நீட்சி அல்ல.
முஸ்லிம்களுள் கீழ்ப்படியாதவர்கள் நிரந்தரமாக நரகத்தில் இருப்பர் என்று முஃதசிலாக்கள் கூறினர். கவாரிஜ்களும் இதைத்தானே சொன்னார்கள். இது விஷயத்தில் இருவருக்கும் ஒற்றுமை இருக்கிறதே. ஆம். இந்த ஒரு விஷயத்தில் இருவருக்கும் ஒற்றுமை இருப்பது உண்மைதான். எனினும் முஃதசிலாக்கள் கவாரிஜ்களைப் போன்றவர்கள் அல்ல. கவாரிஜ்கள் இஸ்லாமிய சிந்தனையை விரிவாக்கம் செய்யாமல் எல்லாவற்றிலும் ஒரு தீவிரப் போக்கை கையாண்டனர். ஆனால் முஃதசிலாக்கள் அவ்வாறல்ல.
கேள்வி: கிறிஸ்துவர்களோடு முஃதசிலாக்கள் நடத்திய விவாதங்களில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்கனவே பார்த்தோம். இதுதவிர அவர்களுடைய பிற கொள்கைகள் நடைமுறையில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தின?
பதில்: குர்ஆனில் அல்லாஹ் தன்னைப்பற்றி சொல்கிறான். எடுத்துக்காட்டாக, ‘அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது (யதுல்லாஹி ஃபவ்க ஐதீஹிம்)’ [48:10]. இதை இயல்பாகப் புரிந்து கொண்டால், அல்லாஹ்வுக்கு கை உள்ளது என்று பொருள்படும். ஆனால் முஃதசிலாக்கள் இதை நேர்பொருளில் அர்த்தம் கொள்ளக் கூடாது என்றனர். பேச்சு வழக்கில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்றும் இதன் பொருள் ‘அல்லாஹ்வின் ஆற்றல் அவர்களுடைய ஆற்றலை விட மேலோங்கியிருக்கிறது’ என்று இதற்கு விளக்கம் அளித்தனர்.
மற்றொரு வசனம் ‘அன்றைய தினம் இறைவனைப் பார்த்த முகங்கள் பொலிவுற்று இருக்கும் (உஜூஹுய்ன் யவ்மயிதின் நாளிரா இலா ரப்பிஹா நாளிரா)’ [75:22, 23] என்கிறது. ஒரு சராசரி முஸ்லிமின் புரிதல் ‘அல்லாஹ்வை நாம் பார்ப்போம்’ என்றுதான் இருக்கும். அஷ்அரிகளும் இவ்வாறே கூறினர். இப்போது இருப்பதைவிட பல மடங்கு சக்தி கொண்ட கண்களை நாம் பெற்றிருப்போம் போலும்!
எப்படி இருப்பினும் அஷ்அரிகள் ‘ஆம், அல்லாஹ்வை பார்க்க முடியும்’ என்றனர். இதை அவர்கள் குர்ஆனின் மற்றொரு வசனத்தோடு ஒப்பிட்டு கூறினர். ‘இல்லை! நிச்சயமாக அந்நாளில் அவர்கள் தம் இறைவனிடமிருந்து திரையிடப்படுவார்கள் (கல்லா இன்னஹும் அன் ரப்பிஹிம் யவ்மயிதின் ல மஹ்ஜூபூன்)’ [83:15]. ‘மஹ்ஜூபூன்’ என்பது பார்வையை மறைக்கும் திரையை குறிக்கிறது. இதனைக் கொண்டு, நிராகரிப்பாளர்கள் இறைவனைப் பார்க்க முடியாது என்றும் நம்பிக்கையாளர்கள் அவனை பார்க்க முடியும்’ என்றும் அஷ்அரிகள் கூறினர்.
முஃதசிலாக்கள், இதை அப்படிப் புரிந்து கொள்ளக் கூடாது என்றனர். அல்லாஹ்வை அவ்வாறு புரிந்து கொள்வதே அவனை மனித அளவுகோல்களுக்குள் அடக்கியதாகிவிடும். ‘அன்று நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை நோக்கியவர்களாக இருப்பர். எனினும் காட்சிகள், நாம் உலகில் காணும் காட்சிகள் போல இருக்காது’ என்றனர். அவனை அப்படி கற்பனை செய்வதே அவனுடையதல்லாத பண்புகளை அவனுக்கு சூட்டுவதாகிவிடும் என்றனர். இப்படியாக அன்று பல விவாதங்கள் நடந்தேறின. காலாகாலத்துக்கும் இந்தப் பிரச்சனைகள் முஸ்லிம்கள் மத்தியில் இருக்கத்தான் போகின்றன.
அதேபோல முதஷாபிஹாத் வகை வசனங்களையும் கூறலாம். அவை பல அர்த்தங்களை வெளிப்படுத்துபவை. இது குறித்து விவாதங்களை வளர்த்து சங்கடம் ஏற்படுத்தாமல் ஆக்கப்பூர்வமான பணிகளை நாம் செய்ய வேண்டும்.
கேள்வி: அல் மஃமூன் மற்றும் பிற அப்பாஸிய ஆட்சியாளர்கள் இந்த கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதற்கு உள்நோக்கம் ஏதும் இருந்ததா? முஃதசிலாக்களால் அப்பாஸிகளுக்கு எவ்வித அரசியல் எதிர்ப்பும் —அதனால் அச்சுறுத்தலும்— இருக்கவில்லை என்பது காரணமா?
பதில்: முஃதசிலாக்கள், அல் மஃமூனுக்கு முன்னிருந்த அப்பாஸிய அரசாங்கத்தை எதிர்க்கத்தான் செய்தனர். எனினும் அது போர்க்குணமிக்க எதிர்ப்பாக இல்லாமல் தத்துவார்த்த எதிர்ப்பாக இருந்தது. மஃமூன் ஆட்சிக்கு வந்ததும், முஃதசிலாக்களை ஆதரித்தது மட்டுமின்றி அதையே அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாகவும் அறிவித்தார். அவரே ஒரு முஃதசிலியாக மாறினார் என்றும் சிலர் கூறுகின்றனர். அக்கொள்கைகளால் அவர் அந்த அளவுக்கு மனநிறைவு அடைந்திருந்தார். தனக்குப் பிறகு வரவிருந்த ஆட்சியாளருக்கு (முஃதசிம்) எழுதிய கடிதத்தில் கூட —மரண சாசனத்தைப் போல— அரசாங்கக் கொள்கையாக முஃதசிலா கொள்கையையே தொடருமாறு உற்சாகமூட்டினார்.
அல் மஃமூன், ஹாரூன் அர் ரஷீதின் மகனாவார். ஹாரூன் அர் ரஷீதுக்கு ஒரு அரபு மனைவியும் ஒரு பாரசீக மனைவியும் இருந்தனர். அல் மஃமூனின் சகோதரரான அல் அமீன், அரபு மனைவிக்குப் பிறந்தவர். அல் மஃமூன் பாரசீக மனைவிக்கு பிறந்தவர். இந்தப் பின்னணியில் இதை நாம் அந்த காலத்துக்கே சென்று புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
அன்று முஸ்லிம்களுக்குள்ளாகவும் பாரசீகர்கள் போன்ற பிறரோடும் பல விவாதங்கள் நடைபெற்றன என்று ஏற்கனவே பார்த்தோம். முஃதசிலாக்கள் அத்தகையவர்களிடம் இஸ்லாத்தை விளக்கி, விரிவான புரிதலை ஏற்படுத்தி அதை தற்காத்து நின்றனர். இவை அனைத்திலும், முஃதசிலாக்களின் சிறப்பான செயல்பாட்டை, பாரசீகப் பின்னணியிலிருந்து வந்த மஃமூன் புரிந்து கொண்டார். அவர்கள் இஸ்லாத்துக்கு ஆற்றிய இந்த பங்களிப்பால் தனிப்பட்ட அளவில் கவரப்பட்டார். எனவே அவர்களை ஆதரிக்க விரும்பினார்.
எனினும் முஃதசிலாக்கள் அப்பாஸி அரசாங்கத்துடன் கைகோர்த்த போது, அவர்கள் வீழ்ச்சியடையத் துவங்கினர்.
அரசியல் சிந்தனைப் பள்ளிகள்
நாம் ஏற்கனவே அரசியல் சிந்தனைப் பள்ளிகளைப் பற்றி பார்த்தோம். அதன் நீட்சியாக மற்றொரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நான் பேசப் போகும் விஷயம் பற்றி யாரும் இன்று விவாதிப்பதில்லை. இது பற்றி பேசும் போது நம்மிடையே சகிப்புத்தன்மை குறைந்து வருவதையும் நான் கவனிக்கிறேன். அரசியல் சிந்தனையின் எந்த அணியைச் சார்ந்தவர்களாக இருப்பினும் நாம் முக்கியமாக எழுப்ப வேண்டிய கேள்வி இதுதான்: “தனக்கு முன் இருந்த மூன்று கலீஃபாக்களையும் இமாம் அலீ ஏற்றுக் கொண்டாரா இல்லையா?” இதற்கு பதில் “ஆம்” என்றால், அதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? மாறாக இதற்குப் பதில் “இல்லை” என்றால், அதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?
மக்கள் ஒருசார்பு நிலை எடுக்க உந்தப்படுகிறார்கள். இதற்குக் காரணம், அவர்களின் பிறப்பே அந்தச்சார்பு நிலையில்தான் நிகழ்கிறது. அதை மட்டுமே அறிந்து வைத்துள்ள அவர்கள் தாம் நேர் வழியில் இருப்பதாக நம்புகிறார்கள். அதைத் தாண்டி மற்ற முஸ்லிம்களின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்ள அவர்கள் முயற்சி எடுப்பதில்லை. இரு அணிகளிலும் நற்கூறுகளும் உள்ளன. இரு அணிகளிலும் தவறுகளும் உள்ளன. இவை இரண்டும் ஒன்றுசேர்ந்துதான் இன்றைய முஸ்லிம்களாக நாம் உருவாகியுள்ளோம்.
அடுத்து உமரின் ஒரு கூற்றின் பக்கம் உங்கள் கவனத்தை ஈர்க்கிறேன். எல்லா வரலாற்று நூல்களிலும், எல்லா ஹதீஸ் நூல்களிலும் இது காணக் கிடைக்கிறது. எனினும் முஸ்லிம்கள் இதை வெளிப்படையாகப் பேசுவதில்லை. அவர் கூறியதாவது, “அபூ பக்கருக்கு அளிக்கப்பட்ட பற்றுறுதி ஒரு தனித்துவமான நிகழ்வு. அதன் பாதக விளைவுகளிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாத்தான். இன்று ஒருவர் அதுபோன்ற ஒன்றை செய்ய முற்பட்டால் அவரை தடுத்து நிறுத்துங்கள் (இன்ன பைஅத அபுபக்கரின் கானத் ஃபல்தா வகல்லாஹு ஷர்ரஹா ஃபமன் ஆத இலா மிஸ்லிஹா ஃபக்துலு)”.
தயவுசெய்து உங்கள் நிலைபாட்டை இறுக்கமாக்கிக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள். மற்ற முஸ்லிம்கள் —உங்களோடு கருத்து வேறுபடும் முஸ்லிம்கள்— இது பற்றி எப்படி சிந்திப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம், ஒட்டகப் போரின் போது யார் தொழுகையை முன் நின்று நடத்துவது என்பது குறித்து தல்ஹாவுக்கும் ஸுபைருக்கும் இடையே ஏற்பட்ட போட்டி. அப்போரில் மர்வான் இப்னு ஹகம் தல்ஹாவை கொன்று பழி தீர்த்ததாக நம்பகமான அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இச்செய்தியில் சதித்திட்டம் கலந்துள்ளது என்று சிலர் நினைக்கின்றனர். எனினும் இந்த வரலாற்று நிகழ்வுகள் குறித்து சிந்திக்க வேண்டுகிறேன். உங்களுக்காக நான் சிந்திக்கப் போவதில்லை.
மற்றொரு நிகழ்வின்போது ஒருவர் இமாம் அலீயிடம் “நீங்கள் முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு ஏன் அனைவரும் பிரிந்து கிடக்கிறார்கள். அபூ பக்கரும் உமரும் இருந்த போது இவ்வாறு நிகழவில்லையே?” என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த அலீ, “ஏனெனில் அபூ பக்கரும் உமரும் என்னைப் போன்ற முஸ்லிம்களை வழிநடத்தினர். நானோ உங்களைப் போன்றவர்களை வழிநடத்துகிறேன்” என்றார்.
எனினும் சில முஸ்லிம்கள் பிற முஸ்லிம்களோடு இணங்கிப் போகும் அளவுக்கு தாராள மனம் படைத்தவர்கள் அல்ல என்பதை நான் அறிவேன். ஆனால் இந்தச் சொற்பொழிவுகளின் முடிவில், இங்கிருந்து கலைந்து செல்லும் நீங்கள், எந்த இஸ்லாமிய கோட்பாட்டைச் சார்ந்தவர்களாக இருப்பினும், பிற முஸ்லிம்களை ஒழித்துக் கட்டும் எண்ணம் கொண்டவர்களாக அன்றி அவர்களை உறுதிப்படுத்துபவர்களாக, ஒருவருக்கொருவர் பலம் சேர்ப்பவர்களாக மாறுவீருகள் என நம்புகிறேன்.
நம்மிடையே வாழும் சந்தேகப் பிராணிகளுக்காக பின்வரும் செய்தியை வாசித்துக் காட்டுகிறேன்: ரவ் அஷ் ஷெய்ஹுல் முஃபீத் அனில் இமாம் அஸ் சாதிக்(அலை), அன்னஹு பலஃகா ரசுலல்லாஹ், அன் கவ்மின் மின் குறைஷ் அன்னஹும் காலு அய்யரா முஹம்மதுன் அன்னஹு அஹ்கமல் அமர ஃபி அஹ்லி பைதி வலா இன் மதா லனஸிலன்னஹ அன்ஹும் வலி நஜல்ஹ ஃபீ ஸிவாஹும்.
இமாம் அல் சாதிக் கூறியதாக ஷெய்க் முஃபீத் அறிவிப்பதாவது, “குறைஷிகள் பின்வருமாறு கூறியதாக இறைத்தூதருக்கு ஒரு செய்தி வந்தது: “ஆட்சி அதிகாரத்தை தன் குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விட்டதாக முஹம்மத் நினைக்கிறாரா? அவர் இறந்தவுடன் நாங்கள் அதை கைப்பற்றி அவரல்லாத பிறரிடம் ஒப்படைப்போம்”. ஆதார நூல்: அல் அமாலி, பக்கம்: 113
இங்கு நான் குறிப்பிட விரும்பும் மற்றொரு அரசியல் செய்தி என்னவெனில் சிலர் நினைப்பது போல முஆவியாவுக்கு எதிரான அரசியல் இயக்கம் ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்டதாக இருக்கவில்லை. அவருக்கான எதிர்ப்பு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், அப்துர் ரஹ்மான் இப்னு அபி பக்கர், ஆயிஷா, சஅது இப்னு அபி வக்காஸ், அப்துல்லாஹ் இப்னு உமர், கைஸ் இப்னு சஅத் இப்னு உபாதா மற்றும் அலீயின் நேசர்கள் என பல திசைகளிலிருந்து வந்தது.
வெள்ளிக் கிழமை பிரசங்கங்களில் இமாம் அலீயை சபித்து நிந்தனை செய்ய வேண்டும் என முஆவியா அதிகாரப் பூர்வமாகவே கட்டளையிட்டார். பிரபல இஸ்லாமிய வரலாற்று நூல்களில் கூட இது பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் முஸ்லிம்கள் இதன் பின்னணியை புரியாதவர்களாகவே உள்ளனர். பெருநாள் தொழுகையின் போது வழக்கமாக தொழுகைக்குப் பிறகுதான் உரை நிகழ்த்தப்படும். அப்படிச் செய்தால் சில மக்கள் இமாம் அலீ சபிக்கப் படுவதை கேட்காமல் கலைந்து சென்று விடுவார்கள் என்று எண்ணி, வழக்கத்தை மாற்றி முதலில் உரை நிகழ்த்த வேண்டும் அதற்குப் பிறகுதான் தொழுகை நடத்த வேண்டும் என்றும் உமைய்யா அரசாங்கம் அறிவித்தது. இத்தனைக்குப் பிறகும் முஆவியாவை கலீஃபா என்று அழைப்பது தகுமா?
♦ ♦ ♦ ♦ ♦