இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்

Posted on

[கிரசண்ட் இன்டர்நேஷனல் செய்திப் பத்திரிகையில் ‘The Saudis’ relentless drive to destroy the historic sites of Islam‘ என்ற தலைப்பில் ஸஃபர் பங்காஷ் எழுதிய கட்டுரையை இங்கு தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறோம். மெல்லினம் வெளியிட்டுள்ள ‘மக்கா படுகொலைகள் 1987: பின்னணியும் ஹரமைனின் எதிர்காலமும்’ என்ற நூலில் இது பிரசுரமாகியுள்ளது]

♦ ♦ ♦ ♦ ♦

(பாகம் 1)

முஸ்லிம்கள் இன்று ஏறத்தாழ எல்லா முனைகளிலும் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர் —இராணுவம், கலாச்சாரம் மற்றும் இடைப்பட்ட சகல முனைகளிலும் தாக்கப்படுகின்றனர். ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாலஸ்தீன், செச்சன்யா போன்ற நாடுகளில் அந்நியப் படைகளால் அவர்கள் ஆயிரக்கணக்கில் பலிகொடுக்கப்படுவது மட்டுமின்றி, முஸ்லிம் நாடுகள் பலவற்றின் சொந்த இராணுவங்களே கூட முஸ்லிம்களைத் தாக்கி வருகின்றன —எடுத்துக் காட்டு: பாகிஸ்தான், எகிப்து, அல்ஜீரியா, துனீஷியா, மொராக்கோ. இந்த இராணுவத் தாக்குதல்கள் போதாதென்று மேற்குலகின் கலாச்சாரத் தாக்குதல்கள் வேறு.

எனினும், சவூதிகள் புனித மக்கா-மதீனா நகரங்களில் —முஸ்லிம்கள் இவையிரண்டையும் சேர்த்து ஹரமைன் என்றழைக்கும் அந்நகரங்களில்— எடுக்கும் நடவடிக்கையோடு ஒப்பிடும்போது, மேற்கண்ட கொடூரமான யதார்த்தம் கூட முக்கியத்துவமற்றதாகத் தெரிகிறது. பேராசையும் வஹாபிஸ ஆர்வ வெறியும் நச்சுக்கலவையாக சேர்ந்துகொண்டு இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் அழிப்புக்கு வழிவகுத்துள்ளது. இவை, துவக்ககால இஸ்லாத்தின் செழிப்பான வரலாற்றுப் பாரம்பரியத்தை இன்னும் சில வருடங்களில் நிரந்தரமாகத் துடைத்தழித்துவிடும் எனத் தெரிகிறது.

இன்று மத்திய கிழக்கின் பெரும்பாலான எண்ணை உற்பத்தி நாடுகள் கட்டுமானப் பித்துப் பிடித்து, பாலைவனங்களை உருமாற்றி நியூயார்க், ஹியூஸ்டன், லாஸ் வேகாஸ் போன்ற நகரங்களின் நகல்களாக ஆக்கிக் கொண்டிருக்கிற அதேவேளை, சவூதிகள் உம்மத்தின் பௌதிகப் பாரம்பரியத்தை அழிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளனர். சவூதிகள் லாஸ் வேகாஸின் உருவமைப்பில் ரியாத் நகரைக் கட்டியெழுப்ப முனைந்திருந்தால், வெகுசில முஸ்லிம்களே அது குறித்துக் கவலை கொண்டிருப்பர். ஆனால், அவர்கள் மக்கா-மதீனா மீது கைவைக்கின்றனர், இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களைத் துடைத்தழித்து, கான்கிரீட்-கண்ணாடி டவர்களை அவற்றுக்குப் பதிலாக நிர்மாணிக்கின்றனர். அந்த டவர்கள் மஸ்ஜித் அல்-ஹராமைச் சூழ்ந்தமைந்திருப்பது மட்டுமின்றி, அதன் தோற்றத்தை குள்ளமாக்கி விடுகிறது, மற்றும், அதன் ஆன்மிகச் சூழலின் சுகந்தத்தைக் கெடுத்துவிடுகிறது.

வருடத்துக்கு வருடம் அதிகரித்துச் செல்லும் அளவுகடந்த விலைவாசியால், ஏற்கனவே பெரும்பாலான முஸ்லிம்களுக்கு ஹஜ் செய்யும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. முஸ்லிம்களின் ஏக்கத்துக்குரிய ஆன்மிகப் பயணமாய் அமைவதற்கு பதிலாக, ஹஜ் இன்று ஒரு பெரிய ஊழலாக மாற்றப்பட்டு, சவூதி அரச குடும்பமும் அவர்களின் கூட்டாளிகளும் ஹாஜிகளின் வாழ்நாள் சேமிப்புகளையே ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஹஜ்ஜில் பல தரங்கள், வகுப்புகள்  உருவாக்கப்பட்டுள்ளன. மேற்குலகிலுள்ள பயண முகவர்கள் இப்போது ஐந்து நட்சத்திர ஹஜ் சுற்றுலாத் திட்டங்களை வழங்குகின்றனர் —ஏதோ ஹஜ் என்பது டிஸ்னீலேண்டுக்குச் செல்லும் விடுமுறை காலச் சுற்றுலா போல! இஸ்லாத்தின் அடிப்படை வழிபாடுகளுள் ஒன்றான ஹஜ்ஜுக்கு நிகழ்ந்திருக்கும் இத்தகு திரிபு, ஹஜ்ஜின் உயிரோட்டத்துக்கே முரணானது; குர்ஆன், சுன்னாஹ் வலியுறுத்துவதன்படி ஹஜ் வெளிப்படுத்தவேண்டிய சமத்துவ, சகோதரத்துவக் கோட்பாட்டுக்கே முரணானது. ஆனால் சவூதுக் குடும்பத்துக்கோ, குர்ஆன், சுன்னாஹ் போதனைகள் குறித்தெல்லாம் அக்கறையில்லை. தாங்கள் ஏற்காத எந்தவொரு செயலையும் பித்அத் (நூதனம்) எனக் கடிந்துரைப்பதில் மட்டுமே துரிதம் காட்டுகின்றனர். மேற்கூறியது போன்று, இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே மீறுவது மூலம் சவூதிகள் செய்துவரும் மகா பித்அத்துகளுக்கு போலியான வாதங்களை முன்வைத்து நியாயம் கற்பிக்க, கூலிப்பாட்டாள முகவர்களும் அரசவை உலமாவும் உள்ளனர். ஒரு வேளை, இன்று இறைத்தூதர் (ஸல்) எழுந்துவர நேர்ந்தால் அவரையும் கூட இந்த வஹாபிகள் குற்றம்சாட்டி, அவர் தீனில் (மார்க்கம்) நூதனங்களைப் புகுத்தியுள்ளார்; பித்அத்தில் ஈடுபட்டுள்ளார் எனப் பழிசுமத்தி இருப்பார்கள். (இத்தகு பாவத்திலிருந்து இறைவன் நம்மைக் காப்பானாக!)

சவூதிகள் இஸ்லாத்தினது வரலாற்றுத் தலங்களின் புனிதத்தை இழிவுபடுத்துவது குறித்தும், ஹஜ்ஜை வணிகமயமாக்குவது குறித்தும் இந்த அரசவை உலமாவுக்கு தவறேதும் தெரிவதில்லை போலும். எனினும் இவை, முஸ்லிமல்லாதவர் சிலர் உள்ளிட்ட ஏனையோரின் கவனத்திலிருந்து தப்பவில்லை. எடுத்துக்காட்டாக, ஸ்வைகா க்ரீகர் என்பவர் 2008 மார்ச் 26 அன்று நியூ ரிபப்ளிக் பத்திரிக்கையில் எழுதிய ஒரு கட்டுரையில், மக்காவுக்கு வரவிரும்பும் வருங்கால “சுற்றுலாப் பயணிகளை” கவர்ந்திழுக்கும் ஒரு விளம்பர டி.வி.டி.யின் பக்கம் நம் கவனத்தைத் திருப்பியுள்ளார். அந்த டி.வி.டி அப்ரஜ் அல்-பைத் டவருக்காகத் தயாரிக்கப்பட்டது. ஹரமின் நுழைவாயில்களுள் ஒன்று அமைந்திருக்கும் வீதியில் எதிர்பக்கமாக, 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்படவிருக்கும் புதிய ராட்சச விண் கோபுரக் கட்டிடவளாகம் அது. அந்த டவரில், கூரை முதல் தரை வரையிலான ஜன்னல்களைக் கொண்ட சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அழகான பெண்ணொருவள் அமர்ந்திருப்பதை அந்த டி.வி.டி. காட்டுகிறது. கீழே கஅபாவை வலம்வந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களைப் பார்க்கும் வண்ணம் உள்ள ஜன்னல்கள் அவை. இறுகச் சுற்றிய முக்காடுக்குள் அவளது கண்கள் ‘இங்கே-வா’ சிமிட்டல் போட்டுக் கொண்டிருக்க, அவள் அரபிமொழியில் வருங்கால வாடிக்கையாளர்களை நோக்கி இவ்வாறு கேட்கிறாள்: “கஅபாவுக்கு முன்னால் அமைந்திருக்கும் இந்த இடத்தில் நீங்கள் ஒவ்வொரு வருடமும் தங்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா?” இத்தகு ஆபாச விளம்பரங்களைக் கொண்டு அல்லாஹ்வின் இல்லத்திற்கு வருமாறு ஹாஜிகளைக் கவர்ந்திழுப்பது அவசியம்தானா? அவர்கள் யாத்திரிகர்களாகத் தானே வருகின்றனர்; மான்டி கார்லோ அல்லது லாஸ் வேகாஸில் உள்ள சூதாட்ட விடுதிக்குச் சுற்றுலாப் பயணிகளாக வரவில்லையே!

இவ்வகை ஆபாசத்திற்கு அப்பால், இதைவிட மிக முக்கியமான விவகாரமொன்று இருக்கிறது. தகர்த்தழிக்கப்பட்ட அல்லது தகர்த்தழிப்பதற்காகக் காலம் குறிக்கப்பட்ட வரலாற்றுக் கட்டிடங்கள் மற்றும் தலங்கள் தொடர்பான விவகாரம் அது. மதீனாவிலுள்ள இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலம் தொடர்பாக தீட்டியுள்ள தங்களது கொடிய திட்டங்களில் சவூதிகள் வெற்றி பெறுவார்களேயானால், மதீனாவின் பகீ அடக்கத்தலத்துக்கு (ஜன்னதுல் பகீ) அவர்கள் இழைத்த காட்டுமிராண்டித்தன அழிப்பு கூட சிறியதாகத் தோன்ற ஆரம்பித்துவிடும். முக்பில் இப்னு ஹாதீ அல்-வாதியீ என்ற மதீனா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினார். ‘இறைத்தூதரது (ஸல்)  அடக்கத்தலத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் குவிமாடம் பற்றி…’ எனும் தலைப்பிட்டிருந்த  அக்கட்டுரைக்கு ஊக்குவிப்பு ஆசிரியர், ஷெய்க் ஹம்மாத் அல்-அன்சாரி. இதில், இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலத்தை நபிப்பள்ளியில் இருந்து வெளியே அகற்றவேண்டும் என்பதாக முக்பில் இப்னு ஹாதீ கோருகிறார். அந்த அடக்கத்தலம் அங்கிருப்பதும், அதன் மீதுள்ள குவிமாடமும் பெரும் நூதனங்கள் (பித் அத்துகள்); எனவே அவையிரண்டும் தகர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். அவரது இந்த ஆய்வுக் கட்டுரை பாராட்டுப் பெற்று பல்கலைக்கழக மதிப்பீட்டில் உயர் மதிப்பெண்களை வென்றது; மற்றும், இறைத்தூதர் (ஸல்) மீது அவர்களுக்கிருக்கும் முழு அவமரியாதையை ஊர்ஜிதம் செய்தது.

நேற்று முளைத்த இந்த சவூதி மாணவன் எப்படி, குவிமாடம் கட்டுவதை பித்அத் என்றும் இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலத்தை மஸ்ஜித் அந்-நபவீயிலிருந்து வெளியே அகற்றவேண்டும் என்றும் தீர்மானத்துக்கு வந்தான் என்பதை விமர்சன மீளாய்வு செய்வது அவசியம். முன்மாதிரியான நபித்தோழர்களை (ரழி) காட்டிலும் இந்த மாணவன் இஸ்லாம்பற்றி அதிகம் அறிந்துவிட்டானோ? நபித்தோழர்கள் (ரழி) எவரும்  இதை ஆட்சேபிக்கவில்லை என்பது மட்டுமின்றி, இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலத்தைத் தரிசிப்பதன் மூலம் அவருக்கு (ஸல்) பெரும் மரியாதை செலுத்தி வந்துள்ளனர். மேலும், இறைத்தூதரின் (ஸல்) மிகநெருங்கிய தோழர்கள் இருவரும் கூட அவரருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அபூபக்கர் மற்றும் உமரை (ரழி) காட்டிலும் இந்த முக்பில் இப்னு ஹாதீ அதிகம் அறிவு பெற்றுவிட்டாரோ? முஸ்லிம்கள் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “சவூதிகள் தாங்கள் விரும்புவதையெல்லாம் இத்தலங்கள் மீது செயற்படுத்துவதற்கு என்ன உரிமை கொண்டுள்ளனர்?” சவூதிகள் ஒன்றும் ஹரமைனின் உடமைதாரர்கள் அல்லவே! அவர்கள் அரேபிய தீபகற்பத்தை அபகரித்துக்கொண்டு அதன் பெயரை சட்ட விரோதமாக, ‘சவூதி’ அரேபியா என்று மாற்றியவர்கள் தானே! இது ஒரு பித்அத் அல்லவா? ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதனை ‘அரேபிய தீபகற்பம்’ (ஜஸீரத்துல் அரபு) என்றே பெயரிட்டு அழைத்தார்கள். சவூதிகள் தங்களது திரிபு வடிவ இஸ்லாத்தை எல்லோர் மீதும் திணிப்பதற்கான ஆர்வவெறியில், இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை மொத்தமாக அழிக்கும் திட்டப் பணியில் இறங்கியுள்ளனர்.

மஸ்ஜித் அந்-நபவீயின் பச்சைநிறக் குவிமாடம், இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலத்தை அடையாளப்படுத்துவதாகவும் அதன் குறியீடாகவும் விளங்குகிறது. இப்போது அது பள்ளியின் விரிவாக்கத்தால், சூழப்பட்டு உள்ளது. ஆயினும், அது ஒரு தனித்துவ காட்சிக் குவிமையமாக விளங்குகிறது. சென்ற ஆண்டு மதீனா மாநகரத் திட்ட வாரியம், நபிப் பள்ளியின் பிரசித்திபெற்ற இந்த பச்சைநிறக் குவிமாடத்திற்கு நிறம் மாற்றி, வெள்ளிநிறப் பூச்சைப் பூசியது. ஒருவேளை, அதனைத் தகர்க்க வழிவகுப்பதுதான் இதன் நோக்கமோ! ஏனெனில், ‘மஸ்ஜித் அந்-நபவீயின் வெள்ளிநிறக் குவிமாடம் ஒன்று தகர்க்கப்பட்டது’ என்பதைக் கேள்விப்படவோ கவனிக்கவோ நேரும்போது, பெரும்பாலான முஸ்லிம்கள், அங்கே உண்மையில் என்ன நடந்தது என்பதை உணராமலே போய்விடக் கூடும். ஏற்கனவே, விரிவாக்கம்-புனரமைப்பு என்ற சாக்கில் வெள்ளிநிறக் குவிமாடங்கள் பல துடைத்தழிக்கப்பட்டுள்ளன. அக்கறை கொண்ட குடிமக்களின் தீவிரக் கண்டன ஆர்ப்பாட்டங்களால் நிர்பந்தத்துக்கு ஆளான வாரியம், அந்தக் குவிமாடத்தை அசல் நிறத்துக்கே மீட்டுள்ளது. எனினும் இதை வைத்து, வஹாபிகள் தங்கள் வழிமுறைகளின் பிழைகளை உணர்ந்துவிட்டனர் என்ற தவறான முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது.

ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல்) மற்றும் பித்அத் (தீனில் நூதனங்களை ஏற்படுத்துதல்) செயல்களிலிருந்து முஸ்லிம்களைக் ‘காப்பாற்ற வேண்டும்’ என்ற தங்களது ஆர்வமிகுதியில் இந்த வஹாபிகள் பல தசாப்தங்களாகவே வரலாற்றுத் தலங்கள் மற்றும் கட்டிடங்களைத் தகர்ப்பதில் ஈடுபட்டுவருகின்றனர். “கட்டிடங்களையும், வரலாற்றுத் தலங்களையும் உயர்த்திப் போற்றுவது அனுமதிக்கப்பட்டதல்ல” என்று ராஜ்யத்தின் தலைமை ஆலிமாக இருந்த ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ், தான் உயிரோடிருந்த காலத்தில் (1994-ல்) ஓர் விளம்பரம் மிகுந்த ஃபத்வாவில் பிரகடனம் செய்தார். அவர் தொடர்ந்தும் கூறினார்: “இத்தகு செயல் இணைவைப்பிற்கு வழிவகுக்கும்…எனவே, இத்தகு செயல்களை நிராகரிப்பதும் அவை குறித்துப் பிறரை எச்சரிப்பதும் அவசியம்.” எனினும், இந்த வஹாபி ஆர்வவெறியர்கள் வெறுமனே எச்சரிக்கைகளோடு திருப்திகொள்வதில்லை. இவர்கள், சவூதி இளவரசர்கள் கும்பலின் உதவியோடு, இஸ்லாத்தின் பாரம்பரியத்தைத் துடைத்தழிக்கும் திட்டமொன்றில் இறங்கியுள்ளனர். ’இத்தலங்களைத் தரிசித்ததன் மூலம் இதுவரை எத்தனை முஸ்லிம்கள் இணைவைப்பவர்களாகி இருக்கின்றனர்? அவ்வாறு தரிசிப்பதை விட்டு அந்த முஸ்லிம்களைத் தடுக்க இந்த வஹாபிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம்.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை (பாகம் 2) – ஸஃபர் பங்காஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *