இஸ்லாமிய வரலாறு – 05 / முஃதசிலா சிந்தனைப் பள்ளி (பாகம் 2) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 05 / முஃதசிலா சிந்தனைப் பள்ளி (பாகம் 1)

♦ ♦ ♦ ♦ ♦

அறிஞர்கள்

கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் முஸ்லிம் பொதுப்புத்தியை ஆக்கிரமித்திருந்த காலத்தில் முஃதசிலாக்கள் அல்லது இஃதிசாலி சிந்தனைப் பள்ளியோடு பல அறிஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். இப்போது அத்தகைய அறிஞர்கள் சிலரின் பெயர்களை அறிந்து கொள்வோம். முதலில் இச்சிந்தனைப் பள்ளியை தோற்றுவித்த வாசில் இப்னு அதா. பஸ்ராவில் வாழ்ந்த இவர் மிக முக்கிய அறிஞராகக் கருதப்படுகிறார். இவருடைய பிரபலமான நூல்களில் ஒன்று ‘ஓராயிரம் கேள்விகள்’ (அல்ஃப் மஸ்அலா). அதில் அவர் பல கேள்விகளுக்கு —குறிப்பாக மானிய சமய கொள்கைகள் பற்றிய கேள்விகளுக்கு — தனக்கே உரிய விதத்தில் பதிலளித்திருப்பார்.

அடுத்து பக்தாதில் வாழ்ந்த அறிஞரும் மேதையுமான இப்ராஹீம் இப்னு சய்யார் அந் நஸ்ஸாம். இவர் தன்னைச் சுற்றி நிகழ்ந்த வாழ்வின் எதார்த்தங்களை பகுத்தறிவு ரீதியாக அணுகுவதற்கு ஏற்ப கோட்பாடுகளை உருவாக்கினார். மற்றொருவர் பிரபல எழுத்தாளரான அல் ஜாஹிஸ் என்று அழைக்கப்படும் அபு உஸ்மான் அம்ர் அல் ஜாஹிஸ். ஜாஹிஸ் என்றால் ‘துருத்திக் கொண்டிருக்கும் கண் உடையவர்’ என்று பொருள். அவருக்கு அத்தகைய கண்கள் இருந்ததால் அவர் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கக் கூடும். புலமை வாய்ந்த முஃதசிலா மேதைகளுள் மற்றொருவர் அபூ அல் ஹுதைல் அல் அல்லாஃப். எதிர் கருத்துக்களை முறியடிப்பதிலும் தன் கருத்தை முன்வைப்பதிலும் அவர் திறமையுடன் செயல்பட்டார் என்றும் அவரின் உரைகளைக் கேட்டு மட்டுமே (அவருடைய வாழ்நாளில்) 3000 பேர் முஸ்லிம்களாக மாறினர் என்றும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

குர்ஆன் ஹதீஸ்

இஸ்லாத்தை விளங்குவதற்கும் விளக்குவதற்கும் மெய்யியல் கண்ணோட்டத்தோடு செயல்பட்ட பகுத்தறிவுவாத முஸ்லிம்கள்தான் முஃதசிலாக்கள். இதை அவர்கள் இஸ்லாத்தை சிந்தனைமயப் படுத்தினார்கள் என்றும் சொல்லலாம். அவர்கள் குர்ஆனிய கருத்துகளின் அர்த்தங்களையும் அவற்றோடு தொடர்புள்ள மற்றவற்றையும் மிகக் கறாராக பகுத்தறிவின் அடிப்படையில் அணுகினர்.

கோட்பாட்டு அளவில் பார்த்தாலும் அவர்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை சிந்தனை மற்றும் பகுத்தறிவு ரீதியாகவே அணுகினர். எனினும் சந்தேகமின்றி அவர்கள் குர்ஆனையே அடிப்படையாகக் கொண்டனர். குர்ஆன்தான் அவர்களின் முதன்மை ஆதாரமாக இருந்தது. மேலும் குர்ஆனுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அந்த அளவு நபிமொழிகளுக்கு அளிக்கவில்லை என்றுதான் தெரிகிறது.

அதாவது அவர்கள் சில ஹதீஸ்களில் பிரச்சனை இருப்பதாகக் கருதினர். குர்ஆனை சிந்தித்து அதன் அடிப்படையில் பகுத்தறிவு அடிப்படையிலான ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருந்த முஃதசிலாக்கள், சில ஹதீஸ்கள் அதில் பொருந்தாததைக் கண்டனர். எனவே அவற்றை ஒதுக்கி வைத்தனர். பகுத்தறிவால் உந்தப்பட்ட சில முஸ்லிம்கள் இன்றும் கூட இந்த அணுகுமுறையை மேற்கொள்வதை பார்க்கிறோம். எனினும் இதன் பொருள் அவர்கள் நபிமொழிகளுக்கு எதிரானவர்கள் என்பதல்ல.

தயவுசெய்து இவர்களை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். அவர்கள் நபிமொழிகளை ஏற்றுக் கொண்டவர்களே. ஆனால் பிரச்சனை நபிமொழி இலக்கியத்திலேயே இருக்கிறது. சில நபிமொழிகள் அசலாகவும், உண்மையாகவும், நம்பகமான ஆதாரங்களிலிருந்தும் கிடைக்கப் பெற்றவை. இவையல்லாத வேறு சில நபிமொழிகளும் உள்ளன. அவை அசல்தன்மை குறைவான, உண்மையற்ற, நம்பத்தகாதவர்களிடமிருந்தும் சந்தேகத்துக்குரிய நபர்களிடமிருந்தும் பெறப்பட்டவை. இதன் காரணமாகவே அவர்கள் சில ஹதீஸ்களை கவனமாகக் அணுகினர்.

முஃதசிலாக்களின் எதிரணியினர்

நாம் ஏற்கனவே சொன்னது போல அவர்களில் ஏராளமானோர் எழுத்தாளர்களாகவும், அறிஞர்களாகவும், தத்துவ மேதைகளாகவும் இருந்தனர். வரலாற்றின் இந்தக் காலகட்டத்தில் நிலவிய இஸ்லாமிய அறிவுசார் கட்டமைப்பை பார்க்கும்பொழுது ஒரு பக்கம் முஃதசிலாக்களும் மறுபக்கம் சட்டவியல் அறிஞர்களும் நபிமொழி வல்லுநர்களும் இருப்பதைப் பார்க்கிறோம். இவர்களுள் முஃதசிலாக்களின் கை மேலோங்கி இருந்தது. அவர்கள் தம் கருத்துகளை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் கலைச்சொற்களையும் சிந்தனையையும் வளர்த்து வைத்திருந்தனர். இதன் காரணமாக பிற அறிஞர்களைவிட முஃதசிலாக்கள் தம் கருத்துகளை வெளிப்படையாகவும் ஆணித்தரமாகவும் முன்வைப்பவர்களாக இருந்தனர்.

முஸ்லிம் அல்லாதவர்கள், வெளிநாட்டவர்கள், முஸ்லிம்களாக தங்களை அழைத்துக் கொண்டவர்கள், இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் போன்றவர்களை கையாளும்போது அவர்களுக்கு நிகராக வாதிக்கும் திறமை தேவைப்பட்டது. அதை முஃதசிலாக்கள் சிறப்பாக வெளிப்படுத்தினர். அவர்களை எதிர்த்தவர்கள் கூட அவர்களின் பேச்சுத் திறமையை மெச்சினர்.

இவ்வாறாக முஃதசிலா அறிஞர்கள் அப்பகுதியில் வாழ்ந்த ஸொரொஸ்ட்ரிய  மற்றும் மானி சமயத்தவரை எதிர்கொண்டனர். மேலும் இஸ்லாத்துக்குள் இருந்த சிந்திக்க விரும்பாத, நேரடி அர்த்தங்களை மட்டுமே நம்பிய முஸ்லிம் வகையினரையும் அவர்கள் எதிர்கொண்டனர். இவர்களோடு சேர்த்து அங்கு எஞ்சியிருந்த கிறிஸ்துவ, யூத, பாரசீக, ஹிந்து மற்றும் கிரேக்க மெய்யியல் கோட்பாடுகளை மட்டுமின்றி இஸ்லாமிய சட்டவியல் அறிஞர்களையும் ஹதீஸ் துறை வல்லுநர்களையும், அறியாமையில் உழன்ற முஸ்லிம்களையும் —பிற சமயங்களிலிருந்து அவர்கள் கொண்டு வந்த கொள்கைகளையும்— முஃதசிலாக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவர்கள் அனைவரோடும் முஃதசிலாக்கள் ஒருவித சிந்தனைப் போர் நிகழ்த்தினர் என்று சொல்லலாம்.

மேலும் இன்றைய அஹ்லு சுன்னாஹ் வல் ஜமாஅத்துக்கு முன்னோடியாக இருந்த அல் அஷாயிரா மற்றும் அல் மாதுரீதிய்யா சிந்தனைகளையும் அவர்கள் எதிர்த்தனர். அஷாயிராக்கள் ஹன்பலி சிந்தனையால் கவரப்பட்டவர்கள். அதே போல மாதுரீதிய்யாக்கள் ஹனஃபி சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர்கள். அல் அஷாயிரி பஸ்ராவைச் சேர்ந்தவர். முஹம்மது இப்னு முஹம்மது அல் மஹ்மூத் அல் மாதுரீதி —இன்று மத்திய ஆசியா என்று அழைக்கப்படும்— சமர்கந்தைச் சேர்ந்தவர். முஃதசிலாக்கள் எந்த அளவுக்கு வாக்குவாதங்களில் ஈடுபட்டனர் என்பதை இது காட்டுகிறது.

இறைவனின் பண்புகள்

முஃதசிலாக்களை பிற முஸ்லிம்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிய மற்றொரு அம்சம் இறைவனின் பண்புகள் (சிஃபத்) பற்றி அவர்கள் கொண்டிருந்த கொள்கை. இதிலுள்ள தத்துவார்த்தக் கேள்வி (philosophical question) இதுதான்: ‘இறைவனின் சாராம்சத்திலிருந்து அவனுடைய பண்புகள் தனித்து நிற்கின்றனவா அல்லது அவை அவனது சாராம்சத்தின் அங்கமா?’

பிற முஸ்லிம்கள் ‘சிஃபத் மஆனி’ என்று அழைக்கும் இறைப் பண்புகளை முஃதசிலாக்கள் நிராகரித்தனர். உதாரணத்திற்கு, அல்லாஹ் சக்தியும் சித்தமும் உடையவன், கேட்கின்றவன், பார்க்கின்றவன், பேசுகின்றவன் என்று கூறுகிறோம் எனில் இப்பண்புகள் அவனிடமிருந்து தனித்து நிற்கின்றனவா அல்லது அவனோடு ஒன்றி இருக்கின்றனவா? நாளடைவில் இக்கேள்விகள் முஸ்லிம்களை பிளவுபடுத்தும் அளவுக்கு முற்றி நின்றன. அல்லாஹ்வின் இந்த விவரணங்கள் அனைத்தும் அவனது சாரத்தின் அங்கம் என முஃதசிலாக்கள் கூறினர்.

எனினும் நம்மைப் பொறுத்தவரை, இக்கேள்விக்கு எப்படி பதிலளித்தாலும், இது ஒரு கோட்பாட்டளவிலான பிரச்சனைதான் என்றும் முஸ்லிம்களை கிட்டத்தட்ட பிளவுபடுத்தும் அளவுக்கு இது பெரிய பிரச்சனை அல்ல என்று சொல்லும் அறிவு முதிர்ச்சி பெற்றுள்ளோம் என்றே நினைக்கிறேன். இந்தக் கேள்விகளில் ஒருசார்பு நிலை எடுப்பதற்கு நாம் யார்? சொல்லப்போனால், இந்தப் பிரச்சனைகளில் நான் கவனம் செலுத்துவதே இல்லை. நாம் மேலும் முன்னேறிச் செல்லும் முன் இதை தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம்.

அவர்கள் இதற்கு சான்றாக, அல்லாஹ் தன் தூதர் மூசாவோடு உரையாடிய நிகழ்வை கூறினர். குர்ஆன் ‘மூசாவோடு அல்லாஹ் உரையாடினான் (வ கல்லமல்லாஹு மூசா தக்லீமா)’ என்று கூறுகிறது. நிச்சயமாக நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அல்லாஹ் தன் வசனங்களை அருளியுள்ளான். நம்மைப் போல அன்றைய மக்களும் இவ்வசனங்களை புரிந்து கொள்ள முயற்சித்தனர். ஆக ‘மூசாவோடு அல்லாஹ் உரையாடினான்’ என்பதை எப்படி புரிந்து கொள்வது?

ஏற்கனவே சிந்தனைவயப்பட்ட முஃதசிலாக்கள், இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தனர். அவர்களின் விளக்கம் இவ்வாறு இருந்தது: ‘அல்லாஹ் தன் சொற்களை ஒரு புதரின் மீது வைத்தான். பின்னர் இயற்கையின் ஏதோ ஒருவகை இயங்கியல் மூலம் அச்சொற்கள் அந்தப் புதரிலிருந்த வெளிப்பட்டன. ஆனால் அல்லாஹ் நேரடியாக பேசவில்லை.’ இங்கு புதர் என்று சொல்லும் போது இது பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

குர்ஆன் படைக்கப்பட்டதா?

இதன் அடுத்த கட்டமாக ‘குர்ஆன் படைக்கப்பட்டதா இல்லையா’ என்ற கேள்வி எழுந்தது. அல்லாஹ்தான் சொற்களைப் படைத்து ஏதோ ஒரு வகையில் புதரில் வைத்து அதிலிருந்து அவை வெளிப்பட்டன என்பதால் குர்ஆனும் படைக்கப்பட்டதுதான் என்று முஃதசிலாக்கள் கூறினர். ஆரம்பத்தில் இக்கருத்து மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஒரு சில முஸ்லிம்கள் —குறிப்பாக சிந்தனைக்கு முக்கியத்துவம் அளித்த முஸ்லிம்கள்— இதை கவனித்தார்கள் என்றாலும் இக்கருத்து பிரபலமடையவில்லை.

ஹிஜ்ரி 212-ம் ஆண்டு அப்பாஸிய மன்னர் மஃமூன் முஃதசிலா கொள்கையை ஏற்றுக் கொண்டார். அதுவரைக்கும் ஆதரவற்று —அதனால் மக்களின் பரிவை சம்பாதித்து— இருந்த முஃதசிலா கொள்கை, அரசாங்கத்தின் உச்சபட்ச அதிகாரியே அதை ஏற்றுக்கொண்ட பிறகு, இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக மாறியது. அதன் பிறகு அப்பாஸிய அரசாங்கம் அறிஞர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து முஸ்லிம்கள் மத்தியிலும் பாகுபாடு காட்டத் துவங்கியது. அதிகாரப்பூர்வ கொள்கையான முஃதசிலா கொள்கையை ஏற்காதவர்களை பணி நீக்கம் செய்தது. அத்தகையவர்களின் சாட்சியங்கள் நீதிமன்றங்களில் செல்லுபடியாகாது என அறிவித்தது. இப்படியாக முஃதசிலா சிந்தனையை ஏற்காத முஸ்லிம்கள் மீது அதிகாரப்பூர்வமாகவே பாகுபாடு காட்டப்பட்டது.

இது இத்தோடு நிற்கவில்லை. முஃதசிலாக்களை கடுமையாக எதிர்த்தவர்கள் மிரட்டலுக்கு உள்ளாயினர். அவர்கள் கொலைகூட செய்யப்படலாம் என்ற அளவிற்கு இது சென்றது. இதற்கு மத்தியில் முஃதசிலாக்களின் முக்கிய எதிர்ப்பாளராக அஹ்மது இப்னு ஹன்பல் இருந்தார். சொல்லப்போனால் அன்று பல எதிர்ப்பாளர்கள் இருந்த போதிலும் இவர்தான் அல் இஃதிசால் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு எதிர்ப்பையும் மீறி பிழைத்திருந்தார்.

முஃதசிலாக்களை எதிர்ப்பதன் மூலம் இமாம் ஹன்பல் அரசாங்கத்தை எதிர்ப்பவர் ஆனார். இதன் காரணமாக 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானார். இரும்பு சீப்பால் தோல் கிழியும் அளவுக்கு சீவப்பட்டார். எனினும் தான் கொண்ட கொள்கையை அவர் கைவிடவில்லை. மக்கள் மீது திணிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கருத்தை எதிர்த்து நின்ற காரணத்தால் அவர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பின்னர் குற்றவாளிகள் நாடு கடத்தப்படுவது போல அவரும் ஒதுக்கி வைக்கப்பட்டார். தன் இறுதி காலங்களில் கூட்டுத் தொழுகைகளில் கூட கலந்து கொள்ளாமல் மக்களிடமிருந்து விலகியே இருந்தார். இந்நிலை அவர் இறக்கும் வரை நீடித்தது. முஃதசிலாக்களுக்கும் சட்டவியலாளர்கள் மற்றும் நபிமொழி வல்லுநர்களுக்கும் இடையே நிலவிய தீவிர வேறுபாடுகளை இது காட்டுகிறது.

‘குர்ஆன் படைக்கப்பட்டது அல்ல’ என்று அஹ்மது இப்னு ஹன்பல் தெள்ளத் தெளிவாகக் கூறினார். இது முஃதசிலாக்களின் கருத்துக்கு நேர் எதிரானது. ஆகவே இவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக நின்றனர். முஃதசிலாக்களின் கொள்கைப்படி குர்ஆன் படைக்கப்பட்டது; அது ஒரு நிகழ்வு. எனவே அது —அல்லாஹ்வைப் போலன்றி— தொடக்கமற்ற தொன்மையிலிருந்து (கதீம்) வந்ததல்ல. அல்லாஹ்வுக்கு தொடக்கம் இல்லை. ஆகவே குர்ஆனுக்கு தொடக்கம் இருக்கிறது என்பது முஃதசிலாக்களின் கொள்கை.

இவை தத்துவவாதிகள் மற்றும் கோட்பாட்டுவாதிகளுக்கு மத்தியில் மட்டுமே நிகழ்ந்த விவாதங்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பொதுமக்கள் மத்தியிலும் இவற்றின் தாக்கம் இருந்தது. ஒரு சராசரி முஸ்லிமும் கிறிஸ்துவரும் சந்தித்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த முஸ்லிமைப் பார்த்து “மர்யமின் குமாரர் ஈசாவைப் பற்றி உம் கருத்து என்ன?” என்று கிறிஸ்துவர் கேட்டால் அந்த முஸ்லிமின் பதில் என்னவாக இருக்கும்? ஈசாவைப் பற்றி அல்லாஹ் கூறியதை தன் பதிலாக அவர் சொல்லியிருப்பார். அதாவது

اِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ‌ ۚ اَ لْقٰٮهَاۤ اِلٰى مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ‌

“நிச்சயமாக மர்யமின் குமாரர் ஈசா மசீஹ் தூதராகவும் அல்லாஹ்வின் வாக்காகவும் இருந்தார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்” [4:171] என்ற வசனத்தின்படி பதிலளித்திருப்பார்.

இப்போது அஹ்மது இப்னு ஹன்பல் சொல்வது போல குர்ஆன் (அல்லாஹ்வின் வாக்கு) படைக்கப்பட்டது அல்ல என்று வைத்துக் கொண்டால் ஈசாவும் (அல்லாஹ்வின் வாக்கு) படைக்கப்பட்டவர் அல்ல என்றாகிவிடுகிறது. ஆக, ஹன்பல் தன்னை அறியாமலேயே கிறிஸ்துவர்களின் வாதத்துக்கு வலு சேர்ப்பவராகிவிடுகிறார். கிறிஸ்துவர்களின் வாதங்களை நன்கு அறிந்திருந்த முஃதசிலாக்கள், அவர்கள் குழப்பம் ஏற்படுத்தாமல் தடுக்கும் பொருட்டு, குர்ஆன் படைக்கப்பட்டது என்றனர். இதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தை தற்காத்தனர். அஹ்மது இப்னு ஹன்பலும் தன் பாணியில் இஸ்லாத்தை தற்காத்தார்.

ஆக முஃதசிலாக்களை அசல் மெய்யியல் (philosophical) முஸ்லிம்கள் என்று சொல்லலாம். சில அறிஞர்கள் சொல்வது போல அவர்கள் வரம்பு மீறியவர்கள் அல்ல. அவர்கள் எல்லை மீறிச் செல்லவில்லை. அன்றைய சூழல், அன்று எழுந்த கேள்விகள், சந்தேகங்கள், நிலவிய சூழ்ச்சிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிந்தித்து செயல்பட்ட முஸ்லிம்கள்தான் முஃதசிலாக்கள். இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் தமக்கே உரிய பாணியில் அவர்கள் சேவை செய்தனர்.

எனினும் எப்போது அவர்கள் அரசாங்கத்தோடு கைகோர்த்தார்களோ அப்போது பிரச்சனை துவங்கியது. அதுதான் கிட்டத்தட்ட அவர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. எப்போது அவர்கள் அப்பாஸிய அரசாங்கத்தோடு கைகோர்த்தார்களோ அன்றிலிருந்து காற்று அவர்களுக்கு எதிராக வீசத் துவங்கியது. எல்லா அறிவுஜீவிகள் விஷயத்திலும் நீங்கள் இதை பார்க்க முடியும். சில நேரங்களில் அவர்களும் தவறிழைத்து விடுகின்றனர். நாம் எல்லோரும் மனிதர்கள்தானே! மனிதர்கள் அனைவரும் தவறிழைப்பவர்கள்தானே!

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 05 / முஃதசிலா சிந்தனைப் பள்ளி (பாகம் 3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *