எனது ஹஜ் (3) – சையது முஹம்மது

Posted on

எனது ஹஜ் (2)

♣ ♣ ♣ ♣ ♣

துல்ஹஜ் 9 – முஜ்தலிஃபா

முஜ்தலிஃபா மைதானத்தில் தங்குவது ஹஜ்ஜின் வாஜிபுகளில் ஓன்று ஆகும். அரஃபா மைதானத்தில் மக்ரிப் நேரம் வரும்வரை தங்கி நேரம் வந்த பிறகு மக்ரிப் தொழாமல் கிளம்பி முஜ்தலிபா வந்துதான் மக்ரிப், இஷா தொழுகைகளை சேர்த்துத் தொழ வேண்டும்.

நாங்கள் முஜ்தலிஃபா 2 இரயில் நிலையத்தின் நீண்ட ஃபிளாட்பாரத்தில் நடந்து வெளியே வந்தோம். சாலையிலே ஒரு ஃபிளாட்பாரத்திலே ஒரு துண்டை விரித்து அமர்ந்தோம். அங்கு பல ஆயிரக்கணக்கான ஹாஜிகள் இருந்தார்கள். துண்டை ஏதாவது ஒரு துணியை விரித்துப் படுத்திருந்தார்கள். சிலர் மட்டுமே தொழுதார்கள். நாங்கள் மூன்று பேர் வந்தோம். எங்களால் நிற்கக் கூட முடியவில்லை. இப்போது மணி இரவு 1:15 ஆகியிருந்தது. மக்ரிப், இஷா தொழுகைகளை தொழ வேண்டும். முஜ்தலிஃபாவில் துஆ கேட்க வேண்டும். நாங்கள் மைதானத்தில் எல்லாம் நிற்கவில்லை. நாங்கள் மெட்ரோ ரயில் நிலையத்தின் முன்னால் இருந்தோம். இரயில் நிலையத்திற்கு முன்னால் வாகனங்கள் நிறுத்துவதற்கு நுழைவாயிலில் உள்ள அது சிமெண்ட் தரை, ஃபிளாட்பாரத்தில் நாங்கள் அமர்ந்தோம். இந்த இடம் மிகப்பெரியதாக இருந்தது. இது ‘முஜ்தலிஃபா 2’ இரயில் நிலையம் முஜ்தலிஃபா மைதான எல்லைக்குள் கட்டப்பட்டிருக்கும் எனக் கருதினோம்.

அரஃபாவிலே மக்கள் வெயிலில் நின்றுக்கொண்டு இரு கைகளை உயர்த்தி நீண்ட நேரம் துஆ செய்தார்கள். அதுப்போல முஜ்தலிஃபாவும் முக்கியமான இடம். இங்கும் மக்கள் துஆ செய்வார்கள் என்று கருதினால், மக்கள் எல்லோரும் மிக அயர்ந்துப் போய் இருந்தார்கள். இங்கு நான் சொல்வது ஒருவர் இருவரைப் பற்றி அல்ல. பல ஆயிரக்கணக்கான மக்களைப் பற்றிக் கூறுகிறேன். அங்கு அவர்களுக்கு கழிவறை, தண்ணீர் என்று எதுவுமே கிடையாது. குடிதண்ணீர் பிடிப்பதற்கு கூட ஒரு குழாய் ஏதும் கிடையாது. இங்கு அதுப்போல குழாயில் தண்ணீரி பிடித்துக் குடிக்கும் பழக்கம் நீண்ட காலத்திற்கு முன்பே வழக்கொழிக்கப்பட்டுப் போயிருக்கிறது. முஜ்தலிஃபாவில் இந்த ஹஜ் காலத்தில் மட்டும் தான் மக்கள் தங்குகிறார்கள். இது மைதானம் அல்ல. சுற்றி வெளியே எல்லாம் கான்கிரீட் கட்டிடங்களாகத் தெரிந்தன. இங்கு நான் எப்படி உளு செய்வது? நான் தயம்மும் செய்து மக்ரிப், இஷா தொழுகைகளைத் தொழுதேன்.

அப்போது என்னுடன் வந்த அப்துல் மாலிக் என்ற ஹாஜி அருகே உட்கார்ந்திருந்த ஒரு பங்களாதேஷை சேர்ந்த ஒரு ஹாஜியிடம் உர்து மொழியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் கூறினார்: இது “முஜ்தலிஃபா அல்ல. முஜ்தலிஃபாவுக்கு இன்னும் செல்ல வேண்டும்” என்று. இதைக் கேட்டவுடன் எங்களுக்கு திடுக்கிட்டது. “என்ன இப்படிக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டபோது, “எங்கள் நாட்டில் சொல்லி அனுப்பினார்கள். ‘ முஜ்தலிஃபா 2’ இரயில் நிலையத்தில் இறக்கி விடுவார்கள். நீங்கள் அது முஜ்தலிஃபா மைதானத்தில் உள்ளடக்கியது என்று எண்ணிக் கொள்வீர்கள். முஸ்தலிஃபா இன்னும் சில கி.மீ. செல்ல வேண்டி இருக்கும் என்று கூறி அனுப்பினார்கள்” என்றும் கூறினார்.

அப்படியென்றால் எப்படி முஜ்தலிஃபாவிற்கு செல்வது? அருகில் யாரிடமாவது கேட்க வேண்டும் என்றால், சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அனைவருமே அப்போது அங்கே வந்து இறங்கியிருந்தவர்கள். அங்கு எந்த விதமான வழிக்காட்டி பலகையும் இல்லை. எந்த விதமான அறிவிப்புகளும் இல்லை. ஆகவே என்னுடன் வந்த அப்துல் மாலிக் கூகுள் மேப் வழியாக அந்த இடத்தை தேட ஆரம்பித்தார். அதில் தேட ஆரம்பித்தால் ஒவ்வொரு வெப்சைட்டும் ஒவ்வொரு விதமாகக் காண்பித்தது. பின்பு ஒரு முடிவுக்கு வந்தவராக இரயிலில் இருந்து இறங்கி பயணிகள் வெளியே செல்லும் வழியில் நாம் செல்வோம் என்றுக் கூறினார். அப்போது மணி மூன்று.

♣ ♣ ♣

இரயிலில் இருந்து இறங்கி பல்லாயிரக் கணக்கான மக்களும் வெளியே செல்ல வேண்டிய வழியிலேதான் நாங்கள் மூவரும் நடக்க ஆரம்பித்தோம். நடப்பதற்காக நடுவில் கொஞ்சம் இடம் விட்டுவிட்டு எல்லா இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஹாஜிகள் படுத்திருந்தார்கள்.

அப்துல் மாலிக் என்ற ஹாஜி கூகுள் மேப் பார்த்துக் கொண்டே முன்னால் நடந்தார். நாங்கள் அவரை தொடர்ந்தோம். செல்லச் செல்ல நடக்கும் வழியின் அளவு குறைந்து கொண்டே வந்தது. அந்த அளவு ஹாஜிகள் படுத்திருந்தார்கள்.

சமாளித்தபடி அடிமேல் அடி வைத்து நடந்து கொண்டிருந்தோம். அப்துல் மாலிக் ஒரு சக்கரம் வைத்த ஒரு சிறிய சூட்கேஸ் வைத்திருந்தார். அதை இழுத்துக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் அதை இழுத்துக் செல்லக் கூட முடியவில்லை. ஆகவே அதை அவர் முன் பக்கமும் நான் பின்பக்கமும் சேர்ந்து தூக்கிக் கொண்டு தடுமாறியபடி சென்றுக் கொண்டிருந்தோம்.

தூரத்தில் பார்த்த நான் திடுக்கிட்டேன். கதவு போட்டு பூட்டி இருப்பது போல் தெரிந்தது. இவ்வளவு மக்களை வைத்தா பூட்டுவார்கள்? என்றுக் கருதிக் கொண்டு மேலும் முன்னேறினோம். நெருங்கிய போது தெரிந்தது, கதவை பூட்டி இருந்தார்கள். அவை சுமார் ஏழு அடி உயரமுள்ள இரும்புக் கம்பிக் கதவுகள். அது ஏறத்தாழ ஐம்பது அடி அகலமான சாலை. அந்த அளவு சாலையில் கதவு போட்டு அதை பூட்டி இருந்தார்கள். அதாவது இந்த ஹாஜிகள் மெட்ரோ ஸ்டேஷன் வளாகத்திலிருந்து வெளியே செல்ல விடாமல் பூட்டி இருக்கிறார்கள். வெளியே செல்ல முடியாததால்தான் ஏற்கனவே மிகக் கடுமையான களைப்பில் இருந்த ஹாஜிகள் அங்கேயே படுத்து விட்டார்கள்.

எங்களுக்குப் பின்னாலும் மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். எனவே நாங்கள் பின்னுக்கு செல்லவும் முடியாது. அங்கு நிற்கவும் இடமில்லை. இப்போது என்ன செய்வது என்று திகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்த போது, கதவுக்கு அருகில் லேசாக மக்களின் அசைவு தெரிந்தது. ஏதாவது கம்பியை லேசாக வளைத்து விட்டு மக்கள் செல்கிறார்களா? என்று பார்ப்பதற்காக மேலும் நடந்து சென்றோம். அந்த கதவுகளுக்குக் கீழே ஒரு அடி அளவுக்கு இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியில் மல்லாக்கப் படுத்து அப்படியே நகர்ந்து நகர்ந்து சில ஆண், பெண் ஹாஜிகள் வெளியே செல்கிறார்கள். சிலர் குப்புறப்படுத்து செல்ல முயற்சித்து அவர்களின் உடைகள் சிக்கிக் கொண்டன. அவற்றை மற்ற சிலர் விடுவித்து வெளியேற உதவி செய்து கொண்டிருந்தார்கள். ஏன் அப்படி செல்கிறார்கள் என்றால், வெளியேதான் ஒரு கழிவறை இருக்கிறது. அது ஆண்கள் 19 பேர். பெண்கள் 19 பேர் என்பது போல ஒரு கழிவறை அது. அங்கு செல்வதற்காகத்தான் அவர்கள் அப்படி செல்கிறார்கள். அந்தக் கழிவறைகளின் முன்பு ஒரு பெரும் கூட்டம் நின்று கொண்டிருந்தது.

நாங்கள் மூவரும் கீழே படுத்து நகர்ந்துநகர்ந்து அந்த கதவுகளுக்கு வெளியே வந்தோம். அந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

நாங்கள் வெளியே வந்தவுடன் அங்கே சாலைப் போடுவதற்கான சிறு சரளைக் கற்கள் கிடந்தன. ஷைதான்களுக்கு கல் எறிவதற்காக கற்களை எடுக்க ஆரம்பித்தோம். இதை கவனிக்காத அப்துல் மாலிக் என்ற ஹாஜி கூகுள் மேப்பை பார்த்தபடி தன் பெட்டியை இழுத்துக் கொண்டு எங்கள் பார்வையிலிருந்து மறைந்து சென்று விட்டார். அப்போது மணி 4 ஆகிவிட்டது. இன்னும் 10 நிமிடத்தில் பஜ்ர் நேரம் வந்து விடும். முஜ்தலிஃபாவின் நேரம் பஜ்ர் வரைதான்.

நானும் முஹம்மது யூசுஃப் என்ற ஹாஜியும் சிறிது நேரம் நடைபாதையிலே அமர்ந்திருந்தோம். பின்பு அங்கேயே ஃபஜ்ரு தொழுதுவிட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். கொஞ்ச தூரம் சென்றவுடன் ரோட்டிலே ஒரு பெண் டீ தயாரித்து விற்றுக் கொண்டிருந்தார். அப்படியெல்லாம் அதற்கு முன் நாங்கள் வேறு எங்கும் பார்க்கவில்லை. அவர் அரபி பெண் அல்ல. அவர் பேசும் மொழி எங்களுக்கு புரியவில்லை. நாங்கள் ‘சாயா’ என்றோம். ‘மூன்று ரியால்’ என்றார். ‘கொடும்மா புண்ணியவதியே’ என்று வாங்கி குடித்துவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினோம்.

எங்களுக்கு முன்னால் கூகுள்மேப் பார்த்துக்கொண்டே சென்ற அப்துல் மாலிக் என்ற ஹாஜி முஜ்தலிஃபா இடத்தை அடைந்து விட்டார். அங்கு மஷ்அருல் ஹராம் என்ற பெரிய பள்ளிவாசல் இருக்கிறது. ஆனால் அதற்குள் பஜ்ர் நேரம் வந்து விட்டது. அதன் அருகில்தான் முஜ்தலிஃபா 3 மெட்ரோ இரயில் நிலையம் இருக்கிறது. அங்கு தண்ணீர் வசதி, கழிவறை வசதிகள் எல்லாம் உள்ளன. அங்கு அரபிகள் மெத்தைகளை கொண்டு வந்து போட்டு இரவில் சொகுசாகத் தூங்கிவிட்டு பின்னர் எழுந்து துஆ செய்கிறார்கள். அப்படியென்றால் முஜ்தலிஃபா 2 மெட்ரோ இரயில் நிலைய வளாகத்தில் அடைக்கப்பட்ட இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டு ஹாஜிகள் அந்த இடத்தை அடைவதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள்.

துல்ஹஜ் 10

காலை 5.00 மணி. இப்போது நாங்கள் மினா கூடாரத்திற்குத் திரும்ப வேண்டும். மினாவுக்கு செல்வதற்கு எந்த விதமான அறிவிப்பு பலகையும் இல்லை. அந்த விசாலமான சாலை இரண்டு அல்லது மூன்றாக பிரியத் தொடங்கியது. எதில் செல்வது என்று தயங்கியபடியே விசாரிக்கத் தொடங்கினோம். சற்று நிதானித்து இஹ்ராம் அணிந்த நிலையில் ஹாஜிகள் சிலர் செல்லும் திசையில் நடக்கத் தொடங்கினோம். அது விசாலமான சாலை.

நேரம் ஆக ஆக ஏராளமான மக்கள் அந்த சாலையின் பல்வேறு கிளையில் இருந்து வந்து சேரத் துவங்கி இருந்தார்கள். முஜ்தலிஃபா 2 மெட்ரோ நிலைய வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கதவுகளை திறந்து விட்டிருக்கக் கூடும். அதற்குமேல் அடைத்து வைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு என்ன இருக்கிறது? இப்போது கொஞ்ச நேரத்தில் மக்கள் பெருவெள்ளமாக அந்த சாலையில் நடந்து கொண்டு இருந்தார்கள்.

காலையில் இருந்து நாங்கள் தண்ணீர் கூட குடிக்கவில்லை. ஏனென்றால் அங்கு தண்ணீர் குடிப்பதற்கெல்லாம் எந்த வசதியும் இல்லை. நாங்கள் மட்டும் அல்ல. லட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையிலே வந்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் குடிக்க தண்ணீர் இல்லை. அவர்களுடைய சுய தேவைகளுக்கு எந்த வசதியும் இல்லை. அப்படிப்பட்ட நிலையிலே மக்கள் வேர்க்க விறுவிறுக்க தொப்பலாக நனைந்து அவர்கள் நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள். இப்போது முஸ்தலிஃபா 3 மெட்ரோ நிலையத்தைக் கடந்து நடந்து கொண்டிருந்தோம். அங்கு வழியில் வேறு அடையாளம் சொல்லக் கூடிய எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. இப்போது சீருடை அணிந்த அரச படையினர் தென்பட்டனர்.

ஹாஜிகள் அனைவரும் மிகவும் களைத்துப் போனவர்களாக, மிகவும் சோர்ந்தவர்களாக, தங்களுடைய சுயத் தேவைகளைக் கூட நிறைவேற்ற இடம் இல்லாதவர்களாக பசியுடன் தாகத்துடன் நடந்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஆனால் பரிதாப்படுவதற்குகூட எனக்கு சக்தியில்லை. பெரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் நீச்சல் தெரியாத ஒரு மனிதன் தன்னைப் போல அடித்துச் செல்லப்படும் சக மனிதனைப் பார்த்து என்ன அனுதாபம் கொள்ள முடியும்? அல்லது அனுதாபப்பட்டு என்ன பயன் ஏற்பட்டு விடப் போகிறது? அவர்கள் சற்று ஓரமாக அமரக்கூட அந்த அரசுப்படையினர் விடவில்லை.

மூன்று நாட்களாக சரியான தூக்கமில்லை. சரியாக சாப்பிட முடியவில்லை. சுய தேவைகளை நிறைவேற்றப் போராட்டம், மணிக் கணக்கில் நின்று கொண்டிருப்பது, எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் ஹாஜிகள் சென்று கொண்டிருக்கும் திசையில் சென்று கொண்டிருப்பது என எத்தனை…

இதுதான் ஹஜ்ஜா? அல்லது இப்படித்தான் ஹஜ்ஜை நிறைவேற்றுவார்களா? ஊருக்குத் திரும்பியபின் என்னை சந்திப்பவர்கள் “எப்படி ஹஜ்ஜை நிறைவேற்றினீர்கள்” என்று கேட்டால் “சிறப்பாக” என்றுக் கூறினால் நான் உண்மை கூறியவனாக, கேட்பவர்களின் நலம் நாடியவனாக இருப்பேனா என எண்ணியபடியே நடந்து கொண்டிருந்தேன். அல்லது இந்த அவலங்களை குறித்துப் பேசாமல், காரணமானவர்களைக் கண்டுகொள்ளாமல் இந்த துன்பங்களை தியாகம் என்றுக் கருதி சுய மோசடி செய்து கொள்வதா?

நாங்கள் இருவரும் எங்கள் கூடாரத்தை நோக்கிச் செல்கிறோம். இவ்வளவு மக்களும் எங்கு செல்கிறார்கள்? அவர்களும் அவர்களுடைய கூடாரத்தை நோக்கித்தான் செல்கிறார்களா? பின்புதான் தெரிந்தது. நாங்கள் மினா 2 மெட்ரோ நிலையம் நோக்கிச் சென்று ஏதோ ஓரிடத்தில் கூடாரம் இருக்கும் இடத்தை நோக்கித் திரும்ப வேண்டும்.  இந்த ஹாஜிகள் எல்லாம் மினா 2 மெட்ரோ கடந்து மினா 3 மெட்ரோ நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஜம்ரா என்ற ஷைதானுக்கு கல் எறியும் இடத்திற்கு அருகில்தான் மினா 3 மெட்ரோ நிலையம் உள்ளது. அப்படி ஷைதானுக்கு கல்லெறிவதற்காகத்தான் அப்படி உயிரை கையில் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தார்கள்.

நாங்கள் ஒரு திருப்பத்தில் திரும்பி நடந்தோம். அங்கு கேரளா வாலன்டியர்ஸ் இருந்தார்கள். அவர்களிடம் கூடாரம் இருக்கும் இடத்தைக் கேட்டுக் கொண்டே இரண்டு கிலோமீட்டர் நடந்து காலை மணி 8.00 மணி அளவில் திகிலூட்டும் அந்தக் கூடாரத்தை அடைந்து விழுந்தோம்.

துல்ஹஜ் 10 – ஜம்ரா

இன்று பெரிய ஷைதானுக்கு கல் ஏறிய வேண்டும். குர்பானி கொடுக்க வேண்டும். தலையை மழிக்க வேண்டும். இவற்றை மேற்கண்ட வரிசைப்படி செய்ய வேண்டும்.

காலை 10 மணிக்கு முஹம்மது யூசுஃப், அப்துல் அலீம் என்ற இரு ஹாஜிகளுடன் நான் கூடாரத்திலிருந்து கிளம்பினேன். இரண்டு கிலோமீட்டர் தூரம் வெயிலில் நடந்தபின் ஷைதானுக்கு கல் எறியும் இடத்தை அடைந்தோம். அந்த கட்டிடமே ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ளதாக முக்கால் கிலோமீட்டர் அகலம் உள்ளதாக இருக்கிறது. அந்த கட்டிடம் இரண்டாம் தளம், மூன்றாம் தளத்தில் இருந்தும் கல் எறிய முடியும். அதில் ஏர் கூலர்களை வைத்திருந்தார்கள். எனவே உள்ளே வெயில் இல்லாததாலும், ஏர் கூலர் இயங்கிக் கொண்டிருந்ததாலும் மிகவும் இதமாக இருந்தது. நாங்கள் கல் எறிந்து விட்டு வரும்போது 11 மணிதான் ஆகி இருந்தது.

ஒரு மணி நேரத்தில் எங்களுடைய வேலை முடிந்துவிட்டது என்ற மகிழ்ச்சி அடைந்தோம். கல் எறிந்து விட்டு வந்த வழியே திரும்ப முடியாது. மாற்றுப் பாதையில் ஒரு யூ டர்ன் செய்து போகுமாறு கைக் காட்டினார்கள். எல்லோரும் அப்படித்தான் சென்றுக் கொண்டிருந்தார்கள். ஆகவே நாங்களும் அப்படியே செல்லத் தொடங்கினோம். செல்லத் தொடங்கி 1 கி..மீ. வந்ததும் ‘மஸ்ஜிதில் கைஃப்’ என்ற ஒரு பெரிய பள்ளிவாசல் இருக்கிறது.

அந்த பள்ளியிலே சென்று லுஹர் தொழுதுவிட்டு செல்லலாம் என்றுக் கருதினோம். அப்போது மணி மதியம் 11.45 ஆகி இருந்தது. எங்கள் மூவரின் காலணிகளையும் ஒன்றாக ஓரிடத்தில் வைத்துவிட்டு உள்ளே சென்றோம்.அந்த பள்ளிவாசல் மிகவும் பெரியது. தரைத்தளத்தில் மட்டும் 25,000 பேர் தொழ முடியும் என்று நாங்கள் ஒரு தோராயமாகக் கணக்கிட்டோம். அவ்வளவு பெரிய பள்ளிவாசல். அப்போது பள்ளிவாசலில் ஏசி ஓடிக்கொண்டிருந்தது. எல்லா மக்களும் இருந்திருந்தால் அந்த ஏசி போதுமானதாக இருக்கும். அப்போது தொழுகை நேரம் இல்லாததால் மக்கள் 500 பேர் அளவுக்கு தான் அங்கு இருந்தார்கள். ஆகவே மிகவும் குளிராக இருந்தது.

நாங்கள் இஹ்ராம் உடையில் இருந்தோம். எனவே தலையை முகத்தை மறைக்கக் கூடாது. அங்கு படுத்திருந்தவர்கள் போர்த்திக் கொண்டுதான் படுத்திருந்தார்கள். அதில் சிலர் விரித்திருந்த கார்பெட்டையே சுற்றிக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்தார்கள். எங்களுக்கு குளிர் தாங்க முடியவில்லை. தொழுதுவிட்டு செல்ல வேண்டும் என்று நாங்கள் காத்திருந்தோம். பின்பு லுஹருக்கு பாங்கு சொல்லித் தொழ வைத்தார்கள். அந்த பள்ளிவாசலில் இமாம் ஜமாஅத்தே இரண்டு ரக்அத்துகள்தான். குறைத்து (கஸர்) தொழ வைத்தார்கள்.

தொழுது முடித்தபின் பார்த்தால் என்னுடன் வந்த இருவரையும் காணவில்லை. அப்போது பள்ளிவாசலில் ஆயிரம் பேர் இருந்திருப்பார்கள். அவர்களைத் தேடி பள்ளிவாசலிலேயே இரண்டு முறை சுற்றி வந்தேன். காலணிகள் வைத்த வைக்கும் இடத்திற்கு வந்து பார்த்தேன். மூவரின் காலணிகளையும் காணவில்லை.

என்ன நடந்தது என்றால், என்னுடைய காலணியை யாரோ போட்டுச் சென்று விட்டார்கள். என்னுடையதை காணாத அவர்கள் நான் ஏற்கனவே சென்று விட்டதாகக் கருதி கிளம்பிச் சென்று விட்டார்கள். ஒன்றாக சேர்ந்து போவது, கூட்டத்தில் பிரிந்து விட்டு அறையில் வந்து சந்திப்பது என்பது அங்கு முன்பும் நடந்திருக்கிறது. அவர்கள் சென்றதில் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் கொதிக்கும் வெயிலில் காலணி இல்லாமல் எப்படி நடப்பது?

♣ ♣ ♣

‘சாலையில் இறங்கி ஓரமாக நடந்து செல்ல முடிகிறதா’ என்று பார்க்கலாம் என்று கருதி பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்தேன். ஒரு பத்து மீட்டர் தூரம் நடந்திருப்பேன். கால்கள் கொதிக்கத் தொடங்கி விட்டன. இன்னும் சிறிது நடந்திருந்தால் கால்கள் கொப்பளம் வந்து புண்ணாகி அங்கேயே விழுந்திருக்கக் கூடும். கீழே விழுந்தால் உடம்பெல்லாம் புண்ணாகி விடும் அப்படிப்பட்ட சூடு அது. சாலை அப்படிக் கொதித்தது. சாலையில் கிடந்த ஒரு அட்டையில் நின்றுக் கொண்டேன். பின்பு அந்த அட்டையை நகர்த்திக் கொண்டே வந்து பள்ளிவாசல் ஓரமாக நின்றேன்.

சீருடை அணிந்த அரசுப்படை இளைஞர்கள் யாரையும் அங்கு நிற்க அனுமதிப்பதில்லை. என்னையும் போகச் சொன்னார்கள். ‘என்னிடம் செருப்பு இல்லை’ என நான் காண்பித்தததும் ஒரு வினாடி திகைத்துவிட்டு பள்ளிவாசலுக்குப் போகும்படி கை காட்டினார்கள். ஏதாவது ஒரு கயிறு கிடத்தால் அந்த கயிறைக் கொண்டு அந்த அட்டையை காலில் கட்டிக் கொண்டு நடக்கலாம் என்று பார்த்தேன். அங்கு ஏதும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கயிறு ஏதும் கிடைக்கவில்லை.

மஸ்ஜிதுல் கைஃப் என்ற அந்தப் பள்ளிவாசலில் லக்கேஜை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. எனவே யாரேனும் லக்கேஜ் கொண்டு வந்தால், அவற்றை பள்ளிவாசலுக்கு வெளியிலேயே பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு செல்லும்படி கூறிவிடுகிறார்கள். அதற்கு டோக்கன் எல்லாம் ஒன்றும் இல்லை. அப்படியே வைத்துவிட்டு சென்று திரும்ப வந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அங்கே நூற்றுகணக்கான லக்கேஜ்கள், பல்வேறு விதமான லக்கேஜுகள், பல்வேறு நாட்டை சேர்ந்த மக்களின் லக்கேஜ்கள் அங்கிருந்தன. நான் அந்த இடத்திலே நின்றுக் கொண்டிருந்தேன்.

திரும்பவும் பள்ளிவாசலில் சென்று அமர்ந்தேன். மீண்டும் அதே பிரச்சனை தான். குளிராக இருந்தது. பள்ளிவாசலை சுத்தம் செய்யும் பணியாளர்கள் ஒருவர் கேரி பேக்கை வைத்துக் கொண்டு அங்கிருக்கும் பாட்டில்கள் போன்றவற்றை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பங்களாதேஷை சார்ந்தவர்கள். அவர்களை பார்க்கும்போதே அவர்களின் வறிய நிலை தெரிந்தது. அவர்களிடம் ‘செருப்பு காணவில்லை. ஏதாவது ஒரு பழைய செருப்பு கிடைக்குமா?’ என்று கேட்டேன். பழைய செருப்பு ஏதும் இங்கு இருக்காதே என்று கூறிவிட்டு போய்விட்டார்கள்.

நம்மூர் பள்ளிவாசல்களில் பழைய செருப்புகள் மூலையில் கிடக்கும். அப்படி ஏதேனும் கிடக்கிறதா என்று பார்த்தேன். எதுவுமில்லை. என்னுடைய செருப்பை மாற்றி போட்டுக்கொண்டு சென்றவர் திரும்ப வரக்கூடும் என்று பார்த்தேன். நான் அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பள்ளிவாசலில் இருந்து மூவர் வந்தார்கள். அவர்களில் ஒருவருடைய செருப்பையும் காணவில்லை. சுற்றிசுற்றி வந்து தேடினார்கள். பின்பு வேறொரு செருப்பை பார்த்து மாற்றி போட்டுவிட்டு சென்றிருக்ககூடும் என தங்களுக்குள் பேசிக்கொண்டு அந்த செருப்பை அணிந்து சென்றார்கள். அப்படி எதுவும் கிடக்கிறதா எனப் பார்த்தேன். இல்லை.

இவ்வாறு அங்கு மூன்று மணி வரை அந்த பள்ளிவாசலிலேயே இருந்தேன். இப்போது வெயில் குறைந்திருந்தது. எனவே இறங்கி நடந்தேன். முன்பு பத்து மீட்டர் தூரம் நடந்திருப்பேன் என்றால் இப்போது ஐம்பது மீட்டர் நடந்திருப்பேன். அதற்குமேல் நடக்க முடியவில்லை. அங்கு சாலையிலே மெல்லிய மெத்தை ஒன்று கிடந்தது. ஒரு இன்ச் கனம் கொண்டது. அந்த மெத்தையிலே நின்றுக் கொண்டேன். சில நிமிடங்கள் நின்றேன்.

அது கொஞ்சம் பழைய மெத்தை. எனவே அதன் தையலை கிழிக்க முடிந்தது. கிழித்து அதிலுள்ள ஸ்பாஞ்சை எடுத்து வெளியே போட்டு விட்டு அதிலிருந்த நீளமான இரண்டு துணிகளை நான்காக மடித்து அதில் இருந்த நாடாவைக் கொண்டு இரு கால்களிலும் இறுக்கிக் கட்டிக் கொண்டேன். சூடு தாங்கியது. நான் சாலையின் நடுவில் நின்று இப்படிச் செய்ததை பார்த்தபடி ஏராளமானவர்கள் சென்றுக் கொண்டிருந்தார்கள். நான் நடக்க ஆரம்பித்தேன்.

இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சினைதான். இப்படி ஒரு நிகழ்வு இல்லையெனில் சாலை அவ்வளவு சூட்டை கொண்டிருக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அடுத்து நான் சொல்லப்போவது இலட்சம் அல்லது பல இலட்சம் ஹாஜிகளின் பிரச்சினை. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு ஹஜ் செய்து இப்போது மீண்டும் ஹஜ் செய்ய வந்தவர்களையே நிலை குலைய வைத்த பிரச்சினை. அதுதான் ஹாஜிகளை சுற்றிப் போக வைத்தது.

♣ ♣ ♣

இப்போது நான் என்னுடைய கூடாரத்திற்கு திரும்ப வேண்டும். போன வழியில் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. மற்ற ஹாஜிகளைப் போலவே நான் வேறொரு பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தேன். அந்தப் பாதை முற்றிலும் புதியதாக யூகித்து அறிய முடியாததாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அந்த சாலை தெரிந்தது.

நான் அங்கு நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் வாலன்டியரிடம் கேட்டேன். “இந்தியா சர்வீஸ் சென்டர் 25” என்றவுடன் அவர் வரைபடத்தைப் பார்த்து அந்த சாலையில் நேராக செல்லும்படியும், சாலை முடியும் இடத்தில் தெரியும் மேம்பாலத்தில் ஏறி இறங்கி சென்றால் உங்களுடைய கூடாரம் வந்துவிடும் என்றார். என்னால் அதை நம்ப முடியவில்லை. அந்த சாலை மிக நீண்டதாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அந்த சாலை சென்றது. அந்த சாலையில் சென்று ஒரு பாலத்தில் ஏறி இறங்க சொல்கிறார். தவறாக ஏதும் சொல்கிறாரா என்று யோசித்தபடியே சில அடிகள் நடந்தேன். வட இந்திய ஹாஜிகள் சிலரும் அந்த வழியே சென்றுக் கொண்டிருந்தனர். எனவே நானும் அவைகளுடன் நடக்கத் துவங்கினேன்.

மற்றொரு வாலன்டியரிடம் கேட்டேன். அவரும் அப்படித்தான் கூறினார். இப்படியே நான் அங்கிருந்து ஒரு ஐநூறு மீட்டர் நடப்பதற்குள் பல பேரிடம் கேட்டுவிட்டேன். அவர்கள் பாகிஸ்தான் வாலன்டியர்கள். அவர்கள் யூனிஃபார்ம் அணிந்து கையில் ஒரு மேப் வைத்து மக்களுக்கு வழி சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அந்த பகுதியில் இந்திய, பாகிஸ்தான் மக்கள் தான் அதிகமாக தென்பட்டர்கள். கழுத்தில் தொங்க விட்டுள்ள அடையாள அட்டை, அதை தொங்க விட்டுள்ள நாடாவின் நிறம் வைத்து அறிந்து கொள்ள முடியும்.

இப்போது நீண்ட அந்த சாலையிலே நடந்து செல்ல ஆரம்பித்தேன். இப்படியே வழியிலேயே கண்ணில் பட்ட வாலன்டியர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன். காலிலே சுற்றியிருந்த துணி உரசி நடக்கும்போது ‘சரக் சரக் ‘ என்று சத்தம் கேட்டது. நாலைந்து கிலோ மீட்டர்கள் நடந்த பின் அங்கிருந்த ஒரு மேம்பாலத்தில் ஏறினேன். அங்கு கேரளா வாலண்டியர்கள் நின்று கொண்டு வழி காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு அந்தப் பாலத்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன். செல்லும்போது 3 கிலோ மீட்டர் என்றால் திரும்பும்போது 8 அல்லது 9 கிலோ மீட்டர்கள் நடந்திருந்தேன்.

நான் வழிதவறி விடவில்லை. சரியான வழியில்தான் சென்றேன். ஆனால் சுற்றி விட்டிருக்கிறார்கள். மூக்கைத் தொடுவதற்கும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதற்கும் உள்ள வேறுபாடு அது. அந்த சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப் படவில்லை. ஆணோ, பெண்ணோ இளைஞரோ, வயதானவரோ இப்படித்தான் சுற்ற வைத்தார்கள்.

இப்போது நான் என்னுடைய கூடாரத்தை நெருங்கி விட்டேன். இன்னும் ஒரு 1௦ மீட்டர் நடந்தால் போதும். அங்கு இரண்டு கேரள வாலன்டியர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே என் காலைக் காட்டி “ஏன் இப்படி” என்றார். “காணவில்லை” என்றேன். அவர் சிரித்துக் கொண்டே தன் சகாவின் தோளில் தொங்கிய பையில் இருந்து புதிய காலணி ஒன்றை எடுத்து ‘ போட்டுக் கொள்ளுங்கள் ‘ என்று எனக்கு கொடுத்தார்.

நான் எனது கூடாரத்தை அடையும்போது மாலை 5 மணி.

♣ ♣ ♣ ♣ ♣

எனது ஹஜ் (4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *