எனது ஹஜ் (4) – சையது முஹம்மது

Posted on

எனது ஹஜ் (3)

♣ ♣ ♣ ♣ ♣

குர்பான் கொடுப்பதற்கு நாங்கள் ஹஜ் கமிட்டியிலேயே பணம் கட்டி விட்டோம். எங்கள் சார்பாக முஅல்லிமின் ஆட்கள் பத்தாம் நாள் அஸருக்குள் கொடுத்து விடுவார்கள் என்று கூறியிருந்தார்கள். அதற்காக ஒரு ஆப்பையும் (app) தந்திருந்தார்கள். அஸர் நேரம் வந்தவுடன் அந்த ஆப்பில் குர்பானி கொடுத்ததாக பதிவாகி இருந்தது. அதைப் பார்த்தபின் ஹாஜிகள் மொட்டை அடிக்க ஆரம்பித்தார்கள்.

கழிவறைக்கு பக்கத்தில் இருக்கும் இடத்தில் இருந்து அடிக்க ஆரம்பித்தார்கள். சிலர் கூடாரத்திற்கு இடையிலுள்ள நடைபாதையில் நின்று ஒருவருக்கொருவர் மொட்டை அடித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். அங்கு பார்பர்கள் யாரும் இல்லை. கூடாரங்களில் இருந்து சாலைக்கு செல்லும் பின் கதவை பூட்டி இருந்தார்கள். பின் கதவு, முன் கதவு என்றெல்லாம் இல்லை. இரு பக்கமும் சாலைகள். நடுவில் குறுக்கு வாட்டில் கூடாரங்கள். புரிதலுக்காக பின் கதவு என்றுக் கூறுகிறேன். அது திறந்திருந்தால் அந்த விசாலமாக சாலையில் நின்று அதை செய்திருக்கக் கூடும். நெருக்கடி குறைவாக இருந்திருக்கும்.

ஆண் ஹாஜிகள் அனைவரும் மொட்டை அடித்து இஹ்ராமில் இருந்து வெளியே வர வேண்டும். ‘என்ன இப்படி செய்கிறீர்கள் ‘ என்று யாரும் யாரிடமும் கேட்க இயலவில்லை. நான் காலையில் கிளம்பும்போதே எங்களுடைய கூடாரத்தில் உள்ள ஏர்கூலரில் இருந்து தண்ணீர் கொட்ட ஆரம்பித்து நடைபாதையில் ஓடிகொண்டிருந்தது. இப்போது பல கூடாரங்களில் ஏர்கூலர் பழுதாகி அவற்றிலிருந்தும் தண்ணீர் கொட்ட ஆரம்பித்து ‘நசநச ‘ என்று ஆகி விட்டது.

இதில் அங்கேயே மொட்டை அடித்து முடியை அங்கே இருந்த குப்பைக் கூடையில் போட்டார்கள். அந்த வழிகளில்தான் பெண்களும் போய், வந்து கொண்டும் இருந்தார்கள். யாரும் யாரையும் கேட்பதற்கு இல்லை. மொட்டை அடித்தால் தான் இஹ்ராம் களைந்து வழக்கமாக அணியும் உடைகளை அணிய முடியும். எல்லோரும் நெருக்கடியில் இருந்தார்கள். துல் ஹஜ் பத்தாம் நாள் (28.06.23) ஹஜ்ஜின் மூன்றாம் நாள் கிரியைகள் இவ்வாறு நிறைவுற்றன.

துல்ஹஜ் பதினோராம் நாள் (29.06.23) இரண்டு கிரியைகள் செய்ய வேண்டும். தவாபே ஜியாரா செய்வது. அதாவது கஅபாவை வலம் வருவது (தவாஃப்), சயீ செய்வது. இதற்கான நேரம் துல்ஹஜ் 10 பஜ்ரிலிருந்து 12 ஆம் நாள் மக்ரிப் வரை ஆகும். நேற்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று செய்யக் கருதினோம். மற்றொன்று, மூன்று ஷைத்தான்களுக்கு கல் எறிவது. இவற்றில் எதை முதலில் செய்வது? சூரிய உச்சிக்கு பிறகு ஷைதானுக்கு கல் எறிவதுதான் சிறப்பு. ஆகவே முதலில் தவாஃபே ஜியாரா செய்துவிடுங்கள் என்று கூறினார்கள்.

அஸீஸியாவில் ஒரே அறையில் இருந்த நாங்கள் ஐந்து பேர் ஒன்றாக கிளம்பினோம். கூடாரத்தை விட்டு வெளியே வந்து அங்கிருந்த வாலன்டியரிடம் “கஅபாவுக்கு எப்படி செல்வது?” என்றால், அவர் “இப்படிச் செல்லுங்கள்” என்று கைக் காட்டினார். “ஜம்ராவுக்கு எப்படி செல்வது?” என்றால், அதற்கும் அதே திசையில் கை காட்டினார். ஹாஜிகள் அனைவரும் அப்படித்தான் சென்றுக் கொண்டிருந்தார்கள்.

நாம் முதலில் கஅபா சென்று தவாஃபே ஜியாராவை முடித்து விட்டு சூரிய உச்சம் வந்த பிறகு கல் எறியலாம் எனக் கருதி நாங்கள் கஅபாவை நோக்கி நடந்தோம். எங்களுடன் வந்த அப்துல் மாலில் என்ற ஹாஜி முதலில் கல் எறிந்து விட்டு தவாஃபே ஜியாரா செய்யலாம் என்றார்.

எங்களுடன் வந்த ரஹ்மத்துல்லாஹ் என்ற ஹாஜி சற்று தடிமனான உடலைக் கொண்டவர். அவர் நடக்க சிரமப்பட்டார். அவர் ஒரு சிறிய ஸ்டூல் வைத்திருந்தார், ஒரு சிறிய குடை வைத்திருந்தார். அவரால் முடியாதபோது அந்த ஸ்டூலைப் போட்டு அங்கேயே உட்கார்ந்துக் கொண்டார். அந்த சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே டாக்ஸியெல்லாம் இல்லை. எல்லோரும் நடந்து தான் செல்ல வேண்டும். வீல் சேர் வைத்திருந்த சிலர் அதில் ஒரு ஹாஜியை வைத்து தள்ளிக் கொண்டு சென்றார்கள்.

காலை 11 மணி இருக்கும். மண்டையைப் பிளக்கும் வெயில். சற்று ஒதுங்கி நிற்கவும் நிழலில்லை. வழியெங்கும் அரசு படையினர் நிற்கக் கூட அனுமதிக்காமல் விரட்டிக் கொண்டே இருந்தனர். கூட்டத்தில் நான், அப்துல் அலீம், முஹம்மது யூசுஃப் மூவரும் முன்னால் செல்ல, அப்துல் மாலிக், ரஹ்மத்துல்லாஹ் இருவரும் சற்று பின்னால் நின்று நின்று வந்தார்கள். நாங்கள் அவர்களுக்காக நிற்க முடியவில்லை. அங்கு சீருடையில் நின்றிருந்த அரசு படை இளைஞர்கள் ‘எல்லா, எல்லா என்று விரட்டிக் கொண்டே இருந்தார்கள். சிறியவர்கள், பெரியவர்கள், வயதானவர்கள், பெண்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை. யாரையும் அவர்கள் நிற்க அனுமதிக்கவில்லை. எதிர்திசையிலும் யாரையும் வர அனுமதிக்கவில்லை. அது நடப்பதற்கான ‘ஒன் வே’. வேகமாக அல்லது மெதுவாக நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

♣ ♣ ♣

தவாபே ஜியாரா செய்ய கஅபா செல்ல நடக்கத் தொடங்கிய நாங்கள் ஷைதானுக்கு கல் எறியும் இடத்திற்கு வந்திருந்தோம். அந்தக் கட்டிடத்தைக் கடந்துதான் கஅபா செல்ல வேண்டும் என்பது அப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது. வேறு வழியாகவும் கஅபா செல்ல முடியும். எனினும் நாங்கள் இவ்வாறுதான் வழி நடத்தப் பட்டிருந்தோம்.

எங்களுடன் வந்த மற்ற இருவருக்காக சற்று காத்திருக்க முடியவில்லை. அரசுபடையினர் போகும்படி சொல்லும்போது உடனே நகர்ந்து செல்ல வேண்டும். இல்லையென்றால் மேலே கை வைத்துத் தள்ளுகிறார்கள். கூட்டம் குறைவாக இருந்தாலும் அங்கு உட்கார அனுமதிக்கவில்லை. வயதானவர்கள், பெண்கள் பரிதாபமான நிலையில் இருந்தாலும் கூட நடந்து போய்க் கொண்டே இருக்க சொன்னார்கள். பின்பு நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தவர்களாக மூன்று ஷைதான்களுக்கும் கல் எறிந்தோம்; கட்டிடத்தை விட்டு வெளியே வந்தோம்.

அங்கு இரண்டு பாதைகள் இருந்தன. ஒன்று, மிக அகலமானது. ‘பஸ் ஸ்டேஷன்’ என்று போட்டிருந்தது. மற்றொன்று; ‘ஹரம் செல்லும் வழி’ என்று போட்டிருந்தது. நாங்கள் உறுதிப்படுத்துவதற்கு அங்கிருந்த அரசுபடையினரிடம் ‘ஹரமுக்கு எப்படி செல்வது’ என்று கேட்டோம். அவர்கள் இடது கை பக்கமாக உள்ள வழியில் செல்லக் கை காட்டினார்கள். ஆனால் பஸ் ஸ்டேஷனில் இருந்து கஅபாவுக்கு இலவச அரசு பேருந்து உள்ளது என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டால், யாரும் ஒழுங்காக பதில் சொல்லவில்லை. கை நீட்டுகிறார்கள். அவ்வளவு தான். அவர்கள் ‘இதற்கு மேல் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்பது போல’ அவர்கள் நடந்து கொண்டார்கள். எங்களில் ஒருவரான அப்துல் அலீம் உர்தூவில் தான் கேட்டார்.

நாங்கள் இடதுபுற வழியிலே நடந்து சென்றோம். இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றோம். நாங்கள் ஒரு மணி நேரம் மற்ற இருவருக்காகவும் காத்திருந்தோம். அவர்கள் வரவில்லை. கல்லெறிந்ததும் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று பின்னர் தெரிந்தது. அவர்களில் ஒருவரான அப்துல் மாலிக் நேராக பஸ் ஸ்டேஷன் சென்று இலவச அரசுப் பேருந்தில் கஅபா சென்றிருந்தார். பஸ்ஸில் அப்போது டிக்கெட் எதுவும் வாங்குவதில்லை என்ற போதிலும் மொத்தமாக ஒரு தொகையை முன்பே பெற்றுக் கொள்கிறார்கள்.

நாங்கள் ஒரு டாக்ஸி டிரைவரிடம் என்று கேட்டபோது மூவருக்கும் “தலா 50 ரியால்கள்” என்றார். கேட்ட தொகைக்கு ஒப்புக்கொண்ட பின்பும் இன்னும் இரண்டு பேர் வந்தால் நாம் போகலாம் என்று இரன்று பேரைத் தேடத் தொடங்கினார். யாரும் வரவில்லை. அந்த வழியில் வந்தவர்கள் டாக்ஸியில்தான் சென்றார்கள். பின் அவர் ‘மூன்று பேருக்கும் சேர்த்து 200 ரியால்கள் கொடுங்கள், உங்கள் மூவரை மட்டும் கொண்டு போய் விட்டு விடுகிறேன்’ என்றார். நாங்கள் அதை ஏற்கவில்லை.

பின்பு அந்த சுமாரான டாக்ஸியிலே கிளம்பும்போதே சொன்னார்; “வழியில் எங்காவது சாலையை ப்ளாக் செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல” ஆனால் 150 ரியால் கொடுத்துவிட வேண்டும்”. அதற்கும் சம்மதித்து நாங்கள் அந்த டாக்ஸியிலே ஏறினோம். பின்பு அவர் ஹரமுக்கு அருகிலேயே கொண்டு போய் இறக்கி விட்டார்.

மற்ற நாட்களில் தலா ஐந்து ரியால் என்று இருபது ரியால் பெற்றுக் கொண்டு இறக்கி விடுவார்கள். ஹஜ்ஜுடைய காலம் என்பதால் 20 ரியாலுக்கு பதிலாக 150 ரியால் வாங்கி ஹாஜிகளுக்கு சேவை(?) செய்கிறார்கள்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ‘ஜம்ரா’விலிருந்து ‘கஅபா’விற்கு இலவச பஸ்கள் இருக்கிறது என்ற எந்த அறிவிப்பும் இல்லை. யாரும் சொல்லவுமில்லை.

பின்பு ஹஜ்ஜின் பர்ளுகளில் ஒன்றான ‘தவாஃபே ஜியாரா’ செய்தோம். அதாவது கஅபாவை ஏழு முறை வலம் வருவது, இரண்டு ரக்அத் நபில் தொழுவது, பின்பு சஃபா மர்வாவுக்கு இடையிலே நடந்து செல்வது இவை மூன்று மணிக்கு முடிவுற்றன. ஏற்கனவே ஹஜ்ஜுக்கான முடி சிரைத்து விட்டதால் இப்போது அதற்கு அவசியமில்லை.

அஸர் தொழுகைக்கான ஒளு செய்ய சென்ற போது மற்ற இருவரை விட்டு நான் பிரிந்து விட்டேன். நான்கு மணிக்கு அஸர் தொழுகை முடிந்தது. இப்போது நான் கஅபாவிலிருந்து மினாவுக்கு திரும்ப வேண்டும். வெளியில் வந்து ஏதேனும் டாக்ஸி கிடைத்தால் யாருடனாவது சேர்ந்து போய்விடலாம் என்று காத்திருந்தேன். அங்கு சென்ற டாக்ஸிகள் அனைத்தும் ஜம்ராவுக்கு தான் சென்றன. ஒருவேளை வேறுபக்கம் செல்ல வேண்டுமோ என்று கருதி மற்றவர்களிடம் கேட்டேன். யாரிடமும் தெளிவான பதில் இல்லை. ஆனால் விஷயம் என்னவென்றால், மினாவுக்கு செல்லும் வழியை ப்ளாக் செய்திருந்தார்கள். இப்படி கேட்டுக் கொண்டே இரண்டு கிலோமீட்டர் என்று நடந்து சென்றேன்.

பின்பு ஒரு டாக்ஸி வந்தது. ஒரு அரபி இளைஞர் ஓட்டி வந்தார். இந்தியாவை சேர்ந்த ஐந்து பேர் என்னுடன் மினா கேம்பிற்கு செல்வதற்காக நின்றிருந்தார்கள். மினா என்றவுடன் அவர் ஏற்றிக்கொள்ள சம்மதித்தார். 30 ரியால் அவர் கேட்டார். வழியில் எங்காவது ப்ளாக் செய்திருந்தால் பயணம் அத்துடன் முடிந்துவிடும். நீங்கள் இறங்கிக் கொள்ள வேண்டியது தான் என்று கூறினார். அதற்கு சம்மதித்து நாங்கள் ஏறினோம்.

ஒரு சில கிலோமீட்டர்கள் சென்றவுடன் ரோட்டை ப்ளாக் செய்து இருந்தார்கள். அவர் திரும்பவும் சுற்றிக் கொண்டு வேறு ரோட்டிலே சென்றார். ஒரு கிலோமீட்டர் சென்று மற்றொரு ரோட்டிலே செல்ல முயற்சித்தார். அந்த ரோட்டிலும் ப்ளாக் செய்து இருந்தார்கள். பின்பு மூன்றாவது ரோட்டிலே சென்றார். இதற்கு மேல் அவருக்கு செல்வதற்கு வழி இல்லை. எதிரிலே ஏராளமான வாகனங்கள் நின்றுக் கொண்டிருந்தன. ஆகவே “இறங்கி நடந்து செல்லுங்கள்” என்று சொல்லிவிட்டார். அது டாக்ஸி அல்ல. கார். அந்த வழியாக போகக்கூடிய ஒருவர் எங்களை ஏற்றி 7 கி.மீ தூரம் சென்று இறக்கி விட்டு 180 ரியால் சம்பாதித்துக் கொண்டார். அங்கு பெட்ரோல் விலை 1 லிட்டர் 2 ரியால்தான்.

♣ ♣ ♣

ஒரு சிக்னலில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த சாலையை நான் கவனித்தேன். அதற்கு அருகில் இருந்த சாலை முற்றிலும் காலியாக இருந்தது. அதற்கு அதற்கு எதிரில், பக்கவாட்டில், வலது, இடது என இரண்டு ரோடுகள் இருந்தன. அவை அனைத்தும் ஒரு வாகனம்கூட இல்லாமல் காலியாக இருந்தன. நாங்கள் செல்லும் சாலையை மட்டும் மறித்திருந்தார்கள். நம் நாட்டில் விபத்து, மழை போன்ற காரணங்களினால் டிராஃபிக் ஜாம் ஏற்பட்டால் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். அவற்றை போலிஸ்காரர்கள் ஒழுங்கு செய்துக் கொண்டிருப்பார்கள். ஒரு வழியில் தடை ஏற்பட்டால் வேறு பாதையிலே திருப்பி விடுவார்கள். இங்கு அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. அரசுபடையினர்தான் ப்ளாக் செய்திருந்தார்கள். “மினாவுக்கு செல்லும் வாகனங்களை நிறுத்தி விடுங்கள்” என எங்கிருந்தோ உத்தரவை அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

பின்பு அந்த சிக்னலை கடந்து நடக்க ஆரம்பித்தேன். என்னுடன் இன்னும் ஏராளமான மக்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள். சிக்னலைத் தாண்டி கொஞ்ச சென்றதும் அங்கே ஒரு காய்ந்த புல்வெளி. அங்கு மரங்கள் இருந்தன. அந்த இடம் கொஞ்சம் அமைதியை தருவதாக இருந்தது. ஆகவே அந்த புல்வெளியிலே பலர் அமர்ந்திருந்தார்கள். ஆகவே அங்கே நானும் அமர்ந்தேன். அப்போது மாலை ஆறு மணி இருக்கும். அந்த இடத்திலே இரண்டு குகைப் பாதைகள் இருந்தன. ஒன்று, மினாவுக்கு செல்லக்கூடியது. மற்றொன்று ஜம்ராவுக்கு செல்லக்கூடியது.

ஜம்ராவுக்கு செல்லக்கூடிய பாதையில் சில பேருந்துகள் சென்றன; வந்தன. அவை தனியார் ஹஜ் நிறுவனங்கள் ஏற்பாடு செய்தவையாக இருக்கலாம். மினாவுக்கு செல்லக்கூடியதில் வாகனங்கள் எதையும் அனுமதிக்கவில்லை. எந்த வாகனமும் டாக்ஸி உட்பட எதுவும் இல்லை. ஆகவே ஏராளமான மக்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள். ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என்று எல்லோரும் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு மணி நேரம் அங்கு அமர்ந்திருந்தேன். அந்த மண்ணிலேயே தயம்மும் செய்து மக்ரிப் தொழுதுவிட்டு அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படி ஒன்றும் மக்கள் பெரும் அலையாக செல்லவில்லை. பரவலாக தான் மக்கள் சென்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது வாகனங்கள் மெதுவாக அந்த வழியில் சென்றால் விபத்தெல்லாம் ஒன்றும் ஏற்பட்டு விடாது. இருந்தாலும் வாகனங்களை எல்லாம் தடுத்து வைத்திருந்தார்கள்.

பின் இஷாவையும் அங்கேயே தொழுதேன். என்னைப் போல வேறு சிலரும் தொழுதார்கள். அந்த இடம் எனக்கு அமைதியை தந்தது. கடந்த நான்கு நாட்களாக நான் மிகவும் சிரமப்பட்டுவிட்டேன். அன்றிரவு அங்கேயே தங்கிவிடலாம் என்று நினைத்தேன். எனக்கு சாப்பிடுவதற்கு அப்போது எதுவும் இல்லை. சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. கழிவறைக்கு செல்ல வேண்டும் என்ற உந்துதலே எனக்கு ஏற்படவில்லை. நான் சரியாக தூங்கி நான்கு நாட்கள் ஆகின்றன. எனினும் எனக்கு தூக்கம் வரவில்லை. மினாவில் அந்த கூடார நெருக்கடிக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்பதே எனக்கு கலவரத்தை ஏற்படுத்தியது. இங்கேயே காலை வரை இருந்து விடலாம் என எண்ணினேன். ஒரு விஷயம் என் நினைவுக்கு வந்தது. மினாவில் இரவின் மூன்றில் ஒரு பாகம் தங்க வேண்டும் என்று ஹஜ்ஜின் ஒழுங்கு குறித்து பேசியவர்கள் கூறியிருந்தார்கள்.

அந்த இடத்தில் இரண்டு குகைகள் இருந்தன. வலது பக்க குகை வழியே மினா கூடாரங்கள் செல்வதற்கானது. இடது பக்க குகை வழியே ஜம்ரா செல்வதற்கானது. எனவே ஒன்பது மணிக்கு மினாவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

♣ ♣ ♣

அது 700 மீட்டர் நீளமுள்ள குகை. அந்த குகை முடியும் இடத்தில் ஒரு மேம்பாலம் தொடங்கி எங்கோ நீண்டு செல்கிறது. ஏராளமானவர்கள் நடந்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றரைக் கிலோமீட்டர் நடந்திருப்பேன். மினா கூடாரங்கள் தென்பட்டன. இப்போது நேராக சென்று அந்த பாலத்தின் இடது பக்கவாட்டில் இறங்க வேண்டும். நான் தூரத்திலேயே கவனித்து விட்டேன். பக்கவாட்டில் இறங்க வேண்டிய இடத்தில் ஹாஜிகள் கூட்டமாக அமர்ந்தும் நின்று கொண்டும் இருந்தார்கள். அரசுபடையினர் அந்த பாதையை மறித்துக் கொண்டு “சாலை மூடப்பட்டுவிட்டது. நீங்கள் நேராக செல்லுங்கள்” என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

இதுவரை மக்கள் தாங்கள் எங்கு அனுப்பப்படுகிறோம் என்று தெரியாமல் நடந்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களுடைய கண்களுக்கு எதிரே அவர்களுடைய கூடாரங்கள் தெரிகின்றன. கண்களுக்கு எதிரே என்றாலும் இறங்கி நடந்து சென்றால் எப்படியும் ஒன்றரை கிலோ மீட்டராவது இருக்கும். ஆனால் இப்போது சுற்றி செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். ஆகவே ஹாஜிகள் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். கடுமையான வாக்குவாதம் நடந்துக் கொண்டிருந்தது. தர்ணா செய்வது போல அங்கேயே அமர்ந்து கொண்டார்கள்.

நானும் அங்கு பிளாட்பாரத்தில் அமர்ந்தேன். இப்போது நான் மினாவின் எல்லைக்குள் வந்துவிட்டேன். ஆகவே அங்கேயே இரவு முழுவதும் இருக்கலாம். நான் சற்று முன்பு இருந்த புல்வெளியில் மரங்கள் இருந்தன. வெயில் நேரடியாக தரையில் படாததால் அங்கு சூடு இல்லை. பிளாட்பாரத்தில் வெயில் நேரடியாக தரையில் படும். எனவே சூடு இருக்கும். அங்கு வெகுநேரம் அமர்ந்திருப்பதோ, படுத்திருப்பதோ நல்லதல்ல. மேலும் என்னிடம் தண்ணீர் தீர்ந்துவிட்டது. அப்போது அங்கு இருந்த மக்கள் யாரிடமும் தண்ணீர் இல்லை. நேரம் ஆகஆக மக்கள் நூற்றுக்கணக்கிலே குவியத் துவங்கிவிட்டார்கள். ஆனால் அவர்கள் எல்லோரையும் மறித்துக் கொண்டு ‘எல்லா, எல்லா’ என்று விரட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஹாஜிகள் அங்கிருந்து நகரவில்லை.

எனக்குப் பக்கத்தில் ஏராளமானவர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர் “யா அல்லாஹ்! இவர்களை நாசமாக்குவாயாக! நம்பிக்கை இல்லாதவர்கள்கூட இப்படி செய்ய மாட்டார்கள். இன்று நான் 30 கிலோ மீட்டர் நடந்திருக்கிறேன். யா அல்லாஹ் இவர்களை அழித்து விடு! என்று தமிழில் சபித்துக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்தேன். 60 வயது மதிக்கத்தக்கவர். வசதியானவர் போல இருந்தார். அவரிடம் “தமிழ்நாடா” என்றேன். “சிறிலங்கா” என்றார்.

நான் தூரத்தில் பார்த்தேன். குகையிலிருந்து வெளியே வரும் இடத்திலேயே மறித்திருந்தார்கள். அங்கும் ஒரு பெரும் கூட்டம் நின்றது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் இப்படி சென்றது. இப்போது அந்த அரசுபடையினர் நிற்பவர்களை தள்ள ஆரம்பித்தார்கள். உட்கார்ந்திருப்பவர்களை வலுக்கட்டாயமாக தூக்க ஆரம்பித்தனர். இப்படி ஒரு பெண் ஹாஜியை அவர்கள் தூக்க முயற்சித்தபோது உடன் வந்தவர் “டோன்ட் டச்” என்று கத்தினார். அங்கு கைகலப்பு ஏற்படும் நிலை ஆகிவிட்டது. பெரும் பதட்டம் நிலவியது.

இதற்கு முன்பு அவர்களை சுற்றிக் கொண்டு போக சொன்னால் அந்த விவரம் தெரியாமல் அவர்கள் சுற்றிக் கொண்டு சென்றார்கள். இப்போது கண்களுக்கு முன்னால் அவர்களுடைய கூடாரங்கள் இருக்கின்றன. இப்போது சுற்றிக்கொண்டு போகச் சொன்னால் எப்படி போவார்கள்? அந்த பாலத்தின் எதிர்புறத்தில் இருந்து யாரும் வரவில்லை. அந்த பாலமே காலியாக கிடந்தது. ஆனாலும் சுற்றிக்கொண்டு போகச் சொன்னார்கள். அது எவ்வளவு தொலைவு இருக்கும் என்பது அங்கிருந்த ஹாஜிகள் யாருக்கும் தெரியாது.

கள நிலவரம் தெரியாமல் எங்கிருந்தோ வரும் உத்தரவுகளை அவர்கள் இப்படி கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள். ஹாஜிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்; ஒத்துழைக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் அரசுபடையினர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஹாஜிகளிடம் அவர்கள் எதிர்பார்ப்பது ‘கட்டுப்படு’ அவ்வளவுதான். நிற்கச் சொன்னால் ஹாஜிகள் மணிக் கணக்கில் நிற்க வேண்டும். போகச் சொன்னால் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

இப்போது இன்னும் ஏராளமான சீருடை அணிந்த இளைஞர்கள் வந்து குவியத் தொடங்கினார்கள். இப்போது அவர்களுக்கும் ஹாஜிகளுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஹாஜிகளில் பலர் கை தட்டினார்கள். ஓ என்று கத்தினார்கள். ஹாஜிகள் இப்படி செய்வதெல்லாம் ஒரு ஆச்சரியமான விஷயம். ஆனால் அவர்கள் தங்களுடைய எதிர்ப்பை காண்பிப்பதற்காக அப்படி செய்தார்கள். மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு பெண் ஹாஜி தன்னுடைய கையில் இருந்த ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டிலால் அரசு படையினரில் ஒருவனை அடித்தார். பின்பு ஓங்கி எறிந்தார். அது ஒருவன் தலையில் பட்டு விழுந்தது.

♣ ♣ ♣

அரசுப்படை இளைஞர்களை கொண்ட 10 வாகனங்கள் மெதுவாக எங்களைக் கடந்து சென்றன. நீண்ட போராட்டத்திற்கு பின் 12 மணிக்கு எங்களைப் போக அனுமதித்தார்கள். ஹாஜிகள் மகிழ்ச்சியுடன் அந்த பாலத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். அந்த பாலத்தின் எதிரில் யாரும் வரவில்லை. காலியாக கிடந்தது. கள நிலவரம் அறியாமல் எங்கிருந்தோ உத்தரவிடுகிறார்கள். அந்த பக்கவாட்டில் இறங்கி ஒன்றரை கிலோமீட்டர் நடந்து சென்றேன். அங்கு சில கடைகள் இருந்தன. ஒரு உணவகமும் இருந்தது. அப்போது அடைத்துக் கொண்டு இருந்தார்கள். டீ மட்டும் அப்போது அங்கு கிடைத்தது. அன்று முழுவதும் கையில் வைத்திருந்த பிஸ்கட்களை தவிர வேறெதுவும் நான் சாப்பிடவில்லை. பாட்டில் பாட்டிலாக தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டிருந்தேன். அதில் எங்கோ கவனக்குறைவாக குளிர்ந்த நீரை குடித்திருக்கிறேன்.

வெயிலில் அலைந்து குளிர்ந்த நீரை குடித்ததால் தொண்டை கட்டியிருந்தது. அத்துடன் கடுமையான இருமலும் ஏற்பட்டிருந்தது. டீ குடிக்கலாம் என்று அந்த கடைக்கு சென்றேன். அது ஒரு பாகிஸ்தானி கடை போல் இருந்தது. அந்த சாலையே பாகிஸ்தான் கூடாரங்கள் உள்ளதுதான். அங்கிருந்து குறுக்கு செல்லும் சாலையிலே சென்றால் அடுத்த சாலையிலே இந்திய ஹாஜிகளுக்கான கூடாரங்கள் இருக்கின்றன.

பால் டீ “மூன்று ரியால்” என்றான். தர சொல்லிவிட்டு நின்றேன். பல பேர் வந்து சத்தமாக உர்தூவில் கேட்க அவர்களுக்கு போட்டு கொடுத்துக்கொண்டு இருந்தான். சில நிமிடங்கள் நின்றேன். பின் நடந்து இந்திய ஹாஜிகளுக்கான கூடாரங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தேன். அங்கும் ஒரு டீ கடை இருந்தது. அங்கு சென்று டீ கேட்டேன். அங்கிருந்தவன் புதிதாக வேலைக்கு வந்தவன் போலிருக்கிறது. தடுமாறிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு KMCC என்ற போட்ட ஒரு வாலன்டியர் நின்றுக்கொண்டிருந்தார். அவர் என்னிடம் ‘தமிழா’ என்றார். ‘ஆமாம். அவனிடம் உர்தூவில் சொல்லி எனக்கு ஒரு டீ கொடுக்க சொல்லுங்கள்’ என்றேன்.

அந்த வாலன்டியர் தனக்கு ஒரு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் வாங்கினார். அவர் என்னிடம் “உங்களுக்கு நூடுல்ஸ் வேண்டுமா” என்று கேட்டார். “டீ மட்டும் தான்” என்றேன். என்னுடைய டீக்கு நான் பணம் கொடுத்தபோது “வேண்டாம் நானே கொடுக்கிறேன்” என்று கூறிவிட்டு கொடுத்தார். பின்பு டீயை வாங்கிக்கொண்டு இறங்கியபோது அருகிலிருந்தவர் மீது தட்டி அந்த டீ முழுவதும் கீழே கொட்டி விட்டது.

அடுத்து ஒரு டீ போடச் சொன்னார். அதற்கு சில நிமிடங்கள் ஆனது. அந்த வாலண்டியர் தனக்கு வாங்கிய நூடுல்ஸை என்னிடம் கொடுத்து “கொஞ்சம் சாப்பிடுங்கள்” என்றார். அவர் சொன்னதற்காக நான் ஒரு கரண்டி எடுத்தேன். அவர் ‘உங்களால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு சாப்பிடுங்கள்’ என்றார். எனவே மேலும் இரண்டு கரண்டி எடுத்து சாப்பிட்டேன். அவர் ‘நீங்கள் முழுமையாகவே சாப்பிட்டு விடுங்கள்’ என்று சொல்லிவிட்டு. தனக்கு வேறொரு நூடுல்ஸை அவர் ஆர்டர் செய்தார்.

பின்பு ஒரு டீயை வாங்கி என்னுடைய கையில் கொடுத்தார். இவை எதற்குமே அவர் என்னிடம் பணம் வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார். அவருக்கு ஒரு நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு எனக்கு அருகில் வந்து அமர்ந்தார்.

அவர் கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்தவர். அது கேரளா எல்லையில் இருக்கிறது. KMCC என்ற கேரள ஸமஸ்தா’ அமைப்பு வாலண்டியர். “நாங்கள் இங்கு வேலைப் பார்க்கிறோம். சில தினங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு இவ்விதம் பணியாற்றுகிறோம்” என்று சொன்னார்.

அந்த நான்கு நாட்களில் என்னிடம் கொடுக்கப்பட்ட உணவில் நான் முழுமையாக சாப்பிட்டது அந்த நூடுல்ஸ் மட்டும் தான். பின்பு அந்த டீயைக் குடித்துவிட்டு, நீண்ட நேரம் அந்த டீக்கடை அருகிலேயே உட்கார்ந்திருந்தேன். எனக்கு தூக்கம் வரவில்லை.

ஃபஜ்ர் தொழுகைக்கு நான்கு மணிக்கு பாங்கு சொல்வார்கள். அந்த சமயத்திலே போய் கூட்டத்திலே நிற்காமல் முன்பாகவே உளு செய்துவிடுவோம் என்று நினைத்து என்னுடைய கூடாரத்திற்கு சென்றேன். அது அந்த டீக்கடையிலிருந்து 100மீட்டர் தொலைவில்தான் இருந்தது.

அங்கு காலையில் எங்களை விட்டுப் பிரிந்த அப்துல் மாலிக் இருந்தார். அப்போதுதான் ஹரமில் இருந்து மினாவுக்கு இலவச அரசு பஸ்ஸிலே வந்ததாகக் கூறினார்.

♣ ♣ ♣

அஸீஸியாவில் இந்திய ஹாஜிகள் தங்கியிருந்த கட்டிடங்களில் முஅல்லிமால் ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்கள் இருக்கும். அவை ஹாஜிகளை ஏற்றிக் கொண்டு குடி பஸ் ஸ்டேஷன் (Kudi Bus Station) வரை செல்லும். இந்த பஸ்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தன. குடி பஸ் ஸ்டேஷனில் சிகப்பு நிற அரசு பஸ்கள் நிற்கும். அவை மஞ்சள் பஸ்களில் இருந்து வரும் ஹாஜிகளே ஏற்றிக் கொண்டு ஹரம் வரை செல்லும்.

ஹஜ் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அஸீஸியாவிலிருந்து குடி பஸ் ஸ்டேஷன் வரை ஹாஜிகளை கொண்டு சென்ற முஅல்லிமால் ஏற்பாடு செய்யப்பட்ட மஞ்சள் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பின்பு அவை ஹஜ் காலம் முடிந்த பின்னரே தொடங்கப்பட்டன. ஆனால் ஜம்ராவைக் கடந்து 2 கி.மீ. தொலைவில் ஒரு பஸ் ஸ்டேஷன் உள்ளது. அதிலிருந்து கஅபாவிற்கு இலவச அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ் ஸ்டேஷன் எங்கள் கூடாரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவு இருக்கும். அதுபோலவே கஅபாவிலிருந்து மினா கூடாரங்கள் வரை இலவச அரசு பஸ்கள் ஹஜ் காலத்தில் இயக்கப்பட்டன. இந்த பஸ் ஸ்டேஷன் எங்கள் கூடாரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் இருந்தது. ஆனால் இந்த விபரங்கள் பெரும்பாலான ஹாஜிகளுக்குத் தெரியாது. ஏனெனில் எந்த அறிவிப்புகளையும் அந்நாட்டு அரசு வைக்கவில்லை. அங்கே நின்றுகொண்டு ஹாஜிகளை விரட்டிக் கொண்டிருக்கும் அரசுப்படை இளைஞர்களும் கூறுவதில்லை. ஹஜ் கமிட்டியும் இது குறித்து தெரிவிக்கவில்லை.

எனவேதான் ஜம்ராவிலிருந்து ஹரம் செல்ல 3 பேர் 150 ரியால்கள் கொடுத்தோம். மற்ற நாட்களில் 20 ரியால் கொடுத்தால் போதும். கஅபாவிலிருந்து மினா வருவதற்கு பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்ற ஒரு காருக்கு 6 ஹாஜிகள் 180 ரியால் கொடுத்தோம். இங்கே பணம் இரண்டாம் பட்சம்தான். மொழி தெரியாமால் வழி தெரியாமல் நிற்கும் ஹாஜிகளிடம் அந்த டாக்ஸி டிரைவர்கள் கேட்கும் தொகைதான். கூசாமல் பத்து மடங்கு தொகை கேட்கிறார்கள். விபரமறியாத ஹாஜிகள் அவர்களின் கொள்ளைக்கு இரையாகிறார்கள். டாக்சி மட்டுமல்ல சொந்த காரில் செல்லும் அரபிகள்கூட தங்கள் கார்களில் ஹாஜிகளை ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள். இவ்வளவு கொழுத்த இலாபம் அந்த சில நாட்களில்தானே பார்க்க முடியும்.

ஆனால் “அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துவிடுங்கள். அவர்களிடம் பேரம் பேசாதீர்கள். மக்கா, மதினா வாசிகளுக்கு தாராளமாகச செலவு செய்யுங்கள்” என்று ஹாஜிகளுக்கு தப்லீக்காரர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். “இவற்றையெல்லாம் வெளியே பேசக்கூடாது, மக்காவாசிகளை குறை சொல்லக்கூடாது” என்று ஹாஜிகளை அச்சுறுத்துகிறார்கள். ‘எல்லோரும் மனிதர்கள்தாம். நீதிதான் அளவுகோல்’ என்பதை அவர்கள் புறக்கணித்து விடுகிறார்கள்.

நான் ஆங்கிலத்திலும் இருந்த அந்நாட்டு அரசின் அறிவிப்பைப் படித்தேன். அது என்னவெனில், ‘ஹாஜிகள் பெண்களுடன் வந்திருந்து அவர்கள் டாக்சி பிடித்துச் செல்வதாக இருந்தால் முதலில் ஆண்கள் டாக்சியில் ஏறி அமரவும். பின்பு பெண்களை ஏறச் சொல்லவும். அதேபோல டாக்சியிலிருந்து இறங்கும்போது முதலில் பெண்களை இறங்கச் செய்யவும். பின்பு ஆண்கள் இறங்கவும்’ என்கிறது. இந்த அறிவிப்புகளை பார்த்தால் அசம்பாவிதங்கள் பல நடந்திருக்கின்றன என்ற முடிவுக்குத்தானே வர முடிகிறது. அங்கு எதிர்கட்சிகள் இல்லை. ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் குறித்துத் தெரியவில்லை. எனவே அவை பொது விவாதத்திற்கு வருவதில்லை.

♣ ♣ ♣ ♣ ♣

எனது ஹஜ் (5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *